/

குற்றமற்ற மனதின் துயர்: சுரேஷ் பிரதீப்

அரிசங்கரின் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் நாவலை முன்வைத்து

என் நண்பர் ஒருவர் நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அரசுப்பணியில் இருப்பவர். திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வசிக்கிறார். அவருடன் இணைந்து  சில இடங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு சமீபத்தில் அமைந்தது. அப்படி ஒன்றாகச் சென்ற இடங்களில் அவருடைய நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. நட்பினைப் பேணுவதில் ஏறக்குறைய எனக்கு நேர்மாறானவர். நிறைய நண்பர்களை உடையவர். ஆனால் அவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பர்களில் பெரும்பாலானவர்களுக்கு மணமாகி இருக்கவில்லை. முதல் சிலரை சந்தித்தபோது ஏதாவது ‘விசேஷ’ காரணங்கள் இருக்கும் என நினைத்தேன். மணமாகாதது குறித்த ஆழமான கவலை அவர்களிடம் வெளிப்படும் என நினைத்தேன். திருமணம் குறித்த தத்துவார்த்தமான எதிர்நிலைப்பாடு கொண்டிருப்பார்களோ என்று சந்தேகங்கொள்ள வைக்கும்படியான தோரணை அவர்களிடம் வெளிப்படவில்லை. பின்னர் ஏன் மணமாகவில்லை? வறுமை? அனைவருமே வறுமையானவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது. உறுதிபடுத்துவதற்காக எண்பதுகளில் பிறந்த மற்றொரு நண்பரையும் கேட்டேன். அவரும் தன்னுடைய வயதில் பலர் மணமாகாமல் இருப்பதாகச் சொன்னார். கூடுதலாக அப்படி மணமாகாத பலர் தற்போது ஆர்எஸ்எஸ்ஸில் இணைவதாகவும் முன்பு அத்தகைய பலரை கம்யூனிஸ்ட் இயக்கங்களில் கண்டதாகவும் சொன்னார்.

அரிசங்கரின் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் நாவலுக்கும் மேற்சொன்ன விவரிப்புக்கும் நேரடியாக தொடர்பிருப்பதாகச் சொல்ல முடியாது என்றாலும் அந்த நாவல் விவரிக்கும் உளநிலையின் பின்னணியாக இந்த விவரிப்பை எடுத்துக் கொள்ளலாம்.

‘சமகாலத்தை எழுதுங்கள்’ என்பது என்று இலக்கிய விமர்சகர்களில் ஒரு சாரார் மீண்டும் மீண்டும் சொல்கின்றனர். சமகாலம் என எதைச் சொல்லது? சமகாலத்தை எப்படி வரையறுப்பது? பெரும்பாலும் இங்கு சமகால கதைகள் என்று சொல்லப்படுகிறவற்றில் சமகாலத்தின் தொழில்நுட்பம் மட்டுமே இருக்கிறது. உண்மையில் சமகாலத்தை எழுதுதல் என்பது சமூக உற்பத்தி முறைகளில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களை அதன் விளைவான சமூக உறவுகளில், ஜாதி, மதம், குடும்பம் போன்ற அமைப்புகளில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களை எழுதுவதே. சமகாலத்தை எழுதுவதில் இந்திய அளவில் விவேக் ஷன்பேக் ஒரு முன்னோடி. தமிழிலும் இந்த கோணத்தில் சமகாலத்தை அணுகும் படைப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அகில்குமாரின் மெய்நிகர் அவ்வகையில் ஒரு குறிப்பிடத்தகுந்த ஆக்கம். அரிசங்கரின் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் சமகாலம் குறித்த அத்தகைய போதத்துடன் எழுதப்பட்டிருப்பதால் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய ஆக்கம்.

ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் எழுதப்படும் ஆக்கங்கள் அதற்கான வடிவத்தையும் முதலிலேயே தேர்ந்து கொள்கின்றன. அரிசங்கரும் முன்னுரையிலேயே கடந்த முப்பதாண்டுகளில் மனித வாழ்வில் நிகழ்ந்திருக்கக்கூடிய மாறுதல்களே நாவலின் களம் என்று சொல்லிவிடுகிறார். நாவலை வாசிக்கத் தொடங்கும்போதே நாவல் ‘யதார்த்த’ தளத்தில் பயணிப்பதில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. நாவலில் இடம்பெறும் பாத்திரங்கள் பெயரற்றவர்கள். கதைசொல்லி தன்னை வெள்ளை என்றும் அவன் காதலியை ஆரஞ்ச் என்றும் குறிப்பிடுகிறான். கற்பனை என்ற தலைப்பிட்ட அத்தியாயங்களில் இடம்பெறும் காவலர்கள் கறுப்பு, பச்சை, நீலம் என்று அழைத்துக் கொள்கிறார்கள். இதில் நீலத்துக்கு ஒரு தலித் சாயல் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மை, பொய் , கற்பனை என்று தலைப்புகளின் கீழ் மூன்று தனித்தனி கதைகளை நாவல் சொல்லத் தொடங்குகிறது. உண்மை மத்திய வயதிலிருக்கும் ஒருவனின் காதலையும், பொய் மணமாகாத ஒருவனின் வாதையையும், கற்பனை ஒரு தற்கொலை விசாரணையையும் விவரித்துச் செல்கின்றன. மூன்று பகுதிகளுக்கும் இடையேயான தொடர்பு நாவலின் இறுதி அத்தியாயங்களில் புலப்படத் தொடங்குகிறது.

மேற்சொன்ன கதைகட்டுமானத்துக்குள் அரிசங்கர் பிரதானமாக விவரிக்க நினைப்பது ‘நகர்புற தனியன்’ என்ற மனிதனின் சிக்கலைத்தான். இத்தகைய தனியர்களை தஸ்தாவெய்ஸ்கி, காஃப்கா, காம்யு போன்றவர்களின் புனைவுகளில் நாம் சந்திக்கத் தொடங்குகிறோம். தமிழில் இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், கோபிகிருஷ்ணன் (அரிசங்கர் இந்த நாவலை சம்பத்துக்கும் கோபிகிருஷ்ணனுக்குமே சமர்பித்து இருக்கிறார்) போன்றோரின் ஆக்கங்களில் இத்தகைய தனியர்கள் இடம்பெற்றனர். இத்தகைய பாத்திரங்களுக்கு சில பொது இயல்புகள் உள்ளன. இவர்கள் சமூகத்தின் செம்மறியாட்டுத்தன்மை மீது விலக்கமும் சலிப்பும் கொண்டவர்கள். அதனாலேயே கசப்படைந்தவர்கள். கூர்மையான அறிவினை வெளிப்படுத்துகிறவர்கள். உள்ளடங்கியவர்கள். அரிசங்கரின் கதைசொல்லியான வெள்ளையும் இப்படித்தான் இருக்கிறான். ஆனால் வெள்ளையை மேற்சொன்னவர்களிடமிருந்து வேறுபடுத்துவது வெள்ளை முழுக்கவே மரபால் கைவிடப்பட்டவன் என்ற அம்சம்தான்.

மரபு என்பது என்ன? நாம் பிறந்து வளரும் குடும்பமே நம்முடைய மரபு. சூழியல் மாற்றங்களினால் உடனடியாக பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான் என்றொரு கூற்று உண்டு. அதுபோல சமூகத்தில் நிகழும் எந்தவொரு மாற்றமும் உடனடியாக பாதிப்பது குடும்ப அமைப்பைத்தான். நம்முடைய குடும்ப அமைப்பு ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. பெற்றோரை உடன்பிறந்தவர்களை மனைவியை கணவனை  குழந்தைகளை எவ்வாறு வரையறுத்துக் கொள்வது என்பது குறித்த ஒரு பெருங்குழப்பம் நிலவும் ஒரு காலம் இது. இவற்றுக்கான பழைய வரையறைகளை நம்மால் ஏற்க முடிவதில்லை. புதிய வரையறைகளும் இன்னும் உருவாகிவரவில்லை.

நாம் இதுவரை புனைவில் கண்ட ‘நகர்புற தனியர்கள்’ குடும்பத்தின் பழமை காரணமாக அதனிடமிருந்து விலகியவர்கள். அதாவது அவர்கள் தான் மரபினை கைவிடுகிறார்களேயன்றி மரபு அவர்களை கைவிடுவதில்லை. ஆனால் இந்த நாவலில் இடம்பெறும் வெள்ளை மரபினால் இரக்கமில்லாமல் கைவிடப்படுகிறான். அவனுக்கு தந்தை இல்லை. தாய் இருந்தும் உபயோகமில்லாமல் இருக்கிறாள். நண்பர்கள் குடும்ப நெருக்கடியால் அவனிடம் நெருங்க முடியாதவர்களாக இருக்கின்றனர். அலுவலகத்திலும் அவனுக்கு அடுத்து எழுந்து வரும் தலைமுறை இளைஞர்கள் எந்தக் குழப்பமுமின்றி அவனைக் கடந்து செல்கின்றனர்.

வெள்ளை பழைய மதிப்பீடுகளை சுமப்பவனாக இருக்கிறான். ஆனால் அந்த மதிப்பீடுகளுடன் ஒட்டி வாழும்படியான வாழ்க்கை அவனுக்கு அமையவில்லை. நம்முடைய சமூகத்தில் திருமணத்தின் வழியாக ஒரு மனிதன் ஒரு காலகட்டத்தின் விழுமியங்களுக்குள் நுழைகிறான். சமூகத்துடன் உரையாடத் தொடங்குகிறான். நாட்டுப்புறவியலில் வாழ்க்கை வட்டச் சடங்குகள் என்றொரு வார்த்தை உண்டு. ஒவ்வொரு இனக்குழுவும் ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து மரணம் வரையிலான வாழ்க்கையை சடங்குகளாக்கி தன்னுள் வைத்திருக்கிறது. குழந்தையை வெயிலுக்கு காட்டுதல், நாக்கில் தேன்வைத்தல், காது குத்துதல், மஞ்சள் நீராட்டு, திருமணம், வளைகாப்பு, ஈமக்கிரியை என இந்தச் சடங்குகளினூடாகவே இங்கு வாழ்க்கை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இச்சடங்குகளின் ஊடாகவே நமக்கு சில மதிப்பீடுகளும் அளிக்கப்படுகின்றன. பெரியவர்களின் காலில் விழுதல், மனைவியின் கால் பிடித்து மெட்டி அணிவித்தல் என சில குறியீட்டுச் சடங்குகளின் வழியாக நாம் சிலவற்றை உணர்ந்து கொள்கிறோம். அது வழிவழியாகத் தொடரும் போது அந்த மதிப்பீடுகள் ஒரு இயல்பு நிலை என்றாகிவிடுகிறது. வெள்ளை இந்தச் சடங்குகளினூடாக வாழ்க்கை நிகழ்ந்த ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவன். தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படும் போதும்கூட அவனிடம் வன்முறையோ குற்றபோதமோ வெளிப்படாததற்கு அவன் மரபினால் ‘கண்டிஷன்’ செய்யப்பட்டது காரணம். ஆனால் அவனுடைய கட்டுப்பாட்டுக்கு பிரதிபலனாக சமூகம் எதை அளித்திருக்க வேண்டுமோ அது அவனுக்கு கிடைப்பதில்லை. அவனுள் பிறழ்வாகத் திரள்வது இந்த ‘குற்றமில்லாத மனதின் வேதனை’தான்.

ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெள்ளை பாலுறவுக்காக மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு ஒரு எண்ணை தொடர்பு கொள்கிறான். அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டதும் ‘எங்கள் கட்சியில் இணைந்ததற்கு நன்றி’ என்று அவனுக்கு செய்தி வருகிறது. அவன் குற்றத்தில் ஈடுபடுவதற்கு இருந்த ஒரேயொரு வாய்ப்பும் இந்த கசந்த நகைச்சுவையால் அடைக்கப்பட்டுவிடுகிறது.

நாவலின் மற்ற இரு பகுதிகளில் ஒன்றில்(பொய்) நவீன காலத்தின் உறவுச்சிக்கல் பேசப்படுகிறது. மற்றொன்றில் (கற்பனை) அதிகார உலகம், சாதிய வன்மம் போன்றவற்றை ஒட்டிய சில விவரிப்புகள் உள்ளன. இந்தப் பகுதிகள் நாவல் விவாதிக்கும் மையச்சிக்கலுக்கு துணைபுரிவதுடன் சுவாரஸ்யமான வாசிப்புக்கும் துணைநிற்கின்றன. ஆனால் கற்பனை என்று தலைப்பிடப்பட்ட பகுதி பிரத்யேகங்களை தவிர்த்து பொதுவானவற்றையே பேசுவது நாவலில் ஒரு மெல்லிய அரட்டைத்தன்மையை கொண்டுவந்து விடுகிறது. இப்பகுதியில் பிணங்களுக்கு இடையே நடக்கும் உரையாடல் வலுவாக வெளிப்பட்டிருக்கிறது.

உடலின் விழைவுகளை சமூகம் கட்டுப்படுத்துகிறது. பதிலுக்கு சமூகம் ஏதும் அளிக்காதபோது மனிதன் குற்றச் செயலில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படுகிறது. குற்றத்தின் மீறலின் வழியே மனித மனம் அடையும் ஆனந்தத்தை பேசும் பல படைப்புகள் உள்ளன. ஆனால் சமூகத்தின் விதிகளை ஏற்றுக்கொண்டு அதன்படியே வாழ்ந்து அழிந்து போகிறவனின் கதையாக உண்மைகள் பொய்கள் கற்பனைகள் நாவல் வெளிப்பட்டிருக்கிறது. மொத்த சமூகமும் இணைந்து ஒருவனுக்கு இழைத்த அநீதியைப் பேசிய வகையில் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் முக்கியமான ஆக்கமாகிறது.

சுரேஷ் பிரதீப்

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடர்ச்சியாக புனைவுகள், விமர்சனங்கள் எழுதிவருகிறார். அழகியலை முன்னிலைப்படுத்தி எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளை நுட்பமாக மதிப்பிடுபவர். ஒளிர் நிழல் என்ற நாவலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன.

உரையாடலுக்கு

Your email address will not be published.