ஒளிரொலி : விஜய் ரெங்கராஜன்

ஒளிரொலி : விஜய் ரெங்கராஜன்

விளக்குகள் அவற்றுக்கென்றே தனித்த மனத்தைக் கொண்டிருந்தன. நிச்சயமற்ற நிறங்களில் அணைந்தெரிந்து ஒளியளவு குன்றியேறி மினுக்கிக்கொண்டிருந்தன—பிங்க், அப்புறம் ஊதா, பின்னர் பலவீனமான பச்சை, எந்த மனநிலையில் இருக்கின்றது என்று திட்டவட்டமாக முடிவெடுக்கமுடியாமல் திணறிக்கொண்டிருப்பது போன்று. விளக்குகள் தாளத்தைப் பொருட்படுத்தவில்லை, அல்லது அந்தத் தாளம் விளக்குகளை ஒப்புக்கொள்ளவில்லை, சிலநேரம்.

நான் கையில் செம்பு கோப்பையைப் பிடித்திருந்தேன்—என் வழக்கப்படி, மாஸ்கோ மியூல். வோட்காவில் இஞ்சி சோடா, எலுமிச்சையுடன், சிறிது இளநீரும். நஃபீஸ், எப்போதும்போல் வெறுங்கையுடன். தாளத்திற்கு ஏற்றவாறு அவன் உடலும் காலும் அசைகின்றமாதிரி தெரியவில்லை—மக்கள் எதையும் யோசிக்க விரும்பாதபோது அரைமயக்கத்தில் தள்ளாடுவார்களே, அது போன்று இருந்தன.

பல வெள்ளியிரவுகள், எங்கள் இருவருக்கும் இவ்வாறே. சென்னை நகருக்குள்ளேயே இரண்டு பாகை வெப்பம் குறைவாக இருக்கும் காடுசூழ்ந்த பல்கலைகழக கட்டிடங்களை உதறிவிடுவோம். நுங்கம்பாக்கத்திலுள்ள இந்த நடனகிளப்பிற்கு வருவோம். வாரம் முழுக்க இருக்கும் ஆய்வுவேலைகளின் அழுத்தத்தை ஈடுசெய்ய எங்களால் முடிந்த இரண்டுமணிநேர விடுதலை. ஆய்வுக்கேள்விகள், பிஎச்டி வழிகாட்டியிடமிருந்து வந்த படிக்கப்படாமலேயே இருக்கும் மின்னஞ்சல்கள், நான்குமணி நேர கணித்தலுக்குப் பின் உடைந்த பாவிப்புநிரல்கள்—எதற்கும் இங்கு முக்கியத்துவம் இல்லை.

பொறியியல் போலல்லாமல் இயற்பியல் ஆராய்ச்சியில் சரியான ஆய்வுக்கேள்வி கண்டடைவதற்கே இரண்டாண்டுகள் கடந்துவிடும். அப்புறம் கோட்பாட்டு பகுப்பாய்வு முடித்து, அதேநேரம் அதற்கான செய்முறைசோதனைகள் வடிவமைத்து செய்து முடிக்க வேண்டும். பின்னர் ஆய்வுத்தாள் எழுதி, அதை ஆய்விதழ்களுக்கு அனுப்பி, பலமுறை பியர் ரிவ்யூவில் ஏட்டைத் திருத்த வேண்டும். இந்திய ரயில்கள் சரியான நேரத்தில் புறப்படும் சாத்தியத்தில் நமக்கான தீஸிஸை ஏழு ஆண்டுகளில் முடிக்கலாம். கடைசியாக டாக்ட்டரேட் ஆஃப் ஃபிலாஸஃபி என்று சிறுதாளைப் பெறும்போது வேறொரு ஆளாக மாறியிருப்போம்.

ஒரு டப்ஸ்டெப் பாடல் தொடங்கியது—எலக்ட்ரானிக் அடர்தாள இசை.

“டிரான்ஸ் மாதிரி இருக்குல்ல,” நஃபீஸ் சொன்னான்.

 டப்ஸ்டெப். எங்கு தாளம் விழவேண்டும் என்று நினைப்போமோ அங்கு விழாது. முதலில் சரியான இடைவெளியில் தாளம் மெதுமெதுவாக ஏறிக்கொண்டே போகும், நாமும் அதை பின்தொடர்ந்துகொண்டே இருப்போம். ஒருகணத்தில் டிராப் என நம்மை அந்தரத்தில் நின்று விழவைத்து விடும். தாளம் மீண்டும் தொடரும்—ஆனால் சரியான புள்ளியை நிராகரித்து, சற்று தள்ளி. அதற்குப்பிறகு தாளம் வேறொரு வேகத்தில் செல்வதுபோன்று நமக்கு ஒரு பிரமை ஏற்படும். இசை பற்றியெல்லாம் எனக்கு அவ்வளவாக தெரியாது. இதெல்லாம் அவன் அவ்வபோது செய்யும் இசைப்பிரச்சாரத்திலிருந்து தெரிந்துகொண்டதுதான். எந்தப் புதிய பாடலைக் கேட்டாலும், உடனடியாக கீபோர்டில் வாசித்துவிடுவான்.

”சரிதான்” என்றேன்.

நஃபீஸ் பிஎச்டி ஆய்வுக்கட்டுரை இன்னும் சில மாதங்களில் சமர்ப்பிக்கப் போவதாகச்  சொல்லியிருந்தான். அதனாலேயே அவன் கூடுதல் மனவுளைச்சலில் இருப்பது போன்று எனக்குத் தோன்றும். அவன் தொடங்கிய பின், ஒரு ஆண்டுக்குப் பிறகே நான் ஆய்வை ஆரம்பித்தேன். என்னுடைய ஆய்வை முடிக்க இன்னும் ஒன்றோ இரண்டோகூட ஆண்டுகள் ஆகலாம்.

”இந்த பீட் ஆரம்பிக்கும் போது டக் டக் டக்னு சிகப்பா—திடீர்னு ப்ளு,” என்றான்.

அவன் என்ன சொல்ல வருகிறான் என்று எனக்கு எல்லா நேரமும் புரிவதில்லை. ஆனால், புரிந்துகொள்ளாமையின் வழிதான் நான் அவனைத் தெரிந்துகொண்டிருந்தேன்.

சில மாலைகளில் இன்ஸ்ட்டியின் காட்டுவழிகளில் சைக்கிள் ஓட்டிச்செல்வோம். எங்களின் மற்றொரு இளைப்பாறல். அவன் சைக்கிள் ஓட்டும்போது அவ்வபோது என்னைக் கடுப்பேற்றுவதற்கென்றே எனக்குப் பின்னால் சென்று பெல் அடிப்பான்.

“உன் இதயத்துலேயே மணியோசை இருக்குது போலயே,” ஒருநாள் சொன்னேன். புன்னகைத்துவிட்டு, மிதிப்பதைத் தொடர்ந்தான்.

ஏதோ ஒரு நன்னாளில் எங்கள் பேராசிரியரை நாங்கள் மாற்றிமாற்றி கிண்டல் செய்து பூரிப்பானபோது எங்கள் இருவரின் நட்பு இறுக்கம் பெற்றது. இந்த நெருக்கத்தாலேயே ஒவ்வொருவார கிளப் வருகையின்போது எனக்கு சிறுபதற்றம் தொற்றிக்கொள்ளும். அவன் பலமுறை நடனம் ஆடும்போது மயக்கமடைந்திருக்கின்றான். ஆனாலும் இங்கு தவறாமல் வருவதற்கு அவன்தான் என்னை வற்புறுத்திக்கொண்டே இருப்பான்.

”இங்க முடிச்சுட்டு ரூமுக்கு போறதுக்கு முன்னாடி கொஞ்சம் லாபுக்கு போலாமா?” அவன் கேட்டான். இன்னும் டப்ஸ்டெப்பும் மினுமினுப்புகளும் நிற்கவில்லை.

சத்தம் ரொம்ப அதிகமாக இருந்ததால் அவன் அருகே முகத்தைப் பக்கவாட்டில் கொண்டுசென்று, “ஏன் எதுவும் மறந்துட்டியா?” என்றேன்.

“இல்ல, ஸ்பெக்ட்ரோமீட்டர அணைச்சானேன்னு மறந்துருச்சு, செக் பண்ணிட்டு போலாமே.”

“ஓக்கே ஷ்யோர் டா” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் தடுமாறுவது தெரிந்தது. கண்களை மூடி வேகமாக சென்று கௌன்ட்டர் ஹைசேரில் உட்கார்ந்துகொண்டான். அவன் சிறிது சமநிலைக்கு வந்ததற்கு பிறகே, அங்கிருந்து வெளியேறினோம்.

பதினொரு மணியளவில் லோக்கல் ரயிலைப் பிடிக்க நடைமேடையில் காத்திருந்தோம்.

சென்னை டிசம்பரின் மென்குளிரால் அரைக்கை சட்டை மட்டுமே அணிந்த என் கை சில்லிட்டு இருந்தது. கைக்கட்டி நின்றுகொண்டிருந்தேன். பிளாட்பாரத்தில் சில நபர்கள் அங்குமிங்குமாக ஆச்சரியக்குறிகள் போன்று நின்றுகொண்டிருந்தார்கள்.  மொபைலில் கண்கள் பொதிந்திருந்தார்கள், முகங்கள் ஒளிபொருந்தியிருந்தன. அவ்வபோது “பயணிகளின் கனிவான கவனத்திற்கு” என்பது மட்டுமேயான அமைதி. ஆய்வு மாணவர்களுக்கேயுரிய நடுநிசி ஊக்கம் எங்கள் இருவரையும் தொற்றிக்கொண்டிருந்தது.

நஃபீஸ் பெஞ்சில் உட்கார்ந்து கால்நீட்டி பாக்கெட்டில் கைவிட்டுக்கொண்டான். சில கணத்திற்குப் பிறகு, அவன் சொன்னான்.

“நான் இன்னும் டைட்டில் முடிவு செய்யல, தெரியுமா?”

அவன் எதைப் பற்றிச் சொல்கிறான் என்று புரிந்தது. அவன் தீஸிஸ்.

“இண்டர்பிளே பிட்வீன் பெர்சப்ஷன் அன் த பிசிக்ஸ் ஆஃப் வேவ்ஸ், அப்படீன்னு தானே போன மாசம் சொன்ன?”

தலையசைத்தான். “ஆமா, அலைவியல்-புலனுணர்வு ஊடாட்டம். ம்ஹ்ம்… ரொம்ப நேரடியா இருக்கு. சொல்ல வந்த கனத்த தாங்காது.”

“டிகேப்பி என்ன சொன்னாரு”

“அவரா… ’நீதான் இதற்கு ராஜா நஃபீஸ். நான் வெறும் பார்வையாளன் தான்.’ அப்படிச் சொன்னாலும், என் டிராப்ட் முழுக்க எறும்பு மொய்க்கிற மாதிரி பேனா குறிப்புகள்.”

சிரித்தேன். “அவர் எல்லாரிடமும் அப்படித்தான். உனக்குத் தெரியுமே,” என்றேன். அவரிடமிருந்து எப்போதும் கண்ணியமான கருணையற்ற திருத்தங்கள் வரும்.

“நான் எனக்கே புரியாத ஒன்னை விவரிக்க முயல்றேனோன்னு தோனுது” அமைதியாகச் சொன்னான்.

தூரத்தில் ரயிலின் ஒலி கேட்டது.

“நாம சொல்ற வார்த்தைகள், ஒலி ஒளி—எல்லாமே நாமளே உருவாக்கிக்கிட்டதுதானே? அவை வெறும் அலைகள் தானே? ஆனா நாம பெயரிடுகிறோம். நினைவுகளோட தொடர்புபடுத்திக்கிறோம். நம்மளோட முழு அடையாளங்களையே அதையெல்லாம் சுற்றி உருவாக்கிக்கிறோம்.”

நடைமேடையில் சுருண்டு படுத்திருக்கும் நாயை, தன் தாடையால் சுட்டினான்.

“அது சிகப்ப பாக்காது, நம்மைப் போல இசைய கேக்காது. ஆனா நம்ம உலகத்துலதான் அதுவும் இருக்கு.”

“ரைட். அது என்ன பாக்குதுன்னு யாருக்குத்தான் தெரியும்,” சொன்னேன்.

“எக்ஸாட்லி. அதோட மூளையின் மொழி இன்னும் நமக்கு தெரியாதே. சோ, வெறும் புலனைப் பத்தி மட்டும் இல்ல இது, கதையைப் பற்றியது. நாம வெறும் அலைகளை மட்டும் கிரகிக்கல, நாம அதற்கு பொருளேற்றி விவரிக்கிறோம். அப்படி இல்லனா, அது வெறும் இரைச்சல். கேயாஸ்.”

அதிவிரைவு ரயில் எங்கள் பிளாட்பாரத்தில் இடமிருந்து வலம் நில்லாமல் விரைந்து ஓடியது. ஐந்தாறு நொடிகள் எடுத்திருக்கலாம். இரவைப் பிளக்கும் சத்தம். ஆயிரம் முகங்களைத் தீட்டிக்கொண்டு ஓடியது.

ஏதோ வளைந்த ஒளியைக் காண்பது போன்று அவன் அதைப் பார்த்தான்.

”இந்த ரயில் போன சத்தம்… “

“ம்ம்ம்?”

“உனக்கு ஒருவேளை பிட்ச் மாறும் வயலின் இசையா கேட்கலாம். அந்த நாய்க்கு அடிபட்டு விழுந்த அதோட குட்டியோட ஓலமா கேட்கலாம்.”

அவனே மேலும் தொடர்ந்தான்.

“சில இரவுகளில் நான் எழுதிக்கொண்டிருக்கும்போது, நான் அறிவியல்தான் எழுதுகிறேனா என்றே சந்தேகம் வந்துவிடும். ஆனால் இதுதான் எனக்கு இருக்கிற ஒரே வாய்ப்போ என்றும் நானே கேட்டுப்பேன்.”

‘என்னடா சொல்ற? ஏன் இதுதான் கடைசின்னு சொல்ற?’ என்று கேட்கத் தோன்றியதை, ஏதோவொன்று கட்டுப்படுத்தியது.

தண்டவாளங்களையே பார்த்துக்கொண்டிருந்தான். ரயில்கள் எதுவும் இல்லை. வேறு ஏதோ ஒன்றை. நான் அளக்க முடியாத தூரத்தில்.

அப்போதுதான் நான் உணர்ந்தேன். அவன் என்னால் வர இயலாத இடத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறான் என்று. அது வெறும் ஒரு நினைவா அல்லது இன்னும் ஆழமான வேறு எதுவோவா. தெரியவில்லை.

”நான் சின்ன பையனா இருந்தப்போ,” அவன் சொன்னான். “காலையில் இந்தச் சத்தம் கேட்டு எப்போதும் எழுந்திருப்பேன். விடிகாலை ரயில். அதை, தொழுகைக்கான அழைப்பாக எண்ணியிருந்தேன். ஆனா யாரோ வாயால சொல்ற அழைப்பா இல்ல—“ என்று சொல்லி, காற்றில் சுட்டுவிரலால் நேர்கோடு ஒன்றை வரைந்தான். “— வானத்தில் ஒரு சிகப்புக் கோடு.”

நான் ஒன்றும் சொல்லவில்லை.

“அது ரயில் என்று பிறகு தெரியவந்தும் கூட,” அவன் சொன்னான், “சிகப்பு மட்டும் தங்கிவிட்டது.”

சில நிமிடங்கள் கழித்து வந்த எங்கள் லோக்கல் ரயிலைப் பிடித்து இன்ஸ்டிக்கு வந்தோம். வாயிற்கதவில் உட்கார்ந்துகொண்டிருந்த அரைத்தூக்க காவலரிடம் எங்கள் ஐடியைக் காண்பித்தோம். பார்க்கிங்கில் நிறுத்திய எங்கள் சைக்கிள்களை எடுத்து முகம் விரைக்க அழுத்திக்கொண்டு, பழையபாணி மென்மஞ்சளில் பெயின்ட் அடிக்கப்பட்ட டிபார்ட்மென்ட் இரண்டாம் தளத்தில் இருந்த எங்கள் ஆய்வகத்தை அடைந்தோம்.

இரண்டாக வகுக்கப்பட்ட ஆய்வகம். தரையை ஒரு நிமிடம் தொடர்ந்து பார்த்தால் மயக்கம் அளிக்கும் அளவுக்கு அருவமான வளைந்துநெளிந்த கோடுகள் கொண்ட பதிகற்கள். வெண்சுவர். ஒரு அறையில் மாணவர்களுக்கான இடங்கள். திறந்த தளவமைப்பில் அமைந்த மேசைகள். அதன் கீழே பணிநிலையக் கணினிகள், மேலே திரைகள், அருகே சக்கரம் வைத்த இருக்கைகள். சுவரின் ஒருபக்கத்தில் அதனினும் வெண்மையான எழுதுபலகை. பக்கத்தில் குடிநீர் நிறைக்கப்பட்ட கலம். கீழ்க்கலத்தில் மட்டும் நீர். மாற்றப்படவேண்டிய மேற்கலம். எல்லா மேசைகளிலும் அங்குமிங்குமாக நோட்டுகள், தாள்கள். சிலவற்றில் பேனாக்களும், தண்ணீர் பாட்டில்களும். சொருகப்படாத திறன்பேசி சார்ஜர்கள். காய்ந்துபோய் தூக்கிப்போட காத்திருக்கும் காலி காபி காகிதக் கோப்பைகள்.

மற்றொரு அறையில் ஆய்வுக்கருவிகள் இருந்தன. அந்த அறையின் ஒருபுறம் அதிர்வுகளை விழுங்கி ஆட்டம்கொள்ளாத ஆப்டிகல் டேபிள்கள் இரண்டு. அதன் மேற்புறம் மேட்ரிக்ஸ் போன்று புள்ளிபுள்ளியாக துளைகள் அமைந்த பிரெட்போர்ட் எனப்படும் டேபிள்டாப். அந்தப் புள்ளிகளில் பொருத்தப்பெற்ற லென்ஸ்தாங்கிகள், லேசர்கருவிகள், கண்ணாடிகள், காமிராக்கள். இன்னொரு மூலையில் ஸ்பெக்ட்ரோமீட்டர், பிரிஸம்கள். மறுபுறம் மைக்ரொவேவ் ஆராய்ச்சிக்கான அனலைசர், சிக்னல் ஜெனெரேட்டர் , பீசோமீட்டர், ஸ்கானிங் மைக்ரொஸ்கோப்பி கருவிகள்.

நஃபீஸ் அவனுடைய பரிசோதனை மேசைக்குச் சென்றவுடன் நான் என்னுடைய இருக்கைக்குச் சென்று காத்திருந்தேன். அருகில் இருந்த ஜன்னலைத் திறந்துகொண்டேன். குரங்குகள் வராமல் இருக்க நெருக்கி கம்பிகள் போடப்பட்டிருந்தன, அதனால் கவலையில்லை. மென்மஞ்சள் சோடியம்விளக்குகள் தூர தெரிந்தன, பெரும்பாலும் வெளியே நிற்கும் வேப்பமரம் நிறம் தாழ்ந்து கருமையாகவே இருந்தது.

கோள்களைக் கவனிக்கும் தொலைநோக்கு கருவியுடன் இணைக்கப்பட்ட ஸ்பெக்ட்ரோமீட்டரில் இருந்து கணினிக்கு அனுப்பப்பட்ட டேட்டாவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒலியெட்டா இடத்தில் இருக்கும், பூமியிலிருந்து தள்ளிப்போகும் கோள் சிகப்பாக தெரிந்தது.

சில நிமிடங்களில் அவன் வந்து சில அச்சடித்த பக்கங்களைத் தந்தான். அவன் கைகள் கொடுப்போமா வேண்டாமா என்பதுபோல் சற்றே தவித்து, பின்னர் பின்வாங்கிக்கொண்டன.

“இன்ட்ரோ சாப்ட்டரோட டிராஃப்ட்.”

அலைகளின் வகைப்பாட்டியல் என்று ஏதாவது வற்றலாக இருக்கும் என்று எண்ணி வாங்கி, என் கண்களை ஓட்டினேன். ஒரு கேள்வியோடு தொடங்கியது: ”மெய்மையை அளப்பதென்பது புலனுணர்வை நம்புவதா? புலனுணர்வு என்பதுதான் மனிதரின் வரலாறா?”

”கருவானில் வெந்தீற்று மின்னியது. எதுவும் யாரும் கேட்பதற்கில்லாத போது இடி ஒலித்தது. கேட்காமல் போன ஒலி, ஒலித்ததாகுமா என கேட்பதற்குகூட யாருமில்லை. ஆதலால் ஒலி அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தது. இந்தப் பந்திற்கே  உரிய தனித்தன்மையென இருந்த வளிமண்டலம், அதைத் தனக்குள்ளேயே வளைத்து ஒலித்து பரப்பிக்கொண்டிருந்தது.”

இயற்பியல் டெக்ஸ்ட் போன்றே தெரியவில்லை. தொடர்ந்து படித்தேன்.

”பெய்யல் நில்லாது பொழிந்தது மழை. எப்போது தொடங்கியது எப்போது நிற்கும் என காலமறியாது இந்த எரிகோளத்தைத் தணியவைக்க விடாமல் துளிதுளியாய் தாளமெழுப்பிக்கொண்டிருந்தது. நெருப்பின் மீது விழுந்தபோது எழுந்த ஒலி. அது பாறையாக மாறிய பின்னர் எழுப்பிய ஒலி. பின்னர் துகள்களாக ஆனபோது எழுந்த ஒலி. கடலாக நீர் நிரம்பியபோது உண்டான ஒலி. அதற்கு பெயரொன்று கிடைத்ததா அல்லது எவரும் கேட்காத ஒலி ஒரு மொழியை நாடியதா. உள்வாங்க எச்செவியும் செதுக்கப்படா காலத்தில் காற்றே தன் உயர்வும் தாழ்வும் என சுற்றிக்கொண்டிருந்தது.”

”தீப்பிழம்புப்பந்தின் மீது பாறையடுக்குகளின் போர்வைகள் நிறைந்து நிறைந்து நிலம் உண்டானது. ஒளிக்கதிர் அதனைக் கண்டால் வெட்கப்படும் என நினைத்து நீர்பொழிந்து அதைத் திரையென மறைத்து வைத்தது. இவ்வாறு, உயிர் என ஒன்று தோன்றாததால் உயிரின்மை என எதுவும் இல்லா காலத்தில், மென்சூடுகொண்டு அணைத்து எரியையும் நிலத்தையும் நீரையும் வளிமண்டலம் அகத்தே காத்துக்கொண்டது. ஏற்றமும் இறக்கமும் கொண்ட ஒலிகளையே தன் உயிராறு என அது தன்னைத் தகவமைத்துக்கொண்டது. நில்லாமல் ஓடும் பூமி இவ்வாறு வழங்கலாயிற்று.”

நான் எதுவும் சொல்லவில்லை. இது என்னவாக இருந்தாலும், வாசிப்பதை நிறுத்த விரும்பவில்லை.

”நீரில் நெளிந்து முதலுயிர் தோன்றி இருளே வழியாக நீந்தின. இருளை உணர்ந்ததா ஒலி? ஒளியை நோக்கியதா விழி? ஒருநாள் ஓருயிர், உடலில் சிறுகுழியைக் கண்ணென வளர்த்து ஒளியை வழியாய் கொண்டது. நீரின் ஒலியொன்றே ஊடுருவும் வேளையில், பின்னொருநாள் நீர் சற்று வற்றி நிலத்தின் மேனி வெளிபட்டது. உயிர்கள் முதன்முதலாக நிலத்தில் பாய்ந்து இறங்கின. அங்கே, குதிக்கின்ற ஒலிகள், தவழும் ஓசைகள், ஓடும் சத்தங்கள்—இவை அனைத்தும் புதிய ஒரு மொழியை உருவாக்கின.”

”இருட்டின் நடுக்கத்தால் எழுந்த ஒலி, மின்னல் ஒளியாய் பிறந்தது. முகத்தைக் கண்ட தீ, மிரட்டியது. வெண்ணிறங்கொண்டு பளபளத்தது. பின்னர் செந்நிறமாய் எரிந்தது. இருளில் மஞ்சளாய் மிளிர்ந்தது. தீயால் இருள் ஒளிர, அதில் ஓர் நாற்கால் மாவின் நிழலால் ஒளி மறைந்தது. வேட்டையாடும் ஓசை ஒலித்தது.”

”மலைச்சிகரம் கடந்துவந்தவுடன் வெண்மையாய் பனிப்புகை படர்ந்தது. அடியோசையின் பின்னே நிலத்தில் பதிந்த ஒளிக்கோடு நீலமென நீண்டது. அவ்வொளியைத் தொட்டவுடன் அச்சமோ கைகூப்பலோ.”

மறுபடியும், ஒரு பிஸிக்ஸ் தீஸிஸில் என்ன இதெல்லாம் குப்பை என்று என் மனம், அதைத் தூக்கியெறியச் சொல்லி வெம்பியது—பிளேட்டோ எழுதுன மாதிரி இருக்கு. பேப்பர்களைத் கசக்கிப்போடலாம் என்று நினைத்தாலும், ஏதோவொன்று என் கையை அசையாதவாறு செய்துகொண்டிருந்தது, மேலும் தொடரச்சொன்னது.

”தங்களுடைய மலையைக் காப்பதற்காக, கடந்த இரண்டு முழுநிலவுகளில் போர் நடந்தது. இருபது ஓலைக்குடில்கள் கொண்ட ஒரு குடி. அவற்றைச் சுற்றிலும் மூங்கில் கம்புகளால் ஆன தடுப்புச்சுவர். நடுவே, மூங்கில் கம்புகளை உயர்த்தி கட்டிய கண்காணிப்பு நிலை. சின்ன வயதிலிருந்தே புல்லிழைகளை அம்புகளாய் வேல்களாய் பயன்படுத்தி மற்ற சிறுவர்களோடு விளையாடும் பழக்கம் உள்ள இளையோர். குடிமூத்தோர் தொண்டையிலிருந்து வல்லொலி எழுப்பி தம் ஆட்களை சரியான திசையில் அனுப்பி பொருத வைத்தப்பின்னும், முதற்போர்ச் சந்தித்த அந்தப் பிள்ளை மாண்டது. மெல்லொலியெழுப்பி, குழந்தையைச் சூழ்ந்து அனைவரும் கூடினர். சங்குகளான மாலையைக் கழுத்துக்கு அணிவித்தனர். ஒளியிழந்த கண்ணை மூடினர்.”

”கழனி கயல்களுக்கு மத்தியில் பச்சை நாற்றுகளின் இளமை ஒளிர்ந்துகொண்டிருந்தது. நாற்று நடும் கைகள் தாளம்கொண்டன. குரல்கள் ஒலித்தன; உயர்ந்தும் குறுகியும், பின்னர் திரண்டும் அவை பாட்டாக ஒலித்தன. அந்த வழியே, ஒலி ஒன்று மொழியை நோக்கி பயணமாயிற்று.”

“கிளிகள் கூடி ஊரெங்கும் பறந்து ஊர்ஊராக சுற்றி நிலம் பல கடந்து தங்கள் எழுதாமொழிகளைப் பரப்பின. மக்கள், பல முறைகளான ஒலிகளை, இதுவே இவ்வொலி என உருவப்படுத்தி, ஒலியை ஒளிவழியே ஒழுங்குபடுத்தும் முறையைக் கண்டுகொண்டனர். ஒலியையும் ஒளியையும் அருகருகே வைத்தனர். அடைப்பொலி மெல்லொலி நீரொலி இழையொலி என வகைப்படுத்தி, உடலல்லால் ஒலியேது என உயிரூட்டும் ஒலியையும் சேர்த்து வரிசைபடுத்தினர். இவற்றில் இணைய முடியாத ஒலியும், எழுத முடியாத எழுத்தும் மிஞ்சின.”

என் முகத்தில் புன்முறுவல். என்னால் முடிந்த தமிழ் உச்சரிப்பில் சவுண்டும் ஒலிதான், லைட்டும் ஒலிதான். ஆனால் அதுவொன்றும் குற்றமில்லை என்றும் தோன்றியது.

”சொல்மொழி வகைமை அமைந்த பிறகு, இசைமொழி வகைமை அமைக்கலாயினர். இசை மொழியாக விரிய, சொல் இசையாக மலர்ந்தது. கழனிப்பாடல் வேட்டைப்பாடல் மீன்பிடிபாடல் பல கண்டு, படிகள் ஐந்தென முதலில் வரையறுத்தனர். மனம் மயக்கும் முல்லையாய் மோகனமாய் இசை மிளிர்ந்தது. மேலும் பாடல் பல கேட்டு, வானில் மழைவில் நிறங்கள் கண்டு, சுரங்கள் ஏழென உயர்த்தினர். வளைவும் குழைவும் இல்லாமை உணர்ந்து, இழைபோல் ஒலிக்கும் வகைமையும் சேர்த்தனர்.”

“தீ எழுப்பி, செம்மை பூத்து, சங்கம் ஒலித்து, ஒரு குரலில் பலவோசைகளென சரணடைந்தனர். செம்பு உருக்கி, களிமண் மெழுகில் ஊற்றி, பொன்னென வார்த்து, மேனி கண்டு, சொல்மாலை சேர்த்து, பண்ணைக் கிளர்த்தி, ஒளிகண்டு ஒலிகேட்டு, கண்மழை கொட்டி, அடிசேர்ந்தொழுகினர்.”

மேலும் வாசிக்க வாசிக்க, வரிகள் இப்போது அவனுடைய தனி அனுபவங்களாக விரிந்தன. ஒருவேளை பிரியாவிடையா. என் கைவிரல்கள் தாள்களை மேலும் இறுகியழுத்தின. அதற்கு மாற்றாக, என் மனம் மேலும் இளகியது.

”இதோ இன்று நான் இங்கு இருக்கிறேன். இசை சிகப்பாக எனக்குள் எரிகிறது. பாட்டு நீலமாக என் நரம்புகளில் பாய்கிறது. ஒலி ஒளி, அவை தனித்தனியாக உண்டா? பலமுறை என்னையே கேட்டுக்கொள்வதுண்டு. ஏதோ ஒரு காலத்தில், விழியென செவியென, உயிர்கள் இருவேறு வழிகளில் உணர்ந்தன. அவற்றின் இடையில் பிரிவொன்று பிறந்தது. நம் மூளை இன்று அவற்றை இருவழிகளில் எடுத்துக்கொள்கிறது. ஆனால், அவ்விரு பகுதிகளும் அருகருகேதான் உள்ளன. தங்களை ஒன்றென கருதி, அவ்வப்போது கைகுலுக்கி, விரல்கோத்து, ’நீயறியும் பண்பையே நானும் உணர்கிறேன், சற்றே வேறாக’ என எனக்கு அவை உரைத்துக்கொண்டிருக்கின்றன. ”

எப்போதும் நான் வியந்த அவன் இசைப்புலமைக்கான காரணம், இப்போது ஏன் என்று எனக்குத் தெளிவது போன்று தோன்றியது.

”புதிதாக வாங்கிய டேபிளின் மீது ஓய்ந்திருந்த பழைய காலத்து கிராமோபோன் என்னை இழுத்தது. சென்று, அதன் அருகே அடுக்கப்பட்டுள்ள கருநிற வட்டு ஒன்றை எடுத்து, அதில் பொருத்தி, மெதுவாக ஓடவிட்டேன். அதன் மேனி வழவழப்பாக ஒளியைப் பிரதிபலித்தது. என் பார்வைக்குப் புதிராய், மேடு பள்ளம் எதுவும் இல்லாமல் நேர்த்தியாக இருந்தது. நான் கிராமபோன் ஸ்விட்சை இயக்கியவுடன், வட்டு சீரான வேகத்தில் சுழல ஆரம்பித்தது. மெல்நுனி ஊசியுள்ள கைப்பிடியை மெதுவாக இழுத்து வட்டின் ஓரத்தில் வைத்தேன். கண்ணறியா மேடு பள்ளங்களில் கூர்நுனி ஊசி உரசிச் சென்றது. அதன் பயணத்தில், வட்டின் அகத்தே நிறைந்துள்ள ஒலி, உருவம்கொண்டு அலையதிர்ந்து அறை சூழ்ந்தது. வளிவழி வரும் பாடல் மனிதர் குரல்வளை எழுந்த இசையென கேட்டது.”

படிக்கப் படிக்க என் மனத்திற்குள்ளும் அதே பாடல் எழுந்து வந்தது, எந்த புறக்கருவியும் இல்லாமலேயே. என்னால் ஒரு வரிகூட ஒப்பிப்பதுபோலல்லாமல் பாட முடியாது, ஆனால் எப்படி என் மூளை அப்பாடலின் ஒவ்வொரு அலகையும் மீட்டெடுக்கிறது என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. மூளையின் அகத்தில் உள்ள இசையை என் கைவிரல்கள் தாளம் போட்டன.

தொடர்ந்து வாசித்தேன்.

”எனக்கு, குரலுடன் சேர்ந்து ஒலிசூழொளியாக மெல்ல சிகப்பு எழுந்தது. சட்டென நாவில் விழுந்த பனிச்சுவைபோல குளிர்ந்து ஒலித்தது. பாடல் வருடவருட மஞ்சளும் பச்சையும் என கதிரும் வயலும் என மெல்ல ஆடியாடி தவழ்ந்து, இசை என்னை அணைத்தது.”

கிராமோபோன் மனத்தில் ஒலிக்க ஒலிக்க, இந்த ஆய்வுக்கூடத்தில் உள்ள கருவிகளின் முட்கள் அதை எதிரொலிப்பது போல், எனக்குத் தோன்றியது.

என் கண்கள் எழுத்துகளாக வாசிப்பதைவிட்டு தனிச்சொற்களைவிட்டு, பக்கங்களில் எழுதியவற்றை வரைந்த படத்தைப் பார்ப்பதுபோன்று தொடர்ந்து வேகமாக படித்தன.

“பல்லவியிலேயே வளிவழி எழும் பாடல் என குரல் தொடர்ந்தபோது சிகப்பு புகைமூட்டமாக ஆகியிருந்தது. ஒருவிதமான மென்வெம்மை சூழ்ந்தது. புகைமூட்டத்துக்கு ஊடே ஒவ்வொரு குரல் நெளிவுக்கும் மஞ்சள் கம்பிகள் வளைந்து பறந்தன. தாளமிடும் பக்கவாத்திய இசை அங்கங்கே ஊதா நிற புள்ளிகளாய் தெரித்தன.”

“புகைமூட்டம் உருவெடுத்து தேன்கூடாக மாறியது. என்னைச் சுற்றிலும் ஊதாநிற தேனீக்கள் பறந்துகொண்டிருந்தன. தங்கக் கம்பிகள் சுருள்சுருளாக என் மேனி மீது பட்டு உடல் முழுக்க சிலிர்த்து புதுவித இனிமையை உணர்ந்தேன். சரணம் முடிந்து பல்லவி ஆரம்பிக்கும்போது, வளிவழி எழும் பாடல் என்ற வரியே சற்றே வேறு சுருதியில் தொடங்கியபோது தங்கக் கம்பிகள் சற்றே பச்சை நிறங்கொண்டன.”

“காற்றினிலே என நீண்டு அளபெடுத்து இன்னிசை முடிந்தது. சுரம் நிறமானது. நிறம் வெள்ளமானது. மொழியையும் விழியையும் உள்வாங்கிய ஓர் புலனுக்குள் சென்றது.”

என் ஆழ்வாசிப்பை ஒரு கூரொலி உடைத்தது—ஜன்னல் வெளியில், வாயை வட்டமாக விரித்துத் திறந்து கத்திய ஒரு குரங்கு. படபடத்துப்போனேன்.

“ஆரஞ்சு கலர்,” நஃபீஸ் மென்மையாகச் சொன்னான், தனக்குள்ளேயே பேசிக்கொள்வது போன்று. அவன் அருகில் நின்றிருப்பதை அப்போதுதான்  உணர்ந்தேன்.

எங்கள் கண்கள் சந்தித்தன.

000

விஜய் ரெங்கராஜன்

விஜய் ரெங்கராஜன், இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வரும் எழுத்தாளர். அமெரிக்கா கலிபோர்னியா வளைகுடா பகுதியில், கணினி பார்வை - செயற்கை நுண்ணறிவு துறையில் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.