குறுங்கதைகள் : சாய் மகாதேவன்

அஞ்சுகம்

“அஞ்சுகம் வெளிய வா. யாரு வந்திருக்கான்னு பாரு!” என்று உடையவன் அழைக்க, காலையிலிருந்து உள்ளேயே முடங்கிக் கிடந்த அஞ்சுகம் தயக்கத்துடன் வெளியே வந்தாள். 

உடையவன் உணவளித்துவிட்டு பெட்டியிலிருந்து சீட்டுகளை எடுத்தான். வந்தவர் அச்சீட்டுகளைக் குனிந்து பார்த்தார்.

“எங்கப்பா காலத்துல சாமிதான் வழிகாட்டுச்சு. எங்களுக்கு இவங்க” என்று அச்சீட்டுகளை விரித்தபடி ஆட்டத்தைத் தொடங்கினான். அஞ்சுகம் ஒரு சீட்டை எடுத்துத் தரையில் வைத்தாள். அதைப் பார்த்தபடி வந்தவருக்கு ஏற்றவாறு பேசிக்கொண்டே, அவளை உள்ளே செல்லுமாறு சைகை காட்டினான். 

அவள் உள்ளே செல்வதை வந்தவரும் ஆர்வமாகப் பார்த்தார். அவன் பேச்சு தொடர்ந்தது. சற்று நேரத்தில் ஆட்டம் முடிந்ததும், வந்தவர் அவனிடம் பணம் கொடுத்துவிட்டுச் சென்றார். பணத்தை அவன் சட்டைப்பையில் வைத்தான். 

தரையில் விரித்திருந்த நடிகர்–நடிகைகளின் படச்சீட்டுகளை மீண்டும் பெட்டியில் அடுக்கியபடி, “தூங்கிட்டியாடி அஞ்சுகம்?” என்று கேட்டான். 

அவள் குரல் கேட்டதும் சற்றுத் தள்ளி நின்றிருந்த மற்றொருவரை நோக்கிச் சிரித்தபடி,  “இங்கே வாங்க” என்பதுபோல் தலையசைத்தான்.

000

குணம்

அவன்

வேட்டியும் சட்டையும் அணிந்து எங்கள் வீட்டுக்கு வந்திருந்தவர் அம்மாவிடம் “இதையெல்லாம் கரெக்டா சாப்பிடுங்க. ரெண்டே நாள்ல சரியாயிடும்” என்று பேசியபடி, சில மாத்திரைகளின் பெயர்களை ஒரு காகிதத்தில் எழுதிக்கொண்டிருந்ததைக் கடைக்கண்ணால் நோட்டமிட்டேன். அம்மாவும் அக்காகிதத்தைத் தன் பையில் வைத்துவிட்டு மேலும் சிறிது நேரம் அவரோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

அம்மாவுக்கு இதே வழக்கம்தான். 

அவர் விடைபெற்றுக்கொண்டார்.

“கண்டவன்கிட்டயெல்லாம் எதுக்கு மருந்து கேக்கற?”

“அவரும் மருத்துவர்தான்.” 

“யாரு? இவரா? சரியாப் போச்சு! இப்பவே வா. ஒழுங்கா ஒரு நல்ல ஆஸ்பத்ரிக்குப் போயிட்டு வந்துடலாம்.” 

“கொஞ்ச நாள்ல அதுவே சரியாயிடும். இதுக்குப் போயி யாராவது…” 

“எனக்குத் தெரியும். பேசாம வா.”

அவள்

என்னை அழைத்துவந்த அவனோடு மருத்துவமனை வரவேற்பறையில் காத்திருந்தேன். 

ஒரு மணி நேரத்துக்குப் பின் உள்ளே அழைக்கப்பட்டோம். என்னைப் பரிசோதித்த டாக்டர் இரண்டு கேள்விகள் கேட்டுவிட்டு, என் கையில் ஒரு மருந்துச் சீட்டைத் தந்தார்.
அவன் பணம் செலுத்தியதும் மருத்துவமனையிலிருந்து வெளியேறி மருந்தகத்தை நோக்கி நடந்தோம். 

முதலில் வந்தவர் எழுதிக்கொடுத்த காகிதத்தையும் புதிய மருந்துச் சீட்டையும் என் பையிலிருந்து எடுத்தேன். முதலில் வந்தவர் கொடுத்த காகிதத்தில் “இரவு உணவுக்குப் பின்—மறக்காமல்” என்பது மட்டும் கூடுதலாக எழுதப்பட்டிருந்தது.

அன்று இரவும் அவன் குறட்டையொலி வீட்டை நிறைத்தது.

எனக்குத்தான் உடம்பு குணமாகச் சில நாட்கள் ஆனது.

000

லயம்

பட்டறையில் கேட்கும் ஒலிபோல் குருவின் இல்லத்தில் மிருதங்கப் பயிற்சி நடந்துகொண்டிருந்தது. குரு அந்தக் கடினமான சொற்கட்டை வாசிக்க, நானும் என் ஆறு சக மாணவர்களும் அவரைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்து, அதனை முதல் காலப்பிரமாணத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தோம். 

தா தோம்  |

கீ டா தா கா  | 

தா கா தா ரீ  |

கீ டா தா கா  |

தளாங்ங்கு | 

தின் தா | 

தளாங்ங்கு | 

தோம் |

சில ஆவர்த்தனங்களுக்குப் பின், குரு தலையசைத்தவாறு “ஆங்…” என்றார்.
அடுத்த காலப்பிரமாணத்தில் வாசிக்கத் தொடங்கினோம். எங்களில் புதியவருக்கு அது கைகூடவில்லை. நிறுத்திக்கொண்டார்.

த தொம் கிடதக |

தகதரி கிடதக  |

தளாங்கு தின் த |

தளாங்கு தொம் |

“ஆங்….”


இம்முறை மேலும் இருவர் நின்றுவிட்டார்கள்.

ததொம்கிடதக தகதரிகிடதக  |

தளாங்குதின்த தளாங்குதொம் |

“ஆங்…”

என் சக மாணவர்களில் எஞ்சிய மூவரும் இப்போது நின்றிருந்தனர். நானும் குருவும் மட்டும் தொடர்ந்தோம்.

கடைக்கண்ணால் அவர்கள் அனைவரையும் நோட்டமிட்டேன். 

ததொம்கிடதக தகதரிகிடதக – தளாங்குதின்த தளாங்ங்கு…..

“ம்ம்ம்ம்…“ என்றார் குரு.

வாசிப்பைத் தொடர்ந்தோம். 

ததொம்கிடதக தகதரிகிடதக – தளாங்கு தின்த  தளாங்குதொம் |

“ம்ம்.”

ததொம்கிடதக தகதரிகிடதக – தளாங்குதின்த  தளாங்குதொம் |

“ம்.”

பெருமூச்சொன்று வெளிவந்தது.

ததொம்கிடதக தகதரிகிடதக – தளாங்குதின்த  தளாங்குதொம் |

குரு எப்போது அவர் கைகளை நிறுத்திக்கொண்டார் என்று தெரியவில்லை. என் கைகள் மட்டும் அச்சொற்கட்டுடன் ஓடிக்கொண்டிருந்தன. 

ததொம்கிடதக தகதரிகிடதக – தளாங்குதின்த தளாங்குதொம் ததொம்கிடதக தகதரிகிடதக – தளாங்குதின்த தளாங்குதொம் |

ததொம்கிடதக தகதரிகிடதக – தளாங்குதின்த தளாங்குதொம்

000

தரிசனம்

அந்தச் சாலையோர டீக்கடை பலதரப்பட்ட வண்டிகளால் சூழப்பட்டிருந்தது. வண்டியை எதிர்ப்புறம் நிறுத்திவிட்டு பஜ்ஜி சாப்பிட வந்தேன்.

அன்றைய செய்தித்தாளின் முதல் பக்கத்தைக் கிழித்து அதில் பஜ்ஜியை வைத்துத் தந்தார் கடைக்காரர். அதில் சிரித்துக்கொண்டிருந்தவரின் முகத்தில் பஜ்ஜியை ஒற்றி எடுத்துவிட்டு, தாளைக் கீழே போட்டேன். 

அப்போது வெளிநாட்டவர் ஒருவரை அவரது உள்ளூர் உதவியாளர் அங்கு அழைத்து வந்தார். 

கடைக்காரரிடம் கைகுலுக்கியபடி “சார் யாருன்னு தெரியும்ல?” என்று கேட்டார். “நம்ம ஊர்லயே பெஸ்ட் டீ வேணும்னு கேட்டாரு. அதான் இங்கக் கூட்டிட்டு வந்தேன்.” 

“ஆஹா! வரணும், வரணும்” என்று விருந்தினரைச் சிரித்தபடி வரவேற்று அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியைத் தன் கைக்குட்டையால் துடைத்தார் கடைக்காரர். 

அதில் உட்கார்ந்த வெளிநாட்டவர் சுற்றுமுற்றும் நோட்டமிட்டார். அங்கிருந்த மனிதர்களையும் பண்டங்களையும் வாகனங்களையும் கடந்து, அவரது பார்வை கீழே எண்ணெய் படிந்து கிடந்த தாளில் நிலைகுத்தியது. 

டீ கைக்கு வந்த பின்பும் வெளிநாட்டவர் அதையே பார்த்துக்கொண்டிருக்க, கடைக்காரரும் உதவியாளரும் அவரைக் கவனித்தபடி சன்னமாக உரையாடிக்கொண்டிருந்தனர்.

சாப்பிட்ட பஜ்ஜிக்குப் பணம் தந்துவிட்டு வண்டியை நோக்கி மெதுவாக நடந்தேன். எண்ணெய்க்குள் மங்கியிருந்த அந்த முகம்தான் சற்றுமுன் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருந்தது என்பது வண்டியை அடைந்தபோதுதான் புலப்பட்டது.

000

அளவு

மாண்புமிகு ராமய்யா அவர்களின் பழைய செருப்பு கிழிந்திருந்தது. அவருடன் பணியாற்றிய தோழர் ஒருவர் அவருக்குப் புதிய செருப்பொன்றை வாங்கித் தருவதற்காகக் கடைக்குச் சென்றார்.

ராமய்யாவின் பாத அளவு சரியாகத் தெரியாததால், ஊகமாகச் செருப்பொன்றை வாங்கி வந்தார். செருப்பு ராமய்யாவின் காலைவிடச் சிறியதாக இருந்தது. கால்விரல்கள் செருப்பின் முனையில் மடங்கின. அச்செருப்பை வாங்கி வந்தவரும் ராமய்யாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். 

கால்விரல்களை மடக்கி, செருப்பை இறுகப் பற்றிக்கொண்டு, “கச்சிதமாக இருக்கிறது” என்றார் ராமய்யா. தோழரின் அக்கறையை மாண்புமிகு ராமய்யா அலுவலகத்திலிருந்த அனைவரிடமும் அன்று நீண்ட நேரம் பாராட்டிப் பேசினார்.

அடுத்த நாள் மாலை, மாண்புமிகு ராமய்யா அலுவலக நண்பர்களுடன் வெளியே சென்றார். வழியிலிருந்த கோவிலின் அருகே வந்தபோது, “இதோ வந்துவிடுகிறேன்” என்று செருப்பை வெளியே விட்டுவிட்டு அவர் மட்டும் கோவிலுக்குள் சென்றார். 

அடுத்த வாரத்திலிருந்து தோழர் வாங்கித் தந்த அதே அளவிலான செருப்புகள் அவருக்குப் பரிசாகக் குவியத் தொடங்கின.

சில மாதங்களுக்குப் பிறகு, ராமய்யா வெறுங்காலில் நொண்டியபடி பணிக்கு வந்தார். அவரைக் கண்டதும் அனைவரும் விரைந்து வந்து விசாரித்தனர்.

“மாண்புமிகு ராமய்யா, உங்கள் செருப்பு எங்கே?” 

000

சாய் மகாதேவன்

சென்னையில் பிறந்து வளர்ந்த சாய் மகாதேவன், கடந்த பத்து ஆண்டுகளாக நியூசிலாந்தில் வசிக்கிறார். காஃப்காவினுடைய தாக்கத்தால் எழுதத் தொடங்கிய இவர், நண்பர்களுடன் இணைந்து நியூசிலாந்து வாசகர் வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியம் குறித்த வாராந்திரக் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. மிகவும் நேர்த்தியான குறுங்கதைகள். ஒவ்வொரு காட்சியும் மிக இயல்பாகவும் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் அமைந்திருக்கிறது. நல்ல முயற்சி!

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop