
ஜேகேயின் புதிய நாவல் “கடலின் அடுத்த பக்கம்” விஷ்ணுபுரம் பதிப்பகம் ஊடாக வெளியாகியுள்ளது. நாவலின் ஓர் அத்தியாயம் இங்கே வெளியிடப்படுகிறது.
அந்த ஊரில கொஞ்சிறமாதிரி கண்ட நாயையும் இஞ்ச கொஞ்சாதை மகா. எங்கையெல்லாம் இதுகள் அடிபுன்னிக்கொண்டு வருதுகளோ. தடுப்பூசியும் போட்டிருக்கமாட்டினம். பக்கெண்டு கடிச்சி வச்சிட்டா பிறகு குலைச்சுக்கொண்டு திரிவாய்.
தேநீரும் கையுமாக வந்த மகாவின் தாயார் ஜெனீவாவை விரட்ட, அது அமைதியாக கேற்றடிக்குச் சென்று, மகாவைப் பார்த்தபடியே ஒருக்களித்துப் படுத்தது. அவள் அதனை வரும்படி அழைத்தபோது தாயாரை நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் சரிந்தது.
ஏனம்மா அவளைக் கலைச்சனியள்?
நீ வெளிக்கிடேல்லயா? அந்தத் தம்பி வல்லிபுரக் கோயிலுக்குப் போகோணுமெண்டு சொன்னவரல்லோ? பிறகேதோ படமும் எடுக்கோணுமெண்டு.
படமில்லை. பிரீ ஷூட் அம்மா. வெடிங்குக்கு முன்னால எடுக்கிற கப்பிள் ஷூட்.
அப்படிண்டா சீலையைக் கட்டன். புறக்கோலம் காட்டாமல் கொண்டுவந்த நகைகளிலயும் ரெண்டை எடுத்துப் போடு.
மகா முறைத்தாள்.
பொம்பிளைப்பிள்ளையை தனியா வளர்க்கத்தெரியாம கெடுத்து வச்சிருக்கிறன் எண்டு ஊராக்கள் சொல்லுவினம்.
பேசாம வந்த இடத்தில சாத்திரியாரிடம் கேட்டு உங்களுக்கும் ஒரு மாப்பிள்ளை பாக்கிறன் அம்மா. சாறி கட்டி, நகை போட்டு நீங்களே பிரீ ஷூட் செய்யலாம். நான் வேணுமெண்டா பக்கத்தில தோழியா நிக்கிறன். ஓகேயா?
மகா பகடியாகச் சொல்லிவிட்டுப் பின்னர் தன்னையே நொந்துகொண்டாள். முப்பத்திரண்டு வயதில் அம்மா தனிக்கட்டையானவர். ஆனால் ஏனோ இன்னொரு உறவை அவர் நாடவேயில்லை. மகாவுக்குக் கொஞ்சம் விபரம் தெரிய ஆரம்பித்தபோது அவளே அம்மாவிடம் அதனைக் கேட்கவும் செய்தாள். வீட்டிலே வயது வந்த பெண் இருக்கும்போது புதிதாக ஒரு ஆணை எப்படிக் கொண்டுவருவது என்று அவர் பதில் சொன்னது ஞாபகம் இருக்கிறது. மகா கல்லூரி முடித்ததுமே பல்கலைக்கழக நண்பர்களுடன் சேர்ந்து வாடகை வீட்டுக்குப் போனதற்கு இதுவும் ஒரு காரணம். அதன் பிறகாவது அம்மா தனக்கான துணையைத் தேடிக்கொள்வார் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் எதுவுமே நிகழவில்லை. அவளது திருமணத்துக்குப் பின்னர் அம்மாவுக்கு ஒரு துணையைத் தானே தேடிக்கொடுக்கவேண்டும் என்று மகா நினைப்பதுண்டு.
விசர்க்கதைகளை நிப்பாட்டு. சீலையைக் கட்டு எண்டா வாய்க்கு வாய் சீலம்பாக் கதை கதைச்சுக்கொண்டு நிப்பாய்.
தாயார் புறுபுறுத்துக்கொண்டே உள்ளே திரும்பிப்போக, அவர் போகும்வரை பொறுத்துவிட்டுப் பின்னர் ஜெனிவா மெதுவாக எழுந்து மகாவுக்கருகே வந்து அமர்ந்துகொண்டது. யாழ்ப்பாணம் வந்த முதலிரு நாள்களும் அவள் அம்மாவின் வற்புறுத்தலால் சல்வார் அணிந்துதான் பிரசன்னாவுடன் வெளியே சென்றாள். அவளிடமிருந்தவை எல்லாமே பட்டுத்துணியில் தைக்கப்பட்ட மினுங்கல்கள் நிறைந்த சல்வார்கள். நாளாந்த வெக்கையில் போடுவதற்கு அவை உகந்தவை அல்ல. தவிர, ஜீன்ஸ்தான் வசதியாக மோட்டர் சைக்கிளில் அமருவதற்கான உடை என்று பிரசன்னாவே சொன்னபிறகு தாயாரால் எதுவுமே பேசமுடியவில்லை. இந்தப் பிரீ ஷூட்டுக்குமே அவர்கள் இருவரும் சென்று தமக்குத் தோதான உடைகளை வாங்கியிருந்தார்கள். நீலக்கலர் டெனிம் ஜீன்சுக்கு அழகான கடும்பச்சை நிறத்தில் எளிமையான ஒரு பருத்தி பிளவுசை மகா வாங்கிக்கொண்டாள். அவனும் நீல டெனிமுக்கு அதே கடும்பச்சை நிறத்தில் பருத்தி சேர்ட்டை வாங்கினான். கோயிலுக்கும் அதையே அணிந்து போகப்போவதாக மகா சொன்னபோது தாயார் முகம் சுளித்தார்.
உள்ளுக்க விடமாட்டாங்கள் பிள்ளை.
ஆனால் அவர் சொன்னதுபோல எதுவுமே நிகழவில்லை. ஆண்களைப்போலவே ஜீன்ஸ் அணிந்த பெண்கள் பலரும் கோயிலுக்கு வந்திருந்தார்கள். பிரசன்னா மட்டும் மேற்சட்டையைக் கழட்டவேண்டி வந்தது. மகாவுக்கு முன்னாலே வெற்றுமேலுடன் நிற்க அவன் வெட்கப்பட்டான். தேவையில்லாமல் வயிற்றை எந்நேரமும் எக்கி உள்ளே தள்ளி வைத்திருந்தபடி அவளோடு கூட நடந்தான்.
வாழ்க்கை முழுக்க பக்கத்திலேயே இருக்கப்போறன் பிரஸ்ஸி. எவ்வளவு நேரம்தான் தம் பிடிச்சுக்கொண்டே இருப்பாய்?
அவன் மேலும் வெட்கப்பட்டபடி மூச்சை விட்டான். அதீதமாக உணவை உண்ட தங்க மீன் குஞ்சைப்போல அவனது வயிறு உப்பிக்கிடந்தது. அவள் செல்லமாக அவனது வயிற்றில் குத்தினாள்.
கோயில் மகா. இப்படியெல்லாம் தொடக்கூடாது.
ஏன் எங்கட கோயில்களில எரோடிக்கா சிலைகளை வச்சிருப்பினம் எண்டு கேள்விப்பட்டனே?
அது இந்தியாவில. இங்கே யாழ்ப்பாணத்தில கோயில்கள் எல்லாம் புனிதமானவை மகா. நீயே பார்.
மகா பிரகாரமெங்கும் நிறைந்திருந்த சிற்பங்களைக் கூர்ந்து பார்த்தாள். பிரசன்னா சொன்னதுபோல அத்தனையும் பக்தி மார்க்கமாகத்தான் இருந்தன. பிரசன்னா கொஞ்சம் வேகமாக நடக்க மகா அயர்ச்சியோடு பின்னாலேயே நடந்தாள். காமம் பற்றியோ, தொடுகைகள் பற்றியோ மகா பேச்சு எடுத்தாலே பிரசன்னா சங்கடத்துடன் தவிர்த்துவிடுவான். ஆனால் அவன் மாத்திரம் அவ்வப்போது சிலேடையாக ஏதேனும் சொல்லிச் சிரிப்பான். அவள் வலிந்து பற்றினாலே ஒழிய, அவனாகத் தன் கைகளை அவளோடு கோர்ப்பதில்லை. அவள் முத்தம் கொடுத்த கணத்தில்கூட அவனது உடல் நத்தை ஓட்டுக்குள் நுழைந்து இறுகிப்போனது ஞாபகம் வந்தது. இருவரும் ஏதும் பேசிக்கொள்ளாமலேயே உள் வீதியைச் சுற்றி முடித்து, அர்ச்சனையைச் செய்துகொண்டு வெளியே வந்தார்கள். கோயில் பிரகாரத்திலேயே ஒரு பிரபலமான தோசைக்கடை இருக்கிறது என்று பிரசன்னா அவளைக் கூட்டிப்போனான். சிறு கொட்டிலுக்குள்ளே ஆச்சி ஒருவர் கீழே உட்கார்ந்து சதுர வடிவ இரும்புத்தட்டிலே தோசைகள் சுட்டு எடுக்க, இன்னொருவர் தாமரை இலையில் அவற்றைப் பரிமாறிக்கொண்டிருந்தார். அங்கு போடப்பட்டிருந்த வாங்கிலில் மற்றவர்களோடு நெருக்கமாக உட்கார்ந்து சாப்பிடுவது மகாவுக்குச் சற்று அந்தரமாக இருந்தது. அவள் தயக்கத்தோடு தோசையை இரண்டு விரல்களால் பிய்த்து, சாம்பாரைத் தொட்டு உண்டதைப் பார்த்து பிரசன்னா சிரித்துவிட்டான்.
என்ன மகா, கரண்டி எதுவும் வேண்டுமா?
மகாவுக்கு அவனது நக்கல் புரியவில்லை. அவள் வெள்ளந்தியாகவே பதில் சொன்னாள்.
இல்லையே. தோசையை நாங்க கையாலேதான் சாப்பிடுவோம்.
பிரசன்னா இப்போது பலத்துச் சிரிக்க, தோசை சுட்டுக்கொண்டிருந்த ஆச்சியும் அவனோடு இணைந்துகொண்டார்.
பிள்ளை, தோசையை மடிச்சு சாம்பாரில நல்லா முக்கி, சட்டினியையும் அள்ளிப் போட்டுச் சாப்பிடோணும். நீங்கள் இரண்டு பேரும் எந்த நாட்டிலயிருந்து வந்தனியள்?
ஆச்சி நான் இங்கைதான் இருக்கிறன். இவா அவுஸ்திரேலியா. வாற கிழமை ரெண்டுபேருக்கும் ரெஜிஸ்டேசன்.
ஆச்சி தோசை ஊற்றுவதையும் மறந்து, பிரசன்னாவை வியப்போடு பார்த்தார்.
அவ வெளிநாடு. நீ இங்கத்த பெடியே?
ஓம் ஆச்சி. அதுக்கென்ன?
ஆச்சி அவன் பக்கமே திரும்பாது, தோசை மாவைத் தட்டில் ஊற்றி வட்டமாக்கினார்.
முந்தியெண்டா இங்கத்த பொம்பிளையளைத்தான் வெளிநாட்டுக்குப் போன பெடியள் வந்து தூக்குவாங்கள். இப்ப என்னடாண்டா இங்கத்த மாப்பிள்ளைகளை வெளிநாட்டுப் பெட்டையள் வந்து தூக்கத் தொடங்கீட்டாளவை. கலிகாலம்.
மகாவுக்கு அந்த ஆச்சி படபடவெனப் பேசியதில் எதுவுமே சரியாகப் புரியவில்லை. ஆனால் அவளை அவர் ஏளனம் செய்கிறார் என்பது மட்டும் விளங்கியது. உடனேயே எழுந்துவிட்டாள்.
இரு பிள்ளை, நான் சும்மா பகிடியாச் சொன்னனான். இங்கத்த ஆம்பிளையளுக்கு பொம்பிளையளை அடக்கித்தான் பழக்கம். நீயெண்டால் வெளிநாட்டில வளந்தனி. எல்லாரோடையும் சங்கோசமில்லாம நல்லா சிரிச்சுக் கதைச்சுப் பழகுவாய். இவையளுக்கு உடன கவட்டுக்கக் கூசத்தொடங்கிடும். ஆனாலும் சொல்ல ஏலாது. இப்பத்த ஆம்பிளையளும் முந்திமாதிரி இல்லை. நல்லா பொம்பிளையளுக்கு அடங்கிப்போகப் பழகீட்டினம்.
அடுப்புப் புகை அந்தக் கொட்டிலை நிறைத்து வெளியிலும் பரவ ஆரம்பித்திருந்தது. ஆச்சி புதிதாக வந்த வாடிக்கையாளரின் தட்டில் தோசையைப் போட்டபடி வேறு ஏதோ கதை சொல்லிக்கொண்டிருந்தார். பிரசன்னா தனக்குச் சிறிது சாம்பார் வேண்டுமென்று கேட்டு வாங்கினான். மகா உள் உதட்டினை இறுக்கக் கடித்தபடி தன் மனதை ஒரு நிலைப்படுத்த எவ்வளவோ முயன்று பார்த்தாள். எதுவுமே பேசாதே மகா. யாரோ முன் பின் தெரியாத கிழவி. அது தன் வாய்க்கு வந்ததுபோலப் பேசுகிறது. பார், தான் என்ன பேசினேன் என்பதையே மறந்துபோய் அடுத்த கணமே வேறு எவரோடோ வேறு விசயத்துக்கும் தாவிவிட்டது. இந்த மனிதர்கள் பழுதான வாகனத்தின் இயந்திரப் புகையைப்போல வெறுப்பினை எந்நேரமும் கக்கியபடியே இயங்கக்கூடியவர்கள். புகை பின்னாலிருப்பவரைத் தாக்குவதைக்கூட உணராது அவர்கள் முன்னகர்ந்துகொண்டேயிருப்பார்கள். இவர்களுக்காக ஏன் நீ உன் மன நிம்மதியைக் குலைக்கவேண்டும் மகா? இது உன் ஊர் கிடையாது. இவர்கள் உன் சொந்தங்களும் இல்லை. நைச்சியமாக இங்கிருந்து உடனேயே கிளம்பு. உன்னுடைய நாளை வீணாக்காதே. கிளம்பு மகா.
என்ன பிள்ள சும்மா நன்னிக்கொண்டிருக்கிறாய்? வெளி நாடுகளில பீஸ்ஸாவும் பேர்கரும் சாப்பிட்டுப் பழகின வாய்க்குள்ள எங்கட நல்ல சாப்பாடு இறங்குதில்லபோல.
அவள் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. அவளது உள் உதடு பிளந்து சிறிது இரத்தமும் கசிய ஆரம்பித்தது.
ஏன் இப்பிடி வாய்க்கு வந்தபடி கதைக்கிறீங்கள்? உங்களுக்கு நான் எப்பிடி வளர்ந்தனான் எண்டு தெரியுமா? சும்மா வெளிநாட்டில வளர்ந்த பொம்பிளை எண்டு ஏன் நக்கல் அடிக்கிறீங்கள்? நீங்க எல்லாரும் இங்கயிருந்து ஆக்களை அனுப்பியிருக்காட்டி நாங்கள் ஏன் அங்க போய்ப் பிறக்கப்போறம்? அவன் எங்களுக்கு ரெஜிஸ்டேசன் எண்டு சொன்னதுக்கு சந்தோசமா ஒரு வாழ்த்துக்கூட சொல்லமுடியாத அளவுக்கு ஏன் உங்களுக்கு என்மேல இவ்வளவு .. hatred?
கோபத்தில் பேசுகையில் அவளுக்குத் தமிழும் சரளமாக வராது ஆங்கிலத்தோடு சில்லுப்பட்டது. ஆச்சிக்கும் அவள் சொன்னது எதுவும் முழுதாகப் புரியவில்லை. அவர் நிலைமையைச் சமாளிக்கப் பார்த்தார்.
கோவியாதை பிள்ளை. நான் பொதுவாத்தான் சொன்னனான். ரெண்டு பேரும் சந்தோசமா இருங்க. தம்பியைப் பார்த்தா நல்லவராத்தான் தெரியிறார். அவர் உன்னை நல்லா வச்சு பார்த்துக்கொள்ளுவார்.
புகை இப்போது கொட்டிலின் அருகில் வியாபித்து நின்ற வேப்ப மரத்தையும் சூழ்ந்துகொண்டது.
அதென்னவோ உண்மைதான். அவர்தானே என்னை இவ்வளவு நாளும் வச்சுப் பார்த்தது.
மகா வெளியே இருந்த தொட்டியில் தண்ணீர் மோந்து கைகளைக் கழுவினாள். பிரசன்னா, நில்லு மகா, நானும் வருகிறேன் என்று சொல்லுவது கேட்டது. ஆச்சி இன்னமும் புறுபுறுத்துக்கொண்டிருந்தார்.
இப்பத்த பெட்டையளுக்கு ஒண்டு சொன்னோனயே பொத்துக்கொண்டு வருது. இதுகள் எல்லாம் எப்பிடிக் கலியாணத்தைக் கட்டிக் குடும்பத்த நடத்தப்போகுதுகளோ? இதாலதான் கனக்க கலியாணங்கள் பிச்சுக்கொண்டு கிடக்கு.
மகா மோட்டர் சைக்கிளை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள். வழியில், கோயிலின் வெளி வீதி மூலையில் குடும்பமொன்று நேர்த்திக்காகப் பானை வைத்துப் பொங்கிக்கொண்டிருந்தது. பெண்கள் அடுப்படியில் கூடிப் பொங்கலைத் தயாரிக்க, ஆண்கள் தூரற்றே நின்று தமக்குள் கலந்துரையாடிக்கொண்டிருந்தார்கள். சில ஆண்கள் செல்பேசியில் யாருடனோ சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். குழந்தைகள் தம்பாட்டுக்கு விளையாடிக்கொண்டிருந்தன. கூட்டத்தில் பெண்களே அதிகமாக நின்றார்கள். கைக்குழந்தைகள் தத்தித்தத்தி நடை பயில்வதை ஒரு தாய் காணொளி எடுத்துக்கொண்டிருந்தார். கடைகளில் பணம் கொடுத்துப் பொருளை வாங்குவது ஆண்களாக இருக்கப் பெண்கள் குழந்தையை மடியில் தூக்கி வைத்திருந்தார்கள். ஒரு மரத்தடியில் தாயொருத்தி குழந்தைக்கு பம்பர்ஸ் மாற்றிக்கொண்டிருக்க அவளது கணவன் பத்தடி தள்ளி எதிர்த்திசையில் திரும்பி நின்று செல்பேசியை நோண்டிக்கொண்டிருந்தான். வாகனத் தரிப்பிடத்திற்கு வந்துபோன மகிழுந்துகளை எல்லாம் ஆண்களே ஓட்டினார்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து பயணித்த மோட்டர் சைக்கிள்களை ஓட்டியதும் ஆண்களே. பிரசன்னாவின் மோட்டர் சைக்கிளை நெருங்கிய மகா, திடீரென்று பிரதான வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அங்கு சென்றுகொண்டிருந்த ஒரு ஆட்டோவை மறித்து ஏறினாள். தன் செல்பேசியிலிருந்த முகவரியை ஆட்டோக்காரருக்கு வாசித்துக்காட்டினாள். அவளது ஆங்கிலம் கலந்த உச்சரிப்பு அவருக்குப் புரியவில்லை. அவள் மறுபடியும் நிதானமாக முகவரியைச் சொன்னாள்.

இது ஆனைக்கோட்டையடி அக்கா. ஞாமான தூரம். எனக்கு இன்னொரு அயர் இருக்கு. நீங்கள் யாழ்ப்பாணம் போற ஆட்டோவை பிடிச்சிங்கள் எண்டால் போயிடலாம்.
அவள் வெறுப்போடு ஆட்டோவிலிருந்து இறங்கிப்போய் வீதிக்கரையில் நின்ற அரச மரத்தடியில் ஒதுங்கினாள். செல்பேசியில் ஊபரை அழுத்தினால் அந்தப்பகுதியில் சேவை இல்லை என்று அது சொன்னது. அதற்குள் பிரசன்னா மோட்டர் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். அவன் முகத்தில் பதற்றம் தெரிந்தது.
மகா, எங்கை போனாய்? இப்ப என்ன பிரச்சனை?
அவள் பேசாமல் வேறு ஆட்டோ எதுவும் வருகிறதா என்று வீதியைப் பார்த்தாள்.
கண்ணா. ஏன் இப்ப கோவப்படுறாய்? நான் ஏதாவது சொன்னனானா? இல்ல உன்னோட பிழையா நடந்தனா? கடைக்கார லூசு மனிசி சொன்னதுக்கு என்னோடை ஏறுப்பட்டா நான் என்ன செய்ய?
அவள் அவனைத் தீர்க்கமாகத் திரும்பிப் பார்த்து வேகமாகப் பேச ஆரம்பித்தாள். கோபத்தில் தமிழ் வராமல் முழுமையாக ஆங்கிலத்திலேயே கொட்டினாள்.
நீதான் அதை ஆரம்பித்து வைத்தாய் பிரசன்னா. யாரென்றே தெரியாதவர்களோடு சேர்ந்து சிரித்தாய். அந்த அம்மா பேசினது தவறு என்று எந்த இடத்திலும் நீ மறுத்துச் சொல்லவில்லை. அவர் என்னை ஏளனம் செய்தபோது உன்னுடைய கண்களிலும் சிறிது அவமானத்தைக் கவனித்தேன் பிரசன்னா. இங்குள்ள ஆண்கள் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறீர்கள். இந்தக் கோயில் பிரகாரத்தைக் கூர்ந்து கவனித்தாலே அது புரிகிறது. ஏன், ஒஸ்ரேலியாவில் இருக்கும் நம் ஆண்களும்தான். இது இந்த ஊர் ஆண்களின் டி.என்.ஏ பிரச்சனை. இதில் நீ மட்டும் வித்தியாசமானவனாய் இருப்பாய் என்று எப்படி எதிர்பார்ப்பது?
நான் சும்மா பகிடிக்குச் சொன்னனான் மகா. ஏன் இவ்வளவு சீரியஸா எடுக்கிறாய்?
எது பகிடி பிரசன்னா? நாளைக்கு நீ அவுஸ்திரேலியா வந்து என் நண்பர்களுக்கு முன்னாலே ஆங்கிலம் பேசத் திணறும்போது அவர்கள் அதைப் பகடி பண்ணினால் நானும் சேர்ந்து சிரிக்கலாமா?
அவன் அமைதியானான்.
விளங்குது மகா. நான் செய்தது பிழைதான். ஆக்களுக்கு முன்னால அப்பிடி நக்கல் அடிச்சிருக்கக்கூடாது. தெரியாமல் செஞ்சிட்டன். ஆனால் நான் இயல்பில அப்படியில்லை.
மகாவுக்குக் கோபம் சற்றும் அடங்குவதாயில்லை. பொருமிக்கொண்டேயிருந்தாள்.
அப்படித்தான் நானும் முதலில் யோசித்தேன் பிரசன்னா. ஆனால் இப்போது அது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. காதலிக்கும்போது எல்லா ஆண்களும் நல்லவர்கள்போலத்தான் தம்மைக் காட்டிக்கொள்வார்கள். பெண்ணுக்காகத் தலையைக்கூடக் கொடுப்பார்கள். ஆனால் அவள் வசப்பட்ட பின்னர், திகட்டத் திகட்ட உறவு கொண்டபின்னர், அவள் இனித் தனக்கானவள்தானே என்ற எண்ணம் வந்தபின்னர், அவர்களுடைய உண்மைக்குணம் வெளிப்பட்டுவிடுகிறது. அதன்பின்னர் அவர்களது ஆர்வமெல்லாம் வேறு ஒன்றின்மீது திரும்பிவிடும். வேலை, நண்பர்கள், விளையாட்டு, பணம், இல்லாவிடில் புதிதாக வேறு ஒருத்தி. ஏதோ ஒன்று. குழந்தைக்குப் புது பொம்மை கைவசப்படுவரையிலும்தான் பரவசம். அதற்காக அது அல்லாடும். அங்காடியில் விழுந்து புரண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்யும். ஆனால் வாங்கிக்கொடுத்துவிட்டால் போதும். அப்புறம் குழந்தைக்கு அது வெறுமனே இன்னொரு பொம்மையாகிவிடுகிறது. அதனால்தான் எங்கள் ஊரில் சேர்ந்து வாழ்ந்து பார்த்துவிட்டுத் திருமணம் செய்வார்கள். பார்த்துப் பழகி, உறவு கொண்டு, கூடி வாழ்ந்து, நாளாந்தப் பிரச்சனைகளைக் கூட்டாக எதிர்கொண்டு, அதற்குப் பின்னரும் இருவருக்குமிடையே காதல் ஏதேனும் மீதமிருக்குமென்றால் திருமணம் செய்யும் முடிவை எட்டுவார்கள். அப்படியுங்கூட அங்கு பல திருமணங்கள் பிழைத்துப்போகின்றன. உனக்கும் எனக்கும் எத்தனை நாள்கள் பழக்கம் பிரசன்னா? இரண்டு மாதங்கள் இருக்குமா? அதிலும் ஒன்றரை மாதங்கள் நாம் ஒருவரை ஒருவர் நேரில்கூடப் பார்த்துப் பழகவில்லை. நீ மாறமாட்டாய் என்று நான் எப்படி நம்புவது?
மகா படபடவென பிரசன்னாவுக்கும் புரிந்தும் புரியாததுமான ஆங்கிலத்தில் வேகமாகப் பொழிந்துகொண்டிருந்தாள். அவள் மனதில் நினைத்தவற்றில் ஒருசிலதான் வார்த்தைகளாகச் சென்று விழுந்தன என்று தோன்றியது. கோபமோ, ஆற்றாமையோ அல்லது அழுகையோ, எந்த ஆழமான உணர்வையும் அவளால் ஆங்கிலத்தில்தான் பேசி உணர்த்தமுடியும். உன் கோபத்தைக் குறை என்று அவளது ஆழ்மனது எச்சரித்தாலும் அவளால் முடியவில்லை. கை கால்கள் நடுக்கத்தில் உதறிக்கொண்டிருந்தன. அவன் அவளுக்கு முன்னே வந்து நின்று, அவளது தோள்களை இறுகப்பற்றி, நேராக அவள் முகத்தைப் பார்த்தான்.
மகா, இஞ்சபாரு. நான் சொல்லுறதை வடிவாக் கேளன். எனக்குச் சின்ன வயசா இருக்கேக்கையே அம்மா வருத்தக்காரியாயிட்டா. அப்பாதான் எல்லாத்தையும் வீட்டில பார்த்துப் பார்த்துச் செய்வார். அம்மா மோசமானபிறகும் அவர்தான் எல்லாரையும் வளர்த்தது. சமையல், வீடு கூட்டுறது, எங்கள் எல்லாருக்கும் உடுப்பு எடுத்துத் தாறது, தோய்க்கிறது எண்டு எல்லாமே அப்பாதான். அவரைப் பார்த்து வளர்ந்தவன் நான். வழமையான யாழ்ப்பாணத்து ஆம்பிளையள்மாதிரி என்னை நீ நினையாதை. முதல் நாள் பேசேக்கையே உன்னை எனக்கு நல்லாப் பிடிச்சிட்டுது. வெளிப்படையாப் பேசிற குணம், எளிமை, மற்றாக்கள்மேல நீ காட்டிற கரிசனம். அப்பவே நான் விழுந்திட்டன். நீ வெளிநாட்டில பிறந்தனியா, உனக்குத் தமிழ் தெரியுமா, நாங்கள் இரண்டு பேரும் சமாளிக்க முடியுமா எண்டெல்லாம் எப்பன்கூட எனக்குக் குழப்பம் வரேல்ல. நீ வேறை மகா. உனக்கேன் அது விளங்குதில்லை? எனக்கு உன்னைப் பயங்கரமாப் பிடிக்கும். உன்னோட சேர்ந்து வாழுறத அப்பவே நான் கற்பனை செய்யத் தொடங்கீட்டன். அந்த வாழ்க்கைல ஆம்பிளை பொம்பிளை ஈகோ சண்டைகளுக்கு இடமில்லை. இத நீ செய்யோணும், அத நான் செய்யோணும் எண்டெல்லாம் இல்லை. என்னை நம்பு, பிளீஸ். நான் உன்னோட மெல்பேர்ன் வாறன். நீ எனக்கு அந்த ஊரைக் காட்டு. மொழியைக் காட்டு. உன் நண்பர்களைக் காட்டு. ஒவ்வொண்டா எனக்கு சொல்லித்தா. நான் பழகிடுவன். ஐ லேர்ன். இந்த ஊரை மறந்திடு. இது வேண்டாம். நான் அங்க வாறன். ஐ லேர்ன். ஓகே?
லாண்ட் மாஸ்டர் ஒன்று பெருங் கூட்டத்தைச் சுமந்தபடி கோயில் வீதிக்குள் திரும்பியது. காஞ்சிபுரம் சேலை அணிந்த பெண்கள். பட்டு வேட்டி ஆண்கள். குழந்தைகள். இரண்டு கைக்குழந்தைகளுக்கு மொட்டை அடித்திருந்தார்கள். அனைவரும் லாண்ட் மாஸ்டர் பெட்டியில் நெருக்கமாக உட்கார்ந்தபடி சிரித்து அரட்டை அடித்தார்கள். அந்தச் சிறு பெட்டிக்குள்ளும் பெண்கள் தனியாக ஒரு உலகத்தையும் ஆண்கள் தமது உலகத்தையும் குழந்தைகள் அவர்களது உப கிரகத்தையும் படைத்திருந்தது மகாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இந்த வேறுபாடுகள் எல்லாமே அவளுக்குத்தான் தெரிகிறது. அவர்கள் என்னவோ இவற்றைப்பற்றி அலட்டிக்கொள்ளாது சந்தோசமாகவே இருக்கிறார்கள். தான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோமோ என்று மகாவுக்குத் தோன்றியது. பிரசன்னாவுக்கு அவளைச் செல்லமாகப் பகடி பண்ணக் கொஞ்சமேனும் உரிமை இருக்கிறதுதான். ஆனால் யாரோ ஒரு தோசைக் கடைக்காரி எப்படி அவளைப் பகடி பண்ணலாம்? அதற்காக அவள் பிரசன்னாவுடன் கோபப்பட்டு என்ன பயன்? ஒன்று, அங்கு வைத்தே அந்த ஆச்சியை எதிர்த்துப் பேசியிருக்கவேண்டும். அல்லது ஒரு சுற்றுலாப்பயணியின் அலட்சியத்தோடு கடந்துபோயிருக்கவேண்டும். அவள் இங்கு வாழப்போவதில்லை. இந்த நிலத்தின் நல்லது கெட்டதுகளில் பங்கெடுக்கப்போவதில்லை. எப்போதாவது பிரசன்னாவுக்காக, அவன் குடும்பத்தின் நிகழ்வுகளுக்காகச் சில நாள்கள் வந்து தங்குவதைத்தவிர வேறு என்ன பந்தம் இந்த நிலத்தோடு அவளுக்கு இருக்கப்போகிறது? இவர்கள் எக்கேடு கெட்டால் அவளுக்கென்ன? ஏளனம் செய்தால் செய்துவிட்டுப் போகட்டும். அவளைப்பற்றி, அவள் வாழ்வைப்பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? இவர்கள் அவள் பிறந்து வளர்ந்த அவுஸ்திரேலிய நிலத்தைப்பற்றி என்றைக்கேனும் கணக்கிலெடுத்திருப்பார்களா? அவளும் எம் பிள்ளைதானே, அவளது வாழ்வு எப்படியானது, அவளுக்கான இன்னல்கள் என்ன என்று என்றாவது கரிசனம் கொண்டிருப்பார்களா? அவுஸ்திரேலியக் குடியேறிகள் அங்கிருந்து இந்த ஊர் பற்றியும் அதன் கஷ்டங்களையும் கூட்டம் மேல் கூட்டம் போட்டுப் பேசிக்கொள்வதுபோல என்றைக்காவது இவர்கள் சிறு கல்லையேனும் அவளுக்காக நகர்த்தியிருப்பார்களா? வெளிநாட்டிலிருந்து வந்தவள் என்றாலே ஒரு ஏளனம், முன் முடிவு, இகழ்ச்சி. இங்கே எல்லோருக்கும் தத்தமது பிரச்சனைதான் முக்கியமானது. தம்முடைய சுயநலங்கள்தான் முதன்மையானது. தம்மைப்பற்றியே மற்றவர் எக்கணமும் நினைந்து கிடக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள். உறவுகள், பொதுநலம், தாயக நலம் என்பதெல்லாம்கூட தமது இருப்புகளைக் காக்கும் சுயநலங்களின் பிறிதொருவடிவம்தான். அவள் மாத்திரம் எதற்கு வேறுமாதிரி இருக்கவேண்டும்? அவளுக்குத் தேவை என்ன? பிரசன்னா என்கின்ற இத்துணை. அவன் நல்லவனாக, நேர்மையானவனாக, அவளுக்கு உண்மையானவனாக இருக்கிறானா என்பது மட்டுமே முக்கியம். மற்றபடி ஏதோ ஒரு கோயில் பிரகாரத்தில் யாரென்றே தெரியாத ஒரு தோசைக்கடை ஆச்சி எதையோ வாய்க்கு வந்ததை உளறினார் என்பதற்காக அவள் ஏன் பிரசன்னாவை நொந்துகொள்ளவேண்டும்?
ஆனாலும் மகா உர்ரென்று முகத்தை வைத்தபடியே சொன்னாள்.
ஐ வில் லேர்ன்.
அவன் புரியாமல் விழித்தான்.
விளங்கேல்ல. என்ன சொல்லுறாய்?
இல்லை. ஐ லேர்ன் என்பது ஆங்கில இலக்கணப்படித் தப்பாகிறது. ஐ வில் லேர்ன் என்று வரவேண்டும். நீதானே சொல்லித்தா என்றாய்?
பிரசன்னா சிரிப்பைக் கட்டுப்படுத்தச் சிரமப்பட்டான். ஒரு நிமிடத்துக்கு முன்னர் கொந்தளித்துக்கொண்டிருந்தவள் இப்படி உடனேயே குளிர்ந்துபோனது அவனுக்கு வியப்பைக் கொடுத்தது.
மெய்யாலுமே சமாதானமா?
இதுக்குத்தான் அம்மா என்னை பிலாக்கொட்டை குருவி என்று திட்டுவா. ம்ஹூம். பசிக்கிறது. ஏதாவது வாங்கித்தா பிரஸ்ஸி.
தோசை சாப்பிடலாமா?
போடா கழுதை.
அம்மாடி… இப்ப மட்டும் தமிழ் நல்லா வருது.
மகா பிரசன்னாவின் நெஞ்சில் செல்லமாகக் குத்திவிட்டு, ஹெல்மெட்டை எடுத்து மாட்ட, மோட்டர் சைக்கிள் உயிர் பெற்றது.
கண்ணன் லொட்ஜுக்குப் போவம் வா. போளி நல்லா இருக்கும்
போளியா?
போளி தெரியாதா? கடலைப் பருப்பு சீனி போட்டுத் துவைச்சு, உள்ள வச்சு … அதுக்கு மேல எப்பிடிச் செய்யிறதெண்டு தெரியாது. ஆனா ஆரும் செஞ்சு தந்தா, சுடச் சுடச் சாப்பிடேக்கப் பயங்கர நல்லா இருக்கும். அதோட…. கடைக்கார முதலாளியும் ஓவராக் கதச்சு உன்னை டென்சன் ஆக்கமாட்டார்.
அவள் அவனது முதுகில் ஓங்கிக் குத்த, மோட்டர் சைக்கிள் வேகம் பிடித்தது. மகா பிரசன்னாவின் முதுகோடு ஒட்டிக்கொண்டு அவனது இடுப்பை இறுக்கக் கட்டிப்பிடித்தாள். அவனது வயிற்றைச் செல்லமாகப் பிறாண்டிக் கிச்சுக் கிச்சு மூட்டினாள். இந்தச் சள்ளை வயிற்றை எப்படியும் குறைக்கப்பண்ணவேண்டும். மெல்பேர்னுக்கு சென்றதும் இவனை ஜிம்முக்கு கூட்டிப் போகலாம். வேண்டுமானால் டெனிஸ் விளையாடவும் பழக்கலாம். புட்டு, சோறு என்று தினமும் சாப்பிடுவதைக் குறைத்து சாலட்டுக்கும் மரக்கறி அவியலுக்கும் ஆளை மாற்றவேண்டும். பிரசன்னா மோட்டார் சைக்கிளை ஓட்டியபடியே உற்சாகமாக எதையோ பேசிக்கொண்டே வந்தான். ஆனால் அது எதுவும் இவளது காதுகளை எட்டாமல் காற்றிலே கரைந்து போனது. மெல்பேர்னிலிருந்து மகா அவனுக்கென்று வாங்கி வந்திருந்த வட்டக்கழுத்து டீசேர்ட்டை அன்று அவன் அணிந்திருந்தான். அவனுடைய சிவந்த பின் கழுத்தின் நடுவே, ஐதான மயிர்க்கற்றைகளுக்கிடையே, கறுப்பாய் இரண்டு மச்சங்கள் தென்பட்டன. அவள் அவற்றைப் பார்க்கையில் பதிலுக்கு அவை அவளை நோக்கிக் கண் சிமிட்டினாற்போலத் தோன்றியது. பிடறியில் கண்ணிருக்கும் மச்சக்காரன் அவன். மகாவுக்கு அக்கணம் அவளது மச்சக்காரனை முத்தமிட்டால் என்ன என்று தோன்றியது. அவள் தன் அணைப்பை மேலும் இறுக்கியவாறு அவனது கழுத்தை அண்மித்தாள். பிரஸ்ஸி அதன் பாட்டுக்கு வாய் ஓயாமல் பேசிக்கொண்டேயிருந்தது. மகா வேகமாக நெருங்கி பிரசன்னாவின் கழுத்தில் நச்சென்று முத்தமிட முயற்சிக்க, நங்கென்று இருவருடைய தலைக்கவசங்களும் முட்டிக்கொண்டன. ஷிட் என்றபடி சிரிப்பை அடக்கமாட்டாமல் அவள் நிமிர்ந்து உட்கார, மோட்டர் சைக்கிள் சற்று சமநிலை தடுமாறி உலாஞ்சியது. ஆடாமல் சும்மா இரு மகா என்று பிரசன்னா கத்தினான். அவள் நிறுத்தாமல் சிரித்துக்கொண்டேயிருக்க, எதிர்க்காற்று பட்டு அவளது கண்களிலிருந்து நீர் ஓடியது. மகா அனிச்சையாக, and I hope I never lose you, hope it never ends என்ற டெய்லரின் பாடலை முணுமுணுத்தாள்.
வழியில், வல்லைப் பாலத்தருகே செந்நாரை ஒன்று அடிபட்டுக் கிடந்தது.
விதுவிதிர்த்துப்போன மகா பிரசன்னாவின் முதுகில் தட்டி மோட்டர் சைக்கிளை நிறுத்தச்சொன்னாள். அவன் ஏன் எதற்கு என்று புரியாமல் மோட்டர் சைக்கிளை ஒதுக்குப்புறமாக நிறுத்தவும், அவள் அவசரமாக இறங்கி, பறவை கிடந்த இடத்தை நோக்கி ஓடினாள். பறவைக்கு இன்னமும் உயிர் இருந்தாற்போலத் தோன்றியது. காலையில் அவர்கள் அவ்வழியைத் தாண்டும்போது அது அங்கே கிடக்கவில்லை. சற்று முன்னர்தான் ஏதேனும் வாகனம் அதனோடு மோதியிருக்கவேண்டும். பாவம். அடி வாங்கிய பின்னரும் முறிந்த இறக்கையோடு பறக்க முயன்று, முடியாமல் பாலத்தருகே அது விழுந்துவிட்டது. அதன் காயத்தைக் கொத்தித் தின்னுவதற்காக ஏலவே அவ்விடத்தைக் காகங்கள் சுற்றி வளைத்திருந்தன. மகாவைக் கண்ட பின்னாலும் அவை அவ்விடத்திலிருந்து அசையாமல் இரைந்தபடி நின்றன. மகா அவற்றைத் துரத்திக் கலைத்துவிட்டு, அடுத்து என்ன செய்வதென்று தெரியாது சுற்றும் முற்றும் பார்த்தாள். பிரசன்னா பின்னாலேயே ஓடிவந்தான்.
என்ன செய்யிறாய் மகா? வா போவம்.
பிரசன்னா அழைக்க அவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.
பறவைகள் காப்பகத்துக்கு அழைப்பு எடு. உடனேயே எடு. இதுக்கு இன்னும் உயிர் இருக்கு.
பிரசன்னா தன் சிரிப்பைக் கட்டுப்படுத்தியவாறு சொன்னான்.
பறவைகள் காப்பகமா? அப்பிடி ஒண்டும் இஞ்ச இல்ல. இது கொஞ்ச நேரத்தில செத்துப்போயிடும் மகா. ஹையேஸ் எதுவும் அடிச்சிருக்கும். ஆயிரக்கணக்கில வந்து இறங்கேக்க ஒண்டிரண்டுக்கு இப்பிடி நடக்கும்தான். இஞ்ச மனிசரே ஒவ்வொரு நாளும் அடிபட்டுச் சாகுதுகள். கொக்குக்கெல்லாம் எவன் கோல் பண்ணுவான்? அதிண்ட விதி. வா நாங்க போவம்.
நோ வே. பஃக் நோ. இது கொக்கில்லை. பிஃளமிங்கோ. யாரையாவது கூப்பிடுறியா பிளீஸ்? எதாவது மிருக வைத்தியசாலை அருகில் இருக்குதா? நாங்களே தூக்கிக்கொண்டு போனால் காப்பாத்திடலாம்.
மகா கண்டல் நீருக்குள் இறங்கிப்போய் தண்ணீர் மோந்து வந்து அந்தச் செந்நாரை மீது தெளித்தாள். அதன் கழுத்தடியில் மாத்திரம் சன்னமாக மூச்சு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. வேறு அசைவுகள் ஏதுமில்லை. வயிற்றுப்பகுதியில் இரத்தம் இன்னமும் கசிந்துகொண்டிருந்தது. இறக்கையும் ஒடிந்துவிட்டது. இனி இது உயிர் பிழைப்பது கடினம்தான். பிழைத்தாலும் பறக்கமுடியாது. பருவம் மாறி, அதன் கூட்டம் வட திசை நோக்கிப் புலம்பெயர்ந்துவிட்டால் தனியாக இதனால் இங்கே இரை தேடவும் முடியாது. அவள்தான் என்ன செய்வாள்? அந்தப்பறவையின் இறகுகளில் அந்திம வானின் இளஞ்சிவப்பு வண்ணம் இன்னமும் பளபளத்துக்கொண்டிருந்தது. அவுஸ்திரேலியாவில் என்றால் பறவைகள் காப்பகத்தினர் வந்து அதனைத் தூக்கிச்செல்வார்கள். காப்பாற்ற முடியாது எனில் துன்புறுத்தாது கருணைக்கொலையாவது செய்வார்கள். மகா அருகிலிருந்த புதரில் சில கிளைகளை முறித்தெடுத்து அப்பறவை மேலே பரப்பிவிட்டு மறுபடியும் தண்ணீர் மோந்து தெளித்தாள்.
தூரற்றே கண்டலுக்குள் நின்ற செந்நாரைகள் ஒற்றைக் காலில் நடன ஒத்திகை செய்வது தெரிந்தது. ஆயிரக்கணக்கில் கூடி நின்ற அந்தக் கூட்டத்துக்கு ஒரு நாரையின் மரணம் என்பது சிறு பொருட்டே இல்லை. இந்த ஊருக்கு அந்த நாரை தன் கூட்டத்தோடு நெடுந்தூரம் பயணம் செய்து வந்ததையோ, இங்கிருக்கும் ஏரியில் அது மீன்களையும் புழுக்களையும் தின்று வாழ்ந்ததையோ, தம்மோடு கூட்டாக நடனமாடி மகிழ்ந்ததையோ, இக்கணம் இப்படிக் கேட்பாரற்று அது அடிபட்டுக் கிடப்பதையோ அந்தக்கூட்டத்தில் ஒரு பறவைதன்னும் நினைவுகூரப்போவதில்லை. அவள் கொஞ்சம் நகரவும் காகங்கள் மறுபடியும் அப்பறவையை நெருங்கி வர முயன்றன. அதைப்பார்த்து கோபத்தில் கல் எடுத்து எறியப்போன மகாவைப் பிரசன்னா வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு மோட்டர் சைக்கிளடிக்கு வந்தான். மகா திரும்பித் திரும்பி அந்தக் காட்சியையே வெறித்துப் பார்த்தபடி தலைக்கவசத்தின் பட்டியை இறுக்கினாள். தயக்கத்துடன் அவள் பின் இருக்கையில் ஏறி உட்கார, பிரசன்னா மோட்டர் சைக்கிளை இயக்கினான். அந்தப் பறவை கிடந்த திசையில் காகக்கூட்டங்கள் குவிவதைக் காணக்கூடியதாக இருந்தது. சில தெரு நாய்களும் அந்தப் பக்கம் ஓடி வந்தன. சீரற்ற இடைவெளியில் அந்தப் பறவையின் கழுத்து துடித்துக்கொண்டிருந்தது நிழலாடியது. பேரச்சம் ஒன்று வியர்வையைப்போல அவள் உடலெங்கும் கசிய ஆரம்பித்தது. பிரசன்னா எதையோ சொல்லியதை அவள் கவனிக்கவில்லை. மோட்டர் சைக்கிள் அச்சுவேலி கிராமத்துக்குள் நுழைய, தூரற்றே வானத்தில் இரண்டு கரும் பருந்துகள் வட்டமிட்டுக்கொண்டிருந்தது மாத்திரம் தெரிந்தது. டெய்லரின் பாட்டு மூளைக்குள் தானாக இரைந்தது.
That’s the kinda heartbreak time could never mend.
எதிர்க்காற்று மகாவினது முகத்தில் பலமாக அடித்து அவளது கண்ணீரை ஏந்தியபடி கடந்துபோனது.
000
வெளியீடு: விஷ்ணுபுரம் பதிப்பகம்
இணையத்தில் வாங்க இங்கே சொடுக்கவும்.

ஜே.கே
அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் ஜே.கே, ‘படலை’ என்ற வலைத்தளத்தில் தொடர்ச்சியாக எழுதிவருபவர். இவர் எழுதிய ‘என் கொல்லைப்புறத்து காதலிகள்’ நூல் நல்ல கவனிப்பை பெற்றது. சமாதானத்தின் கதை என்ற சிறுகதைத்தொகுப்பும், கந்தசாமியும் கலக்சியும் என்ற நாவலும் இதுவரை அச்சுப்பதிப்பாக வெளிவந்து வரவேற்பைப் பெற்றன.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
