/

பிரேமையின் ஆடல் – நீலம் நாவல்: ரா.கிரிதரன்

வெண்முரசு நாவல் வரிசையில் தனித்துவமானது அசாதாரணமானது என வாசகர்களால் கொண்டாடப்படும் நாவல் நீலம். மகாபாரதக் கதையின் மையத்திலிருந்து விலகி கிருஷ்ணனின் மாயத்தையும், ராதையின் காதலையும் பாகவத மரபை ஒட்டி எழுதப்பட்ட கவித்துவமான நாவல் இது. இங்கு பாகவதம் என்பது நாயகி – நாயக பாவத்தையும், மானிடரிடையே பூக்காத காதலையும், ஒரே புருஷனிடம் சரணடையும் ஸ்த்ரீகளான மனிதர்கள், புல், பூண்டு, ஆகாசம் என பிற அனைத்தின் இயல்பையும் மையப்படுத்துகிறது. கிருஷ்ண உபாசனை என்பது வாழ்வில் முழுமை நோக்கி ஈடுபடுவது எனும் சிறு துளியில் தொடங்கி அழியாத பிரேமையாக ஓர் பிரவாகமாக மாற்றம் கொள்வது. அதன் இயல்புகளை இலக்கியத்தில் சொல்ல முற்படும்போது நமக்கு இரு வழிகள் உள்ளன.

முழுக்க பக்தி பூர்வமாக எழுதப்படும் புராணங்களும், கிளிக்கு ஒப்பாக சொன்னதை சொல்லும் அவதாரக் கதைகளும் ஒரு வகை. மற்றொன்று, ஒப்பு நோக்க இலக்கியத்தின் சாரமான முழுமை நோக்கிய பயணம் – பண்பாடு, கலாசாரம், செவ்வியல் குறியீடுகள், திணைக்கோட்பாடுகள், அலங்காரங்கள் கோர்த்து மறு உருவாக்கம் செய்யப்படும் படிமவெளிகள். முன்னதில் இருக்கும் ஒற்றைப்படை நோக்கிலிருந்து முற்றிலும் விடுபடாமல் அதில் இருக்கும் படிமங்களுக்கு பலவகையான தத்துவ நோக்கிலிருந்து நவீன வெளிச்சம் கொடுத்திருப்பதினால் ரெண்டாம் வகை பாணி படிம வெளியாகிறது. பன்னெடுங்காலமாக மனிதனின் ஆழ் மனதில் இருக்கும் ஆர்க்கிடைப்புகள் ஒரே வகையானவை என யுங் சொல்வதைப் பார்க்கும்போது நமது கற்பனை மூலம் ஆழ்படிமங்களுக்கு உருவம் கொடுக்க முடியும். அவை அக்கதை மாந்தர்களை மட்டுமல்லாது நம் ஆழ்மனதையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

நீலம் வாசிக்கும்போது பொருள் பிடிபட்டும் மொழி வழுக்கியபடியே கடந்த அனுபவம் பல பக்கங்கள் இருந்தன. கண்ணனின் பல நிகழ்வுகளை நாம் கதைகளாகக் கேட்டிருப்போம், படித்திருப்போம். ஆனால் தேவகி மைந்தனாகப் பிறந்து வேறொருத்தி மகனாக வளர்ந்த கண்ணன் ஒருவனில் பலராக, பலரில் தான் ஒருவனேயாகக் காட்சி அளித்ததன் மாயம் சொல்லில் அடங்காதது. இளங்கோவின் ஆயர் குறவையில், பெரியாழ்வார் பிள்ளைத் தமிழில், ஆண்டாளின் கேசவனைப் பாடப் புறப்பட்ட தோதில், ஜெயதேவரின் அஷ்டபதியில், கீதாகோவிந்தத்தில், ஸ்வாமி பிரபுபாதரின் நாட்டியத்தில், கண்ணன் திரட்டுப்பாடல்களில், ஓஷோவின் மாயலோலனாக வரும் ஒவ்வொரு கண்ணனும் ஒவ்வொரு வகை. அவனிலிருந்து எத்தனை எடுத்தாலும் மேலும் மேலும் வளர்ந்து முழுமையாக நிற்பான்.

ஓஷோவின் அருமையான கட்டுரை ஒன்று கிருஷ்ணனை விளக்க முற்படுகிறது. அவன் யேசு, மஹாவீரர் போல ஒரு வரலாற்று நாயகன் அல்ல. அவன் அன்றாடம் நிகழ்பவன். வாழ்க்கைக்கும் ஆன்மிகத்துக்கும் அதிக வித்தியாசம் இல்லை எனக் காட்ட வந்தவன். அதனால், இம்மண் மீது வாழ்தல் பொருட்டு கிடைக்கும் சந்தோஷத்துக்காக யுத்தம் செய்யக்கூடத் துணிபவன். யுத்தத்தை வெறுத்து ஓடவேண்டிய ஒன்றாக அவன் பார்ப்பதில்லை. பூரணத்துவத்தை அடையும்பொருட்டு முழுமையாக வாழ விழைபவர்களிடம் என்றென்றும் கிருஷ்ணன் தென்பட்டுக்கொண்டே இருப்பான். பாறைகளுக்கும் மண்ணுக்கும் இடையே பீறிட்டுக் கிளம்பும் நிலத்தடி நீர் போல வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் சந்தோஷங்களால் ததும்பியபடி இருப்பதைக் காட்ட வந்தவனாக ஓஷோ கிருஷ்ணனைப் பார்க்கிறார்.

கண்ணன் கால தேச வர்த்தமானங்களைக் கடந்தவன். நாம் கடைப்பிடிக்கும் காலம் அவனுக்கு அர்த்தமற்றது. ஆயர்குல மகளிர் அவனை குழந்தையாகவும், அதே சமயம் முக்காலம் தெரிந்த மாயனாகவும் கண்டனர். கண்ணனைப் பின் தொடரும் எல்லாருக்குமே அப்படிப்பட்ட மயக்கம் ஏற்பட்டிருப்பதை நம் இலக்கியங்களில் காணலாம். வெண்ணை திருடியவனைக் கையுங்களவுமாகப் பிடித்தவர்கள் யசோதை முன் அவனைக் கொண்டு செல்லும்போது தங்கள் குழந்தையாக அவன் மாறிவிட்ட மாயத்தைப் பார்த்திருக்கிறார்கள். அக்குழவி யார் கையிலும் எப்பொருளுக்கும் அகப்படாத அரூபமாகவும், சிறுவிளையாட்டில் தவறி விழுந்து அடிபட்டு அழும் பாலகனாகவும் இரு நிலையிலும் இருந்துள்ளான்.

இந்த மாயத்தை எழுதப்புகுந்த எல்லாரையும் அது அறிவழிய வைத்துள்ளது. பாகவதத்தில் ஆயர்பாடியில் குறும்பு செய்பவனாக மண்ணை அள்ளித் தின்று விளையாடும் சிறுவன் கிருஷ்ணன் செய்யாத சேட்டிதங்கள் இல்லை. சிறுவனாகக் அவன் குறும்புகளைக் கண்டனர் ஆயர் மகளிர். பிற்காலத்தில் அவனைப் பாட வந்த பெரியாழ்வார் தொட்டிலில் கிடக்கும் குழந்தையிடமே முழு சேட்டைகளையும் கண்டுவிட்டார்.

கையுங் காலும் நிமிர்ந்துக் கடாரநீர்

பைய ஆட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்

ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட

வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே!

யசோதை தொட்டிலில் கிடந்த அவனது நாக்கில் வழியும் கோழையை வழிப்பதற்காக வாயைத் திறக்கும்போதே வையம் ஏழையும் கண்டு அலமலர்ந்து போனாள். ஒரு வரலாற்று சட்டகத்துக்குள் அடைக்க நினைக்கும் விமர்சகர்களுக்கு இது குழப்பத்தைக் கொடுக்கும். மண்ணை உண்ட பெரு வாயன் காட்டிய தரிசனம் விஸ்வரூபத்தை ஒப்ப நிற்கும் ஒன்று. ஆனால் பெரியாழ்வார் அதை தொட்டிலில் கிடக்கும் குழந்தையிடம் யசோதை கண்டுவிட்டதாகச் சொல்கிறார். இது கவியின் கற்பனைக்கான அளவுகோல் அல்ல; தரிசனத்தின் பித்து நிலைக்கானது.

ஜெயமோகன் எழுதிய ‘நீலம்’ நாவலை தமிழ்த் திணை மரபை ஒரு எல்லையிலும், அஷ்டபதி/ஸ்வாமி பிரபுபாதர் வளர்ந்தெடுத்த ராதா – கிருஷ்ணா பாவத்தை மற்றொரு எல்லையில் வைத்துப்பார்க்கிறது.

இங்கு ஏன் திணை முக்கியமாகிறது? கிருஷ்ணனின் இயல்பு என்பது பித்து பிடிக்க வைக்கும் மாயத்தைக் கொண்டவனாக வருவது. எக்காலத்திலும் பொருந்தக்கூடிய தரிசனத்தை அவன் மொழிந்தான். அதேசமயம் அவன் ஒரு நிலத்தின் நாயகனும் கூட. ஆயர் குலத்தை மீட்க வந்த அணிவிளக்கு. ஒரு குடியின் தலைவனாக அவன் நிலத்தின் அடையாளங்களை அகமும் புறமும் அணிந்தவன். முக்காலமுணர்ந்தவன் என்றாலும் அவனது ஆடல் அக்கணத்தில் மண்ணில் புதைந்த ஒன்று. முல்லை நிலத்தவன். ஆயர்பாடியும் பிருந்தாவனமும் ஆயர் ஆய்ச்சியர் இடையர் இடைச்சியரின் தாய் நிலம். பால், தயிர், மண்ணின் புழுதியே அவர்களது உடலின் மணம். கண்ணன் பிறந்ததைப் பார்க்க ஓடி வந்த இடையர்கள் இரவில் காவல் காத்த கையோடு அவனைப் பார்க்க வருகிறார்கள்.

கொண்ட தாள் உறிகோலக் கொடுமழு

தண்டினர் பறியோலைச் சயத்தர்

விண்டமுல்லை அரும்பன்ன பல்லினர்

அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார்

மழையிலிருந்து காப்பதற்கு தாழை மடலைப் பறித்து பின்னப்பட்ட ஓலைப் பாய்களைத் தலையில் கவிழ்த்து இருக்கிறார்கள். ஈரம் சொட்ட ஒரு கூட்டாமாக அவர்கள் யசோதையின் வீட்டுக்குள் வந்து கரியவனை சுற்றி ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு நின்றனர் என பெரியாழ்வார் எழுதுகிறார். நில மக்கள் தங்கள் ராஜகுமாரனைக் காண வரும் காட்சி இது. திணை உருவகங்கள்.

விரஜபூமியின் ஆயர்குடிகள் தேன் சொட்டு நோக்கிச்செல்லும் எறும்புக்கூட்டங்கள் என மலர்க்கூடைகளும் மதுரக்கலங்களும் ஏந்தி அணிகளும் ஆடைகளும் மணிகளும் மாலைகளும் அணிந்து நந்தனின் இல்லத்தை நோக்கிச் சென்றனர். காற்றிலாடிச் சூழ்ந்த வண்ணங்களில் மூழ்கிச்சுழன்றது சிற்றில். பெண்களின் சிரிப்பொளியால் உள்ளறையின் இருள் விலகியது. அவர்களின் வளைகுலுங்கி சுண்ணச்சுவர் அதிர்ந்தது. “எங்கே எங்கள் குலமுத்து? எங்கே ஆயர் குடிவிளக்கு? எங்கே எம் கனவுகளை ஆளவந்த கள்வன்?”என்றெழுந்தன இளங்குரல்கள்.

ஆயர்களின் அணிவகுப்பை ஜெயமோகன் எழுதும்போது அந்நிலத்தின் தன்மைகளைக் கொண்டு விவரிக்கிறார். பெரியாழ்வாரின் உலகுக்கு மிக நெருக்கமான உவமைகள். தென்மதுரைக்கவியும், பெருங்காதலியுமான ஆண்டாளின் உலகுக்கு நிகரான ஒன்று. பெரியாழ்வார் முதல் வல்லபர், சைதன்யர் வரை பலரும் மண்ணில் நிகழ்ந்த பெரு நிகழ்வாகக் கிருஷ்ணனைக்கொண்டாடுவதற்கு அவனது கொண்டாட்டமான வாழ்க்கை நிலத்தில் ஊன்றி நம்முள் பெரும் ஏக்கமாக ஆகிவிட்டது என்பதால் மட்டுமே. இந்நிலத்திலிருந்து மேலெழுந்து என்றும் மாறாத நிறைவை பெற முடியும் எனும் கனவை விதைப்பதால் மண்ணும் மனிதரும் வளர்ந்தபடி உள்ளனர்.

திணையியல்புக்குப் பிறகு கனவும் ஏக்கமும் ஒரு ஏகாந்த காதலாக என்றும் நாவில் சுவைக்கும் தேனமுதமாக மாறும் தன்மை ராதையின் காதலால் காட்டப்படுகிறது. நீலம் ராதையின் காதல் பற்றிய கதையாக அல்லாது பித்தேறும் காதலின் கதையாக எட்ட முடிவது செவ்வியல் ரஸத்தினால் மட்டுமே.

“அவர்களறியும் கண்ணன் யார்?’ என்னதான் ஆயிற்று அவனுக்கு? அவன் நீலமணிக்கால்கள் நிலத்தமைவதன் உறுதி  கங்கனம் அணிந்து கைகள் வளைதடி வீசுவதன் தேர்ச்சி, சொற்களில் ஏறும் மும்முனைக் கூர்மையின் ஒளி, கண்நோக்கி நிற்கையில் அவன் கண்ணனல்ல என்றாகிப்போவானோ?”

குழிவியென அவனை அறிந்த ராதைக்கு வளர்ந்த கண்ணனை அடையாளம் தெரியவில்லை. அவளுள் அவனது வளர்ச்சியைத் தேடச் சொல்லும் இடத்தில் முற்றிலும் வேறொரு கண்ணை நாம் சென்று சேர்கிறோம். குழந்தைக் கண்ணன், காதலன் கண்ணன், குலத்தின் அரசன் கண்ணன் என மூவரையும் தொட்டுச் செல்லும் நாவல் அவனது மாயத்தை கண்டு அறிவழியும் கணங்களை அழகாகச் சொல்கிறது.

0

பிறந்த குழந்தையைத் தூக்கி வைத்து சீராட்டி, குழலிசையில் மயங்கி, அவன் வளர்ந்து இளைஞன் ஆவதை கூட மனமறியாது சேட்டைகளை ரசித்து நின்ற ராதையின் உள்ளம் ஒரு கணத்தில் காதலாக மாறிவிடுதோ? ஒரே சமயம் மனிதனாகவும் தெய்வமாகவும் பிறருக்குத் தெரிந்த கண்ணன், காதலின் துயராய், பிரிவின் நினைவாய் மட்டுமே ராதைக்குத் தெரிகிறான். மண்ணில் பிறந்த மானிடருக்கு நான் அடிமை செய்ய மாட்டேன் என விரதம் பூண்ட ஆண்டாளின் காதலை அகத்தே கொண்டவள். அரங்கத்து உறையும் அழகிய மணவாளனின் கண்ணழகு குழலகுக்கு ஒப்பு கொடுத்தவள் போல ராதையும் கிருஷ்ணனின் மாயங்களில் மயங்கி நின்றாள். அப்படி மாறாத நின்ற அந்தணர் மகள் அனகை.

அனகை கண்ணனுடன் ஓடினாள். கண்ணனுடன் குனிந்தாள்.கண்ணனுடன் குடம் சுமந்தாள். எடையற்ற குடம் நிறைந்து தளும்புவதை அறிந்து மெல்ல நடந்து வந்தாள். அவள் இடைநனைத்து ஆடை நனைத்து அகம் நனைத்த ஈரத்தை உணர்ந்து குளிர்கொண்டாள்.”

அந்தணர் குலம் அவனுடன் இருக்கும்போது அங்கு காலமில்லை, மேலே வானமில்லை, ஒவ்வொருவரும் சூடிய மலரைப் போல மெலிதாக உணர்கின்றனர். அந்தணர் குடிலில் நடக்கும் யாகத்தை அவிசையும் தடுக்கும் பொருட்டு குழலிசை வளர்கிறது. வேதச் சொல்லைக் கடந்து நிற்பது உலகளந்த அவன் பாதங்கள் என அந்தணப்பெண்டிர் உணர்ந்து கூறும் பகுதி கிருஷ்ண வேதம் அர்ப்பணிப்பினால் மட்டுமே உருவாகி வருவதைக் காட்டும் யுகசந்தி.

இந்திர விழாவைக் கொண்டாடும் ஆயர் குலம் பெரு யாகம் செய்து ஆநிரைகளை அவியாக்கி இந்திரனுக்காகப் படையலிடுகின்றனர். மண் விளங்கவும், மழை பெருகவும், பயிர் செழிக்கவும் செய்யப்படும் யாகம் மூத்தோர் சொல்முறை கேட்டு வளர்வது. கண்ணன் செய்யும் அடுத்த புரட்சி இது. மண் செழிக்க செய்யப்படும் யாகத்தில் பசு பலி எதற்கு எனக் கேட்கிறான்? உழைத்து மண் செழிக்கச் செய்யும் செயலே நன்மையைக் கொடுக்கும், இங்கே தேவர்களுக்கு என்ன வேலை எனக் கேட்கிறான். முத்தாய்ப்பாக, நம் அன்னைக்கும் அன்னையாக விளங்கும் பசுவை அவி கொடுப்பதை எதிர்கிறான். பாற்கடலில் அறிதுயிலில் இருப்பவனின் கண்ணசைவில்  வாழும் நமக்கு வேறென்ன வேண்டும். அவனுக்குத் தெரியும் நமக்கு என்ன வேண்டுமென்று. அவனுக்கே நாம் அடிமை செய்வோம் என்கிறான். என் சொல் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் என்னைத் தொடருங்கள் என கோவர்தன மலையை நோக்கி நடக்கிறான்.

பாகவதக் கதையிலும், ஸ்வாமி பிரபுபாதரின் வைணவ உரைகளிலும் இந்திரனின் அகங்காரத்தை ஒழிப்பதற்காகச் சொல்லப்படும் இந்த கோவர்த்தனகிரியின் கதைக்குப் பின்னால் இருக்கும் ஒரு வரலாற்றுப் பார்வை இங்கு பேசப்படுகிறது. பாரதக் கதையின் மையம் பேசும் கிருஷ்ண வேதம் என்பது பலி கொடுப்பதிலும், அளப்பெரிய வேள்விகள் செய்வதிலும் கிடைக்கும் கொடையை நிராகரித்து அடைக்களத்தையும் சரணையும் பேசுகிறது. பக்தியிலும் காதலிலும் கசிந்துருகும் ‘பாவ’த்தைப் பற்றி பேசுகிறது.

மூத்தோரே, அன்னையரே, ஆயர்குலத்தோரே, கேளுங்கள். யுகம் புரண்டு மாறினும் ஏழ்கடல் வற்றி மறையினும் வான் உருகி அழியினும் வேதம் பொருள் விலகினும் மாறாது நின்றிருக்கும் என்சொல்”, எனச் சொல்கிறான் கண்ணன்.

இதற்கிடையே யமுனைக்கரையில் விழிவைத்து காத்திருக்கிறாள் ராதை, நம் கோதை. பொருள்வயின் பிரிந்து சென்ற காதலைரை நினைத்து கசிந்துருகுவது போல, அறம்வளர்க்கச் சென்றோன் திரும்பவரும் பாதச் சுவடை எதிர்பார்த்து நின்றிருக்கிறாள் காரிகை. முழுவதுமாகப் பித்தி ஆனவள் ஆநிரைகளுடனும் தனது மாமியுடனும் கழிக்கிறாள். காதல் துயர் பித்தில் கண்ணனையும் மறந்து காதலுடன் மட்டும் வாழ்கிறாள். இப்பிரிவு நாவலின் மிகவும் துயர் மிகுந்ததாக உள்ளது. ராதையைச் சுற்றி இருப்பவை எல்லாம் உயிர் கொள்கின்றன. அவை அனைத்தும், “அவன் எங்கே” என்பதை மட்டுமே கேட்கின்றன. கண்ணன் வந்தால் கூட அதில் அவள் நிறைவடைவாளா எனும் கேள்வியை நோக்கி அவளது மீளாக்காதல் கூர்கொண்டபடி செல்கிறது. நாவலின் உணர்ச்சிமிக்க பகுதியாக இந்த ஒன்பதாம் பகுதி அமைந்துள்ளது. நீலத்திலும், சுற்றி இருந்த கோலத்திலும், குழல் கானத்திலும், மலர் வாசத்திலும், பொறிவண்டின் ரீங்காரத்திலும், யமுனையில் அசைந்தாடும் சிறு படகின் அசைவிலும் தெரிவது ராதையின் பெருந்துயர்.

பெருந்துயர்கொண்ட உள்ளம் போல் அழகிய தொன்றும் இல்லை. அது தன்னை அள்ளி தானுண்டு நிறையும் விரிவு

0

சிறையின் இருட்டில் தோன்றிய கரியவன் உலகை வெளிச்சம் நோக்கி நகர்த்தியிருக்கிறான். அவன் பிறந்த இரவு போன்ற வேறொரு இருள் எங்கும் இல்லை. வானம் பிளந்து சுவர் போல மழை ஊரையே மூழ்கடிக்கிறது. சிறைக்குள் அடிமையெனப் பிறந்தவன் அதிலிருந்து ஆயர் குலத்துக்கு மட்டுமல்லாது மண்ணில் பிறந்த அனைவருக்கும் தப்பிக்கும் வழியை காட்டுகிறான். கொல்லப்படுவதற்காக பிறந்தவன் கிருஷ்ணன் என கம்சன் கணிக்கிறான். பின்னர் வாழ்நாளெல்லாம் பல தீமைகளை முறியடித்தபடி வளர்ந்தவன். மரணத்தை வெல்வதற்காக மட்டுமல்லாது முழுமையான வாழ்வைக் காட்டுபவனாகவும் அவன் இருந்திருக்கிறான்.

ஹஸ்தினாபுரிக்குச் செல்லும் பிருந்தாவன வணிகத்தை சாக்கிட்டு அக்ரூரர் (கிருஷ்ணரின் சித்தப்பா) மூலமாக கிருஷ்ணரையும் பலராமரையும் களத்துக்கு அழைக்கிறான் கம்சன். பிருந்தாவனத்தின் மாயையில் தன்வசம் இழக்கிறார் அக்ரூரர்.

மென்மணம் இறுகிய நெஞ்சுடன் என்னைச்சூழ்ந்த நீலப்பெருக்கில் நீந்தித் திளைத்தேன். நீலமெனச் சுழித்தது ஒரு வேய்ங்குழல் நாதம். குழலொழுகும் வழியில் நெடுந்தூரம் சென்றேன். இவ்வுலகும் இங்குள அனைத்தும் எங்கோ என எஞ்ச நானும் இசையும் நிறைந்த வெளியில் நின்றேன். அங்கே கண்மலர்ந்தன விண்மீன்கள். சிறகெழுந்தன மேகக்குவைகள். ஒளியெழுந்தது. நீலம் திசைவிரித்தது. சுழன்று விழுந்து மண்ணில் அறைபட்டது நெடுந்தொலைவில் எங்கோ என் தசையுடல். அதைச்சூழ்ந்து திகைத்து நின்றன என் குடியினர் சூடிய கண்கள். என் கால்கள் மண் நடந்த தொலைவை எல்லாம் மீளநடந்து கருவறையை அணுகின. கொண்ட மூச்சையெல்லாம் மீண்டும் காற்றுக்கே அளித்தன என் மூக்கும் வாயும். என் நா உரைத்த சொல்லெல்லாம் நெஞ்சுக்குள் மறைந்தன. என் நா அறியாத சொல் ஒன்றை என் இறுதி விழி சொன்னது.”

கம்சனும் மாயையில் சிக்கியதைக் காட்டும் பகுதி. கிருஷ்ணனே அரண் என தெளிமதி இருந்தும் அவனை இயக்கிய விதிக்கு ஆடபட்டு நிறைவாகத் தன் முடிவை ஏற்றுக்கொள்கிறான். நாவல் முழுவதும் கண்ணனின் மாயைத்துக்கு மயங்காதவர்கள் யாருமிலர் என்பதைக் காட்டுகிறது. ஒருவிதத்தில் வெண்முரசு முழுவதும் அவனது ஆடலே என்பதை கவித்துவமாக முன்வைத்த நாவல் என இதைச் சொல்ல முடியும். ராதையின் பிரேமை ஒரு எல்லையில் அவளை விட்டு விலகி பிரேமையின் கதையாகிறது. பிரேமையின் ஆடலில் சிக்கிக்கொள்ளாதவர்களே இல்லை. அலை அடிப்பது போல அது யசோதை, ராதை, கம்சன், அக்ரூரர் என அனைவரையும் தொட்டு மீட்டுகிறது.

முடிவாக, நாவல் முழுவதும் சொல்லப்பட்ட கவித்துவ செறிவு தமிழ் புனைவு முன்னும் பின்னும் அறியாத ஒன்று. புனைவின் உச்சகட்ட சாத்தியங்களை தெளிவாகக் காட்டியிருக்கிறார் ஜெயமோகன். தரிசனத்தின் ஆழமும், கவித்துவத்தின் எளிமையும் கூடி வந்த படைப்பு. வெற்று ஜாலங்கள் இல்லாது, தமிழ் பண்பாட்டு வெளியின் செழிவையும் சுட்டி நிற்கும் படைப்பு. இதன் மூலம் நவீன வரலாற்று எழுத்தில் ஒரு புதிய திசையை ஆசிரியர் திறந்துவைத்துள்ளார். மரபில் நாட்டார் குறியீடுகளும், செவ்வியல் கூறுகளும் ஒருங்கே அமைவது போல புனைவிலிருந்து நவீன மனம் அடையக்கூடிய ஒரு வகைப்பாட்டின் எல்லைகளை நமக்கு ஜெயமோகன் காட்டியுள்ளார். தமிழ் வாசர்களின் வாசிப்பில் அழியாத இடத்தில் நிற்கும் உன்னதப்படைப்பு.

ரா.கிரிதரன்

“காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” என்ற சிறுகதை தொகுப்பு, காற்றோவியம் என்ற கட்டுரைத் தொகுப்பு ஆகியவற்றின் ஆசிரியர். வளர்ந்தது புதுச்சேரியில். தற்சமயம் லண்டனில் வசிக்கிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.