கள்ளத்தில் பெருகும் காதலின் கனிச்சாறு : இசை

சுடர்த் தொடீஇ! கேளாய் ! தெருவில் நாம் ஆடும்
மணற்சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்

அன்னையும் யானும் இருந்தேமா, “ இல்லீரே
உண்ணு நீர் வேட்டேன்” என வந்தாற்கு , அன்னை
“அடர்பொற் சிரகத்தால் வாக்கி சுடரிழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா! “என்றாள் ; என, யானும்
தன்னை அறியாது சென்றேன், மற்று என்னை

வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு
“அன்னாய்! இவனொருவன் செய்ததுகாண்” என்றேனா,
அன்னை அலறிப் படர்தரத், தன்னையான்
“உண்ணுநீர் உக்கினான்” என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டம்
செய்தான் அக்கள்வன் மகன்.
( கலி: 51)

( கோதை – மாலை, பட்டி- குறும்பன், நலிய- பற்றி இறுக்க, தெருமருதல்- மருளுதல், புறம் பழித்தல்- செல்லக் கோபம் )

குறிஞ்சிக்கலி’யில் தனித்து நிற்கும் கவிதை இது. சங்கக் கவித்திரட்டில் பளீரிடும் கவிதைகளில் ஒன்று. பிரத்யேகமான சூழலில் பிரத்யேகமான கவிதைகள் பிறக்கின்றன. இதில் வெளிப்படும் குறும்புத்தனங்களால் இதை பாரதியின் ‘ தீராத விளையாடுப் பிள்ளை’ கவிதையின்யின் மூலம் என்று அனுமானிக்கிறார் ம.ரா.போ. சிறுவர் உலகின் குறும்புத்தனங்களை பேசுபவை என்கிற அடிப்படையில் அது சரியே. ஆனால் பாரதி கவிதையில் இக்கவிதையில் உள்ள ‘ காதலின் கள்ளம்’ இல்லை.

தலைவி தோழியிடம் முன்பொருநாள் நடந்த தன் காதல் நாடகத்தைச் சொல்கிறாள். அவளது பிராயத்துத் தோழனே இப்போது காதலன் ஆகிவிட்டிருக்கிறான்.

நமது விளையாடுப் பருவத்தில் எவன் நமது சிற்றிலை காலால் சிதைப்பானோ, நம் பூவைப் பிடித்திழுப்பானோ, நமது சித்திரப்பந்தைப் பறித்துக் கொண்டு ஓடுவானோ அந்தச் சிறுபட்டி, அன்றொரு நாள் வாசலில் வந்து நின்று “உண்ண நீர் வேண்டும்” என்று கேட்டான். அன்னையும் ஊட்டி வரச் சொன்னாள். வந்திருப்பது இவன் என்றறியாமல் சென்ற நான், நீர் ஊற்றிக் கொண்டிருக்கையில், என் கைகளைப் பற்றி இழுத்து வம்பு செய்தான். இதை எதிர்பாராத நான் “ இவன் செய்வதைக் காணுங்களேன்” எனச் சட்டென்று அலறிவிட்டேன். அலறல் கேட்டு வந்த அன்னையின் முன் “ இங்கே பார் இவனுக்கு எப்படி விக்குகிறது” என்றேன். அதைக் கேட்ட அன்னையும் அவன் முதுகை நன்றாகத் தடவிக் கொடுத்தாள். அப்போது என்னைக் கடைக்கண்ணால் நோக்கி, கொல்வான் போல் மெல்ல நகைத்தான் அக்கள்வன் மகன்.

அழகான நாடகக் காட்சி. இது போன்றே, இதைப் பதிலி செய்யும்படி பல காட்சிகள் சினிமாக்களில் வந்து விட்டன. ஆனால் முதன்முறை அரங்கேறியது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்.

ஒளிக்க, ஒளிக்க வெளித்திமுறுவது மறைக்க , மறைக்க மேடை காண்பது காதல். அதிகம் விளக்கினால் இக்கவிதையின் கள்ளம் கரைந்துவிடும். அதுவே இதன் அழகு. அந்த நோக்கு கிட்டத்தட்ட புணர்ச்சிதான். அவ்வின்பத்தினும் அதிகம் என்பதுபோல் தொனிக்கிறது இக்கவிதை.

காமத்துப்பாலில் அய்யன் இந்த ’நோக்கை’ பாடி வைத்துள்ளார். ‘குறிப்பறிதல்’, ‘குறிப்பறிவித்தல்’ என்கிற அதிகாரங்கள் இரண்டும் கள்ளம், கள்ளம் என்றே பிதற்றுகின்றன. நான் அடிக்கடி வியந்துரைக்கும் கவிதை..

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

காதலர் கடைக்கண்ணால் நோக்கிக் கொள்ளும் அச்சிறுநோக்கம் இருக்கிறதே, அதுவே காமத்தில் பாதியை நிறைத்துவிடுகிறது. இப்படிச் சொல்லவில்லை அய்யன். “செம்பாகம் அன்று பெரிது” என்கிறான். அதாவது அதனினும் அதிகம். உச்சியில் பறந்து கொண்டிருக்கும் புறாவொன்று தன் வெற்றித் திளைப்பை கரணமடித்துக் காட்டுவது போல் உள்ளது எனக்கு இவ்வரி. ’செம்பாகம்’ என்பதே உச்சம்தான் அய்யனே!

காதலர் நடித்து, நடித்து நடிப்பில் கரை கண்டுவிடுகின்றனர். அந்தக் கள்ள நோக்கையும் ஒளித்துக் கட்டிவிட்டு, பிறர்முன் கூட்டத்தில் ஒருவர் போல் சாதாரணமாகத் தோன்றுமளவும் அவர்கள் தேறிவிடுகிறார்கள். சாதாரணம் ஆவதன்றோ நடிப்பின் உச்சம்!

ஏதிலார் போல் பொது நோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

மனுஷ்யபுத்திரனிடம் ‘ ரகசிய மலர்கள்’ என்றே ஒரு கவிதை உண்டு. ‘ரகசிய மலர்கள்’ அப்படி மணக்க அதில் என்னதான் இருக்கிறது? ’ரகசியம்’ இருக்கிறது.

தமிழில் தேவதேவன் ஆன்மிகக் கவிஞர் என்று போற்றப்படுபவர். தாடிச்செறிவால் அப்படியே தெரிபவர். அவரைத் தொழுது பின் தொடரும் பவ்யமான பக்தர்க்ளும் உண்டு. அவரது சமீபத்திய கவிதை ஒன்றை நண்பன் ஆனந்த்குமார் அனுப்பி வைத்துக் கருத்துக் கேட்டான். “ softporn from devotional poet” என்று பதிலளித்தேன்.

தக்காளிச் சுவை

இயற்கை வேளாண்மையில்
கொழித்த தக்காளிப் பழம் அல்லவா
சிக்கென்ற இனிப்பும் உறைப்பும்
வண்ணமும்
அழுத்தமாய்க் கூடிய அற்புதச் சுவையுடன்
இருந்தது…

உடன் வந்து கொண்டிருந்த
அழகியும் அன்பியுமானவரிடம்
“இதழ்ச்சுவை போல” என்று
வாய்க்கு வந்த சொல்லைச் சொல்ல
அச்சமாய் இருந்தது..

அதனாலேயும்தானே அது
கூடுதலான சுவையுடன் இருந்தது?

இரவு வணக்கம் ஆன்மிகக் கவிஞரே!

“சாதா மாங்காய் “ என்றொரு கவிதை உள்ளது. சரியான திருட்டு மாங்காய் . எழுதியது நான்தான்.

சாதா மாங்காய்

பூங்காவின் புதரண்டையில் இன்பம் விளைகிறது.
ஒரு திருட்டுமாங்காய் பறிக்கப்படுவதைப் பார்த்தேன்.
என் கண்ணிரண்டில்
ஒன்று, சொல்பேச்சு கேட்பது
மற்றொன்றோ , அடங்காபிடாரி
அது முகத்தை விட்டுப் பறந்துபோய்
திருட்டைச்சுற்றி வட்டமடிக்கிறது.
திருட்டுக்கை திருட்டு மார்பைத் தொட்டு
திருட்டுசுகம் எழுகிறது
குழந்தைகளின் ஊஞ்சல்கள் பூப்படைந்து விட்டன போலும்
அவை தமக்குள் ஏதோ கிசுகிசுத்துக் கொள்கின்றன.
அம்மாக்கள் சிரிப்பாணி பூக்க,
மாலைநடைக்காரர்கள்
குரங்கு ரூபம் கொள்கிறார்கள்.

இப்போதே
உம்மை மொய்க்கும்
எல்லாக் கண்களையும் ஓட்டிக்கொண்டு
இப்பூங்காவை காலி செய்ய என்னால் முடியும்.
ஆனால்
அக்கணமே உன் திருட்டுமாங்காய் சட்டென மறைந்திடுமே தம்பி ?
சாதாமாங்காய்
எப்போது ருசித்தது பிள்ளாய் ?

ஆணுக்குப் பெண் ஒரு ரகசியம். பெண்ணுக்கும் அப்படியே. அது தீர்வதில்லை. நிர்வாணத்தில் தீரும் என்று சிலர் சொல்கிறார்கள். ஐயன்மீர்! அப்படி ஒன்றும் தெரியவில்லை.

“சுடர்த்தொடீ கேளாய்!” என்றால் தமிழின் இனிமை என்று பொருள். அதன் செழுமை என்று பொருள். “சுடர்த் தொடீ கேளாய்!” என்றால் தமிழின் மூமுது பழமை என்று பொருள். திரும்பத் திரும்ப அதை “ அழகிய வளையல்கள் அணிந்த பெண்” என்று மட்டுமே வாசிப்பவன் ஒரு வகையில் சங்க இலக்கியம் வாசிக்க லாயக்கறவன்.

000

இசை

கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

நன்றி : தமிழ் விக்கி


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss