
குயில் பாட்டு -1
ஆதவனின் ஆடி போல் மிளிரும்
நாம் சேர்ந்திருக்கும்
இப்பகல்வெளி முழுவதையும்
இனிய ஸ்வரங்களால்
நிரப்பும் அந்த குயில்
சொர்க்கத்திலிருந்தா வந்ததென
வெகுளியாய் வினவுகிறாய்.
என்னை கட்டியணைக்கிறாய்
……………………………….குயிலோசை.
மெலிதாக முத்தமிடுகிறாய்
……………………………….குயிலோசை.
நீண்ட குயிலோசை…………………
கண்கள் மூடும் என்னை மார்பில் சாய்த்து
விரல்கள் கோர்க்கிறாய்.
தெரியவில்லையா உனக்கு….?
என் மனம் தான்
அந்த மரத்தின் மீதிருந்து
கூ…வெனவும்
கு..க்..கூ…வெனவும்
பாடுகிறது என்று.
குயில் பாட்டு -2
மெல்ல விழிப்பு தட்டி விட்டது
தொடர்ச்சியான குயிலோசை கேட்டு.
உன்னருகேயிருந்து – சற்றே
நகர்ந்திருக்கும் என்னை
மென்மையாக இழுத்து
பக்கம் சேர்க்கிறாய்.
“இதென்ன….
அர்த்த ஜாமத்தில்
இப்படியொரு சங்கீதம்…!” என்கிறேன்.
என் பின்னங்கழுத்தில் புதைந்திருக்கும்
உன் குரல்
சிருங்கார வெப்பத்துடன் சொல்கிறது.
“காத்திருக்கும் என்னை மறந்து
நீ உறங்கியதிலிருந்து
உன் துயில் களைக்க
எத்தனை முறை
கூவி விட்டது தெரியுமா
இந்த இனிய இரவு….?!” என்று.
குயில் பாட்டு -3
இன்னும் துலங்காத புலரியில்
இவ்வளவு அவசரமாய் – நீ
அழைத்துக் கொண்டேயிருப்பது
யாரைத் தான் இம்மாநிலத்தில்..!?
வைதரணி நதிக்கரையில்
படகுக்காக காத்திருக்கும் உயிர்கள்
ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்கின்றன
மறையத் துவங்கும் பூமியின் விளிம்பை.
குயில் பாட்டு – 4
பெரும்பாலையென விரிந்திருக்கும்
ஆளரவமற்ற கடற்கரையில்
தான் மட்டும் நடந்து செல்லும்
ஒற்றைப் பாத சுவடுகளின் பள்ளங்களில்
மௌனமாய் நிறைகிறது அந்தி.
அடுத்தடுத்து வரும் அலைகளின்
வெள்ளை விளிம்புகளில் பயணித்தபடி
கரையை அடைய முடியுமாவென
முயன்று பார்க்கிறது ஒரு குயில்.
அமர்ந்து நனைந்து
எழுந்து பறந்து
பின் மீண்டும் அமர யத்தனித்து
விளையாடிப் பார்க்கும் செல்லக் குயிலே…
ஒரே ஒரு முறையாவது
பாடலாம் தானே நீ….
அவ்வளவு தனிமையிலிருக்கிறது கடல்.
குயில் பாட்டு – 5
என் கனவுகளின் – இன்னதெனெ
நிர்ணயிக்க முடியாத பொழுதுகளில்
உள்நுழைந்து – சகடக் கயிற்றின் வழி
கிணற்றின் ஆழத்திலிருந்து
நீரை மொண்டு வெளிக்கொணர்வது போல
கூவி கூவி மேலே எழுப்பாதே
என் பிரக்ஞையில் உறைந்து கிடக்கும்
முற்பிறப்பு நினைவுகளை.
ஒற்றைத் தண்டவாள பயணத்திற்கே
தடுமாறுகிறது இந்த இரயில்.
குயில் பாட்டு – 6
நிறுத்தவே முடியாதென எண்ணியிருந்த
குயிலோசை நின்று போய்
இரண்டு நாட்களாயிற்று.
பால் கிண்ணத்தை காலி செய்து கொண்டிருக்கும்
வீடு திரும்பிய பூனை
சந்தேகமாய் பார்க்கும் என் கண்களை
சந்திக்க மறுத்து
மீண்டும் மீண்டும் கூவுகிறது.
*
உனதிந்த ஏக்கம்
இளைப்பாறுதலற்று கூவித் திரிகிறது
தினசரிகளின் வனத்தில்.
மனுஷகுமாரனின் குயிலுக்கு
தலை சாய்க்க இடமே இல்லை.
*
இரவு முழுதும்
மோர்ஸ் போன்ற பாஷையில்
ஒலிக் குறியீடுகளால்
தவகல்களை அனுப்பியபடி இருக்கும்
இந்த குயில் – நிச்சயமாக
வேற்று கிரகவாசிகளின்
இரகசிய உளவாளி தான்.
அசிரத்தையாக இருக்கும்
பூமியின் அரசுகளே…
மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்.
உறுதியாக கவிழ இருக்கின்றன
உமது ஆட்சிகள்.
*
ஊடலில் இருக்கும் என்னை
வீட்டிலிருந்து வெளிக்கொணர
கூவலுக்கொரு வெள்ளிக்காசென
கணக்கிட்டு – கூலி கொடுத்தானா தோழி.?
நம் முற்றத்து வானில் – அவை
இறைந்து கிடக்கின்றன பார்
மினுங்கிடும் நட்சத்திரங்களாக.

சம்யுக்தா மாயா
சம்யுக்தா மாயா தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர். தற்போது தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 2016ல் உயிர்மை பதிப்பகத்தில் இவருடைய "டல்ஹொஸியின் ஆரஞ்சு இரவு" என்கிற கவிதை நூலும் 2023ல் "தீ நின்ற பாதம்" என்கிற இரண்டாவது கவிதை நூல் சால்ட் பதிப்பகத்திலும் வெளிவந்துள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

இரவுகளில் நீண்ட கூவலாய் கூவிய குயிலுக்கு எனது வணக்கங்கள்
மீண்டும் மீண்டும் கூவ அழைக்கிறேன்
மலைமீதிருந்து
நன்றி.