ஆற்றல் சிதைந்த சமூகம் : பியூங்-சுல் ஹான்

தமிழில் : விவேக்

Byung-Chul Han. Courtesy : The Guardian

குறிப்பு : தத்துவவாதியும் கலாச்சாரக் கோட்பாட்டாளருமான பியூங்-சுல் ஹான் (Byung-Chul Han) (1959-), தென் கொரியாவை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார். பெர்லின் கலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். இவருடைய எழுத்துக்கள், நவதாராளவாதம் (Neoliberalism) சமூகத்தின்மீதும் தனிநபரின்மீதும் ஏற்படுத்தும் தாக்கங்களையும் விமர்சிப்பதையும் மையமாகக் கொண்டவை. ஜெர்மன் மொழியில் எழுதினாலும், அவர் நூல்கள் பல நாடுகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான மருத்துவ சிக்கலாக பார்க்கப்படும் மன அழுத்த நிலைக்கு, நோய் எதிர்ப்பியல் சார்ந்த மரபான மருத்துவ அணுகுமுறையை தாண்டி அதற்கு ஒரு துத்துவார்த்தமான கண்ணோட்டத்தை பியுங்-சுல் ஹான் தன் “ஆற்றல் சிதைந்த சமூகம்” (Burn out Society) நூலில் வழங்குகிறார். அந்நூலின் முதல் அத்தியாயமான “நரம்பணுக்களின் வலிமை” இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


நரம்பணுக்களின் வலிமை

ஒவ்வொரு காலக்கட்டமும் தனக்கே உரித்தான தனித்துவமான இடர்பாடுகளை கொண்டுள்ளது. இதற்கு முன்னால், நுண்ணுயிர்களின் (bacteria) காலகட்டம் ஒன்று நிலவியது; அது நுண்ணுயிர்கொல்லிகளின் (Antibiotics) கண்டுபிடிப்புடன் முடிவிற்கு வந்தது. சளி-காய்ச்சல் தொற்று குறித்த பரவலான அச்சம் இருந்தாலும், நாம் வாழ்வது கிருமித்தொற்றின் (Viral) காலக்கட்டத்தில் அல்ல. நோயெதிர்ப்பு (immunology) தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக அந்த கட்டத்தை கடந்துவிட்டோம். நோயியல் (pathology) பார்வையில், இருபத்தியோரம் நூற்றாண்டின் இந்த தொடக்க காலம் நிர்ணயிக்கப்படுவது, நுண்ணுயிர்களால் அல்ல; நச்சுக் கிருமிகளாலும் அல்ல; மாறாக, நரம்பணுக்களால். மன அழுத்தம் (depression), கவனக் குறைவின் மிகையியக்க கோளாறு (ADHD), இருமுனையப் பிறழ்வு (Bipolar Disorder) மற்றும் ஆற்றல் சிதைவு (Burnout Syndrome) போன்ற நரம்பியல் நோய்கள், இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தைய நோயியல் பரப்பை தீர்மாணிக்கின்றன. இவை தொற்றுகள் (infections) அல்ல; அடைப்புகள் (infarctions); நோயெதிர்ப்புக்கு ஊறு செய்கிற, உடலுக்கு அன்னியமான ஏதோவொன்றின் எதிர்மறை (negativity) அம்சத்தை இவை பின்பற்றுவதில்லை. மாறாக மிகையான நேர்மறை (positivity) அம்சத்தால் உருவாகின்றன. விளைவாக, அன்னியமானவற்றை எதிர்த்து போராடுகிற அனைத்து தொழில்நுட்பங்களிடமிருந்தும் உத்திகளிடமிருந்தும் இவை தப்பித்துவிடுகின்றன.

கடந்த நூற்றாண்டு நோய் எதிர்ப்பின் காலக்கட்டமாக இருந்தது. அந்த காலகட்டமானது, அகத்துக்கும் புறத்துக்கும் நடுவே, நண்பனுக்கும் எதிரிக்கும் நடுவே, தனக்கும் பிறருக்கும் நடுவே தெளிவான வேறுபாட்டை வகுக்க முற்பட்டது. பனிப் போரும் (Cold War) நோய் எதிர்ப்பு பாணியையே பின்பற்றியது. உண்மையில், கடந்த நூற்றாண்டின் நோய் எதிர்ப்பியல் கருத்தோட்டம், பனிப் போரின் மொழியல் வழநடத்தப்பட்ட ஒன்றே. முற்றிலுமாக, அது ஓர் இராணுவ கொள்கை போலிருந்தது. தாக்குதலும் தற்காப்புமே நோய் எதிர்ப்புச் செயல்பாட்டைத் தீர்மானித்தன. சமூக வரம்புகளைத் தாண்டி, ஒட்டு மொத்த வாழ்க்கையையும் தீர்மானித்த இந்த நோய் எதிர்ப்பு அமைப்பு ஒரு புலப்படா பகுதியை தன்னில் கொண்டிருந்தது: அதாவது அந்நியமாகத் (alien) தோன்றும் அனைத்தும் உடனடியாக தாக்கி விரட்டியடிக்கப்பட்டன.

நோய் எதிர்ப்பு சார்ந்த தற்காப்பு முறையை பொருத்தமட்டில், அன்னியமான எதுவும் இலக்கிற்குரிய ஒரு பொருள். எந்த விரோதமான நோக்கங்களும் இல்லாவிட்டாலும், எந்த ஆபத்தையும் விளைவிக்காவிட்டாலும், அதன் மற்றமைத்தன்மை காரணமாகவே அது அழிக்கப்பட வேண்டும்.

நோய் எதிர்ப்பியல் விளக்க முறைகளை, ஒரு சமூகம் வெளிப்படையாக பயன்படுத்துவது பற்றிய உரையாடல்கள், அதிகரித்தவண்ணம் இருப்பதற்கு சமீப காலங்களே சாட்சி. நோய் எதிர்ப்பியல் உரையாடல்களின் செலவாணியை வைத்து, முன்பு எப்போதைக் காட்டிலும் , இப்போதே ஒரு சமூகம் நோய் எதிர்ப்பியல் முறைகளில் ஒருங்கி அமைந்திருப்பதாக பொருள் கொண்டுவிடலாகாது. ஒரு கருத்தோட்டம், ஆய்வுக்குரிய பொருளை வழங்கும்பட்சத்தில், பெரும்பாலும் அதன் முடிவு நெருங்கிவிட்டது என்றே பொருள்.

இப்போது கொஞ்ச காலமாகவே, ஒரு கருத்தோட்ட மாற்றம் (paradigm shift) அணுகிக் கொண்டிருப்பதை, கோட்பாட்டாளர்கள் குறிப்பிட தவறுகின்றனர். துல்லியமாக, இந்த கருத்தோட்ட மாற்றம் நிகழ்ந்துக் கொண்டிருந்த வேளையில்தான் பனிப் போர் முடிவுக்கு வந்தது. தற்காலச் சமூகம், மேலும் மேலும், நோயெதிர்ப்பியல் ரீதியான பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைப்பின் திட்டத்திலிருந்து முற்றிலுமாகத் தப்பிக்கிற, ஒரு தனித்த கூட்டமாக உருவாகி வருகிறது. மற்றமைத்தன்மை (Otherness), அந்நியத்தன்மை (Foreigness) ஆகியவை மறைந்து போவதையே இது குறிக்கிறது.

நோய் எதிர்ப்பியலின் ஓர் அடிப்படை பிரிவை மற்றமைத்தன்மை பிரதிநிதித்துவம் செய்கிறது. நோய்க்கு எதிரான எந்த எதிர்வினையும் மற்றமைக்கான எதிர்வினையே. எனினும், தற்போது மற்றமைத்தன்மை என்பது வேறுபாட்டினால்(difference) பதிலீடு செய்யப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு செயல்பாட்டை தூண்டாது. உண்மையில், பின்-நோய் எதிர்ப்பிய, பின்-நவீனத்துவ வேறுபாட்டினால் யாரும் நோய்வாய்ப்படுவதில்லை. நோய் எதிர்ப்பியலின் மொழியில், வேறுபாடும் ஒரே விஷயத்தைத்தான் (same) பிரநிதித்துவம் செய்கிறது. இத்தகைய வேறுபாட்டுக்கு அன்னியத்தன்மையின் கூரான கொடுக்கு இல்லை. வலுவான நோய் எதிர்ப்பு செயல்பாட்டை தூண்டுவதில்லை. அந்நியத்தன்மை செயலிழந்து நுகர்வின் சூத்திரமாக உருமாற்றப்படுகிறது. அந்நியமானது, விசித்திரமானதற்கு வழிவிடுகிறது. சுற்றுலாப் பயணி — அதாவது நுகர்வோர் — இனி நோய் எதிர்ப்பியலின் தன்னிலை (subject) அல்ல.

விளைவாக, எஸ்போசிட்டோ (Roberto Esposito) தனது ‘immunitas’ கோட்பாட்டின் அடிப்படையாக, ஒரு தவறான அனுமானத்தை முன்வைக்கிறார் —

சமீபத்திய ஆண்டுகளில்,எந்த தினசரியிலும் தலைப்புச் செய்திகளை பார்த்தால் அவை ஒரே பக்கத்தில் இருந்தாலும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லாத நிகழ்வுகளையே பிரசுரிப்பதாக தோன்றும். ஒரு புதிய தொற்றுநோய் பரவுவதற்கு எதிரான போராட்டம், மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வெளிநாட்டுத் தலைவரை நாடு கடத்த கோருவதற்கு எதிர்ப்பு, சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் தடைகளை வலுப்படுத்துவது, சமீபத்திய கணினி வைரஸை செயலிழக்கச் செய்வதற்கான உத்திகள் , இது போன்ற நிகழ்வுகளுக்கு இடையே என்ன பொதுவான அம்சம் உள்ளது? ஒன்றுமே கிடையாது. மருத்துவம், சட்டம், சமூக அரசியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய தனித்தனித் துறைகளுக்குள் அவை அர்த்தப்படுத்தப்படக்கூடும். இருப்பினும், இந்த வகையான செய்திக் கட்டுரைகளை ஒரே விதமான விளக்கமுறைமைக்குள் வகைப்பாட்டுக்குள் வைத்து படிக்கும்போது விஷயங்கள் மாறுகின்றன. குறிப்பாக, இந்த வேறுபட்ட உரையாடல்களை ஊடறுத்து, அவற்றை ஒரே அர்த்த எல்லைக்குள் கொண்டுவரும் திறனால் அந்த வகைப்பாடு தனித்து தெரிகிறது. அந்த வகைப்பாடுதான்நோய் எதிர்ப்புஅவற்றின் மொழிரீதியான வேற்றுமைகளைத் தாண்டி, இந்த நிகழ்வுகள் அனைத்தும், அபாயத்தை எதிர்கொள்வதற்கான ஒரு பாதுகாப்பு நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கின்றன.”

எஸ்போசிட்டோ குறிப்பிடும் இந்த நிகழ்வுகள் எதுவும், நாம் இப்போது ஒரு நோய் எதிர்ப்பு யுகத்தில் வாழ்கிறோம் என்பதைக் காட்டவில்லை. இன்று, குடியேறி என்று அழைக்கப்படுபவர் கூட, ஆபத்தை விளைவிக்க கூடியதாக அஞ்சப்படும் ஒரு நோய் எதிர்ப்பு மற்றவரோ (Other), அன்னியரோ அல்ல. குடியேறிகளும் அகதிகளும் அச்சுறுத்தல்களாகக் கருதப்படுவதை விட, சுமைகளாகவே அதிகம் உணரப்படுகிறார்கள். கணினி வைரஸ் பிரச்சினை கூட சமூக ரீதியாக பெரிய அளவில் இப்போது தாக்கத்தை வெளிக்காட்டுவதில்லை. எனவே, எஸ்போசிட்டோவின் நோய் எதிர்ப்பியல் ஆய்வு, சமகால சிக்கல்களுக்கு முகங்கொடுக்காமல், கடந்த காலப் பொருட்களை மட்டுமே ஆராய்வது தற்செயலானது அல்ல.

நோய் எதிர்ப்பியல் கருத்தோட்டம், உலகமயமாக்கலின் செயல்திட்டத்துடன் பொருந்தவில்லை என்பது நிரூபணமாகிறது. நோய் எதிர்ப்புச் செயலை தூண்டுகிற மற்றமைத்தன்மை, எல்லைகளின் அழிவுக்கு எதிராக வேலை செய்யும். நோய் எதிர்ப்பியல் அடிப்படையில் ஒருங்கமைப்பட்ட உலகம் ஒரு தனித்துவமான இடவியலை (topology) கொண்டுள்ளது. உலகளாவிய மாற்றங்களையும் பரிமாற்றங்களையும் தடுக்கிற எல்லைகோடுகள், இடமாற்றங்கள், வாசல்கள், வேலிகள், அகழிகள் மற்றும் சுவர்களால் இது அடையாளப்படுத்தப்படுகிறது. வாழ்வின் அனைத்துத் தளங்களையும் ஆட்கொண்டுள்ள பொதுவான வரம்பிலா உறவுகளும், நோய் எதிர்ப்பு திறனால் தடுக்கப்படுகிற மற்றமைத்தன்மை இல்லாததும் ஒன்றையொன்று நிரப்புகின்றன (bedingegn). வெறுமனே பண்பாடு சார்ந்த கோட்பாட்டு விவாதங்கள் மட்டுமல்லாமல், இன்று வாழ்க்கை பற்றிய பொதுவான உணர்ச்சியினையே ஆக்கிரமித்துள்ள, கலப்பாக்கம் (Hybridization) நோய் எதிர்ப்பியலுக்கு நேரெதிராக அமைகிறது.நோய் எதிர்ப்பியல் சார்ந்த மிகையுணர்வு (immunological hyperaesthesis) கலப்பாக்கத்தை ஆரம்பம் முதலே அனுமதிக்காது.

எதிர்மறையின் முரணியக்கமே நோய் எதிர்ப்பின் அடிப்படை இயல்பு. நோய் எதிர்ப்பியலில் மற்றமையானது, தன்னிலையினுள் (own) ஊடுருவி அதை நிராகரிக்க முற்படும் ஒரு எதிர்மறை கூறாகும் (negative). பதிலுக்கு தன்னிலையால் மற்றமையை நிராகரிக்க முடியாதபோது மற்றமையின் எதிர்மறைத்தன்மையால் தன்னிலை குலைந்துவிடுகிறது. அதாவது, தன்னிலையின் சுய உறுதி என்பது நிராகரிப்பை நிராகரிப்பதன் (negation of the negation) வழியாகவே நிகழ்கிறது. நோய் எதிர்ப்பியலின் பாதுகாப்புமுறை, அதாவது, தடுப்பூசி எதிர்மறையின் இந்த முரணியக்கத்தை பின்பற்றுகிறது. நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை தூண்டும் பொருட்டு, மற்றமையின் பகுதிகள் தன்னிலையுள் புகுத்தப்படுகின்றன. எனவே, நிராகரிப்பின் நிராகரிப்பு, மரணத்தின் அபாயம் இன்றியே நிகழ்கிறது. ஏனென்றால் நோய் எதிர்ப்பு அமைப்பு, மற்றமையை முழுமையாக எதிர்கொள்ள நேர்வதில்லை. ஆகையால், சிறிய அளவிலாக, சுயமாய் விதிக்கப்பட்டுக் கொள்கிற, தீங்கு (gewalt), மரணத்தை விளைவிக்கக்கூடிய மிகப் பெரிய ஆபத்திலிருந்து ஒருவரைக் காக்கிறது. இப்பொழுது மற்றமை மறைந்து கொண்டிருப்பதால், எதிர்மறைகள் குறைவாக உள்ள காலத்தில் வாழ்ந்துகொண்டிருகிறோம். ஆகவே, இருபத்தியோராம் நூற்றாண்டின் நரம்பியல் நோய்கள் பின்பற்றுவது எதிர்மறையின் முரணியக்கத்தினை அல்ல; நேர்மறையின் முரணியக்கத்தினை. அதீதமான நேர்மறைக் கூறிலிருந்து (excess of positivity) இந்த நோய்மிகு சூழ்நிலைகள் உருபெறுகின்றன.

தீங்கு என்பது எதிர்மறை கூறிலிருந்து மட்டுமல்ல, நேர்மறையிலிருந்தும் வருகிறது; அது ‘மற்றமையிலிருந்தோ’ அல்லது ‘அந்நியமானவற்றிலிருந்தோ’ மட்டும் வருவதில்லை; ‘ஒன்று போன்றதிலிருந்தே’ (same) வருகிறது. “ஒரே போன்ற விஷயங்களின்படியே வாழ்பவன் ஒரே போன்றவற்றினாலேயே மரிப்பான்” என்று போத்ரியாட் (Baudrillard) எழுதும்போது, ​​இத்தகைய அவர் தெளிவாக நேர்மறையின் வன்முறையினையே கருத்தில் கொண்டிருந்தார். அதேபோல், “அனைத்து சமகால அமைப்புகளும் பெருத்திருப்பது” என தகவல், தொடர்பு மற்றும் உற்பத்தி பற்றி அவர் பேசுகிறார். கொழுப்பு நோய் எதிர்ப்புச் செயலை தூண்டுவதில்லை. இருப்பினும்—இங்கேதான் அவரது கோட்பாட்டின் பலவீனம் அடங்கியுள்ளது—போத்ரியாட், ஒரே போன்றவற்றின் (Same) சர்வதிகாரத்தை நோய் எதிர்ப்பியல் பார்வையிலேயே அணுகுகிறார்:

நோய் எதிர்ப்பு சக்தி, எதிர்ப்பணுக்கள், திசுக்களை வெட்டி ஒட்டுவது , உறுப்பை நிராகரிப்பது இவை பற்றிய அனைத்துப் பேச்சுகளும் இனி யாரையும் ஆச்சரியப்படுத்தக் கூடாது. பற்றாக்குறை காலங்களில் உள்வாங்குவதும், ஒன்றிணைவதுமே விதியாக இருக்கும்; அதீதத்தின் காலங்களில் நிராகரிப்பதும் வெளியேற்றுவதுமே முக்கிய கவலைகள் ஆகின்றன. இன்று, பரவலாகிவிட்ட தகவல் தொடர்பும் அபிரிதமான தகவல் பெருக்கமும் மனிதனின் அனைத்துப் பாதுகாப்பு அரண்களையும் மூழ்கடித்துவிடும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

ஒரே போன்றவை ஆதிக்கம் செலுத்தும் ஓர் அமைப்பில், நோய் எதிர்ப்பின் தற்காப்பினை உருவகப் பொருளில் மட்டுமே பேச முடியும். வலுவான அர்த்தத்தில், நோய் எதிர்ப்பியலின் தற்காப்பு முறையானது, எப்போதும் மற்றமையை அல்லது அந்நியமானதையே இலக்காகக் கொள்கிறது. ஒரே போன்றவை இருக்கும்போது எதிர்ப்பணுக்கள் உருவாவதில்லை. ஒரே போன்றவை ஆதிக்கம் செலுத்தும் ஓர் அமைப்பில், பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துவது அர்த்தமற்றது.

நோய் எதிர்ப்பின் நிராகரிப்பு, நோய் எதிர்ப்பில்லாத நிராகரிப்பு இரண்டையும் நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். பிந்தையது, ‘ஒரே போன்றவற்றின் பெருக்கத்துடன்’ (too much of the same), அதீதமான நேர்மறைத்தன்மையுடன் தொடர்புடையது. இங்கே எதிர்மறைத்தன்மைக்கு எந்தப் பங்கும் இல்லை. இவ்வகை நிராகரிப்பு, தனிப்பட்ட அகவெளியை கற்பனை செய்வதும் இல்லை. இதற்கு மாறாக நோய் எதிர்ப்பியலின் நிராகரிப்போ, அளவுகளை சார்ந்ததன்று. ஏனெனில் இது மற்றமையின் எதிர்மறைக்கூறுக்கே வினையாற்றுகிறது. நோயை எதிர்க்கும் தன்னிலையானது அகவெளியை கொண்டிருக்கிறது. மற்றமையை, அது மிகக் குறைந்த அளவில் மட்டுமே இருந்தாலும்,சண்டையிட்டு விலக்குகிறது.

அதீத உற்பத்தி (Over production), அதீத சாதனை (Over achievement), அதீத தொடர்புறுத்தல் (Overcommunication) ஆகியவற்றிலிருந்து உருவாகும் நேர்மறையின் வன்முறை ‘தொற்றின்’ (Viral) தன்மையுடையதல்ல. நோயெதிர்ப்பியலின் அணுகுமுறையை கொண்டு இதனை விளக்க இயலாது. அளவுகடந்த நேர்மறைக்கு எதிர்வினையாக ஏற்படும் நிராகரிப்பு, நோய் எதிர்ப்பு பாதுகாப்பாக அல்லாமல், நரம்பியல் துன்புறுத்தலின் மறுப்பாக வெளிப்படுகிறது. அதுபோல, மிகை இருப்பின் காரணமாக உருவாகும் களைப்பு, சோர்வு, திணறல் ஆகியவை நோய் எதிர்ப்பு நிகழ்வுகள் அல்ல. இவை அனைத்தும் நரம்பணுக்களின் வலிமையைச் சார்ந்தவை; அது நோயெதிர்ப்பியல் எதிர்மறையிலிருந்து உருவாகாததால், ‘தொற்றுவாத’ தன்மை கொண்டதல்ல.

Jean Baudrillard

வன்முறை (Gewalt) பற்றிய போத்ரியாட்டின் கோட்பாடு, தர்க்கரீதியான தாவல்களாலும் தெளிவற்ற வரையறைகளாலும் நிறைந்துள்ளது; ஏனெனில், அது ‘நேர்மறையின் வன்முறையை’ —அல்லது வேறு சொற்களில் கூறுவதானால், ‘மற்றமைத்தன்மை’ ஏதுமற்ற சூழலில் எழும் ‘ஒரே போன்றதன் வன்முறையை’— நோயெதிர்ப்பியல் சார்ந்த அணுகுமுறை வாயிலாக விவரிக்க முயல்கிறது. எனவே, அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

வலைப்பின்னல்களும் மெய்நிகர்த்தன்மையும் உருவாக்கும் வன்முறை தொற்றுநோய் தன்மையாலானது: மரபணுக்களின் அளவிலும் தொடர்புறுத்தலின் அளவிலுமாக செயல்படுகிற தீங்கற்றதாக தோன்றுகிற அழிவுகளின் வன்முறை அது. ஒரு அர்த்தத்தில், தொற்றுரக வன்முறை நேரடி மோதலாக நிகழ்வதில்லை.நெருக்கம், தொற்றி பரவுதல், சங்கிலி தொடர்வினை ஆகியவை மூலம் செயல்படுகிறது.அதன் குறிக்கோள் மனிதனின் அனைத்து நோய் எதிர்ப்பு சக்திகளையும் அழித்துவிடுவதாகும். வரலாற்றுரீதியான நிராகரிப்பின் வன்முறைக்கு மாறாக, இந்த மிகை நேர்மறையின் வன்முறை புற்றுநோய் அணுக்களை போல முடிவில்லாத பெருக்கம், வீக்கம், மற்றும் பரவலின் வழியாக விரிவடைகிறது. மெய்நிகர்தன்மைக்கு தொற்றுவாத தன்மை உடந்தையாக உள்ளது”.

போத்ரியாட் விவரிக்கும் விரோதத்தின் மரபுவழிப் படி (genealogy of hostility), எதிரி முதலில் ஓநாய் வடிவில் தோன்றுகிறான். அவன் “வெளியே இருக்கும் எதிரி; அவனிடமிருந்து தற்காத்துக் கொள்ள மதில்களும் அரண்களும் கட்டப்படுகின்றன”. அடுத்த நிலையில், அவன் எலியின் வடிவை தேர்கிறான். அடித்தளத்தில் இயங்கும் அவனை சுகாதார வழிகளின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். பின்னர், அடுத்த நிலையில் பூச்சி வடிவில் தரித்த பிறகு, எதிரி தொற்று கிருமியாக மாறுகிறான்: “தொற்று கிருமிகள் நான்காவது பரிமாணத்தில் ஆற்றலுடன் நகர்கின்றன. அவற்றுக்கு எதிராக பாதுகாப்பு அமைப்பது மிகவும் கடினம். ஏனெனில் அவை உடலின் உள்ளேயே வாழ்கின்றன.” இப்போது “ஆவி வடிவில் எதிரி” உருவாகிறான். “மொத்த கிரகத்திலும் ஊடுருவி, தொற்றுகிருமியைபோல அனைத்திலும் நுழைந்து, அதிகாரத்தின் இடைவெளிகளிலிருந்து மேலெழுகிறான்.”

தொற்றுரக வன்முறை, ஓர் அமைப்பிற்குள் ரகசியமான பயங்கரவாதிகளை போல தங்களை சுயமாக நிலைநிறுத்திக்கொண்டு, அமைப்பை உள்ளிருந்தே சிதைக்கும் தனித்துவமான கூறுகளிலிருந்து வெளிப்படுகிறது. பயங்கரவாதம், தொற்றுரகவன்முறையின் முக்கிய வடிவம் என்று உறுதிபடக் கூறும் போத்ரியாட் , அது உலகமயத்திற்கு எதிரான தனித்த கிளர்ச்சி என்கிறார்.

தொற்று வடிவிலும், நோய் எதிர்ப்பியலின் தர்க்கத்தையே, விரோதம் (hostility) பின்பற்றுகிறது: எதிரியாகிய தொற்று கிருமி ஒரு உடலுக்குள் நுழைகிறது; அந்த உடல் நோய் எதிர்ப்பின் வழியாக அதனை எதிர்த்து வெளியேற்றுகிறது. ஆனால் வன்முறையின் மரபுவழி விரோதத்தின் மரபுவழி அல்ல. நேர்மறைக்கூறின் வன்முறை எந்த ஒரு விரோதத்தையும் அனுமாணிப்பதில்லை. எந்த விரோதமும் அதற்கு தேவையில்லை. அது தடைகளில்லாத சமாதனம் நிறைந்த சமூகத்திலேயே படிப்படியாக திறக்கிறது. அதனால், அது தொற்றுரக வன்முறையில் கூடுதலாக புலப்படாத ஒன்றாகவுள்ளது. அது ஒரே போன்றவற்றின், எதிர்மறையற்ற பரப்பில் நிகழ்கிறது. அங்கே அகத்துக்கும் புறத்துக்கும் நடுவே, அன்னியத்துக்கும் சொந்தத்துக்கும் நடுவே எந்த துருவப்படுத்துதலும் நடப்பதில்லை.

அமெரிக்காவில் உள்ள ஓர் அமேசான் நிறுவனக் கிடங்கு. Photo : Andreas Gursky

வன்முறை புதிய வடிவங்கள் எடுக்க, உலகின் நேர்மறையாக்கம், வழிவகுக்கிறது . அவை நோய் எதிர்ப்பியல் ரீதியாக மற்றமையிலிருந்து உருவாவதில்லை. அவை உடலின் உள்ளார்ந்த அடுக்குகளிலேயே உருவாகின்றன. இந்த உள்ளார்ந்த தன்மையின் காரணமாக, நோய் எதிர்ப்பின் பாதுகாப்பு அங்கே நிகழ்வதில்லை. உளவியல் முடக்கத்துக்கு இட்டுச் செல்லும் நரம்பியல் வன்முறை என்பது உள்ளார்ந்தத் தன்மையின் அச்சுறுத்தலே. நோய் எதிர்ப்பில் அன்னியமானவற்றினால் ஏற்படும் அச்சதிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. கிரேக்க தொன்மமான மெடூசா, உச்ச வடிவில் வெளிப்படும், ஒரு நோய் எதிர்ப்பியல் மற்றமை. அழிவின்றி மேற்கொள்ள முடியாத ஒரு தீவிரமான உருமாற்றத்துக்கான சான்று அவள். மறுபுறம், நரம்பணு சார்ந்த வன்முறை அனைத்து நோய் எதிர்ப்பு பார்வைகளிலிருந்தும் தப்பிவிடுகிறது. ஏனெனில் அதற்கு எதிர்மறைத்தன்மை இல்லை. நேர்மறைத்தன்மையின் வன்முறை இழப்பை ஏற்படுத்துவதில்லை; அது நிரம்பச் செய்கிறது; அது விலக்குவதில்லை; தீர்ந்துபோகச் செய்கிறது. அதனால்தான் அது துணையற்ற அறிதலுக்கு புலப்படாததாக இருக்கிறது.

மன அழுத்தம் , கவனக் குறைவின் மிகையியக்க குறைபாடு, ஆற்றல் சிதைவு போன்ற நரம்பியல் நோய்களுக்கு தொற்றுரக வன்முறையை கொண்டு விளக்கம் அளிக்க முடியாது. ஏனெனில் அது அகம் புறம், தன்னிலை மற்றமை என்று நோய் எதிர்ப்பியலின் திட்டவழியை பின்பற்றுகிறது; அது அமைப்புக்கு விரோதமான ஓர் உருமாறிய அல்லது தனித்த இருப்பை அது அனுமானிக்கிறது. நரம்பணுக்களின் வன்முறை, அமைப்புக்கு அந்நியமான எதிர்மறைத்தன்மையிலிருந்து உருவாவதில்லை. மாறாக, அது அமைப்புமயப்பட்ட —அதாவது, அமைப்பின் உள்ளார்ந்த—வன்முறையாகும். மன அழுத்தம், கவனக் குறைவின் மிகையியக்க குறைபாடு, ஆற்றல் சிதைவு ஆகியவை அதீத நேர்மறைத்தன்மையைக் குறிக்கின்றன. ஒரே போன்ற விஷயங்கள் அதிகரிக்கும்போது, தன்முனைப்பு (ego) அதிகமாய் எரிந்து சூடாகிறது. ஆற்றல் சிதைவு நோய் ஏற்படுகிறது. அதிசெயல்பாட்டில் உள்ள ‘அதி’ என்பது ஒரு நோய் எதிர்ப்பியல் வகை அல்ல. அது நேர்மறைத்தன்மையின் பெருக்கத்தைக் பிரதிநிதித்துவம் செய்கிறது.

விவேக்

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இலக்கியம் மற்றும் தத்துவத்தில் ஆர்வம் கொண்டு பயின்று வருகிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop