/

இசைக் கலைஞன் ‘போல’ ஆவது எப்படி? : இசை

ஓவியம் : William Schumm

பல்லில் பிரஷ் இடும் தாளம் பிரமாதமாக  இருப்பதை இன்றைய அதிகாலையில் அவதானித்தேன். கொஞ்ச நாட்களாக சப்தங்கள் துல்லியமாகியுள்ளன. இசை என்பது ஒழுங்கு படுத்தப்பட்ட சப்தங்கள் என்று  சொல்வார்கள். எந்தச் சப்தத்தைக் கேட்டாலும் அதை ஒழுங்கு செய்ய முடியுமா? என்று தோன்றத் துவங்கியுள்ளது. பெரிய வித்வான்களுக்கு தோன்ற வேண்டிய  சிந்தனை. எனக்கும் தோன்றுகிறது.  சிந்தனைக்கு விவஸ்தையில்லை.  

ரயில் சத்தத்தை  இசையாக கொண்ட பல பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம். குதிரையின் காலடிக் குளம்பில் சில பாடல்கள் புறப்படுகின்றன. ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி, அதைத் தோண்டித் தோண்டி  இசை வர வைத்ததை நாம் பார்த்தோம். ஆக, பக்கெட்டும், தண்ணீரும் வாத்தியங்கள். தமிழர்களின் தொல்லிசைக் கருவியான  யாழ் வகைகளில் முதல் யாழாகக் கருதப்படும்  ‘வில் யாழ்’  வில்லின் நாணிசையிலிருந்தே பிறந்துள்ளது.  அம்பு  கொலை செய்யப் பாய , அதன்  நாண்  இசையாகி விட்டது.   வளையலோசையிலிருந்து ஒரு முக்கியமான  நரம்பு கிளம்பி  தமிழர்களின் இச்சைத் துடிப்பில் இணைவதாக கூகுளில் போட்டிருப்பது உண்மைதானா?  

சமீபத்தில் ஒரு இசைக் கருவியை வாசிக்கத் துவங்கி உள்ளேன். அது ஒரு ஆப்பிரிக்க பழங்குடித் தோல் வாத்தியம். பெயர் ‘ஜூம்பே’. ஜூம்பே தானா என்பது கூடத் தெரியவில்லை. “djembe” என்கிறார்கள் ஆங்கிலத்தில்.  கடைக்காரப் பையன் ‘டிஜூம்பே’ என்றுதான் சொன்னான் ஆனால். ‘d’ க்கு ஓசையில்லை என்றும் சொல்கிறார்கள்.  ‘ஜூம்பே’  என்பதுதான் தமிழ் வாயிற்கு வாகாக உள்ளது. 

எல்லா மனித உயிர்களும் பாட விரும்புகின்றன. உணவை கடைவாயில் அரைப்பது போல சிலர் பாடலை வாயிற்குள் மெல்கிறார்கள். சிலர் அரங்கில் ஆயிரம்  பேர் முன்னிலையில் பாடுகிறார்கள். ஆயிரம் பேர் முன்னிலையில் பாடுபவர் “ பாடகர்” என்றழைக்கப்படுகிறார். ஆனால் பிறர் பாடகரில்லை என்று பொருளில்லை. தாளமும் அப்படித்தான். எல்லோரும் தாளமிடவே செய்கிறோம். நமது தொழில்களில், குறிப்பாக உடலுழைப்புத் தொழில்களில்  தாளம் வெளிப்படையாகவே கலந்துள்ளது.  லாரியின் ஹாரன்,  ஊளையிலிருந்து தாளத்திற்குத் தாவும் தருணத்தை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? உண்மையில் அவர் பயணிக்க வழி கேட்கிறாரா? அல்லது நெடுஞ்சாலையில் நடனமிடுகிறாரா? கொத்துப் புரோட்டா என்பதே தாளத்தின் விளைச்சல் தானே?  சம்மட்டி,  தாளத்தில்தான் இரும்பை உடைக்கிறது.  

அம்மாதான் என்னை ஒரு இசைக் கலைஞன் என்று துப்பறிந்து சொன்னது. சிறுவனாக  இருக்கையில் டேப் ரிகார்டரில் ஒரு பாடல் ஓடிக் கொண்டிருந்தது. அதனோடு சேர்ந்து தாளமிட்டிக் கொண்டிருந்த நான்,  அந்த வாத்திய இசை முடிவுறும் தருணத்தில் அதனோடு சேர்ந்து மிகச் சரியாக முடித்து விட்டேன். எல்லா அம்மாக்களுக்கும் போல என் அம்மாவிற்கும் நிலை கொள்ளவில்லை. என்னை தபெலா வாசிக்க அனுப்ப வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால்  அதற்கான வகுப்புகளுக்கு போகவில்லை. எங்கள் கிராமத்தில் அப்படியான வகுப்புகளும் இல்லை. 

இது ஒரு பரம்பரை வியாதி என்கிற படிக்கு என் அப்பா ஏற்கனவே தேங்காய் மூடி கச்சேரிகளுக்குப்  போய்க் கொண்டிருந்தார்.  அவருக்கும் தான் ஒரு பாடகன் என்று நினைப்பு.  என் அப்பாவின் புனைப்பெயர் உங்களுக்குத் தெரியுமா? “க.ரா. கலைவேந்தன்”   இயற்பெயரா…? அது “ஆறுமுகம்”.   கச்சேரிகளில் எடுத்தவுடன் தபெலாவை எடுத்து நீட்ட மாட்டர்கள் அல்லவா?  “ கப்பாஸ் “ வாசிப்பாளனாகக் குழுவில் இணைந்தேன். கப்பாஸ் என்பது தேங்காய் மண்டையில் பாசிகளைகளைக் கோர்த்தது போல, சற்று நீண்ட கைப்பிடியுடன்  இருக்கும் ஒரு  உருட்டு வாத்தியம். அதை வாசிக்க வேண்டியதில்லை. இசையோடு இயைந்து  வெறுமனே உருட்டினால் போதும்.  ஒரு வாத்தியத்தை  சும்மா உருட்டுவதற்காக நான் இந்த பூமியில் பிறந்திருக்கவில்லை என்கிற ஆவேசம் அலையடிக்க,  நான் அதைக்  குத்தத் துவங்கினேன். அதாவது கப்பாஸில்  தபெலா வாசிக்கத் துவங்கினேன்.  தபெலாக்காரர் எரிச்சலடைந்தார். 

இப்படியாக  இரண்டு இசை வல்லுநர்களுக்கிடையே எழுந்த சச்சரவால்  நான் அப்பாவோடு போவதைக் குறைத்துக் கொண்டேன். அப்போது பொதுவாகவே அப்பாவோடு போவதை குறைத்துக் கொள்ளும் பருவமும் வந்து சேர்ந்தது.  வேறு வேறு விசயங்களால் இழுத்துச்  செல்லப்பட்டேன்.   ஆனாலும் பள்ளியில் “டெஸ்கில் தாளமிடும் பையன்கள்”  என்று ஒரு வகையறா உண்டல்லவா?. நான் அந்த வகையில் தொடர்ந்தேன்.  அப்படி வாசிக்கையில் யாரோ ஒரு பெண் தன் சின்ன விழியை அகல விரித்து விடுகிறாள். பிறகு அந்தப் பையன் தன்னைக் கலைஞன் என்றே நம்பிக் கொள்ள அந்த ‘விழிவிரி’ போதும்.

கடந்த ஜனவரி மாதம் சென்னை புத்தகக் காட்சியில் சால்ட் பதிப்பகத்தின் ஸ்டாலில் ஒரு வாத்தியத்தைக் கண்டேன். “டெஸ்கில் தாளமிட்ட பையன்” அதை வாஞ்சையோடு வருடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த நண்பன் கவிஞர் நரன் அதை வாசிக்கச்  சொல்லி நிர்பந்தித்தான். அப்போது அதன் பெயர் கூடத்  தெரியாது. அதன் சத்தம் எப்படியிருக்கும் என்றும் தெரியாது.  உள்ளூர ஆர்வம் கொந்தளித்துக் கொண்டிருந்தது என்பதுதான் உண்மை என்றாலும், அங்கிருந்து தப்பவே முயன்றேன். அவன் விட வில்லை.  சண்டையும் சச்சரவுகளுமாக தொடரும் ஒரு உறவு எங்களுடையது. அப்போது கூட சண்டையில்தான் இருந்தோம். ஆனால்  அவன் முதன்முதலாக  புத்தக காட்சியில் ஸ்டால் போட்டிருக்கிறான். ஆகவே ஸ்டாலிற்கு நான் போயாக வேண்டும். அது ஒரு கடமையாக இருந்தது. கூடவே  மகிழ்ச்சிகரமானதும் கூட. அவன் ஸ்டாலிற்கு போக வேண்டும். ஆனால் அவனைப் பார்க்கக் கூடாது. இதுவே என் திட்டமாக இருந்தது. நான் விரும்பியது போலவே  அவன் ஸ்டாலில் இல்லை. கொஞ்ச நேரம் இருந்துவிட்டு கிளம்பும் சமயம் சரியாக வந்து வாசலில் நின்று விட்டான். “யாருக்கும் வெட்கமில்லை”  என்று முணுமுணுத்த படியே சண்டை, தானே விலகிக் கொண்டது.  ‘ஊழ் ‘ போல அவன் அதை எடுத்து என் கையில் அளித்தான். 

நான் டேபிள்களில் வாசித்தே கூட நீண்ட நாள் ஆகியிருந்தது. ஆனாலும் வேறு வழியின்றி வாசித்தேன்.  மனதில் தோன்றியதையெல்லாம் வாசித்துக் கொண்டிருந்தேன். முடிக்கையில் ரஹ்மான் பாடலின் தாளக் கட்டொன்று எங்கிருந்தோ வந்து விழுந்தது.  என்னளவில் சரியாகவே விழுந்தது. “முடிப்பை” சரியாக  நிறைவு செய்கையில் வாத்தியக்காரனின் மனதில் ஒன்று பூரிக்குமே,  அது பூரித்தது அப்போது.

 இந்த வாசிப்பு  மற்றவர்களுக்குப்  பிடிக்கும் என்று நான் எதிர்பாக்கவில்லை. அப்படி விரும்பவும் இல்லை. ஆனால் வண்ணதாசன் அந்த வாசிப்பை மெச்சி எழுதியதும், “ உன்னுள் இயல்பாகவே தாளம் இருக்கிறது”  என்று ஜெயமோகன் அனுப்பிய குறுஞ்செய்தியும் என்னை ஒரு இசைக் கருவிக்கடைக்குள் அழைத்துச் சென்றன.  பெயர் இசைதான். ஆனால் அதுவரை அப்படியான கடை எதிலும் வேடிக்கை பார்க்கக் கூட  நான் நுழைந்திருக்கவில்லை. வித விதமான அத்தனை  வாத்தியங்களுக்கிடையே சும்மா நின்று கொண்டிருப்பதே ஒரு ஆழமான அனுபவம். அது உறுதியாக ‘சும்மா’ நிற்பதில்லை.  

அந்த வாத்தியத்தை காட்டி, “இதன் பெயர் என்ன? “  என்று கேட்டேன். கடைப்பையன் சொன்னான். அது போலவே வேறு சில வாத்தியங்களும் இருந்தன. “ இது தர்புகா..” என்று ஒரு வாத்தியத்தைக் காட்டினார்கள். “ தர்புகா சிவா” வின் புண்ணியத்தில் அந்தப்பேர் தெரிந்திருந்தது. “ ஓ..  இதானா  அது..?”   என்பது போல் பார்த்தேன்.  அதிலிருந்து நமது பம்பையும், உடுக்கையும் கலந்தது போல ஒரு சத்தம் வந்தது. ஒரு வித மெட்டாலிக் ஒலி. ‘ வித்வானிற்கு ‘ அதில் என்னவோ குறைவது போலத்  தோன்றியது. ‘ ஜூம்பே” விலிருந்து  வெளிப்பட்ட பறைச் சத்தம் அதில் வரவில்லை.  ஆகவே,  நான்’ ஜூம்பே’ வைத் தேர்ந்தெடுத்தேன்.

‘இசை அனுபவம்’  என்று சொல்வார்களே, அது எனக்கு முதன்முதலில் நிகழ்ந்தது பறையோடு சேர்ந்து தான். பள்ளிச் சிறுவனான நான் ஆட்டத்தை அடக்க  முடியாமல் அவர்களோடு சேர்ந்து ஆடினேன். யாரை வாசலிலேயே நிறுத்தி சிரட்டையில் தண்ணீர் ஊற்றினேனோ,  அவர்களோடு சேர்ந்து.  யாருக்கு சிரட்டையில்தான் தண்ணீர் தரவேண்டும் என்று என் அம்மா கற்பித்திருந்தாளோ அவர்களோடு சேர்ந்து.  ஊர் திரண்டு நின்று காண,  என் அம்மா அதற்கு அனுமதித்தாள்.  அனுமதித்தோடு மட்டுமல்லாமல் அதைக் காணாத பேரையெல்லாம் அழைத்து பெருமையோடு அச்சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் செய்தாள். முப்பது வருடங்கள் முந்தைய கிராமத்தில் நிச்சயம் அது ஒரு புரட்சி. ஆனால் அதைச் செய்தது நானோ என் அம்மாவோ அல்ல. பறை தனக்குத் தானே நிகழ்த்திக் கொண்ட புரட்சி.

ஓவியம் : Sarah Hussein

“ ஜூம்பே” வாங்கியது குறித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அஜிதன் ஒரு செய்தி அனுப்பியிருந்தான். அப்போது அவனுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்த நேரம். “ உன் திருமண வரவேற்பில் கூட வாசிக்கலாம். ஆனால் பெண் வீட்டார் பெண்ணைத் திரும்ப எடுத்துக் கொள்ளும் ஆபத்துண்டு” என்று  சொன்னேன். அதன் பிறகு மகிழ்ச்சி, துக்கம் , இரண்டுமற்ற சாதரணம் என்று  எதையும் அவன் என்னிடம் வெளிப்படுத்துவதில்லை.  

கவிஞர் சுகுமாரன்  சிரித்த படியே “ உங்க பக்கத்து வீட்டுக்காரர் எப்படியிருக்கிறார்?”  என்று நலம் விசாரித்தார். வாத்தியக் கருவி வாசிப்பில் பக்கத்து வீட்டாரின் பங்கு முக்கியமானது.  அவர்கள் மழையில் எருமை போல் இருந்தாலன்றி நாம் வித்வானாக முடியாது.  சுகுமாரன் வீட்டில் ஒரு சின்ன “ கடம்” இருக்கிறது.  அதை அவர் எடுத்து காட்டுகையில் அரை நிமிடம் வாசித்தார். “ பாவம்… நல்லா வந்திருக்க வேண்டிய பையன்…”.  இளமையில் தான் ஒரு புல்லாங்குழல் வித்வானாக முயன்றதையும் , “ எப்பப்  பார்த்தாலும் நொய்யீ, நொய்யின்னுட்டு… “  என்று  பக்கத்து வீட்டுக்காரர்  அலுத்துக் கொண்டதிலிருந்து,  தொடர்ந்து  கவிதையில் கவனம் செலுத்த துவங்கியதையும் வேதனையோடு பகிர்ந்து கொண்டார்.  எங்கள் வீதியின் கடைசி வீடு என்னுடையது. என் வீட்டின் இரண்டு புறத்திலும் வீடுகள் இல்லை. ஒரு புறம் அம்மா வீடு.  இன்னொரு புறம் மாமா வீடு.  அவர்களுக்கு வேறு வழியில்லை. தவிரவும்,   ‘ஏற்கனவே லூசை’ லூசென்று திட்டி அவர்கள் என்ன  பயனைக்  கண்டு விட முடியும்? ஆனால் எனக்கும் கால நேரங்கள் உண்டு . மதியத் தூக்கத்திற்கு முன் இரத்தமோ, உறவோ எடுபடாது என்பதை நான் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். 

 வாத்திய வாசிப்பு குறித்து சுகுமாரன்  சொன்ன ஒரு விசயம் முக்கியமானது ” அது ஒரு கேந்தி போல.. தொட்டுட்டா பிறகு  விடாது…”  உண்மைதான்.  என்  பத்துக்கு பத்து அறைக்குள் இருந்து கொண்டு அது சமைப்பது  வேறு வேறு உலகங்களை.  ஒரு வாத்தியம் சொல்லைக் கடந்து சொல்லி விடக் கூடியது என்பதால் நாம் அதன் பின்னே சென்று விடக்கூடிய ஆபத்துகள் அதிகம்.

ஜூம்பே பயிற்சியில் இருக்கையில் நண்பன் வே. பாபுவின் பெயரால் நாங்கள் அளித்து  வரும் விருது விழா வந்தது. அதற்கென்று  தாளக்கோர்வை ஒன்றை  உருவாக்கி, அதை மட்டுமே தினமும் பயிற்சி செய்து அந்த நிகழ்வில் வாசித்தேன். அந்த 12 நிமிட வாசிப்பில், இரண்டு இடங்களைத் தவிர்த்து,  விரல்கள் நான் சொன்னபடி கேட்டன . இந்த முறை உள்ளே கொஞ்சம் நடுக்கம் இருந்தது. முதல் “அரங்கேற்றம் “ என்பது போல ஒரு நடுக்கம். அந்த வாசிப்பிலும் ரஹ்மானின் இசையை வெளிப்படையாகவும், ஒளித்தும்  பயன்படுத்தினேன்.”  ஒட்டகத்தை கட்டிக்கோ “ பாடலில் வரும் இடையிசையோடு ,  என் கைச்சரக்கையும்  கொஞ்சம் கலந்து புதிது போல் ஆக்கியிருந்தேன். 

வாசிப்பை கேட்ட வண்ணதாசன்  கொடை விழா அழைப்பு போல் உள்ளதாக எழுதியிருந்தார். நான் கடவுளை அழைக்கிறேனா? அல்லது அவருக்கு எதிராக இசைக்கிறேனா?  இந்த வாழ்விடம் எதற்கோ நீதி கேட்கும் ஒரு தொனி என் வாசிப்பில் ஏறுவதை காண்கிறேன்.  சமயங்களில் எதையோ பழி தீர்த்துக் கொண்ட  ஒரு நிம்மதியும் வருகிறது.  தவற விட்ட எதையோ கைப்பற்றும் தவிப்பையும் உணர்கிறேன். உணர்ச்சிகரத்தின் எந்த  அவஸ்தையுமின்றி வெறும் தாள லயத்தில் மயங்கி அசையும் தருணங்களும் வாய்க்கவே செய்கின்றன. 

இளமை தீர்ந்தும் தீராது வருத்தும் காதல் வேட்கை அல்லது காம வேட்கையாக என் வாசிப்பை காண முயல்கிறான் இளங்கோ. அவன் அப்படிச் சொன்னால் , இல்லவே இல்லை என்று என்னால் முழுமையாக  அதை மறுத்து விட முடியாது.  

“நாங்கள் 45 வயதுக்குப் பிறகு ஒரு பள்ளத்தாக்கில் பாய்கிறோம்
எங்கள் பித்தில்  எதை எதையோ எடுத்து வருகிறோம்
சில சமயம் ஒரு மூங்கிலை
சில சமயம் ஒரு தோல் கருவியை
உறுமி மிச்சம் முடித்த ஒரு புலியின் பல்லை
ஒரு உலர்ந்து போன காதலை
இப்போது கலைக்குத் தோன்றுகிறது
நீ ஏன் இந்த மூங்கிலை
துளை செலுத்தி
தோல் கருவி சேர்த்து
புலியின் பல்லில் எஞ்சி நிற்கும் உறுமலை ஒரு ஆபரணமாக்கி
உன் காதலை ஒரு கவிதையாக்கக்  கூடாது…
மிகுந்த கவித்துவம் இல்லையா இது?
அப்புறம் எவ்வளவு பழசு இந்த விளையாட்டு?”

இளங்கோ கிருஷ்ணன்

ஒரு வாத்தியம்  வாங்கி விட்டேன். பிறகு நடந்ததெல்லாம் வரலாறு என்று சொல்லுமளவு எதையும் நான் கிழித்து விடவில்லை. வெறும் ஐந்து மாத காலத்தில் அப்படிக் கிழித்து விடவும் முடியாது. தினமும் வாசிக்கிறேன். வாசிக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் விரும்பும் சத்தம் அந்தத் தோலில் விழும் போது “யுரேகா.. யுரேகா..” என்று கத்தியபடி வீதியில் இறங்கி ஓட வேண்டும் போல்  உள்ளது.

நான் இசைக் கலைஞன் அல்ல;  இசைக் கலைஞன் போல.  ஆனால் அதில் அப்படியொன்றும் பெரிய குறை இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு.

“ சார். அந்த தர்புகா என்ன விலை? “

இசை

கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

நன்றி : தமிழ் விக்கி

3 Comments

  1. அழகான கட்டுரை. கவிஞர் இசையின் கவிதைகள் , கட்டுரைகளில் எப்போதும் வெளிப்டும் பகடி சுயவிமர்சனம் , மனதின் அலைபாய்தல் உற்றார் நண்பர்களின் மேல் கொண்ட ஆதுரம் என படிக்க சுவையாக இருக்கிறது. நடுத்தர வயதாகி விட்டாலும் இளமையை இழுத்து பிடிக்க வேண்டி எதையாவது செய்து கொண்டிருக்கும் நிலைகொள்ளா தன்மை எல்லோருக்கும் பொதுவானது தான் போல . கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் கவிதையும் அழகு.
    நன்றி இசை..( ஏனோ சார் என்றோஇசை அவர்களே என்றோ நீட்டி முழக்க தோணவில்லை).

  2. இசை, பயிற்சியில் தொடந்து நில்லுங்கள்

    ஷங்கர்ராமசுப்ரமணியன்

    • சிக்கெனப் பிடித்தென்… மகிழ்ச்சி ஷங்கர்

உரையாடலுக்கு

Your email address will not be published.