மொழிபெயர்ப்பாளரின் பதட்டம்

சிலநேரங்களில் சொற்பிறப்பியலை அடிப்படையாகக் கொண்டு பல புனைவு வரலாறுகள் கட்டமைக்கப்படுகின்றன. ஒரு சொல் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு அர்த்த அடையாளங்களோடு வாழ்ந்து, மரித்து, மீண்டும் பிறப்பெடுத்து, உருமாறித் திரிந்துவரும். நாம் அந்த இறப்புகளுக்கும் பிறப்புகளுக்கும் தொடர்பிருப்பதாய் கற்பனை செய்து, அதைவைத்து ஒரு வரலாற்றைப் புனைவோம். ஆனால், இந்தத் தொடர்புகளைக் கற்பனை என்ற அளவிலேயே கணக்கில் எடுத்துக்கொண்டு சில அர்த்தங்களை உருவாக்கிக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, மொழிபெயர்க்கும் எல்லோரும் தாம் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு எதையோ பெயர்ப்பதாகக் கற்பனை செய்கிறார்களா? இதற்கு நாம் ஆமென்றோ இல்லையென்றோ ஒருமித்த பதிலை சொல்லிவிடமுடியாது.

பொதுவாக மொழியுடனான நம் உறவில் நிறைய வன்முறைகள் நிறைந்திருக்கின்றன. வன்முறை என்பது அழிவில் மட்டுமின்றி ஆக்கத்திலும் இருக்கலாம், புதிய எல்லைகளை, அடையாளங்களை ஆக்குதல், அதில் மனிதர்களைப் பொருத்துதல் போன்றவையும் வன்முறைச் செயல்பாடுகளே. எழுத்தாளருக்கும் படைப்புக்குமான உறவு, படைப்புக்கும் பொருளுக்குமான உறவு எனப் பலவும் அதிகாரச் செயல்பாடுகளாக உருமாறுகின்றன. இதேபோல மொழிபெயர்ப்பு சார்ந்த பல சொற்களும் உண்டாக்கும் கற்பனையையும் வன்முறையானது என்று விளக்கலாம். பிரச்சினை மொழியின் இந்த வன்முறை குணத்தை முற்றாக அழிப்பது எப்படி என்பதல்ல, மாறாக மட்டுப்படுத்துவது எப்படி என்பதே.

மொழிபெயர்ப்புக்கான சொற்களிடம் வரலாம். ட்ரான்ஸ்லேஷன் என்ற ஆங்கிலச் சொல்/நவீனச் செயல்பாட்டிற்கு இணையாக, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு ஒரு பிரதியை மாற்றும் செயல்பாட்டைக் குறிக்கவும் மொழிபெயர்ப்பு என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல்லிலிருக்கும் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு பெயர்த்தல் என்ற வன்செயல்பாட்டைக் குறித்து ஹெப்சிபா இஸ்ரேல் எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்பின் உள்ளிருக்கும் படைப்பூக்கமிக்கச் செயல்பாட்டைக் குறிப்பிட விரும்பும், சீனிவாச ராமானுஜம் போன்ற சிலர் மொழியாக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். மொழிமாற்றுதல் என்ற சொல்லும் பயனில் இருந்திருக்கிறது. தமிழில் என்ற சொல்லையும் சிலர் பயன்படுத்துகிறோம், தமிழில் எழுதியவர்/தமிழில் ஆக்கியவர் என ஆக்கச் செயல்பாட்டை மறைமுகமாகச் சுட்டுவதோடு இலக்கு மொழியின் தனித்தன்மையையும் இது சுட்டுகிறது. அதாவது இங்கே மொழிபெயர்ப்பாளர் ஒரு ‘தமிழ் மொழிபெயர்ப்பாளர்’. கத்தோலிக்க சபைக்கும் தமிழுக்குமான ஆரம்பகாலத் தொடர்பில் ஹென்றிக் ஹென்றிகேஸ் எழுதிய தம்பிரான் வணக்கம், தமிழின் முதல் அச்சுப் புத்தகம். இதில் அண்டிரிக்கிப் பாதிரியாரால் தமிழிலே ‘பிரித்தெழுதப்பட்ட’ தம்பிரான் வணக்கம் என்றிருக்கிறது. மொழிபெயர்ப்புச் செயல்பாட்டைச் சுட்ட பிரித்தெழுதுதல் என்ற சொல் பயனாகியிருக்கிறது. திருப்புதல் என்ற சொல்லும் பயனில் இருந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு சீர்திருத்தக் கிறுஸ்துவ பைபிள் மொழிபெயர்ப்புகளில் இதுவே பயன்பட்டிருக்கிறது. எ.கா: ‘ரேனியஸ் ஐயர் அவர்களால் தமிழிலே திருப்பப்பட்டது.’ இந்தத் திருப்புதல் என்ற சொல் ஆர்வமூட்டுவது. திருப்புவது என்பதற்கு இப்போது பேச்சுவழக்கில் பொதுவாக இருக்கும் திசை திருப்புதல் என்ற பொருளோடு, ஒரு விசயத்தை மீண்டும் மீண்டும் வாசிப்பது என்பதுபோன்ற பொருள்களும் இருக்கின்றன. குணப்படுத்துதல் என்ற பொருளும், இது நோய்க்கு முந்தைய நிலைக்குத் திருப்பிச் செல்லவைத்தல் என்ற பொருளில் உருவானதென கருதலாம். அதேபோல பிரித்தெழுதுதல் என்று சொல்லும்போது பொருளை ஒரு மொழியிலிருந்து பிரித்து இன்னொன்றில் பொருத்தி எழுதுதல் போன்றதொரு கற்பனை செயல்பட்டிருப்பதாகச் சொல்லலாம். குர்ஆன் மொழிபெயர்ப்புகளில் தர்ஜுமா என்ற அரபிச் சொல் பயனாகியிருக்கிறது. தர்ஜுமா என்ற சொல்லுக்கு ‘சுயசரிதை’ என்ற பொருள் ஒருகாலத்தில் இருந்திருக்கிறது.

ஒரு மொழிபெயர்ப்பாளர் தன் செயல்பாட்டை எப்படிக் கற்பனை செய்கிறார் என்பது அவர் பயன்படுத்தும் சொல்லினால் மட்டும் விளக்கிவிடப்படுவதில்லை. மொழிபெயர்ப்பாளரின் கற்பனை அவர் எப்படி மொழிபெயர்ப்புப் பிரதியைப் புரிந்துகொள்கிறார், மொழியாக்கப்படும் மொழியில் அவரது திறம் போன்றவை குறித்தது மட்டுமல்ல. மொழிபெயர்ப்பாளர் தனது பணி, நோக்கம், செயல்பாடு ஆகியவற்றை எவ்வாறு உருவகப்படுத்திக்கொள்கிறார் என்பதிலும் அவரது கற்பனை முக்கியமானது, மொழியாக்கப் பிரதியை உருவாக்குவதில் இந்தக் கற்பனை அதிக தாக்கம் செலுத்துவதும் கூட. உதாரணமாக, ஒரு மொழிபெயர்ப்பாளர் பாரதி பாணியில் எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்களை கொணர்ந்து சேர்ப்பவராக நினைத்துக் கொள்கிறாரா, ஒரு பிரதியின் அல்லது எழுத்தாளரின் பக்தராக நினைத்துக் கொள்கிறாரா, மொழி இடைவெளிகளில் அலையும் பயணியாக நினைக்கிறாரா இப்படிப் பலவும். தன் சுயம், பணி குறித்த இந்தக் கற்பனைகளில் நிறைய மொழிபெயர்ப்பாளர்கள் தன்னை ஒரு கூடுபாயப்படும் உடலாக, குரலற்ற குரலாக, மிமிக்ரி கலைஞராக, அரூபமாகவும் கற்பனை செய்துகொள்வதுண்டு. இவற்றில் சில கற்பனைகள் பயனுள்ளவை, சில ஃபாண்டஸிகள். இந்தக் கற்பனைகள் வழி மொழிபெயர்ப்பாளர்கள் சில கருத்தாக்கங்களை வெளிப்படையாகவோ, முழுக்க சிந்திக்காமலோ உருவாக்கிக் கொள்கிறார்கள். அவற்றில் முக்கியமானது அவர்கள் எதை மொழிபெயர்க்கிறார்கள் என்பது?

தமிழில் நடைபெற்ற மொழிபெயர்ப்புச் செயல்பாடுகளை நம் வசதிக்காக சில வகைமைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். முதலாவது நமது உரை மரபு, இது வேறு மொழிகளிலிருந்து அல்லாமல், தமிழ் மொழி வெளிக்குள்ளேயே நிகழ்வது. செய்யுளுக்கு உரைநடையாக உரையெழுதுவது. ஒரு மொழியில் (குறிப்பிட்ட சொற்களில்) சொல்லப்பட்ட ஒன்றை, அதே மொழியில் (வேறு சொற்களில்) திருப்பிச் சொல்லும் இதனை மொழிக்குள்ளேயே செயல்பட்டாலும் இதை மொழிபெயர்ப்புச் செயல்பாடாகவே நாம் கருதலாம். இரண்டாவது வேறு மொழிப்பிரதிகளை தமிழில் திருப்பி எழுதுவது. இதில் இரண்டு போக்குகளைக் காணலாம். கம்பனின் ராமாயணம் போன்ற படைப்பூக்கமிக்க ஆக்கங்கள் தொடங்கி, புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்புகள் வரையான பலவும் தாம் எடுத்துக்கொண்ட மூலப் பிரதியின் ‘கருத்து’க்கு அல்லது ஆன்மாவுக்கு முக்கியத்துவம் அளிப்பவை. சீர்திருத்தக் கிறுஸ்தவ காலத்து பைபிள் மொழிபெயர்ப்புகள் தொடர்ந்து தற்கால நவீன இலக்கிய மொழியாக்கங்கள் வரை பலவும் தாம் எடுத்துக்கொண்ட மூலப் பிரதியின் வடிவத்துக்கு(ம்) அதிக முக்கியத்துவம் அளிப்பவை. இவற்றுக்கிடையே குர்ஆன் மொழிபெயர்ப்புகள் சுவாரசியமான இடையீடாக இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அகமது பாகவி செய்த மொழிபெயர்ப்பில் வடிவம், கருத்து இரண்டுக்கும் முக்கியத்துவம் அளிப்பதற்காக, மொழிபெயர்ப்பில் இடையிடையே அடைப்புக்குறிகளுக்குள் சில ‘விளக்கங்களை’ அளிக்கிறார். நாம் அடைப்புக்குறிகளைச் சேர்த்துப் படித்தாலும், விட்டுவிட்டுப் படித்தாலும் பொருள்படவேண்டும் என்பதே நோக்கம். அடைப்புக்குறிகளுக்குள் இருப்பவை அரபிக்கும் தமிழுக்குமான இடைவெளிகளை நிரப்புபவை என்றும், வெளியிலிருப்பவை ‘நேர்’ மொழிபெயர்ப்பு என்றும் பொருள்.

ஒரு நவீன தமிழ் மொழிபெயர்ப்பாளரிடம் நீங்கள் எதை மொழிபெயர்க்கிறீர்கள் என்று கேட்டால் சில பதில்கள் அடிக்கடி வரும். பொருள் அல்லது அர்த்தம், மூலப்பிரதியின் கற்பனை, அது உருவாக்கும் உணர்வுகள் இப்படி. சிலர் மூலப்பிரதியின் நடையை, நயத்தை, ஓசையை மொழிபெயர்ப்பதாகச் சொல்லலாம். கொஞ்சம் மத வாசனையோடு சொல்வதானால் இவர்கள் அனைவரும் மூலப்பிரதியின் உடலையோ, ஆன்மாவையோ மொழிக்கடத்த முயல்கிறார்கள். இதில் உடல், ஆன்மா போன்றவற்றை தங்கள் விருப்பத்துக்கேற்ப வரையறுத்துக் கொள்கிறார்கள். இவை எல்லாமே வெறும் பிரதியை வைத்தே அறிந்துகொள்ளக் கூடியவை, பிரதிக்குள் இருப்பவை என்று சொல்லலாம். சில மொழிபெயர்ப்பாளர்கள் மூலப்பிரதி ஆசிரியரின் நோக்கத்தை மொழிக்கடத்துவதாக, அல்லது அதற்கு நேர்மையாக இருப்பதாக, அதற்கு நீதி வழங்குவதாகச் சொல்வதுண்டு. இந்த ஆசிரியரின் நோக்கம் என்பது பிரதிக்குள் மட்டுமே இருக்கும் ஒன்றென நம்மால் சொல்லிவிடமுடியாது. இது உடல், ஆன்மா என்பதைத் தாண்டி ‘கடவுளின் விருப்பம்’, விதி என்பதுபோன்றவொரு கற்பனைக்குள் செல்கிறது. இந்தப் பதில்களில் எனக்குப் பெரும்பாலும் திருப்தி கிடைத்ததில்லை, ஒரு மொழிபெயர்ப்பாளர் மொழியியலாளராகவோ, மொழியியல் தத்துவவியலாளராகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை எனினும், ஒரு தொழிலைப் பயில்பவராக சில விசயங்களை நமக்கு நாமே தெளிவுபடுத்திக்கொள்வது அவசியம். இதை யோசிக்கும்போது மொழிபெயர்ப்பாளர்களிடம் செயல்படுவது ஒருவகையான ‘பதட்டம்’ என்றே நான் அடையாளப்படுத்திக்கொள்கிறேன். கீர்க்ககார்டின் வரையறையில் பதட்டம் என்பது சுதந்திரத்தோடு தொடர்புடையது. நம்முன் பல சாத்தியப்பாடுகள் இருக்கின்றன, அவற்றில் எதையும் நம்மால் செய்யமுடியும் என்பதனால்தான் நாம் பதட்டமடைகிறோம். ஒரு மொழிபெயர்ப்பாளர் என்னதான் மூலப் பிரதிக்கு நேர்மையாக இருப்பதாகச் சொல்லிக்கொண்டாலும், அவரது செயல்களம் இயங்குமொழிதான். இயங்குமொழியில்தான் அவரது சாத்தியப்பாடுகளை அனைத்துமே இருக்கின்றன. இந்தப் பதட்டத்தைப் மேலும் புரிந்துகொள்ள ஒரு பைபிள் மொழிபெயர்ப்பாளரிடமிருந்து தொடங்கலாம்.

சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் ஒரு ஜெர்மானியர், 1800களின் முதல் பாகத்தில் கிறிஸ்துவ ஊழியப் பணியில் தமிழகத்தில் பணியாற்றியவர். ரேனியஸ் குறித்து தொ.பரமசிவன் தொகுத்த ஒரு கட்டுரைத் தொகுப்பு தமிழில் வெளியாகியிருக்கிறது. தமிழ் சீர்திருத்த கிறிஸ்துவ அடையாளத்தில் மொழிபெயர்ப்பின் பங்கு குறித்த ஹெப்சிபா இஸ்ரேலின் புத்தகம்1 இதுகுறித்து மேலும் அறிய உதவுவது. இக்கட்டுரையிலும் பல தகவல்கள் அப்புத்தகத்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்றன.

கத்தோலிக்கர்களைப் போலன்றி பைபிள் அனைவரும் படித்தறிய வேண்டிய ஒன்றென்ற கருத்துகொண்டிருந்த சீர்திருத்த கிறிஸ்துவ சபைக்காரர்களின் வருகைக்குப் பின் சீகன்பால்கால் பைபிள் முதன்முதலாக தமிழில் முழுமையாக மொழியாக்கப்பட்டது. அதன்பின் ஃபெப்ரீசியஸால் மீண்டும் திருத்தப்பட்ட பதிப்பு வெளியாகியது. இவற்றுக்குப் பிறகு ரேனியஸின் தலைமையில் திருத்தப்பட்ட பதிப்பு முக்கியமானது. பைபிள் மொழிபெயர்ப்பு அனுபவங்களை வைத்து அவர் ‘புனிதப் பிரதிகளை மொழிபெயர்ப்பதற்கான கொள்கைகள் குறித்து ஒரு கட்டுரை’2 எழுதியிருக்கிறார். பின்னர் வேதநாயக சாஸ்திரி உள்ளிட்டோரால் பலமாக எதிர்க்கப்பட்ட அவரது மொழிபெயர்ப்பின் பின் செயல்படும் ‘பதட்டம்’ இக்கட்டுரையில் நமக்குத் தெரிகிறது.

ஒரு நவீன மொழிபெயர்ப்பாளரின் பதட்டமே ரேனியஸின் பதட்டம். சாதி ஏற்றத்தாழ்வுகளால் சீரழிந்த தமிழ் சமூகத்தின் பிரதிபலிப்பு தமிழ் மொழியிலும் செயல்படுவதை ரேனியஸ் அடையாளம் காண்கிறார், பைபிளை படித்தவர்களின் மொழியில் மொழிபெயர்ப்பதா, கல்வியற்றோர் பேசும் மொழியில் ஆக்குவதா என்பது அவரது பிரச்சினையாக இருக்கிறது. பைபிளை எல்லோரும் படிக்கவேண்டும், இரண்டில் ஒரு சாரார்தான் படிக்கவேண்டும் என்று சொல்லிவிடமுடியாது. அதேநேரம் கல்வியற்றோர் பேச்சுவழக்கின் மீதிருக்கும் அவமரியாதையை புனிதப் பிரதிகள் மீது சுமத்துவதனால் என்ன பாதிப்புகள் நேரும் என்ற பிரச்சினை. இச்சமூக நடைமுறைகளுக்கு ஏற்பச் செயல்படும் மரியாதை விதிகளை பைபிளில் சுமத்துவது சரியா தவறா என்ற பிரச்சினை. இவை எல்லாவற்றிலுமே முடிந்தளவு மையப்பாதையைப் பின்பற்றுவது என்பதே ரேனியஸின் முடிவு. அனைத்து மக்களும் தினசரி பேசும் மொழியை எந்தளவு பிரதிபலிக்க முடியுமோ, அவ்வளவு நல்லதென்கிறார். தற்கால மொழிபெயர்ப்பாளர் ஒருவரிடம் செந்தமிழில் மொழிபெயர்ப்பதா, பேச்சுவழக்கில் மொழிபெயர்ப்பதா என்றால் பெரும்பாலானோர் இதே பதட்டத்துக்கு ஆளாவார்கள், இதேபோன்றதொரு இதுவும் அதுவும் சமமாக சரிவிகிதத்தில் கலந்து சமைக்கலாம் என்றே பதில்சொல்வார்கள்.

இதைத் தொடர்ந்து ரேனியஸின் மொழிபெயர்ப்பைக் கண்டித்த வேளாளரான வேதநாயக சாஸ்திரிக்கு மொழிபெயர்ப்பின் தரம் என்பதைக் கடந்து ரேனியஸின் சமூகச் செயல்பாடுகள் போன்றவை மீதும், அப்பணியில் பொருள்ரீதியாக தனக்குப் பங்குகிடைக்காதது குறித்து வருத்தங்கள் இருந்திருக்கின்றன. அதை வெளிப்படுத்தும்போது இந்தப் புது மிஷனரிகள் கச்சேரித் தமிழையும், தெலுங்கையும் கலந்து பைபிளின் ஆன்மாவையே பாழாக்கிவிட்டனர் என்று அழுது புரண்டிருக்கிறார்.

தனது கட்டுரையில் ஆங்கில பைபிள் மொழிபெயர்ப்பாளரான பிஷப் லோத்தின் கட்டுரையிலிருந்து சில பத்திகளை ரேனியஸ் மேற்கோள் காட்டியிருக்கிறார். அவற்றில் ஒன்றின் தமிழ் மொழிபெயர்ப்பு இங்கே, “ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரின் கடமை தன் எழுத்தாளரின் நடையைப் படிப்பது, அவரது பாணியின் தனித்தன்மையை அடையாளம் காண்பது, அவரது குணங்களை, தொனியை, நடவடிக்கைகளை நகலெடுப்பது, மொழி அனுமதிக்கும் எல்லைவரை அவரது குரலையும் பிரதிபலிப்பது; சுருக்கமாகச் சொன்னால், மூலத்துக்கு நேர்மையான சொல்திறம்கொண்ட பிரதியை உருவாக்குவது.” சமீபத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர், நாடகக் கலைஞர் ராமானுஜன் மண்ட்டோவின் படைப்புகளை மொழிபெயர்ப்பது குறித்துப் பேசும்போது தான் சில வசனங்களை உரக்கப் பேசி, நடந்து, நடித்துப் பார்த்து மொழிபெயர்ப்பதாகச் சொல்லியிருந்தார். அவர் நேரடியாக மூல ஆசிரியர் அல்லது கதாபாத்திரங்களைப் போல நடித்துப் பார்ப்பதாகச் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மொழிபெயர்ப்பியல் என்ற நவீன அறிவுத் துறையின் துவக்கம் பைபிள் போன்ற மத மொழிபெயர்ப்புகளிடமிருந்தே தொடங்குகிறது. அதைத் தாண்டி பல்வேறு மொழிபெயர்ப்பு மரபுகளை ஆராய்ந்தாலும், அவை பலவும் வெவ்வேறு மத ஆன்மீகப் பிரதிகளைப் பிரதியெடுப்பதோடு தொடர்புடையாகவே இருக்கும். நம் நாட்டில் வழங்கும் பலவகை ராமாயணக் கதைகளுக்கும், ‘மூலத்துக்குமான’ தொடர்பை மொழிபெயர்ப்பாக யோசித்துப்பார்க்கலாம் என்பது ஒரு உதாரணம். மொழிபெயர்ப்பு குறித்து தற்காலத்தில் நாம் கொண்டிருக்கும் கருத்துகளில் மதத்தின் தாக்கம் குறித்துப் பேசும் சுந்தர் சருக்கை, மூலப்பிரதிக்கு நாம் வழங்கும் அதீத முக்கியத்துவத்துக்கான காரணம் அதுவெனச் சுட்டுகிறார். அதேநேரம் பைபிள் மொழிபெயர்ப்பாளர்களின் செயல்பாடுகளில் மூலப்பிரதியின் ‘புனிதத்தன்மை’ மட்டுமே மேலாதிக்கம் செலுத்தியது என்று சொல்லமுடியாது, அவர்களது செயல்பாடுகளின் அடிப்படையாக ‘யாருக்காக மொழிபெயர்க்கிறோம்’, ‘எதற்காக’ என்ற கேள்விகளும் செயல்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு பெரும்பாலும் ஐரோப்பியர்களான பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் காலனிய நாட்டுப் பிரஜைகளுக்கு கடவுளின் சொல்லை ‘புரியவைப்பது’ என்ற கடமையையும் முக்கியமாக மனதில் கொண்டிருந்திருக்கின்றனர்.

இதில் அவர்களது ஐரோப்பிய அடையாளமும், கிறிஸ்துவ மிஷனரி அடையாளமும் நிறைய தாக்கம் செலுத்தியிருக்கின்றன. உதாரணத்துக்கு ரேனியஸிடம் இந்நாட்டவரே இதை நன்றாக மொழிபெயர்க்க முடியுமா என்று கேட்டால், இல்லை அவர்கள் ஐரோப்பியர்களுக்கு சமமன்று, இன்னும் பல காலம் மூல மொழிகள் அறிவியல் அறிவுகளில் சமமாக வாய்ப்புமில்லை. எனவே இம்மொழியைக் கற்றறிந்த ஐரோப்பியரே, இந்நாட்டவர் ஒருவர் உதவியுடன் சிறப்பாக மொழிபெயர்க்கமுடியும் என்கிறார். இதே ரேனியஸ்தான் கட்டுரையின் தொடக்கத்தில் மூல மொழியைப் புரிந்துகொள்ளும் அளவும், அவ்வப்போது அகராதிகள் துணையோடு தெளிவுபடுத்திக்கொள்ளும் திறனும் இருந்தாலே நல்ல மொழிபெயர்ப்பாளராகலாம் என்கிறார்.

மொழிபெயர்ப்பு குறித்து ரேனியஸ் தன் கட்டுரையில் மூல மொழியின் சொல் வரிசையை அப்படியே இலக்கு மொழியில் பயன்படுத்தலாகாது என்கிறார். இது முழுமையாக வளர்ச்சி அடையாத சில மொழிகளில் பயன்தரலாம், இதற்கு தனக்கு ஏழெட்டு நூற்றாண்டுகள் முன்பு ஜெர்மன், ஆங்கிலம் மொழிகளில் நிலையை உதாரணமாகச் சுட்டுகிறார். சமஸ்கிருதம், தமிழ் என வளர்ச்சியடைந்த மொழிகளில் அவற்றின் சொல்வரிசை போன்றவற்றைப் பின்பற்றுவது முக்கியம் என்கிறார். இங்கே ரேனியஸ் தரும் உதாரணம் சுவாரசியமானது, அப்படி மொழிபெயர்த்தால் அதை ஏற்க அவர்களிடையே ஆடையை மாற்றச் சொல்வது போன்று தயக்கம் ஏற்படும், அவர்களில் அறிவுடையோர் எள்ளிநகையாடுவார்கள் என்கிறார். மொழிபெயர்ப்பில் முக்கியம் ‘சென்ஸ்’ அதாவது பொருளை மொழிபெயர்ப்பது, இது பொருளை விளக்குவது அல்ல என்பதை பல உதாரணங்களுடன் விவரிக்கிறார். ரேனியஸை வாசிக்கும்போது ஏற்படும் எண்ணம், அவர் சொல்வதெல்லாம் பல நவீன இலக்கிய தமிழ் மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து பெரிதாக வேறுபட்டவையல்ல என்பது. நாம் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி, ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டு மிஷனரிச் செயல்பாட்டாளருக்கும் நவீன இலக்கிய மொழிபெயர்ப்பாளருக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்றால் அது நம் மொழிபெயர்ப்பாளர்களைக் குறித்து என்ன சொல்கிறதென்பது.

https://akazhonline.com/?p=6886 மொழிபெயர்ப்பாளர்கள் தம்மை மூல ஆசிரியருக்கு ‘ஒப்புக்கொடுக்கும்’ கருத்துகளைக் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். சுந்தர் சருக்கை சொல்வதைப் போலவே, பல நவீன இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் இன்னமும் மொழிபெயர்ப்பின் ‘மத’த் தொடங்கங்கள் உண்டாக்கிவைத்த கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை பெற முயற்சிக்கக் கூட இல்லை என்பதைக் காண்கிறோம். இன்னமும் நாம் போலிக் கடவுள்களுக்கும் காலனியப் பிரஜைகளுக்கும் இடையிலேதான் உழன்றுகொண்டிருக்கிறோம். தழுவலா, மொழிபெயர்ப்பா என்பதுபோன்ற பல நீண்ட விவாதங்களின் கடைசியில் இலக்கிய மொழிபெயர்ப்பென்பது எழுத்து – சென்ஸ் (உடல் – பொருள்/ஆன்மா) என்ற இருமைக்குள் சிக்கித் தவித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதை வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்களும் வெவ்வேறு வகையில் புரிந்துகொண்டு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். சிலர் மூல மொழியின் (அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பின்) சொல், வாக்கிய கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். சிலர் முழுமையாக அக்கட்டமைப்புகளை நிராகரித்துவிட்டு திருப்பி எழுதும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவற்றைக் கடந்த ஒரு சுதந்திர மொழிபெயர்ப்பு மரபு இன்னமும் தமிழில் உருவாகிவரவில்லை.

மொழிபெயர்ப்பு என்ற எல்லையைத் தாண்டி இதற்கெல்லாம் என்ன முக்கியத்துவம்? சுந்தர் சருக்கை, மாதவ சிப்பள்ளி எழுதிய கட்டுரையொன்றில்3 வாதிடுவதுபோல ‘ஆதியில் மொழிபெயர்ப்பு இருந்தது’ எனலாம், மொழி என்ற கருத்தாக்கத்துக்கு முன்னரே மொழிபெயர்ப்பு என்பது இருக்கிறது என்று வாதிடுகின்றனர். இது என் மொழி என்று அறிய நாம் வேறொரு மொழியில் இப்படிச் சொல்லப்படுவதை நான் இப்படிச் சொல்கிறேன் என்று பிரித்தறிய வேண்டியிருக்கிறது. மொழிபெயர்ப்பு அடிப்படையிலான தன் கலை வெளிப்பாட்டில் மொழிபெயர்ப்பு குறித்து ஹெப்சிபா இஸ்ரேல் இவ்வாறு சொல்லி முடிக்கிறார், “மொழிபெயர்ப்பு மொழிகளுக்கிடையிலான பிணைப்புகளை ஆராய வழிதருகிறது, எல்லை தாண்டும் செயல்பாடுகளும் எல்லை தாண்ட மறுக்கும் செயல்பாடுகளும் நடைபெறும் வெளியை ஆராய வழிதருகிறது. கண்ணுக்குத் தெரிகிற எல்லைகளைப் போலவே கண்ணுக்குத் தெரியாத எல்லைகளையும் சோதனைக்குள்ளாக்குகிறது மொழிபெயர்ப்பு. மொழிகளைப் பின்னி, எல்லைகளை நமக்குச் சொல்லும் ஒற்றைமொழித்துவத்தை எதிர்த்து பலநிலைகொண்ட, பலவரிசைகள் கொண்ட இயக்கப்போக்குகளை கவனிக்கச் சொல்கிரது. அதேநேரம், எல்லைகளை மறுக்கமுடியும் என்ற சாத்தியப்பாடுகளையும் மொழிபெயர்ப்பு நமக்கு உறுதியளிக்கிறது.” நாம் சிறிய சிறிய எல்லைகளுக்குள் சுருங்கிக் கொள்ளாமல் இருக்கவும், இதுதான் மொழி இதுதான் நான் என்ற நம் வரையறைகள் விரிவுபடவும் மொழிபெயர்ப்பு மிக அவசியமானச் செயல்பாடு. மொழிபெயர்ப்பு (இலக்கிய, மத, தினசரி மொழிபெயர்ப்புச் செயல்பாடுகள் அனைத்தும்) என்னும் செயல்பாட்டின் துணை இன்றி தற்போதைய தமிழ் உரைநடை மிகக் குறைவுபட்டதாகவே இருக்கும்.

வயலட்

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான வயலட் பெங்களூருவில் உள்ள ஒரு சிறார் பதிப்பகத்தில் தமிழ் பதிப்பாசிரியராக பணியாற்றுகிறார். வயலட்டின் சிறுகதைகள் ‘ஊதா ஸ்கர்ட் கதைகள்’ (2017) என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கின்றது. எனில் என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். இவர் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் இணைய, அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. காலச்சுவடு வெளியிட்ட ஹுவான் மனுவேல் மார்க்கோஸின் ‘குந்தரின் கூதிர் காலம்’ (2017) என்ற பராகுவே நாவலை இவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss