பிரபஞ்ச வரம்
~
சாலைகள்
விளக்குகள்
கருப்பு கம்பளங்கள்
தூரத்து மரங்கள்
மிகச் சிறிய கண்கொண்ட பூதங்கள்
பெரிய கால் முளைத்த தெய்வங்கள்
என அனைத்தையும் கடந்து
இங்கு வந்திருக்கிறேன்
கொஞ்சம் “தண்ணீர் கிடைக்குமா”
அந்த மனிதன் வீட்டின் உள்ளே சென்று சட்டென்று கதவைச் சாத்தினான்
அலைகள்
புதை மணல்
பிசுபிசுத்த வேர்வை
காய்ந்த மீன்கள்
மிகக் கனத்த வயிறு கொண்ட பூதங்கள்
மெலிந்த உடலில் வாழும் தெய்வங்கள்
என அனைத்தையும் கடந்து வந்திருக்கிறேன்
கொஞ்சம் “தண்ணீர் கிடைக்குமா”
அந்த வயோதகி என்ன நினைத்தாளோ
சட்டென்று பிரம்பை நீட்டினாள்
தரவைகள்
சகதிகள்
கற்றாழை செடிகள்
மண்டை ஓடுகள்
மிக நுண்ணிய காது கொண்ட பூதங்கள்
ஆட்டின் தலை காக்கும் தெய்வங்கள்
என அனைத்தையும் கடந்து வந்திருக்கிறேன்
கொஞ்சம் “தண்ணீர் கிடைக்குமா”
அந்த சர்ப்பம் என்ன நினைத்ததோ விருட்டென்று தனது புதருக்குள் மறைந்தது
பெரிய கற்கள்
சிறிய சிறிய பாறைகள்
பள்ளங்கள்
வெளுத்த சிலுவைகள்
மிக ஒட்டிய கன்னகுழியோடு பூதங்கள்
அங்கங்கே கண்ணீரோடு தெய்வங்கள்
என அனைத்தையும் கடந்து வந்திருக்கிறேன்
கொஞ்சம் “தண்ணீர் கிடைக்குமா”
அந்த சுனை என்ன நினைத்ததோ
சட்டென்று என்னை மலையில் இருந்து தள்ளிவிட்டது.
~
வெறுமை
~
விண்ணப்ப படிவங்களில்
நிரப்பப்படாத காலி கட்டங்கள்
குடியேறாத வீடுகளை போலிருக்கின்றன
சாயங்கால கடலலைகள் வீட்டுக்கு திரும்பும்
பறவைகளை போலிருக்கின்றன
கீறப்படாத தர்பூசணிகள்
கால்பந்தை போலவும்
சின்ன எலும்பிச்சைகள் நிலவை போலவும்
சிவந்த ஆலம்பழங்கள்
அந்தி சூரியன் போலவுமிருக்கின்றன
இப்போதெல்லாம் சமயங்களில் நான் கூட
என்னை போல் இருப்பது
எனக்கே சிரிப்பாய் இருக்கிறது
நேற்று நீண்ட தொலைவிலிருந்து வந்தவன்
தூரத்து மணல் மேட்டை பார்த்து வணங்கினான்
நான் அவனையும்
மணல் மேட்டையும் பார்த்தேன்
நீண்ட மணல் பரப்பின் நடுவே
இரு மணல் மேடுகள்
அருகருகே எதையோ பார்த்தபடி
நின்றுக்கொண்டிருந்தன
அதன் மேல் படிந்திருந்ந வரிவரியான
மணல் வளைவுகள் ஒருகணம்
வணங்கியவனின் வெறுங்கைகளை போலிருந்தன.
ச.துரை
ச.துரை, ராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் ஊரில் வசித்துவருகிறார். ‘மத்தி’ என்ற கவிதைத்தொகுப்பின் ஊடாக பரவலான கவினிப்பைப் பெற்றவர்.