அங்கயற்கண்ணி : சுரேஷ்குமார இந்திரஜித்

பல மனைவிகளையும் காஞ்சனமாலை என்னும் பட்டத்து அரசியையும் கொண்ட அரசன் மலையத்வஜன் குழந்தைப் பேறு இல்லா வருத்தத்துடன் மாடத்தில் நின்று செடி, கொடி மரங்களைப் பார்த்துக்கொண்டிருந்த நேரம் காஞ்சனமாலை அருகில் வந்து குழந்தைப் பேறு கோரி யாகம் செய்வோம் என்று கூற அவன் ஆமோதித்தான்.

யாகம் செய்ய விருப்பமுடையவனாகிக் காஞ்சனமாலையுடன் கிழக்குத் திசையில் இட்ட ஆசனத்தில் அமர்ந்து எரி வளர்த்தான். பசும்புகை படர்ந்தது. மலையத்வஜன் வலது தோள் துடிக்க, காஞ்சனையின் சுருங்கிய இடை விரிய, கொங்கைகள் எழுந்து ததும்ப, தீம்பால் வெள்ளமென ஒழுக, இடது தோளும் இடது கண்ணும் துடிக்க இவ்வுலகம் அன்றி ஏழு உலகமும் மகிழ்வு எய்த, பொறாமை கெட, துந்துபி திசையெல்லாம் இசைக்க, மதுரை மாநகர் உள்ளார் அக மகிழ்ச்சி அறிய, தீந்தமிழ் வழங்கு திருநாடு சிறப்ப, எரிக்கடவுள் நோற்ற பயன் எய்த, கொழுந்துவிட்டு எரிந்த குண்டத்தில், இதழ்க்கமலம் அலர்ந்து தளிர்க்கொடி முளைத்து எழுவது போல, கொண்டையில் அணியும் அணிகலன் ஒளிவீச, தொங்கவிட்ட தரளமாலை புரள, இன்னமுதம் வாய்வழி சிந்த, நிலா ஒழுகும் ஆரவடம் மின்ன, இளம்பரிதி வெஞ்சுடர் விழுங்கி வாங்கு கடலின் மாலை இளஞ்சூரியனின் ஒளியை விஞ்சி பவளமாலை மிளிர, சிற்றிடை சிறு மென்துகில் சூழ, மணிச்சிறு மேகலை புலம்ப, மணிக்குழை விழுங்கிய குதம்பை சிறுதோள் வருடி ஆட, தெள்ளமுத மென்மழலை சிந்த, இளம் புன்னகையுடன் பல்வரிசை அரும்ப, முலை மூன்று உடைய ஓர் பெண்பிள்ளை மூன்று வயது பிராயமொடு நின்றாள்.

குறுந்தளிர் மெல்லடி கிடந்த சிறுமணி நூபுரம் சதங்கை குழறி ஏங்க, நறுந்தளிர் போல் அசைந்து தளர்நடையுடன் மழலை இளநகையும் தோன்றப் பிறந்தப் பெண்பிள்ளை அறம் தழுவி நின்றோர்க்கு இம்மையில் வீடு அளிக்கும் அம்மை. வாய் வெளிறாது, முலைக்கண் கருகாது, சேய்போல் நீண்ட கருங்கண் பசவாது, ஐயிரண்டு மாதம் தாங்காது, ஆலிலை வயிறு வருந்தப் பெறாது, மகவை எடுத்து அணைத்தாள், மோந்தாள் வாய் முத்தங்கொண்டு இன்புற்றாள் காஞ்சனை.

ஆதி மறை கடந்தவள் திருமகளாய் உதித்தற்கு மன்னவன் செய்த தவம் பெரிது.
பொறி கடந்து ஆனந்த வெள்ளமான ஞான வடிவுடையாள் அன்பின் வெளிவந்து
ஒரு பிள்ளையாய் அவதரித்த கருணை அரசனின் நெஞ்சகத்துள் வீற்றது.

மகவு இன்றி பல ஆண்டுகள் வருந்தி, மைந்தற்பேறு பெற யாகம் செய்த நேரம் ஒரு பெண் மகவை தந்தது ஏனோ. நிலவு ஒழுக வரு பெண்ணும் முலை மூன்றாய் முகிழ்த்து மாற்றார் நகைக்க வைத்தது ஏனோ என அரசன் வருந்த— ‘மன்னவ, நின் திருமகளுக்கு மைந்தர்போல் சடங்குகள் அனைத்தும் சொன்ன முறை செய்து, பெயர் தடாதகை என்று இட்டு முடி சூட்டுவாய். இந்தப் பொன்னனையாள் தனக்கு மணாளன் வரும்பொழுது ஒரு முலை மறையும்’ என ஒரு திருவாக்கு விசும்பிடை நின்று எழுந்தது.

அந்த வாக்கு செவி நிரம்ப அன்பு உவகை அகம் நிரம்ப, மனம் ஒன்ற, நெய் சொரிந்து மகம் நிரம்ப சாலை நீத்து இருபுறமும் வரும் காவலருடன் மனை புகுந்தான் வேந்தன்.

2

தோழியரோடு புறம்போந்து சிறுவீடு கட்டி விளையாடி அதில் விருந்து படைத்து,
தோழியர்க்கு கண் களிப்புற ஆடிக்காட்டி, குறி சொல்லும் கழங்குப் பந்து பயின்று
அம்மானையும் கற்றுப் பாசங்காட்டி, மேலோடு கீழ் வினைக்கயிறு வீசி ஊஞ்சலாடுவாள் உலகில் பலரால் விரும்பப்படும் பெண் தடாதகை.

இம்முறையால் தாய்க்கும் தோழியர்க்கும் அகத்தில் உவகை ஈத்தாள் ஆகி, தந்தைக்கும் அகத்து உவகை ஈவாளாய், வாய்மைச் செம்மறை கற்று, ஈரெட்டு கலை முழுதும் தெளிந்து, அழுக்கு, மாசு, களங்கம் அற்ற கலைகள் அனைத்தும் கற்றாள். வில், வாள், வச்சிரம் முதல் பல படைத்தொழிலும் கண்ட திருமகளுக்கு, முடி சூட்டும் செய்கை பூண்டான் மன்னன்.

மங்கலநாள் வரையறுத்துத் திசைதோறும் திருமுக ஓலை அனுப்பி, நகர் எங்கும்
விழா எடுத்து, மங்கல வாத்தியங்கள் முழங்க, யானை உச்சி மீது வந்த கங்கை முதல் ஒன்பது தீர்த்தமும் நிரப்பி, பின் தீ வளர்த்து அமுதம் இட்டு, பொன்னால் செய்த சிங்கமணி ஆசனத்தைப் பூசித்து, திருமுடியை யானை மேல் வைத்து, நகரை வலம் செய்து பூசித்து, சிங்காதனத்தின் மேல் நாகாபரணம் அமைத்து, வெள்ளை நிறமுடைய முத்து நிகர் தடாதகையை கும்பத்து நீரால் குளிர ஆட்டி, கற்பகப்பூ மழை பொழிய, அருந்தவத்தார் ஆசி புரிய, கொம்பு முழங்க, பல்லாண்டு பாட, மங்கலத் தூரியம் முழங்க, மறை பாட, மாணிக்க மகுடம் சூட்டினர். வெண் யானை கழுத்தில் வேப்பமாலை முடித்து, பெண் அரசை மங்கலத் தூரியம் முழங்க வலம் செய்வித்தான் மன்னன்.

மலையத்வஜன் விண்ணரசு இருக்கை எய்தப் பெற்றபின், தென்னவன் ஈன்ற கன்னிப்பெண், அரசாணை செலுத்திய பெருமை கொண்டாள் எம் பிராட்டி.

சூரியன் தோன்றும் ஐந்து நாழிகைக்கு முன் எழுந்து மணம் கலந்த நீரில் ஆடி, தானம், அன்பு, கடவுள் பூசைத் தொழில் முதல் அனைத்தும் செய்தாள். வேட்டுவர் குலத் தலைவன், பொன்னி நதிக் காவலன், குடக்கோன் சூடிய மாலைகள் தடாதகைப் பிராட்டியின் திருவடியில் வணங்குவதால், ஆணை வழி அடி மாலைகள் ஆயிற்று. பூண்முலை தடாதகைப் பிராட்டி கன்னிப் பருவத்தில் நூல்வழி கோலோச்சி அரசு செய்தலால் கன்னிநாடு ஆயிற்று இந்நாடு. யாவரே ஆயினும் அன்பினால் ஆதரிக்கும், இம்மையில் வீடு எய்தச் செய்யும் செம்மை ஆகிய இன்னருள் செய்து வீற்றிருந்தாள் அங்கயற்கண்ணி.

ஒளியால் உலகு ஈன்று உயிர் அனைத்தும் கருணையால் வளர்க்கும் அங்கயற்கண்ணியே, மழலை தெளியா கிளி வளர்த்து விளையாடும் செயல் என்னே. மேகம் போன்ற கூந்தலை உடைய கோகிலமே, தோழியரோடு விளையாடும் வனப்புதான் என்னே.

சந்நிதி அடைந்து தாழ்ந்து நின்ற இளமாந்தளிரின் மின்னல் நிகர் வயிற்றைச் சூழ்ந்து கிடந்த மேகலை, இழை இடை நுழையா வெம்முலை, செம்மலர்க்காந்தள் பொன்வரிசை வளைக்கை, மங்கலக் கழுத்தின் பூரணம், முகத்தின் இன்னிசை, வண்டு சூழ் குழற்கற்றை உடைய இறைவியை வணங்குவோம்.

3

வயிறு தேய்ந்து ஒளிப்பச் செம்பொன் வனமுலை இறுமாப்பு எய்தக் கருங்குழற்கற்றை இருளை வெளிறு செய்ய யாழ் மென் தீஞ்சொல் இன்நகை பிராட்டிக்கு மன்றல் செய்யும் காலம் வந்தது.

“அன்னை நீ நினைத்த எண்ணம் ஆகும் பொழுது ஆகும். நீ இரங்காதே. யான்
போய்த் திசைகளெங்கும் என் கொற்றம் நாட்டி மீள்வேன்” என்று கூறி பொருக்கென எழுந்து போனாள் பிராட்டி.

ஆர்த்தன தடாரி, பேரி ஆர்த்தன, ஆர்த்தன உடுக்கை, பம்பை ஆர்த்தன, முழவம்
ஆர்த்தன, தட்டை ஆர்த்தன, தாரை ஆர்த்தன, காளம் தாளம் ஆர்த்தன, திசைகள்
எங்கும். வீங்கிய கொங்கை ஆர்த்த கச்சணிந்தோர், கணையினர், வட்டத்தோல் வாள் தாங்கிய கையர் கூட்டம் பிராட்டியின் தேருடன் சென்றனர். புழுதியில் பகலவன் மறைந்து இருள் சூழ, வெண்குடையும் வயிர வாளும் ஒளிகொண்டு இருளை நீக்கியது. சேனை ஆழ்கடல் போல வலியதாகி, திலகம் அணிந்த ஒளிமிக்க நெற்றியை உடைய பிராட்டி மன்னர்களையெல்லாம் கவரச் சென்றாள்.

இழை இடை நுழையா வண்ணம் வீங்கு கொங்கைக் கொலைப் பார்வை கொண்ட
பெண்டிர் சூழ, வெள்ளை வாரணம், மாவும் கோவும் கதிர்மணியும் தெய்வத்
தருக்களும் கவர்ந்து மீண்டாள்.

திரிபுரம் எரித்த, மேரு மலையை வில்லாக உடைய சிவனின் கயிலைக்கிரி
நோக்கிச் சென்றாள். பிராட்டியின் சேனைகள் எழுப்பிய ஒலியைக் கயிலை மலை
எதிரொலித்தது. அம்புறாத் துணியை முதுகில் தாங்கிய பிராட்டி, மறத்தார், கணை
பூட்டு வில்லாருடன் வட்டித்து இடியென ஆர்த்து கயிலையை
வளைத்துக்கொண்டாள். இனிய மொழியுடைய பிராட்டியின் பெருஞ்சேனை,

வெற்றியை உடைய பூதகணங்களுடன் பொருந்தியது. கடலும் கடலும்
பொருதியது போல இருந்தது.

படை அற்று, ஊர்தி அற்று, சுற்றம் அற்று, நடை அற்று, பூதகணங்கள் அடைந்த
நிலையை நந்தி கண்டனன்.

கயிலையின் தலைவன் சிவன் எழுந்து போர்க்களம் சென்றான். ஒற்றைவார் கழற்
சரணமும் பாம்புடன் புலித்தோலும் கொற்றவாள் மழுக்கரமும் வெண்திருநீறும் அணிந்து, கற்றைச் சடையும் கொண்டு, கருணை செய் திருநோக்குப் பெற்ற சிவனின் வலப் பாதியைத் தடாதகைப் பிராட்டி கண்டாள்.

கண்ட கணத்தில் பிராட்டியின் ஒரு முலை மறைந்தது. நாணம், மடம், அச்சம்
கொள்ள மலர்ந்த பூங்கொம்பு வளைந்து துவள்வது போலாகி அன்பு வந்து, கருங்குழல் பாரமும் பிடர் தாழ, கெண்டை மீனைப் போன்ற உண்கண்ணும் அடி நோக்க நின்றாள்.

நின்ற மென்கொடிக்கு, சிவன் நிகழ்த்திய திருமாற்றம் கண்டு சுமதி என்பாள் அடி
பணிந்து, “இப்பேரழகனே நின் மணாளன்” என்றாள். சிவன், “நன்று தொட்ட நாள்
மணஞ்செய்ய வருகுதும்; நகர்க்கு நீ ஏகுக” என்றான் பிராட்டியிடம்.

நாதன் மேல் அன்பையும் உயிரையும் இருத்திப் பெண்டிர் சூழ, தேர் மேற்கொண்டு,
கடல் என ஆர்ப்ப மாமதுராபுரி அடைந்தாள், அங்கயற்கண்ணி என்ற பெயர் அடைந்த மீனாட்சி என்ற பெயர் அடைந்த, மூன்றாம் முலை மறைந்த தடாதகைப் பிராட்டி.

சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித்  தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக்களங்களில் எழுதி வருபவர்.

தமிழ் விக்கியில்

2 Comments

  1. மதுரை மீனாட்சி அம்மனுக்கு அங்கயற்கண்ணி என்றொரு பெயருண்டு. அவரின் பிறப்பு, வினோத உடல்வாகு, அவர் அம்மனாக உருவெடுத்த புராணத்தை கூறுகிறது .
    அங்கயற்கண்ணியின் ஓவியத்தை … இதிகாச காவியமாக படைக்கும் பெருங்கதை ஒன்றின் முன்னுரையை போலிருக்கும் இந்த சிறுகதை செந்தமிழின் இனிமையில் சிறப்பு சேர்த்திருக்கிறது.

  2. மதுரை மீனாட்சி அம்மனுக்கு அங்கயற்கண்ணி என்றொரு பெயருண்டு. அவரின் பிறப்பு, வினோத உடல்வாகு, அவர் அம்மனாக உருவெடுத்த புராணத்தை கூறுகிறது .
    அங்கயற்கண்ணியின் ஓவியத்தை … இதிகாச காவியமாக படைக்கும் பெருங்கதை ஒன்றின் முன்னுரையை போலிருக்கும் இந்த சிறுகதை செந்தமிழின் இனிமையில் சிறப்பு சேர்த்திருக்கிறது.

உரையாடலுக்கு

Your email address will not be published.