/

அகந்தையில் எஞ்சும் தனிமை : தாட்சாயணி

மனித இயல்புகள் எவ்விதம் நிரல்படுத்தப்படுகின்றன எனும் கேள்வி ஒவ்வோர் குண அம்சமுள்ள மனிதர்களைப் பார்க்கும் தோறும் என் மனத்தில் தோன்றியிருக்கிறது. பரம்பரையியல்புகளா, மனிதனின் பூர்வ நினைவுகளின் தொடர்ச்சியா அல்லது அவன் வந்தமையும் பிறப்பின் சூழல் தரும் இசைவாக்கங்களா மனித இயல்பு? எவ்வாறெனினும், இவற்றின் கூட்டாக நாம் அதனைக் கருதினும் அவ்வியல்புகள் அவனை வனைகின்றன. அதன் விளைவான உயிரியாக அவன் தன் குண நலன்களாலேயே தன்னைக் கட்டமைக்கிறான். தனித்துவம் துலங்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் பிறராலன்றி அவன் இயல்புகளாலேயே கால வெள்ளத்தில் எதிர் நீச்சலடிக்கவும், மூழ்கவுமான சாத்தியங்கள் நிகழ்கின்றன.

முடிவொன்றை எடுக்கும் தருணத்தில் வாழ்க்கை சரிவதற்கும், நிமிர்வதற்குமான எழுமாறுகள் பற்றிப் பூரணமாக அறிந்தவர் யார்? அப்படிச் சரியான முடிவை எடுத்தவன் புத்திசாலி ஆகவும், மற்றவன் முட்டாள் ஆகவும் ஆயுள் முழுக்கவும் இருந்து விட முடியுமா? கிரகங்களின் சேர்க்கைகளால் வரும் நன்மை, தீமைகளும் மனித வாழ்வின் மாற்றங்களுக்கு ஒரு காரணமா? எண்ணற்ற கேள்விகளின் பின்னணியில் தீராப் புதிரான ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் சிக்கிக் கிடக்கிறது. எழுதலும், வீழ்தலுமென ஒவ்வொரு மனித இனக்குழுக்களும் கால ஓட்டத்தினூடு காணும் மாறுதல்கள் தனி மனித அகங்களுக்கும் பொருந்தக் கூடியன. அத்தகையதொரு உயர் சமூகக் குடியின் வீழ்ச்சியோடு அக்குடிக்கு அரசி போலிருக்கும் பெண்ணின் தவிர்க்க முடியாத பரம்பரை இயல்புகளின் நீட்சி அவள் வாழ்வைக் குலைத்துப் போடுவதை அனுதாபத்தோடு அணுகுவதாக தெணியானின் மரக்கொக்கு நாவலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் முன்னணியில் வைத்துக் கருதத்தக்கவர் தெணியான். எந்தச் சமூகப் பிரிவெனினும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கும் எழுத்து அவருக்குரியது. ஈழத்துப் பிராமண சமூகத்தின் மீதான ஒடுக்குதல் பற்றி ‘பொற் சிறையில் வாடும் புனிதர்கள்’ நாவல் மூலம் அவர் ஒரு பெருத்த கவனத்தை ஏற்படுத்தியிருந்தார். யாழ்ப்பாணத்தில் ஒரு காலகட்டத்தில் மிக உயர் நிலையிலிருந்த மணியகாரர் சமூகத்தின் வாழ்வைக் குறுக்குவெட்டுப் பார்வை பார்ப்பதாக அவர் எழுதிய நாவலே மரக்கொக்கு.

இந்நாவலின் பிரதான பாத்திரமாக இலங்குபவள் விஜயலட்சுமி. தந்தையிடமிருந்தான பரம்பரை அலகுகளூடாக அவள் இந்தப் பிறப்பிற்கு எடுத்து வந்த மிடுக்கும், கர்வமும் கடைசி வரை அவளிடமிருந்து விலகுவதில்லை. பரம்பரை தோறும் அவளது குடும்பம் கட்டிக் காத்த இறுக்கமும், பெருமையும் அவள் மூலமே அந்தக் குடும்பத்தில் பேணப்படுகிறது.

நான்கு பெண்கள் பிறந்த குடும்பத்துள் அவள் இரண்டாவது பெண் ஆகிறாள். பொதுவாகக் குழந்தைகளின் இயல்புகள் பெற்றோர் இருவரில் ஓருவருடையதைக் கொண்டோ, இருவருடைய இயல்புகளையும் கலந்து கொண்டோ அமைவதுண்டு. திருமணத்தில் இணைபவர்கள் ஒத்த இயல்பினராய் இருப்பதென்பதும் எப்போதும் நிகழ்வதல்ல. இவ்வாறான எதிர்மறை இயல்புகள் பெற்றோரிடத்தில் இருக்கும் போது அவர்களுக்கிடையிலான ஈர்ப்பு அதிகம் இருப்பினும் பிள்ளைகளிடம் மரபணுக்கள் பரவும் விதமே அந்தக் குடும்பத்தின் இன்ப துன்பங்களில் பெரிதும் செல்வாக்குச் செலுத்தும். இங்கு விஜயலட்சுமி தந்தையின் மரபணுக்கூறுகளால் ஆக்கப்பட்டவளாக, இருக்க மூத்தவள் வரலட்சுமி தாயின் மரபணுக்களின் செல்வாக்குடனிருக்கிறாள். பொன்னம்பல மணியகாரனுக்கு மனைவியாக வரும் மீனாட்சியம்மாள் புத்தூர் மணியகாரர் பரம்பரையிலிருந்து தாரம் தன்னிலும் குறைந்த தகுதியுடன் இருக்க வேண்டும் எனும் பொன்னம்பல மணியகாரரின் எண்ணத்திற்கேற்ப அமைகிறாள். எதிலும் விட்டுக் கொடுத்துப் போகும் அவள் பண்பே மூத்த பெண்ணுக்கு அமைகிறது. தந்தையின் மரணத்திற்குப் பின் அவரது குடும்பப் பொறுப்பை இயல்பாகவே தனதாக்கிக் கொள்கிறாள் விஜயலட்சுமி. வழிவழியாக வந்த மணியகாரர்களின் குண இயல்புகள் மரபணு வழியே ஒரு பெண்ணுக்குக் கடத்தப்பட்ட பின் அவள் அந்த அதிகார பீடத்தினின்று இறங்க முடியாதவளாகவும் மற்றவர்கள் மீதான தன் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியாதவளாகவும் இருக்கிறாள்.

பரம்பரை, பரம்பரையாகக் கூர் கொண்டு வந்த உணர்வுகள், அவளது வாழ்வின் இனிமையையும் தகர்த்து விடுகின்றன. அவள் தன் மிடுக்கினால் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தாலும் உண்மையில் அனுதாபத்திற்குரியவளாகிறாள். அவளது பெண்மையின் கூறுகள், தந்தையென்ற ஒரு சாதிமானின் அதிகாரம் எனும் மமதையினால் இறுக்கப்பட்டவையாகவே இருக்கின்றன.

அவளுக்கு மூத்தவளான வரலட்சுமி காதலித்தே திருமணம் செய்து கொண்டவள் எனினும் அவள் இரண்டும் கெட்டான் மன நிலையில் இருக்கிறாள். அவளுக்கு வாய்த்தது தாயின் குண இயல்புகள் என்பதால் விஜயலட்சுமி அவளைத் தன் கட்டளையால் பணியச் செய்பவளாயிருக்கிறாள். அவளது கட்டளைகளைத் தாயாலும், மூத்தவளான வர லட்சுமியாலுமே மீறமுடியாமல் இருக்கும் போது ஏனையவர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்? அந்தக் குடும்பம் அவளைத் தந்தையின் பிரதிநிதியாகவே அவளை ஏற்றுக் கொள்கிறது. அதற்கேற்ற ஆளுமையைத் தான் அவள் பிறப்பு அவளுக்கு வழங்கியிருக்கிறது போலும்.

மீனாட்சியம்மா இன்னொரு மணியகாரன் பரம்பரையிலிருந்து வந்திருந்தாலும் கணவனோடும், பிள்ளைகளோடும் இணங்கிப் போகும் குணம் கொண்டவளாயிருக்கிறாள். வரலட்சுமி கணவனைப் பிரிந்து தன் மகள் மீனலோசனியோடு அந்த வீட்டில் வாழும்போது அவர்களைக் கட்டுப்படுத்தும் சாவி விஜயலட்சுமியிடமே இருக்கிறது. சிறு பிள்ளைத் துடுக்குள்ள மீனலோசனி அம்மாவையும், அம்மம்மாவையும் விட அதிகம் பயப்படுவது சித்தியாகிய விஜயலட்சுமியிடமே.

அந்த வீட்டின் ஒழுங்கும் கட்டுப்பாடும் தன் பொறுப்பில் உள்ளதாக நினைத்துக் கொள்ளும் விஜயலட்சுமி, தன் தங்கையாகிய அன்னலட்சுமி தாய்க்கு எழுதிய கடிதத்தினால் ஆங்காரப்படுகிறாள். வீட்டில் தாய் இருக்கும் போது கூட, குடும்பத்திற்கான தீர்மானம் தன் எண்ணப்படியே நடக்க வேண்டும் என அவள் தானாகவே ஒரு பிரகடனத்தை அவ் வீட்டிற்குள் உருவாக்கிக் கொள்கிறாள். அவள் வரையில் வண்டிற்காரன் ஒருவனின் மகனோடு அன்னலட்சுமி திருமணம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் ஆகிறது.

திருமணம் ஆகாமலே அவளது பருவம் கழிந்து விட்டது. ஆனால், தங்கை ஒருவனைத் திருமணம் செய்து கொண்டு போனது அவளுக்குத் தாங்க முடியாத ஆத்திரத்தைத் தருகிறது. அவளுக்கு அவளது திருமணப் பருவம் ஏன் உகந்த ஒருவனைக் கொண்டு வந்து தரவில்லை? அவள் மீது, அவள் அழகின் மீது மையல் கொண்டிருந்தவர்கள் இல்லாமலா போனார்கள்? இருந்திருக்கலாம். அவள் மீதான அழகில் பிரேமையுற்று அவர்கள் கோடி காட்டிய போது அவளது அகந்தை அவர்களை மறுத்திருக்கலாம்.அதே போல அவளது தந்தை சாதி, அந்தஸ்தை உத்தேசித்து அவளுக்கான பொருத்தமானவர்களை நிராகரித்திருக்கலாம். அவ்வாறாக அவளது திருமணப்பருவம் கடந்த பிறகு, அவள் மீதான அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு சாதி, அந்தஸ்துகளைப் புறக்கணித்து அன்னலட்சுமி தனக்கான வாழ்வைத் தானே அமைத்துக் கொண்டாள். தானிருக்கும் போது சுயமான ஒரு முடிவை எடுத்த அவளின் தீர்மானத்தின் மீதான மூர்க்கமாக விஜயலட்சுமி அவளை வீட்டிலிருந்து புறக்கணித்தாள்.

அன்னலட்சுமி இராமநாதன் கல்லூரியில் படித்த தன் அக்காக்களைப் போலவன்றி, மெதடிஸ்தவில் படித்துத் தன் அறிவை விசாலமாக்கிக் கொண்டவள். பேரூந்துப் பயணங்களிலும், பாடசாலையிலும் அடிக்கடி காண நேர்ந்த அறிமுகமான இளைஞனின் காதலில் தன் எதிர்காலத் தீர்மானத்தை உறுதியாக எடுத்தவள். அந்தத் தீர்மானத்திற்குத் தூது போனவள் சின்னி. அந்த வீட்டின் குடிமகள். சின்னானின் அடி உதை பொறுக்காமல் இந்த வீட்டுக்கு வந்து பாதுகாப்புத் தேடிக் கொண்டவள், கடைசியில் மாணிக்கத்துடன் கள்ள உறவு பூணுகிறவள் ஆகிறாள். பெரிய வீடுகளில் குடிமைப் பெண்கள் மீது நிகழ்கிற அத்துமீறல்களுக்கு உதாரணமாக அவள் இந்நாவலில் சித்தரிக்கப்படுகிறாள். அவளின் தூது இப்போது இளையவள் தனலட்சுமியின் காதலுக்கும் தேவைப்படுகிறது. தனலட்சுமி காதல் கொண்டது, அவர்கள் வீட்டுப் பனையில் கள் இறக்கும் ஒருவன் மீது. அன்னலட்சுமி எவ்வளவு தான் அறிவார்ந்து காதலித்து மணந்து கொண்டாலும், அவள் மனதிலும் சாதி குறித்து இருக்கும் எண்ணம் தனலட்சுமியின் காதலின் பின் அவள் நடந்து கொள்ளும் அணுகுமுறையில் வெளிப்படுகிறது.

மேட்டிமைக் குடும்பங்கள் அவற்றிற்கு இயல்பிலேயே பரம்பரை வழி தொடரும் எண்ண ஓட்டங்களால் வழிப்படுத்தப்படுகின்றன என்பதை ஆலயப் பிரவேசச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. கீழ் சாதியினரின் ஆலயப் பிரவேசம் அந்த வீட்டில் தனலட்சுமியைத் தவிர ஏனையோர் மனத்தில் சஞ்சலத்தையும், ஆத்திரத்தையும் ஊட்டுகின்றது. தனலட்சுமியும் கூட, தான் காதலிப்பதற்கு முன்னதான காலமெனில் ஆலயப் பிரவேசம் குறித்த துவேசத்தையே காட்டியிருக்கக் கூடும்.

கதையின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை மணியகாரர் பரம்பரையின் வீழ்ச்சி அந்தக் குடும்பத்தின் பெண் மக்கள் ஊடாகவே வளர்த்துச் செல்லப்படுகிறது. வரலட்சுமி அந்தக் குடும்ப மரபை மீறி ஒருவனைக் காதலித்து மணந்ததுடன் ஆரம்பிக்கும் அக்குடும்ப மிடுக்கின் வீழ்ச்சி அன்ன லட்சுமி ஒரு வண்டிற்காரன் மகனையும், தனலட்சுமி கள் இறக்குபவன் மகனையும் துணையாகக் கொள்ளும் போது முழு வீழ்ச்சியைச் சந்தித்து விட்டது எனலாம். எனினும் அந்த மரபணுக்களின் வீரியத்தோடு அவற்றைக் கட்டிக் காப்பதற்குத் தன்னை விட ஆளில்லை எனும் போலிப் பெருமிதத்தோடும், அகந்தையோடும் தனித்திருக்கும் விஜயலட்சுமியிடம் இறுதியில் எஞ்சுவது என்ன? தந்தை கலைப் பொருளாகச் சேமித்து வெறும் அலங்கார பொம்மையாயிருக்கும் அந்த மரக் கொக்கிற்கும், அவளுக்குமான வேறுபாடு தான் என்ன?

இறுதியில் அன்னலட்சுமியின் வருகையில் விஜயலட்சுமிக்கு ஆரம்பத்திலிருந்த ஆத்திரம் வடியும் போது, அவள் வந்து பேசியிருந்தால் இவள் கொண்டிருந்த அகங்காரத்தை இழக்கக் கூடிய ஒரு தருணம் அது. அன்னலட்சுமி அவளிடம் பேசாமல் போனதுமன்றி கூடவிருந்த வரலட்சுமியும், மீனலோசனியும் கூட, அவளை விட்டுப் பிரிய முடிவெடுத்து விடுகிறார்கள். தன் அகங்காரம் பற்றியெரிய வேதனையில் சாம்புகிறாள் விஜயலட்சுமி. ரீப்போவில் அவளது தந்தையால் வைக்கப்பட்ட மரக்கொக்குப் போல இரை எதுவுமற்று மரத்துப் போய் நிற்கும் அவளது நிலைக்கு வெறுமே அவள் தந்தையின் மரபணுக்களை மட்டுமே காரணம் காட்ட முடியுமா? மனித வாழ்வு குறித்த பல கேள்விகளை விஜயலட்சுமி எனும் பாத்திரமூடாக எழுப்புகிறது இந்நாவல்.

பொன்னம்பல மணியகாரரின் பரம்பரையில் வைரவநாதன் மணியகாரன் மூலம் அவர்களது வீடு கட்டப்பட்ட வரலாறு, ஒரு பெருங்கதையாகக் கிராமத்தில் விரித்துக் கூறப்படுவது பற்றி, சுவாரசியமாக எடுத்துச் சொல்கிறது நாவல் . கிராமத்தின் மத்தியிலிருந்த தன் வீட்டை மாற்றியமைப்பதற்காக மணியகாரன் தேர்வு செய்யும் இடம் அவரது சிறுமையை எடுத்துக் காட்டப் போதுமானதாக இருக்கிறது. பருத்தித்துறை, காங்கேசன் துறை வீதி, கல் வீதியாக மாற்றப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், அக் கடற்கரை வீதியில் மண் பரப்பிய சிறு மடம் ஒன்றின் மூலம் தொண்டுகள் செய்த மடந்தையன் எனும் குடிமையின் பெருமை பொறுக்காது அவனைக் குடியெழுப்புவதற்காகவே அந்த இடத்தைத் தேர்வு செய்கிறார் மணியகாரன்.

நூற்றுக்கு மேற்பட்ட அடிமைகள் அவருக்குச் சேவை செய்து அந்த வீட்டைக் கட்டியெழுப்ப முன் வந்தனர். கடற்கரையிலிருந்து முருகைக் கற்களைக் கொத்தியும் பிளந்தும் கரைக்கு எடுத்து வருவதிலும், காளவாயில் போடுவதற்குப் புளியமரங்களைத் தறித்துக் கை வண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலும் கொண்டு வந்து கற்களும் புளிய விறகுமாக மாறி, மாறி அடுக்கி அவற்றை எரித்து நீறாக்கி வீடு கட்டியதிலும் அவர்கள் ஈடுபட்டமை ஒரு வரலாற்றுச் சித்திரமாக இந்நாவலில் பதிவு செய்யப்படுகின்றது. அந்த வீடு கட்டி முடிக்கும் வரையிலான ஆறு மாதங்களும் அவர்களுக்குக் காலை உணவாகப் பாணிப் பனாட்டும், பழந் தண்ணியும் கிடைத்ததையும் மதியத்திற்குத் தினையரிசிச் சோறு, மரவள்ளி, பூசணிக்காய்க் கறிகளுடன் கிடைத்ததையும் மாலை வீட்டிலுள்ள குஞ்சு குருவன்களுக்கும் அவற்றையே கொண்டு போவதையும் தவிர வேறு கூலி அவர்களுக்கு கிடைத்ததில்லை என்பதையும் நாவலாசிரியர் அந்த மக்களின் ஊடாக நினைவு கூர்கிறார். கிராமத்திலேயே முதன் முதல் தமிழ் நாட்டிலிருந்து பீலி ஓடு எடுத்து வரப்பட்டுக் கட்டப்பட்ட கல் வீடு அதுவாகவேயிருக்கிறது.

அந்த வீடு விஜயலட் சுமியின் காலத்தில் ஒரு படிமமாக மாறுகிறது.
சுற்றி வரப் பதினொரு அறைகளைக் கொண்ட நாற்சார் வீடு. நடுவில் முற்றமும், முற்றத்திற்கும் அறைகளுக்குமிடையில் விசாலமான விறாந்தையும், விறாந்தையையும், கூரையையும் இணைக்கும் அலங்காரமான வைரத் தூண்களும் எனத் திகழும் அந்த வீட்டில் சில அறைகள் பாழடைந்து போக நான்கு அறைகள் மட்டுமே பாவனைக்கு எஞ்சியிருக்கின்றன. ஆங்காங்கே வெடித்துச் சிதிலமடைந்த சுவர்களில் சுண்ணாம்புக் காரைகள் படை படையாய்க் கழன்று அம்மைத் தழும்புகளாய்த் தெரிய, மழைப்பாசி பச்சையாய்ப் படிந்திருக்கின்றது. கைவிடப்பட்ட அறைச்சுவர் வெடிப்புகளில் ஆல், அரசு முளைத்திருக்கப் பாளம், பாளமாகத் தளம் வெடித்து கற்கள் பெயர்ந்திருக்கும் நிலையில் பல்லி, ஓணான், அரணை, பூச்சி, புழுக்கள் சஞ்சாரம் செய்யும் நிலையை அந்தப் பரம்பரையின் ஆறாம் தலைமுறையாகிய மீனலோசனியின் பார்வையில் காட்சிப்படுத்துகிறார் கதாசிரியர். அந்த வீடு என் இப்படி இருக்கிறது? இது போன்ற வீடுகள் வேறும் இருக்கின்றனவா? மீனலோசனியைப் போலவே நம்மாலும் கேட்க முடிகிறது. அவ்வுயர் குடியின் வீழ்ச்சி அந்த வீட்டின் மூலமாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. ஐந்து தலைமுறைகள் ஆட்சி அதிகாரங்களுடன் அந்தப் பரம்பரை வாழ்ந்திருந்ததன் வரலாற்றுச் சின்னமாக எஞ்சியிருப்பது அந்த வீடு ஒன்றே என்பதே உண்மையாக இருந்தாலும் அதை ஒரு போதும் விஜய லட்சுமி ஒத்துக் கொள்ளப்போவதில்லை.

அகந்தை என்பது மேட்டுகுடிகளின் இயல்பில் பிறப்போடு இணைந்தது போலும் எனும் எண்ணம் விஜயலட்சுமியின் நிலையால் வலுப்பட்டாலும், அவளது சகோதரிகள் அதனைக் கடந்து விடுவதன் மூலம் அகந்தையாலும் கைவிடப்பட்ட அவள் மீது அனுதாபமே எஞ்சுகிறது.

அனுபவங்களின் கூரிய விளிம்பு தீண்டி இரத்தம் கசிந்த பின்னரே உண்மையின் தரிசனம் வாழ்வில் சித்திக்கக்கூடும். விஜயலட்சுமியின் வாழ்வை அகந்தை கூறிட்ட கணங்கள் அவள் வரையில் எதிர்பாராதவை எனினும் அவளுடைய நியதி அதுவாகவே ஆனபின் அவளால் அப்படித்தானே இருக்க முடியும்.

௦௦௦

மரக்கொக்கு நாவலை நூலகம் தளத்தில் படிக்கச் சுட்டி.

பொற்சிறையில் வாடும் புனிதர்கள் நாவலை நூலகம் தளத்தில் படிக்கச் சுட்டி.

தாட்சாயணி

ஈழத்தின் போர்க்காலச் சூழ்நிலையில் முகிழ்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து அதன் வாழ்வியல் நெருக்கடிகளை இலக்கியமாக்கியிருப்பவர். ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’, ‘இளவேனில் மீண்டும் வரும்’, ‘தூரப் போகும் நாரைகள்’, ‘அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும்’ ஆகிய  சிறுகதைத்தொகுப்புகளின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 

உரையாடலுக்கு

Your email address will not be published.