/

ஒரே திடல்: தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

சிங்களத்திலிருந்து தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்

அம்மா, கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகச் சொன்னதும், எங்கள் வீட்டில் பெரியதொரு திருமண வைபவம் நடைபெறுமென்றே நான் எதிர்பார்த்தேன். என்றாலும், குறைந்த பட்சம் கல்யாண விருந்தை விட்டாலும், அம்மா மணப்பெண்ணாகக் கூட மாறவில்லை. சித்தப்பா வந்து எங்களைத் தன்னோடு கூட்டிச் சென்றது மாத்திரம்தான் நடந்தது. அப்படிக் கூட்டிச் சென்றது கூட சைக்கிளில்தான். என்னை முன்னாலும், அம்மாவைப் பின்னாலும் உட்கார வைத்திருந்தார். சைக்கிள் பார் கட்டையில் வெகுதூரம் உட்கார்ந்து பயணிக்கும்போது எனக்கு சிரமமாக இருக்கும் என்று அதன் மீது ஒரு தலையணையை வைத்து அதற்கு மேல் என்னை அமர்த்தி மிகவும் பத்திரமாகத்தான் கூட்டிச் சென்றார்.

அம்மாவும், சித்தப்பாவும் அதற்கு முந்தைய நாளில்தான் பதிவாளர் காரியாலயத்திற்குச் சென்று திருமணம் முடித்திருந்தார்கள். அன்றும் கூட அவர்கள் திருமணம் முடித்ததாக நான் உணரவேயில்லை. வழமையாக சந்தைக்குப் போவதற்கு உடுத்துவதைப் போலவேதான் அம்மா வீட்டிலிருந்து புறப்பட்டுப் போனாள். சித்தப்பா எனப்படுபவர் அப்பாவின் தம்பியென பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்தார்கள். எனினும் எனது சித்தப்பா, அப்பாவின் தம்பியல்ல. ஆனாலும் அம்மா, எங்களைக் கூட்டிச் சென்றவரை சித்தப்பா என்றே அழைக்குமாறு என்னிடம் கூறியிருந்தாள்.

குளக்கட்டைக் கடந்து ஒற்றையடிப் பாதை வழியே நெடுந்தூரம் போனதும் சித்தப்பாவின் வீடு வந்தது. அந்த வீட்டின் சுவர்கள் இன்னும் பூசி மெழுகப்படாமல் இருந்தன. ஒருவேளை சித்தப்பாவால் தனியாகச் செய்ய முடியாமல் போயிருந்தாலும் கூட, இனி நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து சுவர்களைப் பூசி மெழுகலாம். சித்தப்பா என்னைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் போனார். என்னைத் தூக்கினால் எனது கால்கள் தரையில் முட்டுகின்றன என்று கூறி இப்போதெல்லாம் அம்மா என்னைத் தூக்குவதே இல்லை.

“உட்காரு யஸோதா”

அம்மா மிகுந்த தன்னடக்கத்தோடு ஒரு பக்தையைப் போல அமர்ந்து கொண்டாள். சித்திரைப் புத்தாண்டுக்கு வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசாரம் செய்வது போல சித்தப்பா எம்மைக் கவனித்துக் கொண்டார். அம்மா தடுமாற்றத்தோடு அமர்ந்திருப்பதுபோல எனக்குத் தோன்றியது. தண்ணீரைக் கொதிக்க வைக்க, கேத்தலை அடுப்பில் வைப்பதற்காக சித்தப்பா சமையலறைக்குள் நுழைந்தார். அம்மா சமையலறைக்குப் போனபோது நானும் பின்னாலேயே சென்றேன். சித்தப்பா விறகடுப்பை ஊதிக் கொண்டிருந்தார். பள்ளிக்கூடத்துக்கு வந்த பரிசோதகரைப் போல அம்மா சமையலறையை சுற்றி வரப் பார்த்தாள்.

“என் பொஞ்சாதி இருந்த காலத்துலன்னா இதெல்லாம் நல்லா ஒழுங்கா வச்சிருந்தா”

சித்தப்பா ‘பொஞ்சாதி’ என்று சொன்னது அம்மாவையல்ல. என்றாலும், இப்போது சித்தப்பாவின் ‘பொஞ்சாதி’ என்னுடைய அம்மாதான். சித்தப்பா இப்போதும் முதல் மனைவியை ‘பொஞ்சாதி’ என்று அழைத்தற்கு அம்மாவிடம் கோபமோ, கவலையோ தென்படவில்லை. அவள் மென்மையாகப் புன்னகைத்தாள். சித்தப்பா தேநீர் ஊற்றும் வரைக்கும் சமையலறையை ஒழுங்குபடுத்தினாள். சித்தப்பா எனக்காக தேநீரில் தொட்டுச் சாப்பிடவென பிஸ்கட்டும் வாங்கி வைத்திருந்தார். சித்தப்பாவும், அம்மாவும் ஒருவரை ஒருவர் அறிமுகமில்லாதவர்கள்போல பிஸ்கட் சாப்பிட்டு தேநீரை அருந்தினார்கள். அது, அவர்களுடைய முதல் நாள் என்பதால் அப்படி இருந்திருக்கலாம். வீட்டிலென்றால் அம்மாவும் என்னைப் போலவே என்னுடன் சேர்ந்து பிஸ்கட்டை தேநீரில் தொட்டுச் சாப்பிடுவாள் எனினும் அன்று அவள் மிகவும் கௌரவமாகச் சாப்பிடுகிறாளென எனக்குத் தோன்றியது.

அம்மா, சித்தப்பாவின் முன்பாக ஒரு பக்தையைப் போல அமைதியாக இருக்க முயற்சித்த போதிலும், அம்மாவின் உண்மையான இயல்பைக் குறித்து சித்தப்பா பின்னர் அறிந்து கொள்ளக்கூடும். எனினும் அவள் செல்லம் கொஞ்சி குறும்புத்தனங்கள் செய்ததெல்லாம் எனக்காகத்தான் என்று தோன்றியது. வெளியாட்களுக்கு முன்னால் அம்மா அளவுக்கு அடக்கமான, மென்மையான வேறொருத்தியையும் காணமுடியாது. அவ்வாறிருப்பதும் தவறில்லை. என்னுடன் இருப்பதைப் போல எல்லோருடனும் அம்மாவால் இருக்க முடியாது.

அப்பா, அம்மாவைக் கை விட்டுச் சென்றது அம்மாவின் தவறால் அல்ல. அது அப்பாவின் தவறும் கிடையாது. ஸ்ரீமலி சித்தியின் தவறும் இல்லை. “நாங்கள் அனைவரும் மனிதர்கள் என்பதால் எங்கள் அனைவருக்கும் இப்படி நிகழ்ந்தது” என்று அம்மா கூறினாள். அப்பா, ஸ்ரீமலி சித்தியுடன் ஓடிப் போன பின்னரும் கூட எப்போதாவது நாங்கள் குளிக்கும் நேரம் பார்த்து எப்படியாவது குளத்தின் அருகில் வந்துவிடுவார்.

“நான் போனதுக்கு உன் மேல எந்தத் தவறும் இல்ல யஸோ” இதையே மிகுந்த தயவாக ஒவ்வொருமுறையும் தயங்கித் தயங்கிச் சொல்வார்.

அப்பா எங்களுக்காகக் கட்டிய வீட்டில் எங்களை விட்டுவிட்டே போயிருந்தார். அவர் வீட்டை விட்டுப் போன போதிலும், அம்மாவையோ என்னையோ அந்த வீட்டை விட்டுப் போகுமாறு ஒருபோதும் சொன்னதில்லை. அம்மாவிடம் என்னைத் தன்னிடம் தருமாறு கேட்காதது அவருக்கு என் மீது பாசம் இல்லாததால் அல்ல. நானும் இல்லாமல் போனால் அம்மா மேலும் தனித்துப் போவாள் என்று அவருக்குத் தெரியும்.

அம்மாவைச் சந்திக்க முன்பே அப்பாவுக்கு ஸ்ரீமலி சித்தியைத் தெரியும் என்று பாட்டி, அம்மாவிடம் கூறியதை நான் கேட்டிருக்கிறேன். பாட்டி எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அப்பாவைக் குற்றம் குறை சொல்வாள். ஆனால் அம்மா ஒருபோதும் யாரிடமும் அப்பாவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட கதைத்ததில்லை.

“இந்தத் தடவை பயிர்ச் சேனையும் பாழடைஞ்சு போய்க் கிடக்கு. நெல் அறுவடையையும் அப்பா எங்களுக்கே எல்லாத்தையும் தந்துட்டார். ஒழுங்கா சாப்பிடக் குடிக்க அவங்களுக்கு வழியிருக்குமோ தெரியாது” என அம்மா சோற்றுத் தட்டைக் கையில் எடுக்கும்போதெல்லாம் தினமும் அப்பாவை நினைத்துத் தனியாக பெருமூச்சு விடுவாள்.

அப்பா குளத்தருகே வருவது, ஸ்ரீமலி சித்திக்கும் தெரியும். ஒரு நாள் அப்பா, சித்தியுடன்தான் வந்தார். அன்று ஸ்ரீமலி சித்தி, அம்மாவிடம் எதையோ சொல்லிச் சொல்லி அழுதாள். அப்பாவும், நானும் குளத்தில் கரணமடித்து நீந்திக் குளித்துக் கொண்டிருந்ததால் அவர்களது உரையாடல் எனக்குக் கேட்கவில்லை. அப்பாவும், சித்தியும் புறப்படத் தயாரான போது, “நீங்க ஸ்ரீமலி தங்கச்சியைக் கூட்டிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்துடுங்க. நாங்க என்னோட வீட்டுக்குப் போக முடிவு செஞ்சிருக்கோம். நாங்க இங்க தனியா இருக்கோம்னு அம்மா எப்பவும் கூப்பிட்டுட்டே இருக்கா” என்று அம்மா, அப்பாவிடம் கூறினாள்.

அம்மா அப்படிச் சொன்னாலும் கூட, முன்பு பாட்டி எங்களை அவரது வீட்டுக்குக் கூப்பிட்ட போதெல்லாம் அம்மா முடியாதென்றே கூறி வந்தாள். அப்பா, ஸ்ரீமலி சித்தியை பயிர்ச் சேனையிலிருந்த குடிலுக்குத்தான் கூட்டிச் சென்றிருந்தார். சித்தியின் வீட்டிலும், அப்பாவின் பிறந்த வீட்டிலும் அந்தப் புதிய தம்பதிகளை ஏற்றுக் கொள்ளவில்லையாம். அதனால்தான் ஸ்ரீமலி சித்தி சேனைக் குடிலில் இருந்தாளே ஒழிய, அதில் வசிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அம்மாவுக்குத் தெரியும்.

அன்றைக்கு மறுநாள் அம்மாவும், நானும் பாட்டி வீட்டுக்குப் போய் விட்டோம். அம்மா வற்புறுத்தியதாலேயே அப்பா ஸ்ரீமலி சித்தியைக் கூட்டிக் கொண்டு எங்களுடைய வீட்டுக்கு குடியிருக்க வந்தார்.

நாங்கள் பாட்டி வீட்டிலிருந்த போதுதான் சித்தப்பா எங்களைக் கூட்டிக் கொண்டு போனார்.

‘அப்பா இருந்தாரென்றால்’ என தப்பித் தவறியேனும் ஏங்கச் செய்யாத அளவுக்கு, சித்தப்பா என்னை அளவுக்கதிகமாக நேசித்தார். அம்மாவின் மீது கூட அப்படித்தான் இருக்கக்கூடும். சந்தியிலிருக்கும் சில்லறைக் கடையில் சாமான்களை எடை போட்டுத் தரும் வேலை பார்த்து வந்த சித்தப்பாவுக்கு போதியளவு வருமானம் இல்லையென்பதால் அம்மா, அப்பாவின் வீட்டில் செய்தது போலவே இங்கும் கூடை, பாய்களை நெய்தாள்.

விடியற் காலையிலேயே எழுந்து கொள்ளும் அம்மாவுடன் சேர்ந்து வீட்டு வேலைகளைச் செய்யும் சித்தப்பா, தினந்தோறும் காலை வேளைகளில் என்னைப் பள்ளிக்கூடத்துக்கும் கூட்டிச் செல்வார். சைக்கிளில் உட்கார வைத்துத்தான் கொண்டு போவார். சில நாட்கள் பள்ளிக்கூடம் விடும் நேரத்தில் என்னைக் கூட்டிச் செல்ல அப்பா வந்திருப்பார். அப்பா என்னைக் கூட்டிச் செல்ல வந்த முதல் நாளில், ‘இப்போது என்னைக் கூட்டிச் செல்ல வரும் சித்தப்பாவுக்கு என்ன சொல்வது?’ என நான் பதறிப் போனேன். ‘என்னைக் காணாமல் சித்தப்பா பயந்து போவாரா? சித்தப்பா, அப்பாவுடன் சண்டை போடுவாரா?’ என்றெல்லாம் எண்ணிப் பயந்தேன். எனினும், அப்பா என்னை சித்தப்பா வேலை செய்யும் கடைக்குத்தான் அழைத்துச் சென்றார். அப்பா என்னைக் கூட்டிச் சென்று சித்தப்பாவிடம் ஒப்படைத்த பிறகுதான் இருவரும் பங்கு போட்டுக் கொண்டு என்னைக் கூட்டிக் கொண்டு வந்ததை நான் அறிந்து கொண்டேன்.

சித்தப்பா, என்னைச் சற்று நேரமேனும் அப்பாவிடம் கொடுத்தது, அவருக்கு நானொரு தொந்தரவாக இருந்ததால் அல்ல. சித்தப்பாவுக்கு, அப்பா மீது தோன்றிய அனுதாபத்தினால்தான். சில நாட்கள் அப்பா, ‘ஸ்ரீமலி, யஸோக்கிட்டக் கொடுக்கச் சொன்னாள்’ என்று கூறியவாறு சித்தப்பாவின் கையில் ஏதேனும் உணவுப் பொதியைத் திணிப்பார். ஸ்ரீமலி சித்தி சில நாட்கள் காலை வேளையில் வழியில் சித்தப்பாவின் சைக்கிளை நிறுத்தி, என்னிடம் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு போய் சாப்பிடுமாறு கூறி வட்டக்கண்ணி மர இலையில் சுற்றிய இடியப்பப் பொதியைத் தருவாள். அன்று என்னிடம் இரண்டு உணவுப் பொதிகளிருக்கும். அன்று அம்மா சுற்றித் தந்த உணவுப் பொதியை பள்ளிக்கூடத்தில் சாப்பிட்டு விட்டு, ஸ்ரீமலி சித்தி தந்த உணவுப் பொதியை அம்மாவுடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக வீட்டுக்கு எடுத்துச் செல்வேன். அம்மாவுக்கு, ஸ்ரீமலி சித்தி சமைக்கும் உணவுகளென்றால் மிகவும் பிடிக்கும்.

ஒருநாள் முன்னெப்போதுமில்லாமல் அம்மா, ஜிலேபி பார்சலொன்றை என்னிடமும் சித்தப்பாவிடமும் தந்து அப்பாவின் வீட்டுக்குக் கொடுத்தனுப்பினாள். அவள் எங்களுக்காக ஜிலேபி செய்தபோது அதில் கொஞ்சத்தை ஸ்ரீமலி சித்திக்கு அனுப்பியதல்ல அது. அவள் அன்றைக்கு சித்திக்காகவே செய்து கொடுத்தாள். சித்திக்கு ஜிலேபி சாப்பிட ஆசை. கடையில் வந்து ஜிலேபி இருக்கிறதாவென அப்பா கேட்டதாக சித்தப்பா அம்மாவிடம் கூறியிருக்கிறார். அதற்குப் பிறகே அம்மா ஜிலேபி செய்திருந்தாள்.

எனக்கொரு தங்கை பிறக்கப் போவதாக சித்தப்பா என்னிடம் வழியில் வைத்துச் சொன்னார். அப்பாவுடன் வந்து விட்டதால் ஸ்ரீமலி சித்தியை அவளது வீட்டில் புறக்கணித்துவிட்டிருந்தார்கள். அதனால் அம்மாவுக்கு சித்தியைப் பார்த்துக் கொள்ளவும், சித்தியுடைய வேலைகளைச் செய்து கொடுக்கவும் வேண்டியிருந்தது. அவள் என்னையும் அழைத்துக் கொண்டு அப்பாவின் வீட்டிலிருந்து புறப்பட்டுவந்த நாளில், மீண்டும் அந்த வீட்டில் காலடியெடுத்து வைக்கக் கூடாதென்றுதான் நினைத்திருப்பாள். எனினும் இப்போது அம்மா திரும்பவும் அந்த வீட்டுக்குப் போய் வர வேண்டியிருந்தது.

அம்மா ஒருபோதும் அங்கு தனியாகப் போகவில்லை. என்னையோ, சித்தப்பாவையோ அல்லது முன் வீட்டிலிருந்த சிறுமியையோ கூட்டிக் கொண்டுதான் அப்பா வீட்டுக்குச் சென்று வந்தாள். ஒருவேளை ஊரார் ஏதேனும் வம்பு பேச இடமிருப்பதனால் அப்படிச் செய்திருக்கலாம். ஸ்ரீமலி சித்திக்குப் பிறக்கப் போவது தங்கைதான் என்று சித்தப்பா சொன்ன போதிலும், அம்மாவும் சித்தியும் நீலம், இளஞ்சிவப்பு என இரண்டு நிறங்களிலுமே சிறு குழந்தைகளுக்கான ஆடைகளைத் தைத்து வைத்திருந்தார்கள். அம்மா என்னையும் மடியிலமர்த்திக் கொண்டு அவற்றில் பூ அலங்காரங்களைத் தைத்தாள். ஸ்ரீமலி சித்தி மருத்துவமனைக்குச் செல்லும் நாள் நெருங்கிய வேளையில் அம்மா மிகவும் நேர்த்தியாக, சித்திக்குத் தேவைப்படக் கூடிய அனைத்துப் பொருட்களையும் ஒழுங்குபடுத்திக் கொடுத்தாள்.

அம்மா, அப்பாவின் வீட்டுக்குப் போய்வந்தபோதிலும், அப்பா ஒருபோதும் எங்கள் வீட்டுக்கு வரவேயில்லை. அப்பா என்னைப் பார்க்க வந்தது கூட தெருவுக்குத்தானே ஒழிய வீட்டுக்கல்ல. எனினும் ஒருநாள் அருமை புதுமையாக அப்பா எங்கள் வீட்டுக்கு வருவதைக் கண்டேன். நான் அப்போது முற்றத்து மாமரத்தில் சித்தப்பா கட்டித் தந்த ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தேன். அப்பா வருவதைக் கண்டதும் ஊஞ்சல் தானாகவே நின்றுவிட்டது. அதிலிருந்து எழுந்து அப்பாவிடம் ஓடிப் போகும் தைரியம் எனக்கு வராததற்குக் காரணம் அப்பா வந்த தோற்றத்தினால்தான்.

எனக்கு அதில் ஏதோ வித்தியாசம் தென்பட்டது. அப்பா சுயநினைவில் இல்லை எனத் தோன்றியது. அப்பாவை யாரோ ஏவிவிட்டதுபோல நடந்து வந்தார். அவர் ஒரு சீராக அடியெடுத்து வைத்து நடந்து வரவில்லை. எமது வீட்டுக்குத் தன்பாட்டில் வந்து விட்டதைப் போலக் காணப்பட்டார். பார்த்த இடத்தையே வெறித்துப் பார்த்தவாறு, சீவனற்றிருப்பது போலத் தென்பட்டார். அப்பா குடித்திருப்பாரோ என்றும் எனக்குத் தோன்றியது. எனினும் அப்பா ஒருபோதும் மதுபானம் அருந்தியவரல்ல. எனில், அப்பா கால்போன போக்கில் போல, தள்ளாடித் தள்ளாடி எமது வீட்டுக்கு வந்திருந்தது எதற்காக? அப்பா சுயநினைவற்றவர் போல நடந்து வந்து வாசல் படிக்கட்டின் மீது அமர்ந்து விட்டார். நான் ஏதும் செய்ய வழியற்று இருந்த இடத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

“யஸோ…”

நான் ஒருபோதும் செவிமடுத்திராதளவு துயரத்துடனான குரலில் சிரமப்பட்டு, இயன்றவரை பாடுபட்டு அப்பா, அம்மாவை அழைத்தார். அம்மா என்னை விடவும் பயந்து போய் கொல்லைப் புறத்திலிருந்து ஓடி வந்தாள்.

“ஐயோ யஸோ…”

அப்பா ஏன் இப்படி ஒப்பாரி வைக்கிறார்? அம்மா, அப்பாவின் அருகில் அமர்ந்து கொண்டாள். அப்பா, அம்மாவின் மடியில் தலை சாய்த்து வேண்டிய மட்டும் அழுது தீர்த்தார். அழுது கொண்டே ஏதேதோ கூறிப் புலம்பினார். “மலீ போயிட்டா யஸோ” என்ற வசனங்களை மாத்திரம் என்னால் ஒருவாறு பொறுக்கிக்கொள்ள முடிந்தது. அம்மா கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோட அப்பாவின் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

சித்தப்பாவின் சைக்கிள் குதிரை வேகத்தில் வந்து முற்றத்தின் மத்தியில் நின்றது. சித்தப்பாவுக்கு ஏதேனும் தகவல் கிடைத்திருக்கக் கூடும். சித்தப்பா, அப்பாவை அரவணைத்துக் கூட்டிப் போய் வீட்டினுள்ளே அமரச் செய்தார். வீட்டில் வைத்து திடீரென பிரசவ வலியெடுத்து, பிள்ளைப் பேறு சிக்கலானதில் ஸ்ரீமலி சித்தி செத்துப் போயிருந்தாள்.

ஸ்ரீமலி சித்தியைக் கவனித்துக் கொள்ள அம்மா மாத்திரமே இருந்தாள். ஆனால் அவள் செத்துப்போனபோது எல்லா உறவினர்களும் வந்திருந்தார்கள். சாவு வீட்டின் அனைத்து வேலைகளையும் சித்தப்பா பொறுப்பேற்றுச் செய்து முடித்தார். எதையும் செய்யுமளவுக்கு அப்பாவுக்கு சுயநினைவு இருக்கவில்லை. சாவு வீட்டில் வைத்து எவ்வளவுதான் அப்பாவைப் பார்க்காதிருக்க அம்மா முயன்ற போதும், அவள் அப்பாவைத்தான் பார்த்துக் கொண்டேயிருந்தாள். சனக் கூட்டம் மத்தியில் அம்மாவுக்கு, அப்பாவை ஆறுதல்படுத்த முடியாத காரணத்தால், சித்தப்பா அம்மாவுக்காக அப்பாவின் அருகிலேயே அமர்ந்திருந்தார்.

ஈமச் சடங்குகள் முடிவடைந்து ஏழாவது நாள் சடங்காக அன்னதானமும் வழங்கியதற்கு அடுத்தநாள் அம்மா விம்மியழும் ஓசை எனக்கு அறையிலிருந்து கேட்டது. சித்தப்பா, அம்மாவிடம் எதையோ தெளிவுபடுத்த முயற்சித்த போதிலும் அம்மா அதை ஏற்றுக் கொள்ளவேயில்லை.

“நானும் இதை விருப்பத்தோட சொல்லல யஸோ. ஆனா இப்ப அண்ணாக்குன்னு யாருமேயில்ல. என்னோட பொஞ்சாதியை பாம்பு கொத்தின நாள்ல இருந்து நான் தனியா இருந்த மனுஷன்தானே. யஸோவுக்கு, நான் தனியாகுறத தாங்கிக்க முடியலன்னா நான் என்னோட தங்கச்சியை குழந்தை குட்டிகளோட இங்க வந்து இருக்கச் சொல்றேன். நீங்க ரெண்டு பேரும் போயிட்டாலும் கூட நான் உங்களைக் கை விட மாட்டேன் யஸோ. நான் உங்களைப் போகச் சொல்றது யாரோ வெளியாள்கிட்ட இல்லையே. இந்த மகனோட அப்பாக்கிட்டத்தானே?!”

அன்றிரவு விடியும் வரைக்கும் கூட அம்மாவின் விம்மலோசை நிற்கவேயில்லை. அம்மா இடைக்கிடையே அழுது தீர்த்தாள். அதனால் எனக்கும் இடைக்கிடையே விழிப்பு வந்தது. சித்தப்பா விடியும் வரைக்கும் விழித்துக் கொண்டேயிருந்தார்.

சைக்கிளில் எம்மைக் கூட்டி வந்த சித்தப்பாவே, மறுநாள் அதே சைக்கிளில் எம்மை அப்பாவின் வீட்டுக்குக் கூட்டிப் போனார். நாங்கள் போனபோது அப்பா, முன்னாலிருந்த வெற்றிலைப் பாத்தியைப் பார்த்தவாறு படிக்கட்டின் மீது அமர்ந்திருந்தார். அதற்கு முன்னர் நாம் அங்கு போன நாளில் அப்பாவும், சித்தியும் அந்த வெற்றிலைப் பாத்திக்குத்தான் பந்தல் கட்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் வரப் போவதைக் குறித்து அப்பா அறிந்திருக்கவில்லை. சித்தப்பா எமது துணி மூட்டைகளை திண்ணையில் கொண்டு போய் வைத்தார்.

“என்ன தம்பி இது?”

“குழந்தையும், யஸோவும் இங்கேயே இருக்கட்டும் அண்ணா” என எங்கேயோ பார்த்தவாறு பதிலளித்தார் சித்தப்பா. அது கோபத்தினால் அல்ல. சித்தப்பாவின் கண்களிலிருந்த கண்ணீரை அப்பாவிடமிருந்து மறைக்கத்தான். சித்தப்பா தேநீர் கூடக் குடிக்காமல் வந்தவுடனே திரும்பிச் சென்றது, அதற்கு மேலும் இங்கிருந்தால் அழுது விடுவார் என்பதால்தான்.

எனினும், சித்தப்பா நாங்கள் இல்லாத வீட்டுக்குச் சென்று எவ்வளவு அழுதிருப்பார்? ‘எம்முடன் மிகுந்த பாசம் வைத்திருப்பவரிடம் செல்ல வேண்டும்’ என்பதைத் தீர்மானித்திருக்க வேண்டியவர்கள் நானும் அம்மாவும்தானே..? என்றாலும் என்னைப் போலவே அம்மாவும், அப்பாவிடமும் சித்தப்பாவிடமும் ஒரேயளவான அன்போடு இருந்ததால் அம்மாவாலும் அதைத் தீர்மானிக்க முடியாமல் இருந்திருக்கும்.

திரும்பவும் ஒருபோதும் சித்தப்பாவுக்கு என்னை பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிச் செல்லக் கிடைக்காது என்று நான் நினைத்திருந்தேன். ஆனாலும் தினந்தோறும் விடிகாலையில் சித்தப்பா என்னைப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிச் செல்லவென வேலியோரமாக வந்து நின்றார். அவர் வரும்போதெல்லாம் அம்மா என்னையும் கூட்டிக் கொண்டு தினமும் வாசலிலிருந்து வேலியோரமாக வருவது எனக்குத் துணையாக அல்ல. சித்தப்பாவைப் பார்க்கத்தான். பள்ளிக்கூடம் விட்டு வரும்போதும் அம்மா நாங்கள் இருவரும் வரும்வரை வேலியோரமாக நின்று பார்ப்பாள். அப்பா தனது தவறைத் திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சியோடு, இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பார். எனினும், சித்தப்பா ஒருபோதும் வேலி தாண்டவேயில்லை.

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

சிங்கள இலக்கிய உலகில் சிறுகதை, கவிதை, நாவல் படைப்புகள் வழியாக நன்கு அறியப்பட்டவர். பட்டதாரி ஆசிரியை. சிறுவர் இலக்கியத்திலும் சமூக ஆய்வுகளிலும் ஆர்வம் உள்ளவர். 3 கவிதைத் தொகுப்புகள், 2 சிறுகதைத் தொகுப்புகள், 1 நாவல், 3 சமூக ஆய்வுக் கட்டுரைத்தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன.

எம்.ரிஷான் ஷெரீப்

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். சிங்கள இலக்கியங்களை தமிழிற்குத் தொடர்ச்சியாக மொழிபெயர்த்துவருகிறார். இலங்கை அரச சாகித்திய விருது, வம்சி விருது, கனடா இலக்கியத்தோட்ட விருது முதலான விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

5 Comments

  1. ஒவ்வொரு பந்தியிலும் மனம் பூரிப்படைகிறது. ஏதோ எனது சகோதரனுக்கோ சகோதரிக்கோ நிழ்வதுபோல். உண்மையும் அதுதானே.

  2. மன நெகிழ்ச்சியான கதையிது….. எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்… மொழி பெயர்த்வருக்கு பாராட்டுக்கள். ..மேலும் கதைகளை பிரசுரியுங்கள்…… ஆவலுடன் காத்திருக்கிறேன்

  3. அருமை, எழுத்தாளர் மொழிப்பெயர்ப்பாளர் இருவருக்கும் வாழ்த்துகள்

  4. ஒரு திடல் ; விளையாடுபவர்கள்தான் இடம் மாறி கொண்டார்கள்
    மிகுந்த கௌரவத்தினுடனும் அன்புடனும்

உரையாடலுக்கு

Your email address will not be published.