மம்மர் அறுக்கும் மருந்து (11) – கெட்ட வார்த்தை கொண்ட நூலைப் பாடத்திட்டத்தில்  வைக்கலாமா? : பெருமாள்முருகன்

படம்: கே.டி.பாபுராஜ், கன்னூர். 

முந்தைய பகுதிகள்:

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5
பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10

விஜயகுமார்: கட்டிடங்கள் இருந்தாலே கலை, கணிதவியல் படிப்புகளைத் தொடங்கிவிடமுடியும் என்னும் நிலையில் நூல்களே இப்படிப்புகளுக்குப் பிரதானம். கல்லூரி நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப் போதிய நிதி நல்கை உண்டா? துறைத்தலைவர் பரிந்துரையின் பேரில் வருடாவருடம் புதிய நூல்களை வாங்கிவிடமுடியுமா? கற்றலுக்கென இணையப் பயன்பாடு அதிகரித்திருக்கும் காலத்தில் நூலகச்செயல்பாடு எவ்வாறு முன்னேற்றப்படலாம்?

பெருமாள்முருகன்: புதிதாகத் தொடங்கும் கல்லூரிகளுக்குப் புத்தகங்கள் வாங்கக் கணிசமான நிதியை அரசு ஒதுக்குகிறது. பிறகு ஆண்டுதோறும் கல்லூரியின் தரத்திற்கு ஏற்ப அரசு ஒதுக்கீடும் கிடைக்கிறது. பழைய கல்லூரிகள் பலவற்றில் ‘மின்னணு (டிஜிட்டல்) நூலகம்’ தனியாக, தனிக் கட்டிடத்தில் இயங்குகிறது. கிட்டத்தட்டப் பத்தாண்டுக்கு முன் அப்படி ஒரு திட்டம் வகுத்துக் கட்டிடம் கட்டித் தந்தது அரசு. அதற்கெனக் கணினிகளையும் பிற சாதனங்களையும் வழங்கியது அரசு. ஆனால் அரசு கல்லூரிகளின் நூலகச் செயல்பாடு எனக்கு நிறைவு தருவதாக இல்லை. பல கல்லூரிகளில் நூலகர் இல்லை. யாராவது ஓராசிரியரின் பொறுப்பில் நூலகம் இருக்கிறது. முழுநேரமாக நூலகர் இல்லை என்றால் நூலகத்தைப் பயன் தரும்படி இயக்குவது இயலாது. நிதி ஒதுக்கீட்டில் நூல்களை வாங்கி அலமாரியில் அடுக்கி வைப்பதோடு சரி. மாணவர்களுக்கு விநியோகிக்க வழியில்லை. நூலகர் இருக்கும் இடங்களில் குறைந்தபட்சம் பரவாயில்லை என்று சொல்லும் அளவில் வேலை நடக்கிறது.

நூலக உதவியாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. நூலகத்திற்கு என மாணவரிடம் வசூலிக்கும் கட்டணத்தில் செய்தித்தாள் வாங்கியது போக மீதப் பணத்தில் உதவியாளர் ஒருவரைத் தற்காலிகமாக நியமித்துக் கொள்ளலாம்.  ‘Library Boy’ என்பது அந்த நியமனத்திற்குப் பெயர். தமிழில் ‘நூலகப் பையன்’ என்று மொழிபெயர்த்து வருகைப் பதிவேட்டில் எழுதுவார்கள். நாமக்கல் கல்லூரியில்  ‘நூலகப் பையனாக’ ஒரு பெண் இருந்தார். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாக நூலகப் பையனாக இருந்த அவரை நான் தான் ‘நூலக உதவியாளர்’ என்று வருகைப் பதிவேட்டில் மாற்றினேன். மிகக் குறைவான ஊதியம். போதாமையை ஈடு செய்யப் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்தும் கொஞ்சம் ஊதியம் கொடுத்தோம். நாமக்கல் கல்லூரிக்கு 2001ஆம் ஆண்டு நான் வந்த போது நூலகர் நூலக உதவியாளராக இருவரும் நூலகப் பையனாக ஒருவரும் இருந்தனர். அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு நூலகப் பையன் மட்டும்தான்.

நூலகர் ஓய்வு பெற்ற பிறகு நான்காண்டுகள் நான் நூலகப் பொறுப்பில் இருந்தேன். வாரத்தில் நான்கு மணி நேரப் பாடவேளையைக் குறைத்துத் தரச் சொல்லிக் கேட்டுப் பிற்பகலில் நூலகத்தில் சென்று அமர்ந்து மாணவர்களுக்கு நூல்களை வழங்கினேன். அப்பொறுப்பை நீடித்துச் செய்யப் பல தடங்கல்கள். ஆகவே விலகிவிட்டேன். நூலகர் இல்லை என்பதால் துறை நூலகங்கள் செயல்படுகின்றன. பெரும்பாலும் ஆசிரியர் அறையிலேயே அந்நூலகம் இருக்கும். யாராவது ஓராசிரியர் பொறுப்பாக இருப்பார். நூல்களில் ஆர்வம் உடையவராகவும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்னும் உணர்வு உள்ளவராகவும் இருக்கும் ஆசிரியர் சிலர் நன்றாகச் செய்கின்றனர். பெரும்பாலோர் அலமாரிகளைப் பூட்டி வைத்திருப்பதோடு சரி. ஆசிரியர்களின் பயன்பாட்டுக்குத்தான் துறை நூலகம் என்று கருதி வைத்திருப்போரும் உண்டு.

மாணவர்கள் நூல்கள் எடுப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டுவதும் இல்லை. பல துறை நூல்களும் ஆங்கிலத்தில் தான் கிடைக்கின்றன. அவற்றையே வாங்கி அடுக்கி வைத்திருக்கிறார்கள். அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்விக்கு வரும் மாணவர்களே அரசு கல்லூரிகளில் பயில்கிறார்கள். கிட்டத்தட்டப் பாதிப்பேர் தமிழ் வழியில் பயில்பவர்கள். இன்னும் பாதிப்பேர் ஆங்கில வழியில் பயில்வதாகப் பதிவேடுகளில் இருப்பினும் தமிழில் படித்துத் தமிழிலேயே தேர்வு எழுதுபவர்கள். ஆக எந்தப் பாடம் எந்த வழியில் பயிலும் மாணவராக இருப்பினும்  எல்லோருக்கும் தமிழ் நூல்கள் தான் தேவை. தமிழில் இருக்கும் நூல்கள் மிக மிகக் குறைவு. பாடநூல் விற்பனை நோக்கத்திற்காகத் தனியார் பதிப்பகம் வெளியிட்ட சில வகை நூல்களே சந்தையில் கிடைக்கும். அவற்றைத் தேடி வாங்குவதும் கடினம். அத்தகைய சிரமத்தை ஆசிரியர்கள் எடுத்துக் கொள்வதில்லை. கல்லூரிக்கே கொண்டு வந்து தரும் விநியோகஸ்தர் கொடுக்கும் நூல்களை வாங்கி வைக்கின்றனர். இப்படி ஒவ்வொரு கல்லூரி நூலகத்திலும் ஆங்கில நூல்கள் கைபடாத புத்தம் புதுப் பிரதிகளாகக் காட்சி தந்து கொண்டிருக்கின்றன. அவை பயன்பாட்டால் கிழிவதில்லை. தரமற்ற தாள் காரணமாகச் சில ஆண்டுகளில் பொடிந்து போனால் தான் உண்டு. அரசு நிதி ஒதுக்கினாலும் பயன் பத்துப் பதினைந்து விழுக்காடுகூட இல்லை. இதைப் பற்றி எல்லாம் எந்தப் பரிசீலனையும் இல்லாமல் கடனே என்று ஆண்டுதோறும் நிதி வந்து கொண்டேயிருக்கிறது. நூலகங்கள் ஊதிப் பெருக்கின்றன. நாமக்கல் கல்லூரி நூலகத்தில் மட்டும் நாற்பதாயிரம் நூல்கள் உள்ளன என்றால் பாருங்கள். 

வி: அரசுக்கல்லூரி நூலகங்களில் ஆங்கிலப் புத்தகங்கள் கைபடாமல் இருக்கின்றன என்கிறீர்கள். மாணவர்களுக்கு ஆங்கிலம் அவசியம்; முதல் தலைமுறை மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றலில் இருக்கும் சிரமங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. மும்மொழிக்கொள்கை தொடர்பான விவாதங்களில், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் எழுத்தாளர் சுகிர்தராணியும் இந்தப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டி உள்ளார். நடைமுறையில் இருமொழிக்கொள்கையே இத்தகைய சிரமங்களைத் தருகிறது என்கையில், அரசுப்பள்ளிகளும் கல்லூரிகளும் எவ்வாறு மாணவர்களைத் தயார்படுத்தலாம்? ஆசிரியர்களும் தன்முனைப்போடு செயல்படவேண்டிய களம் இதுவென்று தோன்றுகிறது.

பெமு: மொழிக்கல்விக்கும் இலக்கியக் கல்விக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி நான் தொடர்ந்து பேசி வந்திருக்கிறேன். நாம் பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி மொழிப் பாடத்தை மொழியைக் கற்றுக் கொடுக்கும் நோக்கத்தில் வடிவமைப்பதில்லை. இலக்கியத்தைக் கற்றுக் கொடுக்கும் நோக்கில்தான் வடிவமைத்திருக்கிறோம். இலக்கியத்தின் வழியாக மொழியைக் கற்றுக் கொடுக்கலாம். அது ஒருவழிதான். சுயமாகப் பேசவும் சுயமாக எழுதவும் எங்கே கற்றுத் தருகிறோம்?

சிங்கப்பூரில் தமிழ்ப் பள்ளிகள் இருக்கின்றன. இப்போதும் இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து ஆசிரியர்களைத் தேர்வு செய்ய முடியவில்லை. காரணம் இங்கே படித்தவர்களுக்கு ஆங்கிலம் பேச முடியவில்லை, எழுதத் தெரியவில்லை. தமிழிலக்கியம் பயின்றால் வேலைவாய்ப்பு இல்லை என்கிறோம். இருக்கும் வேலைவாய்ப்புக்கு ஏற்ப நம்மைத் தயார்படுத்திக் கொள்வதில்லை. தமிழ் பயின்றோரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை ஆங்கில மொழிப் பயிற்சியை அரசே கொடுத்து சிங்கப்பூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்ப முயலலாம். இது தற்காலிக ஏற்பாடு தான். இதைச் செய்வதற்கும் நம்மிடம் திட்டம் ஏதுமில்லை.

தமிழாயினும் ஆங்கிலமாயினும் மொழியை நடைமுறைப் பயன்பாடு சார்ந்து கற்றுத் தர வேண்டும். மொழிப் பாட வினாத்தாளைப் பாருங்கள். மாணவரே சுயமாக எழுதும் வகையில் எத்தனை கேள்விகள் இருக்கின்றன? மனப்பாடம் செய்து எழுதுவதை ஆதரிக்கும் கல்வி முறை நம்முடையது. மனப்பாடத்திற்குக் கல்வியில் குறைந்த இடமே தர வேண்டும். சுயமாக எழுதுவதற்கே முதன்மை இடம் இருக்க வேண்டும். சுயமாக எழுதுவதைக் ‘கதை விடுதல்’ என்று கேலி செய்கிறோம். மொழிக் கல்வி சிறக்க வேண்டுமானால் மாணவர்கள் நிறையக் கதைவிட வேண்டும். அதற்கு அனுமதிக்கும் வகையில் பாடத்திட்டம், பாட நூல்கள், நடைமுறையோடு இயைந்த கற்பித்தல், செய்முறை மிகுந்த தேர்வு எனப் பல மாற்றம் தேவை.

ஐரோப்பிய நாடுகளுக்கு உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவர்கள் மூன்று மாதத்தில் இருந்து ஆறு மாதத்திற்குள் அம்மொழியைக் கற்றுத் தேர்ந்து அதில் உயர்கல்வி பெறுகிறார்கள். எப்படி முடிகிறது? மொழிக் கல்வியோடு இலக்கியக் கல்வியைக் குழப்புவதில்லை. நாம் பன்னிரண்டு ஆண்டு பள்ளியில் ஆங்கிலம் கற்றாலும் பேசவோ எழுதவோ தெரிவதில்லை. வாசிக்கவும் தடுமாறுகிறோம். சொல்வளம் பெறுவதில்லை. தமிழிலும் அப்படித்தான். தாய்மொழி என்றாலும் எத்தனை பேருக்குத் தம் கருத்தைத் தமிழில் எழுதவும் பேசவும் முடியும்? தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் பெரும்பான்மையோர் தடுமாறுகின்றனர். சுயமாக மொழி கற்று மேலே செல்வோர் குறைவுதான்.

வி: நவீன இலக்கியப் பிரதிகள் அவற்றிலுள்ள  கெட்ட வார்த்தைகள் காரணமாக கல்வித்துறைக்குள் நுழைவதில்லை. உங்கள் ஏறுவெயில் நாவலும் இதனால் பின்வாங்கப்பட்டது. தற்போதும் சூழல் அப்படியேதானிருக்கிறதா? பாடத்திட்டம் வகுப்பவர்கள் என்ன மாதிரியான அளவுகோல்களை வைத்திருக்கிறார்கள்?

பெமு: இலக்கியம் போலப் பொதுவெளியில் அனைவரும் அறிந்த பாடங்களுக்குப் பாடத்திட்டம் உருவாக்குவது சிரமம் தான். எங்கிருந்தாவது எதிர்ப்புக் குரல் வந்துவிடும். இராஜராஜசோழன் பற்றி இன்குலாப் எழுதிய கவிதை பாடத்தில் இடம்பெற்ற போது எதிர்ப்பு வந்தது. புதுமைப்பித்தன் கதை ஒன்று சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்தில் இருந்த போதும் எதிர்ப்பு வந்தது.  சங்கர் ராம் எழுதிய ‘மண்ணாசை’ நாவலைப் பாரதியார் பல்கலைக்கழகப் பாடத்தில் வைத்த போது பிரச்சினை ஏற்பட்டு அது நீக்கப்பட்டது.

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பாடநூல்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிறுவனம் என்சிபிஎச். இடதுசாரிப் பின்னணி கொண்ட அந்தப் பதிப்பகம் என்னென்னவோ செய்து தம் நூல்களைப் பாடத்திற்குள் கொண்டு வந்துவிடும் திறமையைப் பெற்றிருக்கிறது. தம்மை மீறி வேறொன்று உள்ளே வந்தால் அதை ஒழிப்பதற்கு எதையும் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள்.  ‘மண்ணாசை’ நாவலை வெளியிட்ட பதிப்பகம் வேறு. அதை நீக்கிவிட்டுத் தம் நூல் ஒன்றை வைக்க அப்பதிப்பகம் எடுத்த முயற்சி என்ன தெரியுமா? அந்நாவலில் ஏதோ ஓரிடத்தில் ‘மயிர்’ என்னும் சொல் வந்திருந்ததாம். அதைக் குறிப்பிட்டு ‘கெட்ட வார்த்தை கொண்ட நூலைப் பாடத்திட்டத்தில்  வைக்கலாமா?’ எனக் கண்டனம் தெரிவித்துத் துணைவேந்தருக்கு மாணவர் பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டனவாம். எதற்குப் பிரச்சினை என்று அஞ்சிய துணைவேந்தர் அந்நூலைப் பாடத்தில் இருந்து நீக்கச் சொல்லிவிட்டாராம்.

தொழிற்சங்கப் போராட்டங்களில் தொடக்க நிலையில் முதல்வருக்கோ பிரதமருக்கோ கல்வி அமைச்சருக்கோ அதிகாரிகளுக்கோ கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் அட்டை அனுப்புவது ஒரு போராட்ட வழிமுறை. அது ஒரு நூலை நீக்கப் பயன்படுத்தப் பட்டது. மயிர் என்பது எத்தனை பழைய சொல்!  ‘மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா’, ‘தலையின் இழிந்த மயிரனையர்’ என்றெல்லாம் திருவள்ளுவர் பயன்படுத்திய சொல்தானே அது? ‘வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி’ என்று ஆண்டாள் பாடியிருக்கிறாரே? ஆனால் மயிர் இன்று கெட்ட வார்த்தையாகிவிட்டது. அநாமதேயமாக வந்த கடிதங்களுக்குப் பயந்து நீக்கும் நிலைதான் இன்றிருக்கிறது.

நான் கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை பயின்றேன். முன்னாள் மாணவர் ஒருவர் பாடத்திட்டக் குழுவில் இருக்க வேண்டும் என்பது விதி போலும். ஆகவே என்னை ஒருமுறை அழைத்தனர். என் ஆசிரியர்களின் அழைப்பு என்பதால் ஏற்றுக்கொண்டேன். எல்லாவற்றையும் ஏற்கனவே முடிவு செய்திருந்தனர். கையொப்பம் இடுவது மட்டுமே என் வேலையாக இருந்தது. இக்கால இலக்கியம் பாடத்தில்  மு.வ.வின் நாவல் ஒன்று இருந்தது. சிரித்துக் கொண்டே ‘இன்னும் முவவ விடலீங்களா ஐயா?’ என்று துறைத்தலைவரிடம் கேட்டேன். ‘நீங்கெல்லாம் என்னென்னவோ எழுதறீங்கப்பா. அதையெல்லாம் பாடத்துல வெச்சிட்டுப் பலருக்கும் பதில் சொல்லணும். மு.வ.ன்னா எந்தக் கேள்வியும் வராது’ என்று அவர் சமாதானம் சொன்னார். காலம் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் நல்லொழுக்கம் போதிப்பதுதான் இலக்கியம் என்னும் பார்வையிலிருந்து நம் பாடத்திட்டம் மாறவில்லை. அப்பார்வை இன்னும் இறுகித்தான் போயிருக்கிறது. தேர்வில் நவீனப்பார்வை வேண்டும். அதற்குப் பொதுச்சமூகத்திலிருந்து ஏதாவது எதிர்ப்பு வருமானால் எதிர்கொள்ளும் துணிவு, நியாயப்படுத்தும் தர்க்கம் இருக்க வேண்டும். கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு அவை சுத்தமாக இல்லை.

வி: கல்லூரிப் பாடத்திட்டத்தில் பன்மைத்துவம் வேண்டும் என்கிற உங்களின் வாதம் சரியானதாகத் தோன்றுகிறது. நான் ஒரு தன்னாட்சிக் கல்லூரியில் பயின்றேன். பிராந்திய வேலை வாய்ப்புகளுக்கேற்பப் பாடத்திட்டம் இருந்தது. இதன் மூலம் வட்டார வரலாறும் ஆய்வுகளும் தொடரும் என நினைக்கிறேன். அனைத்துக் கல்லூரிகளுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்குவது சாத்தியமா? அல்லது பாடத்திட்டத்தில் பன்மைத்துவத்தை எப்படிச் செயல்படுத்தலாம்?

பெமு: எல்லாக் கல்லூரிகளுக்கும் தன்னாட்சி அதிகாரம் கொடுப்பது சாத்தியம் தான். அக்கல்லூரியே வினாத்தாள் தயாரித்துத் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டு மதிப்பெண் சான்றிதழ்களையும் வழங்க வேண்டும். அதற்குரிய கட்டமைப்பு வசதிகள் வேண்டும். பெரும்பாலான அரசு கல்லூரிகளில் வசதிகள் இருக்கின்றன. கல்லூரியே தேர்வு நடத்திக் கொள்வதில் பல நன்மைகள் இருக்கின்றன. மாணவரிடம் பெறும் தேர்வுக் கட்டணத் தொகையைக் குறைக்கலாம். அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை அக்கல்லூரி வளர்ச்சிக்கே செலவிடலாம்.

பாடத்திட்டத்தில் வட்டாரம் சார்ந்த பல்வேறு விஷயங்களைக் கொண்டு வரலாம். நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை இருக்கிறது. அது மூலிகைகளுக்குப் பெயர் பெற்ற மலைப்பகுதி. பழங்குடியின மாணவர்களும் கணிசமான எண்ணிக்கையில் வந்து படிப்பார்கள். தாவரவியல் படிப்பில் கொல்லிமலை மூலிகைகள் பற்றி ஒருதாள் வைக்கலாமே. நாமக்கல் மாவட்ட எழுத்தாளர்களின் படைப்புகளுக்குத் தமிழிலக்கியப் பாடத்தில் ஓரிடம் வழங்க முடியுமே. நாமக்கல் மாவட்ட வரலாற்றை வரலாற்றுத் துறை மாணவர்கள் படிக்கலாம். முட்டைக்குப் பெயர் பெற்ற நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைப் பராமரிப்பு தொடர்பான பாடம் விலங்கியல் துறையில் இருக்கலாம். உள்ளூர் வேலைவாய்ப்பு சார்ந்தும் பாடம் அமைக்கலாம். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளில் இருக்கிறார்கள். அவர்களுக்குச் சரியாக வழிகாட்டப் பாடம் வைத்தால் எவ்வளவோ நல்லது.  இவையெல்லாம் தன்னாட்சி அதிகாரம் இருந்தால் செய்ய முடியும். ஒவ்வொரு கல்லூரியின் சூழலுக்கும் மாணவர் தேவைக்கும் ஏற்ப அங்கேயே தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரம் தன்னாட்சியால் கிடைக்கிறது.   பாடத்திட்டப் பன்மைத்துவம் தன்னாட்சியால் சாத்தியம் என்றுதான் நினைக்கிறேன்.

தன்னாட்சி அதிகாரம் இருந்தால் தரம் இருக்காது, எல்லோரையும் தேர்ச்சி பெற வைத்துவிடுவார்கள் என்றெல்லாம் சொல்வார்கள்.  தன்னாட்சி அதிகாரம் பெற்ற பல கல்லூரிகள் தமிழ்நாட்டில் புகழ் பெற்று விளங்குகின்றன. கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, திருச்சி நேஷனல் கல்லூரி உள்ளிட்ட எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும். அவற்றில் சேர மாணவர்களிடம் பெரும்போட்டி நிலவுகிறது. அரசு கல்லூரிகள் பலவும் தன்னாட்சி பெற்றிருக்கின்றன. சென்னை மாநிலக் கல்லூரி, சேலம் அரசு கல்லூரி உள்ளிட்டவற்றைச் சொல்லலாம். இதிலும் நகரக் கல்லூரிகளுக்கும் கிராமக் கல்லூரிகளுக்கும் இடையே பாகுபாடு நிலவுகிறது. ஆத்தூர் கல்லூரி நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் அமைந்தது. அத்தகைய பரப்பளவு எந்த நகரக் கல்லூரிக்கும் கிடையாது. கூடுதலாக ஒரே ஒரு கட்டிடம் கட்டித் தேர்வாணையர் அலுவலகம் அமைத்தால் போதும். அதைத் தன்னாட்சி பெற வைத்துவிடலாம். ஏதேதோ விதிகளைச் சொல்லித் தவிர்ப்பார்கள்.  அப்படி இருக்க எல்லாக் கல்லூரிகளையும் தன்னாட்சி ஆக்கினால் நன்மைதான் என்று நினைக்கிறேன்.

அதனால் பல்கலைக்கழகங்களும் புத்துயிர் பெறும். ஒரு தன்னாட்சிக் கல்லூரியின் தேர்வாணையர் அலுவலகம் செய்வதைத் தான் பல்கலைக்கழகம் பல கல்லூரிகளுக்குச் சேர்த்துச் செய்து கொண்டிருக்கிறது. பட்டச் சான்றிதழ் வழங்குவதற்கு மட்டும் சிறுஅலுவலகம் ஒன்றை வைத்துக் கொண்டால்  போதும். பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்ன? ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்குவதும் ஆராய்ச்சி சார்ந்த நூல்களைப் பேராசிரியர்கள் வழியாக உருவாக்குவதும் தானே. இப்போது அப்படியா இருக்கிறது? ஏராளமான ஆசிரியர்களையும் அலுவலர்களையும் வைத்துக்கொண்டு நிதி நெருக்கடியில் பல்கலைக்கழகங்கள் தடுமாறுகின்றன. ஆராய்ச்சி என்பது பெயரளவுக்கும் நடைபெறுவதில்லை. லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் பேராசிரியர்களிடம் இருந்து எத்தனை ஆராய்ச்சி நூல்கள் வருகின்றன? இந்நூற்றாண்டில் பல்கலைக்கழகம் எதிலிருந்தாவது குறிப்பிடத்தக்க திறனாய்வு நூல் ஏதாவது வந்திருக்கிறதா? ஆங்கிலத் துறையிலிருந்து? அறிவியல் துறைகளில் இருந்து? தேர்வு நடத்தும் வேலையைப் பல்கலைக்கழகத்திலிருந்து பிடுங்கிவிட்டால் அவை ஒன்றிய, மாநில அரசுகள் கொடுக்கும் நிதியைக் கொண்டு ஆராய்ச்சி சார்ந்து செயல்படும். முதுநிலையில் நல்ல கல்வியை மாணவர்களுக்கு வழங்கும்.

வி: கடந்த 2022-2023ஆம் கல்வி ஆண்டு வரை அரசு கல்லூரிகளில் கிட்டத்தட்ட 99 சதவீதம் முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் என்கிறீர்கள். அவர்களுக்கு உதவித்தொகையும் உண்டு. அரசு கல்லூரி மாணவர்கள் திருமண நிகழ்வுகள், நகலகங்கள், பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள், அடுமனைகள், எரிபொருள் நிலையங்கள் போன்ற இடங்களுக்கு பகுதி நேர வேலைகளுக்குச் செல்கிறவர்கள் நிறைய. இங்கு வளாக நேர்காணல்கள், வேலை வாய்ப்பு முகாம்கள் நடக்கின்றனவா? அதற்கான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் ஏதேனும் நடத்தப்படுகின்றனவா

பெமு: பகுதி நேர வேலைக்குச் செல்வதைத் தவறென்று நான் கருதவில்லை. உலக அளவில் மாணவர்கள் பகுதி நேர வேலை செய்தல் இயல்பானதுதான். தம் தேவைகளைத் தாமே நிறைவேற்றிக் கொள்ளும் உழைப்பு நல்லதுதான். நம் மாணவர்கள் பகுதி நேர வேலைக்குச் செல்வதில் இருபிரச்சினைகள் இருக்கின்றன. உடல் உழைப்பு சார்ந்த வேலைகளுக்கும் கல்விக்கும் நம் சமூகத்தில் இருக்கும் தொடர்பு மிகக் குறைவு. எலக்ட்ரீசியன் வேலை செய்யும் ஒருவர் அதை எப்படிக் கற்றுக் கொண்டார் என்று கேட்டுப் பாருங்கள். ஏற்கனவே எலக்ட்ரீசியனாக இருக்கும் ஒருவரிடம் உதவியாளாகச் சேர்ந்து படிப்படியாகக் கற்றுக் கொண்டிருப்பார். கற்றுக் கொடுத்தவர் திறன் பெற்றவரா என்று தெரியாது. கற்றுக் கொண்டவர் திறன் பெற்றவர் ஆகிவிட்டாரா என்றும் தெரியாது. இத்தகைய வேலைகளையும் கல்வி நிறுவனங்கள் மூலம் கற்றுக் கொள்ளலாம் என்னும் நிலை இல்லை. ஐடிஐ, பாலிடெக்னிக் முதலிய கல்விக்கூடங்கள் இருக்கின்றன. அங்கிருந்து உருவாகி வருவோருக்கு நடைமுறை அறிவும் செய்முறை அறிவும் இருப்பதில்லை.

எந்த வேலையாக இருப்பினும் அதை முறைப்படி கல்வி நிறுவனத்தில் கற்றே செய்ய வேண்டும் என்னும் நிலை ஏற்பட வேண்டும். அதாவது திறன் உடையோர் பணியாற்றினால் கல்வியும் சிறக்கும், வேலையும் சிறக்கும். சில ஆண்டுகள் கல்வி கற்றுத் திறன் பெற வேண்டிய வேலைகளைப் பகுதி நேரமாகச் செய்யாமல் இருப்பது நல்லது. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பந்தி பரிமாறும் வேலைக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். முகூர்த்த நாள் என்று வந்து விட்டால் கல்லூரியில் மாணவர் வருகைப் பதிவு வெகுவாகக் குறைந்துவிடும். ஒரு முகூர்த்த நாளுக்கு முதல் நாள் பகல் விருந்து முதல் அடுத்த நாள் பகல் விருந்து முடிந்து வர இருநாள் ஆகும். நாமக்கல்லில் முட்டை தொடர்பான வேலைகளுக்குச் செல்வார்கள். அதைப் பகுதி நேர வேலை என்று சொல்ல முடியாது. முழுநாள் வேலைதான். அதைச் செய்துவிட்டு வந்து வகுப்பறையில் உட்கார முடியாது. ஆத்தூரில் இரவு சேகோ பேக்டரி வேலைக்குப் போய்விட்டு வந்து வகுப்பில் உறங்கும் மாணவர்களைக் கண்டிருக்கிறேன். கடைகளுக்குப் பகுதி நேரமாக மாணவியர் செல்வார்கள். அவர்களுக்கு வெகுகுறைவான ஊதியமே கிடைக்கும். மாணவர் கல்வியில் கவனம் செலுத்த ஏதுவான பகுதி நேர வேலைகள் என்று நம்மிடம் அதிகம் இல்லை. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. உடல் உழைப்பில் ஈடுபட்டு விட்டு வரும் மாணவர் கல்வியில் கவனம் செலுத்த இயல்வதில்லை. 

இன்னொரு பிரச்சினை இத்தகைய வேலைகளுக்குப் பகுதி நேரமாகச் செல்லும் மாணவர்கள் பலர் தம் கையில் பணம் வந்ததும் அதைக் கல்வி சார்ந்து செலவழிக்காமல் அதைக் கொண்டு தம் விருப்பத்திற்கு ஏற்ற வகையில்  வாழ முயல்கின்றனர். நான் வழக்கமாக மாணவர்களிடம் சொல்வதுண்டு, ‘ஒரு புத்தகம் வாங்க உங்களிடம் பணம் இருக்காது. ஆனால் வெயில் நாட்டிற்குச் சிறிதும் தேவையே இல்லாத ஷூ வாங்கப் பணம்  இருக்கும்.’ வெளிநாடுகளில் பகுதி நேரப் பணிக்குச் செல்லும் மாணவர்களின் நோக்கம் அந்தப் பணத்தைக் கல்விக்குச் செலவழிப்பதுதான். நம் மாணவர்களுக்கு அந்த விழிப்புணர்வு இல்லை.

அப்படிச் சம்பாதிக்கும் பணத்தைப் பெற்றோர்களுக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திலும் பல மாணவர்கள் இருப்பார்கள். நடுத்தரக் குடும்பங்கள் பிள்ளைகளின் கல்விக்குச் செலவழிப்பது பெற்றோர் கடமை என்று நினைக்கின்றன. அடித்தட்டுக் குடும்பங்கள் சம்பாதித்துக் கொடுப்பது பிள்ளைகளின் கடமை என்று நினைக்கின்றன. ஆகவே பகுதி நேர வேலையையே முழுநேர வேலையாக மாற்றிக் கொண்டு உயர்கல்வியில் இடைநிற்கும் மாணவர்கள் கணிசம். அவ்வப்போது மட்டும் கல்லூரிக்கு வந்துவிட்டுப் பல தாள்களில் நிலுவை வைத்துக் கல்வியை முடிக்காமல் வேலைக்கே சென்று விடுவோர் அனேகம். உயர்கல்வியில் இளநிலை படிக்கும் மாணவர்களில் எத்தனை விழுக்காட்டினர் முதுநிலை பயிலச் செல்கிறார்கள் என்று பார்த்தால் இருபத்தைந்து விழுக்காடு இருக்கலாம் என்று நினைக்கிறேன். கலைப்பாடப் படிப்புகளில் இளநிலை மட்டும் படித்துப் பயனில்லை. மருத்துவக் கல்வியிலும் முதுநிலைப் படிப்பு அவசியமாக இருக்கிறது. பொறியியல் படிப்பில் தான் இளநிலையே வேலைக்குச் செல்லப் போதுமானதாக இருக்கிறது. கலை அறிவியல் படிப்புகளில் முதுநிலைப் படிப்புக்குச் செல்வோர் எண்ணிக்கை வெகுகுறைவாக இருப்பதற்குக் காரணம் இடைநிற்றலும் பட்டப் படிப்பை முடிக்காமையும் மிகுதி என்பதுதான்.

இந்நிலையில் எல்லாக் கல்லூரிகளிலும் ‘வேலைவாய்ப்பு மையம்’ இருக்கிறது. ஆனால் செயல்படுகிறது என்று சொல்ல மாட்டேன். அதற்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளும் ஆசிரியரின் ஈடுபாட்டைப் பொறுத்தது. பெயரளவுக்கு ஒன்றை வைத்திருந்து என்ன பயன்? வேலைவாய்ப்பு மையம் இருவகையில் செயல்பட வேண்டும். கல்வி கற்கும் போது மாணவர்களுக்குப் பகுதி நேர வேலைவாய்ப்புகளைக் கைகாட்டி உதவ வேண்டும். எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்பைப் பெற வழிகாட்ட வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தோடு தொடர்ப்பு வைத்துக்கொண்டு இவற்றை நன்றாகச் செய்யலாம். இதற்கெல்லாம் அரசுத் திட்டங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திப் பயிற்சிகள் வழங்கலாம், போட்டித் தேர்வு வகுப்புகளை நடத்தலாம், வளாக நேர்காணல்களுக்கு ஏற்பாடு செய்யலாம், எவ்வளவோ செய்யலாம்.  ஆனால் கல்லூரிகளில் இருக்கும் மையங்கள் செயல்படுவதில்லை. வெறுமனே ‘நாங்களும் வைத்திருக்கிறோம்’ என்று காட்டிக் கொள்வதற்குத்தான் அவை பயன்படுகின்றன. 

வி: அரசு கல்லூரிகளில் கலை இலக்கிய நிகழ்வுகள், மாணவர் பொருள் விற்பனைச் சந்தை போன்றவையெல்லாம் நடத்தினால் மாணவர்களின் தனித்திறன் வளருமே? பிராந்திய வேலைவாய்ப்புகள் சார்ந்து அவர்களால் புதிய சந்தைகள் / தொழில்கள் தோன்ற வாய்ப்பிருக்கிறது. இவை குறித்து கல்வித்துறையில் ஏதேனும் வழிகாட்டல்கள் உண்டா?

பெமு: அரசு கல்லூரிகளில் மாணவர் தனித்திறன் வளர்ச்சி பற்றி அக்கறை காட்டும் ஆசிரியர்கள் வெகுகுறைவு. பெரும்பாலோர் ஏதாவது கூடுதல் பணியை ஏற்றுச் செய்ய முன்வர மாட்டார்கள். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்றைச் செய்தாக வேண்டும் என்னும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் தவிர செய்யாமல் தவிர்ப்பது அரசுப் பணியாளர்களின் இயல்பாக இருக்கிறது. எடுத்துச் செய்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதோடு அவர்களுக்குப் பலவித நெருக்கடிகளும் தருவார்கள். செயல்படுவோருக்கு நடைமுறைகள் எளிதாக அமைவதில்லை.

இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராகச் சில ஆண்டுகள் பொறுப்பு வகித்தேன். சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்திற்குச் செஞ்சிலுவைச் சங்க வேலையாகச் சென்று வருவதற்குப் பயணப்படி, நாட்படி உண்டு. அவற்றைப் பெறுவதற்குப் பெருமுயற்சி எடுக்க வேண்டும். பேருந்துப் பயணச்சீட்டை இணைக்க வேண்டும். வருகைச் சான்று தர வேண்டும். சில படிவங்களை நிரப்ப வேண்டும். எல்லாம் செய்து கொடுத்தாலும் அலுவலர் தம் சட்டைப்பையில் இருந்து பணத்தை எடுத்துத் தருவது போல நடத்துவார். நான் செலவு செய்த பணத்தைப் பெறுவதற்கு நடையாய் நடக்க வேண்டும். நூறு ரூபாய் எனக்கு வர வேண்டியிருப்பின் பத்து ரூபாய் பிரிவு அலுவலருக்குக் கொடுக்க வேண்டும். அதைப் பெற அனுமதி தரும் முதல்வர் என்னை அவர் அறைக்கு வரச் சொல்லி எனக்கு ஏதோ அவர் சொத்தை எழுதி வைப்பது போலப் பாவனையோடு விசாரித்து ‘உனக்குச் செய்கிறேன் பார்’ என்று காட்டிக் கொள்வார். இந்த அலைச்சலுக்கும் அற்பத்துக்கும் ஆளாக வேண்டாம் என்று நான் எழுதியே கொடுக்க மாட்டேன்.

இப்படி இருந்தால் பொறுப்பு எடுத்துக்கொள்ள யார் முன்வருவார்கள்? ஆர்வம் இருந்தாலும் பலர் முன்வருவதில்லை. ஆர்வத்தோடு வந்து அனுபவம் பெற்றவர்கள் விலகிச் செல்லவே விரும்புவார்கள். இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. செயல்படும் ஒருவரைத் தொடர விடமாட்டார்கள். சீனியர் ஜூனியர் பிரச்சினை வரும். நிரந்தர ஆசிரியரா கௌரவ விரிவுரையாளரா என்னும் பிரச்சினையைக் கொண்டு வருவார்கள். செயல்படாமல் பெயரளவில் யாரிடமாவது பொறுப்பு இருக்கும். சில பொறுப்புகள் யாரிடம் இருக்கிறது என்றே தெரியாது. நான் செஞ்சிலுவைச் சங்கப் பொறுப்பை எடுத்துக் கொண்டது  எப்படி தெரியுமா? தாவரவியல் பேராசிரியர் ஒருவர் ஓய்வு பெறும்போது தான் ஒரு கோப்பைக் கொண்டு வந்து முதல்வர் மேஜை மேல் வைத்தார். அது செஞ்சிலுவைச் சங்கக் கோப்பு. பல ஆண்டுகளாகச் செஞ்சிலுவைச் சங்கம் தொடர்பாக வந்த கடிதங்களை வாங்கிக் கட்டி வைத்திருந்த கோப்பு. என்னிடம் அதை ஒப்படைத்த முதல்வர் ‘இதுல ஒன்னும் வேலையில்ல. சும்மா வெச்சுக்குங்க’ என்று சொன்னார். இதில் மாணவர் தனித்திறன், தொழில்துறை, வேலைவாய்ப்பு என்பதை எல்லாம் எங்கிருந்து யோசிப்பது?

வி: முதுநிலைப் படிப்புகள் பெரும்பாலும் ஆங்கில வழியிலேயே கற்பிக்கப்படுகின்றன. அரசுக்கல்லூரிகளே இளநிலை தமிழ்வழிப் பட்டப்படிப்புகளை வழங்கிவருகின்றன. ஒருவர் இளநிலை வரை தமிழில் படித்து முதுநிலை ஆங்கிலத்தில் படிக்கிறார். பின்னாளில் முதுநிலைப் படிப்பிற்கான போட்டித் தேர்வுகள் வரும் பொழுது அவரால் இளநிலை வரை தமிழ்வழியில் பயின்றிருந்தாலும் அதற்கான சலுகையைப் பெற முடியவில்லை. இதில் ஏதும் மாற்றம் கொண்டு வந்தால் நலமாகுமா?

பெமு: அப்படியா இருக்கிறது? இது பற்றி எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இளநிலை வரைக்கும்தான் தமிழ் வழிப் படிப்பு இருக்கும்போது முதுநிலைப் படிப்புத் தகுதியைக் கொண்ட வேலைகளுக்கு நியமனம் செய்கையில் இளநிலை வரைக்கும் எடுத்துக்கொள்வதுதானே நியாயம்? அப்படித்தான் எடுக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். இல்லை என்றால் அதை வலியுறுத்தி விதி மாற்றம் செய்ய முயலலாம்.

மேலும் தமிழ் வழிக் கல்விக்கு இடஒதுக்கீடு இருப்பதால் தமிழ் வழிப் படிப்புகளின் எண்ணிக்கையைக் கூட்டவும் அரசு முயல வேண்டும். புதிதாகத் தொடங்கும் கல்லூரிகளிலும் சரி, ஏற்கனவே இருக்கும் கல்லூரிகளில் புதிய படிப்புகளைத் தொடங்கும் போதும் சரி முதன்மையாகத் தமிழ் வழிப் படிப்புகளையே உருவாக்க வேண்டும். சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் தமிழ் வழிப் படிப்பைக் கொடுப்பதையும் ஊக்கப்படுத்த வேண்டும். இடஒதுக்கீடு கொடுத்துவிட்டு அதற்கேற்ற படிப்புகள் இல்லை என்றால் எப்படி? தமிழ் வழிக் கல்வியை வளர்க்க வேண்டும் என்னும் நோக்கத்தில்தான் இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால் தமிழ் வழிக் கல்வி பெறுவோர் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கு படிப்புகள் வேண்டுமே?

புதிதாகத் தொடங்கும் அரசு கல்லூரிகளில் பி.காம். படிப்பைக் கட்டாயம் தருகிறார்கள். ஆனால் ஆங்கில வழிதான். பி.எஸ்ஸி. கணிதம் இருக்கிறது. அதுவும் ஆங்கில வழிதான். ஏன் அவற்றைக் கொடுக்கும் போதே தமிழ் வழியாகத் தரலாமே. தமிழ் வழிக் கல்விக்கான இடஒதுக்கீடு வராத போது என்னவகையில் படிப்புகள் உருவாக்கப்பட்டனவோ அதே வகை இப்போதும் நீடிக்கிறது. அதிகாரிகள்தான் இதை உணர்ந்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு இத்தகைய பார்வை கொண்டவர்கள் கல்லூரிக் கல்வி இயக்குநராகவோ செயலராகவோ வர வேண்டும். இவையெல்லாம் சிறுமாற்றங்கள். இடஒதுக்கீட்டின் துணைவிளைவுகள். அதைக்கூடச் செய்யும் பார்வை இல்லை.

தொடரும்…

விஜயகுமார்

வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. மிகச் சிறப்பான கட்டுரை ஐயா. குறிப்பாக, நூலகப் பையனை நூலக உதவியாளர் என்று மாற்றியது. இன்றும்கூட மாநகராட்சிகளில் ‘கிராம நிருவாக அலுவலகம்’ உள்ளது. மாநகராட்சியில் எப்படி கிராமங்கள் இருக்கும் என்ற வினா எழுகிறது.‌ சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பணிசெய்ய ஏதுவாக மொழி பயிற்சி அரசே தர வேண்டும் என்பது முக்கியமான யோசனை. அதேபோல் தன்னாட்சி கல்லூரிகள் குறித்த பார்வையும்.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss