/

நம்பிக்கையும் அழிவும்: அகில் குமாரசாமி அவர்களுடன் ஓர் உரையாடல்

தமிழில்: லக்ஷ்மி பிரியா

ஈழ நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்கு பிறந்து, அமெரிக்கா, நியூ ஜெர்ஸியில் வசித்துவரும் இளம் எழுத்தாளர் ‘அகில் குமாரசாமி’. இவரின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ‘Half Gods’ என்ற தலைப்பில் புத்தமாக வெளிவந்துள்ளது.

நாற்பது ஆண்டுகள் ஈழ நிலம் முழுவதும் விரவிய போரினால் புலம்பெயர நிர்பந்திக்கப்பட்டவர்களின் அடுத்த அடுத்த சங்ததிகள், புலம்பெயர்ந்த நிலத்திலே வாழ்ந்து இனம் பரவுகின்றனர். அவர்களது சிக்கல்களை அகில் குமாரசாமி தனது புனைவின் களமாகக் கொள்கிறார். போரின் விளைவுகளை நேரடியாக உணர்ந்தவர்கள்,  போரின் விளைவுகளை உணராதா தங்களது சந்ததிகளிடம் எப்படிக் கொண்டு செல்கிறார்கள், தாயக நிலம் மீதான ஏக்கம் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு எழுதும் புனைவுகள் தனியே ஓர் இனத்தின் தனிப்பட்ட சிக்கல்களாக நின்றுவிடாமல் இந்த நூற்றாண்டில் தலையாத பிரச்சினையில் ஒன்றான புலம்பெயர்தலை அடிப்படையாகக் கொண்டு விரிகிறது. இந்த அம்சம் பல்வேறு இனத்தின் பொதுக்கதையாக நீளும் உலகளாவிய தன்மையை அளிக்கிறது. அகில் குமாரசாமியோடு பாலஸ்தீன ஈராக்கிய எழுத்தாளர் Zena Agha நிகழ்த்திய உரையாடலின் தமிழ் வடிவம் இது.

தன்னுடைய ஆசிய மரபு குறித்தும் புலம்பெயர் இலக்கியத்தில் தான் எழுதியது குறித்தும் சிறுகதை எழுதும் கலை குறித்தும் ‘ஹாஃப் கோட்ஸ்’ (Half Gods) நூலாசிரியர் பேசுகிறார்.

அகில் குமாரசாமியின் அறிமுகப் படைப்பான, ‘ஹாஃப் கோட்ஸ்’ (Half Gods), என்னும் சிறு கதை தொகுப்பு, எப் எஸ் ஜி உதவி பதிப்பாசிரியரால் ‘இந்தக் கதைகள் அழகானவை’ (They’re beautiful) என்னும் சிறு குறிப்புடன் எனக்கு அனுப்பிவைக்கப்பட்டது. குமாரசாமியின் தொகுப்பில், அன்றைய சிலோனாக இருந்த இலங்கையில் இருந்து நியூஜெர்ஸிக்கு புலம் பெயர்ந்து வாழும் மூன்று தலைமுறைத் தமிழ் மக்களைப் பற்றிய பத்து தன்னிறைவுடைய சிறுகதைகள் உள்ளன.

ஒவ்வொரு கதையும் தனித்துவத்துடன் நிற்கின்றபொழுதிலும், அனைத்து கதைகளிலும் பரவலாகக் காணப்படும் குறிப்புகளும் கதைத் தொடர்பும் அதன் அழகை வெளிக்கொணர்கிறன. துவக்கத்தில் எனக்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்த, பிடித்த கதாபாத்திரங்கள் கதை நகர நகர பன்முகம் கொண்டவர்களாகவும் துன்புறுத்தப்பட்ட வேதனை நிறைந்த கதாபாத்திரங்களாகவும் மாறியதை உணர்ந்தேன்.

வாசிப்பாளர்களைக் கவரும் வகையில் குமாரசாமி தன் கதைகளில் வேறுபட்ட கலாச்சாரம், வரலாறு, குடியேறியவர்களின் மனநிலை மற்றும் வேதனையைக்குறித்து  நுட்பமாக பேசியுள்ளார்.

அவருடைய இலக்கிய பயணத்தை கேட்ட பொழுது பெண் எழுத்தாளர்களுக்கு இத்துறையில் சாதனை விகிதம் நிலையானதில்லை என்பதை புரிந்துகொண்டேன். குமாரசாமி தன் எழுத்தின் மூலம், உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்து ஒரு வித விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்துள்ளார். அனைவருக்கும் புரியும் வகையில் பாராட்டிற்குரிய ஓர் புத்தகத்தை எழுதியுள்ளார்.

– ஸினா அக

ஸினா அக: ‘ஹாஃப் கோட்ஸ்’ புத்தகத்தை எவ்வாறு எழுதத் துவங்கினீர்கள்?

ஆரம்பத்தில் கதையில் வரும் கர்ணன் அர்ஜுனன் என்னும் இரு சகோதரர்களை வைத்தே துவங்கினேன். இவ்விரு பெயர்களிடையே உள்ள இதிகாச முக்கியத்துவமும் சகோதரர்களுக்கு இடையில் உள்ள உறவும் படிக்கும்பொழுதே மஹாபாரதத்தை நினைவூட்டுகிறது. இவ்விரு கதாபாத்திரங்களைத் தவிர அந்தக் குடும்பத்தைப் பற்றியும் முக்கியமாக அவர்களின் தாய் மற்றும் தாத்தாவின் வாழ்க்கையை பற்றியும் அதில் உள்ள உண்மைகளையும் வாசிப்பவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை மாற்றி அமைக்கும் பொழுது அதன் உண்மை தன்மையில் சிறு விரிசல் விழுவது தவிர்க்க முடியாத நிகழ்வு. இதன்மூலம் ஓர் புது கதை அமைப்பை அமைக்கும் வாய்ப்பு உருவாக்குகிறது. ‘ஹாஃப் கோட்ஸ்’-யில் ஹெய்டியின் அமைப்பை இலங்கையுடன் ஒப்பிடலாம். போட்ஸ்வானாவில் இருந்து வரும் அங்கோலியாவைச் சேர்ந்தவர் புதிய ஜெர்ஸியில் வாழும் தமிழ் அகதிகளுடன் உணவு உண்ணுகிறார். இப்புத்தகம், நேர்ப்பாங்கற்ற அதே சமயம் நெருங்கி அமைக்கப்பட்ட ஒன்று, இதை புதினத்திற்கும் சிறுகதைக்கும் இடைப்பட்ட ஒன்றாகவே நான் கருதுகிறேன்.

கதை அமைப்பின் ஒர் பாகமாக அமையும் அந்தக் குடும்பத்தைப் பற்றிய பகுதிகள் நினைத்த பலனை அளித்ததா?

எந்த இடத்தில் எதை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அதற்கு கதைத்தளமும் கதை சொல்லும் விதமும் உணர்ச்சிபூர்வமாக இருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டேன். உதாரணத்திற்கு ஒரு கதையில் தேயிலை தோட்டத்தில் வேலைபார்ப்பவராக வரும் ஓர் கதாபாத்திரத்தை, ஜெர்ஸியில் அகதிகளாக வாழும் ஓர் குடும்பத்தைப் பற்றிய கதையிலும் காண முடிகிறது. இக்கதாபாத்திரத்தை புத்தகத்தின் முன் பகுதிகளில் அமைந்துள்ள ‘நியூ வேர்ல்ட்’ (New World) என்னும் கதையிலும் பின் பகுதிகளில் வரும் ‘ஷேட்’ (Shade) என்னும் கதையிலும் காண முடிகிறது. இவ்விரு கதைகளுள் முதலாவது கதை 1948-ஆம் ஆண்டின் சுதந்திரம் கிடைத்த இரவும் இரண்டாம் கதை ஜெர்சி கடற்கரையிலும் இடம்பெறுகிறது. இதன் மூலம் அனைத்துக் கதாபாத்திரங்களைப் பற்றியும் வெவ்வேறு விதமான அபிப்பிராயங்கள் படிப்பவர் மனதில் உருவாகிறது.

இவ்வாறு இறுதிக் கதையான ‘தி புட்சர்’-ஐ (The Butcher) படிக்கும்பொழுது அனைத்துக் கதாபாத்திரங்களைக் குறித்தும் அந்தக் குடும்பத்தைக் குறித்தும் அனைத்தையும் அறிந்துகொள்ள முடிகிறது. இக்கதைகளில் உள்ள வேறுபாடுகளே ஓர் புது அனுபவமாக அமைகிறது. பல கதாபாத்திரங்களின் எதிர்காலம் என்ன என்பது நமக்கு முன்பே தெரியும் பொழுதிலும் அனைத்துக் கதையிலும் ஏதோ ஒரு சாதியத்தின் அம்சம் அதற்கு அழகு சேர்க்கிறது. 

மேலும் இக்கதைகளில் வெவ்வேறு நாட்டைச் சார்ந்தவர்கள் தம்மில் நடைபெறும் உரையாடல்கள் மூலம் அவர்கள் மத்தியில் உள்ள இடைவெளியை குறைக்க முயற்சித்தேன். பலப் பொழுதும் ஓர் நாட்டில் நடக்கும் போராட்டங்கள் வெளியுலகிற்கு தெரிவதே இல்லை. மக்கள் மத்தியில் உள்ள இந்தக் கண்ணுக்குத் தெரியாத சுவரை இல்லாமல் செய்வதற்க்கே இந்த முயற்சி.

அரேபியாவை எடுத்துக்கொண்டால் தற்போது அது 22 நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஓர் மொழி பேசும் மக்கள் இவ்வாறு வாழ்வது சாத்தியமா? இம்மாற்றங்கள் சமீப காலத்தில் நடந்த ஒன்று. உதாரணத்திற்கு ஆங்கிலேயர்கள் ஈராக்கில் ஆட்சி அமைத்தபொழுது அந்நாட்டின் நாணயம் ரூபாயாகவே இருந்தது. புதிதாக ஆக்கிரமிக்கப்பட்ட இந்நாட்டை என்ன செய்வதென்றறியாமல் தடுமாறினர். இதன் விளைவாகவே அந்நாட்டில் போர் மற்றும் காலனித்துவம் கையோங்கி அதன் அழிவிற்கு வித்திட்டது. அனால் இன்றுவரை நம்மால் அதற்கு ஓர் தீர்வு காண முடியவில்லை.

அது உண்மைதான். பல முடிவுகள் சரிவர விசாரிக்காமல், அந்நாட்டை பற்றி முறையாக தெரிந்துகொள்ளாமல் எடுக்கப்பட்டவை.

இடைவெளிகளிடையே உள்ள நெருக்கம் பற்றி அழுத்தமாக பேசும் ஓர் புத்தகம் என்று கூட உங்கள் புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம். காரணம், பெரும்பாலான பகுதிகளில் மக்களிடையே உள்ள இடைவெளி, அவர்களின் கலாச்சாரங்களில் உள்ள வேறுபாடுகள் போன்றவற்றைக் குறித்து பெரிதும் பேசியிருக்கிறீர்கள்.  இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் பற்றி பேசும் பொழுதிலும் கதாபாத்திரங்களை அதற்கு நேரடி சாட்சியாக அமைக்காமல் ஓர் கேட்டறிந்த கதை போல் அல்லது தொலைக்காட்சியில் கண்ட நிகழ்வு போல் சித்தரித்ததில் ஓர் சமநிலை காண முடிகிறது. அதை எவ்வாறு கையாண்டீர்?

இப்புத்தகத்தை ‘இடைவெளிகளிடையே உள்ள நெருக்கம்’என்று நீங்கள் குறிப்பிடுவது பொருத்தமாக உள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள் போரிலிருந்து தங்களின் வாழ்வை விடுபடுத்திக்கொள்ள பல்லாயிரம் மைல் கடந்து செல்கின்றனர். ஆனால் போரின் நினைவுகள் அவர்களை பின்தொடர்ந்தே வருகிறது. தொலைக்காட்சிப் பெட்டியும் கணினியும் இவற்றை நினைவுபடுத்தும் இயந்திரங்களாகவே செயல்படுகின்றன. பாதுகாப்பான மண்டலம் என அறிவித்த இடங்களிலும் பாதுகாப்பில்லை என்னும் பொழுது சாமானியர்களிடையில் அதன் அடிப்படை அமைப்பை பற்றிய கேள்விகள் எழுகின்றது. ஜெர்சியில் அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் ஆனால் மனதளவில் அதன் பாதிப்பு இருந்துகொண்டே இருக்கிறது இப்புத்தகத்தில் நான் அழுத்தமாக கூறும் கருத்தும் இதுதான், போர்க்களம் இல்லா போருக்கு முடிவென்பதுண்டா?

இந்த இடைவெளியானது பாதுகாப்பை அளித்தாலும் ஒரு வித குற்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. ஓர் வீட்டில் ஒன்றாகவாழும் பொழுதிலும் அவர்கள் மனதால் பிரிந்தே வாழ்கின்றனர். நாடுகளால் அடையாளத்தை தொலைத்து நிற்க்கும் அபாயத்தில் உள்ளவர்களைப் பற்றி நேரடியாக பேசவேண்டும் என்று நினைத்தேன். சிலர் நேரடியாகவும் பலர் மறைமுகமாகவும் இப்படுகொலைகளால் பாதிக்கப்படுகிறார்கள். அரசியலை வாழ்வியலில் இருந்து பிரிக்க முடியாது என்பது கூர்ந்து கவனித்தால் தெளிவாகப் புரியும். பிள்ளைகளின் அருமை பெற்றோருக்கு புரிவது பிள்ளைகள் தங்களை விட்டுத் தொலைதூரம் செல்லும்பொழுதுதான் என்று கூறுவதுபோல் இடைவெளிகளிடையே உள்ள நெருக்கம் என்பது முரண்பட்ட இரு கருத்துக்களாக இருந்தாலும் அதுவே உண்மை.

போர் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன ஆனால் நம் பங்களிப்பில் உள்ள புதுமையை நாம் கண்டறிய வேண்டும். ஹசான் ப்ளாஸிமின் ‘தி இறாக்கி கிறைஸ்ட்’ (The Iraqi Christ) புத்தகத்தை பல முறை படித்திருக்கிறேன். அப்பொழுதுதான் அதில் உள்ள உண்மையையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர முடிந்தது.

அது எனக்கு மிகவும் பிடித்த ஒரு புத்தகம். குறிப்பாக அந்தத் தொகுப்பில் வரும் ‘தி ஆர்க்கைவ்’ (The Archive) என்னும் கதை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதன் முக்கியக் கதாபாத்திரம் ஐரோப்பாவில் உள்ள அகதிகள் மையத்திற்க்கு வந்துசேரும் பொழுது தன் வாழ்க்கைக் கதையைச் சொல்லத்தொடங்குவார். அப்பொழுது அவர் கதை சொல்லும் விதத்திலேயே அவர் மீது ஒரு நம்பிக்கை உருவாகும்.

எனக்கு அந்தக் கதை பிடித்ததற்குக் காரணமே அக்கதைக்குள் உள்ள கதை தான். இம்முறையைக் கையாண்டு ‘தி ஸ்டோரி ஆப் ஹாப்பினஸ்’ (The Story of Happiness) கதையில் கதாபாத்திரங்களின் சுபாவங்களையும் அடையாளத்தையும் வாசிப்பாளர்களிடம் எடுத்துச்செல்ல முயன்றுள்ளேன்.

‘தி ஸ்டோரி ஆப் ஹாப்பினஸ்’உண்மையில் எனக்கு ஆன் கார்சன் அவர்கள் எழுதிய ‘தி ஆடோபயோகிராபி ஒப் ரெட்’ (The Autobiography of Red) புத்தகத்தை நினைவு படுத்தியது. கதையில் வரும் இறக்கையும் செதில்களும் உடைய சிறுவன் எனக்கு ஹெராக்கிள்ஸ்-ஐ நினைவு படுத்தினான். முக்கியமாக மஹாபாரதத்தைத் தழுவி நீங்கள் எழுதிய கதைகள் எனக்கு மிகவும் பிடித்ததற்குக் காரணம், எனக்கு சமஸ்கிருதம் தெரியும் என்பதாலா அல்லது அனைவரையும் கவரும் வகையில் நீங்கள் கதை சொல்லிய விதமா என்று எனக்கு தெரியவில்லை. உங்கள் புத்தகத்தில் இதிகாசம் செய்யுள் என ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு முறைகளை கையாண்டுள்ளீர்கள். புதிய முறைகளைக் கையாள்வதில் தடுமாற்றம் இருந்ததா?

நான் முழு மூச்சுடன் ஆரம்பித்த ஒரு விஷயம் இது. அந்தச் சமயத்தில் நிறைய நாடகங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் திரைக்கதை எழுதும் முறை மீது எனக்கு விருப்பம் உருவானது. அதில் சுவாரஸ்யம் கூட்டும் நுட்பமான முறைகள் பல உள்ளன.  புனைக்கதை எழுதும் பொழுது எதை பற்றி வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். திரைப்படம் பார்க்கும் பொழுது பார்வையாளர்களுக்கு கதாபாத்திரங்ளைக் குறித்து முழுமையாக அறிவதில்லை. அந்த அறியாமையில் தான் அதன் சுவாரஸ்யமே அடங்கியுள்ளது. இவ்வகை ஸ்வாரஸ்யங்களைப் புத்தகத்தின் வழி வாசிப்பாளர்களுக்குக் கொண்டுசெல்வதே என் முதன்மை நோக்கமாக இருந்தது. நாடக முரண்சுவை நிறைந்த ஓர் புத்தகம் இது. அதாவது கதையில் நடக்கும் அனைத்தும் வாசிப்பாளர்களுக்கு தெரியும் ஆனால் கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. திரைப்படங்களில் இவ்வகை நாடக முரண்சுவையைக் காணலாம்.

நான் அரேபிய நாட்டைச் சார்ந்தவள். என் படைப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மேற்கத்திய நாடுகளில் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் என் படைப்புகள் யாருக்காக எழுதப்பட்டவை என்பது குறித்துக் கேள்விகள் எழுகிறது. இவை மொழிபெயர்க்கப்படவில்லை என்றால் ஈராக்கியர்கள் வேடிக்கையாளர்களாகவே இறுதி வரை இருந்துவிடுவார்களா?  அனைத்து ஈராக்கியர்களுக்கும் இதுவே நிலை என்றில்லை, ஆனால் என் தாயைப் பொறுத்தவகையில் அதுவே நடக்கும்.

படைப்புகளில் பலதும் அடையாளத்தை பற்றிய மற்றும் இனத்தைப் பற்றிய அரசியலாக இருப்பதால் அதைக்குறித்து விமர்சிக்கவேண்டி இருக்கிறது. அதே சமயம் புகழ் வேண்டும் என்ற நோக்கத்தில் தேவையில்லாமல் என் அடையாளத்தை விளம்பரப்படுத்த நான் விரும்பவில்லை. உதாரணத்திற்கு லண்டனைப் பற்றி நான் எழுதினால் அதை படிக்கும்பொழுது என் சுய அனுபவங்கள் அதன் உண்மைத் தன்மையை அதிகரிக்கிறது. ஆனால் அதை அறுபதுகளில் பாக்தாத்த்தில் நடந்ததைப் போல் எழுதினால் படிக்கும் பொழுது கற்பனை என்று தெரிந்து விடுகிறது.  அவ்வாறு நாம் காணாத நமக்குச் சொந்தம் இல்லாத ஓர் இடத்தைப் பற்றி எழுதுவதற்கு துணிச்சல் வேண்டும். அப்படிப் படைக்கப்படும் கதைக்கு முழு உரிமையும் உங்களுக்கு உள்ளது.

புனைக்கதையின் சாத்ய கூறுகளை முழுமையாக அறிய வேண்டும் என்றால் அதில் நிஜத்துடன் கற்பனையும் கலக்க வேண்டும். யார் படிப்பதற்காக எழுதுகிறோம் என்பது மிக முக்கியம். ரால்ப் எலிசன் அவர்கள் எழுதிய ‘இன்விசிபில் மேன்’ (Invisible Man) புத்தகத்தின் தலைப்பில் இருந்தே தெரிகிறது அது வெள்ளையர்களை நோக்கம் வைத்து எழுதப்பட்ட புத்தகம் என்று டோனி மோரிசன் கூறியிருக்கிறார். எழுதும் விதம் மற்றும் அதில் உள்ள விளக்கங்களை வைத்து யாருக்காக அந்த நூல் எழுதப்பட்டது என்று கூறி விட முடியும். பிரிட்டிஷ் இலக்கியங்களில் க்ரம்பெட் என்றால் என்ன என்றோ இரண்டாம் உலகப்போர் எதனால் உண்டானது என்றோ விளக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் அப்புத்தகங்களைப் படிக்கும் வாசிப்பாளர்களுக்கு அதை பற்றி முழுமையாக அறிந்திருக்கும். எழுதும் பொழுது உங்களை மையமாகவைத்து, உங்களின் நிலையைப் பொருத்து தெளிவான வழிமுறைகளைக் கொண்டு கதை நகர வேண்டும். முக்கியமாக பயமில்லாமல் தெளிவான சிந்தனையுடன் எழுத வேண்டும். 

நான் ஆங்கிலத்தில் எழுதுவதால் கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. ஆனால் இதன் வாயிலாக கூடுதல் வாடிக்கையாளர்களிடம் என் படைப்பை கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. காரணம் பிற மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப் படும் புத்தகங்களின் எண்ணிக்கை சதவீதம் மிகக் குறைவாகவே உள்ளது.

இவை ஒரு  புறம் இருக்க, என்னை பொருத்தமட்டில் நீங்கள் எதை எழுதினாலும் அது உங்களுக்கு உண்மையாக முழுமையாக உணர வேண்டும். வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக உங்கள் அடையாளத்தை தேவை இல்லாமல் உபயோகிப்பதன் மூலம் பெரும் செல்வத்தை வேண்டுமானால் ஈட்டலாம் ஆனால் அதனால் எந்த பயனுமில்லை.

எழுத்தாளர்கள் தங்கள் வாழ்வில் நடந்த உண்மை அனுபவங்களை வைத்து மட்டுமே கதை எழுத வேண்டும் என்றால் அனைத்துக் கதைகளும் நடுத்தர வெள்ளையர்களைப் பற்றியே இருக்கும் என்று நான் ஒரு புத்தகத்தில் படித்தேன். அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

கற்பனைக் கதை எழுதுவதும் அது உண்மையில் சாத்தியம் ஆவதும் ஒரு வகை அதிரிஷ்டம் தான்.

உங்கள் கதைத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது ‘ஆபீஸ் ஒப் மிஸ்ஸிங் பெர்சன்ஸ்’ (Office of Missing Persons). இழப்பைப் பற்றி அதில் கூறியிருப்பவை அனைத்தும் என் மனதைத் தொட்ட உணர்வுகள். அதில் குறிப்பிட்டுள்ள போரினால் ஏற்படும் இழப்பும் அதனால் உருவாகும் மன உளைச்சலும் ‘தி கோட் ஒப் ஸ்மால் திங்ஸ்’ (The God of Small Things) புத்தகத்தை நினைவு படுத்தியது

நீங்கள் சுட்டிக்காட்டியதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ‘தி நியூ யோற்கற்’ (The New Yorker) இதழில் என் புத்தகத்தைப் பற்றி வெளிவந்த விமர்சனத்தில் என்னை எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களுடன் ஒப்பிட்டிருந்தனர். அதன் வாயிலாக அருந்ததி ராய் அவர்களுக்கு என் புத்தகத்தை அனுப்பிவைக்கும் வாய்ப்பு கிடைத்தது மனநிறைவை அளித்தது.

உங்கள் புத்தகத்தை படித்த பொழுது மனநிறைவு தரும் பல கேள்விகள் என்னுள் எழும்பியதை உணர்ந்தேன். அனைத்துக் கதைகளையும் முழுமையாக அறிந்த உணர்ந்த ஒருவராக உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது? அவ்வரிசையில் கடைசிக் கதை எது?

எல்லாக் கதைகளிலும் ஏதேனும் ஒரு சவால் இருந்து கொண்டேதான் இருந்தது. ‘வென் வி வெர் சில்றென்’ (When We Were Children) கதையை எழுதும் பொழுது அதில் உள்ள உணர்ச்சிபூர்வமான பாகங்கள் கடினமாக இருந்தது. ‘தி புட்சர்’ கதைதான் நான் முதல் முதலில் எழுத ஆரம்பித்த கதை. அதை எழுதி முடிக்க எனக்கு சில வருடங்கள் ஆனதால் அக்கதையுடன் ஓர் இணக்கம் உள்ளது. சிறுகதை எழுதும் பொழுது அது மிகச் சிறப்பாக அமைந்துவர வேண்டும். குறுகிய நேரத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்க வல்லதாக அமைய வேண்டும். புனிதத்தில் இவ்வகைக் கோட்பாடுகள் கிடையாது.  இத்தகைய பண்புடையனவாய் இருப்பதினால் சிறுகதை வாசிப்பாளர்களின்  எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அனால் எனக்கு மிகவும் பிடித்தவை சிறுகதைகளே, அது ஒரு வகைக் கலை.

ஸினா அக/ Zena Agha

பாலஸ்தீன- ஈராக்கிய எழுத்தாளர் மற்றும் கவிஞர். போர் வாழ்க்கை மற்றும் புலம்பெயர்வுகளை ஆராயும் அவருடைய படைப்புக்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தற்போது நியூயோர்க்கில் வசிக்கிறார்.

லக்ஷ்மி பிரியா

தமிழ்நாடு, திருச்சியைச் சேர்ந்தவர். போஸ்ட்மார்னிச, மினிமலிஸ சிந்தனைகளில் ஆர்வமுள்ளவர். புத்தகங்கள் மீது தீரா விருப்பம் உள்ள எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.