ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்

ஓவியம் : திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

கழிமுகத்தின் மேல்
விசிறிகள் சுழன்று படபடக்க
ஹெலிகாப்டர்
எங்களைக் கடந்துசெல்கிறது
அதே கடற்கரையில்
நவம்பரில்
பிறந்த குட்டிநாய்கள்
ஹெலிகாப்டரோடு சேர்ந்து பறக்கத் தொடங்கின
சிறுவர்கள் விடும் பட்டங்கள் சற்று உயரப் பறந்தன
கடலில் தூரத்தில்
துறைமுகத்துக்கு வெளியே
நின்றுகொண்டிருக்கும் கப்பலின்
தாமச நங்கூரம்
மெதுவாய் அசையத் தொடங்குகிறது
கப்பலும் மெதுவாய்…

000

நள்ளிரவு போய் விட்டது
நடுச்சாமம்
வந்து விட்டது
விளக்குகள் அணைக்கப்பட்ட இருட்டில்
வந்து வந்து
நீ என்னை முகர்ந்து போகிறாய்
ப்ரௌனி…
உன் உருவரைக்கோடுகளை மட்டுமே
எனக்குப் பார்க்கக் கிடைக்கிறது ப்ரௌனி…
உனது அன்பின் அளவில் அல்ல…
மன்னித்துக்கொள் ப்ரௌனி.

000

மறுபடியும்
கழிமுகம்
மறுபடியும்
மணல் குன்று
என் காலித்தன்மையை
நிறைக்க
வா
எனது
ததும்பித் திளைக்கும் நீலமே

000

புறநகரின் ஓரத்தில் வீற்றிருக்கும்
மயானத்தில்
அவிந்தெரியும்
என் சடலத்தின்
நெஞ்செலும்பு
அனலின் மூர்க்கத்தில்
நேர்குத்தாய் நெக்குவிட்டு
சடக்கென்று
முறிகிறது…
சொற்பமே என் இலைகள்
என்று சொல்லி
தன்
கிளைகளை அந்திக்குள்
நீட்டும் அரசமரத்தில்
பொற்காகங்கள்
வந்து உட்கார்கின்றன
அப்போது.

000

சக்கரம் நொறுங்கி
ஒரு ஆள்
முட்டியிட்டது போல
சரிந்திருக்கும்
தேர்…
எத்திசைக்கும் சொடுக்கப்படாத
ஏக்கத்தின் வான்நோக்கி முகம் உயர்த்திநிற்கும்
கருப்புக் குதிரைகள்
கருக்கிருட்டில்
தாமசமும் காமமாய் கண்களில்
ஏறிக்கிடக்கும்
வெளிக்கோபுர வாசல்
நாகரிகம்
சமீபத்தில்தான் கழுத்தறுந்து கிடக்கும்
ரத்தக்கவுச்சி.
சல்லியன்
கைவிட்டுப் போய்விட்டான்
குதிரைகளே குதிரைகளே.

000

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss