/

தேவிபாரதி! ஒரு வாசக பார்வை: தி.ஜினுராஜ்

எழுத்தாளர் தேவி பாரதி அவர்களின் வீடென்ப எனும் சிறுகதை தொகுப்பின் வாசகனின் பார்வை என இக்கட்டுரையை வரையறுத்துக்கொள்ளலாம். முப்பதுக்கும் குறைவான சிறுகதைகளிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட பத்து கதைகள் கொண்டது இக்கதை தொகுப்பு.

‘பிறகொரு இரவு’ , ‘ஜீவிதம்’ எனும் இரண்டு கதைகள் வாழ்வின் உயிர்ப்புத்தன்மை, வாழ்வின் பொருள் மற்றும் இறப்பு ஆகியவற்றை பற்றி சுட்டுகிறது. வாழ்க்கையை பற்றி பேசும் பெரும்பாலான கதைகள் தத்துவதச்சாயல் கொண்டவையாக இருக்கும் ஆனால் இந்த கதைகள் அப்படி அல்ல; வாழ்வியல் தளத்திலிருந்தே வாழ்கையை பற்றி பேசுகின்றன எனவே இவை இந்த எதார்த்த வாழ்வை பற்றி மேலும் புரிந்துகொள்ள உதவுகின்றன. ‘பிறகொரு இரவு’ கதையில் காந்தி தன்னுடைய மரணத்தை பற்றிக கற்பனை செய்கிறார். வாழ்க்கையை முடிக்கும் விதம் தான் வாழ்ந்த மிகப்பெரிய வாழ்க்கைக்கு மேலும் அர்த்தம் அளிக்க வேண்டுமென கற்பனை செய்கிறார். டால்ஸ்டாய் போன்று, கிறிஸ்து போன்று தன் இறப்பையும் அமைக்க விரும்புகிறார். ஆனால் அவருக்கு அமைந்தது அவர் எதிர்பாரததொரு  மரணம். ‘ஜீவிதம்’ கதையில் பழனி எனும் மையக்கதாபாத்திரம்  தன் வாழ்க்கையை வெறும் உயிர் வாழ்வதற்காக அமைத்துக்கொள்கிறான். ஆனால் எதிர்பாராத விதத்தில் சேற்றில் மீன் பிடிக்கும் பொழுது பாம்பு கடித்து இறந்து விடுகிறான். இறக்கும் தருவாயிலும் அவன் வாழ வேண்டும் எனும் முனைப்போடு இறக்கிறான். இரு கதைகளிருந்து வாழ்வு, மரணம் எனும் இருமையை பற்றி கேள்வி எழுகிறது. மரணம் வாழ்க்கைக்கு அர்த்தம் அளிப்பதா அல்லது வாழ்க்கையின் அபத்தத்தை உணர்த்துவதா? எனும் கேள்விகள் எழுகின்றன இந்த கதைகளை வாசிக்கும்போது. இந்த கேள்விகளுக்கு பதிலாக ஜீவிதம் என்பது கணம், கணம் என வாழ்தல் எனும் பதிலை அன்றாட தளத்திலிருந்து இந்த இருகதைகள் அளிக்கின்றன. வாழ்க்கைக்கு பின் தன் வாழ்க்கையின்  அர்த்தம் என்பது முக்கியமில்லை ஆனால் அந்த கணத்தில் நிறைவுற வாழ்தலில்தான் ஜீவதம் உள்ளது என உணர்த்துகின்றன.

‘ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்’, ‘அழிவு’, ‘தாஸ் என்பவனும் தாஸ் என்பவனும்’ ஆகிய மூன்று சிறுகதைகளும் கணவன் மனைவி உறவு, காமம் ஆகியவற்றை பற்றி பேசுகிறது. மூன்று கதைகளும் வழக்கமான இனிமையான கணவன் மனைவி உறவை பற்றி சித்தரிக்கவில்லை  மாறாக முறையற்ற காதல், சந்தேகம் போன்ற உறவுகளின் இருண்மையை பற்றி சித்தரிக்கிறது. இந்த கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் தெளிவான சுய பிரக்ஞை உடையவர்கள். எனவே அவர்களுக்கிடையே இருக்கும் கணவன் மனைவி குடும்ப உறவு, மோதல், காமம் போன்றவை வழக்கமானது போன்று அல்லாமல் சுய உணர்ச்சிகளும் தன்னுணர்வும் கூடியதாக இருப்பதால் அவை மேலும் தீவிரமாக உள்ளன. இந்த தீவிரத் தன்மை அந்த உணர்ச்சி உருவாகும் ஊற்றை பற்றி தெளிவான புரிதலை ஏற்படுத்துகிறது.

இந்த கதைகள் யாவும் உறவுச் சிக்கல்களினால் தோன்றும் உணர்ச்சிகளையே மையமாக கொண்டுள்ளன. உணர்ச்சிகளை விவரிப்பதன் வழியாகவே கதை நகருகிறது. ஆற்றாமை மற்றும் உணர்ச்சியின் உச்சம் கொலை செய்யும் உணர்வை தூண்டிவிடுகிறது. ‘ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்’ கதையில் முறையற்ற காதலுக்காக மனைவி கணவனை கொலை செய்து விடுகிறாள். ‘அழிவு’ கதையில் கணவன், தன்னை கொலை செய்து விடுவாள் என்று ஐயம் கொள்கிறான், ‘தாஸ் என்பவனும் தாஸ் என்பவனும்’ கதையில் தன் மனைவியின் கள்ளக்காதலனை தேடிக்கொண்டு இருக்கிறான்.

இந்த கதைகளில் அதி காதலால்தான் கணவனுக்கு மனைவி மீதும் மனைவிக்கு கணவன் மீதும் வன்மம் தோன்றுகிறது. ‘ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்’ கதையில் கணவனை கொலை செய்த பின் மனைவி தன் கணவனின் பிணத்தின் முன்னால் பிறனுடன் உடலுறவு வைத்து கொள்கிறாள். பின்னர் தன் இறந்த கணவனையே அன்புடன் கட்டியணைத்து கொள்கிறாள். இருவர் மீதும் அன்பு செலுத்துகிறாள். அன்பு செலுத்தும் கணம் ஒருவருக்காக மற்றொருவனை கொலை செய்யவும் துணிகிறாள்.

எக்கணத்திலும் தன்னை முழுதுற திறந்து வைப்பவன் அந்த வன்மம் உருவாகும் கணத்தை கடந்துவிடுகிறான். அதை மனத்தில் மறைப்பவன் அந்த உணர்ச்சிகளால் வெல்லப்படுகிறான். ‘அழிவு’ கதையில் தன்னை கொலை செய்துவிடுவாள் என நினைக்கும் கடைசி கணத்திலும் கூட தன் ஆழ்மனத்தின் முகிழ்ந்திருக்கும் ரோஜாவை அவளுக்கு சூட்ட நினைக்கிறான். ஆனால் அந்த கணத்தை அவனால் கடக்க இயலவில்லை.

இந்த தொகுப்பிலுள்ள ‘பலி’, ‘மீதி’, ‘கருவி’, ‘உயிர்தெழுதலின் சாபம்’, ‘வீடென்ப’ ஆகிய ஐந்து கதைகளும் ஒன்றுக்குகொன்று முற்றிலும் வித்தியாசமான கதைகள்.

‘மீதி’ சிறுகதையில் அப்பாவின் இறப்புக்கு பின் அப்பாவின் மீதியை எடுத்துவரச்செல்லும் மகன் ஒரு பழைய புகைப்படத்தின் வழியே தன்னை அப்பாவின், மீதி என உணர்கிறான். இறப்புக்கு பின் பொருட்கள் தன் அர்த்தமிழந்து வேறொரு அர்த்தம் தருவதையும், வாழ்ந்த வாழ்வின் பொருள் மாறுவதையும், வாழ்வின் புதிர்த் தன்மையை சுட்டுவதாக உள்ளது இக்கதை.

‘கருவி’ சிறுகதை முற்றிலும் வித்தியாசமானமொரு கதை. இறப்பு மற்றும் இழப்பு என்றவுடன் மனத உறவுகளின் இழப்பைப் பற்றியே பெரும்பாலான கதைகள் பேசுகின்றன. மாறாக இக்கதை மனிதனுக்கும் மிஷினுக்கும் உள்ள உறவை பற்றி சித்தரிக்கிறது. தையல் மிஷனுக்கும், டெய்லருக்கும் இடையே திகழும் உயிருள்ள உறவை பற்றியதே இக்கதையின்  கரு. மனித உறவின் இழப்பின் வலியை போன்றே தையல் மிஷினின் இழப்பின் வலியை உணர வைத்திருக்கிறார். மனித உறவில் கூட உணர்ச்சிக் கொந்தளிப்பு, மோதல், புரிந்து கொள்ளாமை என அன்பு செலுத்தும் உயிர்களுக்கிடையே இருக்கும். ஆனால் இந்த கதையில் தையல் மிஷினின் மீது முற்றிலுமாக அன்பு மட்டுமே செலுத்துகிறான். அதன் இழப்பு மனித உறவு இழப்புகளை விட மேலும் துக்ககரமானது. அந்த வலியை, துக்கத்தை சிறப்பாக காட்டியுள்ளதால் இந்தக்கதை மிகவும் சிறப்பான கதையாக அமைகிறது.

‘பலி’ சிறுகதை தலித் வாழ்வில் பிராமண குடும்பங்களால் ஏற்படும் கஷ்டங்களை அவமானங்களைப் பற்றி சித்தரிக்கிறது. கதையில் தலித் ஆணிடம் பிராமணப் பெண் ஒவ்வொரு முறையும் அவள் தன்னை வேசி, வேசி என்று அவன் கூறுவதற்கு மறுமொழி கூறுகிறாள். இது கதைக்கு புதுமையை அளிக்கிறது. கதை வழக்கமான தலித் – பிராமண இருமையிலிருந்து மேலும் நகர்ந்து தலித் – வேசி – பிராமண ஆகியவற்றிற்கு இடையேயுள்ள எண்ணத்தை பற்றி விவரிப்பதால் இந்த கதை சிறந்த கதையாகிறது.

‘வீடென்ப’ சிறுகதை முற்றிலும் வேறொரு கதை வடிவம். குறு நாவல் வடிவில் உள்ள சிறுகதை. கதைக்கருவும் வீடு, காமம், வாழ்க்கை என பல செறிவான விஷயங்களைப்பற்றி பேசுகிறது. வீடு என்பது என்ன? காமம் என்பது என்ன? எனும் கேள்வி எழுகிறது. சிறைச்சாலையில் இருக்கும்போது மையக் கதாபாத்திரம் சீனுவுக்கு தன் மனைவியின் உடலிலிருந்த வரும் தாழம்பூ மணம் சிறையில் இருக்கும்போது ஞாபகம் வருகிறது. ஆனால் வீட்டிற்கு வந்தபின் அவள் உடலிலிருந்த அந்த மணம் வருவதில்லை. அவன் இழந்த மணம் என்ன, எங்குள்ளது? எனும் பல கேள்வி எழுகிறது. பல விடயங்களை கேள்விக்கு உட்படுத்துவதால் சிறந்த கதையாகிறது.

இந்த தொகுப்பிலுள்ள மற்றொரு சிறந்த  கதை ‘உயிர்தெழுதலின் சாபம்’. மிகச்சிறந்த கதை சொல்லும் முறை. நல்லாள் எனும் தொன்மத்தின் கதையை கூறி அதே நல்லாள் நிகழ்காலத்தில் வாழ நேர்ந்து அந்த தொன்மமே தொன்மத்தை சந்திகிறது. தொன்மத்தின் நிகழ்கால அர்த்தம் என்ன? கால ஓட்டத்தில் அந்த தொன்மம் இழக்காது தக்க வைக்கும் பொருள் என்ன? என அறிய முற்படும் கதை.

நல்லாள் கிணற்றில் விழுந்து உயிர் துறக்கிறாள். அவள் அண்ணன் உயிர் பிழைக்க வைக்கிறான். உயிர்தெழுதலின் வழியே சாக வரம் பெறுகிறாள். பின்னர் ஊருக்குள் வந்து மக்களுடன் பழகுகிறாள். ஒரு ராட்டினக்காரனுடன் வாழ்கிறாள். ஒரு நாள் அவன் ஒரு தருணத்தில் அவளை வேசி என அழைக்கிறான். அவள் மறுபடியும் அதே கிணற்றில் விழுகிறாள். அவளுக்கு இறப்பே இல்லை. ஆனால் அவளுக்கு இறப்பே விடுதலை. அவள் பெற்ற வரம் அந்த இடத்தில் சாபம் ஆகிறது.

0

இந்த தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளின் கரு மனித மனத்தில் உள்ள உணர்ச்சியை புரிந்துகொள்ள முயற்சி செய்யும் விதமாக உள்ளது. கதையில் கதாபாத்திரங்களுக்கு இடையேயான உரையாடலும் குறைந்த அளவிலேயே உள்ளது. மற்றும் அந்த உரையாடல்களும் தனி மனித உணர்ச்சியை மேலும் துலக்கம் கொள்ளச்செய்வதாகவே உள்ளது. இந்த வகையான கதை சொல்லும் முறை கதை மீண்டும் வாசகனின் மனதில் நிகழ்வதற்க்கான சாத்தியக் கூறுகளை குறைக்கிறது. அதே வேளையில் மனிதன் அகத்தை மேலும் ஆழமாக புரிந்து கொள்ள உதவுகிறது.

அதேபோல பெரும்பாலான கதைகள் கடந்த காலத்தின் நினைவுகளை அலசும் விதமாக உள்ளது. கடந்த கால நிகழ்வுகளிருந்து அறிதலைப் பெறுவது போல் அல்லாமல், கடந்த காலத்தின் மீது விமர்சனமாகவே உள்ளது. பெரும்பாலும் கடந்த காலம் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே உள்ளது. கடந்த காலத்திலிருந்து தப்பி செல்லுதலே வாழ்க்கையாக உள்ளது. வாழ்க்கையை அதன் எதார்த்த தளத்திலேயே அணுகும் விதமாக உள்ளது. வாழ்வின் எதார்த்த தளத்தில் ஞானம் முக்கியமில்லை உணர்ச்சிகளே முக்கியம். குறிப்பாக நினைவுகளிலிருந்து உணர்ச்சி உருவாகும் அந்த கணம் மட்டுமே கதை கருவாக உள்ளது. அந்த நிகழ்வுக்கு பின் உள்ள காலம் முக்கியமில்லை. பெரும்பாலான கதைகள் முடிவுகளை நோக்கி நகர்வதில்லை. ஓர் புதிர்த்தன்மையுடன் நிறைவடைகின்றன. அதுவே கதையை மீண்டும் வாசிக்கவும் வாய்ப்பளிக்கிறது.  

தி.ஜினுராஜ்

சமகாலத்தில் விமர்சனக் கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவற்றை தீவிரமாக எழுதிக்கொண்டு வருபவர் ஜீனுராஜ். அத்துவ, அழகியல் பார்வையுடன் நீளும் அவரது நவீன இலக்கியத்தின் மீதான மதிப்பீடுகள் இன்னும் நுட்பமாக புனைவுகளை உள்வாங்கிக்கொள்ள வழிசமைத்துக் கொடுப்பவை.

உரையாடலுக்கு

Your email address will not be published.