வேர்ச் சிகிச்சை : கா.சிவா

        “தம்பி, நாந்தான் ஒன்கிட்ட சொன்னேனே. தாங்க முடியாத வேதனை ஒங்களுக்கு வேண்டாம்னுதான் ஒரு கொழந்தேயே போதும், அதையே நல்லா வளங்கன்னு சொன்னேன்…” 

     இத்தனை வேதனையுடன் துடித்த அப்பாவின் முகத்தை பார்த்த சுரேஷுக்கு உள்ளம் நடுங்கியது. 

   நான்கு ஆண்டுகளுக்கு முன் ஹரீஷ் பிறந்திருந்த சமயத்தில், உறுத்தாத நூலிழைகளினால் ஆன வெண்நுரை போன்ற துண்டில் பொதித்திருந்த பிள்ளையை, முகம் மலர சில நிமிடங்கள் பார்த்திருந்தவர் விழிகளில் ஈரம் படர்ந்திருந்தது. 

   இவன் மனைவி ரேகா  அப்பாவிற்கு காப்பி கலக்குவதில் ஈடுபட்டிருந்தாள். சமையலறை பக்கம் ஒருமுறை பார்த்தபின் “தம்பி இப்பவே சொல்றேன்னு ஒன்னும் நெனைச்சுக்காத. பட்டுப்போல இருக்கிற இந்தப் பயல ஆசையா வளத்து பத்திரமா பாத்துக்கங்கடா. இன்னொரு பிள்ளை வேணாம்பா. அதனால வர்ற வேதனைய ஒங்களால தாங்க முடியாது..” என்று கூறினார். அந்தக் குரலில் இருந்த கூர்மையும் உறுதியும் அவர் உள்ளார்ந்து கூறுகிறார் என்பதை சுரேஷிற்கு உணர்த்தியது. எனவே அவர் கூறியதற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் வெறுமே தலையசைத்தான். 

     இவனுடைய தம்பி ரமேஷ், பத்து வயதில் திடீரென காய்ச்சலில் படுத்து ஐந்து நாட்களில் இறந்துவிட்டான். அதனை மனதில் வைத்து அவர் கூறுவதாக தோன்றியபோதும் சொன்ன வார்த்தைகள் மனதில் பதிந்திருந்தது. 

     ஆனாலும், அப்பா கூறியதை ரேகாவிடம் சொல்லவில்லை. சொன்னால் அப்பா மீது அவள் வைத்திருக்கும் மரியாதை குறையுமோ என்ற எண்ணத்தால் தவிர்த்துவிட்டான். 

   ஊரில் தனியாக வசித்து வந்த அப்பாவிடம் வாரம் ஒருமுறை தொலைபேசியில் பேசுவார்கள். எப்போதாவது விசேசங்களுக்கு சென்றால் நேரில் பார்ப்பார்கள். இரண்டாவது குழந்தை உண்டானதை அப்பாவிடம் சொல்ல சங்கடப்பட்டு தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான். இவன் அத்தை மகனுக்கு, அதாவது  அப்பாவின் தங்கை மகனுக்கு பிறந்த பிள்ளையை பார்ப்பதற்காக சென்னை வந்தவர் அப்படியே வீட்டுக்கும் வந்தார். வயிறைப் பார்த்தே தெரிந்து கொள்ளுமளவிற்கு மாதங்கள் ஆகிவிட்டன. வயிறையல்ல முகத்தைப் பார்த்தே அறியும் பெரியவர்கள் ஊரில் உண்டு. அத்திறன் அப்பாவிற்கும் இருக்கக்கூடும். அவராகவே தெரிந்து கொண்டதில் சற்று நிம்மதியாக இருந்தாலும் அவர் முன்பே சொன்ன வார்த்தைகள் மனதில் உறுத்திக் கொண்டுதான் இருந்தது. அதை ரேகாவிடம்  சொல்லியிருந்தால் அவளே அப்பாவின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்து இரண்டாவது பிள்ளையை தவிர்த்திருப்பாளோ என்ற மன ஊசலாட்டமும் நடந்து கொண்டேயிருந்தது. 

    “அப்பா டீயக் குடிச்சிருங்க… ஆறிடிச்சின்னா குடிக்க முடியாது”   என்று அப்பாவை இயல்புக்கு கொண்டு வர முயன்றான் சுரேஷ். 

  நிமிர்ந்து இவனைப் பார்த்தவர் டீயை எடுத்து ஒரே மூச்சில் குடித்துவிட்டு கிளாசை டேபிளில் வைத்தார். தலையை சற்று சாய்த்து கண்களை சுருக்கி தான், சொல்வதன் தீவிரம் இவனுக்கு புரியவில்லையோ என்ற இரக்க பாவத்துடன்  பார்த்தார்.

   “சுரேஷ், ஒந்தம்பி ரமேஷ் காய்ச்சல்ல போனதாலதான் அப்படிச் சொன்னேன்னு நெனைக்கிற தானே” 

     அவர் முன்பு கூறியதை சட்டை செய்யாமல்  இருந்ததற்காக இவன் தலைகுனிந்தான். கடைக்குள் ஆட்கள் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். பேச்சுக்குரல்கள் சிகரெட் புகையுடன் கலவையாய் எழுந்து சூழ்ந்தன.

  “இது நம்ம குடும்பத்தில தொடர்ந்து நடக்கிறதின்னு சொன்னா பயப்படுவீங்கன்னுதான் மேலோட்டமா சொன்னேன்…” என்றவர் எழுந்து நடக்க ஆரம்பித்தார். இவனும் எழுந்து டீக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு அப்பாவை பின் தொடர்ந்தான். 

   சாலையில் வாகனங்களின் ஒலிப்பான்கள் செவியைத் துளைத்தன. ஏன்தான் இப்படி வெறிகொண்டு அடிக்கிறார்களோ. ஒதுங்கி வழிவிடுவதற்கு இத்தனை அழுத்தம் தேவையில்லை. அவரவர்களுக்கான மன அழுத்தம், அவசரம், கையாலாகாதனம் அனைத்தும் ஒரு விரலில் குவிந்து அந்த ஒலிப்பானை அழுத்துவதால்தான் இந்த பிளிறல். அது மெல்லுணர்வுள்ள மற்றவர்களை எப்படி வதைக்கும் என்பது பற்றி துளியும் பிரக்ஞை இருப்பதில்லை. ஒவ்வொருவரும் தனித்தனிகளாக மாறிவிட்ட உலகத்தின் சத்தமான சாட்சியம்.  அந்த சத்தங்களால் அப்பாவின் உடலில் அவ்வப்போது அதிர்வு தோன்றி அடங்கியது. 

   அருகிலிருந்த பூங்காவிற்குள் நுழைந்தார் அப்பா. இவனும் தொடர்ந்தான். வட்டமான பூங்காவின் மையத்தில் இருக்கை அமைத்திருந்தார்கள். அதில் தூசியும் பறவைகளின் எச்சமும் படிந்திருந்தது. காலையில் படிப்பதற்காக வாங்கி கையில் வைத்திருந்த தினமணி நாளிதழை பிரித்து விரித்து அதில் அமர்ந்தார். அருகில் இவன் அமர்ந்தான்.  பூங்காவின் சுற்றுச் சுவரையொட்டிய நடைபாதையில் பலர் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் தங்களுக்கு விருப்பான பாடலை அனைவருக்கும் கேட்கும் வண்ணம் ஒலிக்கவிட்டபடி சென்றார்கள். மற்றவர் மனநிலை பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாத மனிதர்கள் பெருகிவிட்டார்களே என்ற எண்ணம் தோன்றியபோதே நானும் அவர்களில் ஒருவனாகிவிட்டேனா என்று தன்னைப் பற்றியும் யோசனை ஓடியது.  

  “சுரேஷ், ஒந்தம்பி ரமேஷ் இறந்தது மட்டும்தான் ஒனக்குத் தெரியும். அது முதல் மரணமில்ல. அதுக்கு முன்னாடி எந்தம்பி குமார் இப்படித்தான் பத்து வயசுல பாம்பு கடிச்சு செத்தான்….” மெல்லிய குரலில் அப்பா சொன்னார். 

     இதுவரை அறியாததை அப்பா கூறியதால், சுரேஷ்  விழிகள் விரிய உள்ளுக்குள் ஏதோவொரு அச்சம் தோன்ற உன்னிப்பாக கவனித்தான். 

   “அதுக்கு முன்னாடி எஞ்சித்தப்பா கண்ணய்யா பன்னென்டு வயசுல வயல்ல மயக்கம் போட்டு விழுந்து செத்தாராம்…  ரமேஷ் செத்தப்ப நானும் ஒங்கம்மாவும் அரிமளம் கணேசன் ஜோசியரப் போய் பாத்தோம். இது நம்ப குடும்பத்தோட ஏதோவொரு சாபம்னு சொன்னார். ரெண்டுல ஒண்ணு அதுவும் இளையது மட்டும் சாகுது. இத சரி பண்றது சாதாரண காரியமில்ல. அந்த சாபம் என்னன்னு கண்டு பிடிச்சு பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கிட்ட மன்னிப்பு கேட்டு அவங்க  கோயில்ல வந்து மன்னிச்சேன்னு சொன்னா ஒருவேள தீரலாம். அதுக்குப் பதிலா ரெண்டாவது பிள்ளைய பெத்துக்காம இருக்கிறது எளிதான விசயம்னு அவர் சொன்னாரு…” 

   லேசாக நடுங்கிய இரண்டு கைகளின் விரல்களை ஒன்றாக கோர்த்துக் கொண்டார். காய்ந்த உதடுகளை வாய்க்குள் மடித்து ஈரமாக்கிக் கொண்டார். குனிந்தும் வேறு பக்கமாக திரும்பியும் இவன் முகத்தை பார்க்காமல் தவிர்த்தார். 

  “சாபம் என்னன்னு கண்டுபிடிச்சு அத நேர்பண்ணனும்னுதான் தோணிச்சு.  ரமேஷ் நெனப்புலேயே மனசொடிஞ்சு கொஞ்ச நாள்ளேயே ஒங்காம்மாவும் போய் சேந்துட்டதால அந்த விசயத்தை அப்படியே விட்டுட்டு ஒன்னக் கவனிக்கவே சரியா இருந்துச்சு. ஒனக்கு பிள்ளை பொறந்தப்பதான் திரும்பவும் சட்டுன்னு அந்த நெனப்பு வந்துச்சு…” 

   ரேகாவிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்காமல் சத்தத்தை நிறுத்திவிட்டு அப்பா சொல்வதைக் கவனித்தான்.

   “இந்தக் காலத்து புள்ளங்கதான் எத்தன புள்ளைங்க வேணும் எந்த நேரத்துல வேணும் எல்லாத்தையும் முடிவு பண்ணி அதே மாதிரி பெத்துக்குறாங்களே. அதே மாதிரி நீங்களும் இருப்பீங்கன்னு நெனச்சேன். ஏந்தப்புதான். இத அப்பவே சரி பண்ணீருக்கனும். இப்ப சரிபண்ண முடியுமான்னு தெரியலையே. பெத்து கண்ணு முன்னாடி வளர்ற பிள்ளைய… ஆசையா வளர்த்த பிள்ளைய… அப்படியே வாரிக் கொடுக்கிற கொடுமய, அதனால வர்ற துயரத்த நீங்களும் அனுபவிக்கக் கூடாதுப்பா… அனுபவிக்க கூடாது…”

  விழிகளைத் துடைத்து விட்டு எழுந்தவர் “ஒம் பொண்டாட்டிக்கிட்ட பேசு. ஏதாவது அவசரமான விசயமா இருக்கப் போகுது. நான் இப்படியே கெளம்பி ஊருக்குப் போறேன். ஏதாவது பண்ண முடியுமான்னு பாக்குறேன்…”  

   “அப்பா, இந்த விசயத்தை ரேகாகிட்ட சொல்லாமா. சொன்னா எப்படி எடுத்துக்குவாளோன்னு தயக்கமா இருக்குப்பா..” 

   “ஒம்பொண்டாட்டியோட மனசும், அவ எத எப்படி எடுத்துக்குவாங்கிறதும் ஒனக்குதான் தெரியும். அதுக்கு தகுந்த மாதிரி நீதான் முடிவு பண்ணனும். அப்பா பெரிய மனுசன்தான்னாலும் எல்லா விசயத்துக்கும் யோசனை சொல்லிட முடியாது பாத்துக்க..” என்றபடி நடக்கத் தொடங்கினார்.

  சுரேஷ் தன் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்து அப்பாவின் பாக்கெட்டில் வைத்தான்.  “ஏப்பா… ” என்று தயங்கியபடி இவன் முகத்தை பார்த்தவர், அமைதியாக தலையசைத்துவிட்டு  நடந்தார். 

              ****** 

  மாலை ஐந்துமணி இருக்கும். மார்கழி மாதமென்பதால் அப்போதே தெருவெங்கும் மெல்லிருள் புகைபோல படரத் தொடங்கியது.  எட்டு மாத கர்ப்பத்தோடு இருந்த கமலியின் முனகல் வெளியே நின்ற சின்னய்யாவிற்கு கேட்டது. தம்பி பிறக்கும்வரை தங்கள் வீட்டில் இருக்குமாறு தாஜாபண்ணி சீனிப்பயலை கமலியின் அம்மா  அழைத்துச் சென்றுள்ளார்.  இந்த மாதம் மாரியம்மன் கோவிலில் விளக்கேற்றி பூசை செய்வது சின்னய்யாவின் முறை. இவளை தனியே விட்டுச் செல்ல மனமில்லாமல் மருகிக் கொண்டிருந்தார். 

   மேலத்தெரு பெரியவீட்டின் சின்ன மருமகளுக்கு ஏழாம் மாதத்தில் கொடுக்க வேண்டிய  தீர்த்தம் இன்று கொடுக்க வேண்டுமென்று நேற்றே தகவல் சொல்லிவிட்டிருந்தார்கள். அவர்களை ஆறு மணிக்கு வரச் சொல்லியிருந்தார். இப்போதே நேரமாகிவிட்டது. சென்று எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி நைவேத்யத்திற்கு பொங்கல் வைத்து தயாராக வேண்டும். அவர்கள் வரும்போது தயாராக இல்லாவிட்டால் பெரிய வீட்டு பொல்லாப்பிற்கு ஆளாக வேண்டும். இப்போதே வாழ்க்கையை ஓட்டுவது பெரும்பாடாக இருக்கும்போது நிலைமை இன்னும் மோசமாகிவிடும். 

   “என்ன மாமா, பதட்டமா நிக்கிறீங்க” என்று கேட்டபடி நின்ற கனகுவைப் பார்த்ததும் பதட்டம் தணிந்தது. 

   “ஏத்தா, நான் கோயிலுக்கு போகனும், உள்ள வடிச்ச கஞ்சி சூடா இருக்கு. அதக் குடிச்சுக்கிட்டு அத்தைய கொஞ்சம் பாத்துக்கிறியா…”

    “சரி மாமா நான் பாத்துக்கிறேன். பூசைய முடிச்சிட்டு சீக்கிரமா வந்திருங்க” என்றபடி தாவணியிலிருந்த தூசியை தட்டியபடி குனிந்து குடிசைக்குள் நுழைந்தாள். சின்னய்யா இடுப்பிலிருந்த சாவிகளை தொட்டுப் பார்த்துக் கொண்டு கோவிலை நோக்கி விரைவாக நடந்தார். 

     ஒருவழியாக வேலைகளெல்லாம் முடிந்துவிட்டது. பொங்கல் தயாராகிவிட்டது. அம்மனுக்கு அலங்காரம் முடிந்துவிட்டது. விளக்கினொளியில் அம்மன் முகம் அருள் பொங்கி நிறைவதைக் கண்டதும் உள்ளுக்குள் குளிர விழிகளலோரம் கசிந்தது. கை கூப்பி மனதார வணங்கினார். 

     காலடியோசை கேட்டதும் கருவறையிலிருந்து வெளியே வந்தார். பெரியவீட்டு பெரிய மருமகள் வந்து கொண்டிருந்தாள். 

   “வாங்கம்மா… எல்லாம் தயாராகிவிட்டது. தீபாராதனை காட்ட வேண்டியதுதான்…” என்றவர் அவள் மட்டும் வந்திருப்பதைப் பார்த்து தயங்கி “மத்தவங்கள்லாம் வந்திட்டுருக்காங்களா..” என்று கேட்டார். 

  “ஆமாமா, அவங்களாம் வராங்க. எல்லாம் தயாரா இருக்கான்னு பாக்கிறதுக்காக நான் முன்னாடியே வந்தேன்…” அவள் குரலிலும் பார்வையிலும் ஏதோவொரு கயமை படிந்திருப்பதை உணர்ந்தார். 

   “தீர்த்தம் தயாராயிருக்கா..” என்ற கேள்வியின் கூர்மை இவரின் அகத்தைத் தீண்டியது. ஒரு கணத்தில் தன் மனதில் வரித்திருக்கும் கூனியின் பார்வையை இவளுடைய பார்வை ஒத்திருப்பதை உணர்ந்தபோது மெல்லிய நடுக்கம் தோன்றியது. தன்னால் இந்த வலைக்குள் இருந்து தப்பிக்க முடியுமா என துழாவிய அகத்தின் கால்கள் சோர்ந்து மடங்கின. 

   “இதைப் பிடிங்க. தீர்த்தத்துல கலந்திடுங்க…” என்று அவள் நீட்டிய மடித்த பூவரச இலைக்குள் தட்டுப்பட்ட அரைபட்ட ஏதோவொரு பச்சிலையின் குளுமை இவர் கையைச் சுட்டது. 

    “வேறெதாவது செஞ்சீங்கன்னா…” என்று இவரைப் பார்த்த அவளின் விழிக் கூர்மையில் நெருப்புப் பொறி தெரிந்தது. இவ்வூரின் மிக முக்கியஸ்தரான பெரியவர் இவள் சொல்வதையே கேட்பார். இவளுக்கு பிடிக்காத இரு குடும்பங்கள் எப்படி சிதைந்து இந்த ஊரிலிருந்து காணாமல் போனது என்பது மனதிற்குள் ஓடியது. இவள் கணவனின் தம்பியிடம் பணத்தை தாராளமாகக் கொடுத்து அதனை செலவழிப்பதால் கிடைக்கும் இன்பங்களில் அவனை திளைக்கச் செய்தாள். இதன் மூலம் அவன் வீடு மற்றும் சொத்து விவகாரங்களில் ஈடுபடக் கூடாது என இவள் நினைத்தது நடந்தது. ஆனால்,  ஒரு பதினைந்து வயதுப் பெண்ணை வலுக்கட்டாயமாக குடும்பம் நடத்த தூக்கிக் கொண்டு வருவான் என்பதை இவள் எதிர்பார்க்கவில்லை. இவளுக்கு அதில் விருப்பமில்லாவிட்டாலும் அந்தக் குடும்பத்தை மிரட்டி பிரச்சனை வராமல் தடுத்தாள்.

    “அம்மா, இத முன்னாடியே செஞ்சிருக்கலாமே. கோயில்ல வந்து அம்மனுக்கு முன்னாடியா பண்ணனும்..” 

   “பண்ணாமயா இருந்திருப்பேன். இங்கே வந்துதான் முடியனும்னு அம்மனே நெனைக்கிறா போலிருக்கு. எதையும் யோசிக்காம சொன்னத ஒழுங்கா ஒடனே செய்ங்க..” 

  “இதற்குமேல் ஆத்தா நீதான் பொறுப்பு” என்று மனதிற்குள் கூவியபடி செம்பு பாத்திரத்தில் துளசியிலையுடன் இருந்த நீரில் அவள் கொடுத்ததைக் கலந்தார். இவர் கலக்குவதையும் அவள் அங்கிருந்தபடியே கவனித்தாள். 

    கலக்கி முடித்து இவர் நிமிர்ந்தபோது அவளது ஐந்து வயது மகனுடன் பெரியவீட்டின் மற்றவர்களும் வந்தார்கள். வரவேற்கும் விதமாக இவள் முகம் மலர அவர்களை நோக்கி திரும்பினாள்.  வல்லூறுகளின் மத்தியில் சிறிய கோழிக்குஞ்சுபோல நடுங்கிக் கொண்டே வந்த இளையவளை சின்னய்யா பார்த்தார். அவளின் மெல்லிய உடலில் மேடிட்ட வயிறு துருத்திக் கொண்டு தெரிந்தது. இளமையின் கனவுக்குள் தன் பெற்றோரின் அரவணைப்பின்  கதகதப்பிற்குள் ஒரு தேன்சிட்டென சுகமாய் பறந்து கொண்டிருந்திருப்பாள். ஆனால், இங்கே… பெருமூச்சுடன் அவள் கண்களைப் பார்க்க எழுந்த ஆவலை உள்ளம் நடுங்க தவிர்த்தார். ஆனால், கை விரல்களின் நடுக்கத்தை தடுக்க முடியவில்லை.

      மறுநாள், தீர்த்தம் குடித்தவளுக்கு கர்ப்பம் கலைந்து உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் தஞ்சாவூருக்கு வண்டி கட்டி தூக்கிச் சென்றார்கள் என்று தகவல் சொன்னார்கள். இனிமேல் அவளுக்கு குழந்தையே பிறக்காது என்று சில நாட்களுக்குப் பிறகு ஊருக்குள் பேச்சு நகர்ந்தது.

     சின்னய்யா பயந்ததுபோல் அல்லாமல் இவர் மனைவி கமலி பிள்ளையை நல்லபடியாக பெற்றெடுத்தாள். அவன், மிக சூட்டிகையான பையனாக வளர்ந்தான். மூத்தவன் சீனியும் அவனும் நாளும் பொழுதும் அழகு மிளிர வளர்வதை மனதின் ஆழத்தில் அச்சம் சில்லிட நோக்கிக் கொண்டிருந்தார் சின்னய்யா. அந்த விசயத்தை யாரிடமும் சொல்லாததாலேயே அது கட்டிபோல மனதில் வளர்ந்து கொண்டேயிருந்தது.

    பெரிய வீட்டின் ஒரே வாரிசாக பெரிய மருமகளின் பையன் செல்லமாக வளர்ந்து வந்தான். பதினைந்து வயதில் தனியாக தட்டு வண்டி ஓட்டிச் சென்றபோது  தறி கெட்டு ஓடிய வண்டி ஓங்கி வளர்ந்திருந்த வாகைமரத்தின் மீது மோதி நொறுங்கியது. முன்னந்தலை மரத்தில் மோதியதில் அதே இடத்தில் அவன் இறந்தான்.  

     சின்னய்யாவிற்கு ஊருக்குள் இருப்புக் கொள்ளமல் மருகிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், இவரின் மாமனாரின் ஊரிலிருந்த கோவிலில் பூசை செய்து கொண்டிருந்த குடும்பம் நகரத்திற்கு இடம் பெயர்வதால் இவரை அழைத்தார்கள். எதிர்பாராமல் வந்த வாய்ப்பிற்கு  உடனே ஒப்புக் கொண்டார். அந்தக் கோவிலும் சாமியும் மட்டுமல்ல ஊர் சனங்களும் இவருக்கு மிகவும் இணக்கமாக இருந்தார்கள். அன்று இளையவனுக்கு பத்து வயதானதற்கு இவரே தனியாக பூ பழம் வாங்கிவந்து சிறப்பு பூசை செய்தார். மன மகிழ்வின் உச்சமாக  பயப்படும்படி இனி எதுவும் நடக்காது என்று இவருக்குள் ஒரு நம்பிக்கை தோன்றியது. ஆனால், மறுநாள் கண்மாயில் குளிக்கச் சென்ற இளையவனை சடலமாக தூக்கி வந்தார்கள். 

     *******

ராசப்பா, சுந்தரேசன் சொன்னவற்றை மனதிற்குள் காட்சிகளாக பார்த்துக் கொண்டிருந்தார்.

   பல ஜோசியர்களையும்  குறி சொல்லிகளையும் பார்த்து ஒன்றும் தட்டுப்படாமல், கடைசியாக சுந்தரேசனிடம் வந்து சேர்ந்தார் ராசப்பா. இதற்கே சில மாதங்கள் ஆகிவிட்டன. இவர் ஐயனார் கோவிலில் பூசாரியாகவும் இருந்துகொண்டு ஜோசியமும் பார்த்துக் கொண்டிருந்தார். 

   ராசப்பா தன் குடும்பத்தின் தொடர் இழப்புகளைச் சொன்னதும், சுந்தரேசன் இவர்களது ஜாதக கட்டங்களை ஆராய்ந்தார். சரியாக தெரியாததால் சோலிகளை குலுக்கிப் போட்டு பலன் பார்த்தார். அதிலும் உறுதியாக அறியமுடியவில்லை. எனவே, மூன்று சேவல்கள் ஒரு சாராய பாட்டில், ஒரு சங்கு மார்க் சுருட்டு கட்டு ஆகியவற்றோடு பூக்களும் பழங்களும் வைத்து ஐயனாருக்கு ஒரு சிறப்பு பூசை செய்தார். கையில் அரிவாளோடு செய்த பூசையின் உச்சத்தில் உணர்ந்த இந்த முன்கதையை கூறினார். 

   முன்கதை தெரிந்துவிட்டது. இதையெப்படி நேர் செய்வது. அந்த ஊரைக் கண்டடைய வேண்டும். பிறகு அக்குடும்பத்தை அறிய வேண்டும்.  நான்கு பனை மரங்களும் ஒரு இலுப்பை மரமும் அந்தக் கோவிலைச் சுற்றி இருக்கும் என சுந்தரேசன் கூறினார். இந்த அடையாளத்தை வைத்து  நூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த கோவிலை ஊரை அடையாளம் காணமுடியுமா என்ற திகைப்பு தோன்றியது. 

    “இப்போதுதான் எல்லாக் கோயிலுகளுக்கும் கும்பாபிஷேகம் பண்றாங்களே. அதுவும் லைட்டும் பாட்டும் தூள் பறக்குதே. இந்த ஐயப்பா சவுண்ட் சர்வீஸ்காரன் எனக்கு தெரிஞ்சவன்தான். அவனக் கேட்டுப் பாப்போம்..” என்று தொலைபேசியை எடுத்து பேசினார். “அவனே பேசறேன்னு சொன்னான்..” என்று இவரைப் பார்த்து கூறிய போது அவர் முகத்தில் தெரிந்த நம்பிக்கையை பற்றிக் கொள்ள முயற்சித்தார்.

   “இப்ப எத்தன மாசம்” சுந்தரேசன் கேட்டதும் சட்டென இவருக்கு புரியவில்லை. கலங்கிய மனதை சற்று தெளிவாக்கியபோது புரிந்ததும் “ஒன்பதாவது மாசம்..” என்றார்.

“ஏன்னா புள்ள பொறக்கறதுக்கு முன்னாடி இத சரி செஞ்சாதான் உண்டு. புள்ள பூமில கால் வச்சிட்டானா அந்த கணத்துலேர்ந்து அவன் வாழ்க்கை நிர்ணயமாயிடுது. அப்புறம் நடக்கிறத  தள்ளி வேணா போடலாமே தவிர தடுக்க முடியாது” 

ராசப்பாவின் உள்நடுக்கம் இன்னும் அதிகமானது. அப்போது சுந்தரேசனின் அலைபேசி ஒலிக்க, எடுத்துப் பேசினார். பேசியபின் 

   “இந்த சுற்றுவட்டாரத்துல  ரெண்டு எடத்துல பனைமரங்க பக்கத்துல இருக்கிற மாதிரி மாரியம்மன் கோவில் இருக்குதாம். ஒன்னு இலுப்பக்குடி இன்னொன்னு அணிக்கனி. இதுல ஒண்ணாத்தான் இருக்கும்னு நெனைக்கிறேன். விசாரிச்சு பாருங்க” என்று கூறினார். 

  இந்த அளவிற்கு அறிந்ததே ஆசுவாசமளித்தது. சுரேஷிடம் விசயத்தைக் கூறி பயப்படாமல் தைரியமாக இருக்கும்படி கூறினார். அலைபேசியை அணைத்தபோது ரேகாவிடம் விசயத்தை சென்னானா எனக் கேட்டிருக்கலாம் எனத் தோன்றியது. இவ்விசயத்தை அறிந்தால் அவளின் மனம் எதை நோக்கி செல்லும், அதை எப்படி சரி செய்வதென்றா அல்லது இத்தனை ஆண்டுகளாக மறைத்தது ஏன் என்றா. அல்லது எனக்கு மட்டும் ஏனிப்படி நிகழ்கிறது என துயரத்திற்குள் ஆழவும் வாய்ப்புள்ளது. வெட்டவெளியில் கட்டவிழ்த்த காளை எத்திசை செல்லும் என்பதை யாரால் கணிக்க முடியும். பெண்களின் மனம் ஒரே நேரத்தில் ஆயிரம் வழிகளில் பாயக் கூடியதாயிற்றே. யோசித்தபடியே அணிக்கனியை நோக்கி சென்றார்.  

   பிரதான சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் கிராமச் சாலையில் நடந்த பிறகு ஊரை அடைந்தார். கையில் பிடித்திருந்த கட்டைப் பையில் பூசைக்கான பொருட்கள் இருந்தன. ஊர் முகப்பிலேயே ஆலமரத்தின் நிழல் படர்ந்திருக்க புது வண்ணம் பூசிய கோவில் ஒன்று இருந்தது. ஆனால், பனை மரங்களோ இலுப்பை மரமோ தென்படவில்லை. இந்தக் கோவில் இல்லையோ. அல்லது அம்மரங்கள் பட்டுப்போய் விட்டனவா என்று யோசனை ஓடியபோதே கோவிலின் முகப்பில் அனுமன் சிலை இருப்பதைக் கண்டார். கூர்ந்து கருவறையை பார்த்தபோது பெருமாள் நின்ற கோலத்தில் அருள் பாலித்திருப்பது தெரிந்தது. அப்ப இந்தக் கோவில் இல்லை. மனம் சோர்வடைவதை உணர்ந்தார்.

ஆலமரத்தின் நிழலில் இளைஞர்கள் சிலர் கேரம் விளையாடிக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு ஏதாவது தெரியுமா. கேட்டால் சொல்வார்களா அல்லது கேலி செய்வார்களா. இப்போது அடுத்தவர்களை கேலி செய்தே மாய்க்கும் காலமல்லவா நடந்து கொண்டிருக்கிறது. நெருங்கிச் சென்றபோது, அவர்கள் நடுவே மூத்தவர் ஒருவரும் நின்றது தெரிந்தது. இவரைப் பார்த்ததும் அவரே இவரை நோக்கி வந்தார். 

  “எந்த ஊருங்க ஒங்களுக்கு.. என்ன விசயமா வந்தீங்க..” என்று அவர் கேட்டபோது மெல்லிய காற்று இதமாக வருடிச் சென்றது. 

    “நான் கல்லூர்ல இருந்து வர்றேன். இங்கே அம்மன் கோயில் இருக்குங்களா…” 

  “ஆங் இருக்கே. ஊரோட தெக்குல இருக்குது. ஏன் அங்க போகனுமா. ஏதாவது வேண்டுதலா..”

  “கோயிலுக்கு பக்கத்துல பனை மரம் நிக்குதாங்க” 

   “ஆமா இருக்கு. சாமியக் கும்பிடப் போறீங்களா. இல்ல பனையவா. பனையக் கும்பிடவா இம்மாந்தூரம் வந்தீங்க. ஒங்கூர்ல இல்லையா..”

     அம்மன் கோவில் இருக்கிறது என்ற பதில் சற்று நிம்மதி அளித்தபோதும் தொடர்ந்த கேள்விகளால் சங்கடமடைந்தார். இளையவர்களோடு சேர்ந்து பெரியவங்களும் இப்படி மாறிட்டாங்களே.

  “இல்லீங்க. பனைமரத்த ஒட்டியிருக்கிற அம்மன் கோவில்ல பூசை பண்ணனும்னு சொன்னாங்க. அதான் கேட்டேன். இன்னொரு விசயமும் தெரியனும்..” 

  “மாமா அங்கே என்னய்யா ஊர்நாயம் பேசிட்டிருக்க. இங்கே வந்து ஆடு. எங்க வீட்ல கூப்பிடறாங்க” அந்தக் குழுவிலிருந்த ஒருவன் குரல் கொடுத்தான்.

     “நீ போடா இந்தா வர்றேன்..” என்று அந்தப் பக்கம் திரும்பிச் சொல்லிவிட்டு “என்ன இன்னொரு விசயம்” என்று கேட்டார். 

  “பெரிய வீட்டுக் குடும்பம்னு இங்கே இருக்காங்களா..” 

   அவர் சற்று யோசித்ததும் ராசப்பாவிற்கு உள்ளம் சோர்வை நோக்கி இறங்கியது. அப்போது சுரேஷ் அழைத்தான். 

  “அப்பா ரேகாவுக்கு வலி வந்திருச்சுப்பா. கேப் புக் பண்ணீட்டு வர்றதுக்கு காத்திருக்கோம். ஆஸ்பிடல் போயிட்டா பேச முடியுமான்னு தெரியல. அதுக்காகத்தான் இப்பவே பண்றேன்” என்றவன் சற்று இடைவெளி விட்டு தணிந்த குரலில் “நீங்க போன விசயம் என்னாச்சுப்பா…” என்று கேட்டான். 

    “ஊரக் கண்டுபிடிச்சிட்டேன்பா. எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நப்புறேன்.. ஒன்னும் பயப்படாம ரேகாவப் பாத்துக்கப்பா” என்று ஆறுதல் சொல்லியபோது எழுந்த விசும்பலை அடக்கிக் கொண்டார். 

   இவருக்கு எதிரில் நின்றவரின் முகத்திலிருந்த விளையாட்டுத்தனம் மறைந்து இறுக்கமாக மாறியது. 

   “அய்யா, பெரியவீட்டு எடம்ன்னு  இங்கே இருக்கு. ஆனா அங்கே யாருமே இல்லை. அந்த வீட்டுக்காரங்களுக்கு ஆண் வாரிசு யாருமில்லாததால அப்படியே வம்சம் அத்துப் போச்சுங்க…” 

   “யாருமே இல்லைங்களா..” என்று இவரது குரல் அதிர்ச்சியுடன் வெளிவந்தது. ஏதாவது செய்ய வேண்டுமென உள்ளம் துடித்தது. 

  “கோயிலுக்கு எப்படி போகனும்.. ” அடங்கிய குரலில் கேட்டார். 

  இவரின் உள்ளத்தின் சோர்வை முகத்திலேயே கண்டு கொண்டதைப்போல “நானே கூட்டிட்டு போறேன் வாங்க” என்று தன் ஸ்கூட்டி வண்டியை நோக்கி நடந்தார். 

       தன் கையிலிருந்த பையை மடியில் வைத்துக் கொண்டு அவரின் பின்னே வண்டியில் அமர்ந்தார். காற்றில் எழுந்து பறந்த வெளிர்நிற மணல் தூசுகள் உடலில் மோதியது. கொஞ்ச தூரம் தார்சாலையாகவும் அதன்பின் மண் சாலையாகவும் இருந்தது. சுந்தரேசன் சொன்னபோது இவர் மனதிற்குள் வரித்துக் கொண்ட ஊரின் வரைபடம் மாறிக் கொண்டே வந்தது. சாலையின் இரு பக்கமும் கம்பி வேலி போடப்பட்டு வயல்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன. கம்பிவேலி ஆடுமாடுகளை தடுக்கும் ஆனால் மயில்களையும் குரங்குகளையும் தடுப்பதற்கான வழியை இன்னும் கண்டறியவில்லை.  இவர் முள்ளுக் கொல்லைகளாக எண்ணியவை நெல் வயல்களாகவும் தைலமரக் கொல்லைகளாகவும் மாறியிருந்தன.

     “இதுதாங்க பெரியவீட்டுக்காரங்க எடம்” என்று அவரின் குரல் கேட்டதும்   இடப்பக்கமாக முந்திரிக் கொல்லையை பார்த்துக் கொண்டிருந்த ராசப்பா வலப்பக்கம் திரும்பினார்.   பெரும் பரப்பளவில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்திருந்தன. சற்று உற்றுப் பார்த்தபோதுதான் மரங்களுக்கு கீழேயிருந்த மண் குவியலும் பல வாய்கள் திறந்த புற்றுகளும்  தெரிந்தன. பருத்த மரங்களுக்குக் கீழே கொட்டியிருந்த விதைகளை சில ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. 

   “இங்க யாரும் வெறகுகூட வெட்றதில்லை. மரங்கள்லாம் அதுவா வளந்து அப்படியே படும். எப்பவாவது தீப்பிடிச்சு எரிஞ்சா மட்டும் பரவிடாம அணைப்பாங்க..” என்றவர் தொடர்ந்து

  “எனக்கு நெனவு தெரிஞ்சப்ப ஒன்னு ரெண்டு செவரு தட்டுப்பட்டது. மழ வெயில்ல அப்படியே மண்ணாயிடுச்சு… ம்ம் மனுச வாழ்க்கையும் இப்படித்தானே…” என்று எதையோ யோசித்து நிறுத்திக் கொண்டார். அந்த இடத்தை பார்க்கும்போது உள்ளம் பதறியது. “வண்டிய எடுங்க போலாம்..” என அவரின் தோள்பட்டையை அழுத்தினார்.

       மாரியம்மன் கோவில்,  பெரிய நிலத்தின் நடுவே இவர் எண்ணியதைவிட சிறியதாகவே இருந்தது. சிறிய தாழ்வாரமும் கருவறையும் மட்டுமே இருந்தது. 

“ஏங்க இவ்ளோ சின்னக் கோயிலா வச்சிருக்கீங்க” என்று சட்டென கேட்டுவிட்டார்.  

   அவரது முகத்தில் ஆச்சர்யம் பரவ “திருவிழா நேரத்துல இந்த வயல் முழுக்க பந்தல் போட்டு பெருசா பண்ணுவோம். கோயிலப் பெருசா கட்டிட்டு அத பராமரிக்கிறத பொறுப்பா பாக்க யாரிருக்கா..” என்று கூறினார்.

    “கோயில்ல பூசை பண்றது யாரு. இப்பக் கூப்பிட்டா வருவாங்களா..” 

      “இந்த மாசம் தெக்கிவீட்டான் ராமன் மொறை. பகல்ல வயல் வேலைக்கு போயிருவான். சாயந்திரம் மட்டுந்தானே பூசை பண்ணுவான்” 

    ஏதாவது தடங்கல் வந்து கொண்டேயிருக்கிறதே என்று  இவரின் முகம் பரிதாபகரமாக மாறியது. அந்நேரம் மீண்டும்  சுரேஷ் அழைத்தான்.

   “அப்பா ஆஸ்பிடல்ல சேத்துட்டேன். பிரசவ வலி தானாம். இன்னும் அரைமணி நேரத்துல புள்ள பொறந்திரும்னு சொல்லி இருக்காங்கப்பா…” என்று சொல்லிவிட்டு எதுவும் பேசாமல் அமைதி காத்தான். இவர் என்ன சொல்வதென்று புரியாமல் தவித்தார். 

  “நான் போன் பண்றேப்பா. பதட்டப்படாம இரு..” என்று கூறி அணைத்தார்.

    தவிப்பில் துடித்த இவர் முகத்தை பார்த்த ஊர்க்காரர் 

     “இப்படி அம்மனுக்கு முன்னாடி  வாங்கிட்டு வந்ததை படைச்சு நீங்களே சூடமேத்தி கும்பிட்டுக்கலாமே…”  என்றார்.

 இவர் முகம் சற்று தெளிந்தது. வாழையிலையில் சுற்றியிருந்த பூவை பிரித்து அம்மன் கழுத்துக்கு நேராக கம்பிக் கதவில் சூடினார். அந்த இலையில் வாழைப் பழத்தை வைத்தார். பொரியை பிரித்து அதில் பொட்டுக் கடலையையும் வெல்லத்தையும் கலந்து பழத்தின் அருகில் வைத்தார். ஊதுபத்தி பாக்கெட்டை பிரித்து அதிலிருந்த பத்து குச்சிகளையும்  பற்ற வைத்து பழத்தின் முனையில் குத்தினார். தாழ்வாரத்திற்கு வெளியே கிடந்த ஒரு கொட்டாச்சியை எடுத்து வந்து பேப்பரை வைத்து துடைத்து விட்டு கற்பூர வில்லைகளை வைத்தார். ஊர்க்காரர், கதவில் மாட்டி வைத்திருந்த திருநீறு மற்றும் குங்குமத்தை எடுத்து வந்து வைத்தார். நேரமாகிக் கொண்டிருக்கிறது,  அந்த வீட்டுக்காரர்களைவேறு கண்டுபிடிக்கவேண்டும் என்ற தவிப்பு மனதாழத்தில் ஓடிக் கொண்டிருந்தது.

   ராசப்பா இரண்டு தேங்காய்களில் ஒன்றை படியில் தட்டி உடைத்து பழத்தின் அருகே வைத்து விட்டு சரியாக இருக்கிறதா எனப் பார்த்தார்.  ஊர்க்காரர் சரியென தலையை அசைத்ததும் தீப்பெட்டியை உரசி கற்பூரத்தை பற்ற வைத்தார். கொட்டாச்சியை கையில் எடுத்து அனைத்துப் பொருட்களையும் சுற்றிவிட்டு அம்மனுக்கு காட்டினார். 

  “அம்மா… முன்னவங்க செஞ்ச தப்புக்கு நான் இப்ப மன்னிப்பு கேக்குறேம்மா. தண்டிச்ச வரைக்கும் போதும்மா, இனியாவது நிம்மதியா இருக்க விடுமா. எம் பையனுக்கும் மருமகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் நீதான் நல்வாழ்க்கை கொடுக்கனும்மா” 

  விழிகளில் நீர் வழிய நெற்றியோடு உடல் முழுக்க தரையில்பட விழுந்து வணங்கினார். மற்றொரு தேங்காயை எடுத்துச் சென்று கோவிலின் முன் போடப்பட்டிருந்த கல்லில் ஓங்கி அடித்து சிதறவிட்டார். தரையில் அமர்ந்து நேரத்தைப் பார்த்தார். சுரேஷ் பேசி இருபத்தி ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தன.

    “ஐயா, அந்த பெரியவீட்டுக் காரங்களோட உறவு முறைக்காரங்களாவது யாராவது இருக்காங்களா..” என்று கேட்டார். 

  “அப்படி யாரும் எனக்கு ஞாபகமில்லையே…” என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது சைக்கிள் மணி சத்தம் கேட்டது. சைக்கிளை ஒரு சிறுமி ஓட்டிக் கொண்டிருந்தாள். 

  அவளைப் பார்த்ததும் அவர் முகம் பிரகாசமானது. “ஏம்மா செல்வீ… செல்வீ..” என்று அழைத்ததும் திரும்பிப் பார்த்தாள். “இங்கே வாம்மா” என்று அழைத்தார். 

  “என்னங்கய்யா..” என்றபடி சைக்கிளை திருப்பிக் கொண்டு வந்தாள். 

  “இந்தப் பொண்ணு அந்தப் பெரிய வீட்டுக்காரங்களோட ஒடன் பங்காளிய வீடு.  இவங்க குடும்பம் இப்ப எங்க ஊர்ல இல்லை. பக்கத்துல இருக்கிற சோலையூர்ல இருக்காங்க” என்று இவரிடம் சொல்லி விட்டு 

  “இந்த வெயில்ல எங்கேம்மா போற” 

  “செங்கரை ஸ்கூல்ல  மதியந்தான் அரைப் பரீட்சை. அதுக்குத்தான் போயிட்டிருக்கேன்” 

  அப்போதுதான் பார்த்தார் கேரியரில் பரீட்சை அட்டையும் புத்தகமும் இருந்ததை.

      பரவசத்தில் ராசப்பாவின் முகம் விரிந்தது. 

  “அம்மா எல்லாம் ஒன் கருணை” என்று கூறியபடி பூசை செய்த பொருட்களை தான் கொண்டு வந்த ஒரு பையில் போட்டு அந்தச் சிறுமியிடம் கொடுத்தார். அவள் தயங்கியபோது ஊர்க்காரர்தான் வாங்கிக் கொள்ளுமாறு கூறினார்.

  அவள் கை நீட்டி வாங்கிக் கொண்டதும் நெடுஞ்சாண்கிடையாக அவள் காலில் விழுந்தார். “எல்லாத்தையும் மன்னிச்சிடுமா…” என்று வாய்விட்டு இவர் கூறியபோது  “மன்னிச்சிட்டேன்னு சொல்லும்மா..” எனறு அவர் கூறினார்.

  அவர் முகத்தையும் தரையில் வணங்கியபடி நிமிர்ந்து நோக்கிய இவரையும் பார்த்துவிட்டு சிறிது தயங்கியபின், முகத்தில் மெல்லிய புன்னகை தோன்ற “மன்னிச்சிட்டேன்.. எல்லாத்தையும் மன்னிச்சிட்டேன்..”என்று விளையாட்டுப் போலக்  கூறினாள். அப்போது மனதில் பெரும் நிறைவின் குளுமையை ராசப்பா உணர்ந்தார். 

  “சரிம்மா பத்திரமா போ” என்று ஊர்க்காரர் அப்பெண்ணிடம் கூறியபோது சுரேஷின் அழைப்பு. சட்டென இவர் முகம் இறுக்கம் கொண்டது. அத்தனையும் வீணாகிவிட்டதோ என்று பதறியபடியே

  “தம்பி சொல்லுப்பா…”  என்றார்.

“அப்பா பிள்ளை நல்லபடியா பொறந்திருச்சுப்பா. பொண்ணுப்பா..” என்றபின் அவனின் விசும்பல் கேட்டது. ஒரு கணம் திகைத்தபின் முகம் மலர்ந்தார். உள்ளுக்குள் புல்லரிப்பு தோன்ற உடல் விதிர்த்து தணிந்தது.

  “சந்தோசம்பா சந்தோசம்…” என்ற போது இவர் கன்னங்களில் வழிந்த நீரை துடைத்தபடி ஊர்க்காரர் இவரை அணைத்துக் கொண்டார்.

000 

கா. சிவா

விரிசல், மீச்சிறுதுளி, கரவுப்பழி ஆகிய மூன்று சிறுகதை தொகுப்புகளும் "கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு" எனும் கவிதைத் தொகுப்பும் "தண்தழல்" எனும் நாவலும் எழுதி வெளியிட்டுள்ளார்.

தமிழ்விக்கியில்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss