/

விதி சமைப்பவர்கள்தான் இலக்கியத்தில் இயங்க முடியும்: காலம் செல்வம் அருளானந்தம்

நேர்கண்டவர்: அனோஜன் பாலகிருஷ்ணன்

இந்த நேர்காணலுக்கு என்னைத் தெரிவு செய்ததற்கு முதலில் நன்றி.

தமிழில் எவ்வளவோ பெரிய ஆளுமைகள் இருக்க பிரியோசனமோ உறுதியான அரசியல் கருத்துகளோ இல்லாமல், தனிய இலக்கியத்தின் பக்கமாய் இருக்கும் என்னை ஏன் தெரிவு செய்தீர்கள் என்று தெரியவில்லை. சிலவேளை உடனடியாக யாரும் கிடைக்கவில்லையோ, அல்லது பேட்டி தருகிறோம் என்று சொன்ன யாராவது கடைசி நேரத்தில் தரமாட்டோம் என்றுவிட்டார்களோ தெரியவில்லை. ஏனென்றால் என்னுடைய பெயர் தீவிர இலக்கிய செயற்பாட்டாளர்கள் மத்தியில்தான் ஓர் அளவுக்கு அறியப்பட்டிருக்கிறது. வீட்டில்கூட இதை பெரிதாக யாரும் நம்பமாட்டார்கள். 

அம்மா உயிருடன் இருக்கும்போது யாரோ “காலம் செல்வம் இருக்கிறாரா?” என்று தொலைபேசியில் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அம்மா, “அப்படியாரும் இல்லை” என்று சொன்னார். நான் ஓடிவந்து அது என்னைத்தான் என்று சொல்லி தொலைபேசியை வேண்ட “அது என்னடா கண்டறியாத காலம் செல்வம்” என்று சொன்னது நினைவில் வருகிறது.

என்னுடைய இலக்கிய செயல்பாடுகள் தொடக்கி முப்பது முப்பதைந்து வருடங்கள் ஆகிற்று. ஆனால், இங்கை கனடாவில் ஒளி,ஒலி பரப்பு ஊடங்களுக்கு ஒரு இலக்கிய செயல்பாட்டு அறிவித்தலை அறிவிக்க முடியுமா என்று அழைக்கும்போது யாரோ புது ஆள் ஏதோ புதுசா செய்யப்போகிறார் என்றுதான் இப்போதும் நினைப்பார்கள்.

முப்பது வருடங்களுக்கு மேலான தொடர் இலக்கிய ஓட்டத்தினால், ஈழம் தமிழ்நாடு, புலம்பெயர் தேசங்களில் வாழும் தீவீர இலக்கிய ஆட்களுக்கு என் பெயர் அறிமுகமானதுதான். என்னுடைய பதில்கள் பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக எண்ணவில்லை. உங்கள் இதழ் வாசகர்களும் என்னைக் கொஞ்சம் அறிவார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

நீங்கள் கேள்வி கேட்க முதல் ஊரிலை நடந்த சின்ன படிகியை சொல்லி ஆரம்பிக்கலாம் என எண்ணுகிறேன். என் நண்பன் ஒருவன் ஊடகங்களைப் பற்றி பேசும்போது அதிகாரங்களை நக்கலடிக்கச் சொன்ன கதை இது.

தான் ஏழாம் வகுப்பில் பூமி சாத்திரம் படிக்கும்போது, பூமி சாத்திர புத்தகத்தில் வடமாகாண வரைபடம் இருந்தது. அதில், யாழ்ப்பாணத்தின் பெயர் இருக்கு, பருத்துத்துறை இருக்கு, சங்கானை இருக்கு, ஆனால் யாழ்ப்பாணத்திற்கு அடுத்த பெரிய நகரான நெல்லியடி இல்லை. ஆனால் அதற்கு பக்கத்தில் இருக்கும் சின்ன கிராமமான துன்னாலை இருக்கு. ஒருநாள் துணிந்து பூமி சாத்திர ஆசிரியரிடம் படத்தைக்காட்டி துன்னாலையை போட்டிருக்கு. ஏன் நெல்லியடியை போடவில்லை என்று கேட்டபோது, ஆசிரியர் சிரித்துக்கொண்டு, அங்கை கல்வி இலாகாவில் ஒரு துன்னாலையான் பெரிய இடத்தில்லை இருக்கிறான். அவன்ரை விளையாட்டு தான் இது என்றாராம்.

அப்படிதான் கருத்துகளும் விமர்சனங்களும்; உண்மையோ பொய்யோ யார் சொல்கினமோ அவர்கள் பக்கச்சார்புடனே வெளிவரும். சரி கேக்கிறதை கேளுங்க. இனி உங்கபாடு, வாசிக்கிறவர்கள் பாடு.

காலம் செல்வம் அருளானந்தம் அவர்களுடனான இந்த நேர்காணல் தொலைபேசி வழியாக உரையாடிப் பெறப்பட்டது.

செல்வம் அருளானந்தம்

பகிடி உங்களது எழுத்துகளில் மட்டுமல்ல உங்களது பேச்சிலும் உள்ளது. துயரம் நிறைந்த அகதிவாழ்க்கை இதனைக் கற்றுத் தந்ததா? அல்லது இளம் பருவத்திலிருந்து உங்களோடு வருவதா? இதிலிருந்து நேர்காணலை ஆரம்பிப்போம்.

அது இயல்பானது என்று தான் நான் நினைக்கின்றேன். நான் ஒரு இடத்திலும் கற்றுக்கொள்ளவில்லை. அப்படி கதைக்கிற ஆட்களும் மிகக் குறைவு. எவ்வளவு பிரச்சினையான விடயத்தையும், எவ்வளவு துயரமான விடயத்தையும் கொஞ்சம் நகைச்சுவையாகச் சொன்னால் நல்லது என்று தோன்றுவதுண்டு. ஆனால், என்னுடைய இயல்பாகவே நான் பெரிய நகைச்சுவையாளன் என்று சொல்ல வரவில்லை. எந்த ஒரு விடயத்தையும் நகைச்சுவையாக சொல்லக்கூடிய ஆட்களுடன் எனக்கு விருப்பம் ஏற்படுகிறது. எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றதால்தான் அப்படியான ஆட்களுடன் சேர்ந்து நட்பாக இருக்கிறேன். சிறு வயதில் பார்க்கின்ற விடயங்களை அம்மாவுக்கும் அன்ரிமார்களுக்கும் நடித்துக் காட்டுவேன்.

அண்மையில் இறந்து போன திருநாவுக்கரசு என்ற நண்பர் இளம்வயதில் என்னுடன் சிநேகிதமாக இருந்தார். அவர் எந்த விடயத்தையும் சிரிப்பாகத் தான் சொல்லுவார்.  நான் பாரிஸ் வந்தவுடன் அவரும் பாரிஸ் வந்துவிட்டார். பாரிஸிலும் அவருடன் தொடர்பில் இருந்தேன்.             ஒரு முறை 1983 கலவரத்தில் அவருடைய வீடு எல்லாம் எரிந்து விட்டது என்ற செய்தி அவருக்கு வந்தது. மிகவும் கவலையுடன் வெளிக்கிட்டு என்னிடம் வந்தார். என் அறைக்கு வெளியே வீதியோரமாக இருந்த வாங்கில் துயரத்துடன் அமர்ந்திருந்தார். “அது பொய்க் கதையாக இருக்கும் அண்ணை, கொக்குவிலில் உங்களுடைய ஒரு வீட்டை மட்டும் இராணுவத்தினர் எரித்தவர்காளா?” என்று நான் சொல்லி்க்கொண்டிருக்கையில் ஒரு பெண் மார்பு குலுங்க ஓடி வந்தார். நான் அவரை விட்டுவிட்டு அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அவரும் அதைப்பார்த்தார். “எவ்வளவு துன்பம் இருந்தாலும், உதொண்டு தானடா இன்றும் உயிரோடை இருக்கவேணும் என்று ஆசையை தருகிறது” என்றார். அப்படியான ஆட்களுடன் தான் எனக்கு சிநேகிதம் வந்தது.

பகிடிக்கும் சுய பகிடிக்கும் இடையிலான வித்தியாசத்தை பிரக்ஞை பூர்வமாக எப்படி கையாள்கிறீர்கள்?

திட்டமிட்டு செய்வதில்லை. திட்டமிட்டால் அது பிழைக்கும். சாதுவாக இன்னொருவரை புண்படுத்தக்கூடாது என்ற திட்டமிடல் இருக்கும். எழுந்தமானமாக இன்னொருவரை புண்படுத்தக் கூடாது என்று அடிப்படை கொள்கை உண்டு. அப்படி இருந்தும் சில சமயங்களில் வாய் தடுமாறி வந்து விடும்.

ஒரு அக்கா தம்பியைப் பற்றி சொல்லும் போது ‘முந்தி இவன் சரியான கறுப்பு.  இப்போது வெளிநாடு வந்த பின்னர் நல்ல நிறமாக இருக்கின்றான் என்று சொல்லும்போது, இதை விட எவ்வாறு கறுப்பாக இருப்பது’ என்று கேட்டுவிட்டேன். அவர் சிரித்துவிட்டார். ஆனாலும், இது அவரை புண்படுத்தியிருக்கும். இவற்றில் இன்னும் கவனமாக இருக்கவேண்டும்.

நாங்கள் எங்களை பகிடி பண்ணலாம். இன்னொருவரை பகிடி பண்ணி விட்டால் அவர்களுக்கு இவர் தங்களை நக்கலடிக்கின்றார் என்று வன்மமாக மாறிவிடலாம். இன்னொருவரை புண்படுத்தக் கூடாது, மனம் நோகப்பண்ணக் கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கின்றேன். மற்றும்படி பகிடி இயல்பாக வரவேண்டும். திட்டமிட்டு வருவதில்லை.

“சிரிப்பு அனைத்து தத்துவங்களையும் விடப் பெரியது. ஒருவன் வாழ்க்கையைப் பற்றி நினைத்து சிரிக்கிறானோ, அப்போது அவன் வாழ்க்கையைப் புரிந்துகொள்கிறான். அதனால் யார் உண்மையிலேயே புரிந்துகொள்கிறானோ, அவன்தான் சிரிக்கிறான்” என்று ஓஷோ சொன்னார் என்று பின்னாலே கேள்விப்பட்டேன்.

பாரீசில் இலக்கிய சகவாசம் எப்படி வந்தது?

பாரிஸ் வந்து இரண்டு வருடங்கள் ஒன்றுமில்லை. கிட்டத்தட்ட 1982 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் நான் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டேன். அதுவரை வேலை தேடுவதில் கழிந்தது. இரவு வேலை கிடைத்ததால் பகல் முழுவதும் தூங்கினேன்.

எனது மனதோடு ஒத்த நண்பர்கள் கிடைக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு பிறகு மெல்ல மெல்ல நட்புகள் கிடைக்கின்றன. ஒரு தடவை வேலை முடிந்து வரும்போது விமான நிலையத்தில் இலங்கை ஆளைப் போல் ஒருவர் வந்து “தமிழோ, இலங்கையோ?” என்று ஆங்கிலத்தில் கேட்டார். “ஓம்” என்றேன். ஒருவரை வரவேற்க வந்திருந்த அவர் இலங்கை தூதரகத்தில் கடவுச்சீட்டு அதிகாரியாக இருப்பவர். என்னிடம் சிறிய உதவியொன்று கேட்டார். நான் அவருக்கு ஒரு கோப்பி வாங்கி கொடுத்துவிட்டு அவரோடு கதைத்து விட்டு அவர் வரவேற்க வந்த ஆள் வரும் வரை நின்றேன். அவரிடம் தூதரகத்துக்கு வந்தால் பத்திரிகை வாசிக்கலாமா என்று நானும் ஒரு உதவி கேட்டேன். இலங்கை தூதரகத்துக்கு வீரகேசரி, தினகரன், தினபதி, சிந்தாமணி பத்திரிகைகள் வருவதாக நான் கேள்விப்பட்டிருந்தேன். அவர் அதற்கு சம்மதித்தார். அப்போது தான் நான் நீண்ட நாட்களுக்கு பிறகு விரகேசரி, தினகரனை கண்ணால் பார்த்தேன். இரண்டு வருடத்துக்கு பிறகு திரும்ப யாழ்ப்பாணத்துக்கு போனது போல் உணர்வு வந்தது.

தூதரகத்தில் ஒரு பிரச்சினையும் இருக்காது. ஆனால் அங்கு போனால் திரும்ப எங்களை பிடித்து திரும்ப ஊருக்கு அனுப்பி விடுவாங்கள் என்று பயப்படுத்தி வைத்திருந்தார்கள். கடவுச்சீட்டுக்கு கூட அங்கே போகக்கூடாது. இலங்கை தமிழர்கள் அகதியாக பிரான்ஸ் வந்துவிடக்கூடாது என பிரான்சிலுள்ள இலங்கை தூதுவர் நினைக்கிறார். இத்தனைக்கும் அவரும் ஒரு தமிழர். இருந்தும் அந்த நண்பர் மூலமாக ரகசியமாக தூதரகம் சென்றேன். வெளியே நிற்க அவர் வந்து கூட்டிக்கொண்டு போவார். நான் வாசித்து விட்டு வருவேன். அது தான் பாரிஸ் வந்த பின் முதல் வாசிப்பு பழக்கம்.

அதற்கு பிறகு மெல்ல மெல்ல ஈரோஸ் அமைப்பினுடைய தொடர்பு கிடைத்தது. திம்பு பேச்சு வார்த்தைக்கு முதல் தமிழ் நாட்டில் ஈரோஸ், ஈபிஆர்எல்எப், புளோட், விடுதலைப் புலிகள் எல்லாம் சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். அதுதொடர்பாக பாரிஸில் ஓர் ஐக்கியம் ஏற்பட்டு ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் ஐக்கியதை வலியுறுத்தி ஒரு நாடகம் செய்தோம். பெயர்களை எல்லாம் மறந்துவிட்டேன். இப்போது பாரிசில் புத்தகக்கடை வைத்திருக்கும் சிவதாஸ் அதன் ஒருங்கினைப்பாளராய் இருந்தார். மனோ என்ற தோழர் அந்த நாடகத்தை எழுதியவர். சிவந்த போர்வை போர்த்தியபடி மார்க்ஸ் வந்து சிதறிப்போய் விழுந்து கிடக்கும் தொழிலாளர்களை எழுப்பி ஒன்றிணைக்கிற மாதிரி என்னவோ! இப்போது சிரிப்பாக இருக்கு, அப்போ அது பேசப்பட்டது.

அந்த நாடகம் முடிய ஒருவர் எனக்காக காத்துக் கொண்டு நின்றார். யார் என்று கேட்டால், தன்னுடைய பெயர் கலாமோகன் என்றும், தான் தினபதியில் வேலை செய்தவர் என்று சொன்னார். அவர் பாரிசுக்கு அண்மையில்தான் வந்திருந்தார். எங்களுடைய நாடகம் நன்றாக இருப்பதாகப் பாராட்டிவிட்டு உங்களுடன் கொஞ்ச நேரம் பேசலாமா என்று கேட்டார். அப்போது கலாமோகனைப் பற்றி நான் ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. ஒருவருக்கும் தெரியாது. எனக்கு அவர் ஒரு புதிய ஆள். ஒரு பியர் கடையிலோ அல்லது ஒரு கோப்பி கடையிலோ இருந்து கதைத்தோம்.

அவர் கதைக்கக் கதைக்க அவரிடம் விஷயம் இருப்பது தெரிந்தது. அதற்குப் பிறகு என்னுடைய திசை மாறுகின்றது. முதல் ஒரு ஜனரஞ்சக வாசகனாக இருந்து பின்னர் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன் வாசித்துக் கொண்டிருந்து பிறகு மாக்ஸிச, ஈரோஸ் நண்பர்களின் சந்திப்புகளால்  இதைத் தாண்டியும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

காலா காலமாக இலக்கியத்தை அரசியலின் பணிப்பெண்ணாய் கருதும் மனோபாவம் இங்குண்டு. அந்தக் கோப்பையை இங்கே கொண்டு வா. இந்தச் சாப்பாட்டை அங்கே கொண்டுபோய் கொடு” என.. இலக்கியம் அரசியலின் பணிப்பெண்ணல்ல. சுயாதீனமானது. தன்னளவில் சுதந்திரமானது.

இலக்கியம் ஓரளவு பேச தெரிந்தவர்கள் என்பதைத் தாண்டி ஏதோ சுவாரஸ்யமாக பேசுகிறார்கள் என்ற ஈர்ப்புதானா உங்களை ஈரோசில் இணைய வைத்தது?

ஈரோஸைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அழகிரி என்று ஒருவர் இருக்கின்றார். ‘ம்’ நாவல் வாசித்தால் உங்களுக்குத் தெரியும். அழகிரி சிறையில் இருந்தார். அழகிரி ஈரோஸ் என்பதால் அவருடைய மனைவி ஈரோஸுக்காக பாரிசில் தொடர்பாளராக இருந்தார். அவர் எனக்கு தூரத்து உறவினர் என்பதால் முன்பே ஊரிலே தெரியும். நான் இருக்கும் வீட்டுக்கு வந்து போகின்றவர். அவதான் சொன்னா “ஈரோஸ் என்ற அமைப்பின் சார்பில் ஒவ்வொரு கிழமையும் என்னுடைய  றூமில் சில தோழர்களைச் சந்தித்து நாட்டு நிலவரங்களை விவாதிப்போம். நீங்களும் வந்துபோகலாமே” என்று.

செந்தில் என்ற இடதுசாரிய ஈர்ப்புக் கொண்ட நண்பனையும் கூட்டிக்கொண்டு அங்கு போனேன். அங்கே போய் தான் ஈரோஸ்காரர்களுடைய தொடர்பு வருகின்றது. நாட்டில் நடக்கும் பல்வேறு விடயங்கள் தெரியவர எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இலங்கையிலிருந்து இத்தனை பேர் வந்து பயிற்சிக்கு லெபனானுக்கு போயிருக்கின்றார்கள், லண்டனிலிருந்தும் போயிருக்கின்றார்கள் என்பதெல்லாம் எனக்கு புதிய செய்தி.

ஈரோஸ் அமைப்பு கூட்டங்களுக்கு போனாலும் புளோட், ஈபிஆர்எல்எப் ஆதரவாளர்களுடன் ஒரு சுமூக உறவு இருந்தது. என் ஞாபகத்தின் ஈரோஸின் முதல் நிகழ்வு வேல் ஆனந்தனின் நாட்டியம். இரண்டாவது நிகழ்வு நிறைய இளைஞர்கள் வந்த நிகழ்வு, பேராசிரியர் கைலாசபதி இறந்ததுக்கு செய்த அஞ்சலிக்கூட்டம். ரட்ணசபாவதி ஈரோஸ் தலைவராக இருந்தாலும், சங்கர் ராஜி என்பவர்தான் லண்டனில் இருந்து பொறுப்பாக இயங்கிர் 83-ஆம் ஆண்டு ஆடிக்கலவரம் முடிய அவர் லண்டனில் இருந்து பாரிஸ் வந்து, இந்திய பிரதமர் இந்திராகாந்தி எவ்வளவு இளைஞர்களை கொண்டுவர முடியுமோ அவ்வளவு பேரையும் வரட்டாம் முறையான பயிற்சிகள் நாங்கள் கொடுக்கிறோம் என்கிறா, எத்தனை பேர் போக ரெடியென்று கேட்டார். ஒரு பத்துப் பேர்தான் ஓம் என்றார்கள். அவர்களும் ஈரோஸ்காரர் என்று சொல்வதற்கில்லை. சிங்களவங்களுக்கு அடிக்க வேண்டும் என்று நினைத்த சில இளைஞர்கள் வந்து சேர்ந்தார்கள். ஈரோஸ்காரர் என்றால் இரண்டு பேர்தான்.

அன்பு என்ற ஒரு நண்பர் கூட்டங்களுக்கு வந்து போகின்றவர். பயிற்சிக்குப் போய் கொஞ்ச நாளிலேயே இறந்து போய்ட்டார். அது பகிரங்கமாக எங்களுக்குத் தெரியும். எங்களுடன் பாபு என்ற நண்பர் இருந்தவர். அவரைப் பற்றி கேட்டால் ஒன்றும் சொல்கின்றார்கள் இல்லை. ஒரு வருடத்துக்குப் பிறகு ராஜி திரும்பி வரும் போது தான் அவரை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று சொன்னார். ஒரு தாய்க்கு ஒரு மகன் தான். வேறு சகோதரர்கள் இல்லை என்று அந்த பாபு சொல்லிக்கொண்டிருந்தவன்.

நீங்கள் இலங்கையிலுள்ள போது தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர், அமிர்தலிங்கம் போன்றோரின் கூட்டங்களுக்கு சென்று வருபவர். அக்காலத்தில்தான் இயக்கங்கள் தீவிரமாக முளைவிடத் தொடங்கின. இலங்கையில் இயக்க தொடர்புகள் உங்களுக்கு இல்லையா?

இயக்கம் என்று அங்கே நேரடியான தொடர்பில்லை. மறைமுகமாக இயக்கங்களுடன் சம்பந்தம் இருந்தாக சொல்வதை விட தெரிந்தும் தெரியாததுமாக உறவுகள் இருந்தன. அது ஒரு மயக்கம். எங்களுடைய ஊரிலிருந்து ஒரு சொந்தக்காரப் பையன் தான் இயக்கத்தில் சேரப் போகின்றேன் என்று வல்வெட்டித்துறைக்குப் போய்விட்டான். அவன் கொழும்பில் இருந்து வந்த சின்னப் பொடியன். அவனிடம் சிங்கள எதிர்ப்பு இருந்தது. வல்வெட்டித்துறையில் இயக்கத்தில் சேர குட்டிமணியிடம் போயிருக்கின்றான். குட்டிமணி பார்த்துவிட்டு நீ சின்னப்பொடியன் என்று அனுப்பிவிட்டார். பிரபாகரன் என்ற பெயரை அறிந்துதான் சென்றிருந்தான். அவனால் அப்படி ஒருவரை கண்டுபிடிக்க முடியவில்லை. “இயக்கம் பயிற்சி எல்லாம் கொடுக்கின்றார்கள். என்னை சின்னப்பொடியன் என்று கலைச்சு விட்டார்கள்” என்று சொன்னான். இது நடந்தது 1977 அல்லது 1978 என்று நினைக்கின்றேன்.

அந்தக்காலத்தில் அமைப்பாக இயக்கம் திரண்டதா நான் அறியவில்லை. ஆனால், பெடியள் ஆயுதங்கள் தேடுகிறாங்கள் என்று கேள்விப்பட்டேன். ஜனநாயக வழி போராட்டத்தில் இருந்து ஆயுதவழிப் போராட்டமாக மாறுகின்ற காலகட்டம் என்று மட்டும் உணர்ந்திருந்தேன். இப்போது அந்தக் காலப்பகுதியில் இயக்கங்கள் அமைப்பாக திரளத் தொடங்கி விட்டன என்று புத்தகங்களில் வாசித்து அறிகிறேன்.

கி.பி.அரவிந்தன் புலம்பெயர் தேசத்தில் கவிதைகள் எழுத முன்னரே பாரிசில் கவிதைகள் எழுதியவர் நீங்கள். ஆண்டு வரிசையை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் தான் நமது புலம்பெயர் முன்னோடிக் கவிஞன் என்று தீர்க்கமாகச் சொல்லாம். கவிதைகள் எழுத நேர்தது எப்படி? அப்போது உங்களுக்கு ஆதர்சனங்கள் இருந்தார்களா?

அப்போது என்னிடம் இருந்த ஒரே புத்தகம் பாரதியார் கவிதைகள். மனதில் இருந்தது சில கண்ணதாசன் பாடல்கள், கூட்டணிக் கூட்டங்களில் கேட்ட காசி ஆனந்தத்தின் கவிதை வரிகள், அம்மா பாடும் கூத்துப்பாட்டுக்கள் போன்றன தவிர வேறு இல்லை. மஹாகவியின் பெயரே அப்போது எனக்கு தெரியாது. இத்தனைக்கும், சில்லாலையில் இருந்து அளவெட்டிக்குக் குறுக்காலை போனால் மூன்று மைல் கூட வராது. அவர் சில்லாலை நாய்கள் பற்றி எழுதிய குறும்பாவை பின்னாலைதான் வாசித்தேன்.

நான் பாரதியார் கவிதைகள் மீதே பித்துக் கொண்டிருந்தேன். வாசிப்பதற்கும் இதமாக இருந்தது. இதை திரும்ப திரும்ப வாசிக்கும் போது எனக்கும் இப்படியான கவிதை எழுதினால் என்ன என்ற எண்ணம் வந்தது.

“காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும்,மலையும் எங்கள் கூட்டம்;
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக்களி யாட்டம்”

இப்படி பாரதி கவிதைகளை வாசிக்க வாசிக்க வாசிக்க கவிதை எழுத வேண்டும் என்று ஆசை வந்தது. அதைப் பார்த்து கொஞ்சம் மாற்றி கொப்பியடித்து எழுதினால் என்ன என்று கூட ஆசைவந்தது. பிடிபட்டுவிடுவேன் என்ற பயத்தில் சொந்தமாக எழுத முயற்சித்தேன்.

செவ்வரத்தம் பூ மறந்தேன்
செவ்விள நீர் நிறம் மறந்தேன்
கனவுப் பணம் தேட கடல் கடந்தேன்.
அகதித்  தரையில் முகமிழந்தேன்
குந்தியிருகோவோர் நிலம்
குறித்துக்காட்டவோர் பூமி

என்ற மாதிரி – ஊர் நினைப்புதான். என்னுடைய அம்மா தனியாள். எப்படா ஊருக்கு போவம் என்ற யோசனை தானே எனக்கு இருக்கும். வறுமையாக இருந்தாலும் சந்தோசமாக இருந்த இடம். தொடக்க காலம் பிரான்ஸ் வந்தது இக்கட்டு மாதிரி தானே. அதனால் ஊர் நினைவுகளையும் ஏக்கத்தையும் வைத்து எழுதினேன்.

தமிழ் முரசு ஆசிரியர் நண்பர் உமா காந்தன் கேட்டவுடனே எனக்கு எழுதுகின்ற மனம் உண்டாயிற்று. உண்மையில் அதற்கு காரணம் பாரதியார் ஒருவர்தான். முன்னர் நாட்டில் அரசியல் கூட்டங்களில் காசி ஆனந்தனின் கவிதைகளை அப்போது அவர்போல் எழுத வேண்டும் என்று எண்ணுவேன். ஆனால், உள்ளத்தில் அப்படி எழுதுவதற்கு தோன்றவில்லை. இங்கே வேறு வழியில்லாமல் அவதியால் எழுதத் தொடங்கினேன்.

பின்னர் நண்பர் சபாலிங்கம் தொகுத்து ஆசியா என்ற அமைப்பின் மூலம் என் கவிதைகளைப் புத்தகமாகப் போட்டார். சபாலிங்கம் கொலை செய்யப்பட்ட பின்னர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். அப்போது என் நண்பர்களில் ஒருவன் செல்வத்தாரின் கவிதைகளை புத்தகமாக்கியதால் தான் – யாரோ கவிதை விமர்சகரால் அவர் சுடப்பட்டார் என்று  நக்கல் அடித்தான்.

கி.பி.அரவிந்தன் 90களுக்கு பிறகு, நான் கனடாவுக்கு வந்தபிறகுதான் பாரிஸ் வந்தார். அவருடைய கவிதைகள் நல்லதாயிருக்கலாம். சில சிலபேர் வேறு காரணங்களுக்காக அவர் புலம் பெயர்ந்த முதல் கவிஞன் என்று எழுதியதைப் பார்த்திருக்கிறேன்.

தனிமனித தத்தளிப்புகள் உங்கள் கவிதைகளில் இருந்தாலும், சகோதரப் படுகொலைகள்-மலையாக மக்களின் துயரம் என்று முற்போக்காகவும் கவிதைகள் எழுத ஆரம்பிக்கிறீர்களே? ஈரோஸ் கூட்டங்களால் ஏற்பட்ட தாக்கமா அவை?

இல்லை, இல்லை, இயல்பாகவே எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கின்றது. ஏனென்று சொன்னால் நான் ஈரோஸுக்கு போனது சும்மா. ஞாயிற்றுக்கிழமைகளில் எனக்கு வேலையும் இல்லை. கொஞ்சத்தை கற்றுக்கொள்ளலாம் என்று தான் சென்றேன். எனக்கும் தனிப்பட்ட வாழ்கை மூலம் சமத்துவ கொள்கைகள் மீது நாட்டம் இருந்தது. தனிச்சொத்து இல்லாவிட்டால் இந்த உலகம் சந்தோசமாக இருக்கும், ஆண்கள் இருக்கும் இடத்தில பெண்கள் இருந்தால் உலகில் இவ்வளவு சண்டைகள் இருக்காது என்ற எண்ணம் இருந்தது.

நான் சில்லாலையென்ற முற்றுமுழுதான கத்தோலிக்க கிராமத்தில் இருந்து வந்தவன். கத்தோலிக்கம் பெரும் பகுதி வலதுசாரிதன்மையும் சாதி ஒடுக்குமுறையும் உள்ள அமைப்புத்தான். ஆனால், சிலவேளை தர்மங்களையும் நியாயங்களையும் சொல்லித்தருவார்கள். ஈரோஸ் கூட்டங்களுக்கு போனது சந்தோஷம்தான்.

ஊரில் இருக்கும்போது, பங்குத்தந்தையாக இருந்தவர் ஒருதடவை பிரசங்கம் செய்யும்போது, இயேசுவின் ஐந்து அப்பத்தை  ஏழாயிரம் பேருக்கு பங்கிட்ட புதுமையைச் சொல்லி – இண்டைக்கு என்ன நடக்கிறது, ஏழாயிரம் அப்பத்தை ஐந்து சம்மாட்டிமார்கள் சாப்பிடுகிறார்கள். ஐந்து அப்பத்தை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கிட்டு பட்டினிகிடக்கிறார்கள் என்றார். மேலாடையைக் கேட்கிறவனுக்கு உள்ளாடையையும் மறுக்காதே என்பதைக் கேட்டுக் கேட்டு வளர்ந்தவன். ஈரோஸ் கூட்டத்திற்கு போனது சந்தோசம்தான்.

என் மச்சானின் நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தபோது உங்கை யாரோ ஈரோஸ் என்ற அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கினமாம். ஒரு நாளைக்கு கூட்டம் நடக்கும்போது புகுந்து வெளுக்க வேணும். அவன் (பிரபாகரனோ, அல்லது உமாமகேஸ்வரனோ தெரியவில்லை) எப்படி கஷ்டப்பட்டு இயக்கத்தை கட்டுறாங்கள்- விரைவில சிங்களவர்களுக்கு பாடம் படிப்பிக்கப் போகிறார்கள். இதுக்குள்ள சில சொட்டை சொறியர் இஞ்சை குழப்புதுகள் என்றார்.  அவர் எனக்கும் என்னுடைய மச்சானுக்கும் வேண்டிய ஆள். எனக்கு சங்கடமாக இருந்தது. அவரவர் தங்களுடைய விஷயத்தை செய்யட்டுமே, அது எனக்குப் பிடிக்காது என்று எவ்வாறு எண்ணுவது. எல்லோரும் ஒரு விஷயத்துக்காக சண்டை பிடிக்கின்றார்கள். ஏன் இப்படி வேதனைப்படுவான், ஏன் இப்படி ஒருவரை ஒருவர் கொல்றாங்கள் என்று தோன்றியது.

நீங்கள் குறிப்பிடுபவை பின்னாட்களில் எழுதிய கவிதைகள். ஆரம்பத்தில் அப்படி இல்லை. அவ்வாறாக கவிதைகள் எழுதிய காலங்கள் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றன. முதலில் சுழிபுரத்தில் புளொட்காறர்கள் புலிகளைக் கொன்றது. அது பெரிய துக்கமாக இருந்தது. சுழிபுரம் என்றால் எங்களுடைய வீட்டில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இருக்கின்றது. எல்லா மக்களுக்கும் பெரிய கவலை அது. நாலைந்து பெடியளை புளொட் காரர்கள் வெட்டி கடற்கரையில் தாட்டிருக்கின்றார்கள். அதே போல் கதைப்போம் என்று கூப்பிட்டுட்டு றீகனை வீதியில் வைத்த மாத்தையா சுட்டுக்கொன்றதாக உமாகாந்தன் என்னிடம் சொன்னார். றீகன் என்பவர் ஈபி.ஆர்.எல்.எப் அமைப்பை சேர்ந்தவர். அப்படி மாறி மாறி நடந்துகொண்டிருக்கும் போது இது எங்கே செல்லப் போகிறது என்று எனக்கு தெரிந்து விட்டது. அது கொடுத்த மனநிலையில் கவிதைகள் எழுதினேன். ஆனால், ஈரோஸ் அப்போது பரிசுத்தமாக இருக்கின்றது போல் எனக்கு தோற்றம் தந்தது.

என்ன தான் நடனத்தாலும் நாங்கள் தான் நாட்டை ஆளப்போகின்றோம் என்று எனக்கு ஈரோஸ்காரர்கள் சொல்லியிருந்தார்கள். பலஸ்தீனத்துக்கு எல்லாம் பயிற்சிக்குப் போகிறோம், அங்கு எங்களுக்கு KGP ஆல் உதவி கிடைக்கின்றது என்ற மாதிரியெல்லாம் சொல்வார்கள்.

அந்த நேரத்தில் ஈரோஸ் மலையக மக்களை இணைத்து போராட்டத்தை கொண்டு செல்வதுபற்றி வடிவா எங்களுக்குச் சொல்லித்தருவார்கள். வன்காட் என்று சொல்வது யாழ்ப்பாணத்து வறிய நடுத்தர மக்களை அல்ல, மலையக மக்களை என்று சொல்வார்கள். அவர்களுடன் இணைந்துதான் நாங்கள் உலகத்தில் ஒரு நாட்டை உருவாக்கலாம் என்று சொல்வார்கள்.

மலையக மக்கள் மீது அப்பவே எனக்கு சரியான பற்று. நான் இரண்டு மூன்று தடவை மலையகத்துக்கு யோயிருந்தேன். அவர்கள் தமிழர்கள் தானே, இவர்களை ஏன் மதிக்கின்றார்கள் இல்லை என்று தோன்றும். நான் ஒரு தோழருடன் இந்திய சுற்றுலாப் பயணிகளை கூட்டிக்கொண்டு அங்கு சென்றேன். இந்தியாகாறர்களுடன் அங்கிருந்த மக்கள் எல்லாம் கும்பல் கும்பலாக ஓடிவந்து கதைத்து தங்களுடைய கஷ்டங்களை அவர்களிடம் சொன்னார்கள். இந்தியாவில் இருக்கும் தங்கள் சொந்தங்களிடம் தமது கஷ்டத்தை சொல்லச் சொல்லி மன்றாடினார்கள். அவை எனது மனதுக்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்போது எனக்கு இளம் வயது. இந்த மலையக மக்களுக்கு விடுதலை கிடைத்தால் எங்கள் எல்லோருக்கும் சேர்த்து அந்த விடுதலை இருக்கும் என்று யோசித்தேன். மலையக மக்களுடைய அடிப்படை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அவர்களும் தமிழர்கள் தானே. யாழ்ப்பாணத்தார் சிங்கள ஆட்களைக் கூட திருமணம் செய்து கொள்வார்கள். சைவம், தமிழ் ஆன ஒரு மலையக பெண்ணை யாழ்ப்பாணத்தான் யாரும் திருமணம் செய்வார்களா? செய்திருக்கின்றார்கள். ஆனால், அதனால் பெரிய எதிர்ப்பையும் அவமானத்தையும் சந்தித்திருப்பார்கள். இதேபோல் சிந்தனைகள் ஈரோஸிடம் இருந்ததால் அவர்களுடன் கொஞ்சம் ஈடுபாடாக இருந்தேன். இன்று வரை அப்படித்தான் நினைக்கின்றேன்.

போரையும் ஆதரிக்கிறீர்கள், யுத்தத்தை மறுக்கவும் செய்கிறீர்கள்… ஒரு கலைஞனின் அல்லாட்டமாக இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் அப்போது உங்கள் கருத்தியல் நிலைப்பாடு என்னவாக இருந்தது? இன்று அதனை மீள் பரிசீலனை செய்கிறீர்களா?

உண்மையைச் சொல்லப் போனால் இன்றைக்கு நடிக்க தேவையில்லை. துரையப்பாவைக் கொலை செய்ததைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஏன் என்றால் தமிழராய்ச்சி மகாநாட்டுக்கு வாழ்கையில் முதல் தடவையாக வேட்டியைக் கட்டிக்கொண்டு நண்பனுடன் போய் அங்கு நடந்த படுகொலைக் களேபரத்தில் விழுந்து உருண்டேன். என்னுடைய வேட்டி எல்லாம் உரிந்தது. காலையில் எழுந்து போய் பார்த்தபோது ஏழு பேர் செத்துப் போய் இருந்தார்கள். அதை துரையப்பா தான் செய்தது. துரையப்பா கொல்லப்படவேண்டும் என்று நினைத்த காலங்கள் எல்லாம் இருக்கின்றன. இன்று அந்தக் கருத்துக்களில் மாற்றங்கள் இருக்கலாம்.

அன்று அமிர்தலிங்கம் எல்லாம் சரிவர மாட்டினம். இவை தங்களுடைய தேர்தல் வெற்றிக்காத்தான் தமிழர் தாயகம் பற்றி கதைக்கினம். பேசித்தான் பெறலாம் என்று இப்ப சொல்லுகினம், அப்படியில்லாமல் கட்டாயம் சண்டைபிடித்து தான் பெறலாம் என்று நம்பினேன்.

துரையப்பா நிறைய நன்மைகள் செய்தார் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர் மேயராக இருந்தார். மேயருக்குரிய வேலைகளை செய்தார். அவருக்கு அரசாங்கம் பக்கபலமாக இருந்ததால் அவர் சில விஷயங்களைச் செய்தார். யாழ்ப்பாண நூலகமோ, யாழ்ப்பாணத்திலே உள்ள விளையாட்டு அரங்கமோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய விடயங்களோ துரையப்பாவால் கொண்டு வரப்பட்டதல்ல. புதிய சந்தை எல்லாம் அவரால் கொண்டு வரப்பட்டதல்ல. இதெல்லாம் எனக்கு தெரிந்த காலத்தில் நடந்தது.

தமிழர்கள் பெரும்பான்மையானவர்கள் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்ததாலும், தமிழ் தலைவர்கள் தமிழ் உரிமை பற்றி பேசியதாலும் சிறிமா அரசுக்கு சப்போர்ட் பண்ணிய துரையப்பாவுக்கு அரசாங்கம் சில சலுகைகளை செய்தது. அதைவைத்து சில விஷயங்களைச் செய்தார். சிலருக்கு வேலை வாங்கி கொடுத்தார். அவ்வளவு தான். நான் சொல்வது என்னவென்றால் அந்தக்காலத்தில் போராட்டம் செய்வது சரி என்று நினைத்த ஆள் நான். ஆனால் இப்படி எல்லாம் தலை கீழாக போகும். இப்படி எல்லாம் செய்வாங்கள் என்று தெரியாது. போர் செய்வது சரி, அது வெல்லும் என்றும் நம்பினேன் நான்.

புலிகள் அமைப்புடன் தொடர்பு இல்லையா?

எந்தக் காலத்திலும் எனக்கு புலிகளோடு உறவு இருந்ததில்லை.

பாரிசில் இருந்து 1984ம் ஆண்டு என் உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக கள்ளப் பாஸ்போர்டில் லண்டன் சென்றேன். என் நண்பர் தங்கியிருந்த இடத்திற்கு சென்ற போதுதான் தெரிந்தது அது புலிகளின் அலுவலகம் என்று. நண்பரும் வேறு நாட்டிலிருந்து வந்தவர். அன்று பகல் நீர்வேலியில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்ற செய்தி வந்தது. அன்றிரவு அங்கிருந்த  நண்பர்கள் தண்ணியடித்து கொண்டாடினார்கள். நானும் அங்கிருந்தேன். அண்மையில் தொடங்கியிருந்த என் ஈரோஸ் தொடர்புகளை நான் சொல்லவில்லை.

அடுத்தநாள் பகல் அவர்களின் அலுவலகத்தில் ஒரு பெண் தட்டச்சு செய்துகொண்டிருந்தா. அவவைக்காட்டி என் நண்பன் – அவ ஒரு பெரிய டொக்டர் எங்களுக்கு உதவி செய்கின்றவா. எங்கடை அமைப்பு எவ்வளவு பலமாய் வளருது பார்த்தியோ என்று சொல்லிவிட்டு, இவாவின் கணவர் பின்னேரம் இவவை கூப்பிட வருவார், அவருடன் கதைக்க வேண்டாம் என்றான். ஏனென்று கேட்க “அவர் சிங்களவர்” என்றான்.

மத்தியானம் அவவுடன் கதைத்தேன். பாரிஸ் தமிழர் நிலவரங்கள் பற்றிக் கேட்டா. தன்னுடைய பெயரை ராஜினி என்றா. எனக்கு ஒரு தடுமாற்றம் வந்தது, இவர்களுக்கு முன் ஈரோஸ் இயக்கம் நின்று பிடிக்குமா என்று.

ஊரிலிருந்து வரும் கடிதங்கள், உள்ளதுக்கை வெள்ளீசு புலிகள் தான் என்றமாதிரி இருக்கும். நானும் புலிகளை ஆதரிப்போம் என்ற மனநிலையில் இருப்பேன். ஆனால், அவர்கள் செய்கின்ற செயல்கள் என்னைப் பின்வாங்க வைக்கும். இந்தியன் ஆமியுடன் சண்டை பிடிக்கும்போது மீண்டும் அவர்களுக்கான ஆதரவு மனநிலை வந்தது.

ராஜனி கொலையை அறிந்தபோது பெரிய கோபம் வந்தது. என் நண்பன் சபாலிங்கத்தை இழந்தபோது வெறுப்பே வந்தது.

எல்லா இயக்கங்களும் தமிழீழ வரைபடத்தை நேசித்த அளவு, அங்கு வாழ்ந்த மக்களை நேசிக்கவில்லை. எத்தனையோ கொலைகளைத் தவிர்த்து இருக்கலாம். மக்கள் நேசம் இல்லாப் போராட்டம்- என் கவிதை வரிகளில் சொல்ல வேண்டும் என்றால் “அன்பில்லா நேசிப்பில் நான் எரிந்தேன்”

சபாலிங்கத்திடம் உங்களுக்கு நீண்டகால நட்பு இருந்திருக்கிறது. கருத்தியல் நிலைப்பாட்டில் உங்கள் இருவருக்கும் இடையில் இருந்த ஒற்றுமைகளும் அதற்குரிய காரணங்களில் ஒன்றா?

சபாலிங்கத்திடம் தமிழீழம் பெறவேண்டும் என்ற கருத்துதான் இருந்தது. அதற்காக என்னவும் செய்யலாம் என்பதுபோல பேசுவார். சபாலிங்கம் ஒரு ஆரம்பகால போராளி. மார்ஸிய  கருத்துக்களோ அல்லது முற்போக்கு கருத்துக்களோ அவர் அறிந்தமாதிரி காட்டிக்கொள்ளவில்லை. அவருடைய பிரச்சனை என்னவென்றால் டெலோ இயக்கத்தின் பாரிஸ் தலைமைப் பொறுப்பை தனக்கு தந்திருக்க வேண்டும் என்பதுதான். அவர் ஸ்ரீசபாரத்தினத்திற்கு முற்பட்ட ஆள். அவரைப் பற்றி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது என்னெவென்றால், அவர் மறியலில் இருந்தபோது ஐந்தாவது மாடியிலிருந்து பாய்ந்து சாகக்கிடந்தவர் என்பதுதான். அவர் திரில்லான ஆள். ஆரம்பகால சண்டித்தனங்களுக்கு அவருக்கு பெரிய பங்கிருக்கின்றது. பிரபாகரன் சபாலிங்கத்தைப் பற்றி கேள்விப்பட்டு சபாலிங்கத்தை சந்திக்கப் போனாராம்.

நான் பாரிசில் அவரைச் சந்திக்கின்ற காலத்தில் சபாலிங்கம் மெல்ல மெல்ல வாசிக்கத் தொடங்குகின்றார். அவருக்கு நன்றாக ஆங்கிலம் தெரியும். படித்த குடும்ப பின்புலத்தைச் சேர்ந்தவர். நிறைய செய்திகள் அவருக்கு தெரிகின்றது. அவர் அகதிகளுக்கு கேஸ் எழுதிக் கொடுத்துக்கொண்டிருந்தார். வாசித்து வாசித்து அவர் கொஞ்சம் தன்னை மாற்றிக்கொள்கின்றார். அவருக்கு எல்லாம் கவிதை வராது. உன்னுடைய பாட்டு தான்டா என்னுடைய முதல் புத்தகம் என்று சொல்லுவார். அவர் மெல்ல மெல்ல வாசிப்புக்குள்ளே வருகின்றார். பழைய முரட்டுத்தனம் எல்லாம் இல்லாமல் போகின்றது. ஆனால் அவருக்கு ஒரு புலி எதிர்ப்பு இருந்தது. அவருடைய பிரச்சினை புலிக்குள்ளே போகவேண்டும் என்றில்லை. அந்தக் காலத்தில் கொள்கை ரீதியாக அவர் என்னுடன் எதுவுமே கதைத்ததில்லை. நானும் கதைத்ததில்லை. அன்றைய செய்திகளைப் பற்றி கதைப்போம். விடுதலைப் புலிகள் அப்படி செய்தார்கள் இப்படி செய்தார்கள் என்று கதைப்போம். அவருக்கு ரெலோ சாவகச்சேரியை அடித்த பிறகு கூட அவருக்கு பெரிய கவலை இருந்தது. அவர் தான் இங்கு பொறுப்பாக இருந்திருக்க வேண்டும். ஸ்ரீயன் வந்து இப்படி செய்துவிட்டான் என்ற எண்ணம் இருந்தது. அவர் முன்னம் மாடியால் பாய்ந்த படியால் அவர் ஒழுங்காக நிமிர்ந்து நிற்கமாட்டார்.  அவரை உபசரித்து கவனித்த அன்பான மனைவி இருந்தார். பகிடி விட்டு கதைக்க கூடிய ஆள். என்னுடன் பகிர்ந்து கொண்டதில் அவருடைய பெரிய துக்கம் என்னவென்றால், தான் இவ்வளவு தூரம் சென்று சிறைக்கும் போய் வந்தும் தன்னை முக்கியத்துவம் இல்லாமல் செய்துவிட்டார்கள் என்பது தான்.

பாரிஸிலிருந்து கனடா ஏன்? அரசியல் நெருக்கடி ஒன்றும் இல்லையா?

இந்தக்காலத்தில் இலக்கியங்களில் நிறைய வாசித்து கடைசிக்காலத்தில் இலக்கியம் பற்றிய ஒரு முதிர்வு எனக்கு வருகின்றது. செயற்படுத்துவதற்கு ஒன்றுமில்லை. அந்த நேரத்தில் திடீரென்று வரதராஜபெருமாள் அங்கே  வந்துவிட்டார். அந்த நேரத்தில் பெரியார்தாசன் எங்களுடைய வீட்டில் இருக்கின்றார். வரதராஜபெருமாள் நீங்கள் உமாகாந்தனின் நண்பன் என்பதால் ஈபிஆர்எல்எப் இல் சேருங்கள் என்று கேட்டார். 

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் நூலகராய் இருந்த கிருஷ்ணகுமாரின் நட்பு பேறாகக் கிடைத்தது. அதன் பின்னர் நான் மெல்ல மெல்லமாக இலக்கியத்தின் பக்கம் போய்க் கொண்டிருந்தேன். ஜேஜே சிலகுறிப்புகள் வாசித்துவிட்டேன், தளையசிங்கத்தின் ‘தனி வீடு’ நாவலை இந்தியாவிலிருந்து சபாலிங்கம் எனக்கென்று வாங்கிகொண்டு வந்து தந்திருந்தார். இவற்றை வாசித்த பிறகு மெல்ல மெல்ல எனக்கு ஆயுதப்போராட்ட ஆதரவிலிருந்து விலக வேண்டும் என்ற எண்ணம் வந்தது. நான் கனடாவுக்கு வெளிக்கிடும் போதும் ஈபிஆர்எல்எப், ஈரோஸ் ஆதரவாளனாகத்தான் வெளிக்கிட்டேன். கனடாவுக்கு வரவேண்டும் என்று திட்டம் எதுவும் இருக்கவில்லை. மனைவிக்கு கனடா செல்ல விருப்பம் இருந்தது. எங்களுக்கு உறவினர்கள் என்று யாரும் பாரிசில் பெரிதாக இல்லை. மனைவியின் அண்ணா வந்து கட்டாயப்படுத்தி என்னைக் கூப்பிட்டார். எனக்கும் பிள்ளையும் பிறந்துவிட்டது. விசாவும் பாரிஸில் கிடைக்கவில்லை. அதுதான் வெளிக்கிட்டேன்.

இலங்கையிலிருந்து பாரீஸ், அங்கிருந்து கனடா என்று உங்கள் நிலம் மாறியது. இந்த மாறுதல்கள் உங்கள் அரசியல், சமூக, இலக்கிய புரிதலில்களில் என்ன மாறுதல்களை உருவாக்கி இருக்கின்றன?

நான் கனடா மொன்றியலுக்கு வந்தவுடன் பார்வை சஞ்சிகை வெளியிட்டேன். அது ஒரு முக்கிய திருப்பம் எனக்கு. இரண்டு சஞ்சிகைகள் வந்துகொண்டிருந்தன. ‘தமிழ் எழில்’, ‘பார்வை’ என்றவை. சின்னதாக வேறுபல விடயங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தமிழ் ஒளி, தமிழ் ஒன்றியம், விடுதலைப்புலிகள் அமைப்பு என மூன்று முக்கியமான அமைப்புகள் இருந்தன. தமிழ் ஒளி என்ற  ஒரு அமைப்பிலிருந்து ஒரு பத்திரிகை வந்தது. இந்தக்காலத்தில் ஜயகரன், ஆனந்தபிரசாத், மூர்த்தி போன்றவர்கள் நண்பர்கள் ஆனார்கள். ஆனந்தபிரசாத் நன்றாக எழுதுவார். அவர் ஒரு நிகழ்ச்சி பார்க்கக் சென்று இருந்தார். அது விடுதலைப்புலிகள் இல்லாத ஆட்கள் செய்த நிகழ்ச்சி. அங்கே விடுதலைப்புலிகள் வந்து பிரச்சினை செய்து பெரிய கைகலப்பு ஆகிவிட்டது. பிரசாத் அதை ஒரு கவிதையாக “சந்திரமண்டலத்திற்குப் போனாலும் தமிழன் அடித்துக் கொள்ளுவான்” என்று கவிதை பார்வை இதழில் எழுதினார். நிர்வாகத்துக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அதை Print பண்ணி வைத்திருந்தோம். புத்தகமாக கட்டவில்லை. அந்தப் Print ஐப் பார்த்த ஒருவர் விடுதலைப்புலிகளிடம் தங்களுக்கு எதிராக எழுதப்பட்டு இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார். நிர்வாகம் மிரட்டலுக்கு பயந்து கவிதையை எடுக்கச்சொல்லியது, நான் மாட்டேன் என்று வெளியேறினேன்.

அப்போது கனடாவில் தமிழர்கள் குவியும் இடமாக மொன்றியல் என்ற பிரதேசம் இருந்தது. பின்னர் டொரண்டோவாக மாறிப்போனது. எனது மனைவியின் தாயாரும், மூன்று மச்சான்களும் டொரண்டோவில் இருந்தார்கள். நானும், ஜெயகரன், குமார் மூர்த்தி, செழியன் ஆகியோர் டொரண்டோவுக்குச் செல்ல முடிவெடுத்து அங்கே இடம்மாறினோம். ஒரு நாள் ஜெயகரன் என்னைத் தேடிவந்து “இங்கே சும்மா இருக்க முடியாது, ஏதாவது செய்ய வேண்டும். கொஞ்ச நல்ல இளம் பொடியள் இருக்கினம். அவர்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நிக்கினம். நீங்களும் வாங்கோ” என்று என்னைக் கூப்பிட்டார். அங்கேதான் இளங்கோ, ராதா, மயில் என்ற நண்பர்களைச் சந்தித்தேன். நல்ல உற்சாகமாய் இருந்தது சந்திப்பு. பின்னர் செழியனையும், குமார் மூர்த்தியையும் அடுத்த கூட்டங்களுக்கு அழைத்துக்கொண்டு சென்றேன்.

ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துததில் ஒரு பத்திரிகை தொடங்குங்கள் அண்ணை என்றார்கள். தேடல் என்று நான் பெயர் வைத்தேன். இவங்களுக்கு பத்திரிகை துறை சார்ந்து எல்லாம் தெரியும் என்று நான் நினைத்தேன். ஆனால் ஒருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. “எந்த அச்சகத்தில் கொண்டு போய் அடிக்கிறது?” என்று என்னிடமே கேட்டார்கள். தமிழ் எழுத்துக்கள் இல்லை. தமிழ் எழுத்து உள்ள அச்சகங்கள் இல்லை. தட்டச்சு செய்வோம் என்று தீர்மானித்தோம். உடனே காசுகள் போட்டு இந்தியாவிலிருந்து ஒரு கிழமையில் தட்டச்சு இயந்திரம் எடுத்தார்கள். ஆனால் தட்டச்சு செய்யத் தெரியாது. இப்படி நிறைய பிரச்சினைகள். என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும் அந்த நாட்களில்தான் அமிர்தலிங்கத்தை சுட்டுக் கொன்று விட்டார்கள். பெரிய உணர்ச்சிபூர்வமாகப் போய்விட்டது. பொடியன்கள் பார்த்தாங்கள், இவரை நம்பினால் புத்தகம் வராது என்று ஒரு காரஜை எடுத்து ‘தேடகம்’ அமைப்பு என்று சொல்லி சில புத்தகங்களைப் போட்டு ஒரு நூலகத்தை திறந்து விட்டார்கள்.

அமிர்தலிங்கம் சுடப்பட்டுவிட்டார் என்று அங்கு நடந்த அஞ்சலிக் கூட்டத்திற்கு போனால், விடுதலைப்புலிகள் பெரிய அட்டகாசம் செய்துகொண்டிருந்தார்கள். தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற முக்கியமான இடம் அருகே ஒருவன் தமிழில் அச்சிட்ட பேப்பர்களை விற்றுக்கொண்டு இருந்தான். எமக்கு தமிழ் பேப்பர்களைப் பார்க்க பெரிய ஆச்சரியமாகப் போய்விட்டது. யார் அதனைச் செய்க்கிறார் என்று கண்டுபிடித்தால் ஜோர்ஜ் என்று தெரிந்தது. அவர் நல்ல கெட்டிக்காரன். பத்திரிகை மீது ஆர்வம் கொண்டவர். முன்னோடி என்று சொல்லலாம். ஜோர்ஜோடு தொடர்பு கொண்டோம். விடுதலைப்புலிகள் தங்களுடைய விடயங்களுக்கு ஜோர்ஜ் உதவுகிறார் இல்லை என்று அவரோடு தொடர்பு கொண்டு தூசணத்தால் பேசியிருக்கிறார்கள். அப்ப தொலைபேசியில் தொடர்பு கொண்டு யாரென்று தெரியாமல் ஏசலாம் தானே. அதனால் நொந்துபோய் கடும் புலி எதிர்ப்பில் அவர் இருந்தார்.

தேடகம் அமைப்புக்கு ‘தேடல்’ புத்தகத்தை அவரே அடித்தார். தட்டச்சு தெரியும், கணனி இருக்கின்றது. எங்களிடம் ஒன்றுமே இல்லை. அவரே அடிச்சு எல்லாம் செய்தார். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தோம். இதில் சந்தோசமான விடயம் என்னெவென்றால் உலகத்திலே எந்த இடத்திலேயும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஒரு அமைப்பு செயற்பட முடியாது. இலக்கிய சந்திப்பு எல்லாம் பின்னால் வசதி ஏற்படுத்திய பிறகு வந்தது. அதற்கு முன்னர் அவர்களிடம் அடிவாங்கிய ஆட்கள் தான் அதிகம்.

என்ன சொன்னாலும் விடுதலைப்புலிகள் பலமான அமைப்பாக வந்துவிட்டது. இலங்கையிலிருந்து நிறைய ஆட்கள் வரத்தொடங்கினார்கள். எதிர்த்து கதைத்தவர்கள் ஓரளவுக்கு தலைமறைவாகத் தொடங்கிவிட்டார்கள். எனக்குத் தெரிய பலருக்கு அடி விழுந்தது. தேடகம் அமைப்பில் விடுதலைப்புலிகளில் இருந்து முரண்பட்டு வந்தவர்கள்தான் பெருன்பான்மையோர். அல்லது வேறு ஆயுத இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இங்குள்ள புலிகளிடம் நீங்கள் எங்களை அடித்தால் உங்களை லைட் கம்பத்தில் கட்டி வைப்போம் என்று சொன்னார்கள். நீங்கள் கத்தி எடுத்தால் நாங்களும் கத்தி எடுப்போம் என்றார்கள். எனக்கும் பயம் இருந்தது. வன்முறை என்றால் வன்முறைதான் . அவர்களும் முன்னாள் இயக்கக்காறர்கள் தானே – புலம்பெயர்ந்த மற்ற இடங்களில் எல்லாம் ஒன்றும் கதைக்க முடியாத இடத்தில் ஒரு அமைப்பு ஸ்தாபன ரீதியாக அதுவொரு சிறிய கட்டடத்துடன் முதன் முதலில் இயங்கியது.

உதாரணத்துக்கு நாங்கள் முஸ்லிம் மக்களை வெளியேற்றியதற்கு எதிராக கோயில் ஒன்றில் சத்தியாக்கிரகம் செய்தோம். அன்றைக்கு புலி எதிர்ப்பு கதைத்தவர்களும் இப்போது கதைக்கிறவர்களும் அந்த இடங்களுக்கு அப்போதெல்லாம் வருவதில்லை. ஏனென்றால் பயம். எங்களை புலி என்று சொல்வார்கள், புலிக்கு கொடி பிடித்தவர்கள் என்றும் சொல்வார்கள். இப்படி சொல்பவர்கள் எல்லாம் அப்போது பயந்துகிடந்தவர்கள். அந்த வகையில் எனக்கு ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் ஒன்றுமே கதைக்க முடியாத இடத்தில் கதைக்க பண்ணிய அமைப்பை உருவாக்கியதில் பங்களிப்பு செய்தது. அது தான் ஒரு தொடக்கம்.

என்னுடைய செயல்களில் நான் முக்கியமானதாக கருதுபவைகளில் ஒன்று 1990 இல் ‘நிரபராதிகளின் காலம்’ என்ற நாடகத்தை தேடகத்தில் இயக்கியது. தேடகத்தின் இந்த நிகழ்வு டொரண்டோ இலக்கிய சூழலலை மாற்றியது.  மண்டபம் நிறைந்த கூட்டம். இந்தியக் கலைஞர்களோ, தமிழ் பொழுதுபோக்கோ இல்லாமல் அந்த நடந்த நிகழ்வு நடந்தேறியது. பொதுகுற்றம் என்று ஒன்று உண்டா? எவ்வாறு சாமானியர்கள் சர்வதிகார ஆட்சியை எதிர்கொள்கிறார்கள்.. அச்சர்வதிகார ஆட்சியின் குற்றங்களும் அவர்களுக்கும் எவ்வாறான தவிர்க்க முடியாத தொடர்புகள் ஏற்படுகின்றன என்பதை மையமாகக் கொண்டு அந்த நாடகம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. எப்படி கவிதை தெரியாமல் கவிதை எழுதினேனோ அப்படியே நாடகம் பற்றித் தெரியாமல் நாடகம் செய்தேன்.

புலிகள் தொடர்பாக உங்கள் மனநிலை தொடர்ந்தும் தடுமாற்றம் கொண்டதாகவே இருக்கிறதே?

ஒவ்வொரு தடவையும் என்னுடைய மனம் சொல்லும், அவர்கள் தான் உயிரைக் கொடுத்து போராடுகின்றார்கள்; நேர்மையாக இருக்கின்றார்கள் என்று. ஏதோ தவறு விடுகின்றார்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது ஒவ்வொரு தடவையும் பாரிய தவறுகள் தனிப்பட்ட ரீதியில் என்னைப் பாதிக்கும். என்னுடைய விமர்சங்கள் உறவினர்கள் இடையே என்னை ஒதுக்கி வைத்தது. ஒரு கிறிஸ்மஸ் விருந்துக்கு போனால் கூட எனக்கு முன்னால் தெளிவாக கதைக்க மாட்டார்கள். நேரே “நீங்கள் உங்களை பிரபல்யமாக்குவதற்காக எழுதுகின்றீர்கள். ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தால் தவறுகள் இருக்கும். அவற்றைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கின்றீர்கள்” என்று சொல்வார்கள்.

பதிலுக்கு “சும்மா நாலு பேர் கதைத்தால் சரியா? இப்படி அநியாயமாக நடக்க முடியாது. இது வந்து ஒரு நாட்டை உருவாக்குவதற்குரிய ஒரு விடயத்தை புலிகள் செய்யவில்லை. சும்மா ஆமி வரப்போகின்றான் என்று அடிபட்டது போல் இப்போதும் கதைத்துக்கொண்டிருக்கின்றீர்கள். ஒரு நாடு உருவாகுவதென்றால் நிறைய விடயங்கள் இருக்கின்றன” என்றெல்லாம் புத்திஜீவிகள் மாதிரி கதைக்க முயல்வேன்.

நான் பெரிதாக ஆதரவோ எதிர்போ இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் இருப்பேன். எங்கள் ஊரில் அதை வெள்ளீசு மனநிலை என்பார்கள். புலிகள் தொடர்ந்து இயங்கிய படியால் பல தவறுகளை விட்டார்கள். அக்காலங்களில் அவர்களை எதிர்த்து விமர்சித்தவர்களின் பக்கம்தான் நின்றேன். அதுதான் தர்மம் என்ற நினைப்பு இப்பவும் உண்டு.

எங்கள் ஊரில் புளொட் அமைப்பு செல்வாக்காக இருந்தாலும், நான் ஈரோஸ் அமைப்புக்கு ஆதரவாக இருந்தாலும், புலிகள்தான் தொடர்ந்து நின்று பிடிப்பார்கள் என்ற நினைப்பு இருந்தது. புலிகள் அழிந்த பின்னரும் சொல்கிறேன். இன்னும் முப்பது வருடங்களின் பின்னர் பிரபாகரன் பென்னம் பெரிய ஆளாக இருப்பார்.

ஒரு கதையொன்று, ஒருவன் தன் இளவயதில் வீட்டு வளவில் நின்ற நாலடி பாம்பை துணிந்து அடித்துக் கொன்றார். அவர் கல்யாணம் முடித்து தனது மனைவிக்கு இக்கதையை சொல்ல அது ஏழடி வளர்ந்துவிட்டது. பின்னர் தன் பிள்ளைகளுக்கு அந்தக் கதையைச் சொல்லேக்கை பத்தடி வளர்ந்துவிட்டது.

என்னதான் சொன்னாலும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தமிழர்களது வரலாற்றில் பிரபாகரன் ஒரு முக்கிய ஆள்தான். ஆனால், முப்பது வீத எதிர்ப்பு எப்பவும் இருந்து கொண்டிருக்கும்.

ஒருவர் பனை தறிச்சதுக்காக முல்லைதீவில் புலிகளின் காவல் துறையில் பிடிப்பட்டு சரியான பிரச்சினைப்பட்டார். பிறகு சண்டை எல்லாம் முடிந்த பிறகு “புலிகளிடம் இப்போதும் கோவம் இருக்கின்றதா அண்ணை?”, என்று கேட்டேன். “நாங்கள் பனை தறித்ததால் அவர்களுடன் பிரச்சினைப்பட்டோம். அவங்கள் வந்து பிள்ளைகளையும் குடுத்து தங்களையும் கொடுத்து உயிரையும் கொடுத்துப்போட்டு போயிட்டாங்கள். இனி இதைப்பற்றி கதைத்து என்ன செய்வது அவர்கள் பாவங்கள்”, என்று சொல்லிக்கொண்டு போனார். அப்படித்தான் என்னுடைய மனநிலை இருக்கின்றது.

ஒன்றைச் சொல்லலாம், 2009 இல் புலிகள் தோற்று அழியேக்கை புலிகளின் தோல்வி மாத்திரமல்ல இனி தமிழ் மக்கள் முழங்காலில்தான் இருக்கவேண்டும் என்றேன். “விதியே விதியே தமிழ் சாதியை என்ன செய்ய நினைத்தாய்” என்ற கவிதையோ அல்லது நிலாந்தன் சண்டைக்கால் தப்பி வந்து “சொற்கேளா புதல்வர்களின் சூடு இறங்கா உடல்களைக் கடந்து வந்தோம்” என்ற மாதின ஒரு கவிதை எழுதிய ஞாபாகம், இதுகளை நினைக்க வேண்டியதுதான்.

காலம் இதழ் ஒரு தேசிய இனத்திற்குரிய இதழாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. தமிழில் எழுதத் தெரிந்த எல்லோரும் எழுதுகிறார்கள். பல்வேறு நிலைப்பாடுகள் கொண்டவர்களுடன் சேர்ந்து இயங்குகிறீர்கள். இலக்கிய கொள்கையாக ஏதாவது கொண்டிருக்கிறீர்களா?

விதி சமைப்பவர்கள் தான் இலக்கியத்தில் இயங்க முடியும் என்று நம்புகிறவன் நான். இலக்கியத்தைப் புரிந்து கொண்ட பிறகு என்னுடைய சமயத்தை விட என்னுடைய இலக்கியத்தில் தான் எனக்கு நம்பிக்கை அதிகம். இலக்கியம் மனித வாழ்வை உய்விக்கும். மனித மனங்களை மாற்றும். ஒரு நல்ல கதையை வாசித்தால் நீங்கள் ஒரு நல்ல மனிதனாக வாழுவதற்குரிய சின்னச் சின்ன விதைகளைப் போடும்.

முந்தின காலத்தில் எப்படித் தான் நல்ல கூத்துக்களைச் செய்தாலும் கத்தோலிக்கம் அதற்குள் இருப்பதைப் பார்க்கலாம். ஞானஸ்தானம் குடுத்து மதம் மாற்றம் செய்வதற்கு கத்தோலிக்கம் கூத்தை தன்னுடைய வாகனமாகப் பாவிக்கின்றது. அதேபோல முற்போக்குவாதிகளும் இலக்கியத்தை தங்களுடைய வாகனமாக பாவிக்கின்றனர். அவைகளும் நாளைக்கு விடிவு வரும். தொழிலார்கள் ஒன்று படுவினம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இலக்கியத்தின் வேலை அது அல்ல. இவைகளை வாகனமாகப் பாவிக்கின்றது பிழை என்று தான் நான் கருதுகின்றேன். மதம் என்றாலும் சரி அரசியல் என்றாலும் சரி.

அண்மையில் கூட ஏங்கல்ஸ் சொன்ன ஒரு வரியை யாரோ சொல்லக் கேட்டேன்.

“காலகாலமாக இலக்கியத்தை அரசியலின் பணிப்பெண்ணாய் கருதும் மனோபாவம் இங்குண்டு. அந்தக் கோப்பையை இங்கே கொண்டு வா. இந்தச் சாப்பாட்டை அங்கே கொண்டுபோய் கொடு” என.. இலக்கியம் அரசியலின் பணிப்பெண்ணல்ல. சுயாதீனமானது. தன்னளவில் சுதந்திரமானது.

கலை கலைக்காவும் இல்லை என்பது போல கலை கட்சிக்காகவும் இல்லை. இப்படியான பாரம்பரியத்தை நான் பெரும்மதிப்பு வைத்திருக்கும் கைலாசபதி, சிவத்தம்பி போன்ற அறிஞர்கள் பிழையான வேலையாகச் செய்துவிட்டார்கள். இலக்கியம் பக்கச்சார்பற்றது, கட்சியோ மதமோ அதற்கு தேவையில்லை. அதனுடைய வேலை வேறுமாதிரியானது. அதனுடைய பயன் வேறு மாதிரியானது. ஒரு பக்கத்தில் பொழுது போக்காக இருக்கும். ஒரு பக்கத்தில் மனித மனங்களை உய்விக்கின்றதாக இருக்கும். மனித மனங்களுக்கு ஒரு வடிகாலாக இருக்கும். மனித மனங்களுக்கு நல்ல விஷயமாக இருக்கும் என்ற எண்ணம் எனக்கிருக்கின்றது.

தேடல் பத்திரிகையில் மூன்று இதழ்களுக்கு, தேடகம் ஆரம்பித்த காலத்தில் ஆசிரியர் குழுவில் ஒருவராக ஜெயகரன் ,செழியனுடன் நான் இருந்தபோது மற்றவர்கள்  சொன்னார்கள், நீங்கள் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள். பெண் விடுதலை பற்றி, அடையாள அரசியல் பற்றி சாதிப்பிரச்சினை எல்லாம் வரவேண்டும். நீங்கள் விலகுங்கள் என்று என்னை விலக்கி விட்டார்கள்.

அந்தக் காலகட்டத்தில் தான் எனக்கு விருப்பமான இலக்கியத்தை முன்னிறுத்தும் இதழ் ஒன்றை தொடங்க வேண்டும் என்ற  எண்ணம் வந்தது. அதன் அடிப்படையிலே காலம் இதழைத் தொடங்கினேன்.

காலம் இதழுக்கான ஆக்கங்களை கனடாவிலிருந்தும் மற்ற நாடுகளில் இருந்தும் நான் தொகுத்துக் கொடுப்பேன். வடிவமைத்து அச்சடித்த இடம் இந்தியா. தமிழ் இலக்கிய உலகில் இது புதிய விடயம். சூழலும் புதியது.

அப்போது முக்கிய இதழாகப் பேசப்பட்டது சரிநிகர். அதன் ஆசிரியர் என்று சேரனின் பெயர் இருக்கும். சேரன் அப்போது கனடாவில் படிக்கிறார். அவ்விதழ் திறமையாக வெளிவந்ததற்கு முக்கிய காரணம் விக்னேஸ்வரன். அவரின் பாதுகாப்புக்காக சேரனின் பெயரை ஆசிரியராக போட்டார்கள் என்று நினைக்கிறேன். எக்ஸில், உயிர்நிழல் போன்ற நல்ல இதழ்கள் பிரான்சில் இருந்து வெளிவர ஆரம்பித்து இருந்தன. அவை எல்லாம் இலங்கை இந்தியாவில் கிடைப்பதில் சிக்கல். அவர்களுக்குள் சண்டை வந்தபோது அதுதொடர்பான fax இலங்கை, இந்தியாவுக்கு தெரிந்த இலக்கத்துக்கு எல்லாம் போகும். அவர்கள் பார்த்தபோது இது என்ன கோதாரியடா என்று திடுக்கிடு போவார்கள். இதுதான் சூழல்.

அந்த காலத்தில் எந்த விரைவான தொடர்பாடல் வசதியும் இல்லை. நான் இங்கிருந்து தபால் மூலம் அனுப்புவேன். அங்கே இரண்டு பாரம் முடிந்து விட்டது. மூன்று பாரம் முடிந்து விட்டது என்று சி.மோகன் சொல்லுவார். இறுதியில் இதழ் வரும். நான் கொடுத்த ஆக்கங்கள் தான் வந்திருக்கும்.

இது முற்று முழுதாக தமிழ் இலக்கியத்தில் ஒரு புது முயற்சி. மணிக்கொடி மரபில் வந்த ஒரு சஞ்சிகை என்று இதைச் சொன்னாலும், இது முற்று முழுதாக வேறு. இந்த தொடர்பாடல் பிரச்சினையால் பிழைகள் வந்தன. ஆனால், அதற்காக இதைச் செய்ய முடியாது அல்லது நிறுத்த வேண்டும் என்று நான் சோர்ந்து போகவில்லை. இதழை கனடாவில் செய்யலாமே என்று பலர் சொல்லியிருக்கின்றார்கள். கனடாவிலும் செய்து பார்த்து இருக்கிறேன். இந்தியாவில் அச்சடித்து கொடுத்தால் தான் எனக்கு அது சரியெனப் பட்டது. இலங்கைக்கும் போகும், இங்கேயும் வரும், இந்தியாவிலும் இருக்கும். இங்கே வைத்து ஒரு புத்தகத்தை அடித்தால் அது இந்தியாவுக்கோ இலங்கைக்கோ போகாது. அரிதாக ஒருவருக்கோ இரண்டு பேருக்கோ ஒரு புத்தகம் போகும். நான் ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியாக இதைப் பார்க்கின்றேன். தனியே ஈழத்தை சேர்ந்தவர்களுக்கான, புலம்பெயர்ந்தவர்களுக்கான இதழ் என்று பார்க்கவில்லை.

என்னை காலம் ஆசிரியர் என்று சொல்வதை விட தொகுப்பாளர் என்று சொல்வதுதான் பொருத்தம். இதழின் கொள்கையை காலத்தில் இப்படிப் பார்க்கலாம், அதாவது முக்கால் வாசி காலம் சஞ்சிகைகளில் ஈழத்து எழுத்தாளர்களின் முக்கியமானவர்களின் அட்டைப் படம் இருக்கும். புது எழுத்தாளர் ஒருவரின் படைப்பு இருக்கும். கட்டாயம் பிரபல்யமான ஜெயமோகன், முத்துலிங்கம், ஷோபாசக்தி போன்றவர்களுடைய படைப்புகள் இருக்கும். காலம் சஞ்சிகையில் எழுதாத ஆட்கள் என்று சொல்வது மிகக் குறைவு. உதாரணமாக சக்கரவர்த்தியுடன் என் உறவு நன்றாயில்லை என்று சொல்வார்கள். சக்கரவர்த்தியுடைய நல்ல கதையொன்று காலத்தில் வந்திருக்கின்றது. எப்பவும் என்னுடன் சண்டைபிடிக்கும் கற்சுறாவின் படைப்பு வந்திருக்கு. இவற்றில் நான் நல்ல கவனமாகத்தான் இருப்பேன். விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்த்து அல்லது ஆதரித்து ஒரு கட்டுரையும் நான் பிரசுரித்தது இல்லை.

காலம் இதழை தயார் செய்யும்போது பெரும்பாலும் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள், பதிப்பகங்களுடன் சேர்ந்து வேலை செய்கிறீர்கள். இலங்கைத் தமிழர்களிடம் இதழியல் வேலைகள் சீராகச் செய்யமுடியாமல் போனதின் வெளிப்பாடா அது?

தொடக்கமே தமிழ் நாட்டில்தான் தொடங்குகின்றேன். எனக்கு இலங்கை இந்தியா என்ற பிரச்சினை இல்லை. ஆனால் எனக்கு ஒரு குறை இருந்தது. நான் பிறந்த இடம் ஈழம். எங்களுடைய ஆக்கங்கள் அங்கு கவனிக்கப்படவில்லை என்ற கவலை இருந்தது. இந்தியாவில் உள்ளவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் கொஞ்சப் பேர் என்றாலும் தீவிரமானவர்கள். அவர்கள் கவனிக்கப்படவில்லை. இப்போது நான் 55 காலம் இதழ் செய்தாலும் 40கும் அதிகமான காலம் இதழுக்கு  ஈழத்து எழுத்தாளர்களைத்தான் அட்டைப்படமாக போட்டிருக்கின்றேன். உதாரணத்திற்கு தெணியானை தமிழ்நாட்டுகாரர்களுக்கு தெரியாது, அவரை அட்டைப்படமாகப் போட்டு சுந்தரராமசாமி, ஜெயமோகன், அசோகமித்திரன், எஸ்.ரா போன்றவர்களின் கதைகளையும் – வெங்கட்சுவாமிநாதன், சி.மோகன் போன்றோர்களது கட்டுரைகளையும் உள்ளே இட்டால், தெணியானை தெரியாதவர்கள் நிச்சயம் யார் என்று பார்ப்பார்கள் என்று அதைச் செய்தேன்.

மு.பொன்னம்பலம் என்னுடைய நண்பர். அவர் மீது பெரும் மதிப்பு உண்டு. அதைவிட அவர் அண்ணன் தளையசிங்கம் என் மதிப்புக்குரிய பெரிய முன்னோடி. பொன்னம்பலம் கனடா வந்த போது காலம் இதழை நன்றாக சிலாகித்துச் சொன்னார். ஆனால் ஏன் இந்தியாவில் தயாரிக்க வேண்டும், இலங்கையில் செய்யலாமே என்றார். எனக்கு தொடர்புகள் இல்லையென்றேன். அவர் அதற்கு தான் உதவுவதாகச் சொன்னார். அப்போது காலத்தில் ஒரு சிறுகதைப் போட்டி வைத்திருந்த நேரம். அ.முத்துலிங்கம் முதல் பரிசு பெறுபவருக்கு 300 டொலர்ஸ் தருகிறேன் என்று கைகொடுத்தார். முதல் பரிசு பெற்றவரின் கதையை இதழில் பிரசுரித்து செய்யலாம் என்று வெளிக்கிட்டால், மு.பொன்னம்பலம் முன்னெடுகிறார் இல்லை. அவருக்கு பணமும் அனுப்பியாகிவிட்டது. அவரின் வீட்டுக்கு போன் எடுத்தால் அவர் சினந்து  பேசுகின்றார். என்னுடைய வயதென்ன? எனக்கு வந்து ஏன் கரைச்சல் கொடுக்கின்றாய் என்று ஏதோ நான் வில்லங்கமாக அவரிடம் கொடுத்தது போல் பேசினார். மிகவும் நொந்து போய் செய்வதறியாது நின்றேன். அவரும் கொஞ்சம் வருதக்காறன்- மாட்டுப்பட்டுப் போனேன்.

பிறகு மகாலிங்கத்தார் பொன்னம்பலத்துடன் கதைத்துப் பேசி அச்சகத்திடம் கொடுத்து, ஒருமாதிரி இதழ் வந்தது. இதழை அனுப்ப பணம் எல்லாம் கொடுத்து இருந்தேன். அப்படி இருந்து இந்தியாவுக்கு எல்லாம் போகவில்லை. நான் தான் கொண்டு போனேன். இதழை திறந்து பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. முதல் பரிசு பெற்றவர் பெங்களூரைச் சேர்ந்த சொக்கன் என்பவர், ஆனால் ஈழ எழுத்தாளரான சொக்கனின் புகைப்படத்தை பொன்னம்பலம் பிரசுரித்து இருந்தார். ஒன்றும் பேசாமல் விட்டுவிட்டேன். பரிசு பெற்ற கதையின் பெயர் ‘இறுதியாத்திரை’. இரண்டு வாரத்தின் பின்னர் எனக்கு ஒரு கடிதம் நல்லூரில் இருந்து வந்தது. ‘எவருடையோ கதைக்கு என் படத்தை போட்டு எனக்கு இறுதியாத்திரை செய்துவிட்டாயடா’ என்று சொக்கன் திட்டி எழுதி இருந்தார். சொக்கன் ஈழ இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளர். ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற அவருடைய புத்தகம் முக்கியமானது. முற்போக்கு, நற்போக்கு சிந்தனையில் நடுநிலையாக நின்ற ஒருவர் அவர். அப்போது அவர் நோய்வாய்பட்டு இறக்கும் நிலையில் இருந்தார். இது என்னை மிகவும் பாதித்தது. உடனே கோபத்துடன் பொன்னம்பலத்துக்கு போன் பண்ணினால் அவர், ‘அந்தப் படம் எடுக்கப்பட்ட பாடு தெரியுமா உனக்கு? வீரகேசரிக்குப் போய் பிறகு தினக்குரலுக்கு போய் தினகரனுக்கு போய் எவ்வளவு கஸ்ரபபட்டு அந்த படம் எடுத்தனாங்கள்’ என்றார். நொந்து போனேன். பொன்னம்பலம் அக்கதையை வாசித்திருந்தால், ஈழ எழுத்தாளர் சொக்கன் அதுவல்ல என்று தெரிந்திருக்கும். துயரம்! இப்படியான சிக்கல்கள் எனக்கு, தமிழ் இலக்கியத்துக்கே புதிது.

தேடகத்தின் மூலம் “எலும்புக்கூடுகளின் ஊர்வலம்” என்ற சேரனின் கவிதை தொகுப்பை வெளியிட்டதில் உங்களுக்கு முக்கியமான பங்கு இருப்பதாக அறிய முடிகிறது. அது எப்படி நிகழந்தது?

1989-ஆம் ஆண்டு முதல் தடவையாக ஊருக்குப் போகிறேன். இந்தியன் ஆமிக்கும் புலிகளுக்கும் அடிபாடு முடிவடையாத நேரம். அப்போது சேரனை சந்திக்கிறேன். எனக்கு சேரனின் கவிதைகள் மேல் மிகப்பெரிய பற்று. நான் கொழும்பில் போய் இறங்கும்போது சேரனும், கோமூர்த்தியும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். ஒருமாதத்தின் பின்னர் நான் திரும்ப வெளிக்கிடும் போது சேரன் தன்னுடைய கவிதைத் தொகுதி ஒன்றை தேடகம் அமைப்பின் மூலம் புத்தகமாக்க முடியுமா என்று கேட்டார். மிகச் சந்தோசத்துடன் ஓம் என்று கவிதைகள் எழுதி வைத்திருந்த கோப்பை வாங்கினேன். அந்த நேரத்தில் சேரனுக்கு இயக்கங்களுடன் பிரச்சினைகள் இருந்தன. குறிப்பாக விடுதலைப்புலிகளுடன்.

கவிதைகளைப் பார்த்தால் இந்தியன் ஆமி, இலங்கை அரசு, இயக்கங்கள் என்று எல்லோரையும் கோபமாக விமர்சித்து எழுதப்பட்ட வரிகளாக இருந்தன.

யாழ்ப்பாணம் தொடங்கம் வவுனியா வரை அரைவாசி இடங்களில் இந்தியன் ஆமியும் அதற்கு சார்பான தமிழ் இயக்கங்களும், மிச்ச அரைவாசிக்கு மேற்பட்ட இடங்களில் விடுதலைப்புலிகளும் இருந்தார்கள். எல்லா இடங்களிலும் இறங்கி ஏற வேண்டும். பல இடங்களில் பிரயாண பைகளை சோதிப்பார்கள். இடையில் பயத்தால் அந்தக் கோப்பை எறிந்துவிடுவோம் என்ற யோசனையும் வந்தது.

“யேசுவே… மாதவே…” என்று என் மனம் பதை பதைக்கும். கனடாவில் இருந்து வந்தேன் என்பதற்கு எந்த அடையாளமும் என்னிடம் இல்லை. கனேடிய றவல் பத்திரங்களை இந்தியாவில் வைத்துவிட்டு அகதியாக வந்த சிறிலங்கன் என்று சொல்லி அவசர கால பாஸ்போர்ட் எடுத்து இலங்கை வந்திருந்தேன்.

ஆமியோ, இயக்கங்களோ யார் வாசித்து இருந்தாலும் பெரிய பிரச்சினை தான். அந்தக்காலம் சர்வசாதரணமாக கொலைகள் நடந்தன. சேரனின் கவிதைகளைப் பார்த்தல் விளங்கிக்கொண்டு ஒரு பகுதி சுடும் இன்னொரு பகுதி விளங்காமலே சுடும்.

ஏதோவொரு மாதிரி கொழும்புக்கு கொண்டு வந்திட்டேன். கொழும்பில் இருந்து இந்தியாவுக்கு போவதற்கு இன்னுமொரு பாஸ்ர்ட்போர்ட் எடுக்க வேண்டும். அதற்கு அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். அப்போது கோமூர்த்தியால் ஒழுங்கு செய்யப்பட்ட அறை நண்பன் நிலாந்தனுடையது. இந்திய பாஸ்ர்போர்ட் கையில் உள்ளது. ரிக்கற்றுக்கு காத்துக்கொண்டிருக்கும்போது என்னையும் நிலாந்தனையும், பக்கத்து அறையில் இருந்தவர்களையும் வெள்ளவத்தை பொலிஸ் கைது செய்துவிட்டார்கள். என்னட்டை ஒரு அடையாள அட்டையோ, நிரூபிக்க வேறு ஆவணங்களோ இல்லை. நண்பன் நிலாந்தன் அப்போதுதான் இயக்க பொறுப்பில் இருந்து விடுபட்டு கொழும்பில் இருந்து வேறு எங்கையாவது போவமா என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார். நடுங்கிப்போனேன். இரவு ஒன்பது மணி போல பிடித்தார்கள். அன்று இரவு முழுவதும் கண்விழித்து பொலிஸ் சிறையில் வாடிக்கொண்டு இருந்தேன். என்னை விட்டாலும் நிலாந்தன் பாடுதான் கஸ்ரம் என்று எண்ணினேன். ஆனால், நிலாந்தனை விசாரித்துவிட்டு மதியம் அவரின் அப்பாவுடன் அனுப்பிவிட்டார்கள். எனக்கு மூன்றுமாதம் மறியல் என்று மணிக்கூட்டையும், மோதிரத்தையும் வாங்கி வைத்துக்கொண்டார்கள். ஐந்து மணிக்கு றக் வரும். ஏதோவொரு மறியலின் பெயரைச் சொல்லி அங்கே போகவேண்டும் என்றார்கள்.

நண்பர் கோமூர்த்தி ஒழுங்கு செய்த ஒரு எஸ்பியின் உதவியுடன் மறியலுக்கு செல்ல முதல் வெளியே வந்தேன். இரண்டு நாளில் சென்னைக்கு செல்ல வெளிக்கிட்டுவிட்டேன். கோமூர்த்திதான் கொழும்பு விமான நிலையத்திற்கு கூட்டி வந்தார். வெளிவாசலிலே பெட்டிகளை சோதித்து சேரனின் கவிதைக் கோப்பை எடுத்து “இது என்ன?” என்று உருட்டத் தொடக்கிவிட்டார்கள். நான் சிங்களமும், ஆங்கிலமும் தெரியாமல் தடுமாறிக்கொண்டு நின்றேன். என்னைச் சோதித்த அதிகாரிக்கும் பாவம் ஒரு மொழிதான் தெரியும். ஆனால் இதில் என்னவோ விஷயம் இருக்கு உள்ளுக்கு வா என்பது போல நின்றான். கோமூர்த்தி இங்கிலிஷிலும், சிங்களத்திலும் சத்தம் போட்டார். பிறகு என்னை விட்டுவிட்டார்கள். என்ன பேசினீர்கள் என்று கேட்டபோது சிங்கள ஆக்களிடம் இருக்கும் முக்கால்வாசி முற்போக்காளர்களின் பெயரைச்சொல்லி உன்னை டொராண்டோ யூனிவசிற்றி புரொபசர் என்றேன். பயந்திட்டான் என்றார். டொராண்டோ யூனிவசிற்றி புரொபசருக்கு ஏன் இங்கிலீஷ் தெரியாது என்று வீட்டுக்கு போய்தான் யோசித்திருப்பான்.

பின்னர் பம்பாய் விமான நிலையத்தில், மலையாள நம்பூதிரிகள் விமான நிலைய அதிகாரிகளிடம் விசாரணைக்கு உள்ளானேன். என்னுடைய கனேடிய றவல் பத்திரங்களை நம்பவில்லை. பத்து தடவைகளுக்கு மேல் பயணப்பைகளை சோதனை போட்டார்கள். இரண்டு விமானங்களை தவறவிட்டேன். பின்னர் விமான நிலையத்தில் நின்ற வெள்ளை கனேடியப் பெண்ணின் உதவியுடன் தப்பி கனடா வந்தேன்.

தேடகத்தில் சேரனின் “எலும்புக்கூடுகளின் ஊர்வலம்” என்ற கவிதைத்தொகுப்பை பெரும் எடுப்புடன் வெளியீடு செய்தோம். தேடகத்தின் கீழ் கட்டிடம் முழுக்கக் கூட்டம். யாரோ பேசியபோது சேரன் மஹாகவியின் மகன் என்று சொல்ல எதிர்தரப்பு கவிஞர் ஒருவர் முதல் தடவையாக அந்தப் பெயரை கேள்விப்பட்டார் போல. அதென்ன மஹாகவி? நீங்களே பட்டம் கொடுத்து எங்களை பேக்காட்டுகிறீர்களோ என்று சத்தம் போட்டார்.

இல்லை அந்தப் பெயரில் தான் சேரனின் அப்பா எழுதினார் என்று விளங்கப்படுத்தியும் அவர் அடங்க மறுத்தார். ராஜினி திரணகவின் கொலையை எதிர்த்து சேரனின் கவிதைகளில் வரும் “நட்சத்திரங்களை சுட்டெரித்த இரவோ, அல்லது இருட்டோ” என்ற வரிகளை வாசித்து எப்படி நட்சத்திரங்களை சுட்டெரிக்கலாம் என குழம்பிக் கொண்டு நின்றார். இரண்டு பக்கத்தாலும் சேட்டு கைகளை மடித்து பெரிய கலவரம் உண்டாகும் சூழல் வந்தது. ஏதோ செய்து அடக்கி ஒருமாதிரி புத்தக வெளியீடு நடந்தது.

இவ்வளவு கஷ்டப்பட்டு சேரனின் கவிதைப் புத்தத்தை செல்வம் கொண்டுவந்தார் என்று யாருமே சொல்லவில்லை. நான் காலம் முழுக்க சண்டை பிடித்துக்கொண்டிருந்த பீக்கிங் சிவம் தான் பின்பு எல்லா இடமும் என்னை பெருமையுடன் சொல்வார், ‘ஆளுக்கு அரசியல் விளங்காவிட்டாலும் இலக்கியத்திற்காக எதையும் செய்வார்’ என.

மு. தளையசிங்கத்தின் மீது உங்களுக்கு தனி ஈடுபாடு இருந்தது அல்லவா? அவரின் மொத்த படைப்புகளை தொகுத்ததில் உங்களுக்கு பெரிய பங்கு இருப்பதாக அறியக்கிடைக்கிறது. அந்த அனுபவங்கள் எப்படி?

ஆரம்பகாலத்திலே மு.தளையசிங்கத்திடம் ஒரு விருப்பம் வந்துவிட்டது, தளையசிங்கம் மாக்சிஸத்தையும் கடந்து போகவேண்டும் என்று சொல்லியது, என்னுடைய எண்ணத்தையும் யாரோ கதைக்கின்றானே என்று நினைத்தேன். சாப்பாடும் கிடைத்து விடுமுறையும் கிடைத்தால் போதும் ஒரு மனிதனுக்கு என்று அவர் சொன்னார். சாப்பாடும் கிடைக்கின்றது. இருக்க இடமும் கிடைக்கின்றது. ஒரு மாதம் விடுமுறையும் கிடைக்கின்றது. இவ்வளவும் மனிதனை திருப்திப்படுத்துமா? அந்த இடத்திலே தான் நான் அவரை பிடித்தேன். அடே இவன் புதிதாகச் சிந்திக்கின்றான்.

தளையசிங்கத்துடைய ‘ஒரு தனிவீடு’ நாவல் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சம்பந்தப்பட்டிருக்கின்றது. தளையசிங்கத்திடம் பிரியம் வரும்போது நான் இங்கே மகாலிங்கத்தை வந்து சந்திக்கின்றேன். அவர் தளையசிங்கத்தின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர். தளையசிங்கம் எழுதிய அனைத்தையும் சேர்த்து வாசிக்க முடியாத நிலை. எல்லாம் சிதறியிருந்தது. அவரின் தம்பியான மு.பொன்னம்பலத்திடம், மொத்த எழுத்துகளையும் தொகுக்க வேண்டும், அதனை செய்யுங்கள் என்று ஆக்கினை கொடுத்துக் கொண்டிருந்தேன். “ஓம் செய்வமடா அங்கு எடுக்க வேண்டும், இங்கு எடுக்க வேண்டும்” என்று சொன்னார். “தேடி எடுங்கோவன், உங்கட காலத்துக்குள்ளே வராட்டா பிறகு செய்யேலாது” என்று நான் பிடிவாதம் பிடித்தேன். தேடியெடுத்த பின்னர், புத்தகமாக்கும் வேலையை நீ செய்யலாம் தானே என்று பொன்னம்பலம் சொன்னார். அது பெரிய வேலை. நான் ஒரு சாதாரணமான ஆள் என்று மறுத்தேன். செல்வத்திடம் அவ்வளவு வசதியும் இல்லை என்று மகாலிங்கமும் பொன்னம்பலத்திடம் சொன்னார். அதென்ன வசதி, புத்தகத்தை விற்று எடுக்கிறது தானே. காலச்சுவட்டுடன் கதைப்போம் என்றார்.

சிவதாசன் என்னொரு நண்பர் இங்கு எனக்கிருக்கிறார். யாழ் நூலை பதிப்பித்தவர். அரசியல் இலக்கியம் என ஈடுபாடு கொண்டவர், கொஞ்சம் வசதியானவர், உதவிசெய்யும் நோக்கும் கொண்டவர். தளையசிங்கத்தின் புங்கிடுதீவுதான் அவரின் ஊரும்கூட. அவரைக் கேட்டேன். ஓம் என்றார். பொன்னம்பலத்தையும்  மகாலிங்கத்தையும் சந்திக்கச் செய்தேன். அப்போதும் “ஏன் நீ செய்தால் என்ன?” என்று திரும்பவும் பொன்னம்பலம் கேட்டார். இல்லை நான் செய்யிறதால் உங்களுக்கு நட்டம் வரும் என்று தவிர்த்தேன். வெளிவந்த மு.தளையசிங்கத்தின் புத்தகம் எனக்கு திருப்தியாக இல்லை. இபோது நானே செய்திருக்கலாம் என்று கவலைப்படுகிறேன். பின்னர் பொன்னம்பலத்திடம் “நீங்கள் தளையசிங்கத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுங்கள்; நான் போடுகின்றேன்” என்றேன். பொன்னம்பலமும் உற்சாகமாக எழுதிவிட்டார். அது எனக்கு பிடிக்கவில்லை.

தளையசிங்கத்தின் தொகுப்பு நான் ஆசைப்பட்டேன் தவிர வேறு எதுவும் பெரிதான பங்களிப்பு இல்லை. நான் இதைவிட பெரிதாக நினைத்தேன். வெளிவந்த புத்தகமும் நட்டம் என்று கண்ணணும், சிவதாசனும் சொல்கிறார்கள்.

சுந்தரராமசாமி, சி.மோகன், ஜெயமோகன், வெங்கட் சுவாமிநாதன் போன்ற எழுத்தாளர்களுடன் நெருங்கிய நட்பு உங்களுக்கு இருந்திருக்கிறது. ஈழ அரசியல் போராட்டம் சார்ந்து அவர்களுக்கு என்ன பார்வைகள் அந்தரங்கமாக இருந்திருக்கின்றன? உங்களால் அவர்களின் கருத்துகளில் செல்வாக்குச் செலுத்த முடிந்திருக்கிறதா?

நான் இதில் முதல் கண்டது சுந்தர ராமசாமியைத் தான். அவரது படைப்புகளை வாசித்துவிட்டு சந்திக்க ஆர்வமாக இருந்தேன். அப்போது கலிபோர்னியாவில் சுந்தர ராமசாமி தங்கியிருந்த விடயத்தை பத்பநாப ஐயர் என்னிடம் சொன்னார். அவரிடம் தொலைபேசி இலக்கம் வாங்கி தொடர்பு கொண்டு பேசினேன். தெலைபேசியில் சுந்தர் ராமசாமி நேர்காணல் வைத்தார். உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? நீங்கள் யாரை வாசித்தீர்கள்? என்னை எப்படி வாசித்தீர்கள்? நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? எல்லாம் சொன்னபிறகு வரச் சம்மதித்தார். அவருடன் தங்கி நின்று உரையாடினோம். நான் அவரை விடுதலைப்புலி சார்பானவர் என்று நினைத்தேன். ஆனால், அவர் அப்படி இல்லை. அவர் பொதுவாக ஈழ மக்களது போராட்டத்தை ஆதரிக்கின்றவராக மட்டும் இருந்தார்.

ஜெயமோகன் 2001 ஆம் ஆண்டு இங்கு வரும்போது பெரிதாக அரசியல் பேசவில்லை. அவர் தன்னுடைய அனுபவத்தைத் தான் எங்களுடன் பகிர்ந்தார். அ.யேசுராசாவினுடைய கட்டுரையை மொழிபெயர்த்து அதனால் சிக்கல்பட்டவர்.

வசந்தகுமார் என்பவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவர். அவர் ஜெயமோகனுக்கு நெருக்கமானவர். அப்போது ஜெயமோகன் அதிகமாக உச்சரிக்கின்ற பெயர் தேவசாயகுமார், வசந்தகுமார், திலிப்குமார். நாங்கள் என்னவோ தெரியவில்லை அந்த நேரம் கடுமையான புலி எதிர்ப்பு மனநிலையில் இருந்தோம். புலிகளின் உச்ச காலக்கட்டம். இப்படி போனால் ஜனநாயம் இல்லாமல் போய்விடும் என்று பேசிக்கொண்டிருந்தோம். எங்களுடைய பாதிப்பு அவர்களை பாதித்திருக்கலாம்.

ஜெயமோகன் அடிப்படையில் பழகுவதற்கு நற்புக்கினியவர். அவருடன் எந்த விடயத்தையும் கதைக்கலாம். அரசியலை விட்டு விட்டு கதைத்தாலும் கதைப்பார். சினிமாவைப் பற்றி கதைத்தாலும் கதைப்பார். நல்ல நகைச்சுவையாக கதைக்க வேண்டுமானாலும் கதைத்துக்கொண்டிருப்பார். சுந்தர ராமசாமியில் எனக்கு பெரிய மரியாதை, ஆசிரியருடன் பேசுவது போல் பேசுவேன். ஆனால், ஜெயமோகனுடன் ஒரு நண்பர் என்ற வகையில் கதைக்கலாம். மிக அன்பான ஆள்.

கொற்றவை என்ற நாவலை யார் எழுதியிருக்க வேண்டும். ஒரு தமிழ் தேசியவாதி எழுதியிருக்க வேண்டும். அந்தப் புத்தகத்தை பார்த்தால் இவரை விட ஒரு தமிழ்தேசியவாதி இருக்க முடியாமா என்று தோன்றும். ஏழாவது உலகம் வாசித்தீர்களானால் யாரோ ஒரு இனியில்லையென்ற அடித்தள மக்களின் வாழ்வியலைப் பேசுகின்ற ஒருவர் தான் அதை பற்றி எழுதவேண்டும் என்று தோன்றும். அவரை எந்த வகையில் நான் வைத்திருக்கின்றது? ஜெயமோகன் நாகர்கோவிலோ எனக்கு தெரியவில்லை. யாழ்ப்பாணத்து ஆட்கள் போல பழைய நண்பர்கள் போல் தான் எனக்கு மனதில் பதிந்திருக்கின்றது.

புலம்பெயர் இலக்கியம் தோற்றம் பெற்ற காலத்திலிருந்து அதனுடன் இருக்கிறீர்கள். இன்று அதன் போக்கு எப்படி இருக்கிறது?

புலம்பெயர்ந்த இலக்கியம் என்று சொல்ல முன்னரே நாங்கள் வந்து விட்டோம். அதாவது புலம்பெயர்ந்த இலக்கியம் அல்லது புகலிட இலக்கியம் என்ற சொற்கள் வந்ததல்லாவா. அது எங்களுக்கு பின்பு தான் வந்தது. இந்த புலம்பெயர் இலக்கியம் எப்படி செல்லும் என்று முன்னம் யோசிக்கும்போது நான் நினைத்தேன், கனடா தமிழ் இலக்கியம், பிரான்ஸ் தமிழ் இலக்கியம் அப்படி மாறும் என்று. இன்று நான் உறுதியான முடிவுக்குள் வந்துவிட்டேன், எல்லாமே தமிழ் இலக்கியம் என்ற ஒன்றுக்குள்ளே வரும். சுந்தர ராமசாமி 1991-இல் என்னிடம் சொன்னார், “இன்னும் பத்து வருடத்துக்குள் யோசித்துப்பாருங்கள் செல்வம் இவ்வளவு பேர் தமிழ் வாசிப்பார்களா? உங்களுடைய பிள்ளைகள் எல்லாம் தமிழ் படிக்குமா? ஒரு கொஞ்ச நாளைக்குத்தான் நீங்களும் எங்களைப் போல் ஆட்களைக் கூப்பிடுவீர்கள். கூட்டம் வைப்பீர்கள்” என்று. ஆனால், இன்றைக்கு சொல்லி முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. இன்றைக்கு என்றுமில்லாதவாறு எனக்கு நம்பிக்கை இருக்கிறது  இது தொடரும் என்று.

இந்த நேரத்தில் யோசித்துப் பாருங்கள், தமிழ் இலக்கியத்தில் தமிழ்நாட்டு என்று சொல்லப்படுகின்ற பெரிய பரப்புக்கு நிகராக ஈழத்தமிழ் ஆட்கள் எழுதுகின்றார்கள். அதிலும் குறிப்பாக புலம்பெயர் ஆட்கள் நிறையப்பேர் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். நான் புத்தகக்கண்காட்சி செய்யும் போது நக்கலடித்தார்கள். ஒரு இரண்டு மூன்று வருடம் செய்யலாம். பிறகு யார் வாங்கப்போகின்றார்கள் என்று. ஆனால் ஒவ்வொரு முறையும் வாங்குகின்றார்கள். இப்போது இங்கு தமிழ் நாட்டில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை பார்க்கின்ற பெடியங்கள் வருகின்றார்கள். போனமுறை புத்தகக்கண்காட்சியில் அவர்கள் நாலைந்து பேர் வந்து புத்தகங்கள் வாங்கிக்கொண்டு போனார்கள். வாசிப்புச் சூழல் நம்பிக்கை தருகிறது.

எழுதித் தீராப் பக்கங்கள், சொற்களால் சுழலும் உலகம் புத்தகங்கள் தன்வரலாற்று கதைகளாக இருந்தாலும் அதனைச் சொல் முறையில் இருக்கக்கூடிய வசியம் புனைவு எழுத்தாளரிடம் இருக்ககூடியது. உங்களிடம் நாவலை எதிர்பார்க்கலாமா?

அப்படி ஒரு திட்டம் எதுவும் போட்டு நான் செய்வதில்லை. நான் மற்றையவர்களைத்தான் பார்க்கின்றேன். நல்லாய் எழுதுகிறான் என்று நினைத்து மெலிஞ்சி முத்தனுக்கு பின்னாலே திரிவேன். நல்ல நாடகப்பிரதிகள் தந்த ஜெயகரனை கதை எழுது என்று கலைப்பேன். எழுது எழுது என்று டிசே.தமிழனை வதைப்பேன். தமிழிலக்கியத்துக்காக ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன்.

கவிதை என்றால் என்னவென்று தெரியாத காலத்தில் அவ்வப்போது கவிதை எழுதிவிட்டு விட்டுவிட்டேன். பின்னர் காலம் இதழ் செய்ய ஆரம்பித்தேன். தாய்வீட்டு பத்திரிகை ஆக்களோடு சிநேகிதம் ஏற்பட, எனக்கு கூத்தில் ஆர்வம் இருக்கின்றபடியால் அதைச் செய்வோம் என்று கேட்டதால் ஒரு ஐந்தாறு கூத்தும் சேர்ந்து செய்தோம்.

கருணாவோடு தேநீர் குடிக்க வந்த இடத்தில் சும்மா பாரிஸ் கதைகளை சொல்லிக்கொண்டிருக்கையில் தான் அவன் சொன்னான், “இதைச் சொல்லிக்கொண்டிருக்காமல் எழுதுங்கள் அண்ணை” என்னுடைய மொழி இப்போது சரிவராது என்றேன். எனக்கு வேறு ஒருவரைப் பார்த்து எழுதுவது சரிவராது. எனக்கு வெட்கமாயிருக்கும். நீங்கள் சொல்வதைப் போல் எழுதுங்கள் நான் பார்க்கிறேன் என்றான். எழுதிக்கொடுத்தேன், அவன் தலைப்பையும் மாற்றி திருப்பித் தந்தான். உங்களுடைய மொழி சரியாயிருக்கின்றது. இந்த இந்த இடங்களில் சில விஷயங்களைச் சேருங்கள் அல்லது வெட்டுங்கள் என்று சொன்னான். அது வெளியாகியவுடன் தாய்வீட்டுக்கு பெரிய பாராட்டுக்கள் வந்தன. நான் ஆறாவது கட்டுரையுடன் விட்டு விட்டேன். இவ்வளவு தான் என்னிடம் இருந்தது என்று சொன்னேன்.  உண்மையில் தாய்வீடு பத்திரிகையும், அதன் ஆசிரியர் திலீப்குமாரும் இல்லாவிட்டால் நான் எழுதியிருக்க மாட்டேன்.

ஒருமுறை தண்ணியடிக்கும் போது கருணா கேட்டான் “அண்ணை பாரிசில் குளிக்கிறதுக்குப் பிரச்சினை இருக்காமே” என்று. பரிஸில குளிக்கிறதுக்கு பிரச்சினை இருந்தது. வெளியில் தான் போய் குளிக்க வேண்டும். “ஓமடா குளிக்கிறதுக்கு பிரச்சினை தான்”. என்று சொல்லி என்னுடைய வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னேன். என்னுடன் அறையில் பங்கிட்டு இருந்தவர்களில் ஒரு பெடியன் சொன்னான், தன்னுடைய நண்பன் ஒருவன் திருமணம் முடித்தவன். அவனுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று. கூப்பிடுங்கோ என்று சொன்னோம். அழகான பெண்ணும் ஒரு பெடியனும் வந்தார்கள். சாப்பிட்டுவிட்டு தண்ணியடித்துக் கொண்டிருந்தோம். அந்தப் பெண் washroom போகப் போகின்றேன் என்று சொல்லிவிட்டு அங்கு சென்று திடுக்கிட்டு திரும்பிவந்தாள். இங்கே shower இருக்கின்றது என்று ஆச்சரியப்பட்டாள். இது யாருடைய வீடு என்று கேட்டா, என்னைக் காட்டி இவருடைய அறை தான் என்று யாரோ சொன்னார்கள். அந்தப் பெண் சிறிது நேரத்தில் “நீங்கள் வேலை செய்கின்றீர்களா?”, என்று கேட்டாள். “ஓம்” என்று சொன்னேன். “திருமணம் முடித்துவிட்டீர்களா?” என்று கேட்டாள். “வீட்டிலே பேசினம், வயதும் தாண்டுகிறது. ஆனால் ஒரு பெண்ணை கூப்பிட்டு வாழுகின்ற மாதிரி பாரிஸ் நிலவரம் இல்லை என்று சொன்னேன். அந்தப் பெண்ணுக்கு கொஞ்ச நேரத்தில் புதுக்கணவனுடன் ஏதோ சச்சரவு வந்து விட்டது. புருசனை நோக்கி “நீ ஏன் என்னை திருமணம் செய்தாய்? இவருடைய அறையாம் இது. இவருக்கு வேலையும் இருக்கு. இவருக்கு திருமணம் செய்யப் பயமாம். நீ ஏன் என்னை திருமணம் செய்தாய். குளிக்கிறதுக்கு நான் படும் பாடு தெரியுமா? ஒரு மெற்றோவும் இரண்டு பஸ்சும் எடுக்கவேண்டும்” என்றார். அந்த அறை அவர்களை இரண்டாக்கி விட்டது. அதைச் சொன்னவுடன் அண்ணை நீங்கள் எழுதுங்கள் இதை என்று சொன்னான். இதுக்குள்ளே நாலைந்து விஷயங்களைச் சேர்த்து எழுதுவது தானே. அதை எழுதி வரவேற்பு பெறப்பெற, எழுத எழுத ஞாபகங்கள் வந்தது. அப்படிதான் அது நிகழ்ந்தது.

அந்த புத்தகம் வருவதற்கு சயந்தன்தான் காரணம். நான் இதை இந்தியாவில் வெளியிடவேண்டும் என்று நினைக்கவில்லை. சயந்தனுக்கு யாரோ சொல்லியிருக்கின்றார்கள். சயந்தன் எங்கேயோ இருக்கின்றார். சயந்தன் என்னைக் கேட்டார். எனக்கு வசந்தகுமாரை எவ்வளவு காலமாகவோ தெரியும். வசந்தகுமாருக்கு கொடுப்பம் என்று சயந்தன் சொன்னார். நான் சயந்தனுக்கும் சொன்னேன்.. இது எடுபடுமோ என்று தெரியவில்லை. மொழிநடை வித்தியாசமாக இருக்கின்றது” என்று. நீங்கள் முதலில் கொடுங்கள் என்று சயந்தன் வாங்கி தமிழினி வசந்தகுமாரிடம் கொடுத்தார். அவர் படித்துவிட்டு மிக நன்றாக உள்ளது என்று போனில் சிலாகித்து பாராட்டினார். அந்த நேரத்தில் கவனிக்கப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுத்தந்தன.

இப்போ ஒன்று எழுதுகின்றேன். அது நாவலாக வருமோ அல்லது இதே தொடர்ச்சியாக வருகுதோ என்னவென்று தெரியவில்லை. நாவல் எழுதுவதற்கு விரிவும் ஆழமும் என்னிடம் வரும் என்று நான் நினைக்கவில்லை.

‘கட்டிடக் காட்டுக்குள்ளே’ கவிதை இப்படி முடியும். “எனதூரில் என் மகனுக்கு பாரிசில் வாழ்ந்த கதை சொல்வேன்” அதனூடாக இந்த புலம்பெயர் வாழ்க்கை தற்காலிகமானது. சில ஆண்டுகளில் நாடு சென்று வாழ்வேன் என்ற விருப்பம் எல்லோரிடம் இருந்திருக்கின்றது என்று புரிந்துகொள்ள முடிகிறது. பலருக்கு தனிநாடு என்ற கனவாக இருந்திருக்கும். ஆனால் நடந்து முடிந்தது வேறொன்று. இன்று உங்கள் மகள் உங்களிடம் என்ன சொல்கிறார்?

என் இரண்டு மகள்களுக்கும் ஊரில் போய் வாழவேண்டும என்ற ஏக்கம் இருக்கின்றது. “இந்தக் குளிருக்குள்ளே ஏனப்பா நீங்கள் ஏன் கஷ்டப்படுகிறீர்கள்?” என்று கேட்டவை. அவர்களுக்கு யுத்தம் தெரியாது. வேறு நாட்டு கஸ்ரங்களும் தெரியாது. இங்கே குளிர் என்பதை வைத்துக்கொண்டு சொல்கின்றார்கள். இது எவ்வளவு ஒரு அருமையான நாடு.

எனக்கு சாகும்போது அங்கே செத்தால் நல்லது என்ற எண்ணம் இருந்தது. ஆனால், இலங்கையையில் வாழ்வது என்றால் வெறுப்பாக இருக்கின்றது. நான் விட்டுட்டு வந்த இடத்தைத் தானே யோசிப்பேன். இங்கால பொன்னு மாமி, அங்கால பொன்ராசா மாமா, அங்கால அவை, இங்கால இளம்வயதில் பார்த்த பெண்கள் இப்படித்தானே நாங்கள் நினைப்போம். இப்போது அது தலைகீழாக போய் விட்டதே. அது வேறுமாதிரி போய்விட்டது. பலதடவை ஊர் போய் வந்துவிட்டேன். பதினெட்டு குடிகளும் நாய்களும்தான் எங்கள் குறிச்சியில் உலாவித் திரியினம்.

நான் என்னுடைய ஊருக்கே ஒரு அந்நியன் போல தான் போகின்றேன். என்னுடைய அம்மா காலத்து ஆட்களும் இல்லை; என்னுடைய காலத்து ஆட்களும் இல்லை. எனக்கு பிறகுக்கு பிறகு வந்த ஆட்கள் தான் இருக்கின்றார்கள். அவர்கள் என்னை ஒரு புது ஆளாகத்தான் பார்க்கின்றார்கள்.

“நீங்கள் எப்படி தொலைக்காட்சி இல்லாமல் இருந்தீர்கள்? அங்கேயிருந்து பொழுது போக்க என்ன செய்வீர்கள்?” என்று பிள்ளைகள் கேட்பார்கள். அதை விளங்கப்படுத்த என்னால் முடியாது. அவர்களாலும் கற்பனை செய்ய முடியாது.

அவர்கள் இங்கே உள்ள காலநிலையை வைத்துக்கொண்டு அங்கு போகலாம் என்று நினைக்கின்றார்கள். மனைவியின் ஊர் கொஞ்சம் அதே போல் இருக்கின்றது. என்னுடைய ஊர் முற்றாகச் சிதைந்து விட்டது. நாங்கள் எதிர்பார்த்தது, நினைத்திருந்தது வேறு. இங்கு உழைத்து கொஞ்சம் காசோடு வந்து எங்களுடைய வீட்டை கல்வீடாக கட்டி  ஒரு நவீன வாழ்க்கை வாழுகின்ற ஒரு கனவு தான் அப்போது இருந்தது. இதனை நினைக்க யுத்தமும் வந்து விட்டது. இது எல்லாம் முடித்து ஊருக்கு போய் சந்தோஷமாய் இருக்க முடியும் என்ற கனவு இருந்தது.

என்னுடைய பிள்ளைகளுக்கு ஊருக்குப் போய் இருப்பது நல்லது என்று தான் நினைக்கின்றார்கள். அவர்கள் ஏன் அப்படி நினைக்கின்றார்கள் என்றால், அவர்கள் ஐரோப்பாவிலோ, இலங்கையிலோ, இந்தியாவிலோ வாழவில்லை. அங்கு வாழ்ந்து பத்து பேர் நெருக்கடி பெற்று வாழந்த மாதிரி பரிஸில் வாழ்ந்திருந்தால், மொழி தெரியாத இடத்திலவேலை தேடி பார்த்திருந்தால், பசியோட இரவில் சமைக்காமல் களைப்பாக படுத்திருந்தால் வேறொரு வாழ்க்கை புரியும். அவர்களுக்கு அது தெரியாது. அவை கறுப்பு வெள்ளையாகப் பார்க்கின்றார்கள். இடையிலே எவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. அன்றைக்கு அந்த கனவு இருந்தது. இன்றைக்கு போய் வாழலாம். ஆனால் ஊருக்குப் போய் யாருடன் வாழ்வது. ஊருக்குள் ஒரு அந்நியன் போல் தான் போக வேண்டும். 

இலக்கிய வாழ்வு என்னை தத்து எடுத்துக் கொண்டது. இதனால் என் குடும்பத்திற்கு பெரிய துன்பங்களைக் கொடுத்தேன். ஒரு கூட்டத்தில் எனது மனைவிதான் எனக்கு பின்னுக்கு நிக்கிறவா, அவவின்ற தடையில்லாவிட்டால் 150 காலங்கள் ஆவது செய்து இருப்பேன். காலம் வெளியீடாக 24 புத்தங்கள் அல்ல 150 புத்தகங்கள் செய்து இருப்பேன் என்றேன். கூட்டம் முடிய நண்பர் ஜெயகரன் சொன்னார் “தேவா அக்கா(என் மனைவி)  இல்லாவிட்டால் செல்வத்தார் நடுரோட்டில் தான் நின்று இருப்பார் என்று. நண்பர்கள் சிரித்தார்கள். நான் செய்வது வரமோ சாபமோ என்று தெரியவில்லை; ஆனால், மிக மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.

அனோஜன் பாலகிருஷ்ணன்

தமிழில் இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியர். இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. இலக்கிய விமர்சன, மதிப்பீடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார். தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார்.

10 Comments

  1. காலம் செல்வம் என் மனதில் பெரும் இலக்கியவாதியாகவே நீண்ட காலமாக இருந்து வருகிறார்.
    சிறப்பான பேட்டி.

  2. புதிய அறிமுகம். நிறையத் தகவல்கள். சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும் நாம் அறியத் தவறியவர்களை அறிந்து கொண்டதில் திருப்தி. மிக்க மகிழ்ச்சி.

  3. நல்லதொரு நேர்காணல்
    எப்பொழுதும் ஆர்வமாக வாசிக்கும் கேட்கும் காலம் செல்வம் அவர்களின் சொற்கள் இனிமையானவை.
    நன்றி

  4. செல்வம்
    உம்முடைய விருப்பம்தான் என்னுடையதும் முடிந்தால் சொர்கம்தான். இன்னும் வாழும் சொற்ப காலத்தையாவது மண்ணில் வாழ்ந்தால் நன்றாக இருக்ககும்.

  5. நேர்காணல் முழுவதிலும் தங்களது உண்மைத் தன்மை தெரிகிறது. நீங்கள் ஒரு நல்ல இலக்கியவாதி என்பதற்கு மேலாக
    நல்லதொரு மனிதர் என்பது தெரிகிறது.
    தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  6. அகழ் இணையத்தளத்தில் “காலம்” செல்வதின் நேர்காணல் வாசிக்க முடிந்தது. அதிலிருந்து இரண்டு விசயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    1. அரசியலுக்கு சேவகம் செய்யும் பணியிலேயே ஈழத்து நவீன கவிதைகள் இருந்தன- என்று நான் நீண்டகாலமாக முன்வைத்து வந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆனால், இந்த விமர்சனம் ஏற்கனவே முன்வைக்கபட்டது என்ற தோரனையில் அவர் கூற்று அமையவில்லை. ஏதோ அவர் புதிதாக கண்டு பிடித்து சொல்வதைப்போலுள்ளது.

    2. செல்வத்திடம் நேர்காணலுக்கான கேள்வியைக் கேட்கும் நபர், புலம்பெயர் முன்னோடிக் கவிஞர் செல்வம் என்பாதாக ஒரு கேள்வியைக் கேட்டிருப்பார்?

    ஈழத்து பூதந்தேவனார், தம்பிமுத்து, பிரமிள், வண்ணச்சிறகு இப்படித்தான் புலம்பெயர் கவிஞர்களின் வரிசை தொடருகிறது.

    இதில் மிக முக்கியமானவர், ஈழத்து நவீன புலம்பெயர் காலத்தைச் சேர்ந்த கவிஞர் “வண்ணச்சிறகு” ஆனால், அவர் மலையகத்தைச் சேர்ந்த கவிஞர் என்பதால் தமிழ்த்தேசியவாத பெருசுகளும், குஞ்சுகளும் அவரைக் கைவிட்டு விடுவர். ஈழத்து நவீன கவிதை மற்றும் நவீன புலப்பெயர்வினதும் முன்னோடிக் கவிஞன் வண்ணச்சிறகுதான்.

    இந்தக் கவிஞரின் இயற்பெயர் “அரு.சிவானந்தம்” என்பது கூடுதல் தகவல்.

    இனியாவது இந்த தமிழ்தேசிய அதிகாரவாதத்தை கைவிட்டு, மறைக்கபட்ட பகுதிகளுக்கும், அதன் மக்களுக்கும், அதன் இலக்கியவாதிகளுக்குமான இடத்தை வழங்கும் மனநிலைக்கு மாறிவிடுங்கள்.

  7. அவருடைய இயல்பு போலவே, இயல்பாக பல விஷயங்களைப் பற்றியும் மனம்திறந்து பேசியிருக்கிறார்.நன்று.அவரும் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்.வாழ்க வளமுடன்

  8. கடலுக்குள்ளிருந்து பிராணவாயுவை வெளியிட்டு மனிதகுலத்திற்குத் தொண்டு செய்யும் phaitoplankton, பாசிகள், கோரல் ரீப்புகள் போன்றவர் நீங்கள். வாழ்த்துக்கள்.

உரையாடலுக்கு

Your email address will not be published.