ச. அர்ஜூன்ராச் கவிதைகள்

ச. அர்ஜூன்ராச் கவிதைகள்

1

காட்சியில் இன்னொரு இன்னொரு காட்சிகள்
___________

உதவியின் சங்கிலித்தொடர்தான்
மனித சென்மமென வேறுவழியின்றி தெரியவந்தபோது

யாரும் யார்மீதும்
சொல்ல முடியாத குறைகளை
காட்டிக்கொள்ள மாட்டாத பெருமைகளை மண்ணில் போட்டு வெறுங்கையோடு கலைந்துசென்றனர்

அப்போது முதல்
எல்லோரையும் புரிந்துகொள்ள
என்னுள் உண்டானதுதான்
ஒரு காட்சியிலிருந்து
இன்னொரு
இன்னொரு
காட்சிகளைத் திறந்து பார்க்கும் பேராவல்

மாலை வெயில்
மாலை நிழலாகிக்கொண்டிருக்கும் வெளியில்
இரயில் ஓடிக்கொண்டிருக்கிறது

எதையும் சம்பாதித்துக்கொள்ள முடியாத காட்சிகள் விரியத்துவங்கின எனது ஜன்னலில்.

=====

2.


சுதி சுத்தமான பாடல்
==================

எனக்கு எல்லாம்
கேட்டப் பாடலாக இருக்கிறது

எல்லா உணர்வுகளும் தேய்மானமடைந்தார் போல் படுகிறது

பிடித்தப் பாடல்களையெல்லாம்  அத்தனை உணர்ச்சிக்கும் ஒப்பேற்றி சலித்துவிட்டேன்

இனி
பண்பின் ஒரு சொல்லாக அல்லாமல்
புதிதான பாடல் என ஒன்று  தலைகுப்புற வந்து விழாவே விழாதா ?

ஒரு புதிய பாடலை படைக்க
நான் இசை ஞானமற்றவன் என்பதால் வந்த துயரிதுவா

பிதற்றி ஓய்ந்து
மெளனத்தின் அடர்த்தியானதொரு சமயம்

பாடல்களுக்கே ஆட்டி ஆட்டி பழக்கப்பட்ட தலை
பாடல் கேட்பதுபோல் ஏதோ  கருத்துக்கு
அசைத்து அசைத்துக் கொடுப்பதை  கவனித்தேன்

இதுவரை ஒருபோதும் குரல்வளைகளிலிருந்து ஒலிக்காத புதிய ஒன்றை நன்றாக ரசிக்க வருகிறது

எதற்கும் வணையாமல்
குழையாமல்
தாளம் போடாமல்
தலையாட்டுவது  பற்றி நன்றாக இருக்கிறது

இது யாரும் இயற்ற முடியாப்
பாடலானாலும் சரி
கேட்கவும் கொண்டாடவும் ஒன்றுமில்லை யானாலும் சரி

வெறுமையின் சுதிசுத்தமாக உள்ளதால்
சொல்ல வேண்டியுள்ளது
இது என் பாடலேதான்

=====

3

அழகு யாரையும் விட்டுத்தருவதில்லை
°°°°°°°°  °°°°°°°°°°°°°   °°°°°°°°°°°°°°°°°°°°°°
உன் ‘கூந்தல்’ தான் உன்னிடம்
பிரதாபமான தனிப்பேரெழில் என்றான்

“ஓ… அப்படியா” என்றாள்

முடி காணிக்கைத் தந்து
சரியாக வருடம் பூர்த்தியுராத சிகை கொண்டிருந்தவளின்
பின்முதுகை எப்போதும் நோட்டமிடுவான்

சில பூச்சூட்டும் கனவுகளை காண்பான்
அவன் விருப்ப நிமித்தமே

ஒருநாள்
ஈரத்தலையில் துண்டை முடிந்து
இல்லாதக் கூந்தலை வணைந்து
ஒரு கொண்டை போட்டிருந்தவளைப் பார்த்தான்

அப்போதிலிருந்து விடாமல் உபதேசித்துக்கொள்கிறேன்

“அழகு யாரையும் விட்டுத்தருவதில்லை
அது எப்போதும் யாரையும்  விட்டுத்தருவதில்லை “.

====

4

பயல் குடுமி இன்னும் நம் கையில்தான்
____________________________________________

இன்றோடு கொசுவை அடித்து  நசுக்கி ஒழித்துவிட்டதாக
அல்லது
கைகள் கொட்டிக் கொட்டிச் சலித்துவிட்டதாக
நம்பிக்கொள்வது மாதிரி

உத்திரவாதமாக ஏதேனும் ஒரு முடிவை தெரிவு செய்
நீ தூங்க வேண்டாமா ? என்றது
நாளையப் பணி பீடிப்பு

இது உன்னால் எடுக்கப்பட்டதாக இருக்கட்டுமென்ற
அதன் கருணைமிகு தந்திரம்
உனக்குப் புரிபடவில்லை

பகிரங்கமாக  உன்னால் ஆகாத ஒன்றோடு
நீ போராடவில்லை

அந்த திடுக்கிடுதலையொட்டிதான்
உன் ஊழியம்  ஒருமுறை சோதிக்கப்பட்டது

வேலை நிமித்தம்:
காலை 7 மணிக்கு இரயிலை தவரவிட்ட கனவு
அதிகாலை 5.20க்கு அலாரத்தை விட கவனமாக வரவழைக்கப்பட்டதுமக்கு.

சபாஷ் வெற்றிகரமாக விழித்துவிட்டாய்
வாழ்த்துகள் ஊழியனே.


====

5

430 ரூபாய் நுகர்வு விளையாட்டு

யாரையும்  பழிவாங்கவே முடியாத வாழ்வில்
உடனடியாகக் காரியம் முடிக்க ஒரு வாய்பென
புதிதாகக் கொசுமட்டை  வாங்கினோம்

வாங்கிய இரவு
எங்கள் மூவரோடு  எங்கள் உறக்கமும் சேர்ந்துகொள்ள
தேர்ந்த வெடிகுண்டு சோதகராக மாறி
அதன் நுகர்வை கொண்டாடினோம்

பிறகு நாள்கள் செல்ல
தூங்கும் வரை மகளும்
கைபேசியின் மின்திரன் சுண்டும்வரை மனைவியும்
முழிப்பு வரும்போதெலாம் நானும்

கைகளை கொட்டோ கொட்டென்று கொட்டி
கிடைத்தக் கொசுக்களை வெறியோடு கொன்றோம்

பின்னர்
அதன் சடலங்களை பொறுக்கியெடுத்தோம்
தீ மிதி போன்ற மட்டை மீதெறிந்தோம்

படபடவென பட்டாசாகப் பொறிய
வீட்டை நன்கு திருஷ்டி கழித்து விளையாடினோம் இரா தோறும்.

=======

6

உன்னுடையதும் என்னுடையதுமான
பெருநகர உடல்
_________________

இப்பெருநகர உடலில்

நானொரு கையடிக்கத்தெரியாதச்
சின்னஞ்சிறு கை
கையடித்தே ஆற்றுப்படும்  உடல் கிடைக்காத உடல்

பலவந்தமாய் தலைமயிராய்ந்து
ப்ளோ ஜாப் செய்யவைக்கும் வாய்
பணிவதே வழியென குணியுந்தருணம்
குலை நடுங்க
மாங்கு மாங்கென வாங்கும் சூத்தடி.


======

7

நகரத்தின் மையத்தில் பூத்திருந்த தூக்கம்


திரண்ட வெளிச்சம் அணைந்தார்போல
வெளியின் சர்வ ஓசை அடங்கினார்போல
நீர் சுண்டி
நீராடையானது மாதிரி
நகரத்தின் மைய நடைபாதையில்
பூத்திருந்தது ஒரு மத்ய தூக்கம்

கொளுத்தும் பகலோ
ஒன்றும் சொல்லவில்லை

ஒரு ‘ ஈ ‘ மாதிரி இறங்கி

சிசுவின் கன்னம் அலுங்காது இடும் முத்தமென வந்து
தானும் படுத்துக்கொண்டது.

=====

7

பார்ப்பதற்கே மிகத் துக்கமாக
சின்னஞ்சிறிதாக
வெகு சாந்தமாக
நல்ல தனிமையில் எறிகிறது
ஏழை எளிய கோபமொன்று.

======

8

சிறிய சிறிய ஆடைகளை காவல் புரியும்
பெரிய பெரிய ஆடைகளே
நீங்கள் தான்
நீங்கள் தான்
எல்லாவற்றுக்கும் காரணம் !!…

=====

ச.அர்ஜூன்ராச்

சமகாலத்தில் பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. "ராஜ Single " கவிதை தொகுப்பின் ஆசிரியர்.

3 Comments

  1. அனைத்தும் சிறப்பு. அர்ஜுன் ராச் கவிமொழி மேலும் நுண்மையாகவும் பல்வேறு பரிமாணம் கொண்டதாகவும் மெருகேறி உள்ளது.

    • வாசித்து கருத்து பகிர்ந்தமைக்கு
      மிக்க நன்றி ரகு.
      ❤️

  2. வாழ்த்துக்கள், இந்தக் கவிதைகள் மிகவும் பிடித்திருக்கிறது.

உரையாடலுக்கு

Your email address will not be published.