/

எங்களுக்கு எதிராக அவர்கள்: ரதன்

1963 நவம்பர் 22ம் நாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன்.எப்.கெனடி படுகொலை செய்யப்பட்டார். இவரது படுகொலைக்கான காரணங்களையும், வழக்கையும் ஆய்வு செய்கின்றது ஒலிவர் ஸ்ரோனின் JFK திரைப்படம். திரைக்கதையை எழுத முன்னர் பல ஆய்வுகளை ஒலிவர் ஸ்ரோன் மேற்கொண்டார். திரைப்படம் ஜிம் ஹரிசனின் நூலை(On the Trail of the Assassins) மையமாகக் கொண்டிருந்தாலும், ஒலிவர் Zachary Sklar உடன் இணைந்து திரைக் கதையை அமைத்திருந்தார். Zachary Sklar ஒரு ஊடகவியலாளர். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ஊடகவியல் பேராசிரியர். கொலை செய்யப்பட்ட ரெக்ஸாஸ் மாநில பத்திரிகைகளிலிருந்தும், அன்றைய காலத்தில் வெளியான சிறு செயதிகளிலிருந்தும், அதன் பின் வெளியான பல ஆய்வுகளிலிருந்தும் பெறப்பட்ட தகவல்களையும் இணைத்தே திரைக் கதை அமைக்கப்பட்டது. வேறு பல உளவு அதிகாரிகளும் படத் தயாரிப்பின்போது ஆலோசகர்களாக கடமையாற்றினார்கள். இப் படம் Costa-Gavrasன் Z திரைப்பட வடிவத்தைக் கொண்டுள்ளது. இதனை ஒலிவர் ஸ்ரோனே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சரித்திரச் சம்பவத்தை படமாக்கும் பொழுது, மிகவும் அவதானத்துடன் உண்மைகளை ஆய்வு செய்து படமாக்குகின்றார்கள். ஆனால் சரித்திரச் சம்பவங்கள் அரசியல் நோக்கத்துக்காக படைப்புக்களாக வெளிவரும் பொழுது, அவற்றின் உண்மைத் தன்மை உடைக்கப்பட்டு, ஒரு பொய்யான பிம்பமே பார்வையாளர்கள் முன் வெளிப்படுத்தப்படுகின்றது.

ஒலிவர் ஸ்ரோனின் படைப்புக்கள் தயாரிக்கப்படும் ஹொலிவூட்டிலிருந்து மற்றொரு அரசியல் இயக்குனரான ஸ்ரீபன் ஸ்பில்பேர்க்னது திரைப்படங்களும் தயாரிக்கப்படுகின்றன. 1972 மியுனிச் ஒலிம்பிக் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாலஸ்தீனிய தீவிரவாதிகள் 11 இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்களை கடத்திக் கொலைசெய்கின்றனர். இதனை மையமாகக் கொண்டு மியுனிச் என்ற திரைப்படத்தை ஸ்பில்பேர்க் இயக்கியிருந்தார். 2005ம் ஆண்டு இப் படம் வெளியாகியிருந்தது. உண்மையில் இப் படம் போரின் அகத்திலும், புறத்திலும் நடைபெறும் பல நுண்ணிய சம்பவங்களை பதிவு செய்திருந்தது. ஹங்கேரியில் பிறந்த கனடிய ஊடகவியலாளரான George Jonasன் Vengeance  நூலை மையமாகக் கொண்டே திரைக்கதை அமைக்கப்பட்டது. ஆனாலும் இன்று வரை படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தரவுகள் பற்றிய எதிர்க்கருத்துக்கள், நம்பகத்தன்மை என்பன ஊடகங்களில் முன்வைக்கப்படுகின்றன.

வியட்நாம் போரின் பின்னர் அமெரிக்கா தனது தோல்வியை மறைக்க ஹொலிவூட்டை நாடியது. அதன் விளைவு ரம்போ போன்ற பல சாகசப் படங்கள் வெளியாகின. இருப்பினும் அதே ஹொலிவூட்டிலிருந்து பல போரை விமர்சிக்கும் தன்மை கொண்ட படங்களும் வெளியாகின. இலங்கையில் கூட போரின் போதும், பின்னரும் பிரசன்னா விதானகே போன்றோரின் படைப்புக்கள் போரினை சீர்தூக்கி பார்த்தன.

பாலஸ்தீனிய-இஸ்ரேல் போரின் போது அவ்வாறான நிலை இருந்ததா? குறிப்பாக இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட இஸ்ரேலிய படங்கள் பாலஸ்தீனியரை அவர்களது போராட்டத்தை எவ்வாறு சித்தரித்தது.

இஸ்ரேலிய இயக்குனர்கள் மத்திய கிழக்கைப் பற்றிய பல படங்களை இயக்கியுள்ளனர். இவையனைத்தும் இஸ்ரேலின் இருப்பினையும், அமெரிக்காவின் ஏகாதிப்பத்தியத்தையும் உறுதிப்படுத்தும் படங்கள். மத்திய கிழக்கு முஸ்லீம் தீவிரவாதிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுபவை. அதுவும் மிக மோசமான அராஜகவாதிகளாக சித்தரிப்பவை. தீவிரவாதிகளை அவர்களது உடல் மொழியினாலும், குரலினாலும் மேலும் மோசமானவர்களாக பிரதிபலிக்கப்பட்டார்கள்.

குறிப்பாக மூன்று இஸ்ரேலிய இயக்குனர்களின் படங்கள் முக்கியமானவை. 1982ம் ஆண்டு யூன் 6ம் நாள் முதல் நாள் யுத்தத்தின் போது நடைபெற்ற சம்பவகளில் இருந்து நகர்ந்து செல்லும் படம் லெபனான். சர்வதேசிய விருதுகள் பலவற்றை இப் படம் பெற்றது. 2009ம் ஆண்டு சத்யஜித் ரே விருதையும் இப் படம் பெற்றிருந்தது. இயக்கம் Shamuel Maoz(2007). Ari Folman 2008 ல் வெளியான படம் Waltz with Bashir.  1982 புரட்டாதி 16-18 நடைபெற்ற Sabra and Shatila massacre  படுகொலைகளை மையமாகக் கொண்டது. இது இஸ்ரேலின் மன்னிக்க முடியாத ஒரு சர்வதேச குற்றச் செயல். சுமார் 3500 பேரளவில் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் குற்றச் செயலை குறைக்கும் முயற்சியே இப் படம். இது ஒரு அனிமேசன் படம். 2008ம் ஆண்டு கான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப் படம் பல சர்வதேச விருதுகளைப் பெற்றது தெற்கு லெபனானிலிருந்து இஸ்ரேல் 2000ம் ஆண்டு வெளியேற முன்னர் நடைபெற்ற சம்பவங்களை மையமாகக் கொண்டது Joseph Cedar இயக்கி 2007ல் வெளியான Beaufort . Beaufort ஒரு கோட்டை.

இம் மூன்று படங்களும் 2006 இரண்டாவது லெபனான் போரின் பின்னர் வெளியாகியிருந்தன. திட்டமிட்ட முறையில் இம் மூன்று படங்களும் பல பொதுத் தன்மைகளைக் கொண்டிருந்தன. இஸ்ரேலிய இராணுவ வீரர்களை நல்லவர்களாகவும், இஸ்ரேலிய இராணுவம் ஒரு மக்கள் இராணுவமாகவும் வெளிப்படுத்தின. மிக முக்கியமாக மத்திய கிழக்கின் பொருளாதாரத்தை ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஐரோப்பிய நிறுவனங்களின் வீழ்ச்சியையும், அதி தீவிர முஸ்லீம் முகவர்கள் மேலோங்கி வருவதாகவும் காட்டியுள்ளன. லெபனானில் உள்ள கிறிஸதவ தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேலுக்குமான நெருக்கத்தை நிராகரித்து, கிறிஸ்தவ தீவிரவாதிகளை நல்லவர்களாகவும் வெளிப்படுத்தின.

US AGAINST THEM என்றதனை இப் படங்கள் முழுமையாகச் சித்தரித்தன. இதன் அடிப்படைச் சிந்தாந்தங்களை மிக விரிவாகப் பார்த்தால், “நாங்கள்” என்பது எவ்வாறு உருவகப்படுத்தப்படுகின்றது என்பது முக்கியம். நாங்கள் என்பது திரைப்படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களால் அவர்களாக உணரப்படுகின்றது. அதற்கு ஏற்ப காட்சிகள் அமைக்கப்படுகின்றன. அதே சமயம் நாங்கள் என்பது இஸ்ரேலிய போர் வீரர்களாகவும் பதிவு செய்யப்படுகின்றது. நாங்கள் என்பது இஸ்ரேலிய சமூகமாகவும் வெளிப்படுகின்றது. நாங்கள் என்பது இஸ்ரேலிய அரசாகவும் உள்ளது. இஸ்ரேலிய வீரர்கள் மிகவும் இக் கட்டான சூழலில் உள்ளனர். மிகவும் கடினமான பிரதேசத்தில், எதிரிகளால் சூழப்பட்டு பயத்துடனும், தனிமையுடனும், குழப்பத்துடனும் “நாங்கள்”எனப்படும் எங்களைக் காப்பாற்ற போராடுகின்றார்கள். அவர்கள் நல்லவர்கள். உறுதிபடைத்தவர்கள். எதிரியின் மக்களையும் காப்பாற்றுபவர்கள். இவை போன்ற பிம்பங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றிற்கு பல்வேறு வகையான உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. Close-up of faces, sequences in slow motion, flash back sequences போன்றவற்றுடன் சோகமான பிண்ணனி இசை, போர்வீரர்களின் சோகமான முகம், குழப்பத்தை வெளிப்படுத்தும் உடல் மொழி போன்றனவும் “நாங்கள்”என்பததை மேலும் தீவிரப்படுத்துகின்றது. “நாங்கள்” என்பதன் மூலமாக பார்வையாளர் ஒரு அரசபற்றுள்ளவராக ஒழுங்கமைக்கப்படுகின்றார்.

எதிரி என்பவர் ஒரு முரடான, மிக மோசமான பயங்கரவாதி. ஏதிரி என்பவர் துப்பாக்கியுடன் போரிடுபவர். அங்கு அவரது சமூகம் பிரதிநிதிப்படுத்தப்படாது. அதே சமயம் “அவர்கள் எங்களுக்கு எதிராக போரிடுகினடறார்கள்” என்பதே பதியப்படுகின்றது. “நாங்கள் அவர்களுக்கு எதிராக போரிடுகின்றோம்” என்பது வெளிப்படுத்தப்படாது. இம் மூன்று படங்களிலும் இத் தன்மையைத் தெளிவாகக் காணலாம். இத் பெரும்பாலான ஹொலிவூட் போரைப் பற்றிய படங்களில் காணலாம்.

ஹொலிவூட்டுக்கும், இஸ்ரேலுக்கும் வெளியே வெளியான படங்களும், இஸ்ரேலின் இருப்பை உறுதிப்படுத்தின. . Circle of Deceit (1981) ஜேர்மனிய இயக்குனர் Volker Schlöndorff  ன் படம். இப் படம் ஒரு ஜேர்மனிய பத்திரிகையாளர், லெபனானில் தங்கியிருந்து ஜேர்மனிய பத்திரிகைக்கு செய்திகள், கள நிலவரங்கள் பற்றி எழுதிக்கொண்டிருந்தார். இவர் அறமற்றவராக மாறி ஒருவரை கொலை செய்தமைக்கு, வன்முறைகள் நிறைந்த லெபனான் சூழலே காரணம் என இப் படம் குற்றஞ்சாட்டுகின்றது.

பிரென்ச் கனடியரான Denis Villeneuveன் இயக்கத்தில் வெளிவந்த Incendies லெபானின் உள்நாட்டு யுத்தத்தை மையமாகக் கொண்டது. இப் படம் முஸ்லீம் தீவிரவாதிகளை அதிகளவு விமர்சித்த போதும், கிறிஸ்தவ தீவிரவாதிகளின் வன்முறைகளையும் பதிவாக்கியுள்ளது. இப் படத்தில் உள்ள பல சம்பவங்கள், ஈழப் போரில் நடைபெற்ற பல சம்பவங்களை ஒத்துள்ளது. இப் படம் ஹொலிவூட்டுக்கு வெளியே கியுபெக் தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டது. இப் படம் மொன்றியலிலும், லெபானானிலும் படமாக்கப்பட்டுள்ளது. லெபனானைப் பற்றி வெளிவந்த படங்களில் குறிப்பிடத்தக் படம். எனினும் இப் படமும் ஒரு நடுநிலையாக லெபனான் யுத்தத்தை அணுகியது எனக் கூற முடியாது.

லெபனானிலும், மத்திய கிழக்கிலும் முஸ்லீம் தீவிரவாதிகளை தமது திரைப்படங்களினூடாக, சர்வதேச உலகில் வெறுப்படையச் செய்வதில் ஹொலிவூட்டும், ஐரோப்பிய திரைமையமும் வெற்றி பெற்றன. இப் படங்கள் இஸ்ரேலின் உருவாக்கத்தையும், பாலஸ்தீனதினை பயங்கரவாத நாடாகவும் மேலும் சித்தரித்தன. அமெரிக்காவை உலகின் மிகச் சிறந்த மனிதாபிமான நாடாகவும், அமெரிக்க இராணுவத்தை மிகச் சிறந்த மனிதத்தை கொண்ட இராணுவமாகவும் சித்தரித்தன. இதன் மூலம் மேற்கின் ஏகாதிபத்தியத்தை உறுதிப்படுத்தின.

ஒலிவர் ஸ்ரோனின் போரைப் பற்றிய படங்கள் ஹொலிவூட் படங்களிலிருந்தும், மேற்கூறிய இஸ்ரேலிய சார்புப் படங்களிலிருந்தும் மாறுபடுகின்றன. வீரியமிக்க உணர்வின் அடித்தளத்தில் இருந்து வெளிப்படும் மனஉளைச்சல்களை இவரது படங்களில் காணலாம். இந்த மனஉளைச்சல்கள் சமூகப் பார்வையில் ஒரு கிளர்ச்சியற்ற துயரங்கள் போன்றுள்ளது. பார்வையாளர்களின் முகங்களை இவரது படங்களில் காணலாம். தொடர்ச்சியான இடைவெளியில் ஏற்படும் துயரங்களின் பல்லவியாக அல்லது இறுதிப் பாடலாக உள்ளன இவரது படைப்புக்கள். இறுதிப் பாடலாக உள்ளதையும் இவரது படங்கள் கட்டுடைக்கின்றன. இவர் கட்டுடைப்பது போர்வீரர்களையல்ல. அவர்களை உருவாக்கிய அரசினையே கட்டுடைக்கின்றார். மாறாக இஸ்ரேலிய படங்கள் போர்வீரர்களின் துயரப் பாடலினூடாக அரசினை நல் அரசாக மாற்றிவிடுகின்றன.

போரினை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் கட்டுடைக்கப்பட்டு அவை முன்வைக்கும் தவறான கருதுகோள்கள் விமர்சிக்கப்படவேண்டும

ரதன்

ரொரொன்டோவில் வாழ்கிறார். அரசியல், சமூக செயற்பாட்டாளர். ஒளி தேடும் நிழல்கள், எதிர் சினிமா ஆகிய நூல்களின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.