/

அலைதலும் அடையாளச் சிக்கலும்: பவனீதா லோகநாதன்

இந்த உலகம், நிலமாக இருந்தபோது சகலருக்குமானதாக இருந்தது. தேசங்களாக மாறியபோது நாம் எல்லைகளுக்குள் சிறைப்படுத்தப்பட்டோம். யார் எங்கு வாழவேண்டும், எங்கு நடமாடவேண்டும்  என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. அமைப்புகள், விதிமுறைகள், ஆவணங்கள், உரிமைகள் என்று சுருங்கிப்போன மனிதவாழ்வை நினைத்து எனக்கு எந்தப்பெருமையும் இல்லை. இன்னும் சொல்லப்போவதானால் எந்த உணர்வும் இல்லை.

இத்தகைய சூன்யவெளிக்கு எல்லை என்பது எங்கிருக்கிறது?

1

Frankfurt விமான நிலையம்.

வரிசையில் நின்றிருந்தேன். என் விமானத்திற்கான நேரம் நெருங்கிவிட்டதால் எனக்குள் மெல்ல பதற்றம் ஆரம்பித்தது. வரிசை மெல்ல நகர்ந்தது. ஒரு வழியாக எனது இடம்வந்ததும் நிம்மதியுடன் அதிகாரிகளை நோக்கி எனது ஆவணங்களை சமர்ப்பித்தேன். இருவரும் என் ஆவணங்களை சரிபார்க்க ஆரம்பித்தனர்.

என் ஆவணங்களை பார்த்தவாறே “உங்களை  நாங்கள் அனுமதிக்க முடியாது, விசாரிக்க வேண்டும். இப்படி நில்லுங்கள். மற்றவர்களை அனுப்பிவிட்டு விசாரிக்கின்றோம்” என்றார்.

“என்ன பிரச்சினை…சகல ஆவணங்களும் இருக்கிறது தானே?”

“உங்கள் மீது சந்தேகமாக இருக்கிறது, உங்களை அனுப்ப முடியாது. ஏற்கனவே உங்களை போன்ற இலங்கை தமிழர்கள் சட்ட விரோதமாக நுழைகின்றனர்.  உங்களை போன்றவர்கள் எங்கள் நாட்டில் நுழைவதை அனுமதிக்க முடியாது” அதிகாரி கண்டிப்புடன் சொன்னார்.

எனக்குள் கலவரம் ஏற்பட்டாலும் சமாளித்துகொண்டு தைரியமாகப் பேசினேன். “நான் சுற்றுலாப் பயணி இல்லை. பெர்லின் திரைப்பட விழாவுக்கு berlinale talents க்கு தேர்வு செய்யப்பட்டு வந்திருக்கிறேன். அவர்கள் எனக்கு கொடுத்த ஸ்பொன்சர் கடிதம் அந்த ஆவணங்களில் இருக்கிறது. பயிற்சி முடிந்ததும் நான் எனது நாட்டுக்கு திரும்பி விடுவேன்”

“அவர்கள் கடிதம் கொடுத்தால் நாங்கள் அனுப்பிவிட வேண்டுமா? அதெல்லாம் முடியாது. இது என்ன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 400 யூரோக்கள் தருவதாக இருக்கிறது. எங்கள் நாட்டு பணத்தை உங்களுக்கு நாங்கள் ஏன் தரவேண்டும்? உங்களுக்கெல்லாம் தர வேண்டிய அவசியம் இல்லை” அதிகாரி கோபத்தில் கத்த ஆரம்பித்தார்.

“நான்  சில லட்சங்கள் செலவு செய்து இங்கு வந்திருகின்றேன். அவர்கள், உணவுக்கும் போக்குவரத்துக்கும் சிறு உதவித் தொகைப்போல வழங்குகின்றனர். அதை நாங்கள் கேட்கவில்லை. அவர்களாக வழங்குகின்றனர். ஏன் வழங்க வேண்டும் என்று நீங்கள் அவர்களிடம் கேளுங்கள்” என்று சொன்னேன்.

“இரண்டு அதிகாரிகளும் ஜேர்மனிய மொழியில் பேச ஆரம்பித்தனர். என்ன சொல்கிறார்கள் என்று புரியாத நான், எனக்கு ஜேர்மனிய மொழி தெரியாது. ஆங்கிலத்தில் சொல்லுங்கள். எனது விமானத்திற்கான Gate open செய்து விட்டனர். எனக்கு விமானம் தவற விடப்பட்டால் சிரமமாகிவிடும். தயவு செய்து ஆவணங்களை பாருங்கள். எல்லாமே சரியாக இருக்கிறது” என்று சொன்னேன்.

“விமானம் கிளம்புவது எங்கள் பிரச்சினை இல்லை. இலங்கையர்கள்  எங்கள் நாட்டில் நுழைந்து சட்டவிரோதமாக குடியேறுவது வழக்கமாகிவிட்டது. இப்படி ஏதாவது ஒரு காரணத்தில் நுழைந்து, திரும்பி போகாமல் தங்கிய பலரை எங்களுக்கு தெரியும். உங்களை எல்லாம் உள்ளே விடாது நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்” என்றார்.

விசாரணைக்காக நான் நிற்கவைக்கப்பட்டேன். வரிசை முழுவதுமாக முடிந்து மற்ற பயணிகள் கிளம்பி சென்றனர். எனது விமானம் புறப்படும் நேரம் முடிந்து 5 நிமிடங்கள் ஆகியிருந்தது. நான் எப்படியாவது பெர்லின் போக வேண்டும் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவேண்டும். பதற்றபடாமல் இதை சமாளி என்று எனக்கு நானே நம்பிக்கையூட்டிகொண்டேன்.

எனக்கான விசாரணை ஆரம்பமானது. எவ்வளவு சொல்லியும் அதிகாரிகள் கேட்பதாக இல்லை. ஒரு கட்டத்தில், ஒரே ஒருமுறை பெர்லின் திரைப்படவிழா berlinale talents அமைப்புக்கு பேசிப்பாருங்கள். அவர்களிடம் என்னை பற்றி விசாரியுங்கள் என்று சொன்னேன். நீண்ட நேரமாகப் பேசிய பின்னர் திரைப்பட விழாவுக்கு அழைப்பெடுத்தார். அவர்கள் எனது தகவல்களை உறுதிப்படுத்தினார்கள். ஆனாலும் அதிகாரிகள் என்னை அனுப்ப முடியாது நான் சட்டவிரோதமாக தங்கிவிடுவேன் என்று திரும்ப திரும்ப சொன்னார்கள். என்னை திருப்பி அனுப்புவதற்காக எழுதுகையில் மீண்டும் berlinale talents நிர்வாகத்திலிருந்து அழைப்பு வந்தது. நீண்டநேரம் அவர்களோடு பேசிய பின்னர் அதிகாரி மீண்டும் எனது ஆவணங்களை எடுத்து சரிபார்த்தார். மிக கூர்மையான பார்வையோடு அவற்றை நீண்ட நேரம் திரும்ப திரும்ப பார்த்தவர், கண்களில் மகிழ்ச்சியோடு “உங்களுக்கு, நாங்கள் வழங்கிய கால அளவில் 7 மணிநேரம் overstay ஆகிறது. அந்த நேரம் விமான நிலையத்தில் இருந்தாலும் நீங்கள் நாட்டை விட்டு தாண்டமாட்டீர்கள். ஆகவே உங்கள் டிக்கட்டை மாற்றி ஒரு நாள் முன்னரே கிளம்ப வேண்டும். இல்லையேல் overstay அடித்து இனி இந்த நாட்டில் நுழைவதற்கு பூரணமாக தடைவிதித்து அனுப்புவோம்” என்று ஏளனப் பார்வையோடு சொன்னார்.

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒட்டுமொத்த சேமிப்பையும் பயன்படுத்தித்தான் இங்கு வந்தேன். கையில் பணமில்லாத நிலையில் என்ன செய்வது என்று புரியவில்லை. பரவாயில்லை ஏதாவது தீர்வுகள் இருக்கும். இப்போது பெர்லின் போகவேண்டும் அதுதான் முக்கியம் என்று முடிவெடுத்தேன். “சரி நான் டிக்கெட் மாற்றுகிறேன், ஒரு நாள் முன்னரே கிளம்புகிறேன். தற்போது என்னை அனுமதியுங்கள்” என்று உறுதியான குரலில் சொன்னேன். அதிகாரி எனது கடவுச்சீட்டில் அனுமதி முத்திரை வழங்க நான் உள்ளே சென்றேன். எனது விமானம் சென்று விட்டதால் அங்கிருக்கும் எனது விமானத்துக்கான வாடிக்கையாளர் சேவையை அணுகி விசாரணை காரணமாக எனது விமானத்தை தவறவிட நேர்ந்த கதையை சொல்லி, இன்னொரு விமானத்தை பதிவு செய்ய  என்னிடம் பணம் இல்லை ஏதேனும் உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன்.

அந்த பெண்மணிக்கு என்மீது பரிதாபம் ஏற்படவே விமானப்பட்டியலைப் பார்த்து அடுத்த விமானத்தில், எனக்கு ஓர் இருக்கையை கொடுத்தார். திரைப்பட விழாவிற்குச் செல்லுங்கள் என்று வாழ்த்தி அனுப்பினார். அடுத்த விமானத்தில் பெர்லின் வந்துசேர்ந்தேன். விமானம் மாறியதால் எனது பைகளை தேட முடியவில்லை. ஒரு நாள் முழுக்க காத்திருந்து கிடைக்காது போக, கடிதம் எழுதிகொடுத்துவிட்டு கிளம்பினேன். சப்பாத்துகள், குளிருக்கான ஆடைகள், மாற்று துணி என எதுவுமே இல்லாது எப்படி சமாளிக்கப்போகிறேன் என்ற கேள்வி எழுந்தது. சரி சமாளிப்போம் என்று முடிவெடுத்து திரைப்பட விழாவின் சேவை வாகனத்தில் ஏறினேன்.

2 நாள் பயணமும் அலைச்சலும் என்னை சோர்வடைய செய்ததால் களைப்புடன் இருக்கையில் சென்று அமர்ந்தேன். ‘வாழ்க்கை ஏன் இப்படி அலைக்கழிக்கின்றது. எனக்கு எதற்கு இன்னொரு நாடு? வாழ்கிற நாட்டில் நான் புலம்பெயர் இனமாக தானே இருக்கிறேன். 5 தலைமுறையாக வாழ்ந்தாலும் என் பள்ளியில், பணியிடத்தில், வேறு இடங்களில் நாங்கள் குடியேறியவர்கள், எங்களுக்கு எமது நாடு சொந்தமில்லை என்று திரும்ப திரும்ப அறிவுறுத்தப்படுகின்றது. அந்நிய இனமாகத்தான் நடத்தப்பட்டிருகின்றோம்.  இவங்க சட்டவிரோதமா குடியேறும் போது யாரும் நிறுத்தி வச்சு கேள்வி கேட்கிறது இல்ல. என்னை மாதிரி ஒருத்தி வெளிநாட்டுக்கு விண்ணப்பிச்சா, நம்பிக்கை இல்லை நாணயம் இல்லை என்று பேசுறது. ஐஸ்லாந்து நாடு என்னோட விசாவை  நிராகரிச்சது இந்த காரணத்தை சொல்லித்தான். லண்டனில் நடந்த பயிற்சிக்கு போனபோதும் இதே போல கடுமையான விசாரணைகள் இருந்ததன. விசாரணை முடிந்து நான் தான் கடைசியா விமானம் ஏறினேன். இங்க என் விமானமே போயாச்சு. சொந்த நாட்டிலும் மற்ற நாட்டிலும் இப்படி நடத்தப்படுவது எப்ப நிற்குமோ புரியல. ஆனால் இதை மாற்றவேண்டும். காலம் நிச்சயம் என்னை மாற்ற வைக்கும்” என்று என்னை நானே ஆற்றுப்படுத்திகொண்டேன்.

வாகனம் கிளம்பியது. கார் கண்ணாடி ஜன்னல் வழியே வானத்தை பார்த்தேன். நிலம் தான் வேறு வானம் எல்லாருக்கும் ஒன்றுதான் எனத்தோன்றியது. வானில் மழை பெய்வதற்காக கருமேகங்கள் திரள ஆரம்பித்தன.

தைவானில் இறையாண்மைக்கு கட்டுப்பட்டு வளர்க்கப்பட்டவன் நான். திரையரங்கில் தேசியகீதத்திற்கு எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டமிருகிறது. இன்றைய இளைஞர்கள்அதனை அடக்குமுறையாக எதிர்கின்றனர். அவர்களோடு எதிர்த்து நிற்க பிரியப்படுகிறேன். ஆனால் அதை செய்ய முடியவில்லை ஒவ்வொருமுறையும் குற்றவுணர்வு என்னை ஆட்கொள்கிறது. அதனால்  படம் ஆரம்பித்து பத்துநிமிடம் கழித்து திரையங்கில் நுழையும் வழக்கத்தை கடைபிடிகின்றேன். தேசிய விழுமியத்தை புகட்டி புகட்டி வளர்த்த ஆசிய குடும்ப அமைப்பு, அரசியல் சூழல் என்பன நம் சுயத்தை சிதைக்கிறன

2

வானில் மழை பெய்வதற்காக கருமேகங்கள் திரள ஆரம்பித்தன.

Konzerthaus Berlin கட்டிடம் மிகக் கம்பீரமாகத் தெரிந்தது.  இந்த இடத்தில்தான் இயக்குனர் Ai Weiwei,  14,000 Life jacketsகளை தூணில் கட்டி புலம்பெயர்பவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றார்.

Ai Weiwei- ஒரு திரைப்பட இயக்குனர் என்பதை விட திரைப்பட செயற்பாட்டாளர். சீனாவில் கலகக்காரராக புகழ்பெற்றவர் நான்கு வருடம் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். அதன் பிறகு ஜெர்மனிக்கு வந்தவர். பெர்லின் திரைப்படக் கல்லூரியில் பேராசிரியராக கடமையாற்றிகொண்டே தனது செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

அமெரிக்கவிலிருந்த போது தனது New York நகர அனுபவங்களை ‘’New York also very lonely city. There wasn’t always happy. I had no money I hardly speak English. It was pity hopeless” என்று பதிவு செய்துள்ளார். பரபரப்பான நகரத்தை அவர் விபரித்தவிதம்  புலம்பெயர் மனநிலையின் வெளிப்பாடாகவே அமைந்தது. சொந்த நாட்டில், பல இன்னல்களுக்கு உள்ளானவர், ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த பின்னர் திருப்தியடைய  முடியவில்லை.

உலகம் முழுவதும் 65 மில்லியன் மக்கள் சொந்த நிலத்திலிருந்து அகற்றப்பட்டும் அகன்றும் அகதிகள் என்ற பெயரில் புலம்பெயர்பவர்களாக இருப்பதை கண்டு மனம் வருந்தியவர். அதனை பதிவு செய்ய எண்ணி ஆவணப்படம் எடுக்க முடிவு செய்தார். 23 நாடுகளில் 40 முகாம்களை பதிவு செய்து உருவானது “Human Flow” ஆவணத்திரைப்படம்.

Human Flow

கடல் வழியாக ஐரோப்பா வருபவர்கள்,  ஆப்கானில் படிக்க முடியாது டெண்டில் வாழும் சிறுவர்கள், ஒரு பொட்டலத்தை போல கட்டி அனுப்பப்படும் கைக்குழந்தைகள் என படம் முழுவதும் அவர் காட்டும் மனிதர்களின் நிலை மனதை ரணமாக்கக் கூடியவை. ஆரம்பத்தில் இத்தகைய மக்களை அனுமதித்த ஜேர்மனி, ஒருகட்டத்தில் தடுப்பு வேலியிட்டு அனுமதிக்க மறுத்தது. அந்த தடுப்பு வேலிக்கு பின்னால், 13,000 மக்கள் காத்திருக்கின்றனர். சிறிய அளவு உணவோடு தினம் தினம் போராடவேண்டிய நிலையில் மக்கள் காத்திருக்கின்றனர். ரயில் நிலையத்தில் வசிக்கும் ஒரு பெண்மணி, “ஒவ்வொரு முறையும் ரயிலை பார்கையில் என்று இதில் பயணித்து நாட்டுக்குள் போவோம் என்று ஏக்கமாக இருக்கின்றது” என சொல்லும் போதே அவரது குரல் உடைகின்றது. தேசங்கள் தோறும் வெவ்வேறு விதமான கதைகள் படம் முழுவதும் தொடர்கின்றன. இந்த ஆவணப்படத்தில் மனிதர்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் சட்டென்று மிருகக்காட்சி சாலையில் அடைக்கப்பட்ட புலம்பெயர்ந்த புலியை காட்டுகின்றனர்.  புலி காட்டின் அரசன். அது இல்லாவிட்டால் இயற்கை சமநிலை மாறும். அதை அடைத்து வைத்து அகதியாக்கும் அணுகுமுறையை பதிவு செய்ய எண்ணினேன். அதனால்தான் புலியை காட்சிப்படுத்தினேன்” என்று இயக்குனர் தெரிவித்தார்.  அந்தக் கட்டத்தில் இந்த உலகம் எங்களுக்கு மட்டுமானதல்ல. பிற உயிர்களும் பிற உயிர்களுக்கும் உரிமை உண்டு  அவை எங்களால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு புலம்பெயர்ந்து கொண்டிருகின்றன என்று புரிந்தது.

இத்தகைய விழிப்புணர்வு மேற்கொள்ளும் பெர்லினில்தான், எனக்கு நுழைவு அனுமதி வழங்க மாட்டோம் என்று அந்த அதிகாரி சத்தம் போட்டார்.

நினைக்கையில், எனக்குள் வழக்கம்போல வெறுமை குடிகொண்டது. எனது சிந்தனைகளை மழைத் தூறல்கள் கலைத்தன. மழைக்கு ஒதுங்க  பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன்.

3

மழைக்கு ஒதுங்க  பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். பேருந்து இருக்கையில் அமர்ந்துகொண்டு தூறல் விழுவதை கவனிக்க ஆரம்பித்தேன். சற்று நேரத்தில் இடப்புறம் திரும்பி பார்த்தேன். பக்கத்து இருக்கையில் அந்த மனிதர் அமர்ந்திருந்தார். வெறித்த பார்வையுடன் பேசத்தொடங்கினார்.

மலேசியாவின் சைனா டவுனின் Petaling Street பேருந்து நிலையம்.

புன்னகையோடு பேச்சை ஆரம்பித்தார். அவர் ஒரு அமெரிக்கர் என்பதை அவருடைய ஆங்கிலம் உணரவைத்தது. தான் ஒரு இஸ்லாமியன் என்றும் வங்கி ஊழியன் என்றும் கூறினார். அமெரிக்காவில் தன்னால் வசிக்க முடியவில்லை, நிறைய பிரச்னைகள் இஸ்லாமிய நாட்டுக்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்து மலேசியா வந்துவிட்டதாக கூறினார். சொல்லும்போதே குரல் தளர்ந்துவிட்டது. அதன் பிறகு அவர் எதுவும் பேசவில்லை .

எதனால் புலம்பெயர்ந்தீர்கள் என்று நானும் கேட்கவில்லை, அவரும் சொல்லவில்லை. எங்களுக்கிடையில் மிக நீண்ட மௌனம் நிலவியது.

என்ன நடந்தாலும் மனிதர்கள் வாழ்கின்றார்கள், வாழ்ந்து முடித்துவிட விரும்புகின்றார்கள். Survival என்பது மனிதர்களை எத்தனை இன்னல்களை தாண்டி இடம் பெயர்ந்து, புலம்பெயர்ந்து வாழச் செய்து விடுகிறது. என் நண்பன் அடிக்கடி சொல்வான். ஒரு நாளின் ஆகப்பெரும் கஷ்டங்கள் நிகழ்கையில் கடைசி நம்பிக்கையாக சொல்லிகொள்வேன் ‘இந்த நாள் நிச்சயம் விடியத்தான் போகிறது’ என்று.

அந்த வார்த்தைக்குள் அசாத்தியமான ஒளி இருப்பதை உணர்கின்றேன். அதை சினிமாவில் எனக்கு உணர்த்தியவர்  Wang Bing.  மிகவும் புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குனர். இவருடைய ஆவணப்படங்களில் Ta’ang உள்நாட்டு யுத்தத்தினால் மியன்மார் – சீன எல்லையில் வசிக்கும் மக்களை பற்றியது. பர்மிய இன சிறுபான்மையினரான தாங் மக்கள், உள்நாட்டு யுத்தத்தால் மியன்மார் – சீன எல்லைக்கிடையில் சிக்கியுள்ளனர். கழிவிரக்கமோ கண்ணீரோ இல்லாமல் நிர்க்கதி நிலையிலும் வாழ்கையை இயல்பாக தொடரும் அந்த மக்களின் அன்றாட செயற்பாடுகளை இந்த படத்தில் பதிவு செய்துள்ளனர்.

Ta ang

இந்த மக்களின் வாழ்வை மூன்று பகுதிகளாக கட்டமைத்துள்ளனர்.  முதலாவது கட்டத்தில்,  ஒரு பள்ளத்தாக்கில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் என்று தங்கள் உணவு தேவையையும் அன்றாட வாழ்வியல் தேவைகளையும் எவ்வாறு நிறைவேற்றிக்கொள்கின்றார்கள் என்பதை நாம் காணமுடியும்.  இரண்டாவது கட்டம், ஒரு விரிவான இரவுநேரத்தை பற்றியது. சலசலப்பு, குடும்ப விஷயங்கள், விமான சத்தம் , குழப்பம் மற்றும் தீப்பிழம்பின் ஓசை என்று அந்த உரையாடல்கள் மிக நீண்டு செல்கின்றன. இறுதிப் பகுதி அந்த மலை சரிவுகளை தாண்டி அவர்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் நகர்வாக அமைந்துள்ளது.

எதிர்காலம் என்பதே நிச்சயமற்றது என்று தெரிந்தும் இவர்கள் வாழ்கின்றனர். அனைத்து பிள்ளைகளும் ஒரே குடும்பமாக வளர்வதையும் கிடைக்கின்ற வளங்களை பகிர்ந்து வாழ்வதும் எது நிகழ்ந்தாலும் தங்களை இழக்காது பயணிக்கும் அந்த மக்களின் வாழ்க்கை பெரும் அமைதியை மனதிற்குள் விதைக்கவல்லது.

மழைத்தூறல் மெல்ல குறைந்தது. அடுத்த நிகழ்வுக்கு நேரம் நெருங்க அங்கிருந்து எழுந்து தெருவில் இறங்கி நடக்கத்தொடங்கினேன்.

4

தெருவில் இறங்கி நடக்கத்தொடங்கினேன். பாதை நீண்டு கொண்டே சென்றது. Google Map பல நேரங்களில் சிக்கல்படுத்தியது. பெர்லின் நகரின் முக்கியமான ஒவ்வொரு இடத்தையும் தேடிச்சென்று பார்க்க ஆரம்பித்தேன்.

Checkpoint Charlie இடத்தை படம் பிடித்துகொண்டிருக்கையில் ஒரு இளம் பெண் வந்தாள். ஐரோப்பியர் இல்லை என்று முகம் காட்டிக்கொடுத்தது. ஒரு தாளினை நீட்டினாள். மாற்றுதிறனாளிகளின் சின்னத்தை கொண்டு ஏதோ ஜே ர்மன் மொழியில் எழுதப்பட்டிருந்தது. மாற்றுதிறனாளிகளுக்கு உதவி செய்யும் விதமாக பணம் சேர்கிறோம் என்றாள்.  5 யூரோக்களை கொடுக்க முயல, 1௦௦ யூரோக்களை தர சொல்லி கேட்டாள். இல்லை என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. எங்கள் நாட்டில் அது பெரிய தொகை. எனக்கு அவ்வளவு தர முடியாது என்று மறுக்க, எழுபது யூரோ  தரச்சொன்னாள். என்னால் அவ்வளவு தர முடியாது என்று மறுக்க அவளது மொழியில் ஏதோ சத்தமாக பேச ஆரம்பித்தாள். என்னை சுற்றி இன்னும் பல இளம் பெண்கள் கூடி விட்டனர். என் கையிலிருந்த பத்து யூரோவை அந்த பெண் பிடிங்கிகொள்ள மற்ற பெண்கள் என்னை சுற்றி வளைத்து திட்ட தொடங்கினார்கள். நான் கூட்டத்தில் சிக்க அந்த பெண் அங்கிருந்து நழுவத்தொடங்கினாள். இவர்களுடன் இருந்தால் என் பணத்தை பறித்துவிடுவார்கள் என்று புரியவே, நான் இந்த பெண்கள் கூட்டத்தை விலத்தி  ஓட  ஆரம்பித்தேன். ஏமாற்றப்பட்ட கோபம் என்னை வதைத்தது. எப்படி இதுபோல ஏமாற்ற மனம் வருகின்றது. அது பிழை இல்லையா? இன்னொருவர் உழைத்த பணத்தை எப்படி அப்பாவிபோல பேசி அடித்து பிடுங்குகின்றனர் என்று மனதிற்குள் திட்டிக்கொண்டேன். 

கோபத்தில் தொடர்ந்து வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.  இன்னொரு இடத்திலும் இதே போன்ற தாளுடன் ஒரு கூட்டம் சுற்றிகொண்டிருந்தது. அவர்களை கவனிக்க ஆரம்பித்தேன். இவர்கள் ஐரோப்பாவிற்கு புலம் பெயர்ந்தவர்களாக இருக்குமோ என்று தோன்றியது. அவர்களது முகம், உடைகள் , பேச்சு முறை எல்லாம் என்னை யோசிக்க வைத்தது . வருமானத்திற்காக இப்படி நடக்கின்றனர் போல என்று தோன்றியது. இதுபோன்ற பெரிய நகரத்தில், இவர்கள் குடிவருவதன் மூலம் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். நகரம் என்பது நமக்காக என்றுமே நிற்காது. அதற்கு நாம் ஒரு பொருட்டே அல்ல என்ற போது இவர்களுக்கான தேவைகளை அது கவனிக்காது. வேலை இன்றி இதுபோன்ற வழிமுறைகளை நாட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்ககூடும். இதனால்தான் புகலிடம் கோருபவர்களை ஐரோப்பாவை சுற்றியுள்ள சிறு தீவுகளில் குடியேற்றும் வழமை ஏற்பட்டது போலும். “Fire at sea’’ படத்தில் அதனை பதிவு செய்திருந்தனர்.  இத்தாலியின் அருகிலுள்ள Lampedusa தீவில் வடக்கு ஆபிரிக்கர்களை குடியேற்றுகின்றனர். அந்த தீவில் வாழ்பவர்களையும் கடல்வழியே வருபவர்களையும் அதனை ஒழுங்கமைக்கும் முகாமை சேர்ந்தவர்களையும் இந்த படம் சித்தரிக்கின்றது. கடல் வாழ்க்கையும், ஒரு சிறுவனின் மனநிலையும் மையப்படுத்தி நகரும் இந்த படத்தில் குடியேற்றவாசிகளின் வருகையால் அந்த சமுகத்தில் ஏற்படும் மாற்றத்தையும் உயிர் பிழைத்து வரும் மக்களின் வாழ்வையும் பாசாங்கில்லாது பதிவு செய்திருக்கின்றனர். நீண்ட கடல் பயணத்தின் பின்னர் முகாமுக்கு வரும் ஒருவன் உடல் முழுவதும் ஈரமாகி உள்ளாடையுடன் களைத்துபோய் அமர்ந்திருகின்றான். உயிர் பயம் நீங்கி அவன் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்து அமைதியாவதை படத்தில் பார்க்கலாம். உயிர் மட்டும் எஞ்சியுள்ள நிலையில் அவனது நிம்மதியான மனநிலையை நாம் புரிந்துகொள்ள முடியும்.  வாழ்வதில் இந்த மனிதர்களுக்குத்தான் எவ்வளவு ஆசை?

எனது சிந்தனைகள், என்னை விட வேகமாக பயணித்தன. ஏமாற்றப்பட்ட இயலாமை இருந்தாலும் கோபம் சற்று குறைந்தது. கோபம் குறைய களைப்பு தெரிந்தது.  ஒரு இடத்தில் நின்று கொண்டேன் . வீதிகளை பார்த்தேன். அப்போதுதான் உணர்ந்து கொண்டேன். நான் நீண்ட தூரம் வந்துவிட்டேன், வழி மாறிவிட்டேன் என்று. திரும்பி போக வழி தெரியாது ஸ்தம்பித்து நின்றேன்.

5

திரும்பிப் போக வழி தெரியாது ஸ்தம்பித்து நின்றேன். லண்டன் நகரமே விரைவாக இயங்கிகொண்டிருக்க நான் மட்டும் அதில்  நின்று விட்டது போலிருந்தது. ஒருவரை நிறுத்தி வழி கேட்க முனைந்தால் யாருமே நிற்கவில்லை. நம்மை அலட்சியமாக கடந்து சென்றனர். இன்னொருவரை  நிறுத்தி வழி கேட்டால், இதுகூட தெரியாமலா லண்டன் வந்தீர்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இலங்கையில் எத்தனை வெளிநாட்டவருக்கு நான் வழி சொல்லியிருக்கிறேன். ஏன் இப்படி நடந்துகொள்கின்றனர்? என்று தோன்றியது. தங்கள் நேரத்தை மற்றவருக்காக விரயம் செய்வதை அவர்கள் விரும்பவில்லை என்று புரிந்தது. இன்னொரு நாட்டை சேர்ந்தவர்களை, எங்களை போன்ற ஆசிய கறுப்பு தோலை குறித்து அவர்களுக்கு வேறு அபிப்ராயங்கள் இருக்கக்கூடும் என்று தோன்றியது.

சற்றுதூரம் நடந்து மீண்டும் வழிகேட்க முனைகையில் ஏதோ வித்தியாசமாகத் தெரிய சட்டென்று இரண்டடி பின்னால் நகர்ந்தேன். ஒரு பெரிய கடையின் கண்ணாடியில் எனது விம்பம் தெரிந்தது. ஆனால் அது நான் இல்லை. எனது விம்பத்திற்கு பதிலாக ஒரு நீலக் கோர்ட்டும் சிவப்பு தொப்பியும்  அணிந்த கரடி நின்று கொண்டிருந்தது. இந்த கரடியை எங்கயோ பார்த்திருக்கின்றேனே என்று தோன்ற யோசித்தேன். அந்தக் கரடி விம்பம் என்னை பார்த்து சிரிக்க எனக்கு ஞாபகம் வந்தது. இது Paddington!

Paddington கரடியை திரைப்படத்தில் பார்த்திருக்கின்றேன். இப்போது அந்த கரடியே நான் தான் என்று புரிந்ததும் சிரிப்பு வந்தது. லண்டன் நகருக்கு வந்து எதுவுமே புரியாமல் ஒன்றுமே தெரியாமல் Paddington போலத்தானே நான் அலைந்து கொண்டிருகின்றேன்.

புகலிடம்கோரி வருபவர்களை கழிவிரக்கத்தோடும் வெறுப்போடும் பார்ப்பதை தவிர்க்கவும் பிற இன மக்களை புரிதலோடு அணுகவும் குழந்தைகள் இலக்கியத்தின் கதாபாத்திரமான Paddington உதவியிருப்பதாக தோன்றியது.   இன்று பெரும் பிரச்சினையாக  மாறியுள்ள புலம்பெயர் மக்களின் நிலைக்காக இந்த கதாபாத்திரம் தற்காலத்திற்கு தொடர்ந்து எழுதப்பட வேண்டும் என்று தோன்றியது.

என்னை Paddingtonஆக உணர்ந்த பின்னர் ஏதோ ஒருவித மகிழ்ச்சி உள்ளூர ஏற்பட்டது. அதன் பெரிய கண்களில் நான் என்னை பார்த்தேன்.

சட்டென்று, தூறல் மெல்ல மெல்ல அதிகரித்து மழையாக மாறியது. மழையில் நனையக்கூடாது என்று டாக்ஸியை பதிவு செய்துவிட்டு காத்திருந்தேன்.

6

மழையில் நனையக்கூடாது என்று டாக்சியை பதிவு செய்துவிட்டு காத்திருந்தேன். இரவு நேரம் திரைப்படம் முடிந்து நடந்து செல்வது எனது வழக்கம். இன்று இந்த மழையில் சாத்தியம் இல்லை என்பதால் டாக்ஸியை பதிவு செய்துவிட்டேன்.  டாக்சி வந்தது.  டாக்சியில் ஏற, மீட்டரின்  எழுத்துகள் அரேபிய மொழியைப் போல இருந்ததன. நான் ஆங்கிலத்தில் பேசினாலும் டாக்சி ஓட்டும் மனிதர் அவரது மொழியில் பதில் சொன்னார். டாக்சி நகர ஆரம்பிக்க, என் நினைவுகள் Helmutஐ நோக்கி சென்றது.

Helmut ஒரு டாக்சி ஓட்டுனர். New York நகரத்தில் டாக்சி ஓட்டுகின்றார்.  “Night on Earth’’ திரைப்படத்தில் ஒரு இரவில் 5 நகரங்களின் டாக்சி ஓட்டுனர்களின் கதைகள் காட்டப்படும். அதில் இவரும் ஒருவர்.

Yoyo டாக்ஸிக்காக காத்திருகின்றான். அவனுக்கு Helmut இன் டாக்சி கிடைக்கிறது. யோயோவின் ஆங்கிலத்தையும் அவரால் புரிந்துகொள்ள, முடியவில்லை. கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த அவர் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து வந்துள்ளார். இங்கிருக்கும் வீதிகள் அவருக்கு பழக்கமில்லை. இந்த டாக்சி ஓட்டுவதால் கிட்டும் பணம் தான் அவரது வாழ்வாதாரம் என்ற நிலை. இவருக்கு போகும் வழியை பேசிப் புரியவைப்பதில் அர்த்தமில்லை என்று உணரும் யோயோ அவரை பயணிகள் இருக்கையில் அமரச் செய்துவிட்டு தானே டாக்சியை ஓட்ட ஆரம்பிக்கின்றான். இந்த பயணத்தில் யோயோவின் அமெரிக்க நடைமுறைகளை அவர் ரசிப்பதும் . Helmut என்ற பெயரை ஹெல்மட் என்று யோயோ கிண்டல் செய்வதுமாக அந்தப்பயணம் தொடர்கிறது. இறுதியாக இறங்கும் இடம் வந்ததும் டாக்சிக்கான பணத்தை கொடுத்துவிட்டு அவர் வசிக்கும் இடத்திற்கு எவ்வாறு செல்வது என்று வழியும் சொல்வான். ஆனால் அதை புரிந்துகொள்ள முடியாத Helmut, தப்பான வீதியில் செல்ல ஆரம்பிப்பார். New York என்று கூறியபடியே பயணத்தை தொடர்வார். பயணம் நீண்டுகொண்டே செல்ல குழப்பத்தோடு என்ன செய்வது என்று தெரியாமலே பயணத்தை தொடர்வார்.

இந்த இறுதிக்காட்சி எனக்கு, என்னை நினைவூட்டியது. என் சொந்த நாட்டில் தொடர்பறுந்த ஒருத்தியாகவும் வெளிநாட்டில் அந்நியமாக்கப்பட்டவளாகவும் இருந்திருக்கின்றேன் இருக்கிறேன். Helmut போல வழிதெரியாது பலமணிநேரம் அல்லாடிய இடங்கள் அநேகம் எனலாம்.

சட்டென்று டாக்சி நிற்க, என் நினைவுகளும் நின்றன. பணத்தை கொடுத்து விட்டு இறங்கினேன். வெளியே, மழை இன்னும் நிற்கவில்லை.

7

வெளியே, மழை இன்னும் நிற்கவில்லை. உணகவகத்தில் நுழைந்தேன். மற்ற நாட்டை சேர்ந்த பலர் அமர்ந்திருக்க, நானும் அவர்களுடன் உணவருந்த ஆரம்பித்தேன்.

உணவகத்தில் எமது உரையாடல் தொடர்ந்தது.

“எல்லாம் அந்த ரேசிஸ்ட் அதிகாரியால் வந்தது. அவள் மட்டும் பிரச்சினை செய்யாமல் இருந்திருந்தால் நீ இப்படி immigration departmentக்கு அலையத்தேவை இல்லை. அவள்தான் காரணம், இந்த அதிகாரிகளே இப்படித்தான் மற்றவர்களிடம் நன்றாக பேசுவார்கள். நான் பாஸ்போர்ட் நீட்டினால் அதில் நேபாளம் என்ற பெயரை பார்த்ததும் உடனே குரல் மாறும். ஒரு மாதிரி கீழ்மைப்படுத்துவார்கள். நீ எல்லாம் எங்கள் நாட்டுக்கு வருகின்றாயா என்ற கசப்பு அவர்களிடம் வெளிப்படும். இந்த பிரச்சினை ஓரளவு குறைந்தது நான் UKக்கு குடியேறி UKபாஸ்போர்ட் எடுத்த பின்னர் தான்” என்று நேபாள இயக்குனர் கோபம் அடங்காமல் தவித்தாள்.

“எனக்கும் இதேபோன்ற அனுபவமிருக்கு. நான் ஆப்கான் என்பதால் பலமணிநேரம் விசாரித்தனர். புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்றாலும் பிரச்சினை தீரவில்லை . என் நாட்டில் ஒரு பெண் இயக்குனராக செயற்பட முடியாது. புலம்பெயர்ந்துதான் படங்களை உருவாக்க முடியும் என்ற நிர்பந்தம் இருக்கிறது. அதனால்தான் புலம்பெயர்ந்தேன். உன்னிடம் எங்கள் நாட்டு பணத்தை ஏன் தரவேண்டும் என்று கேட்டாங்களே, அவங்க நமக்கு நிச்சயம் கொடுக்கணும் கொடுத்தே ஆகணும். எங்கள் நாட்டிலிருந்து எத்தனை வருடமா கொள்ளை அடிச்சிருக்காங்க. சுரண்டி பிழைக்கிறாங்க. நாங்கள் புகலிடம் கேட்டால் மட்டும் வலிக்குது. உடனே விரட்டுவாங்க, மறுப்பாங்க. நாங்க அப்படித்தான்  வருவோம். எங்களிடம் அடிச்சி பிடுங்கி சுரண்டி உறிஞ்சி தானே இவங்க  செழிப்பா வாழறாங்க. அதுல எங்களுக்கு உரிமை இருக்கு. நம்ம உரிமையை நாம கேட்கணும்” என்று உறுதியான குரலில் சொன்னாள்.

“என்னோட அனுபவம் கொஞ்சம் வேற, என் கோபம் எல்லாம் என் மீதுதான்” என்று தைவான் தயாரிப்பாளர் பேச ஆரம்பித்தார். “தைவானில் இறையாண்மைக்கு கட்டுப்பட்டு வளர்க்கப்பட்டவன் நான். திரையரங்கில் தேசியகீதத்திற்கு எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டமிருகிறது. இன்றைய இளைஞர்கள்அதனை அடக்குமுறையாக எதிர்கின்றனர். அவர்களோடு எதிர்த்து நிற்க பிரியப்படுகிறேன். ஆனால் அதை செய்ய முடியவில்லை ஒவ்வொருமுறையும் குற்றவுணர்வு என்னை ஆட்கொள்கிறது. அதனால்  படம் ஆரம்பித்து பத்துநிமிடம் கழித்து திரையங்கில் நுழையும் வழக்கத்தை கடைபிடிகின்றேன். தேசிய விழுமியத்தை புகட்டி புகட்டி வளர்த்த ஆசிய குடும்ப அமைப்பு, அரசியல் சூழல் என்பன நம் சுயத்தை சிதைக்கிறன. இதிலிருந்து விடுபட்டு எங்காவது ஒரு மேற்கு தேசத்தை நோக்கி ஓடிவிடத்தோன்றுகிறது. இவர்கள் எப்படி நடத்தினாலும் பரவாயில்லை ஓடிவிடவேண்டும்’‘

“நானும் உன்னைப்போலத்தான் ஈரானிலிருந்து ஓடினேன். அங்கு நாட்டின் சுவர்களை தாண்டி ஒன்றுமறியாத கூட்டம் நம்மை உள்ளே தள்ளுமேயன்றி வளரவிடாது. எனது குடும்பம்  சிறுவயதில் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா சென்றதால்தான் இன்று என்னை தயாரிப்பாளராக அடையாளப்படுத்திக்கொள்ள முடிந்தது”

“என் கதையும் இதேதான். நான் கனடா சென்ற பிறகுதான் என்னால் பாகிஸ்தான் சினிமாவில் நான் இருக்கிறேன் என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள முடிந்தது” அவளது பேச்சை இடைமறித்த மற்ற பாகிஸ்தான் இயக்குனர் “நீங்கள்  சொல்கிற விஷயங்கள் சரிதான். ஆனால் அவற்றை பாகிஸ்தானில் இருந்து செய்வதற்கும் வேறு நாட்டிலிருந்து பாகிஸ்தான் அரசுக்கு எதிராக புரட்சி பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் சொந்த நாட்டிலிருந்து பல பிரச்சினைகளுக்கு மத்தியில் பெண்களின் பாலியல் குரலை பதிவு செய்கிறேன்.  நீங்கள் அந்நிய நாட்டிலிருந்து அரிசயல் பேசுகின்றீர்கள். இது ஒரு வசதியான வழிமுறை” என்றாள்.

“என்னால் எனது நாட்டில் நான் நினைப்பதை செய்ய முடியாது. அச்சுறுத்தல் வந்தது குடியேறிவிட்டேன். இன்று நினைக்கிற படங்களை எடுக்க முடிகிறது. எனக்கு சினிமா எடுக்கணும் அதற்கு நான் உயிரோடிருக்கமில்லையா? நான் நிச்சயம் நாட்டுக்கு திரும்ப மாட்டேன். அங்கு சென்று வாழ துளியும் விருப்பமில்லை. என் முயற்சிகள் தொடரவே செய்யும்’‘ என்றாள் .

என் நிலைப்பாட்டை கேட்டனர், ‘’உங்களை போல எனக்கு காரணங்கள் இல்லை. எங்கள் நாட்டில் அடக்குமுறை, அதிகாரப்படிநிலை என்று எல்லாமே உண்டு. ஆனாலும் வெளிநாட்டுக்கு வரவேண்டும் என்று நினைப்பது பணம் சம்பாதிக்க மட்டும்தான். சில வருடங்கள் வெளிநாட்டில் நன்றாக உழைத்து அந்த பணத்தை எடுத்து வந்து படம் செய்ய வேண்டும் என்று தோன்றியதை தவிர நாட்டை விட்டு புலம்பெயர வேண்டும் என்று தோன்றவில்லை . எங்கள் மக்கள் இன்னும் சொந்த நாட்டில் அரசியல்மயப்படுத்தப்படவில்லை. எங்களை எவ்வாறு அழைப்பது என்பதில் கூட ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. எனது சொந்த நாட்டில் நாங்கள் புலம்பெயர் மக்களாகத்தான் இருக்கின்றோம். எனது நாட்டில் எனக்கும் என் சமூகத்திற்கும் உரிமை வேண்டும். எங்கள் குரல்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறேன்” என்று சொன்னேன். புரிந்துகொண்டார்கள்.

இளம் தலைமுறை இயக்குனர்கள் தனது சுயத்தை தேடி வெளிநாடுகளில் விரும்பி புலம்பெயர விரும்புவது அவரவர் சுய விருப்பம் என்று கடந்து போய்விட முடியாது. இவர்கள் Contemporary Cinemaவில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தோன்றியது.

ஒரு நாட்டில் இன்னொரு சமூகம் வந்து குடியேறுவதால் நிச்சயம் பல மாற்றங்கள் ஏற்படும். அந்த நாடுகளின்  சினிமா சூழலும் படங்களும் நிச்சயம் மாற்றத்துக்கு உள்ளாகும். பாம்பரியம், சுயாதீனம்,பிணைப்பு, பாலியல்,கலை முறைகள் என்று அவற்றில் மாற்றங்களை எதிர்நோக்க எதிர்கால சினிமா தயாராகி விட்டது என்றே தோன்றியது.

எங்களை போல சுயத்தை தேடி பயணிக்கின்ற கூட்டத்தின் சிந்தனைகள் சொந்த நாட்டின் வேர்களை அறுத்து எரிந்து பயணிக்க வல்லவை. அடுத்த பத்துவருட சுயாதீன படங்களில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது புரிந்தது. உலக திரைப்பட மையங்கள், கூட்டிணைவின் மூலம் படங்களை உருவாக்க எங்களுக்கு அறிவுறுத்துவதால் இத்தகைய புலபெயர் மக்களுக்கான படங்களின் சந்தை வாய்ப்பு விரிவடையவுள்ளது. புலம்பெயர்பவர்கள் தங்கள் அரசியலை எதிர்க்கவும்  பாரம்பரியத்தை ஏதோ ஒரு வகையில் பற்றி பிடிக்கவும் முனையும் முரண்பாடான கதாபாத்திரங்களை தரக்கூடும். அதேநேரம் சந்தைவாய்ப்பை கணித்து பாசாங்குமிக்க புலம்பெயர் கருத்தியல் படங்கள் வருவதையும் யாராலும் தடுக்கவே முடியாது என்று தோன்றியது.

எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்காவை களமாகக் கொண்ட Paterson திரைப்படத்தில் அமெரிக்கர்கள் இல்லாத பிற இனங்கள் படம் முழுவதும் வருவதை போல உலகத்தின் எல்லா இடங்களும் மாறினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். மழை இன்னும் அதிகமாக பொழியத் தொடங்கியது.

பவனீதா லோகநாதன்

இலங்கையச் சேர்ந்த சுயாதீன திரைப்பட உருவாக்குனர். இவருடைய By the sea ,Generations ஆகிய குறும்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கின்றன. Generations குறும்படத்திற்கு யாழ்.சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தேசிய குறும்பட விருது கிடைத்திருக்கிறது. Big eyes cinemas என்ற அமைப்பை ஆரம்பித்து சினிமா சார்ந்த களப்பணிகளில் ஈடுபடுகிறார்

1 Comment

  1. வாசிக்கும் போதே அந்த இடத்தையும் அதில் உங்களுக்கு ஏற்பட்டவற்றையும் காட்சிகளால் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

உரையாடலுக்கு

Your email address will not be published.