செவியினித்த காலம் : பெருமாள்முருகன்

திடுமென உருவாகி வடிவம் பெற்ற நூல் இது. இவ்வாண்டு ஜனவரி மாத இறுதியில் எழுத்தாளர் ரா. செந்தில்குமார் அழைப்பின் பேரில் பொங்கல் விழாவில் பங்கேற்க ஜப்பான் சென்றேன். அங்கு வாழும் தமிழர்கள் பொங்கல் விழாவைக் கலை இலக்கியத்துடன் முழுநாள் கொண்டாடினர். பாட்டு ஆட்டம் என்று களை கட்டிய அதில் இலக்கிய முகமாக நானிருந்தேன். பெருவிழாவில் இலக்கியத்திற்கும் ஓரிடம் இருக்க வேண்டும் என்னும் நண்பர்கள் எண்ணம் பெரிது. அங்கே இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் எனப் பலரைச் சந்திக்க வாய்த்தது. எழுத்தாளர் கமலக்கண்ணன், குன்றாளன் உட்படப் பலர் நண்பர்கள் ஆயினர். அப்படிச் சந்தித்த ஒருமுகம்தான் சா. விஜயகுமார். கல்வி தொடர்பாக நான் எழுதும் கட்டுரைகளுக்குப் பாராட்டிப் பின்னூட்டமிடும் தைரியம் கொண்டவர்கள் சிலரே. அத்தகையோர் பெயரை நினைவில் வைத்திருப்பேன். பின்னூட்டம் மட்டுமல்ல. இதழாளர் சமஸ் நடத்திய ’அருஞ்சொல்’ இதழில் ’ஆசிரியரும் கையூட்டும்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன். அதையொட்டி எதிர்வினையாக இன்னொரு கட்டுரை எழுதியவர் விஜயகுமார்.

அவரை ஜப்பானில் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அரசு கலைக்கல்லூரியில் வேதியியல் பயின்ற அவர் முனைவர் பட்டம் முடித்து ஜப்பான் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியும் செய்தி வியப்பைத் தந்தது. அரசு கல்லூரி ஆசிரியரான எனக்கு இத்தகைய கல்லூரிகளில் பயின்று மேற்செல்லும் ஒவ்வொரு மாணவரும் முக்கியமானவரே. விஜயகுமார் ஜப்பானில் இருந்து கொண்டு தமிழ்நாட்டு உயர்கல்வி பற்றிக் கவனித்துக் கவலைப்பட்டு வாசிக்கிறார், எழுதுகிறார் என்பது அதிசயம்தான். உரையாடலின் போது நவீன இலக்கிய வாசிப்பிலும் ஈடுபாடு உள்ளவர் என்பதை அறிந்தேன். ’உயர்கல்வி பற்றி உங்களிடம் ஒரு நேர்காணல் செய்யலாமா?’ என்று கேட்டார். நேரில் காணும் போது இப்படி எதையாவது செய்யும் ஆர்வத்தில் கேட்பவர்கள் பலருண்டு. மாலையில் மலரும் பூ காலையில் சுவடின்றிப் போவது போல அவ்வார்வமும் மறைந்து போகும். அப்படித்தான் ஆகும் என எண்ணினாலும் அவர் ஆர்வத்தைத் தடுக்கக் கூடாது என்பதால் ’சரி’ என்றேன். அப்படி ஆகவில்லை.

ஒன்றரை மாதத்திற்குப் பிறகு அவரிடமிருந்து கேள்வித் தொகுப்பு மின்னஞ்சலில் வந்தது. பெருந்தொகுப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள். ’உங்களுக்கு விருப்பமானவற்றுக்குப் பதில் சொன்னால் போதும்’ என்றார். இளங்கலைத் தமிழிலக்கியம் படிக்க 1983 ஆம் ஆண்டு சேர்ந்தேன். அதிலிருந்து கணக்கிட்டால் மாணவனாகவும் ஆசிரியனாகவும் நாற்பதாண்டுகள் உயர்கல்வித் துறையோடு தொடர்புடையவனாக இருந்திருக்கிறேன். இப்போதும் அத்துறைப் பணியாளனாகவே ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கிறேன். பணிக்காலத்தில் வெறுமனே நானுண்டு என் வேலையுண்டு என்று கடிவாளத்தோடு திரிந்துவிட்டு வரவில்லை. பங்கேற்பவனாகவும் பார்வையாளனாகவும் ஒருசேரச் செயல்படும் படைப்பு மனம் பெற்ற காரணத்தாலோ என்னவோ அத்துறை சார்ந்த மனித இயல்புகள் பலவற்றையும் அறிந்து வைத்திருக்கிறேன். கல்விப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தியிருக்கிறேன். பணி சார்ந்த எல்லா வகைச் செயல்பாட்டிலும் விருப்பத்தாலும் நிர்ப்பந்தத்தாலும் ஈடுபட்டிருக்கிறேன். அத்துறைப் பிரச்சினைகளைச் சந்தர்ப்பம் வாய்த்த போதெல்லாம் எழுதியும் வந்திருக்கிறேன். கற்பித்தல், கல்வி சார்ந்த செயல்பாடுகள், நிர்வாகம் என எல்லாவற்றையும் கண்ட அனுபவத்தோடு வாசிப்பு மூலம் பெற்ற கல்விச் சிந்தனைகளால் சுயபார்வை ஒன்றும் எனக்கென உருவாகியிருப்பதாக உணர்ந்திருக்கிறேன்.

இப்பின்னணியில் கேள்விகளுக்குப் பதில் சொல்லிப் பார்ப்போம் என்று துணிந்து இறங்கினேன். சிலவற்றுக்குப் பதில் எழுதி மின்னஞ்சலில் அனுப்பியதும் ஏதேனும் இணைய இதழில் இதைத் தொடராகச் சில வாரங்களுக்கு வெளியிடலாம் என்னும் எண்ணம் விஜயகுமாருக்குத் தோன்றியது. எனக்கு ஆட்சேபணையில்லை. ’அகழ்’ இதழ் முன்வந்தது. பொதுத்தலைப்பாக வைக்கக் கல்வி தொடர்பான இரண்டு மூன்று பழந்தமிழ் இலக்கியத் தொடர்களைக் கொடுத்தேன். அதில் ’மம்மர் அறுக்கும் மருந்து’ என்பது தேர்வானது.

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து

என்னும் நாலடியார் பாடலின் முடிவுத்தொடர் அது. திருக்குறளைப் போலவே கல்வியின் அவசியத்தைப் பெரிதும் வலியுறுத்திய நூல் நாலடியார். ’கல்வி’ அதிகாரத்தின் பத்து வெண்பாக்களும் பொருள் அடிப்படையில் சிறந்தவை; சொல்முறையில் நயமானவை. ’கல்வி அழகே அழகு’, ’கல்வி கரையில கற்பவர் நாள்சில’ எனப் புகழ் பெற்ற தொடர்களைக் கொண்டவை. ’மம்மர் அறுக்கும் மருந்து’ என்று முடியும் இவ்வெண்பா எனக்குப் பெரிதும் பிடித்தது. முதல் தலைமுறையாக உயர்கல்விக்கு வரும் என் மாணவர்களுக்கு இதை எடுத்துக்காட்டிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதுண்டு.

’இந்தப் பிறவியில் சிறப்பாக வாழப் பயன்படும். பிறர்க்குக் கொடுத்தாலும் குறையாது. தாம் இத்தகையவர் என்று பிறர்க்கு உணர்த்தும். தாம் உயிர் வாழும் அளவும் கெடுதல் தராது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட கல்வியைப் போலக் குழப்பத்தை முற்றிலும் நீக்கும் மருந்து ஒன்றை எந்த உலகத்திலும் நான் கண்டதில்லை’ என்று பெயரறியாக் கவிஞர் கூறுகிறார். இப்பாடலை எடுத்து விளக்கினால் ஒருமணி நேரம் போதாது. சொல்லில் வந்தது குறைவு. சொல்லுக்குள் உறைந்து நிற்பன பெரிது. இந்தப் பிறவியில் சிறப்பாக வாழப் பயன்படும் என்றால் மனிதப் பிறவியின் பயனே நற்செயல்கள் செய்து பிறப்பை அறுக்கும் தெளிவைப் பெறும் வாய்ப்புத்தான். கல்வியைப் பெற்றோர் பிறப்பறுக்கும் பயனை எளிதாகப் பெறுவர் என்று மதக்கொள்கை அடிப்படையில் சொல்லலாம். இந்தப் பிறவிதான் நாமறிந்தது. இதில் எல்லா நலன்களையும் பெற்றுச் சிறப்புற வாழ்ந்தாலே போதும். அதற்குக் கல்வி பயன்படும் என்றும் சொல்லலாம். கல்வியின் பெருமையை எடுத்துப் பேசும் நான்கு தொடர்களையும் இப்படிப் பலவிதமாக விளக்கலாம்.

பயக்குமால், குறைவின்றால், விளக்குமால், கேடின்றால் என ஒவ்வொரு தொடரும் ’ஆல்’ முடிவு பெற்று நயத்தக்க ஓசை பெற்றிருக்கின்றன. ’இம்மை பயக்கும்’, ’ஈயக் குறைவின்று’, ’தம்மை விளக்கும்’, ’கேடின்று’ என்று சொன்னால் போதும். ஆனால் பொருளற்ற அசைச்சொல்லாகிய ’ஆல்’ என்பதை இணைப்பதால் கிடைக்கும் ஓசை இனிது. இப்பாடலை இயற்றியவர் கவிஞர் என்பதற்கு இவ்வோசையே சான்றாகும். பேதமையை நோயாக உருவகித்து அதை வேரோடு கில்லிக் களையும் அருமருந்தாகக் கல்வியைச் சொல்கிறது பாடல். மம்மர் என்னும் சொல்லுக்கு மயக்கம், குழப்பம் என்பன முதன்மைப் பொருள்கள். சூழல் சார்ந்து அதையொட்டிய பொருள்களும் உண்டு. நாலடியாரில் ஈரிடங்களில் இடம்பெறும் இச்சொல் பதினெண் கீழ்க்கணக்கு நூலொன்றாகிய நான்மணிக் கடிகையிலும் பின்னர் தேவாரத்திலும் வருகின்றன. ’மம்மர்’ என்னும் சொல்லே மயக்க உணர்வைத் தரும் தன்மை கொண்டிருக்கிறது. ’மம்மர் அறுக்கும் மருந்து’ என்பது பொருந்தி அமைந்த தொடர். ’மம்மர் அறுக்கும் மருந்து கல்வி’ என்று வருவித்துக் கொண்டால் இத்தொடருக்கு மிகவும் பொருந்துகிறது.

இத்தகைய வளமுடைய பழந்தமிழ் இலக்கியத் தொடர் ஒன்றைத் தலைப்பாக ’அகழ்’ குழுவினர் ஏற்றுக்கொண்டது நற்சகுனம் என்றே தோன்றியது. நேர்காணல் மூன்று நான்கு வாரம் தொடரக் கூடும் என நினைத்தேன். இல்லை, பேசப் பேச அனுமார் வால் போல் இருபத்தொரு வாரம் நீண்டு சுருண்டு அகழில் அடங்கி ஜம்மென்று புத்தக வடிவில் அமர்ந்து கண் சிமிட்டுகிறது. 2022 ஆம் ஆண்டே விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டேன். அரசு, நிறுவனங்களிடம் இருந்து பதவி, பரிசு என எதையும் எதிர்பார்க்கும் மனமோ தேவையோ எனக்கில்லை. எனவே எதையும் வெளிப்படப் பேசும் சுதந்திரத்தை என் மனம் உணர்ந்து அனுபவித்த சுகமான காலமாக இருந்ததால் நெடுந்தொடர் சாத்தியமாயிற்று.

கல்வி தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தாலும் சில சந்தர்ப்பங்கள் அமைந்தால் தான் சில விஷயங்களைப் பொதுவெளியில் பேச நினைவு திறக்கும். விஜயகுமாரின் கேள்விகள் அப்படியான திறப்பைத் தந்தன. அவரது தொடர் வாசிப்பாலும் கவனத்தாலும் உருவான கேள்விகள் ஒருபுறம் என்றாலும் தேடலாலும் தொடர்புகளாலும் தம் அறிவை விரித்துக் கொண்டு உருவாக்கியவை இன்னொரு புறம். கல்வி தொடர்பாக இணையத்தில் தேடி அலைந்து எதையும் வெளிக்கொண்டு வந்துவிடும் ஆழ்ந்த உழைப்பு உடையவர். குறிப்பிட்ட ஒன்றைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் அதனோடு தொடர்புடையவர்களிடம் பேசி விவாதித்துத் தகவல்கள் பெற்று அவற்றிலிருந்து கேள்விகளை எழுப்பும் தாகமும் கொண்டவர். நேர்காணல் தொடர்ந்த போது கண்ட விஜயகுமாரின் இவ்வியல்புதான் என்னைச் சோர்வடையாமல் பதில்கள் எழுதத் தூண்டியது. என்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்னும் எச்சரிக்கையோடே அவரது அணுகுமுறை இருந்தது. ஓரிரு வாரம் என்னால் முடியவில்லை என்று சொல்லியிருந்தாலும் அவர் ஏற்றுக் கொண்டிருப்பார். ஆனால் கேள்விகளை உருவாக்க அவர் எடுக்கும் பிரயத்தனம் கண்டு என்னையும் அதற்கேற்ப வடிவமைத்துக் கொண்டேன்.

உழவுக் குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டேயிருக்கும் வாழ்வு எனக்கு அமைந்திருக்கிறது. உழவர்களின் வாழ்க்கை பற்றி என் பாட்டி ’கட்ட பாடையில ஏறிக் கானக்காடு போறப்பத்தான் சும்மா இருக்க முடியும்’ என்று சொல்வார். ஆசிரியராகப் பணியாற்றும் பேறு கிடைக்கப் பெற்றாலும் என் விதியும் அப்படித்தான் போல. இலக்கிய நிகழ்வுகள், எழுத்துப் பணிகள், குடும்பப் பொறுப்புகள் என்று ஓடிக் கொண்டேதான் இருக்கிறேன். இவற்றிடையே விஜயகுமாரின் ஒருசெய்தி, ஒரு மின்னஞ்சல் திரையில் தோன்றிச் சட்டென்று நிறுத்திவிடும். அடர்நிழல் கிடைத்ததும் படுத்துக் கண் சொருக அசை போடும் எருமை போல எனக்குள்ளும் குதூகலம் வந்துவிடும். அடுத்த நாள் ஏதேனும் பயணம் இருந்தால் உட்கார்ந்து ஒரே அமர்வில் அவ்வாரத்திற்கான பகுதியைத் தட்டச்சு செய்து சரிபார்த்து அனுப்பிவிட்டு விடிகாலையில் உறங்கப் போனதும் உண்டு.

பத்தொன்பது பகுதிகள் வெளியாகி முடிந்த நிலையில் விடுபட்டவை, புதிதாகத் தோன்றியவை என எல்லாவற்றையும் தொகுத்து விஜயகுமார் அனுப்பினார். ஐம்பதுக்கும் மேற்பட்ட கேள்விகள். சரி, இது இப்போதைக்கு விடாது போலும் என்று நினைத்துக் கொண்டு பதில் எழுதத் தொடங்கினேன். இருபதாம் பகுதி முடிந்தது. இருபத்தொன்றாம் பகுதியை எழுதுகையில் ’மதிப்பு, சுயமரியாதை, வாய்ப்புகள் என எல்லாவற்றிலும் சமத்துவத்தை நோக்கி நாம் நகர்வதை முடிந்தவரை தடுப்பதே இங்கே அரசியலாக இருக்கிறது. காலத்தின் நிர்ப்பந்தத்தால் சில சலுகைகளை, உரிமைகளைக் கொடுப்பதாகப் பாவனை செய்வதை வெளிப்படை அரசியலாகக் காட்டிக்கொள்வார்கள். ஆனால் சமத்துவத்தைத் தடுத்து முடிந்த வரைக்கும் தள்ளிப் போடுவதையே உள்ளரசியலாகக் கொள்வார்கள். அதற்கான அணிதிரட்டல் சகல தரப்பிலும் நடக்கும். இந்தத் தந்திரமான அரசியலை எதிர்கொள்வதே இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஒடுக்கப்பட்டோர் போராட்டமாக இருக்கும் என்று கருதுகிறேன்’ என்று ஒரு கருத்து இயல்பாக வந்து சேர்ந்தது.

அதையடுத்த கேள்விக்கு ’மாணவர்கள் அரசின் அங்கமல்ல. அரசு தனக்குக் கீழே வைத்து அடக்கியாளும் பொதுமக்களில் ஒருபிரிவினர்தான் மாணவர்கள். அவர்கள் எந்த நேரத்திலும் அரசுக்கு எதிராக மாறிவிடும் தன்மை கொண்டவர்கள். அவர்களை எச்சரிக்கையாகவே அரசு கையாளும். இப்போதே கரப்பான் கட்சி எடுத்த போராட்டத்திற்கு எங்கெங்கிருந்தோ மாணவர்கள் கூடினார்களே அப்படிக் கூடிவிட்டால் அரசு தன் நிலையிலிருந்து அசைந்து கொடுக்க நேரும். அதுவரைக்கும் போக விடாமல் தன்னை அரசு பாதுகாத்துக்கொள்ள முயலும். அதற்குத் தன் கட்டுப்பாட்டில் உள்ள எல்லாவற்றையும் பயன்படுத்தும். உயர்கல்வியைப் பொருத்தவரைக்கும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்பது என் அனுமானம்’ என்று எழுதினேன். அதற்கு மேல் ஓடவில்லை. எழுந்து மாடிக்குச் சென்று மெல்ல நடந்தேன். அப்போதுதான் உதித்து மேலெழும்பிய பிறைக்கீற்றைக் கண்டு ஆசுவாசம் கொண்ட கணத்தில் ’ஒரு சிறுகதையின் முடிவைப் போல, ஒரு நாவலின் முடிவைப் போல நேர்காணலுக்கும் வந்து சேர்ந்திருக்கிறது. இவ்விடத்தில் நிறுத்துவதுதான் பொருத்தம்’ என்று தோன்றியது. அப்படியே முடிவெடுத்து உறங்கச் சென்றேன்.

விஜயகுமார் கொடுத்திருந்தவற்றில் இன்னும் நாற்பத்தொன்பது கேள்விகள் மீதமிருக்கின்றன. இதுதான் முடிவு என்று மனம் முரண்டு பிடித்த பிறகு அதன் மென்னியைத் திருகிவிட்டு மேலே செல்வது சாத்தியமல்ல. கடைசிப் பகுதியை அனுப்பிய பிறகு ’இதுதான் கடைசிப் பகுதி’ என்று விஜயகுமாரிடம் எப்படிச் சொல்வது என்பது பிரச்சினையாகத் தோன்றியது. மறுநாள் அவர் அழைப்பை எடுத்துப் பேசும் போது எப்படியோ என் எண்ணத்தை நுழைத்துவிட்டேன். தம் ஏமாற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல் ’உங்களுக்கு அப்படித் தோன்றினால் முடித்துவிடலாம் ஐயா’ என்று ஏற்றுக்கொண்டார். அடுத்த நாள் ’சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் போதே இப்படிச் சொல்லி விட்டீர்களே’ என்றார். சமாதானம் சொல்லி மேற்செல்ல இயலாத மனநிலையை மீண்டும் விவரிக்க வேண்டியதாயிற்று. உயர்கல்வியைப் பற்றிப் பேசிய இந்நேர்காணல் மூலம் விஜயகுமார் என்னும் திறனும் ஆர்வமும் மிக்க இளைஞரைக் கண்டுகொண்டது பெரும்பயன். அன்பு பெருக உரையாடும் அவர் குரலால் செவியினித்த காலம் இது. இந்த ஐந்தாறு மாதங்களும் என்றும் என் நினைவில் நிற்கும்.

இந்நேர்காணலில் கல்விக் கோட்பாடுகள் உள்ளோடலாமே தவிர நேரடியாக அவற்றைப் பேசவில்லை. நடைமுறை சார்ந்த பிரச்சினைகளையே பேசியிருக்கிறேன். பலவற்றுக்கு எளிதாகத் தீர்வு காணலாம். கல்வி நிறுவனம் சார்ந்து முதல்வர், ஆசிரியர்களே பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அதிகாரிகளும் அரசும் நினைத்தால் பெருமாற்றம் மலரும். மாணவர்களை அணுகும் முறையில் வர வேண்டிய மாற்றம் அதற்கு ஒருசான்று. மாணவர்களைக் குற்றவாளிகளைப் போல அணுகும் பார்வை மாறினாலே போதும். இளங்குரலுக்குச் செவிசாய்க்கும் பொறுமை ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் வந்தால் எப்படியிருக்கும்! அவ்வகையில் இந்நூல் சிறுபங்களிப்பையேனும் செய்தால் மகிழ்வேன்.

வாராவாரம் நேர்காணல் வெளியான போது வாசித்தோர் பலர். பெருங்கல்வியாளர்கள் முதல் மாணவர்கள் வரை பலப்பலர். ’மனதில் நிற்கும் மாணவர்கள்’ நூலுக்கு மிகச் சிறந்த முன்னுரை வழங்கிய ஆர். சிவகுமார் அவர்கள் இத்தொடரை உடனுக்குடன் வாசித்து எனக்குச் செய்திகள் கொடுத்து ஊக்கப்படுத்தினார். பல்லாண்டுகள் பேராசிரியராக இருந்த அவர் கருத்துக்கள் எனக்கு உதவின. அரசு கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவராக விளங்கிப் பல போராட்டங்களை முன்னெடுத்தவரும் எண்பது வயதிலும் கல்வி சார்ந்து தீவிரமாகச் செயல்படுபவருமான ப. சிவகுமார் அவர்களும் வாசித்துப் பின்னூட்டம் இட்டார். நீதியரசர் சந்துரு அவர்களும் தொடர்ந்து வாசித்ததை அறிந்தேன். ஏற்கனவே நான் எழுதிய கட்டுரைகளில் இருந்து பல மேற்கோள்களை எடுத்துக் காட்டித் தான் தயாரித்த அறிக்கையை நூல் வடிவில் எனக்கு அனுப்பியும் வைத்தார்.

நண்பர் ஆ. இரா. வேங்கடாசலபதியும் இத்தொடரை இடைவிடாமல் வாசித்தர். ஒருமுறை ’கல்வி சம்பந்தமாப் பேச இன்னும் எவ்வளவு விஷயந்தான் வெச்சிருக்கறீங்க?’ என்று கேட்டார். இந்தத் தொடரோடு முடிந்துவிடக் கூடியதல்ல. நாற்பதாண்டு அனுபவம். கல்லூரியில் கழித்த நாட்கள் தானே மிகுதி? கல்லூரி இல்லாத நாட்களிலும் அதற்கான தயாரிப்புகள், நினைவுகள், மாணவர் சந்திப்புகள் எனப் பல. எத்தனை எத்தனையோ மனிதர்கள். கு. அழகிரிசாமி எழுதிய நூல் ’நான் கண்ட எழுத்தாளர்கள்.’ அது போல ’நான் கண்ட முதல்வர்கள்’ என்றே ஒருநூல் எழுதலாம். இன்னும் கதைகள் எழுதவும் பாதிப்புகளும் சம்பவங்களும் இருக்கின்றன. யார் கண்டார்கள்? அந்தக் களத்தை வைத்து நாவல்கூட உதிக்கலாம்.

இன்னொரு முறை ஆசிரியர்களைப் பற்றி எழுதிய பகுதிகளைப் படித்துவிட்டு ’இவங்க கூட எல்லாம் எப்படித்தான் இத்தன வருசம் வேல செஞ்சீங்க?’ என்று இரக்கத்துடனும் வியப்புடனும் கேட்டார் சலபதி. அவர் வரலாற்றுப் பேராசிரியர் என்பதால் அரசு கல்லூரி வரலாற்றுப் பேராசிரியர் ஒருவரைப் பற்றி அப்போது சொன்னேன். அரசு கல்லூரிகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக இருசுழற்சி முறையை அரசு கொண்டு வந்தது. அதனால் ஆசிரியர்களுக்கு அரைநாள் தான் வேலை. ஒன்பது மணிக்குக் கல்லூரிக்கு வந்தால் ஒருமணிக்குக் கிளம்பிவிடலாம். மதியம் ஒருமணிவாக்கில் தம் முத்திரையையும் ஸ்டாம்ப் பேடையும் எடுத்துக்கொண்டு அந்த ஆசிரியர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுவிடுவார். பல்வேறு சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு எழுதித் தரும் வேலை செய்யும் மனுஎழுத்தர் சிலர் மரத்தடியில் அமர்ந்திருப்பர். அவர்களோடு இந்தப் பேராசிரியருக்கு இணக்கமும் ஒப்பந்தமும் உண்டு. பொதுமக்கள் விண்ணப்பத்தோடு தர வேண்டிய இணைப்புகளுக்குச் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும். மரத்தடியில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு பேராசிரியர் சான்றொப்பம் இட்டு வழங்குவார். முதல் கையொப்பத்திற்கு இருபத்தைந்து ரூபாய். அதற்கு மேல் ஒவ்வொரு கையொப்பத்திற்கும் ஐந்தைந்து ரூபாய். எழுத்தர்களுக்குக் கொடுத்தது போக ஒருநாளுக்கு ஐந்நூற்றுக்குக் குறைவில்லாமல் வருமானம் வரும். கேட்ட சலபதி ’வரலாறு எப்படி உருப்படும்?’ என்றார். சலபதியின் வாசிப்பும் பகிர்வும் எனக்கு உந்துதல் தந்தன.

ஆய்வு மாணவர்கள் பலர் கொண்டாட்டத்துடன் இத்தொடரை வரவேற்றனர். ’ஐயா, இது புத்தகமாகும் போது கூடுதல் பிரதிகள் அச்சிடுங்கள். என் செலவில் பல படிகள் வாங்கி ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும்’ என்று இளம் ஆய்வாளர் ஒருவர் சொன்னார். அவரது பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்கிறதோ இல்லையோ அவ்வெண்ணம் தோன்றியதே போதும். அவரது மனக்குமுறலுக்கு வடிகாலாக என் கருத்துக்கள் இருக்கின்றன போலும். மாணவர்கள் பற்றியும் ஆசிரியர்கள் பற்றியும் நான் கூறிய சம்பவங்களை ரசித்துப் படித்துப் பகிர்ந்தோர் பலர். இத்தொடர் வாசிப்புத்தன்மை கொண்டிருந்தமைக்கு அத்தகைய சம்பவ விவரிப்புகள் கொடுத்த சுவை முக்கியமான காரணம் என்றுணர்கிறேன்.

ஆசிரிய நண்பர்கள் சிலரின் கருத்துக்களும் ஊக்கப்படுத்தின. சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் இரா. இராமன், திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி முதல்வர் வ. கிருஷ்ணன், பேராசிரியர் க. காசிமாரியப்பன், பேராசிரியர் மா. வெங்கடேசன் ஆகியோர் அவ்வகையில் முக்கியமானவர்கள். அவர்களைப் போல நல்லாசிரியர் பலரிடம் இருந்து ’எங்கள் சார்பில் நீங்கள் பேசியிருக்கிறீர்கள்’ என்று ஒருமித்த கருத்து வந்தது. மகிழ்ச்சி. பலவற்றை வெளிப்படப் பேசும் என் இயல்பும் கருத்துக்களும் பெரும்பாலான ஆசிரியர்களுக்குப் பிடித்தமில்லை என்பதையும் அறிகிறேன். பிடிக்கும் கருத்துக்களையே பேசிக்கொண்டிருக்கும் ஜாதகம் எனக்கு அமையவில்லை. என்ன செய்ய? பொருட்படுத்தி வாசித்துச் சுயவிமர்சனம் செய்து கொள்ளும் மனநிலை வாய்த்தோரே என் இலக்கு. பார்ப்போம்.

முகநூலில் பலர் பின்னூட்டம் இட்டு வந்தனர். எழுத்தாளர் தம்பி பாரத் தமிழ் உடனுக்குடன் வாசித்து எழுதுவார். எழுத்தாளர் ஆர். அபிலாஷ் கல்வி தொடர்பான சிந்தனைகள் கொண்டவர். நேர்காணல் பகுதிகளைப் பகிர்ந்தும் தம் கருத்துக்களையும் எழுதியும் என்னைத் தொடர்ந்து வந்தார். தமக்கு விருப்பமான சில பகுதிகளைப் பகிர்ந்து கவனம் பெறச் செய்த முகநூல் நண்பர் ஆர். கந்தசாமி. ’உயர்கல்வி தொடர்பான ஆலோசகராகப் பெருமாள்முருகனை நியமிக்க வேண்டும்’ என்றுகூட ஒருவர் பின்னூட்டம் இட்டார். அத்தகைய எண்ணம் தோன்றியதையே இத்தொடரின் பலன் என்று கருதுகிறேன். இவையெல்லாம் என்னைச் செலுத்தின என்பதில் ஐயமில்லை.

2026 என்னவோ ’நேர்காணல் ஆண்டு’ என்பதாக எனக்கு அமைகிறது. இதுவரை கொடுத்த நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுத்து நூலாக்கம் செய்து உதவினார் கோவையைச் சேர்ந்த ஆய்வு மாணவர் பிரேம்குமார். அது ’எழுத்துக்கு அஞ்சும் சமூகம்’ என்னும் தலைப்பில் வெளியாகி வாசகக் கவனம் பெற்றிருக்கிறது. பெஜவாடா வில்சன் அவர்களை நேர்கண்டு உருவாக்கிய ’மாறாது என்றும் எதுவுமில்லை’ என்னும் நூல் ஆங்கில மொழிபெயர்ப்பாகி பெங்குவின் பதிப்பகம் இம்மாதம் வெளியிடுகிறது. உயர்கல்வி தொடர்பாக மட்டும் பேசிய ’மம்மர் அறுக்கும் மருந்து’ என்னும் இந்நூல் இப்போது வெளியாகிறது. மகிழ்ச்சியான ஆண்டுதான் இது.

இந்நூலை யாருக்குக் காணிக்கை ஆக்கலாம் என யோசித்தபோது கல்லூரிக் கால நண்பனும் என் வாழ்வை பெரிதும் அறிந்தவனும் ஆகிய சிபிச்செல்வன் நினைவு வந்தது. இளமைக் காலத்தில் வெறும் ஆர்வம் ஒன்றே துணையாகக் கொண்டு பிள்ளை விளையாட்டுப் போல நாங்கள் நடத்திய கவிராத்திரி நிகழ்ச்சிகள், பங்கேற்ற கவிதைப் போட்டிகள், தொடர் இலக்கிய உரையாடல், வாசித்துப் பகிர்ந்து கொண்ட நூல்கள், இருவர் வீடுகளிலும் தங்கிக் கிடந்த நாட்களில் அம்மாக்களின் கவனிப்பு என அவனோடு செலவழித்த கால நினைவுகள் ஒருபோதும் மனதில் இருந்து அகலாதவை. கல்வி குறித்து நான் எழுதிய கட்டுரைகள் இதழ்களில் வெளிவந்து கொண்டிருந்த போது அதைக் கவனித்து ‘உன்னை நேர்காணல் செய்கிறேன். கல்வி பற்றி மட்டும் பேசலாம் ‘ என்று கேள்விகளோடு வந்தான். நேர்காணலும் முடிந்தது. அதை வெளியிடப் பொருத்தமான வாய்ப்பு அமையவில்லை. சேலம் வே. பாபு தான் நடத்திய தக்கை இதழில் வெளியிட முயன்றார். நேர்காணலின் அளவு காரணமாக உடனடியாகச் சாத்தியப்படவில்லை. அதன் கையெழுத்துப் படி எங்கெங்கோ அலைந்து தொலைந்து போய்விட்டது. ஆக இந்நூலைச் சிபிச்செல்வனுக்குக் காணிக்கை ஆக்குவது பொருத்தம் என்று தோன்றியது.

நேர்கண்ட சா. விஜயகுமார், முகம் பார்க்கவில்லை எனினும் இலக்கியம் இணைக்கும் என்பதற்குச் சான்றாகும் விஷால் ராஜா உள்ளிட்ட ’அகழ்’ மின்னிதழ் குழு நண்பர்கள், வாசித்துக் கருத்துக்களைப் பகிர்ந்த நண்பர்கள், நூலாக வெளியிடும் காலச்சுவடு கண்ணன், பதிப்பக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

18-08-26
நாமக்கல்.

பெருமாள்முருகன்

பெருமாள்முருகன், பேராசிரியர், தமிழ் எழுத்தாளர், ஆய்வறிஞர், கவிஞர். ஒடுக்கப்பட்ட எளிய மனிதர்களின் வாழ்நிலையை, குறிப்பாக பதின்பருவத்தினரின் உலகை 'ஏறுவெயில்', 'கூளமாதாரி' போன்ற புனைவுகளில் சித்தரித்தார். படைப்புகளில் கொங்கு வட்டாரத்தன்மை குறித்த பார்வைக்கு அழுத்தம் கொடுத்து, அதிகம் அறியப்படாதிருந்த கொங்கு வேளாண் வாழ்க்கையைப் பதிவு செய்தவராகவும் மதிப்பிடப்படுகிறார்.

தமிழ் விக்கியில்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments உரையாடலுக்கு

  1. இத்தொடரியுன் மூலமாக – இன்றைய நூற்றாண்டின் ஆசிரிய மாணவ வடிவம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குரு சிக்ஷய உறவாக உருவெடுத்து இன்று வரை ஒரு அறுபடாத தொடர்ச்சியாக இருக்கிறது என்பதை காண பிரமிப்பாக உள்ளது. மேலும் கல்வி எனும் செயல்பாட்டில் வெளிப்படும் ஞானப் பரிமாற்றம் பொறாமையையும், கருத்துவேறுபாடுகளையும் உண்டாக்கும் எனும் தரிசன உண்மையை உணர்ந்து, இரு மனிதன் ஒன்று சேர்ந்து கல்வி கற்க தொடங்கிய உபநிடத காலத்தில், கல்வி பரிமாற்றத்தின் முதல் மந்திரமாக இருக்கும் சாந்தி மந்திரத்தை வைத்த அந்த கவியில் இருந்து நாலடியாறில் மயக்கம் அறுக்கும் மருந்துக்கு இட்டுச்சென்ற மற்றொரு கவி வாயிலாக மானுடம் வந்தடைந்திருக்கும் தூரம் எவ்வளவு!

    இந்தநேர்காணல் வாயிலாக அதே உண்மையை நவீன வழியில் எடுத்துரைத்திருக்கும் ஆசிரியர் திரு பெருமாள் முருகன் அவர்களுக்கும், அதை தேடலுடன் அணுகிய நண்பர் விஜயகுமார் அவர்களுக்கும், புதுப்புது எண்ணங்களுடன் எப்பொழுதும் முன்னகர்ந்து கொண்டிருக்கும் அகழ் ஆசிரியர் குழுவிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    சஹ வீர்யம் கரவாவஹை [ஒளிறும் ஞானம் அமைக்க]
    தேஜஸ்வினாவதீதமஸ்து மா வித்விஷாவஹை [ எங்கள் வெறுப்புகள் அகழ்க]

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss