/

என்ட அல்லாஹ்! காயங்களை ஆற்றும் கதைகள்: ஏபிம். இத்ரீஸ்

எண்பதுக்குப் பின்னரான இலங்கையின் வாழ்வியல் வெளி வன்முறை நிறைந்த ஒன்றாகவே மேற்கிளம்புகின்றது. அரசியல் பௌத்தமும் சிங்களப் பேரினவாத எழுச்சியும் அதை எதிர்கொள்வதில் சிறுபான்மைச் சமூகங்களின் போராட்டங்களும் எமது அண்டை நாடான இந்தியாவின் வெளிப்படையான தலையீடு போன்றன யாவரும் அறிந்த விடயங்களே. இந்த இனமுரண்பாட்டுச் சூழல் தடாலடியாகத் தோன்றிய ஒன்றல்ல. ஐம்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து மேற்கிளம்பிய இனவாத அரசியல் தனது தர்க்க ரீதியான முதிர்நிலையை எண்பதுகளில் எட்டிவிட்டது என்பதே உண்மையாகும். இனமுரண்பாடு அல்லது இன மோதுகை இரு தேசிய இனங்களுக்கிடையே நேரடியாக நடைபெற்றாலும் மற்றொரு தேசிய இனமான முஸ்லிம் மக்களையும் மிகக் கொடூரமாகத் தாக்கியது.

என்ட அல்லாஹ் – சிறுகதைத்தொகுதி

சிங்களப் பேரினவாதம் சிறுபான்மைச் சமூகங்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைக்கெதிராகப் போராடவும் பேரினவாதத்தின் கொடும்பிடியிலிருந்து தமிழினத்தை மீட்கும் பணியிலும் தமிழ்க்கட்சி அரசியல் தோற்று நின்ற வெற்றிடத்திலிருந்தே தமிழ் இளைஞர்களது ஆயுதப்போராட்டம் வெடிக்கின்றது. ஆரம்பத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டமாக தோற்றம் காட்டினாலும் பின்னர் முஸ்லிம்கள் மீது வன்முறை முடுக்கிவிடப்பட்டது. நம்மவர்கள் கொல்லப்படும் போது எதற்காகக் கொல்லப்படுகிறோம் என்பதைக்கூட அறிய முடியாத நிலை இரு தசாப்த காலம் நீடித்துள்ளது. மின்கம்பங்களில் தொங்கவிடப்பட்டும் வயல்வெளிகளில் வெட்டிப்போடப்பட்டும் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டும் தாயின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியெடுத்து முலையரிந்து பாலூட்டிய சம்பவங்களும் உணவு சமைக்கச் சென்றவர்களே உணவாகிய கதையும் இக்காலங்களில் நடந்தேறியுள்ளன. தனித்தமிழ் இயக்கமாக சுருங்குவதற்கு முன்பு தமிழ்ப் போராட்ட இயக்கங்களில் முஸ்லிம்களில் கணிசமான இளைஞர்களும் சில யுவதிகளும் பங்கெடுத்துக் கொண்டனர்.

இக்காலப்பிரிவு இன மோதுகைகளையும் வன்முறை நிகழ்வுகளையும் வைத்து பல காலகட்டங்களாக பிரித்துப் பார்க்க முடியும். 1983 களில் சிங்கள தீவிரவாதம் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலால் கொழும்பு, யாழ்ப்பாணம், மலையகம் வாழ் தமிழ் மக்கள் உட்பட முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டனர்.

எண்பதுக்கு பின்னரான இலங்கையின் வாழ்வியல் வெளி வன்முறை நிறைந்த ஒன்றாகவே மேற்கிளம்புகின்றது. பெரும்பான்மை வாத எழுச்சியும் அதை எதிர்கொள்வதில் சிறுபான்மைச் சமூகங்களின் முனைப்புகளும் எமது அயலவர்களின் வெளிப்படையான தலையீடுகளும் யாவரும் அறிந்த விடயங்களே. இந்த முரண்பாட்டுச் சூழல் தடாலடியாகத் தோன்றிய ஒன்றல்ல. ஐம்பதுகளின் நடுப்பகுதியில் இருந்து மேற்கிளம்பிய இனவாத அரசியல் தர்க்க ரீதியான முதிர்  நிலையை எண்பதுகளில் எட்டிவிட்டது என்பதே உண்மையாகும். இந்த இன முரண்பாடு அல்லது இன மோதுகை இரு தேசிய இனங்களுக்கிடையே நேரடியாக நடைபெற்றாலும் மற்றொரு இனக்குழுமமான முஸ்லிம் மக்களையும் மிகக் கடுமையாகத் தாக்கியது. இவ்வினப்போரில் நம்மவரகள் கொல்லப்படும் போது எதற்காக கொல்லப்படுகிறோம் என்பதைக் கூட அறியமுடியாத நிலை இரு தசாப்த காலம் நீடித்துள்ளது. இவ்வன்முறை வரலாற்றுப் பின்புலத்திலிருந்தே இக்கதைகள் வீறுகொண்டெழுகின்றன. இன முரண்பாட்டுக் காலப்பிரிவில் முஸ்லிம் அடையாளம், அவர்களின் இருப்பு, இருப்பின் இழப்பு போன்றவற்றின் வலிகளையும் வேதனைகளையும் சுமந்தவைகளாகவே இக்கதைகள் தம்மை வெளிக்காட்டிக்கொள்கின்றன.

முன்னெப்போதையும்விட எண்பதுகளுக்குப் பின், அதற்கு முந்திய காலங்களைவிட மிக அதிகமான சிறுகதைப் பிரதிகள் வெளிவந்துள்ளன. தேசிய நாளிதழ்கள், சிற்றிதழ்கள், புலம்பெயர் இதழ்கள் என பலதரப்பட்ட வெளியீடுகளில் மாதாந்தம் நாற்பதுகளுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ளன. எண்பதுகளுக்கும் முன்பிருந்தே எழுதிவந்த திக்குவல்லைக் கமால், ப.ஆப்தீன், எஸ்.எல்.எம். ஹனீபா, அல் அஸுமத், மொயின் சமீம் போன்றோரும் இக்காலப்பகுதியில் எழுதியுள்ளனர். இவர்களின் பெரும்பாலான கதைகள் தமிழ்த் தேசத்திலிருந்து முஸ்லிம் தேசம் தன்னைத் தனியாக உணர தலைப்படாததாக வெளிப்படுகிறது. இக்காலப்பிரிவில் எழுதவந்த இரண்டாவது வகையினரே இரு பெரும் தேசிய இனங்களின் மோதுகையால் உருவானவர்களாவர். இவர்களின் தோற்றப் பின்புலம் முன்னையவர்களின் தோற்றத்தை விட சற்று வித்தியாசமானது. இவர்களின் பேசுபொருளும் இவர்களுக்குக் கிடைத்த சூழமைவுகளும் வேறுபட்டவை.

அச்சுறுத்தல்கள், ஆட்கடத்தல்கள், கொலைகள், கூட்டுப் படுகொலைகள், விமானக்குண்டு வீச்சுக்கள், பொது இடங்களில் வெடித்துச் சிதறும் மனித வெடிகள், எரிப்புச் சம்பவங்கள், கலவரங்கள், புலம்பெயர்வு, அகதி வாழ்க்கை என இவ்விரு இனங்களின் மோதுகையால் உருவான நெருக்கடி, முஸ்லிம் வாழ்வெளியையும் கடுமையாக பாதித்தது. போரின் வன்கொடுமை இனம்பார்த்து, மதம் பார்த்து அழிப்பதில்லை. அது எல்லா மனிதர்களையும் எல்லாப் பால்நிலையினரையும் அழிக்கின்றது. கடந்த இரு தசாப்தகால தமிழ் புனைகதை எழுத்தில் இவை பதிவுபெற்றிருக்கின்றன.

இதில் பதினேழு சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகள் எந்த அடிப்படையில் தொகுக்கப்படுகின்றன என்பதற்கான காரணங்களையும் கூறியாக வேண்டும். இனமுரண்பாடு கால முஸ்லிம் சிறுகதைகளை ஒன்றாக தொகுப்பதே இதன் அடிப்படை நோக்கமாகும். ஆனால் பக்க அதிகரிப்பும் பதிப்புச் செலவின் உயர்வும் காரணமாக அவற்றில் கலைத்தரம் வாய்ந்த கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியேற்பட்டது. இன முரண்பாடுகாலத்தில் எழுதிய முஸ்லிம் மற்றும் தமிழ் கதாசிரியர்களின் கதைகளையும் கணிசமான அளவு இணைத்துள்ளோம். இன முரண்பாட்டின் பல்வேறு பரிமாணங்களையும் அதன் விளைவுகளையும் பதிவு செய்யும் அனைத்து கதைகளையும் இதில் சேர்க்க முடியாமல் போய்விட்டது.

அகதியாதல், இனச்சுத்திகரிப்பு, பாரம்பரிய தொழில் பறிக்கப்படுதல், பள்ளிவாசல்கள் படுகொலை, வாழ்வெளி சுருங்குதல், தாம் அன்போடு வளர்த்த பிராணிகளைப் பிரிதல், வருடத்தில் ஓரிருமுறை வரும் பெருநாள்களைக்கூட மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத நிலை, பரஸ்பரம் தமது வாழ்வியல் தேவைகளின் நிமித்தம் நெருக்கமான உறவுகளை தம்மகத்தே கொண்டு வாழ்ந்த தமிழ் முஸ்லிம் மக்கள் உறவுகளைத் துண்டிக்க நேரும் தருணங்கள், கலவரங்களில் இன, மத, மொழி பேதங்கள் இன்றி பாதிக்கப்படல், உட்படுகொலை, யுத்தத்தால் குழந்தைகள், பெண்களுக்கு ஏற்படும் மனநெருக்கடி, விடுதலை இயக்கங்களில் எழுந்த எதிர்ப்புக்குரல்களை பதிவு செய்தல், பலவந்த வெளியேற்றம், போக்குவரத்து துண்டிக்கப்படல், சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லும் போது அங்கு எதிர்கொள்ளும் சவால்கள், ஆட்கடத்தல்கள், முஸ்லிம் சிவில் ஒழுங்குகளை இல்லாமலாக்குதல், அடையாளங்களை அழித்தல், குறுந்தேசிய வாதங்களால் எழுந்த அவலங்கள், எழுத்துச் சுதந்திரம் மறுக்கப்படல், கலவரத்தில் அநாதரவற்று நிற்கும் வயோதிப மாது, அரசியல் பௌத்தத்தின் மேலாதிக்கத்தால் மற்றமைகள் விளிம்புக்குத் தள்ளப்படல், பல்வேறு கனவுகளுடன் பயணத்தை ஆரம்பிக்கும் போது நிகழும் குண்டுவெடிப்புக்கள், போருக்குப் பிந்திய சூழலில் மீளவும் தொடங்கும் பேரினவாத குடியேற்றங்களும் மத அடையாளங்களை நிறுவுதலும் போன்ற பல பரிமாணங்களை இக்கதைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

இலங்கையின் இன முரண்பாட்டில் தோற்றுவாயாகக் கொள்ளப்படும் எண்பதுகளில் ஆரம்பித்த கலவரம் பற்றி பனிமலையும் பலவந்த வெளியேற்றம் அல்லது சொந்த நாட்டிலேயே அகதியாகும் நிலையை ஹனீபாவும் இரண்டு எருதுகளும், துயருறுதல், நிழல்களின் வடு ஆகிய கதைகள் உணர்த்தி நிற்கின்றன. விருந்தினர் மீளக்குடியேறுவதற்காக செல்லும் போது எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கூறுகின்றது. நிலம் சார்ந்த வாழ்க்கை கொண்ட மக்களை அதிலிருந்து பிரிப்பதன் வலிகளையும் வேதனைகளையும் துணிச்சல், என்ட அல்லாஹ், ஆகிய கதைகளில் காணலாம். அரசியல் பௌத்தம், மற்றமைகளை மறுத்து நிற்கும் சேதிகளை மே புதுன்கே தேசய, சோனியனின் கதையின் தனிமை, குதர்க்கங்களின் பிதுக்கம், ஆகிய கதைகளில் காணலாம். வெள்ளைத் தொப்பி பற்றிய வேதனையூட்டும் அறிக்கை, எமது அடையாளத்தின் மீதான அழிப்பையும் வன்மத்தையும் குறியீட்டு மொழியில் சொல்கிறது.

இக்கதைகளில் முஸ்லிம் புனைகதை எழுத்துக்களின் பல்வகைமாதிரியான வளர்ச்சிப் போக்கையும் அடையாளம் காண முடிகிறது. குளங்கள், நிழல்களின் வடு, குதர்க்கங்களின் பிதுக்கம், சூன்யப் பெருவெளிக் கதைகள், சோனியனின் கதையின் தனிமை ஆகியன புனைவின் உச்சங்களாக இருக்கின்றன. யுத்தத்தால் நேரடிப்பாதிப்புக்குள்ளான எழுத்துக்களும் இத்தொகுப்பில் உண்டு. யுத்தத்திற்குப் பின்னால் மறைமுகமாகத் தொழிற்படும் கருத்தியல்கள், நுண் அதிகாரங்கள், அவற்றின் வலைப்பின்னல்கள் போன்றவற்றை இனங்கண்டு எழுதும் பிரதிகளும் இத்தொகுப்பில் அடங்கியிருக்கின்றன. இவ்வின முரண்பாடு காலத்தில் எமது இலக்கிய பண்பாட்டு வெளியில் அறிமுகமாகிய நவீன, பின்நவீன இலக்கியக் கோட்பாடுகளின் செல்வாக்கையும் அவற்றில் எமது படைப்பாளிகள் கவனம் செலுத்தியிருப்பதையும் படைப்புக்களைப் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. அப்பாதிப்பு பிரதியில் உடைப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது.

வன்முறை நம்மை நேரடியாகப் பாதித்த ஒன்றுதான். ஆனாலும் புரிந்து கொள்வதற்கு மிகச்சிரமமான விடயங்கள் இந்த அழிப்புப் போருக்குப் பின்னால் புதைந்துகிடக்கிறது என்ற உண்மையையும் இந்த பிரதிகள் புனைவின் உச்சத்திற்குச் செல்வதற்கு காரணமாகலாம். தீவிரமாக யதார்த்தத்தைப் பிடித்துக் கொள்வதால் வரும் படைப்புச் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்காகத்தான் இவர்கள் இந்தப் புனைவின் உச்சங்களை நோக்கி செல்கின்றார்கள் போலும். அதீத புனைவுகளை நோக்கிச் செல்லும் போது யதார்த்தத்தின் பிடியை விட்டு அவர்கள் விலகிவிடுவது தெரிகிறது. கதை சொல்லி சிந்தனையால், அதன் ஆழத்தால் அடைந்த உச்சநிலைகளில் தனது இயல்பிலிருந்து பிறழ்ந்து இன்னொன்றாக ஆவதன் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். இலங்கையில் நடைபெற்ற போர், அவ்வளவு உக்கிரமானது. அதிலும் வடக்குக் கிழக்கு மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் வாழ்ந்திருக்கிறார்கள். எனவே இக்காலத்தில் எழுதப்பட்ட எல்லாப் பிரதிகளும் ஒன்றையொன்று நிரப்பிக் கொண்டும் ஒரு போர்க்கால நாவலின் அங்கங்களாக நகர்வதை அவதானிக்க முடிகிறது.

ஜனநாயக விழுமியங்கள் போற்றப்படும் ஒரு வெளியில் மட்டுமே சுதந்திரமாக எழுத முடியும். ஏனெனில் கதையாடுவது அல்லது ஒன்றைப் பேசுபொருளாக மாற்றுவது என்பது சுதந்திரத்தினை உறுதிப்படுத்துவதாகும். இந்தச் சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படும் போதே எதிர்ச் செயற்பாடு என்பது தவிர்க்க முடியாதென சார்தர் கூறுகின்றார். ஒரு கதை சொல்லி யாருக்காகக் கதையாடுகின்றான் என்பதிலிருந்தான் அவனது கதையாடலின் அரசியலை, அந்தக் கதையாடலின் சமூகச் சார்பின் முற்போக்கான தன்மையைத் தீர்மானிக்க முடியும் என்பது அவரது வாதமாகும்.

பல்வேறு வகையான உள்ளடுக்குகளையும் தளைகளையும் கொண்ட சமூகம் தன்னைத்தானே விடுதலை செய்து கொள்ள முன் விடுதலைப் போராட்டத்தில் குதிக்கும் போது மற்றமைகளின் அடையாளங்களை அழிப்பதற்கே முயற்சிக்கின்றன. அக்காலப்பிரிவில் எதிர்ப்பு உதிரியாக வெளிப்படுவதைப் போல கூட்டுச் செயற்பாடாகவும் அமைய முடியும். ஒரு மேலாதிக்கக் குழு மற்றமைகளை தனது கட்டுக்குள் கொண்டு வந்து அடக்கியாள முனைகிற போதுதான் எதிர்ப்பானது ஓர் இயங்கியலாக, எதிர் ஆற்றலாக மேலெழுகிறது. இதில் குறித்த சமூகத்தின் கூட்டு மனம் அதிலிருந்து மீள்வதற்கான ஒரு பண்பாட்டு ஆயுதமாக எதிர்க்கதையாடல் உருவாகிறது. இங்கு கதைப்பிரதிகள் எதிர்ப்பின் உச்சநிலை அடையும் போது கதைக்கு முன்னர் அளிக்கப்பட்ட சட்டகங்களை உடைத்துக் கொண்டு எதிர்ப்பைக் கக்குவதைக் காணலாம். அதிகாரத்தையும் அடக்குமுறையையும் எதிர்ப்பதென்பது மற்றமையின் அதிகாரத்தை அந்த இடத்தில் கொண்டுவந்து நிறுத்திவிடலாம் என்பதால் இக்கதையாடிகள் அரசியல் தத்துவார்த்தத்தைப் பேசாமல் புனைவெழுத்துக்களால் பேசுகிறார்கள்.

தமிழின் அதிகமான புனைகதைகள் மீண்டும் மீண்டும் ஒரு வரலாற்றை கருத்தாக்கத்தின் மீது திணித்தோ அல்லது ஒழுங்குபடுத்துவதையோ செய்து வந்துள்ளது. இதனால் எமது கதைவெளி சுருக்கப்பட்டுவிட்டது என்ற விமர்சனக் குரல்களும் எழுந்து வருகின்றன. இந்த ஒழுங்குபடுத்தலால் மேலதிகச் சம்பவங்களாகவே கதைகளின் போக்கு மாறிவிட்டது. இதிலிருந்து விடுபடுகின்ற எத்தனங்களையும் பல் பரிமாணங்களை நோக்கிச் செல்வதையும் புனைவில் பின்நோக்கிப் பயணிப்பதையும் அவதானிக்க முடிகிறது. இனமுரண்பாடுகாலத்தில் தேசிய அளவிலும் புலம்பெயர் சூழலிலும் இதழியல் கலாசாரமும் முனைப்புப் பெற்றிருந்தது. இக்காலப்பிரிவில் இனமுரண்பாட்டை வெளிப்படுத்தும் படைப்புக்களுக்காக மட்டுமே பல இதழ்கள் தோன்றி மறைந்ததுண்டு. அவற்றில் ஒரு தசாப்தத்திற்கு மேலாக மிகவும் காத்திரமான மாற்றுப்பத்திரிகையாக இயங்கிய இதழ்தான் சரிநிகராகும். இவ்விதழ் பல முஸ்லிம் எழுத்துச் செயல்பாட்டாளர்களுக்கு களம் கொடுத்தது. அப்போது பல சிறுகதைகள் வெளிவந்தன. அதன் வரலாற்றுப் பங்களிப்பு மிக முக்கியமானது.

கமராவின் வருகை ஓவியத்தை சவாலுக்கு உள்ளாக்கியதைப் போல் சினிமாவின் வருகை நாவலைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது எனலாம். இதைப் புரிந்துகொண்ட இலக்கியச் செயற்பாட்டாளர்களும் முன்னைய கதை சொல்லல் முறைகளில் சலிப்படைந்தவர்களும் புதுப்புது கதையாடல் முயற்சிகளில் இயங்கத் தொடங்கிவிட்டனர். ஈழத்து தமிழ் பரப்பில் ராகவன், முரளீதரன், திசேரா, மலர்ச்செல்வன், கௌரிபாலன், மிஹாத், இமாம் அத்னான், ஷாஜகான் போன்றவர்களுடன் பெருவெளி, ஜீவநதி, மறுகா, புதியசொல் போன்ற இதழ்களின் கதையாடிகள் எனப் பலரும் கதைப்பிரதிகளை எடுத்துரைப்பதிலும் கருத்து நிலையிலும் புதிய சாத்தியங்களை எட்டியிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இவ்வாறான புதிய கதையுருவாக்கங்கள் நிகழும் போது திறனாய்வு முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இனம், சாதி, மதம், தேசம், பாலினம் போன்ற அதிகாரங்கள் பதிந்துபோயிருக்கும் உடல்களைச் சுமந்து கொண்டு நாம் பயணிப்பதைப் போல நமது கதைப்பிரதிகளும் அவற்றை சுமந்தபடியே நிற்கின்றன. அவற்றைத் தொந்தரவு செய்யும் விதமாக, இடையீடு செய்வதாக புதிய விமர்சன முறைகள் அல்லது வாசிப்பு முறைகளும் தலைகாட்டத் தொடங்கிவிட்டன. கதைப்பிரதியை ஆடுகளமாகக் கொண்டு பிரதிபலிப்பு உள்ளொளி கோட்பாடுகளில் இருந்து விலகி, பிரதியினுள் உள்ளுறைந்திருக்கும் வன்முறைகளை தோலுரிக்கின்ற விமர்சன வாசிப்பு முறைகளும் மனிதரல்லாத மற்றைமைகள் பிரதிக்குள் எவ்வாறு வைக்கப்பட்டுள்ளன என்பதை மிக நுண்ணிதாக ஆராயும் அளவுக்கு வளர்ந்து வருகின்றது.

சிந்திய ரத்தத்துக்கு தீர்வுகள் கிடைக்காமலே இங்கே மீண்டும் மீண்டும் இரத்தம் சிந்தப்படுகின்றது. இழப்பதற்கு ஏதுமில்லை என்றிருக்கும் போதே இந்த மண்ணில் மீண்டும் போர் வெடித்துவிடுகின்றது. போரை உருவாக்குபவர்கள் யார்? ஏன் உருவாக்குகிறார்கள்? ஈற்றில் போரின் துயரத்தை சுமப்பவர்கள் யார்? போர் வியாபாரிகள் தோற்றிருக்கிறார்களா? போன்ற பல கேள்விகளுக்கு இன்று எல்லோருக்கும் விடைகள் தெரியவாரம்பித்துவிட்டன. மனித மற்றைமைகள் இப்பிரதிக்குள் இரண்டாம் மூன்றாம் பிரஜைகளாகவே ஆக்கப்பட்டுள்ளனர். இதனால் தனிமைப்படுத்தலின் அரசியலையும் பொதுமைப்படுத்தலின் வன்மத்தையும் இங்கே காணலாம். இதனால் சோகம் கவிந்திருந்தாலும் சிரிப்பின் வெடிப்பொலிகளையும் கேட்க முடிகின்றது.

பல்லின சமூகங்களில் இருந்து அல்லது பல்பண்பாடுகளில் இருந்து ஒருமிக்கும் சிந்தனைகளும் அதற்கான நிகழ்த்துகைகளுமே போருக்குப் பிந்திய இன்றைய சூழலில் நமக்குத் தேவைப்படுகின்றன. கடந்த காலங்களில் சமூகங்களுக்கும்,  சமூகங்களுக்கும் பண்பாடுகளுக்கும் பண்பாடுகளுக்கும் சிவில் நிறுவனங்களுக்கும் சிவில் நிறுவனங்களுக்கும் இடையில் உரையாடல் நிகழவில்லை. முரண்பாடுகள் கூர்மையடைவதை தணிப்பதற்கும் மோதுகைகளை தவிர்ப்பதற்கும் உரையாடல் இன்றியமையாதது. மனித நேயம்,  கருணை, ஜீவகாருண்யம் போன்ற அறங்கள் முகிழ்க்கும் இக்கதைகள் அவ்வுரையாடலுக்கு உதவக்கூடுமென்ற அவாவினாலேயே இவை தொகுப்பாகின்றன.

சகர்ஜாத் மரணத்தின் வாயிலிருந்து தன்னையும் தன்னைப் போன்ற பெண்களையும் காப்பாற்றுவதற்காக சொன்னவை தான் ஆயிரத்தோர் இரவுக் கதைகளாகும். கதையாடல் மூலம் மன்னித்தலை மனித மனங்களில் விதைக்க முடியும் என்ற நம்பிக்கையினாலேயே அவள் ஒவ்வொரு இரவும் அம் மன்னனுக்கு கதை சொல்கிறாள். தனிமனிதர்களுக்கிடையில் மன்னிப்பு என்று தொடங்கி சமூகங்களுக்கு மத்தியில் விரிவுபடக்கூடிய சாத்தியங்களும் உள்ளன. மன்னித்தல் என்பது மற்றவர்களை மட்டுமல்ல தன்னையும் சேர்த்துத்தான் என்று சொல்கிறார்கள் இக்கதையாடிகள். கதைகளை மீளவும் மீளவும் சொல்லும் போது அது மனுட நேயத்ததை நோக்கியே நகர்கின்றது கதைகள் மாயப்புனைவுலகில் சஞ்சரிக்க வைக்கின்றன. கதைகள் நம்மை நாமே மீட்டெடுக்க உதவுகின்றன. கதைகள் நம்மை ஆறுதல்ப்படுத்துகின்றன மொத்தத்தில் கதைகள் எமது காயங்களை ஆற்றுகின்றன.

ஆதிரை வெளியீடான என்ட அல்லாஹ் சிறுகதைத் தொகுப்பிற்கு ஏபிஎம்.இத்ரீஸ் எழுதிய தொகுப்புரை.

ஏ. பி. எம். இத்ரீஸ்

இலங்கையில் வாழைச்சேனையைச் சேர்ந்தவர். அரபுத்துறையில் இலக்கியம், பண்பாடு, புனிதப் பிரதிகள் மீதான மறுவாசிப்பு போன்றவற்றில் இயங்கி வருகிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.