நாகரிகங்களின் மோதல் : ஜான் ஆம்ஸ்ட்ராங்

தமிழில்: தென்னவன் சந்துரு
ஹெல்சிங்கியில் உள்ள செனட் சதுக்கம்

ஜான் ஆம்ஸ்ட்ராங் எழுதிய ‘நாகரிகத்தைத் தேடி: பொலிவிழந்த ஒரு கருத்தாக்கத்தின் மீளுருவாக்கம்’ (In Search of Civilization: Remaking a Tarnished Idea) நூலின் மூன்றாம் அத்தியாயம் இங்கு தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பகுதி 01

பகுதி 02

கற்பனையான அந்த விவாத நிகழ்ச்சியில் நாகரிகத்தைப் பற்றி தீட்டப்பட்ட நான்கு சித்திரங்களை இன்னும் கூர்மையாக உற்றுநோக்க விரும்புகிறேன். அவற்றில் முதலாவதை எடுத்துக்கொள்வோம்: ‘நாகரிகம்’ என்பது பெரும்பாலும் ஓர் அரசியல் கோட்பாட்டுடன் இணைத்து பயன்படுத்தப்படுகிறது. ‘நாகரிகங்களின் மோதல்’ (the clash of civilizations) என்ற புகழ்பெற்ற அச்சொற்றொடர், நம் காலத்தின் முக்கிய சர்வதேச மோதல்களை சித்தரிக்கும் விதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் பரவலாக நம்பப்படும் ஒரு பெருங்கதை (grand narrative) இவ்வாறு செல்கிறது: பனிப்போர் காலத்தில், புவிசார் அரசியல் வரைபடமானது சித்தாந்த ரீதியாக ‘சுதந்திர உலகம்’ மற்றும் ‘கம்யூனிசக் கூட்டமைப்பு’ என்று பிரிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான நாடுகள் ஏதோவொரு அணியில் நிற்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இது சில நேரங்களில் விசித்திரமான தோழமைகளை உருவாக்கியது. ஆப்கானிஸ்தான் சுதந்திர உலகத்துடன் அணிவகுத்து நின்றது, எவ்வித சிந்தனைப் பற்றும் அதற்கு காரணமல்ல; அப்போது அது சோவியத் படைகளுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருந்தது என்பதே அதன் அரசியல் நிதர்சனம்.

1980-களின் இறுதியில் பனிப்போர் முடிவுக்கு வந்தவுடன், உலகை இவ்வணுகுமுறையோடு நோக்கும் பார்வை வழக்கொழிந்து போனது; அதனைத் தொடர்ந்து ஒரு தீவிரமான அடையாள நெருக்கடி ஏற்பட்டது. முதலாளித்துவமா அல்லது கம்யூனிசமா என்ற நிலைப்பாடுகளுக்கு மாற்றாக, உலகம் முற்றிலும் வேறுபட்ட ஒரு விசுவாசத்தின் அடிப்படையில் பிளவுபடத் தொடங்கியது: அதுவே நாகரிகங்களை அடித்தளமாகக் கொண்ட விசுவாசப்பற்றுறுதி.

இந்த விவகாரத்தில் பெரும் விவாதத்தை முன்னெடுத்த ‘நாகரிகங்களின் மோதல்’ (The Clash of Civilizations) என்ற புத்தகத்தில், சாமுவேல் ஹண்டிங்டன் (Samuel P. Huntington) இதனை இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘ஓர் அடையாள நெருக்கடியை எதிர்கொள்ளும்போது, மக்களுக்கு முக்கியமாக விளங்குபவை குலப்பற்றும் நம்பிக்கையும், கோட்பாட்டுறுதியும் வம்சமுமே ஆகும்.’

இந்த இடத்தில்தான் நாகரிகம் முன்வருகிறது; ஏனெனில் அதுவே அடையாளத்திற்கானதொரு பாதுகாப்பு அரணை அளிக்கிறது. கூடவே சில அடிப்படைக் கேள்விகளுக்கான மாபெரும் பதிலையும் எடுத்துரைக்கிறது : நீ யார்? நீ எதைச் சேர்ந்தவன்? உன் நண்பன் யார், உன் எதிரி யார்?

பெரும்பாலான நேரங்களில், நாம் யார் என்பது பற்றிய நமது அக்கறைகள் ஒரு வட்டாரத் தன்மையைக் கொண்டதாகவே இருக்கின்றன: அவை நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் நம்மை எவ்வாறு நிலைநிறுத்திக் கொள்கிறோம் என்பவற்றுடன் மட்டுமே தொடர்புடையவை. ஆனால், உலகமயமாக்கல் காலகட்டத்தில், அடையாளம் மற்றும் பிணைப்பு குறித்த வேர்க்கேள்விகளுக்குப் பொருட்படக்கூடிய மீப்பெரும் பதில்களே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. 

உலகளாவிய பார்வையில், நீங்கள் உங்களை ஒரு குறிப்பிட்ட நாகரிகத்தைச் சேர்ந்தவராகவே காண்பீர்கள், மற்றவர்களாலும் அவ்வாறே பார்க்கப்படுவீர்கள். இந்த அர்த்தத்தில், நாகரிகங்கள் என்பவை நீண்டகாலமாக நிலைத்திருக்கும், பரந்த அளவிலான வாழ்வியல் கண்ணோட்டங்கள் ஆகும்: அவை மனித அனுபவங்களை வடிவமைக்கவும், விளக்கவும், முறைப்படுத்தவும் செய்கின்ற வழிகளாகும். ஒரு நாகரிகம் பொதுவாக மொழி, மதம் மற்றும் பிராந்தியம் சார்ந்த ஒரு மையப்புள்ளியைச் சுற்றியே உருவாகிறது. வரலாற்றின் மாபெரும் ஒத்திசைவுகளுக்கு ஒன்றாக ஆட்பட்ட கூட்டு நினைவுகளால் அது ஒன்றுதிரட்டப்படுகிறது.

தோராயமான வரையறையின்படிச் சொல்வதானால், மேற்கத்திய உலகிற்குப் பொதுவான அம்சம் இதுவே: மேற்கை உருவாக்கும் நாடுகள் ரோமானியப் பேரரசிலிருந்து பரிணமித்தவை; மேலும் அவை ‘செவ்வியல்வாதத்தின்’ பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. ஹெல்சிங்கியில் உள்ள செனட் சதுக்கம், வாஷிங்டன் மற்றும் மெல்போர்னில் உள்ள அரசு சார்ந்த பொதுக் கட்டடங்களைப் ஒத்ததொரு காட்சி மொழியையே கையாள்கிறது. (நவ செவ்வியல் பாணியில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் அமைக்கப்பட்டதே மேலைமயமாக்கலின் ஒரு அடையாள வெளிப்பாடாகும்.)

மேற்கின் மத வேர்கள் யூத-கிறிஸ்தவ மரபைச் சார்ந்தவை; அந்தப் பாரம்பரியத்தின் பல்வேறு வாசிப்புகளைச் சுற்றி பல இரத்தந்தோய்ந்த மோதல்களும் பதற்றங்களும் நிகழ்ந்துள்ளன. தொழில்மயமாக்கலையும் அதன் சிக்கல்களையும் உலகின் பிற எந்தப் பகுதியையும் விட முன்னதாகவே எதிர்கொண்டது மேற்குலகம்தான். பதினாறாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை இந்நாடுகள் பொதுவாகக் காலனி ஆதிக்கத்திற்கு ஆட்பட்ட நாடுகளாக அல்லாமல், காலனியாதிக்கத்தின் பெருஞ்சக்திகளாகத் திகழ்ந்தன. இக்கலவையின் ஏதோவொரு புள்ளியில்தான், தனிமனித சுதந்திரத்தை நோக்கி பகுத்தறிவுப்பூர்வமான, ஐயுறவுவாதத் (skeptical) தேடல் உருப்பெற்று அதன் மீதான ஓரளவு வலுவான பற்றுறுதியும் பிணைந்தெழுந்துள்ளது. கடந்த ஐந்நூறு ஆண்டுகளாக, மேற்கத்திய உலகமே தொழில்நுட்ப, அறிவியல் மற்றும் வணிக ரீதியிலான புதுமைகளை உந்தித் தள்ளி வழி நடத்தியுள்ளது.

இவையே மேற்கத்திய உலகின் பொதுத்தன்மைகள்: போர்ச்சுகலோ டென்மார்க்கோ அல்லது டார்செட்டோ கலிபோர்னியாவோ, இம்மாறுபட்ட நிலங்களிலும்கூட அடையாளம் காணக்கூடிய அடிப்படை அனுமானங்கள் மற்றும் பிணைப் பிணக்கங்களின் ஒரு தொகுப்பாக இவை அமைகின்றன. ஒரு நாகரிகத்தின் பொதுத்தன்மைகள், பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு கூட்டு அடையாளத்தை உருவாக்குகின்றன. இந்தியா, சீனா அல்லது இஸ்லாமிய நாகரிகங்களிலிருந்து கிடைக்கப்பெறும் எப்பதில்களின் தன்மையும் இயல்பாகவே வேறுபட்டவையாகத்தான் இருக்கும். ஆனால் அப்பதில்கள் எவ்வளவுதான் மாறுபட்டாலும், அவை ஒரு சரிசமமான பங்கையே வகிக்கின்றன: நீங்கள் யார் என்பதை விளக்குவதற்கு அவை உதவுகின்றன

ஆகவே, ஒரு தனிமனிதன் ஒரு குறிப்பிட்ட நாகரிகத்தைச் சார்ந்தவன் என்பது அவன் இப்பூமிப் பரப்பின் எந்தவொரு குறிப்பிட்ட சதுரத்தில் வாழ்கிறான் என்பதனால் மட்டுமே உருப்பெறுவதில்லை; மாறாக, அது ஓர் இணக்கமான பிணைப்பின் வாயிலாகவே எழுகிறது — ஒரு புறவிசை தட்டியெழுப்பி உணர வைக்கும் வரை, அது பெரும்பாலும் உணர்வுபூர்வமாக அறியப்படாமலேயே நிலைத்திருக்கிறது.

ஹண்டிங்டன் படைப்புகளின் அடிநாதம் என இதைக் கூறலாம்: சில முக்கிய புவிசார் அரசியல் பதற்றங்களைப் புரிந்துகொள்வதற்கு நாகரிகங்களின் துணை அவசியமாகிறது என்று அவர் வாதாடுகிறார். இத்தகைய பதற்றங்களுக்கான அவரது முதன்மையான சான்றுகள் பால்கன் பிராந்தியம் (Balkans)  மற்றும் மத்திய கிழக்கிலிருந்து (Middle East) எடுத்தாளப்படுகின்றன. மதம் மற்றும் இனம் சார்ந்த நாகரிக மையத்தைச் சுற்றியுள்ள பற்றுறுதியே இம்மோதல்களின் முக்கியக் காரணியாக அமைகிறது; மேலும், இந்தப் பற்றுறுதிகளுக்கு ஏற்ப நாடுகளை மறுசீரமைக்க இது பெரும்பாலும் முயல்கிறது. இத்தகைய பற்றுறுதி எந்தவொரு மோதலின் தீவிரத்தையும் அதிகரிக்கிறது; நடைமுறைச் சாத்தியமான சமரசத்திற்கு ஒரு பெரும் தடையாகவும் அமைகிறது. நாகரிகங்களின் எல்லைகளில், நம்பிக்கை குறைகிறது; தொடர்புறுத்தல் கடினமாகிறது; தவறான புரிதல்கள் மேலெழும்புகின்றன, பார்வைக் கோணங்களும் எதிரெதிர் துருவங்களில்  விலகிச்செல்கின்றன .

இதுவே நாகரிகத்தைப் பற்றிய இயல்பானதொரு கருத்தாக்கம். ஒரு நாகரிகத்தை உருவாக்கும் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மிக இறுக்கமாகப் பின்னிப்பிணைந்துள்ளன என்பதை இது உணர்த்துகிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட வாழ்வியலுக்குள்ளேயே பிறக்கிறீர்கள். இயல்பானவை என்று நீங்கள் காணத் தொடங்கும் அர்த்தக்கூறுகளின் கட்டமைப்புகளே, பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் ஒழுக்க மரபுகளின் வேராகவும் வெளிப்பாடாகவும் திகழ்கின்றன. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், அதை எப்படிச் சமைக்கிறீர்கள், நண்பனாக இருப்பது என்றால் என்ன, பெற்றோரின் கடமைகள் எவை, நீங்கள் எப்படி கதை கூறுகிறீர்கள், நீங்கள் எப்படி ஆடை அணிகிறீர்கள், பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்குமான வேறுபாடுகள் என்ன, மானம் அல்லது அவமானம் எனக் கருதப்படுவது எது என்பதுபோன்ற வாழ்வின் ஆழமான கூறுகள் அனைத்தும் நாகரிகத்திற்குள் பிணைக்கப்பட்டுள்ளன; ஒரு நாகரிகத்தைச் சார்ந்திருப்பது என்பது அவற்றில் இயல்பாகவே பங்கெடுப்பதாகும்.

ஆனால், ஒரு தனிமனிதனை ஒரு நாகரிகத்தோடு பிணைக்கும் அதே விஷயங்கள்தான், அவனது புரிதலின் எல்லையையும் அமைக்கின்றன. ஒரு நாகரிகத்தைச் சார்ந்திருக்க நீங்கள் அதற்குள்ளேயே வளர்க்கப்பட்டு, அதை உள்ளிருந்தே அனுபவித்தாக வேண்டும் எனும்போது, வேறொரு நாகரிகத்தை நீங்கள் புரிந்துகொள்வதற்கான அடிப்படை மிகவும் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கும். இதனால்தான் நம்பிக்கையும் அனுதாபமும் நாகரிகங்களுக்கு இடையிலான எல்லைகளைத் தாண்டி உள்நுழைவது மிகக் கடினமானதாக இருக்கிறது.

எனவே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் அல்லது ரஷ்யா – அமெரிக்கா இடையிலான மோதல்கள் ஏன் இவ்வளவு சிக்கலானவையாகவும் நீண்டகாலமாக நீடிப்பவையாகவும் இருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள விரும்பினால், நாகரிகம் எனும் காரணியைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவர் எவ்வாறு வாழ வேண்டும், நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசாங்கத்தின் வடிவம் என்னவாக இருக்க வேண்டும், அல்லது எது ஒரு வாழ்க்கையை வாழ்வதற்குத் தகுதியானதாக மாற்றுகிறது என்பது பற்றிய மிக ஆழமான அனுமானங்கள் மாறுபட்டவையாகவே இருக்கின்றன.

இதன் உச்சபட்ச பிரதிபலிப்பாக, மற்றைய நாகரிகம் யாவும் அர்த்தமற்றதாகவே தோன்றும். எதிர்த்தரப்பு உண்மையில் என்ன விரும்புகிறது, அல்லது ஒருவரது சொந்த பகுத்தறிவு அளவுகோலின்படி பார்க்கும்போது மற்றவர் ஏன் சமரசம் செய்யவோ நியாயமாக நடந்துகொள்ளவோ இவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே முடியாதது போலத் தோன்றும்.

இவையனைத்தையும் விவரித்த பிறகு, ‘உண்மையான மோதல்’ என்பது நாகரிகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடையிலானதுதான் என்று ஹண்டிங்டன் இறுதியாகக் குறிப்பிடுகிறார். ‘மதம், கலை, இலக்கியம், தத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், ஒழுக்கம் மற்றும் கருணை ஆகியவற்றில் செறிந்த சாதனைகளைக் கொண்டுள்ள உலகின் மாபெரும் நாகரிகங்கள்’ இயல்பான எதிரிகள் அல்ல; இயல்பான கூட்டாளிகளே. இவ்விதமாகப் புரிந்துகொண்டால், உலகின் நாகரிகங்கள் ‘ஒன்றாக இணைந்து வாழும் அல்லது தனித்தனியாக மடியும்’: அவை இணக்கமாகச் செழித்தோங்கும் அல்லது அழிந்துபோகும்.

இங்கு ஓர் தோற்றமுரண் (paradox) இருப்பதாகத் தோன்றுகிறது.   ஒருபுறம், ஒவ்வொரு நாகரிகத்திற்கும் உரிய தனித்துவமான ‘பொதுத்தன்மைகள்’ உள்ளன; இப்பொதுத்தன்மைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் மோதலையும், நம்பிக்கையின்மையையும் உருவாக்கி, தொடர்புறுத்தலைக் கடினமாக்குகிறது. மறுபுறம், வெவ்வேறு நாகரிகங்களின் ‘செறிந்த சாதனைகள்’ அவற்றுக்குள் இயல்பான ஒத்திசைவை உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது. இதில் உள்ள புதிர் என்னவென்றால், அந்தப் பொதுத்தன்மைகளும் செறிந்த சாதனைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித் தோன்றுவதுதான். எனவே, ஒரு நாகரிகத்தின் பண்பாட்டு விழுமியங்கள் இரு வேறு எதிர்மறையான பாத்திரங்களை வகிக்கின்றன: சில வேளைகளில் நாகரிகங்களைப் பிரித்தும், சில வேளைகளில் அவற்றை இணைத்தும் வைக்கின்றன.

மகாத்மா காந்தி ஒருமுறை கூறிய கருத்து, இத்தோற்ற முரணைப் போக்க உதவும். மேற்கத்திய நாகரிகத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்கப்பட்டபோது, ‘அது ஒரு மிகச் சிறந்த விஷயமாக இருக்கக்கூடும்’ என்று பதிலளித்தார். முதல் பார்வையில் இது அபத்தமானதாகத் தோன்றலாம். நிச்சயமாக, மேற்கத்திய உலகிற்கு அதற்கே உரித்தான பொதுத்தன்மைகள் உள்ளன. மேலும், மேற்கில் செறிந்த சாதனைகளுக்குக் குறைபாடொன்றும் இல்லை. ஆனால் பிளேட்டோ, இயேசு, கலீலியோ, மோசார்ட், தாமஸ் ஜெஃபர்சன், கோதே மற்றும் ஐன்ஸ்டீன் ஆகியோர் ஏமாற்றுக்காரர்கள் என்றோ முட்டாள்கள் என்றோ காந்தி சுட்டிக்காட்டவில்லை. அவர்களின் சாதனைகளும் உயர்ந்த பண்புகளும் போதுமான அளவு மக்களிடையே ஊடுருவி, அவர்களின் சிந்தனையையும் நடத்தையையும் வழிநடத்தவில்லை என்பதே அவரது கூற்றின் உண்மையான உட்பொருளாகும்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நீங்கள் ஒரு நாகரிகத்தைச் சார்ந்தவர் என்று உங்களைக் கருதிக் கொள்ளலாம்; ஆனால், அது மட்டுமே உங்களை நாகரிகமடைந்தவராக மாற்றிவிடாது.

பகிர்ந்தளிக்கப்பட்ட நம்பிக்கைகளின் தொகுப்பாக நாகரிகத்தைக் கருதும் முதல் வரைபடம், இரண்டு சிக்கல்களைக் கவனத்திற்குக் கொண்டுவருகிறது. ஒன்று, எண்ணிக்கை சார்ந்தது. நாகரிகம் என்பது பரவலான, பகிர்ந்துகொள்ளப்பட்ட வாழ்க்கைப் புரிதல்களைச் சார்ந்திருக்கிறது. நாகரிகத்தின் முழுமையான கருத்தாக்கம் இந்த பொதுவான வாழ்க்கையுணர்வையும் ஒரு சமூகத்தைச் சார்ந்திருத்தல் எனும் வலுவான அனுபவத்தையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது விஷயம், தரம் தொடர்பானது. நாகரிகம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட அன்றாட அனுமானங்களை மட்டுமே வெறுமனே ஆதரிப்பதில்லை; மாறாக, அது ஒரு குறிப்பிட்ட அனுபவ மரபின் ஆகச் சிறந்த, அதிஅறிவுப்பூர்வமான வெளிப்பாட்டையே இலக்காகக் கொள்கிறது. நாகரிகம் என்பது பரவலாக நிலவும் வாழ்வியல் புரிதல் எவ்வளவு மேம்பட்டதாக இருக்கிறது என்பதிலோ அல்லது -வேறு விதமாகச் சொல்வதானால்- அந்த மேம்பட்ட புரிதல் எவ்வளவு பரவலாகச் சமுதாயப் பகிர்வாக மாறியிருக்கிறது என்பதிலும்தான் அடங்கியுள்ளது.

பெரும்பாலும் ஒரு வேதனையான பிளவுதான் நிலவுகிறது: மார்தட்டல்களையும் பல போற்றுதல்களையும் பெயரளவில் வாய்மொழியாக மட்டுமே காட்டும் பண்பாட்டுப் பற்று, அந்தச் செறிந்த சாதனைகளுக்குத் துரோகம் செய்யும்போதுதான் பொதுவானதாகவும் பரவலானதாகவும் மாறுவது போல் தோன்றுகிறது; அதே வேளையில், இச்சாதனைகளின் உண்மையான இயல்பை ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே உணர்ந்து போற்றுகிறார்கள்.

இந்த இரண்டு அக்கறைகளையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சி—அதாவது, எது மிகச் சிறந்ததோ அதைச் சமுதாயப் பகிர்வாக மாற்றுவது, அளவையும் தரத்தையும் ஒரே நேர்கோட்டில் கொண்டுவருவது — நாகரிகமாக்கல் செயல்பாட்டின் முதன்மைக் கூறு ஆகும். இதுவே ஒரு நாகரிகம், அதன் எளிய பொருளில் தொடங்கி, அதன் உயரிய நோக்கம் கொண்ட ஆழமான பொருளுக்கு ஏற்ப நாகரிகமடைந்ததாக மாறும் செயல்முறையாகும்.

தனிமனிதர்களாக நாம் மேலும் நாகரிகமடைந்து சிந்தனைகளின் மதிப்பை உணரும்போதும் சரி, இன்னும் நுட்பமாகவும் செறிவானவர்களாகவும் மாறி முக்கியத்துவத்தின் படிநிலைகளை மிகவும் கவனமாகப் பிரித்தறியும்போதும் சரி, மிகவும் முரட்டுத்தனமாகவும் குறிக்கோளற்ற வகையிலும் இயங்கும் நமது சமூகத்தின் அதிகாரப்பூர்வ பற்றுகளை நாம் பின் தள்ளிவிட்டு மேலேழுகிறோம்.

000

தென்னவன் சந்துரு

வங்கித் துறை ஊழியரான தென்னவன் சந்துரு கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் ஈடுபாடுடையவர். மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss