அண்மைக் காலங்களில் வெளிவந்த தமிழ்த் தேசியத்தை மையமாகக் கொண்ட சில படங்களைப் பற்றிய சில குறிப்புக்கள்.

‘மேதகு’ போன்ற படங்களை இக் குறிப்புக்களிலிருந்து தவிர்க்கின்றேன். மேதகு மிகவும் தவறான கருத்தியலையும், சரித்திரத்தையும் “யாவும் கற்பனை” என்ற பதத்தின் கீழ் தவறாக பதிவு செய்த படம். தேசியத்தை எப்படி வியாபாரமாக்குவது என்று பாடமெடுக்கும் படங்கள் யதார்த்தத்தையும், உண்மைகளையும் புதைக்கின்றன. இவற்றை கண்டிப்பதற்கு பதிலாக பாராட்டுவது தவறாகும். 

இசைப்பிரியாவின் மரணத்தை வியாபாரமாக்கிய போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படமும் கண்டனத்துக்குரியது. போராட்டத்தின் போது வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு மரணித்த ஒருவரின் மரணத்தை, அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்ற காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களை கேள்விக்குட்படுத்த வேண்டும்.

இன்றைய இலங்கையின் பொருளாதார தேக்க நிலைக்கு சிங்களத் தேசியம் மட்டுமல்ல, தமிழ்த் தேசியமும் ஒரு காரணம். 2009ன் பின்னர் வறுமைக் கோட்டின் கீழ் அதிகமாக வட-கிழக்கில் உள்ள மக்களே வாழ்கின்றனர். இவர்களைப் பற்றிய எந்த வித அக்கறையும் சிறுபான்மைச் சமூக அரசியல்வாதிகளுக்கில்லை. தேசியத்தை முன்னிலைப்படுத்தும் படைப்புக்களை கேள்விக்குட்படுத்த வேண்டியதன் அவசியம் இன்றுள்ளது.

காட்டுக் கோழி

கனடாவைச் சேர்ந்த Warren Sinnathambi ன் தயாரிப்பில் கலைச் செல்வனின் நெறியாள்கையில் வெளிவந்துள்ள குறும்படம் காட்டுக் கோழி.

காட்டுக் கோழியை இலங்கையிலேயே மட்டும் வாழ்வதாக அமெரிக்க மிருகக் காட்சிச் சாலைக் குறிப்புக்கள் தெரியப்படுத்துகின்றன. காட்டுக் கோழி இலங்கையின் தேசியப் பறவை.

கோழி இலங்கையின் தேசிய பறவை. காயமடைந்த போராளிக்கு ஒரு குடும்பம் அடைக்களமளிக்கின்றது. அவர்களின் மகள் ஒரு கோழியை மிகவும் ஆசையாக வளர்த்து வருகின்றாள். இராணுவம் அக் கிராமத்தை ஆக்கரமிக்க செல் அடியில் கோழி இறந்து விடுகின்றது. கோழியை மகள் புதைத்து கண்ணீர்விடுகின்றார். இராணுவம் போராளிக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக அக் குடும்பத் தலைவனை கைது செய்கின்றது. அக் கிராமத்தில் தொடர்ந்து வாழ்வது கடினம் என உணர்ந்த தாயும் மகளும் வேறு கிராமத்துக்கு புலம் பெயர்கின்றனர். அவர்கள் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறும் பொழுது மகள், தந்தை வீட்டின் முன் நிற்பதாக நினைக்கின்றாள். இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டவர்களில் வெறும் பத்து வீதத்தினரே திரும்பிவந்ததாக வரலாறு கூறுகின்றது.

காட்டுக் கோழிக் குறும்படம் இலங்கையில் இனங்களுக்கிடையிலான சமாதானத்துக்கான சாத்தியக்கூறுகள் சாத்தியமற்றமதாகிவிட்டதையும், காணாமல் போனோரை மீண்டும் காணமுடியாது என்பதனையும் 14 நிமிடங்களில் வெளிப்படுத்துகின்றது.

மண்ணுடன் மனிதர்கள் மட்டுமல்ல, மிருகங்கள், பறவைகள், ஊர்வன, மரங்கள் என அனைத்தும் இணைந்தே வாழ்கின்றன. அந்த மண்ணுக்கு உயிர்ப்பை இவையனைத்தும் இணைந்தே வழங்குகின்றன.

காட்டுக் கோழியின் இறப்பு இனங்களுக்கிடையிலான சமாதானத்தின் மரணத்தின் குறியீடாக வருகின்றது.

படத்தின் இறுதிக் காட்சியில் வீட்டை விட்டு வெளியேறும் காட்சி இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களையும் நினைவுபடுத்துகின்றது. இனக்கலவரங்களின் போதும், போரின் போதும்  தங்களது உறவுகளின் உயிர்களையும் இழந்துஇ உறைவிடத்தையும் இழந்து வெளியேறிய மக்களையும் நினைவுபடுத்துகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களும் நினைவுக்கு வருகின்றார்கள். முஸ்லீம் மக்கள் வெளியேற்றமே வெளியேற்றங்களில் மிகக் கொடுமையானது.

இன்றைக்கு இலங்கை மிக மோசமான பொருளாதார நிலைமையில் தடுமாறும் பொழுதும், பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளும், பெரும்பான்மையினத்தின் பெரும்பாலோனோரும் சிறுபான்மைச் சமூகங்களுடன் இணைந்து வாழ, செயல்பட மறுக்கின்றனர். அதன் அவசியத்தையும் அவர்கள் உணரவில்லை. சிறுபான்மைச் சமூகங்களும் உணரவில்லை.

உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இக் குறும்படம் எடுக்கப்பட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்தார். இவ்வாறு பல நூறு உண்மைச் சம்பவங்கள் உள்ளன.

தமிழ்த் தேசியம் என்பது இன்று திரைப்பட விழாக்களுக்கான ஒரு விடயமாகவும், மற்றொரு புறம் வணிக சினிமா இதனை வியாபாரப் பொருளாகவும் மாறியுள்ளன.

The Single Tumbler

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றம் பற்றிய பல நூல்களும் குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. வாசு முருகவேலின் யப்னா பேக்கரி நூல் யாழ் முஸ்லீம்கள், இலங்கை அரசுக்காக உளவு பார்த்தார்கள் என குற்றஞ்சாட்டுகின்றது. ஒரு மண்ணில் பாரம்பரியமாக அந்த மண்ணின் மணத்தில் தம்மை மூழ்கடித்து அந்த மண்ணுள் ஒருவராக வாழும் ஒரு இனத்தை இரவோடிரவாக வெளியேற்றியமைக்கு எந்த வித காரணங்களையும் காட்டி நியாயம் தேட முடியாது.

சுமதி சிவமோகினின் இயக்கத்தில் வெளியான த சிங்கில் ரம்பளர் என்ற திரைப்படமும் முஸ்லீம் மக்கள் வெளியேற்றத்தை மையப்படுத்திய படம். இணையத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில் இப் படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

காணமல் போன் தம்பியை தேடி கனடாவில் இருந்து செல்லும் சகோதரிக்கு குடும்பத்தினரால் கூறப்படும் செய்திகளின் ஊடாக அவர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி கிடைக்கின்றது. முஸ்லீம் மக்கள் வெளியேற்றத்தை தடுக்க முயன்றமைக்காக அவரது தம்பி கொல்லப்படுகின்றார் என அவரது சகோதரர்கள் மூலம் கூறப்படுகின்றது. புலம் பெயர்ந்து வாழும் சகோதரிக்கு இச் செய்தியைக் கூறுவதற்கு ஏன் நீண்ட வருடங்கள் ஏற்பட்டது என்பதற்கு படத்தில் விடையில்லை.

இப் படம் மதவாதம் ஒன்றை முன்வைக்கின்றது. இந்து கிறிஸ்தவம் என்ற மதப் பிரிவினையை படம் ஏற்படுத்த முயற்சிக்கின்றது. இது இயக்குனரின் அரசியல் மேலாதிக்கத்தின் வெளிப்பாடாகவே கருத்திற்கொள்ளக் கூடியதாகவுள்ளது. புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக தங்களது குடும்பம் தனிமைப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. போரில் உயர் வர்க்கத்தினர் பங்கு பற்றவில்லை. அவர்கள் போரினை விமர்சித்தார்கள். அதனால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற கருத்தியலையும் படம் முன்வைக்கின்றது.

புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களுக்கு இலங்கை அரசு என்ன செய்தது.? அரசும் அவர்களை மூன்றாம் தர பிரசைகளாகவே நடாத்தியது. இதனையும் இயக்குனர் பதிவு செய்யத் தவறிவிட்டார். பொதுவாகவே தொடர்ச்சியாக படைப்பாளிகள் இலங்கை அரசினை காப்பாற்றும் முயற்சியில் செயல்படுகின்றார்கள்.

போர் கட்டுடைக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல் விமர்சிக்கப்படவேண்டும் என்பது மிக மிக அவசியம். இன்று இலங்கையில் சகல சிறுபான்மை சமூகங்களும் இணைந்து வாழ வேண்டும். அவ்வாறான சூழலில் மத வாதங்களை முன்வைப்பது இயக்குனரின் பின்னுள்ள அரசியலையே வெளிப்படுத்துகின்றது. அவ் வகையில் இப் படம் வன்மையாக விமர்சிக்கப்பட வேண்டிய படம்.

The Sixth Land  ஆறாவது நிலம்

ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் யூனியன் வெளியேறிய பின்னர், ஆப்கானில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்ற வெளிநாடுகளின் உதவிகளின்றி செயற்படுத்துவதாயின் சுமார் நூறு வருடங்கள் தேவையென சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் போர் நடைபெற்ற தமிழ்ப் பிரதேசங்களில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறான கண்ணி வெடி அகற்றும் பூமியில் நடைபெறும் நிகழ்வுகளையே ஆறாவது நிலம் என்ற படம் பதிவு செய்துள்ளது.

போரின் போது இராணுவத்தால் கணவன் அழைத்துச் செல்லப்படுகின்றார். மனைவி, மகள், வயதான மாமியார் என தனிமைப்படுகின்றனர். மனைவி தனது வருமானத்துக்காக கண்ணி வெடி அகற்றும் பணிக்குச் செல்கின்றார். அதே சமயம் கணவனை மீற்க போராடுகின்றார். ஒரு குழு கணவனை மீட்டுத் தருவதற்கு பணம் கேட்கின்றது. கிராம அதிகாரி அப் பெண்ணையே கேட்கின்றார்.

ஆறாவது நிலம் போரின் பின்னர் அழிந்து போய்க் கொண்டிருக்கும் சமூகத்தில் பெண்களின் நிலையை அவர்களின் அவலங்களை அவர்கள் தங்களை இருத்தலை காத்துக் கொள்ள மேற்கொள்ளும் போராட்டங்களை அவர்களின் அவலங்களை பதிவு செய்துள்ளது. அதுவும் குறிப்பாக போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை இப் படம் மையப்படுத்தியுள்ளது. காணாமல் போனவர்கள் குறிப்பாக கணவன்களை பற்றித் தெரியாத பெண்கள், தொடர்ந்து கணவன்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். அந்த வகையில் இப் படம் மிக முக்கியமான விடயம் ஒன்றை பதிவு செய்துள்ளது.

படம் தொடர்ச்சியாக தமிழ் குழுக்களையும், தமிழ் அரசியல்வாதிகளையும் விமர்சிக்கின்றது. அதே சமயம் அரசின் மீதான விமர்சனங்களை முன்வைக்க தயங்குகின்றது. காணாமல் போனவர்கள் அல்லது இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எங்குள்ளார்கள், அவர்களது நிலை என்ன? ஏன் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை போன்ற கேள்விகளுக்கு அரசு தான் பதிலளிக்க வேண்டும்.

போரின் பின்னர் சகல அரசியல்வாதிகளும், தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பாதிக்கப்பட்ட மக்களை முன்வைத்து அரசியல் செய்கின்றார்கள். தங்கள் இருத்தலை காத்துக் கொள்கின்றார்கள் என்பது உண்மை. ஆனாலும் அவற்றைக் கூறி அரசாங்கத்தின் இருத்தலை காப்பாற்றுவது தவறு.

அடுத்து கண்ணி வெடி அகற்றும் காட்சிகள் ஒரு நாடகத் தன்மையுடன் படமாக்கப்பட்டுள்ளன. பலர் அங்கு மரணமாகின்றார்கள். காயமடைகின்றார்கள் போன்ற காட்சிகள் பதிவு செய்யப்பட்டாலும், மிகவும் அபாயகரமான முயற்சி இது. அந்த அபாயம் படத்தில் வெளிப்படவில்லை. ஒரு சாதாரண விடயமாக கடந்து போகின்றது. கண்ணி வெடி அகற்றல் பற்றிய தெளிவான ஆய்வின்றி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

படத்தின் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பாகவுள்ளது. இயக்குனர் ஆனந்த ரமணன் பல குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

ஞானதாசின் நெறியாள்கையில் உரு குறும்படம் காணாமல் போனோரை மையப்படுத்தியது. அப் படம் ஏற்படுத்திய தாக்கத்தை இப் படம் ஏற்படுத்தவில்லை.

Prisoners

போரினைப்  பற்றி பல  திரைப் படங்கள்  வெளிவந்துள்ளன. வியட்நாம் போர், மத்திய கிழக்கு யுத்தங்கள், பாலஸ்தீனப் போராட்டம், முதலாம், இரண்டாம் உலக மகா யுத்தங்கள் என பஞ்சமின்றி போர்ப்படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இலங்கையில் நடைபெற்ற இனப் பிரச்சினைப் பற்றியும் பல படங்கள் வெளிவந்துள்ளன. போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பு பல திரைப் படங்கள், குறும்படங்களை வெளியிட்டிருந்தது. இலங்கை அரசு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக பல படங்களை வெளியிட்டிருந்தது.

ஒரு சில முற்போக்கு சிங்கள இயக்குனர்கள், போரின் போக்கை கடுமையாக விமர்சித்து திரைப்படங்களை வெளியிட்டிருந்தார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பிரசன்னா விதானகே. மற்றைய இயக்குனர்கள் தமிழ் மக்களுக்கான தீர்வை வலியுறுத்தினாலும், சிங்களத் தேசியத்தை நிலைநிறுத்தவே முயன்றார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் அசோக ஹங்கம. இவர் தனது படங்களில் தொடர்ச்சியாக சிங்களத் தேசியத்தை வலியுறுத்தி வந்தார். இவர் மிகவும் நுணுக்கமாக நுண் அரசியலாக இதனை வெளிப்படுத்திவந்தார்.

அண்மையில் மற்றொரு சிங்கள இயக்குனரான டனுஸ்க விஜயசூரிய Prisoners (கைதிகள்) என்ற குறும்படத்தை தனிப்பார்வைக்கு எனக்கு அனுப்பியிருந்தார். ஏற்கனவே இப் படம் யாழ்;ப்பாண சர்வதேச திரைப்படவிழா உட்பட்ட பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருந்தது.

போர் உச்சக் கட்டத்தில் இருந்த போது, பெற்றோரை போரில் இழந்த அண்ணனும், தங்கையும், ஒரு நாள் குண்டு மழையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிக்கொண்டிருந்த போது தங்கையின் காலில் குண்டடிபட்டு நிலத்தில் விழுந்த போது, அண்ணன் தனது உயிரைக் காப்பாற்ற, தங்கையை அங்கே விட்டு விட்டு ஓடுகின்றான். திரும்பி வந்து பார்த்த போது, தங்கையை அங்கு காணவில்லை. தங்கையை தேடிக் கொண்டிருக்கின்றான்.

காலங்கள் பல கடந்த பின்னர் இருவரும் சந்திக்கக் கூடாத இடத்தில் சந்திக்கின்றனர். தங்கை ஒரு பாலியல் தொழிலாளியாக உள்ளார்.

படம் நாடகத் தன்மையுடன் நகருகின்றது. தங்கையாக நடித்த அனோமா ஜன்டரி, இயல்புக்கு மாறாக அவரது உடல் மொழி உள்ளது.

போரின் கொடுமையை இப் படம் வலியுறுத்துகின்றது என்பது மறுப்பதற்கில்லை. ஆனாலும் சில கேள்விகள்? பொதுவாகவே தங்கை காயப்பட்டால், தங்கையை தூக்கிச் செல்வார்கள். பல வீடுகளில் பங்கர்கள் எனப்படும் குண்டுகளில் இருந்து பாதுகாப்பதற்கான குழிகள் அல்லது குண்டு காப்பரண்கள் இருந்தன. ஒரு படத்துக்காக இவ்வாறான விடயங்களை அதாவது அண்ணன் விட்டு விட்டு ஓடிவிட்டான் என்பது போல் இலகுவாக கூறலாம். காயம் பட்ட ஒரு சமூகத்தை இது மேலும் புண்படுத்தும்.

இரண்டாவது பாலியல் தொழிலாளியாக உள்ள தங்கையிடம், அண்ணன் தனது தங்கையை தேடுவதாகவும், எங்கே எப்படி விட்டு விட்டு சென்றேன் என்று கூறிய பின்னரும் தனது அண்ணன் எனத் தெரிந்தபின்னரும் தங்கை, அண்ணனுடன் உறவு கொள்வாளா?

இப் படத்தைப் பார்க்கும் பொழுது 2010ல் வெளிவந்து பலரின் கவனத்தையும் பெற்ற கனடிய படமான Incendies நினைவுக்கு வருகின்றது. திரைப்பட விழாக்களில் இவ்வாறான படங்களே வரவேற்பை பெறுகின்றன. உண்மையில் திரைப்பட விழாக்களின் அரசியல் என்பது பயத்தையே ஏற்படுத்துகின்றது

Children of White (2018)

தற்கொலைப் போராளிகள் பற்றிய பல குறும்படங்களும், திரைப் படங்களும் வெளிவருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை வயிற்றில் கருவுடன் ஒரு பெண் தற்கொலைப் போராளியாக குண்டு வெடிக்க வைக்கவுள்ளார் என்ற கருத்தை மையப்படுத்தி வெளிவருகின்றன.

தமிழில் இதனை சந்தோஷ் சிவன், ரெரரிஸ்ட் படத்தினூடாக ஆரம்பித்து வைத்தார்.

இன்று அதனைப் பின்பற்றி பல குறும்படங்கள் வெளிவந்தவாறு உள்ளன.

1. தற்கொலைப் போராளிகள் பற்றிய தோற்றம், அவர்கள் எவ்வாறு செயல்படுகின்றார்கள் என்பனபற்றிய எந்த வித ஆய்வுமின்றி திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.

2. இது வரையில் எந்த போராளி இயக்கங்களும் வயிற்றில் கரு வளரும் பெண்களை தற்கொலைப் போராளிகளாக பயன்படுத்தியதாக சான்றுகள் இல்லை. குறிப்பாக இலங்கையில் விடுதலை இயக்கங்கள் இவ்வாறு செயல்படவில்லை.

இணைப்பில் உள்ள Children of White (2018) படம் இவ்வாறான கருத்தமைவைக் கொண்டுள்ளது. அதுவும் ஒன்பது மாதக் கருவைக் தாங்கும் பெண்ணை தற்கொலைப் போராளியாக எந்த தீவிரவாத அமைப்பும் பயன்படுத்தாது.

குழந்தை பெற்றவுடன் குழந்தையை ஒரு சிங்கள வணிகர் ஊடாக, மேற்கு நாட்டைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு விற்கப்படுகின்றது.

இக் குறும்படம் நேரடியாகவே விடுதலைப் புலிகளை குறிவைத்தே எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பிறக்கும் குழந்தைகள் மேற்கு நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்பது உண்மை. ஆனால் அது அரசு இயந்திரத்தின் அணுசரனையுடனேயே நடைபெறுகின்றது. இதில் சிறுபான்மைச் சமூகங்களின் பங்களிப்பு மிக, மிகக் குறைவு. எனவே அரசை விமர்சிப்பதற்கு பதிலாக ஒரு சிறுபான்மைச் சமூகத்தை விமர்சிப்பது தவறு.

இயக்கங்கள் செய்தவற்றை விமர்சிக்கலாம், ஆனால் அவர்கள் செய்யாதவற்றை விமர்சிப்பது தவறு

அழகியல்ரீதியாக நன்றாக உள்ள படங்கள் கருத்தியலில் பின்னடைவைக் கொண்டுள்ளன. இவ்வாறான படங்களையே சர்வதேச திரைப்பட விழாக்கள் வரவேற்கின்றன. விருதுகளையும் கொடுக்கின்றன.

இப் படம் யாழ்ப்பாணத்திரைப் படவிழாவில்(2018) மிகச் சிறந்த குறும்பட விருதினைப் பெற்றுள்ளமை ஆச்சரியப்படவைக்கின்றது.

JAFFNA PRIDE

LGBTQஅல்லது தற்பாலியாளர்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றார்கள். கனடா உற்பட்ட பல நாடுகள் அவர்களை முழுமையாக, சட்டரீதியாக அங்கீகரித்துள்ளது. அவர்களது திருமணம் சட்டரீதியா பதிவு செய்யப்படுகின்றது. அவர்களுக்கிடையில் விவாகரத்துக்களும் இடம் பெறுகின்றன. தெற்காசிய நாடுகளில் (இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்காளதேஸ், மாலைதீவுகள்) இன்னமும் அவர்களை ஒரு வேற்று மனிதர்களாக பார்க்கும் பார்வை உள்ளது. மேற்கு நாடுகளில் மாநகர முதல்வர்களாக, மாநில முதலமைச்சர்களாக பலர் பதவி வகிக்கின்றனர். அங்கு அவர்கள் மீதான கண்ணோட்டம் மாற்றமடைகின்றது, ஆனாலும் மேற்கு நாடுகளில் வாழும் தெற்காசியர்களின் மனோ நிலை மாறவில்லை.

உலகின் பல நாடுகளில் அவர்கள் வருடத்தில் ஒரு நாள் நகரின் முக்கிய வீதியில் ஊர்வலமாக வருவார்கள். அவ்வாறான ஒரு ஊர்வலம் யாழ்ப்பாணத்திலும் இடம் பெற்றுள்ளது. இவ் வருடம் யூன் 11ல் நடைபெற்றது. முகநூலில் JAFFNA PRIDE Pசுஐனுநு ல் ஊர்வத்தின் காட்சிகளை காணலாம். யாழ் திருநர் வலையப்பினர் JAFFNA PRIDE ஐ நடாத்தினர். அத்துடன் அன்று அமைப்பினர் புகைப்படக் கண்காட்சி, குறும்படப் போட்டியில் வெற்றி பெற்ற படங்கள் திரையிடல் போன்ற நிகழ்வுகளையும் நடாத்தினார். (இத் தரவுகள் அவர்களது முகநூல் பக்கத்தில் பெறப்பட்டன). மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு துணிச்சலான முயற்சி. இந் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் தொடர வேண்டும் என வாழ்த்துகின்றோம்.

தமிழில் ஆங்காங்கே தற்பாலியலாளர்கள் பற்றிய படங்கள், குறும் படங்கள் வெளிவந்துள்ளன. மறைந்த அருண்மொழி விவரணத் திரைப்படங்கள் எடுத்துள்ளார். பேராசிரியர் சொர்ணவேலின் “கட்டு மரம்” திரைப்படம் தமிழில் வெளிவந்த மிகவும் குறிப்பிடத்தக்க படம். ரூபா போன்ற தவறான, திரைப்பட விழாக்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படங்களும் வெளிவருகின்றன. சியாம் செல்லத்துரையின் நாவலை மையமாக வைத்து அதே பெயரில் எடுக்கப்பட்ட படம் Funny Boy ஆங்கில நாவலான இது வெளிவந்த போது தற்பாலியாளர்கள் “நாவல் தங்களுக்கான அங்கீகாரம்” எனக் கொண்டாடினார்கள். இதனை தீபா மேத்தா படமாக்கும் பொழுது, நாவலின் அடிநாதத்தையே சிதைத்துவிட்டார்.

இந் நிலையில் இணையம் நிறைந்து பல் வேறு மொழிகளில் தற்பாலியலாளர்கள் பற்றிய படங்கள், குறும் படங்கள் காணப்படுகின்றன. நந்தாவின் இயக்கத்தில் வெளிவந்த மதி குறும்படம், ஸ்ரீஹரியின் இயக்கத்தில் வெளிவந்த பகலில் ஒரு வெண்ணிலா குறும்படம் ஆகியவை தற்பாலியலாளர்களை மையப்படுத்தியவை. பகலில் ஒரு வெண்ணிலாவில் “வினோ” ஒரு Bi-Sexual எனக் காட்டப்படுகின்றது. இவ் விரு படங்களும் எதிர்மறையாக தற்பாலியாளர்களை கருதவைக்கின்றன.

இவற்றிலிருந்து விலகி தற்பாலியலாளர்கள் மீதான சமூகத்தின் பொது கருத்தியலுக்கு எதிராக யாழ்ப்பாண திருநர் வலையப்பினரின் குறும் படப் போட்டியில் வெற்றி பெற்ற மூன்று குறும்படங்களும் கருத்துக்களை பதிவு செய்கின்றன. இப் படங்கள் குறிப்பிடும் விடயம் மிக முக்கியமானது. புரிதல், அவளவன், மௌன மொழி ஆகிய குறும் படங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க படங்கள். படங்களின் தொழில்நுட்பம், காட்சிப்படுத்தல், ஒளிப்பதிவு போன்றவற்றில் குறைகள் இருக்கலாம். ஆனால் அவையல்ல இங்கு முக்கியம்.

இவற்றுடன் பிறைநிலா கிருஸ்ணராஜாவின் “நாங்களும் இருக்கிறோம்” என்ற 17 நிமிட விவரணத் திரைப்படம் பல முக்கிய விடயங்களை பதிவு செய்துள்ளது. பிறைநிலா தொடர்ந்து இது போன்ற முயற்சிகளைத் தொடரவேண்டும்.

 தற்பாலியலாளர்கள் குறும்படங்கள் பற்றிய அறிமுகமே இக் குறிப்பின் நோக்கம்.

படங்களை யுரியுப் இணையத்தில், அல்லது முகநூலில் காணலாம்.

August 26, 2022 Unionville, ON

ரதன்

ரொரொன்டோவில் வாழ்கிறார். அரசியல், சமூக செயற்பாட்டாளர். ஒளி தேடும் நிழல்கள், எதிர் சினிமா ஆகிய நூல்களின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.