/

‘மலைகளை வரையும்’ ஆர்வத்துடன், ‘மலைகளை பேசவிடுங்கள்’ எனும் குரலாக ஒலிக்கிறது: ‘மல்லியப்பு சந்தி’: அசுரா நாதன்

மயில்வாகனம் திலகராஜா, திலகர், மல்லியப்புசந்தி திலகர் என விளிக்கப்பட்டு வருபவர். இலக்கியவாதியாகவும், அரசியல் -செயல்பாட்டாளராகவும், பதிப்பாளராகவும் இயங்கிக்கொண்டிருப்பவர். பொதுஜன ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அதிகமாக அறியப்படுவர்.  மலையக மக்களின், சமூக-பண்பாட்டு-கலாசார-அரசியல் பிரதநிதித்துவத் தலைமுறைகளின் தொடர்ச்சியாகவும் இயங்கி வருபவர். இவரது இரண்டு நூல்கள் அண்மையில் வெளிவந்திருக்கிறது. இவரது ‘மல்லியப்பு சந்தி’ எனும் கவிதை நூல் 2007ம் ஆண்டில் வெளிவந்திருக்கிறது. எனவே இவரது இந்த மூன்று நூல்களின் வாசிப்பும், அவைகளின் கலை இலக்கிய, அரசியல் உள்ளடக்கப் புரிதலின் வெளிப்பாடாகவே இக்கட்டுரை தொடர இருக்கிறது.

முதல் அறிமுகம்’

மல்லியப்பு சந்தி திலகர்  குறித்த மேற்படியான தகவல்களும், அறிமுகமும்  இலக்கிய-அரசியல் செயல்பாட்டுத்தளத்திற்கு புதிதான ஒரு விடயம் அல்ல, என்பதையும் நான் அறிவேன்.

தற்போது பன்முக செயல்பாட்டாளர், அரசியல்வாதி என அறியப்பட்டும் பேசப்பட்டும் வருபவர் எனக்கு மல்லியப்புசந்தி திலகர் எனும் இலக்கியவாதியாகவே அறிமுகமானார். 2013ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 41வதுஇலக்கியச் சந்திப்பின்போதே அந்த அறிமுகம் நிகழ்ந்தது. பின்பு நண்பரானார். 2014ல் கொழும்பில் இருந்து என்னை மலையகத்துக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே இவர் இரண்டும் கலந்தவர் என்பதையும் அறிந்துகொண்டேன். மிதவாத-தீவிரவாத-வன்முறை அரசியல் செயல்பாட்டு விளைவுகளின் அனுபவத்தால் வெறுப்புற்றிருக்கும் எனக்கு இவர் ஒரு அரசியல் செயல்பாட்டாளராகவும் ‘கலந்திருக்கிறார்’ எனும் தகவலும் தெளிந்தது.

சிறுவயதில் மலையகத்திற்கு சென்ற தருணங்களில் அதன் பசுமை நிரம்பிய நிலக்காட்சிகளாலும், மலை உச்சியிலிருந்து நுரைத்து வழிந்து கொண்டிருக்கும் நீர்-கோலங்களாலும், மனம்- உடல் நனைந்து திளைத்ததருணங்கள் அப்போது. அது ஒரு ‘சுற்றுலாப் பயணியின் குதூகலமாக’ திளைத்திருந்த ஞாபகம்.

இலங்கைவாழ் சிறுபான்மைச் சமூகங்களின் சமூக- அரசியல் உரிமை மீட்பிற்காக போராடும் அவசியமும் முதன்மைத் தகுதியும் கொண்ட சமூகமாக இருப்பது மலையக சமூகமே. இலக்கியச் சந்திப்பில் திலகர் எனக்கு அறிமுகமானபோதே திலகரிடம் நான் முன்வைத்த கோரிக்கை என்னை மலையகத்திற்கு அழைத்துச்சென்று பல இடங்களையும், அங்குவாழ் சமூகங்களையும் நான் பார்ப்பதற்கு உதவமுடியுமா?” என்பதே.

2013ல் குடும்பத்துடன் எம்மை அழைத்து சென்றபோதும், 2014ல் என்னை தனியாக மலையகம் அழைத்துச் சென்றபோதும் பல இடங்களையும் அங்குவாழ் மக்களையும் மலையக தொழிற்சங்க முன்னோடிகளின் வரலாறுகளையும் அதன் நினைவுத் தடங்களையும் பார்த்து புரிந்துகொள்வதற்கு உதவியாக இருந்தார். அதன் அனுபவமாக அப்போதே மூத்த மலையக எழுத்தாளரிடம் எமது ‘வடு’ பத்திரிகைக்காக ஒரு நேர்காணலை மேற்கொண்டிருந்தேன். அது இவ்வாறு ஆரம்பித்தது:

அசுரா: தொடர்ச்சியாக இரண்டு தடவை மலையகத்திலுள்ள பல தோட்டங்களுக்கு செல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. அங்குள்ள பல தொழிலாளர்களை சந்தித்து உரையாடிப் பெற்ற அனுபவமும், நேரடியாக அங்குநான் பார்த்துப் பெற்ற அனுபவமும் மிக அதிர்ச்சியானவை. மேற்குலக நவீன தொழில் உற்பத்தி வளர்ச்சிகள் காரணமாக பல்வேறு நாடுகளும் அப்பயன்பாட்டை பெற்றுவருகின்றது. அந்தவகையில் இலங்கையிலும் தொழில் அடிப்படையில் பல்வேறு மாற்றங்களும், தொழிலாளர்களின் மேம்பாடுகளும் நிகழ்ந்து வருகின்றது. ஆனால் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு காலம் சுழலவில்லை. இலங்கைக்கு புலம்பெயர்ந்த 19ம்நூற்றாண்டு காலத்திலேயே வாழுகின்றார்கள். அவர்களது வாழ்விடமும், தொழிலாளர்களுக்கான உரிமைகளிலும் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. இப்போது உங்களுக்கு நாள் கூலி இல்லைத்தானே மாதசம்பளம்தானே எனக்கேட்டபோது அவர்கள் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள். இந்த மக்களை இழுத்துவந்த ஆங்கில ஆட்சியாளர்களிடம் இவர்கள் மத்தியில் எந்தவித மாற்றமும் நிகழவில்லை எனக் கூறினால், அவர்களே நம்புவார்களா என்பது சந்தேகமாகவே எனக்குத் தோன்றுகின்றது.

எனக்கு என்ன கேட்க தோன்றுகிறதெனில் கால மாற்றமே நிகழாத வகையில் அடக்குமுறைக்குள்ளாகும் இத்தொழிலாளர்களின் நிலமையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்ல முடியாததற்கான அடிப்படைக்காரணம் என்ன?

தெளிவத்தை ஜோசப்: பொதுவாகவே மலையகம் சம்பந்தமாக அரசாங்கங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை விசித்திரமானது. வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் பிரதிநிதிகளை மலையகத்திற்கு அழைத்துச் சென்று சில செழிப்பான இடங்களை காண்பித்து பாருங்க, இதேபோல்தான் இந்த மக்களும் வாழ்கின்றார்கள் எனக்காட்டி அவர்களை திருப்திப்படுத்தி அனுப்பிவிடுவார்கள். இப்ப திலகர்தானே உங்களை அழைத்துச்சென்று பாருங்க! தோட்டங்களைப் பாருங்க! அவங்க லயத்தைப் பாருங்க! இதில என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கு! எனக் காட்டியிருக்கிறார். தொழிற்சங்க வாதிகள்கூட இதே வழிமுறையைத்தான் பின்பற்றுகிறார்கள். அவர்களும் வெளிநாட்டு பிரதிநிதிகளை அழைத்துச் சென்று “வெள்ளையடிக்கப்பட்ட”   இடங்களைத்தான் காட்டுவார்கள். அதை மீறி அம்மக்களின் நிஜமான வாழ்க்கைச் சூழலை அழைத்துச் சென்றுகாட்டுவதற்கு யாரும் இல்லை. நீங்கள் கூறியதுபோல் ஆங்கில ஆட்சியாளர்கள் இந்த நிலமையைப் பார்த்தால் ஆச்சரியப்படுவார்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம் அவன் ஆச்சரியப்பட மாட்டான். அவன்தானே இந்த மக்களை இங்கு அழைத்து வந்தான் என்பது வரலாறு சொல்லும் உண்மை அல்லவா? உலகவரைபடத்திலேயே கண்ணுக்குப் புலப்படாதவகையில் இருந்த இலங்கைத் தீவை  பிரகாசப்படுத்தியதின் பிரதான பங்காளிகள் மலையக மக்கள்தான். அப்போது இலங்கையின் பொருளாதாரத்தில் 60-80 வீதமானவருமானத்தை பெற்றுக் கொடுத்தவர்கள் இந்த மக்கள்தான். ஆனால் தேயிலை போற்றப்பட்டதுபோல், புகழப்பட்டதுபோல் அதற்கு காரணமான மலையக மக்கள் போற்றப்படவில்லை என்பதுதானே உண்மை. இந்தமக்களை அழைத்து வந்த காலத்தில் இருந்து பல ஆண்டுகளாக கல்வி அறிவு மறுக்கப்பட்டே வந்தது. இதுகுறித்து பிரித்தானிய ஆட்சியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அவர்களும் இங்குள்ள வெள்ளைத்துரைமார்களிடம் அக்கோரிக்கையை முன்வைத்தபோது, துரைமார்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் அவர்களை இங்கு அழைத்து வந்தது எமக்காக உழைக்கவே தவிர அவர்களை நாம் படிப்பிப்பதற்காக அல்ல என மறுத்து விட்டார்கள்.

1930களின் பிற்பாடே கல்வி கற்பதற்கான உரிமை கிடைத்தது. இந்த விடயங்களை நான் எனது படைப்புகள் ஊடாகவும் வெளிப்படுத்தியிருக்கிறேன். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோது எங்களுக்கும் மிகப்பெரிய பரிசு தந்தார்கள். அதுதான் வாக்குரிமையை பறித்தது. அதுதான் சுதந்திரத்திற்காக எமக்கு கிடைத்த பரிசு. மலையக மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் சென்றவர்கள் பெரும்பாலும் இடதுசாரிகளாக இருந்தார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்! டி.எஸ். சேனநாயக்கா முதலாவது பிரதமராக வந்தபோது ஒன்றைக்கூறினார். அதாவது நாம் கஸ்டப்பட்டு, சிரமப்பட்டு வாங்கிய சுதந்திரத்தை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இணங்கமாட்டோம் என இந்திய விரோதக் கருத்தையும் முன்வைத்தார். அந்த கருத்தின் மூலம் இந்திய வம்சாவளியினரான எங்களை (மலையக மக்களை) வாக்குரிமையற்றவர்களாக்கினர். இதுபோன்ற பல தகவல்களை பெறுவதற்கு நாம் குமாரி ஜெயவர்த்தனா அவர்களின் நூலை படிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். கல்வி கற்க தடைவிதித்து, பாடத்தைப் பார்க்காதே படத்தைமட்டும் பார். கேள்விகள் கேட்காதே சொன்னதை மட்டும் செய் என்று தடைவிதிக்கப்பட்ட எம்மக்கள் மத்தியிலிருந்து இன்று கணிசமானவர்கள் படித்து பட்டதாரிகளாக வந்துள்ளனர். எனவே மாற்றங்கள் நிகழவில்லை என்று கூறமுடியாது. லயத்தில பிறந்த தெளிவத்தை ஜோசப்பை பிரான்சில் இருந்து பார்க்க நீங்கவாறீங்க. கனடாவிற்கு வரும்படி அழைக்கிறார்கள். ஜனாதிபதியும் அழைத்து பரிசும் தந்திருக்கிறார்தானே என்றால் அது மாற்றமும் வளர்ச்சியும்தானே. இருப்பினும் உங்கள் பார்வையில் தோட்டத் தொழிலிலும் அவர்கள் வாழ்க்கையிலும் எந்தவித மாற்றமும் நிகழமுடியாது இருப்பதற்கு காரணம் அரசியலும், தொழிற்சங்கங்களும்தான் காரணம் என்பேன். தன்நலம் ஒன்றே பெரிதெனக்கருதும் அரசியல் வாதிகளுக்கே வாக்களிக்கும் துரதிர்ஸ்டமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இங்கு எம்மை அழைத்து வந்து விட்டு, எம்மை அனாதரவாக விட்டுச்சென்ற நிகழ்வை என்னால் மறக்கமுடியாது. நீ சுதந்திரத்தை கொடுத்து சென்றபோது எங்களுக்கான தீர்வையும் வைத்துவிட்டே சென்றிருக்கவேண்டும்”.

இதன் போது தெளிவத்தை ஐயாவிடம் கேட்கப்பட்ட மலையகப்பிரச்சினைகளை ஏன் சர்வதேசத்துக்கு எடுத்துச்செல்லவில்லை என்கிற எனது இக்கேள்விக்கு தானும் பதில் கூறவேண்டும் என திலகர் எமக்குள் நுழைந்து இவ்வாறு பதிலளித்தார்:

அசுரா நீங்க மலையக மக்களின் நிலையை சர்வதேசமயப்பபடுத்துவது சம்மந்தமாக கேட்ட கேள்விக்கு நான் மேலதிகமாக சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன். முதலில ஒருவிசயம். நீங்க தனி நாடு கேட்டு அரசாங்கத்திற்கு எதிராக யுத்தம் செய்தபோது தமிழ் என்கிற அடையாளத்துடன்தான் வடகிழக்கு இயக்கங்களின் போராட்டங்கள் அமைந்தன. இதை வைத்து அரசாங்கம் எங்கட தமிழ் வேற, உங்கட தமிழ்வேற என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவில்லை. யுத்தத்தின் விளைவு எல்லாத் தமிழருக்கும் ஒன்றாகவே அமைந்தது. இன்றும் கூட மலையக இளைஞர்கள் யுத்தத்தைக்காரணம் காட்டி சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள். இதன்காரணமாகவே நாம் அதிகமாக பாதிக்கப்பட்டோம். குறிப்பாக எமது தலைமுறை 1980 களுக்குப்பின்மலையகத் தேசியம்’ என்ற கருத்தியலைக்கூட முன்னெடுக்க முடியாத சூழ்நிலை உருவானது. நாங்கள் நாலுபேர் சேர்ந்து கூடி கதைத்தாலே நாங்கள் ஏதோ இயக்கம் தொடங்கிவிட்டோம் என்கிற பார்வைதான் ஆளும் வர்க்கத்துக்கு இருந்தது. அப்படி சமூகப் பண்பாட்டுத்தளத்தில் மலையகத்தில கூட இயங்க முடியாத சூழ்நிலையை வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்ட யுத்த சூழல் உருவாக்கியது. அதிலயும் எங்களின் அடையாளம் தொலைந்தது.

அதற்கு முதல் தலைமுறைக்கு என்ன நடந்தது? பதினைந்து இலட்சத்தில் பாதித் தொகையை இந்தியாவுக்கு அனுப்பினார்கள். அந்த நிலையிலும் எங்களின் அடையாளமும் பலமும் தொலைந்தது. 1963ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பில் இலங்கையில் இரண்டாவது அதிகளவான சனத்தொகையைக் கொண்டிருந்த நாங்கள் 1981ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது நான்காம் நிலைக்குத் தள்ளப்பட்டோம். இரண்டாம் நிலைக்குவந்த உங்களின் போராட்டம் எங்களை சர்வதேசம் என்ன, எங்களது பூர்விகமான இந்தியாவே கூடகண்டுகொள்ளாத ஒரு சூழ் நிலையை உருவாக்கியது. அதற்கும் முந்தின தலைமுறைக்கு என்ன நடந்தது. வெள்ளைக்காரன் இலங்கைக்கு சுதந்திரத்தைக் கொடுக்கிறான்.  சுதந்திர இலங்கை எமது சுதந்திரத்தை பறித்தது. அதிலயும் எங்களின் குடியுரிமையும் அடையாளமும் தொலைந்தது. நாங்கள் எங்களது அடையாளத்துக்காகவும், வாக்குரிமைக்காகவும், நாளாந்த சம்பளத்துக்காகவும் என உடனடிப்பிரச்சினைகளுக்காகவும் உள்நாட்டில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்க வேண்டிய சூழலில் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எப்படி கூறுவது?. ஆனாலும் அதுகுறித்துசர்வதேசத்திற்கு சொல்லவேண்டிய கால கட்டம் இப்போதுதான் வந்திருக்கின்றது. இந்தியாவிற்கே சொல்லவேண்டிய காலகட்டம் இப்போதுதான் வந்திருக்கின்றது.

தெளிவத்தையாரின் ‘விஸ்ணுபுரம்’ விருதினைக் கூட எமது பிரச்சினையை தமிழ் நாட்டிற்கு கொண்டுசெல்லும் ஒரு ஊடகமாகவே நாம் கையாள நேர்ந்தது. இப்போதெல்லாம் பேஸ்புக்கில் சொல்லுவதும் சர்வதேசத்திற்கு சொல்வது போலத்தானே. ஆனால் பான் கீ மூனுக்கு இவையாவும் தெரியப்போவதில்லையே! காரணம் அவர்தமிழ் பேஸ்புக்கில் இல்லைத்தானே. எனவேதான் அதற்கான அரசியலை நாம் கையில் எடுக்கவேண்டியுள்ளது”. (‘வடு’ இதழ் 22 மார்ச் 2015)

                 எனும் நூல்களால் காணும் மலையகம்

2014ல் தெளிவத்தை ஐயாவிடம்: ‘கால மாற்றமே நிகழாத வகையில் அடக்குமுறைக்குள்ளாகும் இத்தொழிலாளர்களின் நிலமையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்ல முடியாததற்கான அடிப்படைக்காரணம் என்ன’? எனும் எனது ஆவலை, 2015ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக திலகர் தெரிவுசெய்யப்பட்ட காலத்திலிருந்து  தனது செயல்வடிவத்தின் ஊடாகவும் பூர்த்திசெய்து கொண்டிருப்பதைஅவதானிக்க முடிகிறது. அதன் வரலாற்று ஆதாரமாக பதிவு செய்யப்பட்டிருப்பது ‘மலைகளை பேசவிடுங்கள்’ எனும் நூல்.

இவ்வாறான வரலாற்றுப் பதிவுகள் என்பது மலையக சமூக அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு ஒரு புதிதானவிடயமும் அல்ல. இலங்கை அரசியல் இயக்கப்போக்கில் மலையக அரசியல் செயல்பாட்டாளர்களின் தனித்துவம் என்பது, அவர்களில் கணிசமானவர்கள் கலைஞர்களாகவும் அரசியல் செயல்பாட்டாளர்களாகவும் இயங்கிக்கொண்டிருந்தார்கள், இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே.  மலையக சமூக அரசியல்செயல்பாட்டு முன்னோடிகளின் மரபுவழி தொடர்ச்சியாகவே திலகரின் நூல்களையும் இனம்காணக்கூடியதாக இருக்கிறது.  இது மலையக அரசியலின் ஒரு கலாசார பண்பாட்டு மரபாகவே தொடர்கிறது. திலகரின் மூன்று நூல்களில் ‘மலைகளை வரைதல்’ எனும் நூலானது ‘மலைகளை பேசவிடுங்கள்’ ‘மல்லியப்பு சந்தி’ எனும் இரண்டு நூல்களிலும் இருந்து அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறது.

‘மலைகளை பேசவிடுங்கள்’, ‘மல்லியப்பு சந்தி’ எனும் இரண்டு நூல்களிலும் திலகர் மலையகத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார். மூன்றாவது நூலினூடாக மலையகத்தை ‘வரைவதற்கு’ முனைந்து கொண்டிருக்கிறார். பாரளுமன்ற பிரதிநிதித்துவ காலகட்டத்தில் அவருக்கு கிடைத்த வெளிநாட்டுப் பயணங்களூடாகவும், சந்திக்கும் நண்பர்கள் மூலமாகவும்,  அதற்கு முன்பே  தனக்கு கிடைத்த நூல்களிலும் அவர் தனது நுண்ணியபார்வையூடாக மலையகத்தை தேடிக்கண்டு ‘வரைவதற்கே’ அவரது வாசிப்பு, முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை அவதானிக்க முடிந்தது.

‘அரசியல் விடுதலையுடனும்…(!)’,  ‘கொரோனா சிறையிலும்’  வாழ்ந்த ஐந்து மாத காலத்துக்குள் தனக்குகிடைத்த, வழங்கப்பட்ட இருபது ஆங்கில நூல்களை வாசித்து அவைகளை தமிழில் அறிமுகப்படுத்தும் வகையில் ‘மலைகளை வரைதல்’ எனும் ஒரு தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். இது  சம்பிரதாய பூர்வமான ஒருஅறிமுகப் பிரதி அல்ல.

பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் மாணவனாகவும் பயின்றதன் முதிர்ச்சியையும் இதில் காணக்கூடியதாக இருக்கிறது. திலகரின் ‘மல்லியப்பு சந்தி’ எனும் கவிதை நூலுக்கு எழுதிய பின்னுரையூடாக அறிமுக விமர்சனப்பயிற்சியை பேராசிரியர் கா. சிவத்தம்பி  திலகருக்கு வழங்கியிருக்கிறார்: விமர்சனத்துக்கு இரண்டு வகையான பணிகள் உண்டு.  சற்று ஆழமாக சிந்திக்கின்ற பொழுது அவை இரண்டுமே நாணயத்தின் இரண்டு புறங்கள்தான். முதலாவது, எழுதப்படும் விமர்சனம் வாசகரை படைப்புக்கு ஆற்றுப்படுத்துவது, வழிநடத்துவது. இரண்டாவது அந்த படைப்பினுள்ளே கிடக்கும் கிளர்வுத் தளங்களை, அவற்றின் அமைவை, அவை அப்படைப்பினை எவ்வாறு முழுமை செய்கின்றன அல்லது செய்யவில்லை என எடுத்துக் கூறுவதாகும்” எனும் தனது இலக்கிய விமர்சன ஆசானின் ‘மொழிப் பாதை’ வழியாகவே திலகரும் ‘மலைகளை வரைந்து’ பயணிப்பதாகப் புரிகிறது.

மலையக ஆளுமைகள் உட்பட மேலும் பலரால் எழுதப்பட்ட ஆங்கில நூல்களை அறிமுகப்படுத்துவதும், அதன் உள்ளடக்கங்களை வாசகர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தி வரையப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படையாக புலப்படுகின்ற விடயம். ஆனால்  மலையகம் புறக்கணிப்படுகிறதா, மலையகத்திற்கு நெருக்கமாக இருக்கிறதா, மலையகமும் அவதானிக்கப்படுகிறதா  எனும் அவரது நுண்ணிய பார்வையில் புலப்படும் ‘கிளர்வுத் தளங்களை’ அவரது அறிமுகப்பார்வையூடாக புரிந்துகொள்ள முடியும்.

‘மலைகளை வரைதல்’ நூலின் முதலாவது கட்டுரையான ‘காலம் உனக்கொரு பாட்டெழுதும்’  நூலின் அடிப்படை நோக்கம் ஆயுதப்போராட்ட அனுபவங்களை பிரதிபலிக்கும் படைப்புகளை மட்டுமே தொகுப்பதற்கான முயற்சியாக அறியமுடிகிறது. அதில் தனது கட்டுரை வருவதற்கான காரணம் எதுவாக இருக்கும் எனும் தேடலூடாக அந்நூலுக்கு ஒரு எதிர்மறை பார்வையை முன்வைக்க முனையவில்லை. அந்நூலின் நீண்ட அறிமுகக் குறிப்பில் தமிழ் பேசும் மக்கள் குறித்த விரிந்த பார்வை இருந்திருக்கிறதை திலகரின் பார்வையூடாக அறியமுடிகிறது. அதில் மலையகத் தமிழர்கள் உட்பட, வட-கிழக்கு தமிழ் பேசும் மக்கள் குறித்த ஆய்வுகளும் இடம்பெற்றிருக்கிறது. அதில் எவ்வாறான உள்ளடக்கம் துலங்குகிறது என்பதை நாம் ஒவ்வொருதரும் வாசிக்கும்போதே அதனை புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதில் வெளிவந்த தனது கட்டுரையை  திலகர் அந்த நூலுக்கான நேர்மறைப் பார்வையில் பலம் சேர்த்திருக்கிறார்.

அதிலுள்ள திலகரின் கட்டுரையானது ஆயுதப்போராட்ட அனுபவங்களைக் கொண்டதல்ல. அவர் 1983களில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும்  தனது குடும்பமும் தானும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட அவலத்தை சித்தரிக்கும் ஒரு கட்டுரை அது. எதிர்ப்பு அரசியலையும் வெறுப்பு அரசியலையும் மூலதனமாகக் கொண்டு சிந்திக்கும்  பார்வையில் இந்த நூல் எதிர்மறையாக விமர்சிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தான் மலையகத்தை சேர்ந்தவன், தனது கட்டுரையானது அந்த நூலின் அடிப்படை நோக்கத்திற்கு தவறாக இருக்கிறது என உணர்ந்து கொண்டிருப்பினும் அந்த நூலை முக்கியத்துவப்படுத்தும் நோக்கில் தனது கட்டுரையை அவர்களின் அறிமுகக் குறிப்போடு இணைத்து பார்த்திருக்கின்றார். காரணம் அந்த நூலுக்கான அறிமுகக் குறிப்பில் மலையக தமிழர்கள் பற்றிய பதிவுகளும் இருந்திருக்கிறது.

திலகரின் ஆங்கில மொழி ஆசிரியராக  சி.எஸ்.காந்தி அவர்களை இந்நூலில் நினைவு கூர்ந்திருப்பினும் திலகரின் மொழி-ஆக்க பயிற்சிக்கு ஆசானாக சக்தி பால அய்யா அவர்களின் மொழி பெயர்ப்புக்களே நெருக்கமாக இருந்திருக்கும். இந்த நூலில் ‘தேரும் திங்களும்’ எனும்  ஒரு தமிழ்க் கவிதையை TEMPLE CAR AND THE MOON என மொழியாக்கப்பட்டிருக்கும்  நிலையை அவதானித்திருக்கிறார். ஆங்கிலம் பேசமுடியாத எனக்கே இது புன்னகையை உதிர வைத்திருக்கிறதென்றால் ஆங்கிலப் புலமையுள்ள தழிழ் பேசுபவர்கள் வாய்கொட்டிச் சிரித்திருப்பார்கள்.

தனது ஆங்கில ஆசிரியரான சி.எஸ் காந்தி என்பவருக்கே ‘மலைகளை வரைதல்’ நூலுக்கான  அர்ப்பணிப்பும் அஞ்சலியாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திலகர் மூலமாக இந்த ஆளுமையை நானும் சந்தித்தேன். அவருடனான நீண்ட உரையாடலை பதிவும் செய்தேன். ஹட்டனிலுள்ள தோழர் லெனின் மதிவாணம் வீட்டில் நிகழ்ந்த ஆனந்தம் அது. சி.எஸ்.காந்தியும் மறைந்த அன்டன் பாலசிங்கம் அவர்களும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதையும் அப்போதே அறிந்துகொண்டேன். எனக்கோ அரசியல் பார்வையில் அன்டன் பாலசிங்கம் எதிர்மறையானவர். சி.எஸ்.காந்தியுடன் உரையாடும்போது நான் அன்டன் பாலசிங்கம் மீது சேற்றை அள்ளி அள்ளி வீசிக்கொண்டே இருந்தேன். சி.எஸ்.காந்தி தனது நண்பன் மீது நான் வீசிய சேற்றை (விமர்சனத்தை) கழுவிக் கழுவிக்கொண்டே இருந்தார்.

‘ஆபிரிக்க-ஆசியக் கவிதைகள்’ எனும் சிறு நூல் 1963ம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கிறது. இதில் உள்ளடங்கிய கவிதைகளில் இலங்கையை சேர்ந்த ஆறு கவிஞர்களின் கவிதைகள் பிரசுரமாகியிருக்கிறது. இதில் ஐந்து சிங்கள கவிஞர்களும் ஒரே ஒரு தழிழரது கவிதையும் வெளிவந்திருக்கிறது. அவர்தான் சி.வி.வேலுப்பிள்ளை. இவரது கவிதையின் முடிவை திலகர் இவ்வாறு மொழியாக்கம் செய்துள்ளார்:

நாளொன்றின் எட்டு மணி நேரமுமாய்-ஏழு

நாளும் ஒரு வாரத்திலே-அவர்களின்

வாழ்க்கை ரத்தம் ஓடுவது

அந்த நிலத்தை அழகாய் ஆக்கிடவே!

யாருக்கோ சொர்க்கம் ஆகிடவே!

இந்த ஆபிரிக்க-ஆசிய கவிதை தொகுப்பின் உள்ளடக்கமானது மூன்றாம் உலகநாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய மனப்போக்கினை விமர்சனத்திற்குள்ளாக்குவதும், அவ்வாறான செயலை கண்டிப்பதாகவும் கருதமுடிகிறது. இது ஆபிரிக்க-ஆசிய எழுத்தாளர்களின் ஒன்றியம் எனும் அமைப்பினூடாகவே வெளிவந்திருக்கிறது. அந்த அமைப்பின் செயலாளராக இருந்தவர் ரத்ன தேசப்பிரிய சேனாநாயக்கா. இந்த நூலை வாசித்து புரிந்து கொண்ட அனுபவத்தில் திலகருக்குள் ‘ஓப்பாரிக் கோச்சியின்’ அழுகுரல்கள் கேட்டிருக்கிறது. ஏகாதிபத்திய கருணையற்ற செயல்களை கண்டிக்கும் ஒரு அமைப்பினர் 1964க்குப் பின்பாக மலையக மக்களுக்கு நிகழ்ந்த அவலங்களை கண்டித்திருக்கிறார்களா? எனும் உள்ளுணர்வின் வெளிப்பாடாகவே இந்நூலின் அறிமுகத்தில் மல்லியப்பு சந்தி திலகரை இவ்வாறு எழுதத்தூண்டியிருக்கிறது:

இந்த எழுத்தின் வீச்சு பின்னாளில் இலங்கை போன்ற நாடுகளின் யதார்த்த அரசியலில் பிரதிபலிக்காமை, மறைமுகமாக ஏகாதிபத்திய நாடுகளிடம் அடிமைத்தனமாக செயற்படத் தொடங்கியமை இற்றைவரையான அரசியல் முன்னெடுப்புக்களின் சாபக்கேடுகளாயுள்ளது” என தனது விமர்சனத்தை ஒரு வகை மௌனமொழியில் கடந்து செல்கிறார்.

மைத்தரிரி ஜெகதீசன் என்பவரின் “தேயிலையும் தோழமையும்” எனும் நூலின் அட்டைப்படத்தினுள் மூழ்கிக்கிடக்கும் படிமங்களை மீட்டெடுக்கும் வல்லமை,  மலையகப் பெண்களின் வாழ்வியல் துயரங்களை சுமக்கத் துணியும் மனங்களுக்கே சாத்தியமாகும். அதன் உள்ளடக்க வலிமையை திலகரும் தொட்டுக்காட்டியே மைத்திரி ஜெகதீசனின் நூலை அறிமுகப்படுத்துகிறார்.

அனைவரும் அறிந்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள் இலங்கையில் புராதன ஓவியங்கள் சிகிரியா குன்றில் வரையப்பட்டிருப்பதை. குறிப்பாக அந்த பெண் ஓவியம். அந்த ஓவியத்திற்கான பெருமையும் புகழும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மைத்திரி ஜெகதீசனின் நூலின் அட்டைப்படத்தில் அந்த ஓவியமானது தேயிலைக் கூடையை தோளில் சுமந்துகொண்டும் வயிற்றில் பிள்ளையை சுமந்துகொண்டும் தேயிலை கொழுந்தை கொய்து விரல் நுனியில் வைத்திருப்பதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த காட்சிப்படுத்தல் மூலமாக வெளிப்படுத்தும் உணர்வினை சுமந்துகொண்டிருப்பவராலேயே அவ்வாறான ஓவியத்தை வரையமுடியும்.

ஹட்டனை பிறப்பிடமாகக் கொண்ட ஹனுசா சோமசுந்தரம் எனும் பெண்ணே இந்த ஓவியத்தையும் வரைந்திருக்கிறார். அது அவரது தாயினதும் பாட்டியினதும் கதையால், சோகத்தால் நிரப்பப்பட்டிருக்கும் ஓவியம். அந்நூல் குறித்த திலகரின் உள்ளடக்க விபரங்கள் அனைத்துமே மங்கலாகவும் அந்த அட்டைப்பட ஓவியமே அந்த நூலின் உள்ளடக்கத்தின் பிரகாசமாகவும் எனக்குள் ஒளிர்ந்தது.   எம்மைப்போன்று திலருக்கு இதுவொன்றும் அதிர்ச்சியான விடயமல்ல. மலையக பெண்களின் ‘கூடைப் புராணத்தை’ திலகர் தனது ‘மல்லியப்பு சந்தி’ எனும் கவிதைத் தொகுப்பினூடாக பதிவு செய்திருக்கிறார்.

ஒரு மலையகச் சிறுமி தனது பால்ய பருவத்தில் வீட்டு வேலைக்காக கொழும்பு நகருக்கு அழைத்துச் செல்வதும், பருவமடைந்து மலையகம் திரும்பிய வாழ்வை, ‘அடுப்புக்கு பயந்து நெருப்புக்குள்’ விழுந்த சோகமாக திலகர் ‘கூடைப் புராணம்’ எனும் கவிதையில் பதிவு செய்திருக்கிறார்:

“…..

ஐயாவு’ மாமன்

என்னை

கொழும்புக்குக்

கூட்டிப்போச்சு

அங்க

நோனாவும்

மாத்தையாவும்

நூறு (ஐ)அம்பது

கொடுப்பாக

எனக்கில்ல

மாமனுக்கு

………

எப்படியோகண்டுபிடிச்சு-நான்

பெரியவளா ஆயிட்டேன்னு

பெரிய நோனாகிட்ட

சொல்லிவைச்சேன்.

வெளிய சொல்லக்

கூடாதென்னு-நோனா

விளக்குமாத்த

நீட்டினாக

…….

…….

எனக்கு தெரிஞ்ச

எழுத்தினாலே

எழுதிப்போட்டேன்

லெட்டர் ஒன்னு.

என் ஆத்தா பதறிவந்து

என்னை அழைத்துப்

போச்சு

தோட்டத்துக்கு.

அங்க

பட்டுப் பாவைடை

சரிகை கட்டி-எனக்கு

சடங்கு வைக்க நாதியில்ல.

படங்கையும் சீட்டையும்

கட்டிபெரியபுள்ள ஆனவள

பேர் பதிஞ்சு

விட்டுட்டாக.

……….

பத்துமாசம்

நான் சொமந்து

பெத்துக்கிட்டேன்

புள்ள ஒன்னு

அதுக்கு தொன வேணுமின்னு

அடுத்த கருவையும் நான்

அணைச்சுக்கிட்டேன்

வயித்துக்குள்ள.

அம்மாமாரையெல்லாம்

ஆசுபத்திரி வரச்சொல்லி

தோட்டத்து லொறியில

எங்கள தொங்க வச்சு

இழுத்தாக

மயக்கம் தெளிஞ்சு நான்

வெளக்கம் கேக்கையில்-என்

கருவை கலைச்சிட்டாக-என்

கருவறையை வெட்டி

கல்லறையா மாத்திட்டாக

இந்த கொடுமை கேக்க

யாருமில்ல-என்ன

கொண்டு சேர்க்க

நாதியல்ல-இந்த

கூடக்காரி கொழுந்தோ

(உ) ஒலக சந்தையில.”.

அன்புள்ள அம்மாவுக்கு’ எனும் கவிதையில்:

……

ஏசு சுமந்த

பாவச்சிலுவையிலும்

பாரமான

கூடைச்சிலுவை

சுமக்கும் நீ

கொழுந்தெடுத்தது போதும்

உன் முதுகு

கூனல் விழுவதில்

கொஞ்சமேனும்

இஸ்டமில்லை எனக்கு

விழுந்து, விழுந்து

படித்தது போதும்

எழுந்து உன்னை

என் கரத்தில்

ஏந்திட வேண்டும்-என்ற

எண்ணத்தில்

மாறறமில்லை

……”

‘மல்லியப்பு சந்தி’ கவிதை தொகுப்பில் இதுபோன்ற மலையக பெண்களின் வாழ்வியல் துயரங்களை மையப்படுத்திய வகையில் ஒன்பது கவிதைகள் பதிவாகியிருக்கின்றது. அவையாவும் மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்கள். இவைகளை புதுக்கவிதையா, நவீன கவிதையா எனும் ‘தரப்புள்ளி’ வழங்கும் மனநிலையிலா அவதானிக்க முடியும்? அவை மலையக மக்களின் ‘பாஷை’. அவர்களின் வாழ்வியலை உணர்வுகளால் உள்வாங்கும்போதே அந்த ‘பாஷை’ புரியும். அதனது இலக்கிய வடிவத்தின் செழுமையையும் மனம் ஏந்திக்கொள்ளும்.

எஸ்.முத்தையா என்பவரின் ‘தி இந்தோ-லங்கன்ஸ்’ எனும் படத்தொகுப்பு நூல் புகைப்படங்களூடாக மலையக வரலாற்றை சொல்வதாக திலகர் அறிமுகப்படுத்துகிறார். அதில் இலங்கையர்கள், இலங்கை தமிழர்கள், இந்திய தமிழர்கள் என்பதான வேறுபாடுகளை கேள்விக்குள்ளாக்கும் எஸ்.முத்தையாவின் பார்வை ஆய்வுக்குரியதொன்றே. இலங்கைவாழ் அனைவரும் இந்தியர்களே என்பதையும் எஸ். முத்தையா அவர்கள் வலியுறுத்துகிறார்.

இந்தியாவுடனான புவியியல் தொடர்பு பற்றிய வரலாற்று நுல்கள் பல வெளிவந்திருக்கிறது. மயிலை சீனிவேங்கடசாமி என்பவர் இவ்வாறான ஆய்வை மத-பண்பாட்டு-கலாசாரா தொடர்புகளோடு ஒருங்கிணைத்து ‘இலங்கை வரலாறு’ எனும் நூலை எழுதியுள்ளார். இந்தியாவாக இருந்த நிலப்பரப்பு எவ்வாறு பிரிந்ததென்பதும் இலங்கையின் தென்பகுதிகளில் தெய்வ வழிபாடுகளில் காணும் ஒற்றுமைகள் போன்ற பல்வேறு அம்சங்களை வரலாற்று நூல்களோடும், சங்க-இலக்கிய பாடல்களின் துணையோடும் ஆய்வு செய்திருக்கிறார் மயிலை சீனிவேங்கடசாமி. திலகர் அறிமுகப்படுத்திய எஸ்.முத்தையாவின் பார்வையும் அதை நோக்கியதாகவே இருக்கிறது.

‘இலங்கை வெகுஜன ஊடகவியலாளர்கள் எனப்படுபவர்கள் மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை புரிந்துகொள்ளாமலேயே தன்னிடம் கேள்விகளை கேட்டுவருகிறார்கள் என்கிறார் திலகர். அவ்வாறானவர்களுக்கு யோகேஸ்வரி விஜயபாலன் எழுதிய ‘முடிவுறா சமத்துவமின்மை’ எனும் நூலை பரிந்துரைக்கிறார். மு.நித்தியானந்தனால் திலகருக்கு வழங்கப்பட்ட இந்நூலின் ஆசிரியர் மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட யோகேஸ்வரி விஜயபாலன் ஒரு சட்டத்தரணியாக லண்டனில் கடமையாற்றுகிறார். பெருந்தோட்டத்துறை வளர்ச்சிக்காக அழைத்துவரப்பட்ட இந்திய தமிழர்களின் வருகையோடும் அதற்காக அழைத்து வரப்பட்ட அம்மக்களுக்கு இதுவரைகாலமாக இழைக்கப்பட்ட அநீதிகளை ஆய்யு செய்யும் ஒருநூலாக திலகர் இதனை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இவ்வளவுகாலமாக வாழ்ந்து, அம்மலையக மண்ணோடு வேர்கொண்டிருக்கும் அம்மக்களின் பிரஜா உரிமைமீதான விவாதங்கள் தற்போதும் நடந்து கொண்டிருக்கிறது. அதனையும் ஆய்வுக்குட்படுத்தியிருப்பதோடு, லண்டனுக்கு சென்று ஆறு மாத காலத்துக்குள்ளேயே தனக்கு லண்டன் பிரஜா உரிமை கிடைத்த தகவலையும் யோகேஸ்வரி விஜயபாலன் தனது நூலில் பதிவு செய்திருப்பதாக திலகர் அக்கட்டுரைக்கு அழுத்தம் கொடுத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

சுவாரசியமாக இருந்தது மூன்று பெண்களின் முயற்சியில் தொகுக்கப்பட்ட ‘நினைவுக்காப்பகம்’ எனும் நூலின் அறிமுகம். இலங்கை சுதந்திரமடைந்த எழுபது ஆண்டுகளின் நினைவாக எழுதப்பட்ட ஒரு பக்க கதைகள். அதன் படைப்பாளிகள் தமது நினைவுப் பொருட்களை மையப்படுத்தியே அக்கதைகளை எழுதியிருக்கிறார்கள். கயிறு, கோப்பை, சிலேட்டு பென்சில், போன்ற தாம் சேகரித்து வைத்திருக்கும் பொருட்களின் படங்களையும் அவைகள் மீதான தமது நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு பக்கத்தில் எழுதப்பட்ட கதைகளாம். 1957ம் ஆண்டு தனது மாணவன் ஒருவன் பிரபாகரன் என்பவருக்கு கன்னத்தில் சிலேட்டு பென்சிலால் குத்தி ஓட்டை விழுத்தினான் என்பதை பராக்கிரம நிரியெல்ல ஒரு பக்க கதையில் எழுதியிருக்கிறார். 1957ம் ஆண்டளவில் இந்தப் பெயருக்கு ஏதும் முக்கியத்துவம் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை என்பதாக ஒரு ‘உள்குத்து அரசியலை’ பராக்கிரம நிரியெல்ல அதில் நிரப்பி(எழுதி)யிருக்கிறார்.

மலையக ஆளுமைகளில் எம்.வாமதேவன் மிக அவதானிக்கப்பட வேண்டியவரே. இவரது ஆங்கில நூலான ‘தமிழ்நாட்டில் தாயகம் திரும்பிய இலங்கையர்கள்’ எனும் நூலையும் திலகர் அறிமுகப்படுத்தியுள்ளார். இவரது சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்புகள் துயரங்கள் உட்பட இவரே தாயகம் திரும்பி அலைக்கழிக்கப்பட்ட வாழ்க்கையை பதிவு செய்திருப்பதாக அறியமுடிகிறது. ஆ.ராமச்சந்திரனால் தொகுக்கப்பட்ட ‘மலையகமும் மறுவாழ்வும்’ எனும் நூலிலுள்ள ‘தோட்டத்தொழிலாளர்களின் பொருளாதாரநிலை’ எனும் வாமதேவனின் பயனுள்ள ஒரு கட்டுரையையும் முன்பு வாசித்திருந்தேன்.

திலகருக்கு கிடைக்கப்பெற்ற இவ்வாறான ஆங்கில நூல்களை எழுதியவர்கள் கணிசமானவர்கள் மலையகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும் யாழ்ப்பாண தமிழ் அறிஞர்களால் எழுதப்பட்ட நூல்களையும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைந்திருப்பதென்பதற்கும், மலையகத்தின் பல்கலைக்கழகம் என்பதற்குமான வேறுபாடுகள் குறித்து சிந்திக்க தூண்டும் கலைஞர் ஜெய்சங்கரின் ‘ஒரு கட்டியக்காரனின் பேரிகை’ எனும் நூலின் உள்ளடக்க கரிசனையைப் புரிந்து கொள்ள முடிகிறது.  மலையகம் குறித்து இவ்வாறான கரிசனைக் கொண்ட யாழ்ப்பாண அறிஞர்களும், கலைஞர்களும் இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள் என்பது சற்று ஆற்றுப்படுத்தும் மனநிலையை தருகிறது. 

‘இலங்கையின் பெருந்தோட்டங்களில் சமூக அபிவிருத்தியும் வறுமையும்’ எனும் நூலை எழுதிய கீதபொன்கலன் மலையகம் சாராதவர்களில் தனித்துவமானவர் என்கிறார் திலகர். பெருந்தோட்டத்துறையானது அரசுடமையாக்கப்பட்டு மீண்டும் தனியாரிடம் பகிர்ந்தளிக்கப்பட்ட போதும் மலையக மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களில் மாற்றங்கள் நிகழ்ந்ததேயில்லை எனும் ஆய்வினை முன்வைத்து, கீத பொன்கலன் பல்வேறு தகவல்களுடன் எழுதியிருப்பதாக திலகர் அறிமுகப்படுத்துகிறார். இவ்வாறு கீத பொன்கலன் முன்வைக்கும் கேள்விகளுக்கும் அதையொட்டி எழுந்த பிரச்சனைகளையும் தனது பாராளுமன்ற பிரதிநிதித்துவ காலத்தில் எதிர்கொண்டு விவாதித்து வந்ததாகவும் திலகர் பதிவு செய்கிறார். இந்த நூலினாலும் மலையக மக்களுக்கான அரசியல் பிரதிநிதிநியாக செயல்பட்ட அனுபவத்தினூடாகவும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருகிறார்! மலையக சமூகமானது இதுவரையில் இலங்கையில் வாழும் ‘மக்களாக’ கருதப்படவில்லை! அவர்கள் தொடர்ந்தும் அங்கு‘மனிதர்களாகவே பாவிக்கப்பட்டு’ வருகிறார்கள் என்பதாக !

இவ்வாறான ‘மக்கள்’, ‘மனிதர்கள்’ எனும் பிரித்தறியும் பார்வையிலுள்ள கருத்துப் புரிதலென்பது  மிக ஆழமாக சிந்திக்கத் தூண்டுவதாகும்.  ஒரு நாட்டின் அதிகாரத் தலைமைத்துவமாக இருந்தாலும், ஒரு இனத்தின் அதிகாரத்தை கோரும் தலைமைத்துவமாக இருந்தாலும் அவை இன-மொழி-மத-சாதிய வேறுபாடின்றி அனைவரையும் ‘மக்களாக’ ஒருங்கிணைக்கும் பார்வையைக் கொண்டிருக்கிறதா! அல்லது தன்னோடு இணைந்திருக்கும்  வேறுபட்ட பிரிவினரை, ‘மனிதர்களாக’ கருதுகிறதா என்பதைக்கொண்டே ஒரு அதிகாரத் தலைமைத்துவத்தின் காருண்யத்தையும், கருணையையும் புரிந்துகொள்ளமுடியும். எனவேதான் இலங்கையில்  அரசியல் அதிகாரத்தை கோரும் எந்த தரப்பும் மக்கள் மீது கருணை கொண்ட ஒரு தலைமையாக இருந்ததில்லை என்பதையே  திலகரின் ‘மக்கள்’, ‘மனிதர்கள்’ எனும் பிரித்தறியும் பார்வையின் உட்கருத்துபுலப்படுத்துகிறது.

கனடாவில் வாழும் கருணாகரன் எனும் நண்பரிடம் இருந்து திலகருக்கு கிடைத்த ‘புதையல்’, எஸ்.நடேசன் அவர்களால் எழுதப்பட்ட ‘இலங்கை மலையகத் தமிழ் மக்களின் வரலாறு’ எனும் ஆங்கில நூல். இது தமிழிலும் மொழியாக்கம் மேற்கொள்ளும் முயற்சி நடப்பதாக திலகர் கூறுகிறார். திலகரின் இந்நூல் குறித்த உள்ளடக்க அறிமுகம் அதை வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நூல் மீதான தனது வாசிப்பு அனுபவத்தை விபரித்து வரும்போது, அப்போதுதான் திலகருக்கும் ஏ.இளஞ்செழியனுக்குமான உறவுகளையும், இளஞ்செழியனை திலகர் கௌரவப்படுத்திய நிகழ்வுகளையும் அறியக்கூடியதாக இருந்தது.

இதுவரை திலகருடன் பழகியபோதும், அவருடன் மலையகத்திற்கு செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் இளஞ்செழியனுக்கும் தனக்குமான உறவை எனக்கு சொன்னதாக ஞாபகம் இல்லை. சி.வி.வேலுப்பிள்ளை, வெள்ளையன், நடேசய்யர் போன்ற ஆளுமைகளையும் அவர்களது நினைவுத் தடயங்களையும் பற்றியே தொடர்ந்து என்னுடன் உரையாடியிருக்கிறார். இந்த நூலின் அறிமுகத்தினூடாகவே இளங்செழியனுக்கும் திலகருக்குமான உறவையும், நெருக்கத்தையும் அறிந்துகொண்டேன்.

இலங்கையில் 1930களில் இருந்து செயல்பட்ட பெரியார் அமைப்புக்களின் தோற்றத்திற்கும், அவைகளோடு இளஞ்செழியன் செயல்பட்ட வரலாறு பெரிதாக பேசப்படுவதில்லை. குறிப்பாக வட-கிழக்கு தமிழ் சூழலில் இளங்செழியன் பெரிதாக இன்னும் அறிமுகமாகவில்லை. ஏ.இளஞ்செழியன் எழுதிய ‘பெரியார் முதல் அண்ணாவரை‘ எனும் புத்தகமும், பெ.முத்துலிங்கம் எழுதிய ‘எழுதாத வரலாறு‘ எனும் புத்தகமும் இலங்கை திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றை பதிவு செய்த புத்தகங்கள். இதில் இளஞ்செழியன் மேற்கொண்ட தீவிர சமூக-அரசியல் செயல்பாட்டிற்கும் திலகரின் தீவிர அரசியல் செயல்பாட்டிலும் பல ஒற்றுமைகள் உள்ளதை என்னால் அவதானிக்க முடிந்தது. அதனை மிதவாத-தீவிரவாத அரசியல் கோட்பாட்டுப் பின்புலத்தின் ஊடாக ஆய்வு செய்யவேண்டும். அதனை இறுதியில் பார்க்கலாம்.

‘மலைகளை வரைதல்’ எனும் தொகுப்பிற்காக திலகர் பயன்படுத்திய இருபது நூல்களின் ஆசிரியர்களாக சிங்களவர்கள், ‘தமிழர்கள்’, மலையகத் தமிழர்கள் என பலதரப்பட்டவர்கள் இருந்தபோதும் அனைவரின் நூல்களிலும் மலையக சமூகத்தின் வாழ்வியல் பேசப்பட்டிருக்கும்.

மலைகளை வரைதல் நூலின் இறுதிக்கட்டுரையாக இருக்கும் கே.எஸ்.சிவகுமாரனின் நூலான ‘சேகரிப்புகள்’ மலையகத்தை உள்ளடக்கமாக கொண்டிராதபோதும் அனைத்தையும் மலையக சமூக-வாழ்வியலோடு இணைத்துப் பார்ப்பதே திலகரின் இயல்பாக இருக்கிறது. சிவகுமாரன் சிறந்த கலை இலக்கிய விமர்சகராக வானொலி, பத்திரிகை தொலைக்காட்சி போன்ற ஊடகங்களால் அறியப்பட்டிருப்பதால், மலையகத்தில் தொலைக்காட்சி அறிமுகமான தகவலோடு சிவகுமாரனின் நூலையும் ‘மலைகளை வரைதலுக்குள்’ நுழைத்துவிடுகிறார் திலகர். தனக்கு கிடைக்கும் அனைத்தையும் மலையக சமூகத்தோடு இணைத்துப்பார்ப்பதையே நோக்கமாக கொண்டிருப்பதால்தான் ‘மலைகளை வரைதல்’  நூலுக்கான தனது முன்னுரையில் திலகர் இப்படி வலியுறுத்துகிறார்:

கிடைக்கும் களங்களில் என் மண்ணையும் மக்களையும் இணைத்து அழைத்துச் செல்லும் என் மனதின் பயணம் அது. பணி அது” என்பதாக.

‘மலைகளை பேசவிடுங்கள்’ எனும் நூலானது திலகர் பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட காலத்தில் ஆற்றிய உரைகள், முன்வைத்த கோரிக்கைகள், ஆலோசனைகள் என்பவற்றை அவ்வப்போது ‘அரங்கம்’ எனும் பத்திரிகைக்கு கட்டுரையாக எழுதியதன் தொகுப்பு.

மலையக மக்களாகிய நாம்,  தமிழர்கள் எனும் அடையாளத்தில் இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களுடன் ‘ஒற்றுமையாக நோக்கப்படுகின்றோம்.’ அவை அடி வாங்குகின்றபோதும் கொல்லப்படுகின்றபோதும் மட்டுமே. ஆனால் மலையக மக்களின் சமூக பண்பாட்டு அரசியல் உரிமை குறித்துப் பேசும்போது மலையக சமூகம் விளிம்பின் ஓரத்துக்கே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கும் கட்டுரைத்தொகுப்பு ‘மலைகளை பேசவிடுங்கள்.’

‘மலைகளின் மௌனத்துக்கு கீழே பல குமுறல்கள்’ எனும் கட்டுரை உள்நாட்டு யுத்த மீறல்கள் தொடர்பாக பேசப்பட்ட சர்வதேச விசாரணை ஓய்ந்து, உள்ளக விசாரணையாக பரிணாமம் அடைந்த ‘சங்கதியை’ பேசுகிறது. ‘தோற்கடிக்கப்பட்ட போராட்டத்தின்’ பிரதிநிதிகளும், வடபகுதியிலிருந்து இனச்சுத்திகரிப்புக்குள்ளான முஸ்லிம் தரப்புக்களும் தங்களுக்கான நீதி விசாரணைகளை ஜனாதிபதியின் சரவ்கட்சி மாநாட்டில் கோரியிருந்தனர். இவைகள் 1990ம் ஆண்டு நடைபெற்ற குற்ற விசாரணைகளாகவும், 2009ம் ஆண்டு நடைபெற்ற யுத்தக்குற்ற விசாரணைகளாகவும் இருந்தது. தமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக கருதும் எந்த தரப்பும், எந்த சமூகமும் தமக்கான நீதி கோரி விண்ணப்பிப்பதென்பது அடிப்படை ஜனநாயக உரிமை. ஆனால் 1948ம் ஆண்டு சம்பவங்களும், 1964ம் ஆண்டு சம்பவங்களும் இலங்கையில் நீண்டகாலமாக  விசாரணையின்றி நிலுவையில் இருக்கிறதே! அதையும் விசாரிக்க முடியாதா என அதன் கோப்புகளை ஜனாதிபதியின்  முன்னால் திலகர் தூசுதட்டிப் போட்டதும் ஜனாதிபதியின் மாநாட்டின் தலைகள் கவிழ்ந்து போனது. இந்த சம்பவத்தையே ‘மலைகளின் மௌனத்துக்கு கீழே பல குமுறல்கள்’ எனும் கட்டுரை விபரிக்கிறது.

இவ்வாறு யாழ்ப்பாண தமிழ் தலைகள் கவிழ்ந்த சம்பவம் ஒன்று  பிரான்சிலும் நிகழ்ந்தது.  2016 இலக்கியச்சந்திப்பிற்காக பிரான்ஸ் வந்திருந்தபோது காலம் செல்வத்தின் ‘எழுதித் தீராத பக்கங்கள்’ எனும் நூல் குறித்த திலகரின் அபிப்பிராயம் கேட்கப்பட்டது. அது யாழ்ப்பாணத் தமிழர்கள் புலம் பெயர்ந்த ‘துயரங்களை’, அவர்கள் ஜரோப்பிய நகரங்களில் பட்ட  ‘அவலங்களை’ நகைச்சுவை பாணியில் சித்தரிக்கப்பட்ட ஒரு தொகுப்பு.

இந்த நூலை கையிலெடுத்து தலை நிமிரந்த திலகர் மலையக சமூகத்தின் புலப்பெயர்வையும், நாடுகடத்தப்பட்ட கதைகளையும் சொல்லச் சொல்ல முன்னால் அமர்ந்திருந்து கேட்டுக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்துப் புலம்பெயர்ந்தவர்களின் தலைகளும் கவிழ்ந்து மௌனமானது.

போர் நிறுத்த காலகட்டமான 2006ல் திலகர் எழுதிய ‘ஒப்பந்தம்’ எனும் தலைப்பில் எழுதிய கவிதை வரிகளையும் நாம் இத்துடன் நினைத்துப் பார்ப்பது பொருத்தமாகும்.

இங்கே

இரண்டு

ஒப்பந்தம்

இதற்கு முன்னும் பல

ஒப்பந்தம்,

இருந்ததென்னவோ

நிர்ப்பந்தம்.

…..

……

வீடு கட்டவும்

ஒப்பந்தம்

நாடு கடத்தவும்

ஒப்பந்தம்

…..

ஒன்று

உணர்வுக்கான

ஒப்பந்தம்.

இன்னொன்று

உணவுக்காக

ஒப்பந்தம்.

….

….

ஒன்று உலகறிந்த

ஒப்பந்தம்.

மற்றது

ஒருவருமே அறியாத

ஒப்பந்தம்.

ஒன்று

உரிமை கேட்கும்

ஒப்பந்தம்.

இன்னொன்று

ஊதியம் கேட்கும்

ஒப்பந்தம்.

ஒன்று

சமபலம் காட்டும்

ஒப்பந்தம்.

மற்றது

சம்பளம் கேட்கும்

ஒப்பந்தம்.

……”.  (‘மல்லியப்பு சந்தி’ கவிதை தொகுப்பிலிருந்து)

‘மலைகளைப் பேசவிடுங்கள்’ எனும் தொகுப்பிலுள்ள ‘இலங்கை(யில்) தமிழர்கள்’ எனும் கட்டுரையில் ‘இலங்கைத் தமிழர்’, ‘மலையகத் தமிழர்’ எனும் அட்டவணைப் பகுதியை நோக்கினால் புரியும். ‘மலைகளை பேசவிடுங்கள்’ என்பதற்கான தார்மீகக்  கோரிக்கை.

இலங்கைவாழ் வட-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் உரிமை மீட்புக்கான நியாயங்கள் பல இருப்பினும், தாம் வாழும் பிரதேசங்களின் மீதான அடிப்படையான உள்ளூராட்சி உரிமை உரித்துள்ளவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். யாழ்ப்பாண தமிழர்கள் வடமராட்சி, தென்மராட்சி, தீவகப் பகுதிகளாகவும். வன்னித் தமிழர்கள் என்போர் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி எனும் மாவட்டங்களாகவும், மட்டக்களப்பு தமிழர்கள் கிழக்கு மாகாணத்தில்  தென்பகுதியை ஒட்டி வாழ்பவர்களாகவும், திருகோணமலை தமிழர்கள் கிழக்குமாகாணத்தின் வட பகுதியை சார்ந்து வாழ்பவர்களாகவும், என இவர்கள் பிரதேசங்களின் இருப்போடும், அதன் உள்ளுராட்சி உரிமைகளோடும் வாழ்பவர்கள்.

ஆனால் மலையக மக்கள் எந்த பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றபோதும் அவர்களின் இருப்பு என்பது கூலிகள், தொழிலாளர்கள் எனும்  வர்க்க நிலையே அடிப்படை ஆதாரமாக இருந்து வருகிறது. இதை மிக தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது அக்கட்டுரை.

திலகர் பாராளுமன்ற பிரதிநிதியாக செயல்பட்ட ‘காலத்தின் சாட்சியம்’ ‘மலைகளை பேசவிடுங்கள்’ எனும் தொகுப்பு. ‘பிரஜா உரிமையற்று’, வாக்குரிமை கொண்ட ஒரு சமூகமாக வைத்திருக்கும் விசித்திரமான நாடு இலங்கை. மலையக சமூகத்தை தனது ‘மக்களாக’ உணரவில்லை. அது மனிதர்களாக  பாவித்தும் உபயோகித்தும்  வருகிறது என்பதே உண்மை. இவ்வாறான மலையக சமூகத்தின் சமூக-அரசியலின் உள்ளடக்கப் பரிமாணமாக திகழ்வதே ‘மலைகளை பேசவிடுங்கள்’ எனும் பிரதியாகும். இந்த நூல் மலையகத்தின் பாடசாலைகளில் போதனைக்குரிய ஒரு புத்தகமாக பயன்படுத்த வேண்டும் என்பதை மலையக சமூகத்தின் மீது அக்கறைகொண்ட அதிகாரத் தரப்பினர் உணரவேண்டும்.

மிதவாத, தீவிரவாத வழிமுறைகளில் மலையகம்கற்றுக்கொண்ட அனுபவம்

கடந்த கால வரலாறுகளுக்குள் சென்று அப்போதைய யதார்த்தங்களையும் அதன் உணர்வுகளையும், தற்போதைய எமது தேவைக்காக பயன்படுத்தும் போக்கு ஆபத்தானவை. இவ்வாறான சிந்தனை எமக்குள் எதிர்ப்பையும் விரோதத்தையுமே தொடர்ந்து தக்கவைக்கிறது. ஆனால் எமது ‘அறிவுப்புலமையோ‘ இதனையே தனது ‘சாதனையாக‘ கருதி மமதை கொள்கிறது. அதேபோன்றுதான் மிதவாத செயல்பாட்டையும், தீவிரவாத செயல்பாட்டையும் ஒன்றை ஒன்று எதிர்க்கும், விரோதிக்கும் கோட்பாட்டு முறையாகவே அணுகப்பட்டுவருகிறது. இரண்டு வழிமுறைகளும் பயன்படக்கூடிய முன்னகரும் முரணியக்க செயல்பாடுகள் என்பது புரிந்துகொள்ளப்படுவதில்லை.

கடந்தகாலங்களில் இலங்கையில் செயல்பட்டு வந்த இலங்கை திராவிட முன்னேற்றக் கழகங்களின் செயல்பாடுகளும் அதில் ஏ.இளஞ்செழியனின் இ.தி.மு.க. செயல்பாடுகள் என்பது தனித்துவமானது. இளஞ்செழியனால் எழுதப்பட்ட ‘ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை’ எனும் நூலில் உள்ள தகவல்கள் ஆதாரங்கள் என்பன எம்மை (என்னை)  வேறொரு வகையில் நிதானிக்க தூண்டுகிறது.

ஆரம்பத்தில் இலங்கை தலைநகரை மையமாகக் கொண்டு இயங்கி வந்திருக்கிறது இ.தி.மு.கழகம். இடதுசாரிகளிடம் எவ்வாறு பிளவுகள் ஏற்படக் காரணமாக இருந்ததோ அதேபோன்றே தமிழகத்தில் பெரியாரின் கழகத்திலிருந்து அண்ணா, பெரியார் பிளவுகள் ஏற்பட்டபோது இலங்கையிலும் மூன்று பிரிவுகளாக இ.தி.மு.க பிளவுபட்டது. இதில் இளஞசெழியனின் இ.தி.மு.கழகம் தனித்துவமானது. அது பண்பாட்டு கலாசார கூறுகளை பெரியாரின் கொள்கையிலிருந்து பெற்றுக்கொண்டபோதும், அரசியல் ரீதியாக இலங்கையைமையப்படுத்திய அரசியலையே முன்வைத்து செயல்பட்டிருக்கிறது. அதுவும் மலையக மக்களின் அரசியலையும் இலங்கைவாழ் அனைத்து சமூகங்களையும் இலங்கைவாழ் ‘மக்கள்’ எனும் ‘காருண்ய கரிசனை’ உணர்வு நிலையில் அணுகி வந்திருக்கிறது. எனவேதான் அது மிதவாத கொள்கையுடையவர்களோடும் மரபுவாத இடதுசாரிகளோடும் தனது தீவிர செயல்பாட்டை முன்னெடுத்து வந்திருக்கிறது.

மிதவாத அணுகுமுறை என்பதும், தீவிரவாத அணுகுமுறை என்பதும் ஒன்றை ஒன்று அழித்து தனித்த ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாது. இந்த இரண்டு அணுகுமுறைகளும் முட்டி, மோதி இணைந்து முன்னகர்த்தும்  முரண் இயக்கங்கள். அனைத்தையும் போன்றே இவை இரண்டிலும்  பலவீனங்களும் இணைந்தே இருக்கிறது.

மிதவாத செயல்பாட்டில் சுய-தேவைகளும், சுய-சலுகைகளும் அதன் பலவீனங்களாகும். தீவிரவாத செயல்பாட்டில் வன்முறையே அதனது பிரதானமான பலவீனமாகும். இதன் புரிதலை இலங்கை அரசியல்செயல்பாட்டில் தெளிவாக உணரவைத்திருக்கிறார் குமரன் (ஏ.இளஞ்செழியன்).

மலையகத்து மிதவாதிகளோடும் வட-கிழக்கு மிதவாதிகளோடும் தென் இலங்கை இடதுசாரிகள் உட்படபல்வேறு தரப்பினரோடும் முட்டி மோதி செயல்பட்டிருப்பவர் ஏ.இளஞ்செழியன். மலையகம் எனும் சொற்பிரயோகத்தை பேசுபொருளாக்கிய முன்னோடியாகவும் அவரையே கருதமுடியும். இலங்கையில் நாட்டுப்பிரிவினை எனும் அச்சத்தையும், சிங்கள அதிகார வர்க்கத்தின் இனவாதம் மேலோங்குவதற்கான முதற்காரணியாக இருந்தது வன்முறையில் ஈடுபட்ட வட-கிழக்கு தமிழர்களின்  ஆயுதப்போராட்டம் அல்ல! இளஞ்செழியனின் வன்முறையற்ற தீவிர அரசியல் செயல்பாடே இலங்கை அதிகார வர்க்கத்தை அச்சுறுத்தியிருக்கிறது. அந்த அச்சுறுத்தல் தீப்பற்றிக் கொள்வதற்கான முதற் கொள்ளிவைத்தது சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் பொய்ப் பிரச்சாரங்களுமே.

12-3-1967ம் ஆண்டின் வீரகேசரி பத்திரிகையில்  ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தேர்தல் பிரச்சார செய்தி இவ்வாறு பதிவாகியிருக்கிறது:

இன்று இலங்கையை பெரும் அபாயம் சூழ்ந்துள்ளது. சென்னை இராச்சியத்தை தி.மு.க கைப்பற்றி தமிழ் அரசாங்கம் ஒன்றினை நிறுவியுள்ளது. அக்கட்சியினர் கூடியவிரைவில் வடக்கையும் கிழக்கையும் கைப்பற்றிக் கொள்வதோடு மலேசியாவின் சில பகுதிகளையும் கைப்பற்றி, மாபெரும் தமிழ் இராச்சியம் ஒன்றினை நிறுவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்விக்கட்டான நிலைமையில் இன்று ஆட்சிபுரியும் ஐ.தே.க. அரசாங்கம் தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து அவர்களுக்கு பெரும் சலுகைகளை வழங்கிவருகிறது. மாவட்டசபைகள் அமுல்படுத்தப்பட்டால் நாமெல்லாம் தமிழர்களுக்கு அடிமைப்பட வேண்டிய நிலை உருவாகும். நானும் சாஸ்திரியும் செய்துகொண்ட இலங்கை- இந்திய ஒப்பந்தம் இன்னமும் அமுல்படுத்தப்படாமல் இருப்பதன் மர்மம்யாது? இங்குள்ள இந்தியத் தமிழர்களை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென்று இன்று திராவிடக் கட்சியின் தலைவர் அண்ணாத்துரை கூறிவருகிறார். நாம் ஆட்சிசெய்தபோது திராவிடக் கட்சியைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியையாவது நாம் இந்நாட்டுக்கு வர அனுமதிக்கவில்லை. ஆனால் தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டதும் திராவிடக் கட்சியின் முக்கிய தலைவரான எம்.ஜி.ராமச்சந்திரனை இராஜாங்க மரியாதையுடன் இந்த அரசாங்கத்தினர் பத்திரிகையொன்றின் பெயரை சாட்டாக வைத்துக்கொண்டு வரவேற்றனர்.

அடுத்த மே மாதத்தில் திரு. அண்ணாத்துரையும் வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழரசுக்கட்சியினரும், நாம் தமிழர் கட்சியினரும், (இளஞ்செழயனின் தீவிர அரசியல் செயல்பாடுகளால் அவர்களை நாம் தமிழர் கட்சி என சிங்கள இனவாத தரப்பினர் பிரச்சாரப்படுத்தியிருந்தனர். -அழுத்தம் அசுரா) தி.மு.க. கட்சியினரும்  சேர்ந்துகொண்டு என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை”. என தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பேசியிருக்கிறார்.

மிதவாதக் கட்சியான  தமிழரசுக் கட்சியும் அதனது உறுப்பினர்கள் பலரும் இளஞ்செழியனுடன் நெருக்கமாகவும் ஒத்துழைப்போடும் செயல்பட்டிருக்கிறார்கள். திலகர் குறிப்பிடும் மல்லியப்பு சந்தி எனும் இடம் அப்போது ‘மல்லியப்பூ பஜார்’ என பேசப்பட்டு வந்திருக்கிறது. அந்த ‘மல்லிப்பூ பஜாரில்’ இருந்து தமிழரசுக் கட்சியுடன் மேற்கொண்ட போராட்டங்கள் ஊர்வலங்கள் திகதி வாரியாக ‘ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை’ எனும் நூலில் இளஞ்செழின் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் ஆச்சரியம் தரும் தகவல் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட சாதியப் போராட்டத்திற்கான முன்னோடிகளாக இ.தி.மு. கட்சியினரே இருந்திருக்கிறார்கள் என்பது. 1958ல் இருந்தே வட-கிழக்கில் சாதி எதிர்ப்புபோராட்டங்களை ஆரம்பித்திருக்கிறார்கள். தனது தீவிர அரசியலுடன் பலவகையில் நெருக்கமாக இருந்த தமிழரசுக் கட்சியினர் எப்போது தனது மிதவாத கோட்பாட்டின் பலவீனமான சுய-சலுகைக்குள் உள்வாங்கப்பட்டார்களோ அப்போதிருந்து அவர்களை கடுமையாக விமர்சித்தும் வந்திருக்கிறார் இளஞ்செழியன்.

தொண்டமானின் மிதவாத அணியினரும், இடதுசாரிகளின் சந்தர்ப்ப அணிகளுமே முதலில் அரசுடன் இணைந்துகொண்டு  இளஞ்செழியனின் இ.தி.மு.கழகத்தின் ஆதரவு நிலையிலிருந்து விலகிப்போனது. அதற்குபிற்பாடே தமிழரசுக் கட்சியினர் சுய-சலுகைகளுக்கு பலியாகி அரசுடன் இணைந்து மலையக அரசியலுக்குதுரோகம் இழைத்த கதையை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்:

“1965ம் ஆண்டு தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து செயல்பட்ட தமிழரசுக் கட்சியினர் மலைநாட்டு மக்களுக்கும் வட-கிழக்கு மக்களுக்கும் இனவாத முதலாளித்துவ அரசு இழைத்த அனைத்து அநீதிகளுக்கும் துணைபோயினர். பாராளுமன்றத்தின் நாற்காலிகளை நிரப்புவதை மட்டும் தனது அரசியல்சித்தாந்தமாக கொண்ட ஒரு இயக்கம் எனும் அளவிற்கு தனது செயற்பாடுகளை முடக்கிக்கொண்டது. தமிழ்க்காங்கிரஸ் தலைவராக இருந்த ஜி.ஜி. பொன்னம்பலம் தமிழ் மக்களுக்கு செய்த அதே அரசியல் மோசடியை தமிழரசுக் கட்சியினரும் பின்பற்றத் தொடங்கினர். இ.தி.மு.கழகம் தன்னை ஒரு அரசியல் சக்தியாக மாற்றிக்கொள்ளவேண்டிய அவசர தேவையை இக்காரணிகளே துரிதப்படுத்தியது.

1968ம் ஆண்டு கூடிய இ.தி.மு. க பொதுக்குழு கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு தமிழரசுக் கட்சியினர் அளித்த வாக்குறுதிகள் முழுவதையும் மீறியதால் தமிழ் பேசும் மக்களுடைய நம்பிக்கையினை அக்கட்சி இழந்துவிட்டது. இதற்கான காரணம் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற யாவரும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் சாதாரணதமிழ் மக்களை, குறிப்பாக மலையகத்தமிழ் பேசும் தொழிலாளர் வர்க்கத்தை வழிநடத்தும் தகைமை அக்கட்சியின் தலைமைக்கு கிடையாது என்பதை அவர்களது வரலாறு நிரூபித்திருக்கின்றது. எனவே நாடுமுழுவதும் பரவி வாழும் தமிழ் பேசும் மக்கள் அரசியல் நீரோட்டத்தில் நேரடியாக ஈடுபட இ.தி.மு.கழகம் வழிகாட்டவேண்டும்”. என ‘ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை’ எனும் நூலில் பதிவு செய்திருக்கிறார்.

இவ்வாறாகவே  இலங்கையின் தமிழ்-மிதவாத அரசியல் செயல்பாடானது முன்னகரும் முரணியக்க நேர்மறைச் செயல்பாட்டில் இருந்து விலகிப்போனது. அதன் விளைவாக மேலெழுந்த தீவிர அரசியல் வன்முறையானது வட-கிழக்கில் ஆயுதப்போராட்டமாக பரிணமித்தது. அதன் தீவிரவாத அரசியலின் எதிர்மறைப்  பண்பான வன்முறையின் தலைமை  தனது சொந்த ‘பிள்ளைகளையே’ ‘மக்கள்’ எனும் உணர்வுகளோடு ‘அணைத்துக்கொள்ள’ மறுத்தது. தமிழ் பேசும் தனது மக்களையும் உணர்வு நிலைக்குட்படாத வெறும் ‘மனிதர்களாக’ கருதியே 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி வரை அம்மக்களின் அழிவுக்கான  தனது ‘பங்களிப்பையும்’ செய்திருந்தது.

இளஞ்செழியன் பங்குபற்றிய இ.தி.மு.கழகத்தின் ஆரம்பகால செயல்பாடென்பது சமூக விழிப்புணர்வைத்தூண்டும் வகையிலான கலை, இலக்கிய செயல்பாடுகள் வழியாகவே ஆரம்பித்திருக்கிறது. இளஞ்செழியன் ஒருநாடக நடிகனாகவும் இருந்திருக்கிறார். பின்பான அவரது தீவிரத் தன்மைகொண்ட செயல்பாடென்பது தொழிற்சங்க அமைப்புகளோடு பரிணமித்து, அரசியல் செயல்பாட்டின் அவசியத்தை உணர்ந்து கொண்டது. 1970களின் ஆரம்பத்தில் மேலெழுந்த அரச வன்முறைத் தீயில் கருகிக் கொண்டிருக்கும் சிறுபான்மை இனங்களின் துயரத்தை, அதுவும் மலையக மக்கள் மீது மேற்கொள்ளும் வன்முறைகளுக்கு பதிலீடான ஒரு வன்முறை செயல்பாட்டில் ஈடுபடாத இளஞ்செழியனின் இ.தி.மு. க தீவிர அரசியல் செயல்பாடு 1977களின் பின்பு தணிந்துபோனதை வரலாறு மறைத்து வைத்திருக்கிறது. 

1969ம் ஆண்டு செப்டம்பர் 16ம்-17ம் திகதிகளில் இ.தி.மு. கழகம் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட மாநில மாநாட்டு தீர்மானங்களை திரிபுபடுத்தி தமிழ் சிங்கள பத்திரிகைகள் வெளியிட்டது. அதன் காரணமாக இ.தி.மு.கழகமானது பயங்கரவாத இயக்கமாக சித்தரிக்கப்பட்டு இளஞ்செழியன் உட்பட அதன் உறுப்பினர்கள் பலர்  விசாரணைக்கும் கண்காணிப்பிற்கும் உட்படுத்தப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளானார்கள்.

அவர்களது யாழ்ப்பாண மாநில மாநாட்டு தீர்மானங்களின் சுருக்கம்: தமிழ் மக்களது எதிர்காலத்திற்கென இரண்டு கொள்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று, எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியின், தமிழ் மக்களின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு சமஷ்டி அரசை அமைப்பது என்பதாகும். இரண்டாவது வி. நவரத்தினம் தலைமையிலான சுயாட்சிக்கழகம் சுயாட்சிக் கொள்கையை அதாவது சுதந்திரத்தமிழ் ஈழ கொள்கையை முன்வைத்துள்ளதாகும். இதே கொள்கையையே சி.சுந்தரலிங்கம் தலைமையிலான அடங்காத் தமிழர் முன்னணியும் முன்வைத்துள்ளது. தமிழரசுக் கட்சி முன்வைத்துள்ள சமஷ்டி கொள்கையும், சுயாட்சி கழகம் முன்வைத்துள்ள தமிழீழ கொள்கையும் வடகிழக்கு தமிழ் மக்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன. அப்படியானால் வட, கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில் வாழ்கின்ற 15இலட்சம் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் நிலை என்ன? எட்டு இலட்சம் இஸ்லாமிய மக்களின் நிலை என்ன?

இந்நிலையில் இப்போது உங்கள் முன்னிலையில் இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகம், விஞ்ஞானபூர்வமான மார்க்சிய சிந்தனையின் அடிப்படையிலான புரட்சிகர சோசலிச கொள்கையை முன்வைக்கிறது. இந்த புரட்சிகர சோசலிச கொளகையின் மூலமே அனைத்து தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல சிங்கள மொழி பேசும் விவசாய தொழிலாளர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட எட்டு இலட்சம் முஸ்லிம் மக்களுக்கும் விடுதலை கிட்டுமென்ற கொள்கையை தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த மூன்று கொள்கைகளில் தமிழ் மக்களாகிய நீங்கள் எதனைத் தெரிவு செய்யப் போகின்றீர்கள்? சமஷ்டி அரசொன்றை அமைப்பதென்றால், அதற்கு நீங்கள் தயார் நிலையில் இருக்கிறீர்களா? தமிழரசுக் கட்சி சமஷ்டியைப் பெறுவதற்காக நடத்திய சத்தியாக்கிரகம் என்ற சப்பாணிப் போராட்டம் தோல்வியில் முடிந்து விட்டதை நீங்கள் அறிவீர்கள். தனியான தமிழ் ஈழம் பெறுவதென்றால் தமிழரசுக் கட்சி காட்டிய சப்பாணி சத்தியாக்கிரக போராட்டத்தினால் சாத்தியம் என்பது கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாது. தனியான சுதந்திர ஈழம் பெற வேண்டுமானால் தமிழ் மக்கள் ஆயுதப்போராட்டத்துக்கு தயாராக வேண்டும். கொரில்லா யுத்தம் செய்ய வேண்டும். தனித் தமிழ் இராணுவம் அமைக்கவேண்டும். வட-கிழக்கு பிரதேசங்களில் இருக்கும் பொலிசாரையும் பொலிஸ் நிலையங்களையும் இரவு12 மணிக்கு முற்றுகையிட்டு ஆயுதங்களை உங்கள் கைவசப்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை சேகரிக்க வேண்டும். தமிழ் நாட்டில் தளம் அமைக்க வேண்டும். இவ்வளவையும் செய்த பின்னர் அதிகாரத்தில் இருக்கின்ற சிங்கள பேரினவாத முதலாளித்துவ அரசுக்கு தமிழீழத்தை விட்டு வெளியேறுங்கள்  என்று காலக்கெடு கொடுக்க வேண்டும். அக்காலக் கெடுவிற்குள் வெளியேறத் தவறினால் யுத்தப் பிரகடனம் செய்துவிட்டு யுத்தத்தை தொடர வேண்டும். இதற்கெல்லாம் நீங்கள் தயாரா? இலங்கை திராவிட முன்னேற்றக்கழகத்தைப் பொறுத்தளவில் இது நடைபெற முடியாத ஒன்றாகும். வட-கிழக்குப் பிரதேசத்தில் பலம் மிக்க ஒருமுதலாளித்துவ வர்க்கம் இல்லை. முதலாளி வர்க்கம் ஒன்றுக்குத்தான் நாடு தேவை. அதிலும் கிழக்குமகாணங்களில் உள்ளவர்கள் உழைக்கும் மக்களாவார்கள். பெரும் பகுதியினர் சாதிய ரீதியிலும், சமூக ரீதியிலும் ஒடுக்கியும், ஒதுக்கியும் வைக்கப்பட்டவர்களாவார்கள். அம்மக்கள் பொதுக்கிணறுகளில் தண்ணீர் அள்ளமுடியாது. பொது உணவு விடுதிகளில் உணவருந்த முடியாது. கோயில்களில் உள் நுழைய முடியாது. இந்நிலையில் இவர்கள் தமிழீழ போராட்டத்தில் இணைவார்களா?  நாலு லட்சம் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட இம்மக்கள் தமிழ் ஈழம் அமைந்தால் அதிகாரம் யார் கைக்குப் போகும், என்ற பீதியுடனேயே வாழ்கின்றார்கள். அவர்கள் தமிழீழ போராட்டத்தில் இணைய வேண்டுமானால் சாதிக் கொடூரங்கள் அழிக்கப்படல் வேண்டும். சாதிமுறை ஒழிக்கப்பட வேண்டும். அவர்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் தமிழீழ கொள்கையை முன்வைத்திருக்கின்ற தலைவர்கள் இதற்கு தயாரா? முன் வருவார்களா?”

இவ்வாறான இளஞ்செழியனால் கேள்விக்குள்ளாக்கப்டிருக்கும் ஆயுதப்போராட்டம் குறித்த உரையை இளஞ்செழியனின் ஆயுதப்போராட்டத்திற்கான அறைகூவலாக திரிபுபடுத்தப்பட்டு அவர் பல்வேறு நெருக்கடிக்குள்ளாகி தனது தீவர அரசியல் செயல்பாட்டையும் மௌனமாக்கிக் கொண்டார் என தெரியவருகிறது.

மக்களை அதுவும் இலங்கை வாழ் அனைத்து இன சமூகங்களையும் ‘மனிதர்களாக’ கருதாது ‘மக்களாக’ கருதியதன் மானுடக் கரிசனை நிமித்தமாகவே   இளஞ்செழியனின் தீவிர செயல்பாடுகளும் அணைந்துபோனது.

இவ்வாறான மலையகத்தின் தீவிர அரசியல் செயல்பாட்டின் ஒரு தொடர்ச்சியாகவே திலகரின் அரசியல்செயல்பாட்டையும் நான் அவதானித்து வருகிறேன். 

‘வேள்வித் தீயொன்று வேண்டும்’ எனும் தலைப்பில் அமைந்த திலகரின் கவிதைப் பின்புலம் மருதானை சோதனைச் சாவடிகளில் பெண்கள் படும் பாலியல் வன்முறையை துலங்கவைக்கிறது. அக்கவிதையின் அடிக்குறிப்பாக இப்படி பதிவு செய்கிறார்: வன்முறையைத் தூண்டக்கூடாது சரிதான். வன்முறையைக் கண்டு துலங்காமலுமாவிருப்பது?”. அதாவது வன்முறையில் ஈடுபடாதிருப்பினும் துலங்கும் வன்முறைகளை வெளிப்படுத்தாமல் கண்டிக்காமல் இருக்கமுடியுமா என்பதே அக்கவிதையின் வெளிப்பாடாக இருக்கிறது.

திலகரின் நூல்கள் மீதான எனது பார்வையோடு இளஞ்செழியனின் இலங்கை திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிமுகம் என்பது தீவிரவாத அரசியல் செயல்பாட்டினதும், மிதவாத அரசியல் செயல்பாட்டின் பலம், பலவீனங்களை அறிந்து கொண்டதன் முதிர்ச்சியாகும். இதன் புரிதலூடாகவே மக்கள் மீதான காருண்யமும் கருணையும் கொண்ட ஒரு அரசியல் தலைமையே, மக்களை மனிதர்களாக பாகுபடுத்தி பாவித்து வரும்தன்மையிலிருந்து விலகி, மக்களை அணைத்துக்கொள்ளும் தலைமையாக தன்னை மாற்றிக்கொள்ள  முடியும் என நம்பவைத்திருக்கிறது.

வட-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்துவது நிலபிரபுத்துவ அடிப்படையில் சிந்திப்பவர்களால் என்பதை இளஞ்செழியன் அப்போதே நினைவுபடுத்தியவர். அதன் தொடர்ச்சியான ஆயுதப்போராட்டத்திற்கான தீவிரவாதத்தின் அடிப்படை சிந்தனை என்பது மத்தியதர வர்க்கத்தின் நலன்களிருந்து கிளம்பியதென்பது நாம் கண்டுகொண்ட உண்மை.

மலையகத்தின் தீவர அரசியலை முன்வைப்பவர்களின் கோரிக்கை என்பது தமக்கான அடிப்படைத் தேவைகள்குறித்து சிந்திப்பதற்கு முன்பாக எம்மையும் இலங்கையில் வாழும் ‘மக்களாக’ முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதே.

எனவே நாம் லெபனான், பாலஸ்தீனம் போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்று ‘அரசியல் பயிற்சி’ (சுடுவதற்கு) பெற்றதற்கு மாறாக.. மலையத்திற்கு சென்று பயிற்சி (….) பெற்றிருக்க முடியாதா! என சிந்திக்க வைக்கிறது மலையக-சமூக-அரசியல் வரலாறு.

(பெ. முத்துலிங்கம், ஏ.இளஞ்செழியன் நூல்களை வாசிக்கும் வாய்ப்பை தந்த நூலக ஆவணக்காப்பக இணையத்திற்கு மிக்க நன்றி)

அசுரா நாதன்

தலித்தியச் செயற்பாடுகளில் இயங்கி வருபவர். தனிமனித அனுபவத்தைக் கடந்து இலக்கியம், வரலாறு வழியாக சமூக முரணியக்கத்தை பேருணர்வுடன் புரிந்துகொள்ள முற்படுபவர். பிரான்ஸ் தலித் சமூக மேம்பாட்டு முன்னனியின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.