வேறு ஒரு தேசத்திலிருந்து எதிரிகள் வந்து தம் மண்ணை ஆக்ரமிக்கும்போது அவர்களை எதிர்த்து போர் செய்வது என்பது வேறு – தம் சொந்த மண்ணிலிருந்தே உருவாகி வந்த “எதிரிகளிடம்” சமர் செய்து தம் நிலம் எது என்பதை நிறுவுவது வேறு.
இதே நிலம்தான் “அவர்களுக்கும்” நிலம். நமக்கு நியாயம் என்று காட்ட இருக்கும் விஷயங்கள் போலவே அவர்களுக்கும் இருக்கின்றன. நாம் அவர்கள் மீது வைக்கும் குற்றசாட்டுகள் போலவே அவர்களுக்கும் நம் மீது சாட்ட குற்றங்கள் இருக்கின்றன. மொழி ரீதியாக, கலாச்சார ரீதியாக, மத ரீதியாக இருக்கும் வேறுபாடுகளைக் கொண்ட நிலத்தின் சிக்கல்களை வெளியிலிருந்து பார்ப்பவர்கள் என்றும் முழுதும் புரிந்துகொள்ள இயலுவதில்லை.
இலங்கை எனும் இயற்கை எழில் கொஞ்சும் சிறு தீவின் சென்ற நூற்றாண்டு வரலாற்றுச்சுவரில், நிகழ்ந்த ஓர் அதிமுக்கிய சமரின் போக்கை தீர்மானித்த உளவு வேலைகளை, இப்புதினம் சற்று வெளிச்ச பந்தத்தை காட்டுகிறது.
இது போன்ற, எதிரியின் எல்லை தாண்டி வேவு பார்க்கும் கருக்களை தமிழில் வாசித்த நினைவில்லை. பதின்ம வயதில் வாசித்த சோவியத் மொழிபெயர்ப்பு புதினங்கள், விடிவெள்ளி மற்றும் வான்யா நினைவிற்கு வருகின்றன.
முதலில் கதைக்களனையும் காலகட்டத்தையும் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
1996/97ல் இலங்கையின் நிலைமை இவ்வாறு இருந்தது:
ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்பாணத்திற்கும் வவுனியாவுக்கும் இடையிலான வன்னி பெருநிலப்பரப்பும் அதற்குள் செல்லும் A9 எனும் கண்டி வீதி நெடுஞ்சாலையும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தன.
இதனால் யாழ்பாணத்தை அடைய பல்வேறு சிக்கல்கள் இலங்கை அரசிற்கு இருந்ததால், ‘ஜெயசிக்குறு’ என்ற பெயரில் 997 மே மாதத்தில் ராணுவ நடவடிக்கையொன்று தொடங்கப்பட்டது.
வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வரையான A9 பாதையைக் கைப்பற்றுவதே அதன் நோக்கம். 1995 ஆண்டுவாக்கிலேயே இலங்கை ராணுவம், சத்ஜெய எனும் இராணுவ நடவடிக்கை மூலம் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றி அங்கு ஓர் பெரும் கூட்டுப்படைத்தளத்தை இராணுவம் நிர்மாணித்திருந்தது. அதுதான் ஜெயசிக்குறு நடவடிக்கையின் புறப்பாட்டுத்தளமாகும்.
இப்படைத்தளத்தைத் தாக்கி கிளிநொச்சி நகரை மீண்டும் தங்கள் வசமாக்கிக்கொண்டால் இராணுவ நடவடிக்கையை (“ஜெயசிக்குறு”) முறியடித்துவிடலாம் என்ற திட்டத்தில் விடுதலைபுலிகள் கிளிநொச்சி நகரை சூழ்ந்து போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
வீரன் எனும் இளம் புலி, அப்போர் முனையில் வேவு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஓர் வேவு அணியில் சேர்ந்துகொள்ளும் புள்ளியில் இப்புதினம் தொடங்குகிறது.
அச்சாரணர்களின் அணியின் தலைவராக மணி எனும் திறமையாளன் இருக்கிறார்.
விடுதலைப்புலிகளின் தளபதிக்கு கிளிநொச்சி முதற்கட்ட அரண்களுக்குப்பின்னால் என்ன மாதிரியான நிலைகளை இராணுவத்தினர் அமைத்திருக்கிறார்கள் என்ற உளவுத்தகவல்கள் அவசியம் தெரியவேண்டும். அவற்றைப்பொறுத்தே புலிகளின் அடுத்த தாக்குதலை திட்டமிட முடியும்.
அதற்கு மணியின் சாரணர் அணியை மிகவும் சார்ந்திருக்கிறார். ஏற்கனவே செய்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை, உயிரிழப்புதான் மிஞ்சியது.
விடுதலைப்புலிகளின் தளபதி றோமியோ அடுத்த முயற்சியை திட்டமிடுகிறார். இம்முறை சாரணர் தலைவர் மணியே செல்கிறார். அவருடன் செல்ல வீரனைத் தேர்ந்தெடுக்கிறார்.
இருவரும் எதிரியின் அரணை ஊடுறுவி எப்படி உளவுத்தகவல்களைச் சேகரிக்கிறார்கள், எதிர்கொள்ளும் இன்னல்கள் என்பதும் இறுதியில் முயற்சியில் வெற்றி பெற்றார்களா, இப்பால் நிலத்திற்கு வெற்றிகரமாக திரும்ப முடிந்ததா என்பதே கதை.
ஓர் பெரும், நாள்பட்ட சமரில் ஒவ்வொருவருக்குப்பின்னும் ஓர் துயரக்கதை என்பது மிகவும் இயல்பாகியிருந்த நிலை. வீரனின் தாயார், அகதியாக கணவனையும் சொந்த ஊரையும் வீட்டையும் இழந்தாலும் கிடைத்த நிலத்தில் கிடைப்பதை வைத்து எப்படி கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையை மீட்டுக்கொள்கிறார் என்பது விவரமாக சொல்லப்பட்டிருக்கிறது.
புலிகளின் தலைவர்களின் பெயர்கள், சேரா, சாள்ரஸ் அண்டனி, றோமியோ என்று வருகின்றன. புலிகளின் உலகத்தை அதிகம் அறிந்தவர்கள் இவர்களை எளிதில் ஊகித்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
கதை நிலைகொள்ளும் களனில், ஒரு தற்காலிக எல்லக்கோட்டிற்கு இரு புறங்களிலிருந்து ஆயுததாரிகள் பரஸ்பரம் தாக்கிக்கொண்டிருக்கும் நிலையிலும் பொது ஜனங்கள் எப்படியோ வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்றனர்.
0
கதாபாத்திரங்களின் சித்தரிப்புகள், நிலைகளன்களை துல்லியமாக விவரித்தல் போன்றவை கூர்மையாக கூடி வந்திருக்கின்றன. இம்மாதிரியான கரு கொண்ட ஒரு புதினத்தில் இது மிக முக்கியம்.
சாரணர் அணியினருக்கு இடையே இருக்கும் புரிதலும் ஒட்டுதலும் நன்றாக காட்டப்பட்டிருக்கின்றன. அடுத்த நாள் உயிரோடு இருப்பது நிச்சயமற்ற நிலையிலும் வாழ்வின் அபத்தங்களை சிரித்துக்கொண்டு தாண்டிச்செல்வது (“மூக்கில் பஞ்சு”) அவர்களிடையே இயல்பாக இருக்கின்றன. காதல்களும் கூட. வேவு வேலைகளுக்கே உரித்தான நுண்ணிய தகவல்கள் புதினத்தில் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
போர்களங்களில் சில அடிகள் முன்னேறுவதற்கு கொடுக்கும் விலைகள், ஆறவே ஆறாத அபத்தங்கள். முதல் உலகப்போரின் Battle of Verdun, கிட்டதட்ட ஒரு வருட காலம், ப்ரெஞ்சு படைகளுக்கும் ஜெர்மானிய படைகளுக்குமிடையே நடந்த சமர், கிட்டதட்ட 700,000 வீரர்களை காவு வாங்கிய (மாத சராசரி, 70,000 பேர்கள்) இந்த சண்டை, இறுதியில் வெறும் 5 மைல் பரப்பை மட்டுமே வெற்றிகொள்ள முடிந்த சண்டை. எல்லையே இல்லா அபத்தம்.
தம் சொந்த நாட்டிலேயே தமது எல்லைகளை அவ்வப்போது மாற்ற வேண்டிய கட்டாய நிலை எத்தகைய துயரமென்பது அனுபவித்தால் மட்டுமே முழுவதும் புரிந்துகொள்ள இயலும்.
ஜெயசிக்குறு காலகட்டத்தில், இலங்கையின் இன்னொருபுறத்தில் கிரிக்கெட் உலகக்கோப்பையின் நான்கு ஆட்டங்கள் நடைபெற்றன! சொல்லப்போனால் அந்த 1996 கிரிக்கெட் உலகக்கோப்பையை இலங்கை முதன்முறையாக வென்றது
ஒரு பக்கம் எது தங்கள் நிலமென்பதும், தங்கள் உயிரும் நிச்சயமில்லாத நிலையில் மக்கள் போரின் மத்தியில் போராடிக்கொண்டிருக்கையில், அதே நாட்டு மக்கள் கிரிக்கெட் வெற்றி கொண்டாட்டத்தில் திளைத்துக்கொண்டும் இருந்தனர்!
ஒரு பக்கம் பத்திரிக்கை செய்திகளில் இலங்கை சாவு எண்ணிக்கையை வாசித்துவிட்டு தொலைக்காட்சியைத் திறந்தால் கொழும்பு மைதானத்தில் மக்கள் கிரிக்கெட்டை ரஸித்துக்கொண்டிருக்கும் நிலையை கண்டு குழம்பிப்போனது நினைவிற்கு வருகிறது…
0
இப்புதினத்தில் எனக்கு குறையாகப் படுவது மிக அதிகமாக ஒலிக்கும் எழுத்தாளரின் குரல். இது புதினத்தை மிகவும் பலகீனப்படுத்திவிடுகிறது.
மானுட உணர்ச்சிகளை, கதாபாத்திரங்களின் பெருமைகளை, திறமைகளை கிட்டதட்ட ஒவ்வொரு பாராக்களிலும் எழுத்தாளர் அசரிரீயாக கனத்த, உரத்த குரலில் நெக்குறுகி சொல்லிக்கொண்டே இருக்கிறார். எந்த சம்பவத்தையும், கதாபாத்திரங்களின் எண்ணங்களை இப்படி அருசொற்பொருள் கூறி விளக்கிவிடுவதால் கதாபாத்திரங்களை வெறும் தியாக பிம்பங்களாக சொல்வது மட்டுமே அவரது நோக்கம் என்று தெளிவாக புரிந்துவிடுகிறது.
அப்படி விளக்காத இடங்களில் மெல்லிய கவித்துவம் தெரிவதை உணர்ந்துகொள்ளலாம். இறுதியில் இராணுவ அரண்களில் ஒன்றில் எட்டிப்பார்க்கும் போது அங்கிருக்கும் சிங்கள சிப்பாய், ஒரு பெண்ணின் படத்தைப் பார்த்துக்கொண்டு கடிதம் எழுதும் இடத்தைச் சொல்லலாம். ஆனால், அங்கு திட்டமிட்டபடி கைக்குண்டை வீசாததற்கு காரணம், தன் காதலியின் நினைவு வந்தது என்று ஆசிரியர் வெளிப்படையாக சொல்லி (அங்கும்) கெடுத்துவிடுகிறார்.
பின்னர் மீட்டெடுக்க காத்திருக்கையிலும் உன் சிங்கள காதலி உன்னிடம் சொல்லவில்லையா என்றவாறே முடித்திருப்பது ஒட்டுமொத்த புதினத்தை கீழிறக்கிவிடுகிறது.
0
தமிழக மீடியாவில், 90/2000 காலகட்டத்தில் புலிகளை கடும் புகழும், வீரதீர சாகஸக்காரர்களாக, மாபெறும் வெற்றிகளை தொடர்ந்து ஈட்டுபவர்களாகவே சித்தரிக்கப்பட்டு வந்தன.
ஒரு முக்கிய தளத்தை கைப்பற்றுவது, பின்வாங்குவது, மறுபடியும் கைப்பற்றுவது என்று அச்சிறு தீவிற்குள், அம்மண்ணின் மைந்தர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி அழிப்பதை பற்றிய தலைப்புச்செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆனால் அவ்வெற்றிகள் எப்படி அடையப்பட்டன என்ற விரிவான நுண்ணிய விவரங்கள் சொல்லப்படவே இல்லை.
பின்னர், 2008ற்கு பின் ஓரிரு இணைய தளங்களில் சில விவரங்கள் வாசித்த நினைவு உண்டு. ஆனால் இப்புதினம் போன்ற நுட்பமான விவரங்கள் அடங்கிய படைப்புகள் வந்திருக்கவில்லை.
ஈழ உள்நாட்டு போர் முடிந்து பனிரெண்டு வருடங்கள்தான் ஆகின்றன. இத்தனை கொடூரமான, எண்ணற்ற ஈடு செய்ய முடியா இழப்புகளையும் ஆறா வடுக்களையும் ஏற்படுத்தியிருக்கும் ஓர் போரைப் பற்றிய பதிவுகள் ஏதாவது ஒரு தலைப்பட்சமாகவே கிடைக்கின்றன.
ஒரேடியாக புலிகள் புகழ் பாடுதல்/வீரர், தியாகத்தினராக, மக்கள் நலன்களை மட்டுமே கவனத்தில் கொண்டவர்களாக சித்தரித்தல் அல்லது தோல்விக்கான, அழிவிற்கான ஒட்டுமொத்த மற்றும் ஒரே காரணியாக அவர்களை மட்டுமே குற்றம் சாட்டுதல் என்று ஏதாவது ஒரு தலைப்பட்சமாகவே இப்போரைப் பற்றிய பதிவுகள் நமக்கு கிடைக்கின்றன.
ஒவ்வொரு பெரு வெற்றியின், தோல்வியின் நிழலிலும் கணக்கற்ற தியாகங்கள், விலை மதிக்க முடியாத உயிரிழப்புகள் மறைந்திருக்கின்றன. அடுத்த தலைமுறைக்கு அவை தெரிவதே இல்லை.
காலம் எல்லாரையும், எல்லாவற்றையும் நகர்த்திச்செல்கிறது. அடுத்த தலைமுறைக்கான கவலைகள், எதிர்பார்ப்புகள் வேறு.
இருந்தும் ஒருவேளை, எதிர்காலத்தில் அடுத்த தலைமுறை ஏதோ ஒன்று தோன்ற ஒருவேளை திரும்பிப் பார்க்குமானால் இம்மாதிரியான ஆவணங்கள் ஏதோ ஒருவகையில் அத்தியாகங்களுக்கு நியாயம் சேர்க்கும்.
இம்மாதிரியான ஆவணங்களை இலக்கியத்தில் பதிவு செய்துகொண்டிருப்பது, ஈழ இலக்கியத்தின் ஓர் மிக முக்கிய கடமை.
சிவா கிருஷ்ணமூர்த்தி
சிவா கிருஷ்ணமூர்த்தி நாகர்கோவிலை பிறப்பிடமாகக் கொண்டவர். தற்பொழுது பிரித்தானியாவில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். ‘வெளிச்சமும் வெயிலும்’ சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.