/

மரணத்தை அனுமதிக்காத எழுத்து! தெளிவத்தை ஜோசப்பின் கதையுலகம்: சுரேஷ் பிரதீப்

பொது வாசிப்பில் இருந்து விலகி தீவிரமான இலக்கிய படைப்புகளுக்குள் நுழையும் ஒரு வாசகனுக்கு ‘ஏன் நவீன இலக்கியம் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது?’ என்ற கேள்வி எழுவது இயல்பே. நவீன ஆக்கங்களின் சிக்கல் தன்மைக்கு அவற்றுக்கு பின்னிருக்கும் ‘ஆசிரியர்’ என்ற ஒற்றை மனிதரின் குரல் காரணமாகிறது. ஒரு எழுத்தாளன் தன்னுடைய பிரத்யேகமான வாழ்க்கை சார்ந்த அடைதல்களை மொழிக்குள் கொண்டுவர முயலும்போது ஏற்கனவே புழங்கிப் புழங்கி தட்டையாகிப் போய்விட்ட மொழி அதற்கு உதவுவதில்லை. மொழியில் புதிய சாத்தியங்களை எழுத்தாளர் தனக்கென உருவாக்கிக் கொள்கிறார். இந்தத் தனித்தன்மை வாய்ந்த மொழிநடைதான் இலக்கியத்திற்குள் புதிதாக நுழையும் ஒரு வாசகனுக்குத் தடையை அளிக்கின்றது. எதிர்விளைவாக வாசிப்பு கூடக்கூட சரளமும் எளிமையும் வெளிப்படும் மொழிநடை ஒரு இலக்கிய வாசகரின் ஆர்வத்தைத் தூண்டாமல் போய்விடுகிறது. ஆனால் சிக்கலான மொழி மற்றும் வடிவத்துக்கு இணையாகவே நேரடியான மொழியும் வடிவமும் இலக்கியத்தில் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்திருக்கின்றன. ஆரோக்கிய நிகேதனத்தை சிக்கல்தன்மைக்கு உதாரணமாகக் கொண்டோம் என்றால் மண்ணும் மனிதரும் எளிமைக்கு உதாரணமாகிறது. இந்த இரட்டைத்தன்மையை கூர்ந்து நோக்கினால் உண்மை என்கிற ஒன்றை, எழுத்தாளர் எவ்வாறு அணுகுகிறார் என்பதுடன் இந்தத் தன்மை தொடர்பு கொள்வதைக் காணலாம். உண்மை சிக்கலானதாக பல படிகள் கொண்டதாக சொல்லப்படும் ஆக்கங்கள் சிக்கல் தன்மையையும், உண்மை தன்னை மிக நேரடியாக வெளிப்படுத்தும் இயல்புடையது என்று சொல்லும் ஆக்கங்கள் எளிமையையும் தேர்ந்தெடுப்பதை அவதானிக்கலாம். (இது ஒரு பெரும்போக்கான வகைப்படுத்தல் மட்டுமே)

நாமிருக்கும் நாடே

உண்மை சிக்கலானது என்று நம்பும் ஆக்கம் மையமற்றதாகவே இருக்க இயலும். நிறுவுதலை விட விசாரித்தலே அதன் புனைவுத் தருக்கத்தை கட்டமைக்கும். மாறாக உண்மை நேரடியாக வெளிப்பாடு கொள்வது என்று சொல்லும் ஆக்கங்களின் பரிமாணம் எளியதாக இருக்கிறது. கோட்பாட்டுச் சார்போ சித்தாந்தச் சாய்வோ கொண்ட ஆக்கங்களை இந்த வகைமையில் சேர்க்கலாம். ஆனால் சித்தாந்த சாய்வினை வெளிப்படுத்தும் ஆக்கங்கள் தொடர்ந்து வாசிக்கப்படுவதில்லை. அவற்றின் ஆயுள்காலம் குறுகியது. படைப்புச் செயல்பாட்டின் அடிப்படையாக சிந்தாந்தச் சார்பைக் கொண்டிருந்தாலும் மேலதிகமாக ஒரு படைப்பாளியின் வாழ்க்கை நோக்கும் தேடலும் வெளிப்பட்டிருக்கும் படைப்புகளே தொடர்ச்சியை உருவாக்குகின்றன. ஜெயகாந்தனின் வாழ்க்கை நோக்கினை கட்டமைப்பதில் முற்போக்கு மனிதாபிமானவாதத்துக்கு பங்கு உண்டென்றாலும் அதைத் தாண்டிச் சென்று ஜெயகாந்தன் அடையக்கூடியவை அவருடைய ஆக்கங்களின் முக்கியத்துவத்தை உருவாக்குகின்றன.

மலையக எழுத்தாளரான தெளிவத்தை ஜோசப்பையும் அடிப்படையில் முற்போக்கு மனிதாபிமானவாதக் கருதுகோளின் தாக்கம் உள்ளவர் என்று வரையறுக்க இயலும். அரசாங்கத்தால் வதைக்கப்படும் எளியோர்தான் தெளிவத்தை ஜோசப்பின் மீன்கள் கதைத் தொகுப்பிலும் குடைநிழல் நாவலிலும் பாத்திரங்களாக உள்ளனர். அவர்களுடைய வலியைப் பேசிய விதத்தில்தான் தெளிவத்தை ஜோசப்பின் ஆக்கங்கள் முற்போக்கு மனிதாபிமானவாதம் என்ற எல்லையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கலையம்சம் அடைகின்றன.

கடந்த முப்பதாண்டு காலத்தில் எழுதப்பட்ட ஈழத்தின் முக்கியமான ஆக்கங்கள் அனைத்திலும் போரும் அரசாங்கமும் அவை மனிதர்களிடத்தில் உருவாக்கும் சிதைவுகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. கலாமோகன் , ஷோபாஷக்தி போன்ற முன்னோடிகளின் ஆக்கங்களில் வெளிப்படும் பிறழ்வும் இறுக்கமும் பகடியும் ஒரு வகையில் கடந்த நாற்பதாண்டுகால ஈழ வரலாற்றை பார்க்கும்போது புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஈழ இலக்கியங்கள், பிற பிரதேசங்களின் தமிழ் வாசக மனதில் உருவாக்கும் அமைதியின்மைக்கு உலகின் வேறெந்த தமிழர் வாழும் பகுதியும் ஈழம் அளவுக்கு போர்களையும் அது சார்ந்த புலப்பெயர்வுகளையும் எதிர்கொண்டதில்லை என்பது ஒரு காரணமாகிறது. இன்னும் அரை நூற்றாண்டு காலமாவது போரின் நினைவுகள் நேரடியான உணர்ச்சிகளாக ஈழப்படைப்புகளில் வெளிப்படலாம். அது தவிர்க்க முடியாததும் கூட. ஆனால் போர்குறித்தும் புலப்பெயர்வு குறித்தும் ஒரு ஆக்கம் பேசுவதாலேயே கவனம் பெற்ற கலையம்சம் குறைந்த ஆக்கங்களும் இருக்கின்றன.

தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்

இந்த தடத்தில் இருந்து விலகி ஈழத்தை வேறொரு கோணத்தில் சித்தரிப்பவர்களில் அ.முத்துலிங்கம் முக்கியமானவர். தெளிவத்தை ஜோசப்பின் ஆக்கங்களும் ஈழத்தின் பொதுவான உணர்வுச்சூழலில் இருந்து பெரும்பாலும் விலகியே பயணிக்கின்றன. இந்த விலகலுக்கு இரண்டு காரணங்களைச் சொல்ல முடியும். ஒன்று தெளிவத்தை ஜோசப் இலங்கையில் போர்ச்சூழல் உருவாவதற்கு முன்னிருந்தே எழுதி வருகிறார். அ.முத்துலிங்கத்திற்கும் இது பொருந்தும். மற்றொன்று ஈழத்தமிழர் என்ற அடையாளத்துக்குள் மலையகத்தவரான தன்னை எவ்வாறு பொருத்திக் கொள்வது என்ற கேள்வியும் ஈழ எழுத்தின் பொதுத்தன்மையில் இருந்து ஜோசப்பை விலக்குகின்றன.

தெளிவத்தை ஜோசப் புனைவுலகை கட்டமைக்கும் பண்புகளாக மூன்று விஷயங்களை குறிப்பிடலாம். ஒன்று குறைத்துச் சொல்லுதல்: தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதைகள் மிகக் குறைந்த பக்களிலேயே எழுதப்படுகின்றன. மிகச் சரளமாக வாசித்துச் செல்லும்படியான மொழியையே பயன்படுத்துகிறார். ஆனாலும் மிகக் குறைந்த பக்கங்களிலேயே முழு வாழ்க்கைச் சூழலையும் மிகத் துல்லியமாக தெளிவத்தை ஜோசப் சித்தரித்துச் சென்றுவிடுகிறார். குடைநிழல் நாவலில் சிறையில் இருக்கும் கதைசொல்லி தன் அம்மாவின் கடந்தகாலத்தை நினைத்துப் பார்ப்பதாக ஒரு அத்தியாயம் வருகிறது. தோட்டக் கங்காணியான அவன் தந்தை, தோட்ட முதலாளியான ஆங்கிலேயன், அப்பாவின் நம்பகத்தன்மை வாய்ந்த கையாள், தோட்டத்தின் நிலை என அந்த ஒரு அத்தியாத்திற்குள்ளாகவே ஒரு முழுமையான சித்தரிப்பைக் கொடுத்து விடுகிறார்.

/ “நீ ஆயிரம் காரணம் சொல்லு நான் நிறுக்கப் போறதில்லை”இது கணக்கப் பிள்ளை

“ஆளுங்க எல்லாம் குளிர் பிடிச்சு செத்தா?”

“மண்ணை ஈரமாத்தான் இருக்கு…குழி வெட்ட லேசாத்தான் இருக்கும்”/

கத்தியின்றி ரத்தமின்றி சிறுகதையில் இடம்பெறும் இதுபோன்ற கூர்மையான பல வரிகளை மீன்கள் சிறுகதைத் தொகுப்பு முழுக்க மீண்டும் மீண்டும் அடையாளம் காண முடிகிறது.

இரண்டாவதாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சம் இக்கதைகளில் இடம்பெறும் சிங்களர்கள். இருப்பியல், பயணம் போன்ற கதைகள் சிங்களப் பெரும்பான்மைவாதம் தமிழர்கள் மேல் கவிந்திருப்பதை ஆர்ப்பட்டமின்றி சொல்லிச் செல்கின்றன. அதேசமயம் குடைநிழல் நாவலில் கதைசொல்லிக்கு உதவும் சிங்கள முஸ்லிம் வீரன் இயல்பாகவே ஒரு நாயகத்தன்மையை அடைந்துவிடுகிறான். இக்கதைகளில் பெரும்பாலான முக்கிய பாத்திரங்கள் சிங்களம் அறிந்தவர்களாகவும் சிங்களர்களுடன் உரையாடக்கூடியவர்களுமாகவே காட்டப்படுகின்றன. குடைநிழல் நாவலில் கதைசொல்லிக்கு அவன் மகனை தமிழ்ப் பள்ளியில் சேர்ப்பதா சிங்களப்பள்ளயில் சேர்ப்பதா என்ற குழப்பம் எழுதுகிறது. இலங்கையை முழு மனதோட ஆதரிக்க முடியாத தன்னுடைய அம்மாவை கதைசொல்லியின் மகன் வெறுக்கிறான். கிரிக்கெட் போட்டியின் போது கூட தமிழகத்தில் இருந்து வந்தவளான அவன் தாய் இலங்கையை ஆதரிக்காமல் இந்தியாவை ஆதரிப்பது அவனைத் தொந்தரவு செய்கிறது. சிங்கள அடையாளம் ஒரு நிழல் போல இவர் கதைகளை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மீன்கள்

மூன்றாவதாக இக்கதைகளில் மிக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுள்ள மார்க்ஸிய வாழ்க்கை நோக்கைச் சொல்ல வேண்டும். மழலை, அம்மா என ஒரு சில கதைகளைத் தவிர்த்து பிற எல்லாக் கதைகளின் பின்புலமாகவும் தனிமனிதக் கரிசனமும் அதற்குப் பின்னிருக்கும் அதிகாரம், ஆளுதல், ஆளப்படுதல் என்பன சார்ந்த ஆசிரியரின் பார்வையுமே வெளிப்படுகின்றன. பெரும்பாலான முற்போக்கு ஆக்கங்கள் தனித்தன்மையை எப்புள்ளியில் இழக்கின்றனவோ அதற்கு முந்தைய புள்ளிவரை நெருங்கிப் போகிறவையாக தெளிவத்தை ஜோசப்பின் கதைகள் உள்ளன. மீன்கள் தொகுப்பில் உள்ள கதைகள் முதலினைக் கையில் வைத்திருப்பவர்களால் வதைக்கப்படுகிறவர்களைப் பேசும் கதைகளைக் கொண்ட தொகுப்பு என்றால் குடைநிழல் அதிகாரத்தால் துன்புறுத்தப்படுகிறவர்களின் கதையாக விரிகிறது.

இப்புனைவுகளில் முதலாளித்துவம், பேரினவாதம் இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகளை நம்மால் காண முடிவதில்லை. மீன்கள் , மனிதர்கள் நல்லவர்கள், சிலுவை போன்ற கதைகள் சுரண்டலை பாதிக்கப்படுகிறவர்களின் பார்வையில் இருந்து பேசுகின்றன. பாவ சங்கீர்த்தனம் சுரண்டுகிறவர்களின் வாழ்க்கையின் வியர்த்தத்தை பேசுவதாக அமைகிறது. உழைப்புச் சுரண்டல் என்பது நிரந்தரத் தன்மை கொண்டதாக நீடித்திருப்பதையும் அதற்கு எதிராக எழும் லட்சியவாதம் என்பது பெயரளவிலான ஆசுவாசத்தை மட்டுமே உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகிறவனுக்கு கொடுக்க இயலும் என்பதை சற்று கசப்பான பகடி தொனிக்க கத்தியின்றி ரத்தமின்றி கதை பேசுகிறது.

குறைத்துச் சொல்லல், சிங்களப் பாத்திரங்களை புனைவுகளில் உலவவிடுதல், கோட்பாட்டுச் சார்பு என்ற மூன்று அம்சங்களையும் கடந்து தெளிவத்தை ஜோசப்பின் புனைவுகள் முக்கியத்துவம் பெறுவது மனிதனின் வாழ்க்கைப்பாடுகள் மிகுந்த கரிசனத்துடனும் நாகரிகத்துடனும் முன்வைக்கப்பட்டிருப்பதால் தான் என்று கருதுகிறேன். இக்கதைகளில் யாருமே செல்வத்தின் உச்சத்தில் திளைப்பவர்கள் அல்ல. அதேநேரம் ஒன்றுமே இல்லாத அடையாளமற்ற விளிம்புநிலை மனிதர்களும் அல்ல. இவர் பாத்திரங்கள் அனைவருக்குமே அடையாளங்களும், அதைக்கடந்து வேறொன்றை நோக்கி நகர வேண்டும் என்ற உந்துதலும் இருக்கின்றன. வாழ்க்கை மீதான அத்தகைய தீராத பிடிப்பினை வெளிப்படுத்துவதாலோ என்னவோ இக்கதைகளில் எங்குமே மரணங்களே நிகழ்வதில்லை. நவீனத்துவம் தமிழில் தலைகாட்டத் தொடங்கும் ஒரு காலகட்டத்தில் எழுதிய படைப்பாளியின் எழுத்துக்களில் மரணங்களே இல்லாதது ஒரு ஆச்சரியமளிக்கும் அம்சமே. ஈழ நிலத்தில் போர் தொடங்கி தமிழர்களின் மீது சந்தேகப் பார்வை விழுந்து அந்த துவேஷத்தை மையமிட்டு நடக்கும் குடைநிழலிலோ, எளியோர்களின் வாழ்வே மீண்டும் மீண்டும் சொல்லப்படும் மீன்கள் தொகுப்பிலோ நாம் எங்குமே மரணத்தைக் காண முடிவதில்லை. புனைவில் நிகழும் திடீர் மரணங்கள் எப்போதும் சுவாரஸ்யத்தையோ அதிர்ச்சியையோ அளிக்கக்கூடியவை. மௌனியின் கதைகளில் இத்தகைய ‘திடீர் மரணங்களை’ அதிகமாகக் காணலாம். மரணம் ஒரு படைப்பின் விசாரத்திற்கான தளத்தை சுருக்கி விடுகிறது. மௌனியின் பிரபஞ்சகானம் உள்ளிட்ட பிரபலமான கதைகளில் மரணமே ஒரு பூடகத்தன்மையை கதைக்குள் உருவாக்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால் தெளிவத்தை ஜோசப் தன் கதைகளை முழுமையான விசாரத்திற்கென திறந்து வைக்கிறார். எந்நேரமும் மரணம் நிகழலாம் என்ற பதற்றத்துடன் நகரும் அம்மா கதையில் கூட கதைசொல்லியின் அம்மாவின் மரணம் எதிர்காலத்திற்கு தள்ளிவைக்கப்படுகிறது. நிகழப் போகும் அம்மாவின் மரணத்தை எதிர்கொண்டுவிடலாம் என்று மகன் ஆசுவாசம் கொள்ளும் இடத்தில் கதை முடிகிறது. அவன் ஆசுவாசம் எதனால் என்று யோசிக்கும்போது இக்கதை மேலும் விரிவடைகிறது.

வாசகன் உள்நுழைவதற்கான இதுபோன்ற பல இடைவெளிகளை இயல்பாகக் கொண்டிருக்கும் தெளிவத்தை ஜோசப்பின் கதையுலகம் தன்னுடைய வாயில்களை மரணத்தினாலோ உச்சகட்ட வன்முறையினாலோ மூடிக்கொள்ளாமல் விசாரத்திற்காக தன்னை திறந்து வைத்திருப்பதாலேயே முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

சுரேஷ் பிரதீப்

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடர்ச்சியாக புனைவுகள், விமர்சனங்கள் எழுதிவருகிறார். அழகியலை முன்னிலைப்படுத்தி எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளை நுட்பமாக மதிப்பிடுபவர்.ஒளிர் நிழல் என்ற நாவலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன.

உரையாடலுக்கு

Your email address will not be published.