
தவளைக் கண்
குளிர்காலையில்
மிதந்த
சூரியக் கதிரின்
சிலிர்ப்பை
ரசிக்க,
நீர்த் தாமரையின்
விளிம்பில்
ஏறிய தவளைக் குஞ்சை,
மேலும் கீழுமாய்
அலைக்கழித்துக்
களைக்க வைத்தது,
இலைமேல் ஓடியாடிய
சிறு தவளைக்
கண்- நீர்த்துளி.
000
விசர்ப் பந்து
அரிதாரம் பூசிய
முகபாவனைச் சொல் கொண்டு
நீள் கோட்டை முறித்துக்
காரியம் செய்து கழிக்க முனைகிறாய்.
கோடுகளாலனதுதான்
எழுத்து.
மேலொரு கோடு ஏனதற்கு?
அடுத்தவரின் அலங்காரம்
உன்முகத்தை மெருகூட்டா.
இன்னொரு கதையை
உன்கதையாய்க் கட்டுவதில்
உனக்கென்ன வேலை?
முன்னொன்றை மறைத்து
இன்னொன்று இதுதான் என்பதில்,
எழுந்து நிற்பது என்ன?
உன் காரிய விசர்தானே?
விசர்ப்பந்தின் துள்ளல் போல்
நூல் கட்டிய தூரத்தில்
ஆடுவது மட்டுமல்ல விளையாட்டு.
000
பற்று
நிலைக் கண்ணாடியின்
உள்ளிருந்து தெறிக்கும்
உருவை மறைத்து,
மேலெழுந்து குரைக்கிறது
ஒற்றைப் பூதக்கண்ணாடிச் சொல்.
வடைமாலை
பட்டுக் குஞ்சம்
மெழுகுவர்த்தி கொண்டு
தாரைவார்த்த கடவுள்கள்
கனத்துப் போயிருக்கிறார்கள்.
பவுர்ணமி இரவுகளில்
உருவைப்
பேருருவாய்
வெளிக்காட்ட முனைவது
தனியே கடவுள்களல்ல.
பேருருவில்
திளைத்துப் போக
கடவுள்களுக்கு இருக்கும்
பேராசையை மேவித்தான்
திளைக்கிறது
கண்ணாடிக் குரைப்பு.
000

கற்சுறா
கவிஞர், எழுத்தாளர் மற்றும் எக்ஸில் இதழின் ஆசிரியர்களுள் ஒருவர். சீற்றம் நிறைந்த கவிதைகளுக்காக ஈழத்து புகலிடச் சூழலில் நன்கு அறியப்பட்டவர். என்.கே.ரகுநாதனின் படைப்புகளைப் தொகுத்தவர். தற்சமயம் கனடாவில் வசித்து வருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
