வாழைப்பழ மீன்களுக்கான கச்சிதமான ஒரு நாள் : வேணு தயாநிதி

சில நாட்களில்
உலகம் எல்லாவற்றையும்
சரியாகவே செய்துவிடுகிறது.

இன்று காலை
கடல் கிட்டத்தட்ட
குற்றமற்றதாக இருக்கிறது.

வானம்
தேவையற்ற எல்லா கருத்துகளையும்
கழுவித் துடைப்பதை
முடித்து விட்டது.

சிறிது நேரத்துக்கு
அசையாமல் இருப்பதே போதும்
என தயங்கி நிற்கின்றன
மரங்கள்.

குழந்தைகள்
வண்ணமயமான பிளாஸ்டிக் பொருட்களுடன்
நீரை நோக்கி ஓடுகிறார்கள்.

ஒருவர்
நாற்காலியில்
மடிக்கப்பட்ட செய்தித்தாளை
விட்டுச் சென்றிருக்கிறார்.

அதன் தலைப்புச் செய்தி
ஏற்கனவே
பழையதாகிக்கொண்டிருக்கிறது.

சிலவற்றை
கற்பனை செய்வது எளிது என்பதை
இன்னும் கற்றுக்கொள்ளாத ஒருவர்

கடற்கரையில்
அலைகளுக்குள்
ஏதோ ஒன்றை தேடுகிறார்.

அவர் ஒரு பெயரை
உச்சரிக்கிறார். கடல்
தன் அலட்சியமான
பழைய மொழியில்
பதிலளிக்கிறது.

டைனோஸாரின் கோமியம் போல
நம் குவளையில் ததும்பும்
கறுப்பு காபி
சிந்துவதில்லை.

வராதோ என்று
சந்தேகப்பட தொடங்குவதற்குள்
ரயில் வந்துவிடுகிறது.

நாம் திறந்து செல்லும்
கதவை
ஒரு அந்நியன்
கச்சிதமாகப் பிடித்துக்கொள்கிறான் –
நாம் கவனிக்கிறோமா என்று
திரும்பிப் பாராமல்.

உயர்ந்த கட்டிடத்தின்
அறைகள் சுத்தம்
செய்யப்படுகின்றன.

படுக்கைகள்
சரிசெய்யப்படுகின்றன.
துண்டுகள் மடிக்கப்படுகின்றன.
கண்ணாடிகள் துடைக்கப்படுகின்றன.

ஒருவர்
தன் அறையின்
திரைச்சீலைகளை
சற்று தாமதமாக திறக்கிறார் –

இப்படி ஒரு
கச்சிதமான நாளை
உள்ளே அனுமதிக்க.

தொலைவில்,
வாழைப்பழ மீன்கள்
சம்பாஷிக்கும் ஒலிகள்
வெயிலில் தெறித்து
மினுமினுக்கின்றன.

விற்பனைக்கு தயாராகும் கூடையில்
அசைவதை நிறுத்தியிருக்கிறது.
ஒரு வாழைப்பழ மீன்

அதன் வாய்
இன்னும் திறந்தபடியே இருக்கிறது –
இப்படியும் ஒரு நாள் இருக்குமா
என்பதை
நம்ப முடியாதது போல.

தன் குணக்கேடுகளுக்கு
கிட்டத்தட்ட
தன்னை பழக்கிக்கொண்டு
மதியத்தில் நகரம்
கொஞ்சம் மென்மையாகிறது.

நடைபாதையில்
ஒரு முதியவர்
தன் முகத்தைப் பார்க்கிறார்.

அவர்
அது தன்னுடைய முகமா
என்று உறுதிப்படுத்திக்கொள்ள
சிறிது நேரம் காத்திருக்கிறார்.

கண்ணாடியில் இருக்கும் மனிதனும்
அவரைப் போலவே
காத்திருக்கிறான்.

இருவருக்கும்
அவசரம் எதுவுமில்லை.

மதியத்திற்குப் பிறகு
அவர்
ஒரு பெஞ்சில் தனியாக அமர்ந்து
ஒரு வாழைப்பழத்தை
மிகக் கவனமாக உரிக்கிறார்,

அந்தப் பழத்துக்குள்
வாழ்க்கையின்
அரிய வழிமுறைகள்
ரகசியமாக ஒளிந்திருக்கலாமோ
என்பதுபோல்.

மதியம் மூன்று மணிக்கு
ஒரு குழந்தை
நடைபாதையில்
சுண்ணக்கட்டியால்
ஒரு மீனை வரைகிறது.

அந்த மீன்
மிகப் பெரியது.
அதற்கு மூன்று கண்கள்,
ஆறு துடுப்புகள்,

முழு பிற்பகலையும்
விழுங்கிவிடும் அளவுக்கு
பெரிய வாய்.

குழந்தை திருப்தியில் இருக்க.
அருகே சென்ற
ஒரு பெரியவர் சொல்கிறார்,
“மீன்கள் இப்படியெல்லாம்
இருக்காது.”

குழந்தை
அந்த ஓவியத்தைப் பார்க்கிறது,
பிறகு அமைதியாக
ஒரு இறக்கையையும் வரைந்து சேர்க்கிறது.

மீனின் அருகில்
ஒரு வாழைப்பழத்தை
வரைகிறது.

பிறகு சிறிது யோசித்து
அதற்கும் ஒரு சிறிய இறக்கையை
வரைகிறது.

அந்த மனிதர்
இம்முறை எதுவும் சொல்வதில்லை.

தான் மூழ்கப்போவதை
முன்கூட்டியே சரியாகக் கணித்துவிட்ட
ஒருவனின் திருப்தியுடன்
சூரியன்
கடலில் இறங்குகிறது.

ஐந்து நிமிடங்கள்
முன்னதாக ஓடிக்கொண்டிருக்கும்
கடிகாரத்தை அணிந்த ஒருவர்

ரயிலுக்கு முன்னதாகவே வந்து.
ஆசுவாசத்தில்
இது வரை சென்றிறாத
ஒரு பரிமாணத்துக்குள்
பிரவேசிக்கிறார்.

ரயில்கள்
முழு நாளும்
தாங்கள் அவசியமானவர்கள்
என்று நடித்துக்கொண்டிருந்த
மனிதர்களை
சலிப்பின்றி சுமந்து செல்கின்றன.

எங்கோ ஒரு பெண்
இருபது ஆண்டுகளுக்கு முன்
சொல்லியிருக்க வேண்டிய
ஒரு வாக்கியத்தை
நினைவுகூர்கிறாள்.

ஒரு மனிதன்
தன்னை மன்னிக்கப் போவதையே
அறியாத ஒருவரை
மன்னிக்கிறான்.

எங்கோ இரண்டு பேர்
காதலில் விழுந்துகொண்டிருக்கிறார்கள் —
அதை அறியாமலேயே.

மழைநீர் குட்டையில்
ஒரு மீன்
வானத்தைக் கலைத்துக்கொண்டிருக்க.

நகரத்தின் மேல் இரவு
ஒரு திருடனைப்போல
ரகசியமாய் இறங்குகிறது.

கடைகளின் கண்ணாடிகள்
தங்களைத் தாங்களே
கண்ணாடிகளாக மாற்றிக்கொள்கின்றன.

தெருவிளக்கின் கீழ்
நடைபாதையில்
இன்னும் இருக்கிறது
அந்த மீன்.

மூன்று கண்கள்.
ஆறு துடுப்புகள்.
பெரிய வாய்.
அதன் அருகில்
அந்தச் சிறிய இறக்கை.

யாரோ கடந்து செல்கிறார்.
ஒரு கணம்
நிழல் மாறுகிறது.
மீன் சற்றே நகர்ந்ததுபோல் தெரிகிறது.
அல்லது
அதன் இறக்கை அசைந்தா?

தன்னை தடுக்க
எவருமில்லாத கடல்
தன் கரையைத்
திரும்பத் திரும்ப
தொட்டுப் பார்க்கிறது.

அமாவாசை இரவில்
கிராமத்து கரையில்
தொலைவில் ஒரு படகு
ஒரு சிறிய விளக்குடன் நகர்கிறது.

அதன் உள்ளே
ஒருவர்
சிந்தனை ஏதும் இன்றி
தன் வேலையை செய்கிறார்.

அவருடைய விளக்கு
சிறிதாகிக்கொண்டே போகிறது.

பிறகு
அது நட்சத்திரமா
படகா
என்று தெரிவதில்லை.

நள்ளிரவுக்குப் பிறகு
நகரம்
தன்னுடைய எல்லா ஓசைகளையும்
ஓரமாக உள்ளே அடுக்கி வைக்கிறது.

இரவு முழுவதும்
இலைகள் அசைகின்றன.
மரத்தின் வேர்களுக்குக் கீழே
ஒருவர்
தொலைந்துபோன ஒரு பருவத்தை
மெதுவாகத் தோண்டிக்கொண்டிருக்கிறார்.

அவர்
வீடு திரும்பும்போது
காலம்
தன் காலணிகளைக் கழற்றி
வாசலில் அமர்ந்திருக்கிறது.

வெளியே நடந்துகொண்டிருக்கும்
வாழ்க்கையைப் பற்றி
அதற்கும் அவ்வளமாக
ஏதும் தெரிவதில்லை.

நேற்றைய உலகத்திடம்
ஏதோ சொல்ல வேண்டியது போல்
தொடர்ந்து
பேசிக்கொண்டிருக்கிறது.
தொலைவில் கடல்.

வேணு தயாநிதி

வேணு தயாநிதி இலக்கியத்திலும், இசையிலும் அதிகம் நாட்டம் கொண்டவர். தற்சமயம் அமெரிக்காவில் வசித்துவருகிறார்.  புற்றுநோய் மூலக்கூறு உயிரியலில் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் கொண்டவர்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. “விற்பனைக்கு தயாராகும் கூடையில்
    அசைவதை நிறுத்தியிருக்கிறது.
    ஒரு வாழைப்பழ மீன்”

    “அந்த மீன்
    மிகப் பெரியது.
    அதற்கு மூன்று கண்கள்,
    ஆறு துடுப்புகள்,

    முழு பிற்பகலையும்
    விழுங்கிவிடும் அளவுக்கு
    பெரிய வாய்.”

    ”மழைநீர் குட்டையில்
    ஒரு மீன்
    வானத்தைக் கலைத்துக்கொண்டிருக்க.”

    இன்றைய நாள் வேணு தயாநிதியால் கொந்தளித்து அடங்க மறுத்தபடி இருக்கிறது.

    நீண்ட நாட்கள் காத்திருந்தேன், இப்படி ஒரு நாள் கொந்தளித்துக் கொதிக்க..

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss