/

கொம்மா கோத்தை: பா. அ. ஜயகரன்

“இவன் எங்கள் பிள்ளை இல்லை” என்று நான் சேர்ந்து வந்த குடும்பம் என்னை களைந்துவிட்டு அவர்களது அகதி கோரிக்கையை முடித்துக்கொண்டு நகர்ந்து விட்டார்கள். நான் சிறுவன். வயது பன்னிரெண்டு. என்னை அவர்கள் சிறுவர் பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது எனது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். முதலில் உறவினர்களுடனான தொடர்பை ஏற்படுத்த கனேடிய குரவரவு அலுவலர்கள் முயன்றுகொண்டிருந்தார்கள். எனது மாமனாரின் விலாசமும், தொலைபேசியும் அவர்களிடம் உண்டு. அதிகாலை அழைப்புகளை எனது மாமா ஏற்பதில்லைப் போலும். குடிவரவு அதிகாரி மாமாவை அழைத்துக் களைத்துப் போயிருந்தார். அதுவொரு சனிக்கிழமை அதிகாலை. மாமாவின் அறையின் போதைக் காலம். அவர்கள் காதுகளுக்குள் தொலைபேசி மணி சிணுங்கியிருக்காது. அந்த அதிகாரி ஏன் எரிச்சல் நிறைந்தவராய் இருந்தார் என்பது இப்போது புரிகிறது. என்னைப் பார்க்க அவருக்கு பரிதாபமாக இருந்திருக்கவேண்டும். ஏதாவது சாப்பிடுகிறாயா? என்று கேட்டபடியிருந்தார். நானும் மறுதலிக்கவில்லை.

அந்த அதிகாரியின் எரிச்சலை உணர்ந்த பெண் அதிகாரி மாமாவின் தொலைபேசிக்கு அழைத்தார். யாரோ ஒரு வெறியரின் காதுக்குள் மணி இரைந்திருக்கவேண்டும். அழைப்பு கிடைத்துவிட்டது. ஆனாலும் மாமாவின் கரங்களுக்கு தொலைபேசி எட்டவில்லை என்பதை அதிகாரிப் பெண்ணின் முகம் காட்டியது. பேசத் தொடங்கிய பின்னரே அவர்களின் எரிச்சல் அதிகரித்திருப்பதாய் எனக்குப்பட்டது. திடீரென உரையாடல் பிரஞ்சில் தொடர்ந்தது. நீண்ட உரையாடலின் பின் எனது அகதிப்பத்திரத்தில் பாதுகாவலர்களாக சிவவதனன் சிவகுருவும், ஆன் யூலி பொராசாட் என்றும் பதிவு செய்யப்பட்டது. சிவவதனன் எனது அம்மா சிவவதனியின் தம்பி. அவரை எனக்குத் தெரியாது. முப்பத்தியொன்றுக்கு மொட்டை வளித்து சந்தனம் பூசிய தலையோடு என்னைக் கண்டவர்தான். அந்தக் காலத்திலேயே கப்பலுக்கு புறப்பட்டவர். 12 வருடங்கள் ஆகிவிட்டன. ஆன்யூலி யாரோ? அவரும் எனது பாதுகாவலர்களில் ஒருவர். அவர்கள் வந்து என்னை ஏற்கும் வரையும்  நகரமுடியாதென மொழிபெயர்ப்பாளர் சொன்னார். அவர் சொல்லி முடிக்கும் முன்னரே கதிரைக்குள் தூங்கிப்போனேன்.

தூக்கத்தில்தான் பாதுகாவலர் இருவரும் எனக்கு அறிமுகமானார்கள். மாமா படத்தில் இருந்ததுபோன்று இல்லை. பவுடர் பூசுவதற்கு முகத்தில் இடமில்லாது தாடி மூடிக்கிடந்தது. யூலி தள்ளாடுவதாகவே எனக்குத் தோன்றியது. எனது நித்திரை மயக்கமாயும் இருக்கலாம். இருவரிடமிருந்தும் எனக்கு ஒவ்வாத வாடையொன்று வந்துகொண்டிருந்தது. நெடுநாள் குடி வாடை. எனது அப்பாவிடமும் இந்த வாடை உண்டு. சுருட்டு நெடியும் அவர்களது ஆடைகளிலிருந்து பரவுவதாய்ப்பட்டது. ஒப்பம் இடுவதற்காக இருவரும் அமர முன்னர் யூலி தனது கோட் பட்டுன்களை களட்டி முன்பாகத்தை திறந்து விட்டாள். அவள் அவசரத்தில் வந்தாளா? உடைபோட மறந்து விட்டாளா? போட்டிருந்தாள். அம்மாவோடு ஒப்பிடும்போது எதுவும் இல்லை. ஒரு காலைத் தூக்கி மறுகாலில் போட்டாள். முழங்கால் வரையும் சப்பாத்து இருந்தது. அவள் அழகாக இருந்தாள். அதிகாரி சொன்ன இடங்களில் தடுமாறியபடி ஒப்பம் இட்டாள். ஏன் இடுகிறோம்? என்று அவள் அறிய முற்படவில்லை. அந்த அக்கறை மாமாவுக்கும் இருக்கவில்லை.

அப்பாவின் தள்ளாட்டம் மாமாவிடமும் இருக்கிறது. யூலியின் நீளமான குதிச் சப்பாத்து என்னைக் கவர்ந்தது. அவள் நடக்க முயன்றபோதெல்லாம் விழாமல் இருக்க எத்தனித்துக்கொண்டிருந்தாள். மாமாதான் அவளுக்கு ஊன்றுகோலாய் இருந்தார். அங்கிருந்த வாங்கில் உட்கார்ந்து சப்பாத்தைக் களட்டி தன்னருகே வைத்தாள். காலைக் களட்டி வைத்தாளோவென என் மனம் துணுக்குற்றது. மாமாவின் சிகரட்டை வாங்கி தானும் இழுத்தாள். இருவருக்கும் என்னைப்பற்றிய அக்கறை இருப்பதாய்த் தெரியவில்லை. குடிவரவு அதிகாரி கொடுத்த பத்திரங்கள் மாமாவின் கையிலிருந்து நழுவி விழுந்தபடியிருந்தன. அவற்றை பலதடவை பொறுக்கி அவரிடம் கொடுத்தபடியிருந்தேன். இறுதியில் நான் அதைப் பக்குவப்படுத்திக்கொண்டேன். இவர்களால் வீடு செல்ல முடியுமா? என்ற அச்சம் எனக்கிருந்தது. மாமாவும் சப்பாத்தைக் களட்டி வைத்துவிட்டு சப்பாணி கட்டி வாங்கின் மறு நுனியில் அமர்ந்து பின்னால் சாய்ந்தார். அவள் அந்த வாங்கில் காலை நீட்டி மாமாவின் மடியில் தலையை வைத்துப் தூங்கிப் போனாள். மாமாவின் குறட்டைச் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது.

இவர்களுக்கு எப்போ விடியும்?. அப்பா எவ்வளவு குடித்தாலும் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து காலைக்கடனை முடித்து கோழிக் கூட்டுக்கு முன்னால் குந்தியிருப்பார். கோழி முட்டையிட்டதும் சுடச்சுட பச்சை முட்டையை அண்ணார்ந்து வாய்க்குள் ஊத்தி அன்றைய நாளுக்கு தயாராகி விடுவார்.

காலை எட்டு மணியை எட்டியிருந்தது. இருவரும் எழும்புவது போன்று தெரியவில்லை. போதையைப்பற்றி எனக்கு நன்கு தெரியும். எல்லாவற்றுக்கும் எனது தந்தையே காரணம். அப்பா போதையில் என்னைப் பலதடவை தவறவிட்டுச் சென்றதுண்டு. கள்ளுக்கொட்டில், பார் என்பன அவற்றுள் முக்கிய இடங்கள். வெறியர்களை மதிப்பீடு செய்ய முடியாது. பன்னிரெண்டு வருட அப்பாவின் பழக்கத்தால் ஒரளவு அவர்களை கணிக்க பழகியிருந்தேன். அதனால் இருவரையும் விட்டு நான் எங்கும் அசைய முடியாது. அவர்களின் கையைப் பற்றிக்கொண்டு நான் போகவேண்டும். போதை கலையும்போது என்னை அவர்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தவேண்டியிருக்கும்.

அவர்கள் கண் விழித்தபோது,

“மச்சான் நாம் எங்கிருக்கிறோம்?” என்றாள் யூலி.

தங்களுக்குள் விசாரித்துக்கொண்டிருந்தார்கள். விசாரித்து களைத்தது மீண்டும் தூங்கப்போனார்கள். யூலி மாமாவை மச்சான் என்றே அழைக்கிறாள்.

மாமாவைத் தட்டினேன். அவருக்குப் போதை தெளியவில்லை. பெரும் பயணத்தின் பின்னர் களைத்திருக்கும் பயணிகள் என பலரும் அவர்களை கடந்து சென்று கொண்டிருந்தார்கள். இதற்கு மேலும் என்னால் பொறுமை காக்க முடியாது. வந்திறங்கி 24 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. பசி மெல்ல கூடிவருகிறது. காலைக் கடன்கள் செய்யவேண்டும். நான் சற்று வளர்ந்த பின்னர் என்பாட்டுக்கே வீடு வந்து சேரப் பழகியிருந்தேன். இங்கு எங்கு செல்வது.  மாமாவைத் தட்டி எழுப்பினேன். அவரது போதை கலந்த சோர்வுப் பார்வை என் மீது படிந்தது. பின்னர் கண்கள் சோர்ந்து இமைகள் மூடின. மீளவும் அவரைத் தட்டினேன். அதே பார்வையுடன் நிமிர்ந்தார்.

“நான் குட்டி” என்றேன்

தெரியும் என்றோ அல்லது அதற்கென்ன என்றோ அவரது தலையாட்டல் இருந்தது. போதை இறங்கினால் மீண்டும் போதை ஏற்றுவதற்கு சற்றுத் தெளிவு தேவைப்படும். அதுவரையில் நான் அவர்களைப் பார்த்தவாறு இருக்கவேண்டும். சற்று அயர்ந்தாலும் என்னை விட்டுப் போய் விடுவார்கள்.

இருவரும் எழுந்திருந்தார்கள். நான் மீண்டும் அவர்களுக்கு அறிமுகமானேன். எப்படி விமான நிலையம் வந்தோம்? என்ற சிக்கலில் இருந்தார்கள். நீண்ட ஆய்வின் பின்னர் காரில் வந்ததாக மாமா சொன்னார். யாரின் காரில் வந்தோம்..? காரை எங்கே விட்டோம்? என்ற குழப்பத்துள் மீண்டும் மூழ்கினார்கள்.

“எதற்கும் உன்னுடைய காரைத் தேடுவோம்” என்றாள் யூலி

கோட்டுக்குளிருந்த சாவியை எடுத்து பார்த்தவாறு

“என்னுடைய கார்தான்”  யோசி எங்கே விட்டோம்?” என்றார் மாமா

“என்ன ஓழ் மச்சான். எப்படி இங்கு வந்தோம் என்றே தெரியாது” என்றாள் யூலி

மூன்று மாடி வாகனத் தரிப்புக்குள் நுழைந்தோம். ஒவ்வொரு மாடியாகத் தேடத் தொடங்கினோம். ஒரே மாடிக்குள் பலமுறை தேடுவதாகவே எனக்குப்பட்டது.  மாடிச் சுற்றில் மாமாவின் வெறி அகன்றிருக்கவேண்டும். என் முகம் பார்க்க சற்று தயங்குவதுபோலிருந்தது. மேல் மாடிக்கு கூரை இருக்கவில்லை. பனிப்பொழிவில் கார்கள் மூடியிருந்தன. ஒவ்வொரு காராய் மூடியிருந்த பனியைத் தட்டி இலக்கத் தகட்டைப் பார்த்தவாறு வந்தோம். சில கார்களில் அளவுக்கதிகமாக பனி மூடியிருந்தது.

“மச்சான்! அந்தக் கார்களைப் தட்டிப் பார்ப்போம்” என்றாள் யூலி

“நீண்ட நேரமாய் ‘பார்க்கிங்’கில் நிற்கிறது போலத்தான் கிடக்கிறது.” என்றார் மாமா

கார் தேடும் படலம் மணித்தியாளங்களைத் தாண்டியிருந்தது. யூலி காரின் பின்னால் இருந்த இலக்கத் தகட்டின் பனியைத் தட்டினாள். மாமா முகத்தில் சிறு புன்னகை மலர்ந்தது.

“நீ கெட்டிக்காரி” என்றார் மாமா

“நன்றி! என்னுடைய குதத் துளையே” என்றாள் யூலி

கதவைத் திறப்பதற்கு முன்பு காரை மூடியிருந்த பனியை அகற்றவேண்டியிருந்தது. மாமா காரை தொடக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். பற்றரி செயலிழந்திருக்கும்.

“கொஞ்சம் ‘காஸ்’ கொடுத்துவிட்டு அடி. அப்பத்தான் பத்தும் மச்சான்” என்றாள் யூலி

“நான் என்ன பூழலைச் செய்துகொண்டிருக்கிறேன்?” என்று ஆத்திரத்தோடு பதிலளித்தார் மாமா

“நீ என்ன பூழல் செய்கிறாய் என்று எனக்குத் தெரியாது. நான் அடிச்சுப் பார்க்கிறேன்” என்று மாமாவை சாரதி இருக்கையிலிருந்து வெளியில் இழுத்தாள்.

குளிர் குற்றத் தொடங்கியிருந்தது. மாமா அதை அறிந்திருக்கவேண்டும். காரின் பின் கதவைத் திறந்து போய் இருக்கும்படி சொன்னார். அவர் மாமா என்கிற தானத்தை கட்டிக்காக்க முனைவதாக எனக்குப்பட்டது. யூலி காரை இயக்கிய கையோடு வெற்றிக் களிப்பில் கத்தினாள். அவளின் கூப்பாட்டுக்கு பின் மாமா சாரதி இருக்கையில் அமர்ந்தார்.

“மச்சான்! ரங்குக்குள் ஏதாவது கிடக்கிறதா?” என்று கேட்டாள் யூலி

மாமா திரும்பி என்னைப் பார்த்தார்.

“சின்னப்பொடியனுக்கு பயப்படுகிறாயா? ஏய் சின்னப் பொடியா உன்னுடைய பெயர் என்ன?”

என்று என்னைப் பார்த்துக் கேட்டாள். கேள்வி எனக்கு விளங்கவில்லை. தனது பிரஞ்சுப்பாணி ஆங்கிலத்தில் திரும்ப திரும்பக் கேட்டாள்.

“டேய் உன்ர பெயரைக் கேட்கிறாள்” என்றார் மாமா

அவள் எனது பெயரை சரியாக உச்சரிக்கும்வரை “குட்டி” என்று பலமுறை சொன்னேன். காருக்குள் சூடு கனகனப்பாய் இருந்தது. ‘ரங்’கைத் திறந்து  சாராயப் போத்தலுடன் வந்தாள் யூலி. தான் குடித்த பின்னர் மாமாவிடம் நீட்டினாள். அவர் மறுத்தார். முன்னுதாரணமாக திகழ அவர் முயற்சிக்கக்கூடும். நேற்றைய இரவு, அறுபது கிலோமீற்றர்வரை போதையில் கார் ஓடிவந்திருக்கிறார். எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இதை அவர் பெருமையாகக் கூறக்கூடும். ஆனால் ஒரு சிறுவனுக்கு அதைச் சாதனையாகத் தெரிவிக்க முடியாது.

“உனது மாமா திருந்திவிட்டான். மச்சான் நன்றாய் ஓக்கிறாய்” என்றாள் யூலி

அவளின் பகடிக்கு அவர் செவி சாய்த்ததாய்த் தெரியவில்லை. மப்பிலிருந்து வெளியேறி மாமாவாக முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.

“குட்டி! அம்மா, அப்பா எப்பிடி இருக்கினம்? பாட்டி எப்படி இருக்கிறா?” மாமாவின் விசாரிப்பு தொடங்கியது.

ஒவ்வொரு கேள்வியின் பின்பும் எங்கோ தொலைந்து மீண்டுகொண்டிருந்தார். எனது பதில்கள் அவருக்கு ஒருவித சஞ்சார மனோநிலையை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.

“இவள் என்ர அறையரின்ட நண்பி” என்றொரு அறிமுகத்தைச் செய்தார்.

அப்படியும் இருக்கலாம். எதுவாய் இருந்தாலும் நான் கருத்தில் கொள்ளப் போவதில்லை. அறையரின் நண்பி மாமாவுடனும் நெருக்கமாய்த்தான் இருக்கிறாள். மாமாவின் மாற்றம் அவளுக்கு சங்கடமாய் இருந்திருக்கவேண்டும். அப்போதெல்லாம் மாமாவை முத்தமிட்டபடியிருந்தாள். எனது பிரசன்னம் அவரின் இயல்பை குலைத்தபடியிருந்தது. அவளின் முத்தத்திற்கு மாற்றீடாக எதையும் செய்ய முடியாதபடியிருந்தார். அவர்களின் அடுக்குமாடி கட்டிடத்தை வந்தடைந்தோம். அவர்கள் இறங்கி நடக்கத் தொடங்கியிருந்தார்கள். நான் எனது பயணப்பொதியைத் தலையில் தூக்கி வைத்தேன்.

“பாரமேடா?” வாசல்படியில் ஏறி நின்று மாமா கேட்டார்.

பாரம்தான். அம்மாவுடன் சேர்ந்து எருக்கூடை சுமந்திருக்கிறேன். பழகியிருந்தது. அவர்களது வீடு மூன்றாம் மாடியில் இருந்தது. மாடிப்படிகளால் சுமந்தபடி சென்றேன். அவர்கள் புகைக்குள் மறைந்துபோன ஒரிடத்தின் அறைக்கதவைத் திறந்து உள் நுழைந்தேன். அந்த அறையைத் திறந்ததும் புகை வெளியேற முண்டியடித்தது. மாலை நான்கு மணியாகியிருந்தது. அங்கிருந்த சோபாக்களில் சிலர் உறங்கிக் கிடந்தார்கள். தொலைக்காட்சியில் மல்யுத்தம் போய்க்கொண்டிருந்தது. அதோடு பலர் ஒட்டிக்கிடந்தார்கள். ஒரு அறை கொண்ட வீடு அது. புகையிலைப் போறணைக்கு ஒப்பானதாய் இப்போது இருக்கிறது. மூக்கை அரிக்கும் புகை வாசம் வந்துகொண்டிருந்தது. அது கஞ்சாவின் வாசைன என்பதை பின்னர் அறிந்துகொண்டேன்.

“குட்டி. சிவாவின்ட மருமகன்” என்று எல்லோருக்கும் அறிமுகமாகிக் கொண்டிருந்தேன்.

யூலி சோபா ஒன்றுக்குள் போய் இருந்தாள்.  அவர்களும் ஒட்டு விலகாமல் அவளுக்கென ஒரு இடத்தை அளித்தார்கள். அவள் எல்லோரையும் மச்சான் என்றே அழைக்கிறாள். மாமா தனது அறையைக் காட்டினார். அதற்குள் எனது பொதியை இறக்கி வைத்தேன். அதற்குள் ஒரு கட்டில் இருந்தது. வீட்டைப்பற்றிய அறிமுகத்தைச் செய்தார். முக்கியமாக குளிப்பது எப்படியெனக் காட்டித் தந்தார்.

“இது ஊர் ‘வக்’ இல்லை. ‘பாத்டப்;’.  இற்குள் தண்ணியை நிறைத்து வெளியில நின்று அள்ளி வார்த்திடாத. கீழ் வீடெல்லாம் தண்ணி போயிடும். டேய் முகத்தார் உன்ட கதையைத்தான் சொல்லுறன்” என்று மல்யுத்தம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவரை அழைத்தார்.

“டேய் தம்பி! மாமாவின்ட கதையைக் கேட்காதை.”

“முகத்தார்.! மச்சான் டேய் இவனின்ட பேப்பர்களை வாங்கிப் பார்”

முகத்தாரிடம் எனது பத்திரங்களை நீட்டினேன். அவர் மல்யுத்தத்திலிருந்து பத்திரத்திற்கு வந்தார்.

“காடியனாய் உன்னையும், யூலியையும் போட்டிருக்கு. யூலி நீயும்தான்” என்றார் முகத்தார்

“என்ன ஓழடா” என்றாள் யூலி

“பார். நீ கையெழுத்து போட்டிருக்கிறாய்” என்று சிரித்தார் முகத்தார். அவள் பத்திரத்தை பார்க்கவில்லை.

“இனி இவதான் உம்முட கோத்தை” என்று யூலியின் தொடையை தடவி நக்கல் சிரிப்பை உகுத்தார்.

“டேய் மச்சான்! இவனை யூலியோடு அனுப்பி விடு. கியூபெக் இமிகிரேசன், வெல்பெயர் பதியிற வேலைகளை பார்ப்பாள்” என்றார் முகத்தார்.

முகத்தாரின் கை யூலியின் இடையை அளைந்து கொண்டிருந்தது. அவள் கூச்சப்படவில்லை. எனக்கு கூச்சமாக இருந்தது. ‘இவதான் உம்முட கோத்தை’ என்று சற்று நேரத்திற்கு முன்னர்தான் முகத்தார் அறிவித்திருந்தார். அவளும் மச்சான்மாரின் உரசல்களை பொருட்டாய் எடுப்பதில்லைப்போலும்.

•••••

இவ்வாறான சந்தர்ப்பம் ஒன்றின் பின்னால்தான் சித்தப்பா அம்மாவின் காலில் விழுந்து

“மன்னிச்சிடுங்கோ அண்ணி”  என்று மன்றாடினார்

அப்பா போக்குவரத்து சபை சாரதி பதவியை துறந்து மாமாவின் பணத்தில் சொந்தமாய் லொறி வாங்கி லொறிக்காரன் ஆனார். ‘ரைவர்’ மணியமாய் இருந்த காலத்தில் அப்பா தூர இடங்களுக்கான பஸ் சாரதியாக இருந்தார். யாழ்ப்பாணம் – கண்டி பஸ் சேவை சாரதியாகவே அவர் கடைசிவரை இருந்தார். இரவு கண்டியில் தங்கவேண்டியிருக்கும். நீண்ட பஸ் ஓட்டத்தின் களைப்பகல குடி, பெண்கள் தொடர்பு இருந்ததாக கதையிருந்தது. ‘லொறி’ மணியம் ஆன பிற்பாடு இன்னும் பல கதைகளை சித்தப்பாதான் அம்மாவுக்கு எடுத்தியம்புவராக இருந்தார். அப்பாவின் கவனிப்பில்லாமல் இருந்ததினால்தான் சித்தப்பா அம்மாவின் இடையை அளக்க முற்பட்டிருக்கவேண்டும்.

“கையை எடு” என்றுவிட்டு

அம்மா அவரது கன்னத்தில்விட்ட அறையால் அவரது அளவு குழம்பி காலில் விழுந்து கிடந்தார். எனக்கு விளங்காப் பருவம் என்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். யாரை யார் தொடுகிறார்கள்? ஏன் தொடுகிறார்கள்? என்ற குழப்பங்கள் எனக்கு ஏற்பட்டதுண்டு. குழப்பத்திலிருந்து எனக்கு சற்று தெளிவேற்பட்டிருந்தது. எவரையும் விருப்பமில்லாமல் தொட முடியாது.

விதானை மாமாவின் தொடுகை அம்மாவுக்குப் பிடித்திருக்கவேண்டும். அம்மாவை, விதானை மாமாவும் அப்பாவும் ஒரே காலத்தில் காதலித்திருக்கிறார்கள். விதானை மாமா அம்மாவின் மச்சான். அப்பா அம்மாவுக்கு ஒன்றுவிட்ட சகோதரன். இந்த இரு காதலையும் அவள் சமாந்தரமாக வைத்திருந்தாளா? அல்லது விதானை மாமாவின் காதல் ஒருதலைக் காதலா?. அப்பா தைரியமான ஆண்பிள்ளை. அவருக்கு மிடுக்கு இருந்தது. தன்னை பாதுகாக்கக்கூடிய ஆணாக அப்பா இருப்பாரென அம்மா நினைத்திருக்கக்கூடும். அதனால்தான் மச்சானைவிட்டு அண்ணனை தெரிவு செய்திருக்கலாம். முதலில் சின்ன சலசலப்பு இருந்ததாம். ஊருக்குள்ளேயே மாறிமாறிக் கலியாணம் கட்டி யாருக்கு யார் என்ன முறை என்று தெரியாத எங்கள் ஊரில் இதுவொரு பிரச்சனையாக மாறியிருக்க வாய்ப்பில்லை.

ஒரு நாளுமில்லாது விதானை மாமா வீடு வாக்கு வாதங்களால் நிலைகுலைந்திருந்தது. ஒழுங்கைக்காரர்கள் ஒவ்வொருவராய் விதானையாரின் படலைக்கு வந்த வண்ணமிருந்தனர். விதானை மாமாவின் குரல் இந்தளவுக்கு உயர்ந்தது கிடையாது. ஆத்திரமிகுதியில் இருந்தார். சண்டை நீண்டுகொண்டிருந்தது.

“போயும் போயும் தீவானைக் கட்டினனே. தீவானைக் கட்டினது பிழையாய்ப் போச்சு” என்று மாமி சத்தமிட்டுச் சொன்னாள்

“ஓமடி தீவானோடு படுத்து மூன்றைப் பெத்தாப் பிறகோடி தெரியுது. கிழங்கிச்சி.” என்று மாமா பதிலுக்கு கத்தினார்.

பின்னர் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவசரமாய்க் கிளம்பினார். அவர் திரும்பி வரும்போது அவரோடு ‘ஹயர் கார்’ ஒன்றும் வந்தது. சைக்கிளை ஒழுங்கைக்குள் போட்டுவிட்டு விதானை மாமா வீட்டுக்குள் போனார். மாமியை இழுத்து வந்து காருக்குள் தள்ளினார். அவள் வீட்டு உடுப்போடு இருந்தாள்.

“தீவானோட வாழ்ந்தது காணும் வெளிக்கிடடி.” என்றுவிட்டு திரும்பவும் உள்ளே போய் பிள்ளைகளை அழைத்து வந்தார். அவர்கள் கீழாடையோடு மட்டுமே இருந்தார்கள். பிள்ளைகளையும் காருக்குள் தள்ளினார். பிள்ளைகள் ‘அப்பா அப்பா’ என்று கத்தியபடியிருந்தார்கள். பாட்டி விதானை மாமாவை பேசியபடியிருந்தார்

“அவளை விடடா. என்னடா உனக்குப் பிடிச்சுது” என்று

பாட்டி, மாமியையும் பிள்ளைகளையும் காருக்குள்ளால் இழுத்து எடுக்க முயன்று கொண்டிருந்தார். அம்மாவும் ஒழுங்கைக்காரர்களும் உதவிக்கு போனார்கள்.

“இவளையும், பிள்ளையளையும் இஞ்ச விட்டியள் என்டால் எல்லாத்தையும் கொன்டு போட்டு நானும் போயிடுவன்” என்றார் விதானை மாமா.

அவரின் ஆத்திரம் குறைந்த பாடில்லை. தீவான் என்று விளித்ததால் வந்த ஆத்திரமோ தெரியவில்லை. அவரை அந்தக் கோலத்தில் இதுவரை எவரும் பார்த்ததில்லை. உண்மையாகவே அவர்களை கொன்றிடுவார் போலவே இருந்தது.

“உந்த தீவானோடு வாழ்ந்தது காணும். நான் போறன்” என்று மாமியும் காருக்குளிருந்து கத்தியபடியிருந்தார். கார் உரும்பிராய் நோக்கிப் புறப்பட்டது. மாமி தீவாரைத் திட்டியபடி போய்க்கொண்டிருந்தார்.

இதன் பின்னர், அம்மாவுக்கு விதானை மச்சான் மீது பரிவு ஏற்பட்டிருக்கவேண்டும். தனிய இருக்கிறார் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்? என்று எண்ணியிருக்கக்கூடும். வீட்டு சமையலில் சிலவற்றை கொண்டுபோய் விதானை மாமாவுக்கு கொடுத்து வரத்தொடங்கியிருந்தேன். சிலவேளை அவரும் வீட்டுக்கு வந்து உண்ணப் பழகியிருந்தார். இது அப்பாவுக்கு தெரிந்ததும் வீட்டில் பிரச்சினை மூண்டது.

“என்னிட்ட இல்லாத என்னத்தை அவனிட்ட கண்டனீ” என்று அப்பா அம்மாவைக் கேட்டார்.

அப்பா போதையில் இவ்வாறு கேட்கும் மனிதர் இல்லை. போதையில்லாத மனிதர்களிடமிருந்து வெறித்தனமான கேள்விகள் பிறக்குமோ தெரியாது. அம்மாவுக்கு கோபம் அதிகரித்திருந்தது. நாங்கள் இருவருக்கும் இடையில் சமாதானப் பறவைகளாய்ச் சுற்றியபடியிருந்தோம். சண்டை பெருக்காது இருக்க நாங்கள் முன்கூட்டியே வீறிட்டுக் கதறினோம்.

“என்ட வாயைத் திறக்கவேண்டாம் என்றிருக்கிறன்” என்றாள் அம்மா

“கொம்மா அரிப்பெடுத்து அலையிறா.. இதுக்கோடி என்னை வேலைக்கு துரத்திறனீ.”;

என்றவாறு என்னை தள்ளிவிட்டு அம்மா அருகே கையை ஓங்கியவாறு சென்றார் அப்பா

அம்மா அருகிலிருந்த செம்புவைத் தூக்கி அப்பா மீது விட்டெறிந்தார். தண்ணீரால் நாங்கள் நனைந்திருந்தோம். அப்பாவின் முகத்தில் பட்டிருக்கவேண்டும். குசினிக்குளிருந்து பலவும் அப்பாவை நோக்கி சென்று கொண்டிருந்தன. நாங்கள் மூலைகளுக்குள் பதுங்கிக்கொண்டோம். அம்மாவின் குறி பிசகாது.

“நீ ஆடுற ஆட்டம் ஒன்றும் எனக்கு தெரியதென்டே நினைக்கிறாய். நீ எங்களுக்கு உழைக்கத்தானே விசுவாசமாய் திரிகிறாய். நாயே என்னிட்ட இல்லாத என்னத்தை அவளவையிற்றக் கண்டனீ?” என்று விட்டு அரிவாளை கையில் தூக்கினாள்.

“உன்ட ஆட்டம் காணும். கதைக்க வாறியோ?”

அம்மாவுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. அரிவாளுடன் படலைக்கும் குசினிக்கும் திரிந்தாள். நாங்கள் ஒடிப்போய் அவளை அணைத்தோம். அப்போதுதான் அரிவாளை குசினிக்குள் வீசினாள்.

“அம்மாவைப்பற்றி கதைக்க வாறான் உங்கட கொப்பன். அந்த நாய்.” என்றவாறு எங்களை அணைத்தாள்.

அப்பாவைக் காணவில்லை. வீட்டின் கலவரம் ஒழுங்கைக்கு தெரிந்திருந்தது. எவரும் முகத்தைக் காட்டாது காதை எறிந்துவிட்டுத்தான் இருந்தார்கள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சிறு வெடிப்புகள் வந்து போவதுண்டு. ஆனால் இது போர். அப்பா தற்பெருமையுடன் பின்வாங்கியிருந்தார். அதன் பின்னர் அப்பாவின் லொறி நெடுநாள் நீண்ட ஓட்டங்களைக் குறைத்திருந்தது. குடியிலிருந்து சற்று விலகியிருந்தார். வீட்டில் பலவேலைகளை அப்பா பொறுப்பேற்றிருந்தார்.

அம்மா கருத்தரித்தாள். அப்பா இப்போது போதையிலும் வெறித்தனமான கேள்விகளைக் கேட்கத் தொடங்கியிருந்தார். கொப்பட்டிகொல்லாவையில் எங்கள் லொறி சிங்களக் காடையர்களினால் எரிக்கப்பட்டது. அப்பா தாக்குதலுக்கு உள்ளாகி காயங்களுடன் உயிர் பிழைத்த பின்னர் அவர் மனக்குழப்பங்களுக்கு ஆழாகியிருந்தார். மீளவும் அவர் போதைக்குள் மூழ்கத் தொடங்கியிருந்தார். அப்பாவின் போதையையும், மனப்பிரழ்வையும் அம்மா முகம் கொடுக்க முடியாதவளாயிருந்தாள். அவர்கள் உறவு ஒட்டமுடியாத வெடிப்பாகியிருந்தது.

••••••

பயணக் களைப்பில் அயர்ந்து தூங்கிவிட்டேன். நான் எழுந்து பார்த்தபோது மாமா ஒரு சோபாவிலும் யூலி இன்னுமொரு சோபாவிலும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். இரவு மூன்று மணியாய் இருந்தது. பசி. பாணும் அப்பிளையும் எடுத்து உண்டேன். அதன் பின்னர் எனக்கு நித்திரை வரவில்லை. ஆறு மணியாய் இருந்தது. மாமாவின் எலாரம் கூவத் தொடங்கியது. எழுந்து யூலியைத் தட்டினார். அவளிடம் சிறு அசைவு இருந்தது. பலமாகத் தட்டினார்.

“பொறு நான் போய் விடுகிறேன்” என்றவாறு எழுந்து குந்தியிருந்தாள்.

நான் மாமா படுத்திருந்த சோபாவில் வந்தமர்ந்தேன். என்னைக் கண்டுவிட்டு சற்று நேரம் பார்த்தபடியிருந்தாள்

“ஹேய் பொடியா” என்றுவிட்டு குந்தியிருந்து கண்களை மூடினாள். அவள் போதை நீங்கியது போலத் தெரியவில்லை. மாமா காலைக் கடனை முடித்து வேலைக்கு தயாராகியிருந்தார். குசினிக்குள் சென்று உணவைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தார். நேற்றைய மப்பு அசதி, அசிரத்தை அவரில் காணவில்லை. வேலைக்கு சரியான நேரத்துக்கு செல்லவேண்டும் என்று பொறுப்புணர்வு அவரில் தென்பட்டது. யூலியை மீண்டும் தட்டி எழுப்பினார்.

“ஓழ். நான் போய்விடுகிறேன்.” என்றுவிட்டு எழுந்து தனது கோட்டை போடுவதற்காக சென்றாள்.

“நீ எங்கேயும் போகத் தேவையில்லை. நீ குட்டியை கூட்டிச் சென்று இமிகிரேசன், வெல்பெயர், பள்ளிக்கூட அலுவல்களைப் பார்க்க வேண்டும். அவனிடம் எல்லாப் பத்திரங்களும் இருக்கிறது. அதில் சகல முகவரிகளும் உண்டு. அந்த உதவியை செய்துவிடு” என்றார் மாமா

“ஓழ். என்னுடைய உதவி தேவைப்படுகிறது. வழமைபோல் என்னை வீட்டைவிட்டு கலைக்கிறாய் என்று நினைத்தேன். குட்டி என்னை எட்டு மணிக்கு எழுப்பு” என்றுவிட்டு சோபாவில் சாய்ந்தாள்.

“நான் வேலைக்கு போகப் போறன். இந்தா பத்து டொலர். இது மெற்றோ டிக்கட்டுக்கு. அவளிட்ட காசு இருக்காது. நீ இதை வைச்சு டிக்கட்டை வாங்கு. இது திறப்பு. கதவைப் பூட்டிப்போட்டு கவனமாய் வைச்சிரு” என்றுவிட்டு மாமா வெளிக்கிட்டார்.

எட்டு மணிக்கு யூலியைத் தட்டி எழுப்பினேன்.

“ஓகே நான் போய் விடுகிறேன்” என்றவாறு எழும்பினாள்.

நான் பத்திரங்களைக் காட்டினேன். அவள் எழுந்து கழியலறைக்குச் சென்றாள். நீண்ட நேரமாக அவள் வெளியில் வரவில்லை. தூங்கிவிட்டாளா? கழியலறைக் கதவைத் தட்டினேன்.

“ஓகே.. ஓழ். நான் போய் விடுகிறேன்.” என்றாள்.

மீண்டும் தட்டினேன். அவள் வெளியில் வந்தாள். அவளின் உடலில் எந்த உடைகளும் இருக்கவில்லை. நான் பத்திரங்களைக் காட்டினேன். அவள் என்னைப் பார்த்துவிட்டு

“ஓ ஓகே” என்று மீண்டும் கழியலறைக்குள் சென்றாள்.

அவள் குளிக்கும் சத்தம் கேட்டது. வெளியே வரும்போது அதே உடையுடன் வந்தாள். அவள் மாற்றுவதற்கென்று எதுவும் வைத்திருப்தில்லைப் போலும். தலையைத் துவட்டவில்லை. அவள் முடியிலிருந்து நீர் வடிந்துகொண்டிருந்தது. எங்கள் அறைக்குள் போய் மாமாவின் துவாயை எடுத்து தலை முடியைக் கட்டினாள். வீட்டுக்குள் ஏதாவது கிடைக்குமா என துளாவியவாறு திரிந்தாள். வெற்றுப் போத்தல்கள். மீண்டும் தடவினாள் எதுவும் அவளுக்கு எட்டவில்லை. அவளிடம் ஒரு நடுக்கும் இருந்தது. ஆஸ் ரேக்குள் இருந்த குறை சிக்கரட்டை எடுத்து மூட்டினாள். சோபாவுக்குள் குரண்டியபடியிருந்து அந்தக் குறையை இழுத்து முடித்தாள். ஏதாவது கிடைக்காதாவென மீண்டும் குசினியைத் தடவினாள். எதுவும் அகப்படவில்லை. தனது நீண்ட சப்பாத்தை அணிந்தாள். கோட்டைப் போட்டாள். அவளின் நடுக்கம் சற்று அதிகரித்ததுபோல் இருந்தது.

“பொடியா போவோம்.” பத்திரத்தை வாங்கிப் பார்த்தாள்.

கதவைப் பூட்டிவிட்டு அவளைப் பின்தொடர்ந்தேன். குளிர் கூடவாக இருந்தது. குளிரைத் தாங்கும் உடைகள் என்னிடம் இல்லை. அவளும் அதுபற்றி அக்கறைப்பட்டவளாகத் தெரியவில்லை. மெற்றோ அருகே புகைத்துக்கொண்டிருந்த ஒருவரிடம் சிக்கரட்டைப் பெற்று கதைத்தவாறு புகைத்து கொண்டிருந்தாள். சிக்கரட் முடிந்திருந்தது. கதை தொடர்ந்தது. கதையின் முடிவில் அந்த நபரை அணைத்துவிட்டு இன்னுமொரு சிக்கரட்டை வாங்கி வந்தாள். நான் என்னிடமிருந்த பத்து டொலர்களை அவளிடம் நீட்டி

“ரெயின் டிக்கட்” என்று கூறினேன்.

அவளின் முகத்தில் ஆச்சரிய மலர்ச்சி தோன்றி மறைந்தது. காசை வாங்கி கோட் பையில் பக்குவமாக செருகினாள். மெற்றோ வண்டிக்காக ஆழமாக கீழ் இறங்க வேண்டியிருந்து. கீழே செல்வதற்கான இயந்திர படிகளில் சென்று டிக்கட் பெறும் கவுண்டரை அடைந்திருந்தோம். டிக்கட்டை உள்நுழைத்தவுடன் இடுப்பளவிலாளான கதவு திறந்து பயணிகளை அனுமதித்துக்கொண்டிருந்தது. யூலி டிக்கட் வாங்க முயற்சிப்பதாய் தெரியவில்லை. கவுண்டரில் நிற்கும் அந்த மனிதனை தள்ளி நின்று வேவு பார்த்தவாறு நின்றாள். நானும் அவள் அண்டையாகப் போய் நின்றேன். பயணிகளோடு அந்த மனிதன் மினக்கடும் சந்தர்ப்பத்தில் திடுமென என்னைத் தூக்கி நுழைவு வாயிலுக்கு மேலால் போட்டாள். தானும் அதற்கு மேலால் பாய்ந்து வந்து

“ஓடு” என்றாள்

என்னை இழுத்துக்கொண்டு ஓடி வந்தாள். எனக்கு பயமாக இருந்தது. இது களவு. எமக்காய் காத்துக்கொண்டிருப்பதுபோல் மெற்றோ ஒன்று நின்றது.

“ஓடு” என்று என்னை இழுத்துக்கொண்டு அதற்குள் நுழைந்ததும் கதவுகள் மூடிக்கொண்டன. எனது இதயத்தின் துடிப்பு வெளியிலும் கேட்கத் தொடங்கியிருந்தது. நாங்கள் சேரவேண்டிய மெற்றோ நிலையத்தால் வெளியே வந்தோம்.

“நீ உள்ளே நில்லு. கெதியாய் வந்துவிடுவேன்” என்றுவிட்டு சென்றாள்.

வரும்போது அவளது கையில் பியர் போத்தல் இருந்தது. அவளின் கைநடுக்கம் போவதாய்த் தெரியவில்லை. அவளைப் பார்த்தவாறு நின்றேன். எனக்குள் அச்சம் படரத் தொடங்கியிருந்தது. அங்கிருந்த குந்தில் அமர்ந்து சிக்கரட்டை புகைத்தவாறு பியரை அருந்திக்கொண்டிருந்தாள். நேரம் பதினொரு மணியை அண்டியிருந்தது. பயணக் களைப்பு, நேரக் களைப்பு எல்லாம் என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அவள் என்னை அயரவிடவில்லை. வாவென கையை அசைத்தாள். ஐந்நூறு மீற்றர் வரை நடக்கவேண்டியிருந்தது. அதற்குள் புகைத்துச் சென்றவர்களிடம் சிகரட்டுகளை சேர்த்திருந்தாள்.

நீண்ட வரிசை. 143ஆம் இலக்கம் எங்களுக்குத் தரப்பட்டது. இப்போது 34 ஆவது இலக்கத்துக்கான சேவை வழங்கப்படுகிறது. அதிகமாக தமிழர்களும், ஆபிரிக்கர்களும் இருந்தார்கள். யூலி பொறுமையிழந்திருந்தாள். அங்கு நின்ற பாதுகாப்பு அதிகாரியோடும், ஊழியர்களோடும் அடிக்கடி போய்க் கதைத்துக்கொண்டிருந்தாள். அவர்களோடு கதைக்க முடியாத பொழுதுகளில் புகைக்க வெளியில் சென்று கொண்டிருந்தாள். எனது இலக்கத்தை அழைத்துவிடுவார்களோ என்ற அச்சம் எனக்குள் இருந்தது. அவள் ஒரிடத்தில் இருப்பதற்கு முடியாதவளாய் அலைந்தபடியிருந்தாள். தமிழ்ச் சிறுவனுடன் ஒரு வெள்ளைக்காரி. யார் அவள்? என்ற குடைவில் தலை கனத்த தமிழர்கள் என்னிடம் விசாரித்தவாறு இருந்தார்கள். அவளொரு அதிகாரி என நினைத்ததாகக் கூறினார்கள்.

“அவள் என் பாதுகாவலர்” என்று அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். அவர்களையும் மச்சான் என்றே யூலி விளித்தாள். எனக்கு சங்கடமாய் இருந்தது.

யூலி அங்கு இடைவேளைக்காய் வெளியே வந்த அதிகாரியுடன் கதைத்தாள். என்னைக் காட்டியபடியிருந்தாள். அவர்கள் சம்பாசணை தர்க்கமாய் மாறியது. பாதுகாப்பு அதிகாரி யூலியை வெளியே அகற்றுவதற்கு தயாராய் வந்து நின்றார்.

“உன்னை வெளியே அகற்றி விடுவேன். அமைதி” என்றார் பாதுகாப்பு அதிகாரி

யூலி எனக்கு அருகில் வந்திருந்தாள். உரத்து தனது கருத்தை அவளால் தெரிவிக்க முடியாது. அதைக்கூட அவளால் சகிக்க முடியும். ஆனால் புகைக்கவேண்டும். எழுந்து வெளியில் போனாள். 112ஆம் இலக்கம் அழைக்கப்பட்டிருந்தது. வெளியில் போன அதிகாரியோடு யூலி வந்துகொண்டிருந்தாள். எனக்கு பயம் மேலிட்டது. என்னை அந்த அதிகாரி அழைத்தார். 30 இலக்கங்களை இலகுவாக தாவக்கூடிய அதிகாரம் படைத்தவராயிருந்தார். யூலியின் நெருக்குவாரத்தின் பயன். எனக்கான தமிழ் மொழிபெயர்ப்பாளரும் வரவழைக்கப்பட்டிருந்தார். மொழிபெயர்ப்பாளரையும் மச்சான் என்றே யூலி விளித்து சுகம் விசாரித்தாள். அவரொரு பெண். ‘ள்’, ‘ன்’ உருபுபற்றி தமிழ் இலக்கண வகுப்பெடுத்தார் மொழிபெயர்ப்பாளர். அதன் பின்னரும் ‘நன்றி மச்சான்’ என்றாள் யூலி. நாங்கள் இருவரும் புன்னகைத்துக்கொண்டோம்.

“நீ களைப்பாய் இருப்பதாய் உனது பாதுகாவலர் சொல்கிறார்” என்றார் அதிகாரி

அவள் வெளியில் என்ன கதைத்திருப்பாள் என்று ஊகித்துக்கொண்டேன். இப்போ எனது களைப்பு அதிகரித்திருந்தது. உடனடியாக நான் பாடசாலையில் சேர்க்கப்படவேண்டுமென அதிகாரி சொன்னார். அதற்கான பத்திரங்களை அவர் ஒப்படைத்தார். பாதுகாவலர்களுக்கு இருக்கவேண்டிய கடப்பாடுகள் பற்றி அதிகாரி எடுத்தியம்பினார்.

“நீங்கள் இந்தச் சிறுவனுக்கான பொறுப்பிலிருந்து விலகினால், நாங்கள் அவனை வேறு பாதுகாவலரிடம் சேர்க்கவேண்டி வரும்” என்றார் அதிகாரி

அவளுக்கு கைகள் நடுங்கத் தொடங்கியிருந்தன. அவளின் ஒப்பங்கள் வெவ்வேறு மாதிரிகளில் இருந்தன. ஒவ்வொரு ஒப்பத்தின் பின்பும் முடிந்ததா? என வினவியபடியிருந்தாள். பதிலாக அதிகாரியின் பெருமூச்சும், தலையசைப்பும் அவரின் வெறுப்பை காட்டிச் சென்றது. அதிகாரியும் மொழிபெயர்ப்பாளரும் தமது ஒவ்வாமையை பரிமாறிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மொழியை நான் புரிந்துகொண்டேன்.

“உனது பொதுநலப் பணம் பாதுகாவலர்களின் பெயர்களில் அனுப்பப்படும். நீ பாடசாலையில் சேர்ந்த கடிதம் எங்களுக்கு தரப்படவேண்டும். சரியா? நன்றாகப் படி” என்றார் அதிகாரி.

அவரின் புன்னகை நிலைத்திருந்தது. அது உள்ளத்திலிருந்து வந்திருக்கவேண்டும். அவர் சில மெற்றே டிக்கட்டுகளை நீட்டினார். நான் யூலியைப் பார்த்தேன்.

“பெற்றுக்கொள். நாளைக்கு பள்ளிக்குப் போகத் தேவை” என்றாள்

பத்திரங்களை பக்குவப்படுத்தி எடுத்துக்கொண்டேன். யூலி புகைக்கவேண்டும். அவளின் நடுக்கம் அதைத்தான் காட்டுகிறது. வெளியில் வந்தோம். அவள் தனது பைக்குள் சிகரட்டை தடவினாள். அவளுக்கு எதுவும் எட்டவில்லை. நிலத்தைத் தடவினாள். சிகரட் அணைக்கும் தட்டை கிளறிப் பார்த்தாள். பின்னர் குறைத்துண்டு ஒன்றை கண்டு பிடித்தாள். அதை மூட்டுவதற்கு அவளிடம் நெருப்பு இருக்கவில்லை. மெற்றோ நோக்கி நடக்கத் தொடங்கினோம். மெற்றோவைக் கடந்து கடையொன்றுக்குள் புகுந்தாள். பியர் போத்தலுடன் வந்தாள். சிகரட்டுக்காக அங்கு நின்றவர்களிடம் பேச்சுக் கொடுத்தாள். ஒன்றைப் பெற்று பற்ற வைத்தாள். மீண்டும் அந்த குந்தில் அமர்ந்து பியரை அருந்தத் தொடங்கினாள். நான் அவளைப் பார்த்தவாறு நின்றேன். அவளின் நடுக்கம் இன்னமும் கலையவில்லை.

வீட்டை வந்திடைந்திருந்தோம். நான்கு மணியாகியிருந்தது. எனக்குப் பசிக்க ஆரம்பித்திருந்தது. அங்கிருப்பனவற்றில் வாழைப்பழத்தையும், அப்பிளையுமே சாப்பிட முடியும். குளிர்சாதனத்துக்குள் இருக்கும் எதையும் நான் சாப்பிடப் பழகவில்லை. சோற்றுக்காக நா ஏங்கிக் கிடந்தது. யூலியை தன்னை ஒருநிலைப்படுத்த முடியாது இருந்தாள். வீட்டை மீண்டும் சல்லடையிட்டுத் தேடினாள். வெற்றுப் போத்தல்கள். அவளிடமிருந்த சில்லறையில் எதுவும் வாங்க முடியாதுபோலும். பதற்றத்தை தணிக்க டிவியைப் போட்டு சனல்களை மாற்றியபடியிருந்தாள். திரும்பத் திரும்ப அதே சனல்கள் வந்து போய்க்கொண்டிருந்தன.

“ஹேய் பொடியா! உன்னிடம் காசு ஏதும் உண்டா?” என்று கேட்டாள். நான் புன்னகைத்தேன்.

“ஓழ், மலம்” என்றுவிட்டு டிவியை நிறுத்திவிட்டு கோட்டை அணிந்துகொண்டு வெளியே போனாள்.

மெற்றோ நிலையம் அருகே கிடக்கும் குறைதுண்டுகளைப் பொறுக்க அவள் சென்றிருக்கக்கூடும். யூலி உரையாடல்களை மிக இலகுவாகத் தொடுக்கிறாள். அவள் பேச்சில் எல்லா இரசங்களும் வந்து போகின்றன. முடிவில் இவளுக்கு ஒரு சிகரட்டை கொடுத்துவிட்டுப் போகும் நெருக்கம் வளர்ந்து விடுகிறது. அவள் முகம் ஈர்ப்பானது. போதையை அவள் முகம் காட்டுவதில்லை. அவளது கோட்டுக்குள் எல்லா நடுக்கங்களும் மறைந்திருக்கிறது. நான் ஒன்றைக் கவனித்தேன். பெண்களிடம் அவள் சிக்கரட்டுக்காக இரங்கவில்லை.

மாமா வந்த பின்னர்தான் வீட்டில் உலை ஏறியிருந்தது. மாமா உணவகமொன்றில் வேலை செய்வதால் மூன்று வேளையும் அங்கேயே சாப்பிடக்கூடியவர். வார இறுதியில்தான் சமையல். இன்று எனக்காய் சோறு, இறைச்சிக் கறி. மூக்கை இழுத்தவாறு யூலி வீட்டுக்குள் புகுந்தாள்.

“மச்சான் சமைத்தாயா..? எங்N;க சாராயங்களை ஒழித்து வைப்பாய்..?”

அவளின் நடுக்கம் இன்னும் குறையவில்லை. வாயில் சிக்கரட் புகைந்து கொண்டிருந்தது. இன்று போன விடயங்களை மாமாவுக்கு சொல்லிக்கொண்டிருந்தாள். பின்னர் எழுந்து குசினிக்குள் போனாள். அங்கு நடந்த சரசரப்புகள் எதுவும் எனக்குப் புதிதில்லை. மாமா தட்டில் சாப்பாடோடு வந்தார்.

“இந்தா குட்டி சாப்பிட்டிட்டு நேரத்துக்கு படு. நாளைக்கு உவள் பள்ளிக்கூடத்தில கொண்டுபோய் சேர்த்துவிடுவாள்”

யூலியின் நடுக்கம் குறைந்திருந்தது. சாரயமும், சிக்கரட்டும் அவளுக்கு புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கவேண்டும். மாமா எனக்கு முன்னால் அவளின் நெருக்கத்தை தவிர்த்தவண்ணம் இருந்தார். அதை அவளும் சற்றுப் புரிந்துகொண்டாலும்; இயல்பாய் இருந்தாள். சேரவேண்டிய இடங்களில் முத்தங்களை சேர்த்துக்கொண்டாள்.

•••••

காலையில் இருவரும் சோபா படுக்கையில் போர்வைக்குள் முடங்கிக் கிடந்தார்கள். யூலியின் உடை நான்கும் அங்காங்கே கிடந்தன. இப்பொழுது ஐந்து மணி. மாமாவின் எலாரம் அடிக்கத் தொடங்கியது. அவருக்கு எழக்கூடிய சங்கடத்தை தவிர்க்க நான் அறைக்குள் போயிருந்தேன். அவர் யூலியை எழுப்பும் சத்தம் கேட்டது.

“பொறு நான் போய் விடுகிறேன்” என்றாள் அவள்.

நானும் ஹோலுக்குள் வந்தேன். அவளின் உடைகள் மறைந்து போயிருந்தன. மாமா அவளை மீண்டும் எழுப்பினார்.

“ஓழ். நான் போய் விடுகிறேன்” என்றாள் அவள்.

“இல்லை. இவனை பள்ளியில் சேர்க்கவேண்டும். மறக்காதே”

அவள் போர்வைக்குள்ளால் தலையை எடுத்து என்னைப் பார்த்தாள்.

“ஓ பொடியா என்னை ஒன்பதிற்கு எழுப்பு” என்று தலையை உள்ளே இழுத்துக்கொண்டாள்.

“நீ பள்ளிக்கு போய் இருக்கிறாயா.? எட்டு மணிக்கு பள்ளி ஆரம்பம்” என்றார் மாமா.

அவள் போர்வைக்குள்ளால் தலையை எடுக்கவில்லை. அவளின் நேரத்திற்குத்தான் பள்ளி ஆரம்பமாகும். அவளுக்காக விடப்பட்டதுபோல் அரைப் போத்தல் சாராயம் குசினிக்குள் இருந்தது. எமக்கான ‘சன்விச்’கள் இருந்தன. அவளை எழுப்பினேன். போர்வையோடு எழுந்து சாராயப் போத்தலையும் எடுத்துக்கொண்டு கழியலறைக்குள் சென்றாள். வெள்ளைக்காரருக்கும் ‘கக்கூசுக்குள்’ பாடும் பழக்கம் இருக்கிறது. அவளது மகிழ்ச்சிக்கு சாராயம் மட்டும் காரணமல்ல. வீட்டைவிட்டு வெளியில் போகத்தேவையில்லை என்பதும் காரணமாய் இருக்கக்கூடும்.

அவளிடம் மாற்று உடுப்பு இருந்ததாகத் தெரியவில்லை. மாமாவின் பெனியனைத் உடுத்தாள். அதற்கு மேல் அவரது சேட் ஒன்றைப் அணிந்தாள். அவளின் கையுறையையும் தொப்பியையும் அறைக்குள் தடவி எடுத்தாள். அவற்றையும் அணிந்தாள். கண்ணாடியில் பார்த்தாள். முடியை சரிப்படுத்தினாள். மாமாவின் அத்தரை விசிரினாள். சன்விச்சை எடுத்து உண்டாள். போத்தலை காலி செய்தாள். அவளின் காலைக் கடன் முடிந்திருந்தது. அவள் மிடுப்பாய் இருந்தாள். எதையும் உள்ளே அணியலாம். அவளின் கோட் எல்லாவற்றையும் மறைத்துவிடும். முழங்கால் குதியை அணிந்துவிட்டு

“பையா வெளிக்கிடு. நடை தூரம்தான்.”

“அப்போ மெற்றோ டிக்கட்.?”

“பள்ளி வெகுதூரம் என்று அதிகாரியிடம் சொன்னேன். அதுதான்”

என்றவாறு எனது தலையை குலைத்துவிட்டாள். பின்னர் அதை சரி செய்தாள். அவள் அளவான போதையில் இருந்தாள். அவளிடம் எந்த நடுக்கத்தையும் காணவில்லை. போதை குறைந்தாலுமோ கூடினாலுமோ அவளிடம் நடுக்கம் இருக்கிறது. அவளின் நடை எடுப்பாகவிருந்தது. நாம் பள்ளிக்கு செல்லும் வழியில் அவளை பலரும் விடுப்பாகப் பார்ப்பது தெரிந்தது. அவளுடன் அண்டியபடியே நானும் சென்று கொண்டிருந்தேன். தமிழ் சிறுவனும் வெள்ளைக்காரியும் அங்கு நின்ற பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கும். வெள்ளை மாணவர்களுக்குள் சிறுபான்மையாக ஆபிரிக்கர்களும், வியட்நாம், சீன, அரேபிய மாணவர்களும் ஒரு சில தமிழ் மாணவர்களும் அங்கு இருந்தார்கள். நாம் பள்ளி காரியாலயத்துக்குள் செல்லும் வரையும் அங்கு நின்ற அனைவருக்கும் விருந்தாக இருந்தோமோ தெரியாது. அவர்களின் பார்வைப் புலத்தை நாம் கவர்ந்த வண்ணம் இருந்தோம்.

பதிவாளருடன் பிரஞ்சிலேயே கதைத்தவாறு இருந்தாள். நான் ஏழாம் தரத்தில் சேர்க்கப்படவேண்டும். ஆயினும் பதிவாளர் என்னைச் சேர்ப்பதற்கு தயங்கினாள். முழுப்பாடங்களும் பிரஞ் மொழியில் கற்பதாயின் மட்டுமே இங்கு சேர்க்க முடியும் என்று அவள் தெரிவித்தபடியிருந்தாள். யூலி அவளுடன் வாதிட்டபடியேயிருந்தாள்.

“அதிபருடன் கதையுங்கள்” என்றாள் பதிவாளர்

“ஹேய் பொடியா உனக்கு பிரெஞ் தெரியுமா?”

நான் அவளைப் பார்த்து சிரித்தேன். அப் பாடசாலையில் ஆங்கில வழி கல்வியும் இருந்தது. பெற்றோர்கள் ஆங்கிலேயர்கள் என்றால் மட்டுமே ஆங்கிலத்தில் கற்க முடியும். பிரஞ் ஆங்கிலம் கலந்த கல்வியும் உண்டு. சில பாடங்கள் பிரெஞ்சிலும் ஏனைய பாடங்கள் ஆங்கிலத்திலும் இருக்கும். அதிபரின் அறைக்குள் சென்றோம். யூலியுடன் அவரது உரையாடல் தொடங்கியது. பாதுகாவலராகியது பற்றிய உரையாடல் சற்று நீளமாகவே இருந்தது.

“ஆங்கில கொலனியிலிருந்து வரும் மாணவர்களை பிரெஞ்சில் படிக்க நிர்ப்பந்திக்க முடியாது. அப்படி கோருவது நல்லதல்ல.” என்றாள் யூலி

அவளின் வாதங்களை அதிபர் செவிமடுத்தபடியிருந்தார். அவளின் போதை எனது கல்விக்கு கெடுதல் என்று நினைத்துக்கொண்டேன். அதிபர் ஆங்கிலத்தில் சில கேள்விகளை என்னிடம் வைத்தார். நான் தடக்கி எனது பதிலை அளித்தபடியிருந்தேன்.

“இவருக்கு  ஆங்கிலமும் தெரிவது போன்று எனக்குத் தோன்றவில்லையே” என்று இழுத்தார் அதிபர்.

“நான் வேலைக்குப் போய் விடுவேன். திங்கள் தொடங்கி சனி வரையும் பின்நேர வேலை. இவனின் வீட்டு வேலைகளுக்கு இவனது மாமாதான் துணை புரிய முடியும். அவர் ஆங்கிலத்தில் கற்றவர். அவர் ஆசிரியராய் இருந்தவர்” என்றாள் யூலி

மாமா ஆசிரியர்? எனக்கு அது புதிது. வீட்டுக்காரருக்கும் தெரியாமல் இருந்திருக்கக்கூடும். யூலியின் வாதங்களை மதித்தாரோ அல்லது அவளது இரசங்களில் திளைத்தாரோ நான் பிரஞ்-ஆங்கில கலப்பு வகுப்பில் சேர்க்கப்பட்டேன். சமூகக் கல்வி, வரலாறு, பிரஞ்மொழி என்பன பிரஞ்சில் படிக்கவேண்டும். அதிபரின் துண்டுடன் பதிவாளரைச் சந்தித்தோம். அவருக்கு அதிபரின் முடிபு பிடிக்கவில்லை. அவரின் செய்கைகள் எமக்கு அதைக் காட்டிய வண்ணம் இருந்தன. பாடசாலை நடைமுறைகள், பாட அட்டவணை, நூல்கள், பயிற்சிப் புத்தகங்கள் பற்றிய விபரங்கள் எல்லாவற்றையும் பிரஞ்சு மொழியிலேயே தந்தார். பாடசாலையின் முக்கிய பகுதிகள் பற்றி பிரஞ்சிலேயே விளங்கிக்கொண்டிருந்தார். கியூபெக் அரசினால் ஆங்கிலமொழி வழிக்கல்வி தவிர்க்கப்பட்டு வருகிறது. இருமொழித் திட்டத்தில் உள்ள பாடசாலைகளில் அகதிகளை சேர்ப்பது கடினமென்பதை பின்னர் அறிந்துகொண்டேன்.

“இது பாடசாலையின் அனுமதிக் கடிதம். நீங்கள் உபகரணங்களை வாங்கிவிட்டு நாளைக்கு இணையலாம். ஏற்கனவே அரை நாள் முடிந்துவிட்டது. பாடசாலை தொடங்கி மூன்று மாதங்கள் சென்றுவிட்டன. நீ அவற்றையும் கற்றாகவேண்டும். உனது ஆசிரியர்களிடம் நீ அவற்றை அறிந்து கொள்ளலாம். நாளை நீ என்னிடம் வா. உனக்கான வகுப்புக்கு அழைத்துச் செல்வேன்” என்றாள் பதிவாளர்.

“நாளைக்கு நாங்கள் வர முடியாது. நாளை இந்தக் கடிதத்தை வெல்பெயரிடம் சேர்க்கவேண்டும். அவர்கள் நிதி தந்தால்தான் பொடியனுக்கான உபகரணங்கள், ஆடை என்பன வாங்கவேண்டும். எங்களுக்கு இரண்டு நாள் அவகாசம் தாருங்கள்.” என்றாள் யூலி

யூலி எனது வேலைகளை நீட்டிக்கொள்வதற்கு காரணம் உண்டு. அவள் எனது அலுவல்களால் எங்கள் வீட்டில் இரவில் தங்க முடிகிறது. அவளின் கணக்கின்படியே எனக்குப் பாடசாலை தொடங்கும்.

•••••

பொதுநல நிதி வந்திருந்தது. அந்தக் காசோலையைப் பார்த்து மாமா ஆச்சரியத்தில் இருந்தார். வழமைத் தொகையின் இரண்டு மடங்கு வந்திருந்தது. யூலியின் வாய் வண்ணம் இந்தத் தொகையைச் சாத்தியமாக்கியிருக்கும்.

“நல்ல காசு அனுப்பியிருக்கிறாங்கள்”

“மச்சான் எங்கே பார்ப்போம்” என யூலி காசோலையைப் பார்த்தாள்

“இதென்ன காசு. அவனுக்கு உடுப்பு, படுக்கைச் சாமான்கள், பள்ளிச் சாமான்கள், போக்குவரத்து செலவு, சாப்பாடு, வாடகை இந்தத் தொகை காணாது” என்றாள் யூலி

“அகதிகள் பெறும் தொகை இதன் அரைவாசி. அகதிகள் வெள்ளையர்கள்போல் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறார்கள்.” என்றார் மாமா

“ஓழ். அந்தத் தொகையில் யார்தான் சீவிக்க முடியும்? அடுத்த முறைபோகும்போது கதைப்போம்”

என்றுவிட்டு சுருட்டை சுற்றத் தொடங்கினாள். அதைப் பற்ற வைத்தபோது மணம் மூக்கை அரிக்கத் தொடங்கியது. இரு இழுவையின் பின்னர்

“மச்சான் இந்தா” என்று

மாமானாரிடம் நீட்டினாள். அவரின் சங்கடத்தை அறிந்து நான் அறைக்குள் தஞ்சமடைந்தேன். அவர்கள் ஓய்ந்த பொழுதில் வெளியே வந்தேன். டிவீ வேலை செய்தபடி இருந்தது. இருவரும் ஆளுக்கொரு சோபாவில் உறங்கிக் கிடந்தார்கள். நான் குசினிக்குள் சென்றேன். சட்டிகள் அனைத்தும் வழித்துத் துடைத்திருந்தன. அங்கிருந்த பாண் துண்டுகளையும் காணவில்லை. அப்பிளை உண்டுவிட்டு உறக்கத்துக்கு போனேன்.

நான் வழமைக்கு மாறாகவே உறங்கியிருந்தேன். மாமா வேலைக்குப் போயிருந்தார். யூலி இன்னமும் உறக்கத்தில் இருந்தாள். பள்ளிக்கான பொருட்கள் வாங்கவேண்டும். மாமா இவளிடம் காசைக் கொடுத்தாரோ தெரியாது. யூலியிடம் பெருந் தொகையை மாமா கையளித்திருக்க மாட்டார். அவள் அதை போதை பொருட்கள் வாங்குவதற்கு செலவளிக்கக்கூடும். அவள் காசோடு தொலைந்து போகக்கூடியவள். மாமா என்னையும் எழுப்பாமல் சென்றிருந்தார். மதியத்தை அண்மித்திருந்தது. அவளைத் தட்டி எழுப்பினேன். மெதுவாக போர்வையை விலத்திப் பார்த்தாள்.

“என்ன நேரம்.?”

“12:30”

“ஏன் நீ என்னை எழுப்பவில்லை.” என்றுவிட்டு எதையோ தடவினாள். தனது உடைகளுக்குள் தடவிப் பார்த்தாள். சோபா இடுக்குக்குள் விரல்களைவிட்டு ஒரு கடித உறையை எடுத்தாள். அதைத் திறந்து காசைப் பார்த்தாள்.

“உனக்கான உடுப்புகள், உபகரணங்கள் வாங்கவேண்டும்”

காசை மேசையில் வைத்துவிட்டு கழியலறைக்குள் சென்றாள். அவளின் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. தலையைத் துவட்டியவாறு வெளியே வந்தாள். அது எனது துவாய். மாமாவின் துவாயை குறுக்;குகட்டு கட்டியிருந்தாள். சாம்பல் தட்டில் கிடந்த குறைச் சுருட்டைப் புகைத்தாள். புகை மூக்கை அரிக்கத் தொடங்கியிருந்தது. அவள் உற்சாகமாய் இருந்தாள்.

“உன் மாமா சன்விஜ் செய்யவில்லையா” என்றுவிட்டு

குளிர்பெட்டியைத் திறந்தாள். கொட்டோக்கை எடுத்து உண்டாள். பச்சை முட்டையை உறிஞ்சிக் குடித்தாள். பாலைக் குடித்தாள். பசி ஆறவில்லை. அப்பிளை எடுத்து உண்டாள். சோபாவில் கிடந்த உடைகளை எடுத்து அணியத் தயாரானாள்.

“பொடியா திரும்பாதே” என்றாள்.

அவ்விடத்திலேயே நின்று உடைகளை அணிந்தாள். அவள் தூக்கி எறிந்த துவாய்களை மீண்டும் கழியலறை சூடேற்றிக்கு மேல் போட்டுவிட்டேன். அவளுக்கு பசி தணியவில்லை. இன்னுமொரு அப்பிளைத் தூக்கினாள்.

“நாங்கள் சாப்பிடவும் வேண்டுமல்லவா? இன்று நாங்கள் வெளியில் சாப்பிடுவோம். வெளிக்கிடு” என்றாள்.

கடைக்குள் நுழைந்து சிகரட் பெட்டியோடு வந்தாள். மெற்றோவுக்குள் நுழைய முன்னர் ஒன்றை புகைக்கத் தொடங்கினாள். அந்த சிகரட்டை அவள் முடிக்கவில்லை. புகைக்கு இரந்தவர்களுக்கு சிகரட்டைக் கொடுத்த வண்ணம் வந்தாள். இன்று எங்களிடம் மெற்றோ டிக்கட் இருந்தது. கண்ணியமாக அதைப் பாவித்தோம்.

“இண்டைக்கு நாங்கள் காசுக்காரர். இருந்தால் போடுவது இல்லாவிட்டால் பாய்வது”

என்றுவிட்டு ஒரு பாடலை உரத்துப் பாடினாள். மெற்றோ நிலையச் சுரங்கச் சுவர்களில்பட்டு எதிரொலித்தபடியிருந்தது. அந்த எதிரொலிப்பைப் கேட்டதும் எனக்கும் கத்தவேண்டும்போல் இருந்தது. ஆனால் எம்மைக் கடந்தவர்களின் முகங்களில் அதற்கான வரவேற்று இருக்கவில்லை. முகச்சுழிப்பு. அவள் பாடினாள். மெற்றோ நிற்காமலே சென்றது. அவளின் பாடலை விரும்பாமல் இருந்திருக்கலாம். அவள் இப்போ ஆடவும் தொடங்கியிருந்தாள். பலமாகச் சிரித்தாள். அவளின் சிரிப்பொலி எதிரொலித்து அவளிடமே மீண்ட வண்ணமிருந்தது. அவளின் செய்கைகள் எனக்கு சங்கடமாய் இருந்தன. அவளிடமிருந்து சற்றுத் தள்ளியே நின்றிருந்தேன்.

பெரிய அங்காடியை அடைந்திருந்தோம். பெண்கள் பகுதிக்குள் நுழைந்தாள். அவளுக்காக அமைக்கப்பட்டது போன்றே இருந்தது. அங்கிருக்கும் ஒவ்வொன்றையும் பார்த்தபடியே வந்தாள். அவளுக்கு பிடித்ததை காவியபடி வந்தாள். உடைகள், தொப்பிகள், கையுறைகள், சப்பாத்துகள் அவள் கைகளை நிறைத்திருந்தன. அங்கு பணியாற்றுவர்களின் கண்கள் எங்களை மொய்த்தவண்ணம் இருந்தன. அவர்கள் கண்கள் அகன்றபோது எங்களை கண்காணிக்க இரண்டு அங்காடிக் காவலர்கள் அந்த இடத்தை சுற்றிய வண்ணம் திரிந்தார்கள். அவள் உடைகளை போட்டுப் பார்க்கும் அறைக்கு சென்றாள்.

“மூன்று உடுப்புகள்தான் நீங்கள் உள்ளே கொண்டு போக முடியும்” என்றாள் அங்கு நின்ற பணியாள்

“ஓழ். நான் அவ்வளவையும் வாங்கிப் போகவே வந்தேன். இந்தா என்னிடம் பணம் இருக்கிறது. நீங்கள் என்னை கவனிக்கும்முறை எனக்குப் பிடிக்கவில்லை” என்று தனது குரலை உயர்த்தினாள் யூலி

அவளின் குரல் அந்த பெரும் அங்காடிக்குள் கலகத்தை ஏற்படுத்திற்று. காவலர்கள் அவளின் குரலைத் தணிக்க முட்பட்டார்கள்.

“எனது குழந்தைக்கு முன்பாக என்னை அவமானப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள்” என்று என்னை அணைத்தபடி கூறினாள்.

அவள் கொண்டு வந்ததில் அரைவாசி உடுப்புகளை உள்ளே கொண்டுபோக அனுமதித்தார்கள். நான் அங்கிருந்த கதிரையில் குந்தியிருந்து வாசலைப் பார்த்தபடியிருந்தேன். நேரம் நீண்டுகொண்டிருந்தது. காவலர்கள் சற்று தள்ளி நின்று எங்களை அவதானித்தபடியிருந்தார்கள்.

“இந்தா எல்லாம் சரியாக இருக்கிறதா பார்” என்று ஆடைகளை தூக்கி மேசையில் வீசினாள்.

மீதி பாதியை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள். பின்னர் நாலு உடுப்பை தெரிவு செய்தாள். பொருட்களை பார்ப்பதான பாவனையில் அங்கு அழகாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த பொருட்களை கலைத்தபடி வந்தாள். காவலர்கள் அருகே நிற்கும்போது அவளது செய்கை அதிகரித்திருந்தது.  இப்போது சிறுவர்களுக்கான பகுதிக்குள் வந்திருந்தோம். அவளுக்குப் பிடித்தமான ஆடைகளை எடுத்து எனக்கு அளவு பார்த்தாள். இப்போ குளிர் காலம் ஆதலால் அதற்கு தகுந்த உடைகளை தேர்ந்தெடுத்தாள்.

“உள்ளே போய் அணிந்து வா” என்று என்னை உள்ளே அனுப்பினாள்

நான் ஒவ்வொரு உடையாய் அணிந்துவந்து அவளுக்கு காட்டியபடி நின்றேன்.

ஒரு தொகை உடுப்பும், உள்ளாடைகளையும், சப்பாத்துக்களையும் தெரிவு செய்தாள். கனடா வருவதற்காகவே முதன்முதலில் கீழ் உள்ளாடையை அணியத் தொடங்கியிருந்தேன். அதை அவளிடம் எப்பிடி கேட்பது என்ற சங்கடம் எனக்கிருந்தது. எனக்கு என்ன தேவையென்பதை அவள் அறிந்திருந்தாள். காவலர்கள் இப்போ சிறுவர் பகுதிக்குள் நடந்து திரிந்தார்கள். அவளுக்கு அது எரிச்சலை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.

“உங்களுக்கு என்ன ஓழ் வேண்டும்? எங்களை நிம்மதியாக விடுகிறீர்களா? என் பிள்ளைக்கு முன்னால் அவமானப்படுத்துகிறீர்கள்” என்று கத்தினாள்.

அவர்கள் அந்த இடத்தைவிட்டு விலகினார்கள். எடுத்த உடுப்புகளையும், பாடசாலை உபகரணங்களையும் காசுப்பட்டறையில் தூக்கிப் போட்டாள். அவள் தனது ஆத்திரத்தை காட்டுவதற்கு எதையெல்லாம் செய்யமுடியுமோ அனைத்தையும் செய்தபடியிருந்தாள். எனது சாமான்களை முதலில் போட்டாள்.

“எவ்வளவு வந்திருக்கிறது” என பணியாளரைக் கேட்டாள்.

தன்னிடமிருந்த பணத்தை மீண்டும் பார்த்தாள்.

“வரியுடன் கூடவல்லவா வரும். சரி எனது உடுப்புகளை வை. நான் பிறகு வருகிறேன். பிள்ளையின் சாமான்களைப் போடு” என்றாள்

அந்தத் தொகை பணியாளருக்கே ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும். முன்பிருந்து சந்தேகப் பார்வை அவளிடம் இப்போ குறைந்திருந்தது. குளிருக்கு போடும் ‘கோட்’டை அணியத் தந்தாள். எனது சாமான்கள் அடங்கிய பெரிய பையை யூலி காவியபடி வந்தாள். அந்த அங்காடித் தொகுதிக்குளிருந்த ஏனைய கடைகளுக்குள்ளும் சென்றோம். அங்கும் எங்களுக்கு அவ்வாறான வரவேற்பே கிட்டியது.

வீடு வந்ததும் அவளொரு மந்திரக்காரியாக மாறியிருந்தாள். அவள் ‘கோட்டு’க்குளிருந்து உடைகள் ஒவ்வொன்றாக சோபாவில் விழுந்தன. எனக்கு முன்னாலேயே அனைத்து உடைகளையும் கடையில் விட்டு வந்தாள். அந்தக் கடை பணியாளர்கள் இவள் மீதுகொண்ட சந்தேகத்திற்கான காரணத்தை புரிந்துகொண்டேன். அவள் அகப்பட்டிருந்தால்?. பயம் மேலிட்டது. அவள் என்னையும் தனது திருட்டுக்காக பாவித்திருக்கிறாள். கள்ளி.

•••••

எனது வகுப்பு மாணவர்களுக்குள் குட்டையாகவும், மெல்லியவனாகவும் நான் இருந்தேன். பாடசாலை போகத் தொடங்கியது முதல் அங்கிருந்த வெள்ளை மாணவர்களின் கிண்டல்களுக்கு இலக்கானேன். அவர்கள் என்னைக் காணும் போதெல்லாம் ‘பாக்கி’ என பழித்தபடியிருந்தார்கள். என் பிடரியில் தட்டுவதும் சண்டைக்கு வா என்பதுமாக இருந்தார்கள். அவர்களின் செய்கைகள் என்னைக் குறுக வைத்தபடியிருந்தன. அவர்கள் அடிக்கும் போதெல்லாம் நான் அதைத் தாங்கிக் கொண்டேயிருந்தேன். ‘அவர்களுடன் மோதப் போகாதே’ என்று சக தமிழ் மாணவர்களும் சொல்லியபடியிருந்தார்கள். என்னால் அவர்களது வன்முறையைத் தாங்க முடியாதிருந்தது. ஊரில் என்னைத் ‘தீவான்’ என்று பழித்தவர்களை அடித்திருக்கிறேன். அதற்காக அம்மாவிடம் அடியும் வாங்கியிருக்கிறேன். யூலியிடம் சொல்லலாம். அவளை இரு வாரங்களாகக் காணவில்லை. நான் பாடசாலை போவதை நிறுத்தினேன். அது மாமாவுக்கும் தெரியாது. பள்ளிக் கடிதத்தின் பின்னரே பிரச்சினை தெரியவந்தது. யூலி அந்தக் கடிதத்தை படித்தாள். என் அறைக்குள் வந்தாள். மாமாவும் கூடவே இருந்தார். அவர்களுக்கு போதையும் கூடியிருந்தது. வார இறுதியில் சேரும் கூட்டத்தில் அறை நிறைந்திருந்தது.

“ஹேய் பொடியா ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை. எத்தனை நாள் போகவில்லை”

“இரண்டு கிழமை”

“ஓழ். ஹேய் மச்சான், உனக்கும் தெரியாதா?” என்றாள் மாமாவைப் பார்த்து

“டேய் ஏன்டா போகேல. காசை நிப்பாட்டி போடுவாங்கள். பள்ளிக்கு போகவேணும்” என்றார் மாமா

அழுகை பொத்துக்கொண்டு வந்தது. நான் வீறிட்டு அழுதேன். யூலி என்னைத் அணைத்தாள்.

“மச்சான்! என்ன ஓழைக் கதைத்தாய்? என்ன பிரச்சினை பொடியா”

பாடசாலையில் நடந்ததைச் சொன்னேன்.

“நீ அந்த வேசை பிள்ளைகளுக்கு திருப்பி அடித்திருக்க வேண்டும்” என்றாள் யூலி

“அடேய் நீ சொல்லியிருக்க வேணும். மூஞ்சியை பேத்திருப்பன்” என்றார் மாமா

“ஹேய் பொடியா பயப்பிடாதை. திங்கள் பள்ளிக்குப் போறம். அந்த நாய்களுக்கு சாத்திறம். அடியில் மலம் வெளிய போகும்” என்றாள் யூலி

எமது வீட்டில் போதையில் இருந்த அனைவரும் சண்டியர்கள் ஆனார்கள். ‘வெள்ளையர்களுக்கு நாலு போட்டால்தான் சரியாகும்’ என்று பேசிக்கொண்டார்கள். திங்கள் அவர்களால் மாபெரும் கலவரம் நடக்க வாய்ப்புண்டு.

திங்கள் காலை மாமா வேலைக்குப் போயிருந்தார். சண்டியர்கள் விட்டுச்சென்ற குறைச் சுருட்டும், சிகரட் துண்டுகளும் சாம்பல் தட்டை நிறைத்திருந்தன. அங்காங்கே வெற்றுப் போத்தல்களும், ஒரு குறை சாரயப் போத்தலும் வரவேற்பறையில் இருந்தது. யூலிக்காக மாமா வைத்துவிட்டுப் போயிருக்கலாம். அவள் குறையோடு படுத்திருந்தாள். நான் பள்ளிக்கு வெளிக்கிட்டு அவளை எழுப்பினேன்.

“பொறு நான் போய்விடுகிறேன்” என்றவாறு எழும்பினாள்.

என்னைக் கண்டதும் பொறுமையாக நெஞ்சை போர்வையால் மூடினாள்.

“ஹேய் பொடியா பள்ளிக்கு போகத் தயாராகிவிட்டாய். போய் வா” என்றாள்

“நீங்களும் வருவதாய் சொல்லியிருந்தீர்கள்”

“என்ன?”

நான் முதலிலிருந்து பாடசாலையில் நடந்தவற்றை சொல்லி முடித்தேன். அந்தக் கடிதத்தையும் காட்டினேன்

“நான் என்ன செய்வேண்டும்?” என்றாள்.

“அதிபருடன் கதையுங்கள்”

“கவலைப் படாதே. நான் கழியலறைக்குப் போகப் போகிறேன். சிந்தித்துப் பார்க்கிறேன்”

கழியலறைக்குள் புகுந்தாள். அவளின் வழமையான காலைக் கடன்களை முடித்தாள். குறைச் சுருட்டையும் பற்றி முடித்தாள்.

“உனக்கு அடித்தவர்களை எனக்குக் காட்டு” என்றுவிட்டு நகர ஆரம்பித்தாள்.

பள்ளியை அண்மித்ததும் அவளின் தூசணங்கள் பிரஞ்சிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்து கொண்டிருந்தன. கூட்டமாக நின்ற மாணவர்களைக் கண்டதும் திட்டத் தொடங்கினாள். எனது வகுப்பு மாணவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் காதுகளைப் பக்குவப்படுத்தினார்கள். என்னை அடித்தவன் ஒருவனை அடையாளம் காட்டினேன். பேசியபடி அவனை நோக்கி ஓடினாள். அவன் வீறிட்டபடி ஓடத் தொடங்கினான். ஆசிரியர்கள் இடையில் வந்து அவளை சமாதானப்படுத்தினார்கள்.

“இது பாடசாலை. தூசணங்கள் பேசக்கூடாது. பொலிசாரை அழைக்கவேண்டிவரும்” என்றார்கள் ஆசிரியர்கள்.

“என்ட பிள்ளையை ‘பாக்கி’ என்று பழித்து அடித்திருக்கிறார்கள். பயத்தில் பள்ளிக்கு வரவில்லை. ஆசிரியர்கள் இதைப்பற்றி அக்கறைப்படுவதில்லையா”

யூலி ஆங்கிலத்திலும், பிரஞ்சிலும் கத்தியபடியிருந்தாள்.

“இனி இவனில் கை வைத்தால். இருக்குப் பிரச்சினை” என்று கூவி அடங்கினாள்.

தனியொருத்தியால் மாபெரும் கலவரத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நான் நம்பினேன். அம்மா போன்று இவள் கையில் அரிவாள் இருக்கவில்லை. அங்கிருந்த மாணவர்கள் சிலரும், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு நடக்கும் வன்முறைகளை முணுமுணுக்கத் தொடங்கியிருந்தார்கள். அதிபரின் அறையில் குந்தியிருந்தோம்.

“வசீகரன்! இப்பிடியான விடயங்கள் நடந்தால் எங்களுக்கு அறியத்தர வேண்டும். நாங்கள் உடனடி நடவடிக்கை எடுப்போம்” என்றார் அதிபர்

“உங்களுக்கு இனவாதப் பிரச்சினை இருப்பது தெரியாதா? பள்ளிக்கூடம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?” கத்தினாள் யூலி

“யூலி நீ மெல்லக் கதை. கத்தாதே. எனக்கு காது தெளிவாகக் கேட்கும்” என்று எங்கள் காதுகளுக்கு எட்டாதவாறு சொன்னார் அதிபர்

“இந்தப் பிள்ளைக்கு உண்டான மன உழைச்சலை நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள். அந்த கிறுக்கன்களை கூப்பிட்டு பொடியனிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள்” என்று அலுவலகத்தில் உள்ள அனைவரும் கேட்கும்படி சொன்னாள்

“மன்னிக்கவேண்டும். உங்களுக்கு காது கேட்கும். மற்றய ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு காது கேட்குமோ தெரியாது” என்றுவிட்டு புன்னகைத்தாள்.

என்னைக் கேலி செய்த நான்கு மாணவர்களையும் அலுவலத்துக்குள் அழைத்து வந்தார் வகுப்பு ஆசிரியர்.

“கிறுக்கன்களே உங்களை பிழிந்தெடுத்து விடுவேன்” என்று கத்தினாள் யூலி

அதிபர் யூலியை வெளியே போகுமாறு பணித்தார். அவளுக்கு நடுக்கம் தொடங்கியிருந்தது. இனி அவளால் நிலைத்து நிற்க முடியாது.

“இதுதான் கடசியாய் இருக்க வேண்டும்” என்று வெள்ளை மாணவர்களைப் பார்த்து சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினாள். அவளுக்கு இப்போ புகைக்கவேண்டும்.

யூலியின் கலவரத்தின் பின்னர் எனக்கு மரியாதை கூடியிருந்தது.  ‘யாராவது கேட்டால் பாதாள கோஷ்டியோடு தொடர்புடையவள் என்று சொல்லு’ என்று யூலி சொல்லியிருந்தாள். அதை நானும் தேவைக்கேற்ப பயன்படுத்தினேன். ஆனாலும் அவள் சிகரட் பொறுக்குவதை யாராவது பார்த்துவிடுவார்கள் என்ற அச்சமும் எனக்கிருந்தது.

••••••

பரீட்சை புள்ளித்தாள் அடங்கிய கடிதத்தை யூலி திறந்தாள். எல்லா இரசங்களையும் துல்லியமாய் காட்டும் அவள் முகம் ஆச்சரியத்தில் தரித்தது.

“வசீ. நீயா? என்னால் நம்ப முடியவில்லை. கெட்டிக்காரன். ஓழ். ஓழ் என்னால் நம்ப முடியவில்லை” என்று ஆர்ப்பரித்து என்னை அரவணைத்தாள்.

என்னை முதல் தடவையாக ‘வசீ’ என்று அழைத்தாள். பாடசாலை நண்பர்களும், ஆசிரியர்களும் வசீ என்றுதான் என்னை அழைக்கிறார்கள். புள்ளிகள் குறித்து எந்தப் பெருமிதங்களும் நான் கொண்டதில்லை. அம்மாவுக்கு பெருமிதம் எப்போதும் இருக்கும். பெருமித அலை ஓயும் வரை அம்மா ஊரெல்லாம் பரப்புவாள். யூலியிடமிருந்து இதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

“பிரெஞ்சில் படிக்கும் மூன்று பாடங்கள்தான் குறைவான புள்ளி எடுத்திருக்கிறாய். அவையும் சராசரிக்கு மேல்தான்.”

என்னை அணைத்தபடியிருந்தாள். அவளில் நடுக்கம் இருந்தது. நடுக்கம் தொடங்கும்போது அவள் குடிக்கவோ, புகைக்கவோ செல்லவேண்டும். அவள் என்னை அரவணைத்தபடியேயிருந்தாள்.

“மச்சான். பொடியன் ஒரு அறிவாளி. புள்ளிகளைப் பார்”

திறமைக்கு தானும் ஊக்கியாய் இருப்பதாக உணர்கிறாளோ? அல்லது அதீதப்படுத்துகிறாளா? அவள் உண்மையாகவே மகிழ்கிறாளா?

“உனக்கு ‘வெல்பெயர்’ அப்பொய்ன்ட்மென்ட் இருக்கு மறந்திராதை” என்றுவிட்டு அகன்றார் மாமா

“உன் மாமன் உன்னை வாழ்த்தினாரா?”

என்ற அவளது கேள்வி காதில் விழாததுபோல் மௌனமாக நகர்ந்தேன்.

பொதுநல அதிகாரியுடனான சந்திப்பு இருந்தது. சந்திப்புகளை மாமா கவனத்தில் வைத்திருப்பார். ஏனெனில் நிதி கொடுப்பனவோடு சம்பந்தப்பட்டது. புள்ளிகள் பற்றி யூலியின் புளகாங்கிதம் அவருக்கு நடிப்பு. வீட்டுக்குள் அண்டியிருக்கும் அவளது முயற்சியென்றே அவர் நினைத்திருப்பார்.

சந்திப்புக்கு செல்லும் வழியில் காணும் அனைவருக்கும் என்னைத் தன் பெருமையாக சொல்லியபடி வந்தாள்.

“வசீ என்னுடைய பிள்ளை. பெரிய கெட்டிக்காரன்”

அது சங்கடமாய் இருந்தது. அவள் இன்று காலையில் எதையும் குடிக்கவும் இல்லை, புகைக்கவும் இல்லை. அவளுக்கு நடுக்கம் இருந்தது. எனது புள்ளி அவளுக்கு போதையைக் கொடுத்திருக்கிறதோ. அதிகாரி சந்திப்பை விரைவாக முடிக்கும் முயற்சியில் இருந்தார்.

“நான் சொன்னேன். வசீ கெட்டிக்காரன். உங்கள் கொடுப்பனவு அவனுக்குப் போதாது”

என்றுவிட்டு என்னைச் சுரண்டினாள்.

அவளின் கதைகளை கேட்க அவர் ஆர்வப்படவில்லை. நேரடியாகவே என்னுடன் கதைத்தபடியிருந்தார். பெரும் பகுதி பிரஞ்சிலேயே எங்கள் உரையாடல் இருந்தது. யூலி பார்த்தபடியிருந்தாள். தான் கதைத்து உருவாக்கி வைத்திருக்கும் விம்பத்தை உடைத்துவிடுவானோ என்ற அச்சம் அவளுக்கிருந்தது. நான் தடங்கும் இடங்களில் உதவியபடியிருந்தாள். அவளின் நடுக்கும் வெளிப்படத் தொடங்கியது.

“நான் புகைக்கவேண்டும். நான் போகலாமா?”

“இதில் ஒப்பமிடுங்கள்”

யூலி ஒப்பமிட்டவுடன் வெளியில் சென்றாள்.

“வசீ! நான் உன்னையிட்டுப் பெருமைப்படுகிறேன். யூலி குறித்து எனக்கு வருத்தங்களும், சங்கடங்களும் உண்டு. உனது மாமா இருப்பது நல்லது. அவர் உனக்கு பேருதவி அல்லவா. தொடர்ந்து முன்னேறு” என்று என்னை வாழ்த்திவிட்டார்.

தெருவில் யூலியைக் காணவில்லை. அவள் பியர் வாங்குவதற்கு சென்றிருக்கக்கூடும். என்னால் இப்போ தனியாக பிரயாணம் செய்ய முடியும். மெற்றோ நிலையம் வரையும் சென்று அவளுக்காக காத்திருந்தேன். அவளைக் காணவில்லை. அவள் பியர் வாங்கும் கடைக்குச் சென்று விசாரித்தேன். அவள் இல்லை. நான் வீடு திரும்பினேன். அவளைக் காணவில்லை. மாதங்களாகியும் அவள் வரவில்லை. வார இறுதியில் வருவோர்

“டேய் குட்டி! எங்கடா உன்ட கோத்தையை காணேல” என்று விசாரித்தார்கள்.

முகத்தார் “கோத்தை இல்லாதது கயிட்டமாய் இருக்கு” என்றுவிட்டு தன் குறியிருக்குமிடத்தை மற்றோருக்கு தூக்கி காண்பித்தார். எல்லோரும் கனைத்து ஓய்ந்தார்கள். மச்சான் என்று இவர்களை அழைப்பதால் யூலி மீதான நாட்டம் எல்லோருக்கும் இருந்தது.

எனக்கு உறுத்தலாய் இருந்தது. அவளுக்கு என்ன நடந்திருக்கும்? அப்படியேதும் நடந்திருந்தால் யார் அறிவார்கள்? களவெடுத்து சிறையில் இருப்பாள்? போதையில் விழுந்து அடிபட்டு வைத்தியசாலையில் இருப்பாள்? அல்லது மாமா வீடுபோல் வேறு வீடுகள் இருக்கக்கூடுமா? அவளுக்கு வீடு இருக்குமா?

மாமா, திங்கள் காலை வேலைக்கு போகு முன்னர் அவளை கலைத்துவிடுவார். அவள் போதையாய் இருந்தால் அவளை உடமைகளோடு தூக்கி வெளியில் போட்டுவிடுவாராம். போதை கலையும்வரை வாசலில் கிடக்கும் அவளை கட்டிட பராமரிப்பாளர் கலைத்து விடுவதுண்டாம். வார இறுதியில் மீண்டும் அவள் வருவாள். நான் வந்ததிலிருந்து யூலியை கண்ணியமாக நடத்;துகிறார். எங்கள் அறைத் திறப்பும் அவளிடமிருந்தது. அவளால் எனக்கு வரும் பொதுநலநிதி காரணமாய் இருக்கலாம்.

மூன்று மாதங்களின் பின் ஒரு வெள்ளிக்கிழமை வழமைபோல் எங்கள் அறைக்கு மீண்டிருந்தாள். அவள் எனக்காக ஒரு மணிக்கூடு வாங்கியிருந்தாள்.

“வசீ! உன்னுடைய புள்ளிகளுக்கான பரிசு. இப்போதான் என்னிடம் காசு வந்தது. இது களவு இல்லை. சத்தியமாய் களவு இல்லை. களவு எனக்காக எடுப்பேன். மற்றையோருக்கு உழைத்துத்தான் பரிசளிப்பேன்”

“நன்றி யூலி. நான் மிகவும் பயந்துபோனேன். உனக்காக கடவுளை மன்றாடினேன்”

“நன்றி வசீ. எனக்கு ஆயிரம் தொழில்கள் தெரியும். பணம் தேவைப்படும்போது புதிய தொழில்களையும் உருவாக்கிக் கொள்வேன். தொழிலை கெடுத்தது கிடையாது. இந்த முறை கியூபெக் நகரத்துக்கு போய்விட்டேன். ஒரு பணக்காரக் கிழவனைப் பராமரித்தேன்”

“அப்போ திரும்பி போய் விடுவீர்களா?”

“வசீ எனக்கு தெரியாது. தேவை எப்போது வரும் போகும் எதுவும் தெரியாது. உண்மையாக எனக்கு எதுவும் தெரியாது”

வார இறுதி வழமைபோல் கூட்டம் சேர்ந்திருந்தது.

“உன்ட கோத்தை வந்திட்டாள்” என்றனர்.

வீடு புகைகொண்டிருந்தது. போத்தல்கள் உருளத் தொடங்கின. பாடல்கள் அபசுரத்தில் ஒலிக்கத் தொடங்;கியிருந்தன. வெறி மிகுந்தோரின் வாதங்கள் எவருக்கும் எட்டாமல் கலைந்த வண்ணமிருந்தது. போதையில் பலரும் சாயத் தொடங்கியிருந்தார்கள். யூலி அமர்ந்திருந்தாள். வழமைபோல் ஏனையோர் முகம் சாய்ந்த பின் முகத்தார் யூலியின் தொடையைத் தடவத் தொடங்கியிருந்தார். அப்போது யூலி என்னைக் கண்டிருக்கவேண்டும். அவரின் கையைத் தள்ளிவிட்டாள். அவர் அதையிட்டு அக்கறைப்படாது மீண்டும் இடுப்புக்குள் கையை இட்டு தடவ முற்பட்டார்.

“மச்சான் கையை வெளியே எடு” என்றாள் யூலி;

அங்கிருந்த எவருக்கும் அது கேட்டிருக்க வாய்ப்பில்லை. முகத்தாருக்கு அது சிராய்த்திருக்கவேண்டும். அவர் மீண்டும் அவளை தடவ முற்பட்டார்.

“நான் வைக்காதே என்கிறேன். என்ன ஓழுக்கு கையை திரும்பத் திரும்ப வைக்கிறாய்”

என்று யூலி கத்தினாள்

முகத்தார் அதை ஏற்க முடியாதவராய் எழுந்து நின்றார். அவளின் குரல் எனக்கு கேட்டபடியிருந்தது. நான் மீண்டும் வரவேற்பறைக்கு வந்தேன். யூலி அவரை தள்ளிவிட்டாள். முகத்தார் தரையில் விழுந்து கிடந்தார். யூலி என்னைப் பார்ப்பதை தவிர்த்துக்கொண்டாள். நான் பொதுவாக அறையைவிட்டு வெளியில் வருவதில்லை. எல்லோரினது கூத்துகளும் ஓய்ந்த பின்னர்தான் வெளிவருவதுண்டு. எனது வருகை அவளைச் சங்கடப்படுத்தியதோ தெரியவில்லை.

“ஊத்தை வெள்ளை. என்ன ஓழ் நடந்தது?” என்றார் முகத்தார்

“ஒருவரின் விருப்பமில்லாமல் நீங்கள் அவர்களைத் தொட முடியாது” என்று தமிழ், ஆங்கிலம், பிரஞ் மொழிகளில் அவருக்கு சொல்லிவிட்டு நகர்ந்தேன்

“ஓ உன்ட கோத்தை. ஊத்தை புனா” என்ற அவரது வார்த்தைகளை நான் முகங்கொடுத்துக் கேட்கவில்லை.

அதன் பின்னர் எங்கள் அறைக்கு யூலி வருவது குறைந்திருந்தது. வார இறுதிக் கூட்டத்திற்கு வரும் பலர் ரொரன்டோவுக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.  மாமாவுக்கு கலியாணம் நிட்சயமாகியிருந்தது. அவர் ரொரன்டோவுக்கு இடம்பெயர்வதற்கான ஏற்பாட்டோடு இருந்தார். பதினொராம் வகுப்பு முடிவோடு ரொரன்டோ செல்வதாயிருந்தோம். எமது பட்டமளிப்பு நடைபெறவிருந்தது. பட்டமளிப்பில் மாணவர் சார்பாக உரையாற்ற நான் தெரிவாகியிருந்தேன். யூலியை அழைத்தாகவேண்டும். அவளுடனான தொடர்புகள் எதுவும் இல்லை. மாமாவோடு கதைத்தேன்.

“வேலை, வரமுடியாது. யூலியைக் கண்டால் சொல்லி விடுகிறேன்” என்றார் மாமா

இவ்வாறான நேரங்களில் அம்மாவின் நினைவு மேலோங்குவது தவிர்க்க முடியாதது. அவள் எனது பிரிவைத் தாங்க முடியாதிருந்தாள். அப்பாவுடனான விலகலின் பின் என்னையே ஆதாரமாய் இருந்தாள். அச்சத்துக்குள் வாழ்ந்த காலம். ‘அவனாவது தப்பி உயிரோடு இருக்கட்டும்’ என்று அம்மா எண்ணியிருக்கக்கூடும். அன்று முழுவதும் என்னை அரவணைத்து தடவியபடியிருந்தாள். அகதிப் பயணங்களின் கொடு வலி பற்றி அம்மா அறிந்திருந்தாள். அவளுக்கு உள்ளுர அச்சம் இருந்தது. நாங்கள் வெளிநாடு செல்வதற்காக கொழும்பு வந்து மூன்றாண்டுகள் கடந்திருந்தன. எங்களது லொட்ஜ்ஜில் கனடா செல்லவிருந்த குடும்பத்தோடுதான் நான் இணைக்கப்பட்டிருந்தேன். “ராசா கவனம்” அம்மாவின் அணைப்பு விடுபடவில்லை. அழுகை பெருக்கெடுக்காது தன்னை கட்டுப்படுத்தி புன்னகையை வரவழைத்திருந்தாள். உச்சியில் அவள் இட்ட முத்தத்தோடு இரு கரங்களும் கன்னங்களை வருடி விலகின. அம்மாவின் கண்கள் பனித்திருந்தன.

பட்டமளிப்பு முடிந்திருந்தது. எனக்கு கிடைத்த பாராட்டுக்களை பகிர எவரும் இருக்கவில்லை. நான் நன்றி தெரிவித்த முக்கியமானவர்களும் இல்லை. சோர்வு. சோர்விலிருந்து மீள்வதற்கு எனக்கு இரு ஊக்கிகள் இருந்தன. ஒன்று அம்மாவுக்கு கடிதம் எழுதுவது. இரண்டாவது யூலியோடு உரையாடுவது. அம்மாவின் கடிதங்களில் என்னைத் தனியே அனுப்பிய குற்றவுணர்வு ஒட்டியிருக்கும். என்னைச் சூழ அவள் இருப்பதான அறிவுரைகளோடு அம்மாவின் கடிதம் இருக்கும். யூலியின் உலகு மாயமானது. அவளது வாழ்வு போல் தொடர்பற்றது. என்னோடு உரையாடுவதற்கான பொதுத்தளத்தை அவள் உருவாக்க முனைகிறாள். என்னோடு உரையாடுவதை விரும்புகிறாள். அதற்காக சிறிது நேரத்தை அவளால் ஓதுக்க முடிகிறது. சிறார் பராய நினைவுகளை மீட்க முனைகிறாள். நினைவுக்குள் நுழையும்போது நினைவின் உராய்வு அவளைத் தளர்த்திவிடுகிறது. அவள் பெரும் வலியைக் கடப்பதுபோன்றே எனக்குப்படுகிறது. நானும் அவளைப்போன்று தனித்து விடப்பட்டவன் என்பதால் என்மீதான இரக்கம் அவளுக்கு இருக்கிறதோ?

••••••••

கோடை மாலை. மெல்லிய குளிர் இருந்தது. கோட் சென் கத்தரீன் மெற்றோ நிலையத்திற்கு முன்பாக விக்டோரியோ வீதி பக்கமாய் இருந்த கொன்கீரீட் குந்தில் அமர்ந்திருந்தாள். அவள் கையில் கிடந்த சிக்கரட் எரிந்து சாம்பல் தட்டுப்படாமல் அப்படியே கிடந்தது. அசையாமல் அவள் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருக்கவேண்டும். அருகில் சென்று அவளின் தோளில் தட்டினேன். நான் இரண்டாம் தடவை தட்டும்போது சற்றுத் திரும்பினாள்.

“ஓ வசீ’ ஆர்ப்பரித்தபடி எழுந்து என்னை அரவணைத்தாள்.

“நான் உன்னைத் தேடித்தான் வந்தேன். அறை பூட்டிக் கிடக்கிறது. என்ன செய்வதென்று அறியாமல் இதிலேயே அமர்ந்து விட்டேன். நீ வளர்ந்து விட்டாய். நீ பெரிய மனிசன். இந்தா எனது அன்பளிப்பு.”

பார்க்கர் பவுன்டின் பேனை. பவுன்டின் பேனை பிடிக்குமென்று எப்போதோ கூறியிருந்தேன். அந்தக் குந்தில் அமர்ந்தோம்.

“நன்றி. எனது பட்டமளிப்புக்கு நீ வந்திருக்க வேண்டும். எதிர்பார்த்தேன். அன்று நான்; உரையாற்றினேன்.”

“நான் சற்று பிந்தியே வந்தேன். உனது உரையை செவிமடுத்தேன். அழகாக பிரஞ்சிலும் ஆங்கிலத்திலும் பேசினாய். மகிழ்ச்சியாய் இருந்தது. பெருமையாக இருந்தது. என்னை ஒருவரும் மெச்சியது கிடையாது. நெகிழ்ந்து போனேன். நான் இலகுவாக அழுபவள் அல்லள். என்னை அறியாமல் அழுதுவிட்டேன். தங்குமிடம் சென்றும் அழுதேன். வாழ்வை அர்த்தமிக்கதாய் கட்டமைக்க நான் முனைந்ததில்லை. அனுபவங்கள். நான் சந்தித்த மனிதர்கள் என்னைத் தேவைக்கேற்ப பாவித்தார்கள். பின்னர் எனக்கு அதுவே வாழ்வாகிவிட்டது. வசீ! நீயொருவன் மட்டுமே என்னை பொருட்டாய் நினைத்திருக்கிறாய். நன்றாக குடித்து இருந்தேன். உடைகளும் நன்றாக இருக்கவில்லை. மற்றயவர்கள் அருவருப்பாக பார்த்தபடியிருந்தார்கள். எனது நாற்றம் அவர்களது முகச்சுழிப்புக்கு காரணமாயும் இருந்தது. உன்னைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை. உன்னிடம் சொல்லாமல் அகன்றுவிட்டேன். என்னை மெச்சினாய். அந்தக் கணத்தில் என்னை பிரியோசனமானவளாக உணரப்பண்ணியிருந்தாய் நன்றி வசீ!”

அவள் கண்கள் கசிந்திருந்தன. அவளை முதல் தடவையாக அவ்வாறு பார்;க்கிறேன்.

இன்று அழகாக உடுத்தியிருந்தாள். அவளிடமிருந்து மல்லிகை நறுமணம் பரவியபடியிருந்தது. முகத்தில் புன்னகை. அவளது பொன்னிற முடிக்கு பிரஞ் பின்னல் அழகாக இருந்தது.

‘நீ புதிதாய் இருக்கிறாய். அழகாய் இருக்கிறாய்’ என்று அவளிடம் சொன்னேன்.

அவள் என்னை இழுத்து என் நெற்றியில் முத்தமிட்டு

‘நீதான் அழகு’ என்றாள்

அறைக்கு அழைத்தபோதும் அவள் வருவதற்கு விரும்பவில்லை.

“நாங்கள் ரொரன்டோவுக்கு இடம்பெயர்கிறோம். தொடர்புகளைப் பேண வேண்டும்” என்றேன்.

அவள் என்னைப் பார்த்தபடியிருந்தாள். பின்னர் என் தோளில் சாய்ந்தாள். எனது தலையை வருடினாள். அவளின் முகத்தில் புன்னகை நிலைகொண்டிருந்தது. ‘நன்றி’ என்றபடி என் கைகளை தடவியபடியிருந்தாள். மெல்ல நடுக்கம் தொடங்கியிருந்தது. அதையும் மீறி என்னை அரவணைத்தபடியிருந்தாள். அம்மாவைப்போல்  ‘இனி இவனை எப்போது பார்ப்பேன்’ என்று அவளும் எண்ணுகிறாளோ?. அவளது கைகளில் ஊசித் தடயங்கள் இருந்தன. கடும் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறாள் போலும். அந்த இடங்களை தடவி அவளைப் பார்த்தேன். கையை விலக்கி முகத்தை திருப்பினாள். மீண்டும் அவளாக எனது கரங்களை எடுத்து தனது கரங்களுக்குள் வைத்திருந்தாள். நடுக்கம் அதிகமாய் இருந்தது.

“எனக்கு எதுவும் தெரியாது. நீ என்ன நினைக்கிறாய்? இனி சந்திப்பு நிகழுமா? நாங்கள் தொடர்பற்றவர்கள். இல்லையா?” அவளது மூச்சு சீர்குலைந்து அமைதியானாள். மௌனமாய் என் கரங்களைத் தடவியவாறு இருந்தாள். நடுக்கம் அதிகரித்திருந்தது.

“சரி. வசீ” என்றவாறு

அரவணைத்து கன்னங்களை வருடினாள். யூலியின் விரல்கள் என் கன்னங்களில் தடதடத்தபடியிருந்தன. போதை அவளை அழைத்திருக்கும். ஏதோ சொல்ல உன்னினாள். முடியாதுபோக புன்னகைத்து அகன்றாள்.

பா. அ. ஜயகரன்

பா. அ. ஜயகரன் தமிழில் குறிப்பிடத்தக்க நாடகாசிரியராகவும், நெறியாளராகவும் அறியப்பட்டவர். சிறுகதைகளும் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். இலங்கையில் பிறந்து, புலம்பெயர்ந்து தற்பொழுது ரொரன்டோவில் வசித்து வருகிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.