/

பிரமிள் கவிதைகள்- ஒரு பார்வை: பாலா கருப்பசாமி

எழுத்து சி.சு.செல்லப்பாவால் புதுக்கவிதையின் முதல் வாசகரும் முதல் விமர்சகருமாக குறிப்பிடப்பட்டவர் எனினும் தமிழ் இலக்கியச் சூழலில் பிரமிளின் ஆகச்சிறந்த கவிதைகள் பேசப்படவே இல்லை. அவரது சொல்லடுக்குகள் உருவாக்கும் மாயத்தளத்துக்கு பயணித்தவர்கள் குறைவு. இன்னொன்று கவிதைகள் விமர்சனத்தைப் பொறுத்தவரை ஒரு பொத்தாம்பொதுவான மனப்பிம்பத்தை மட்டும் நம்பி கவிதைகளுக்கு உள்ளேயே நுழையாமல் ரொம்ப பாதுகாப்பாக தன் பூசிமெழுகல் வெளிப்படாதபடி கட்டுரைகளை சமைத்து வைக்கிறார்கள்.

பிரமிள் கவிதைகள் தொகுப்புக்கு தொகுப்புரை வழங்கியுள்ள கால சுப்ரமணியம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

எழுத்து பத்திரிகையில் தொடங்கி ஓராண்டு காலத்தில் புதுமலர்ச்சி பெற்றிருந்த புதுக்கவிதையின் பாதிப்பையும் வடிவ மாற்றத்தையும் பிரமிள் எழுத ஆரம்பித்த சில மாதங்களில் வெளிவந்த ‘ஐந்து கவிதைகள்’ (டிசம்பர் 1961) என்ற கவிதைகளில் காணமுடிகிறது. இவைதான் படிமக் கவிதை என்ற ஒரு புதுமரபைத் தோற்றுவித்தன. கவிதையில் பிச்சமூர்த்தியின் உருவத்தை ஏற்ற பிரமிள், உள்ளடக்கத்தில் பாரதியின் உத்வேகத்தையும் புதுமைப்பித்தனின் உக்ரத்தையும் தி.சோ. வேணுகோபாலனின் விசாரத்தையும் ஏற்றுத் தம் தொடக்ககாலக் கவிதைகளில் அடையாளம் காட்டுகிறார். பாண்டித்தியத்தில் பாழ்பட்டு நின்ற தமிழ்க் கவிதைக்கு ஒரு நவீன தொனியையும் சரளத்தையும் கொடுத்த பாரதியின் பரம்பரை நீர்த்துப் போயிருந்தது. பிரமிளின் இக்கவிதைகள் தான் ஒரு இறுக்கத்தைக் கொண்டுவந்தன. இதற்கு முன்பு எழுந்த பிச்சமூர்த்தியின் கவிதைகளாகட்டும்; எழுத்து பத்திரிகையில் எழுதப்பட்ட தி.சோ. வேணுகோபாலன், நகுலன், சி.மணி, பசுவய்யா கவிதைகளாகட்டும்; நெகிழ்ச்சியான கட்டமைப்பில்தான் இருந்து வந்துள்ளதைக் கவனிக்கலாம். இதற்குப் பின் இவர்களது கவிதைகளிலும் இறுக்கம் நிகழ்ந்துள்ளதை அவதானிக்க முடியும்.

சொற்கள்மீது ஆகப்பெரிய அழுத்தத்தை உருவாக்குவதே கவிஞனின் தேடலாக உள்ளது. ஆனால் பழந்தமிழ் பரிட்சயம் குறைந்துவருவதால் தற்காலக் கவிதைகளில் இயல்பாய்த் தோன்றும் இறுக்கத்தை நம்மால் காணமுடிவதில்லை.  

பிரமிளின் கவிதைகளில் ஆன்மீகமும், உயிர்ப்பும் ஆதார சுருதிகள். நாம் ஆன்மீகம் என்ற வார்த்தையை மிகத் தவறாகப் பொருள்கொண்டுள்ளோம். வைதீகச்சார்புடைய ஒன்றாகவே அது பார்க்கப்படுகிறது. இருத்தல் சார்ந்த கேள்வியெழும் ஒவ்வொரு தனிமனிதரும் ஆன்மீகமானவரே. அதற்கும் எந்தக் கடவுளுக்கும் தொடர்பு இல்லை. சிலருக்கு ஒரு தற்காலிக உறவாக கடவுள் பிரதிமைகள் இணைந்துகொள்கின்றன. உண்மையான ஆன்மீகவாதி வைதீகச் சார்பற்றவன்.

தனது இலக்கிய காலம் முழுவதிலும் இரசனாவாதத்துக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருந்ததால், சொல்ல வந்த விஷயத்தை பொட்டுத் தெறித்தாற்போல் வார்த்தைகளில் மின்பொறி பறக்கச் சொல்வதிலேயே அவர் கவனம் கொண்டிருந்தார். எந்தவித ‘அழகியலும்’ அவரது வரிகளில் காணமுடியாது. வெளிப்படுத்தும் விதம் குறித்து அவர் கிஞ்சித்தும் கவனம் எடுத்துக்கொண்டதில்லை. இந்தவிதத்தில் பாரதி அவரது முன்னோடி. பாரதியின் கவிதைகளுக்கு சந்தத்தையும் தாண்டி அதன் வரிகளுக்குள் ஓடும் உணர்வுகதியும், செறிவுமே அவரை மகாகவியாக அடையாளம் காட்டுகின்றன.

பிரமிளின் கவிதைகளை மூன்று வகைப்பாடுகளாகப் பிரிக்கலாம். ஆரம்பகட்டக் கவிதைகள், அறிவியக்கக் கவிதைகள் மற்றும் மீபொருண்மைக் கவிதைகள். துவக்ககாலக் கவிதைகளில் அந்தக் காலகட்டத்துக் கவிதை வடிவங்களின் தாக்கம் அதிகமும் காணப்படுகிறது. (உதாரணமாக, வியாக்கியானக் கவிதைகள்: இயல்பான தன்னெழுச்சியின்றி, ஏதோ ஒரு பொருள் குறித்து எழுதிச்செல்லும் போக்கு)  அதேசமயம் ஆன்மீகத் தேடலையும் அவற்றில் காணமுடிகிறது. அறிவியக்கக் கவிதைகள் அவரது காலத்திய இலக்கிய ஊழல்கள், சாதியக் குழுக்கள் போன்றவற்றைச் சாடவும், பகடி செய்யவும் ஒருவித கோபாவேசத்தோடு எழுதப்பட்டவை. இவற்றில் ஆங்காங்கே தனது நிலைப்பாடு சார்ந்த பார்வையை விவரிக்கும் வரிகளில் மட்டும் ஆழம் வெளிப்படுகிறது. மற்றபடி பிரமிளின் கட்டுரைகளை வாசித்திருக்கும் ஒருவர் இவற்றை எளிதில் கடந்துவிடலாம். அவர் தீவிரமாய் எடுத்துப் பேசியுள்ள பிரச்சினைகள் வாசகத்தளத்தில் பொருட்படுத்தக்கூடியதாகவே இருந்திருக்கவில்லை. அவர் யாரையெல்லாம் விமர்சித்தாரோ அவர்கள் எல்லோருமே இன்று மிகப்பெரும் ஆளுமைகளாகத் தங்களை தக்கவைத்துக் கொண்டுவிட்டனர். ஒட்டுமொத்த வாசகப்பார்வையும் மாறாவிடில் ஒரு படைப்பாளியால், விமர்சகரால் ஆகக்கூடியது ஏதுமில்லை. மூன்றாவது வகையான மீபொருண்மைக் கவிதைகளே உண்மையில் பிரமிளின் கவிதைகள். இவையே அவரை தமிழின் தன்னிகரற்ற கவிஞனாக அடையாளம் காட்டுகின்றன.

சமகாலக் கவிதைகளில் ஆன்மீகத் தேடல் கிட்டத்தட்ட காணாமலேயே போய்விட்டது எனலாம். இது மேற்கத்திய சிந்தனைகள் தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய தாக்கம். இருத்தலியல் கேள்விகளும் இருண்மை பூண்ட கவிதைகளையே வெளிப்படுத்திக் கொண்டிருந்தமையால் கால ஓட்டத்தில் ஆங்காங்கே அவற்றின் சுவடுகளை மட்டும் விட்டுவிட்டுக் காணாமலாகிவிட்டன. இன்று தன்னையறியும் பாதைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவன் ஒரு பைத்தியக்காரனாகவே அறியப்படுவான். நுகர்வுக் கலாச்சாரமும் முதலாளித்துவமும் சேர்ந்து ஜடவாதத்துக்கே நன்மைபுரிந்துள்ளன. ஒட்டுமொத்தமாக இதை இலோகாயதத்தின் வெற்றி என்றும் இலக்கியத்தின் தோல்வி என்றும் சொல்லலாம்.

கவிதைகளில் ஆன்மீகத் தேடல் அவசியமா என்று கேட்டுக்கொள்வதும் இங்கே அவசியமாகிறது. இந்த ஒற்றைப்புள்ளியில் அத்தனை கவிதைகளையும் கோர்ப்பது நியாயமாகவும் தோன்றவில்லை. ஆன்மீகம் சார்ந்து ஓர் அறிவார்த்தப் புரிதல் ஏற்பட்டபின் அத்தகைய கவிதைகளும் சத்திழந்து விடுகின்றன. கவிதைகள் உயிர்ப்பைப் பாட வேண்டும். அதன் உள்ளுறையாக தனி நபர் ஆன்மீகமும் தேடலும் இருக்க வேண்டும். பூமி உயிர்ப்பை மட்டுமே தாங்குகிறது. அதை மட்டுமே போஷிக்கிறது. ஒவ்வொரு உயிரிடமும் அது வேண்டுவதுவும் அதுவே. ஆன்மீகம் ஒருவித abstract தொனிக்குத் தாவும் அதே சமயத்தில் உயிர்ப்பை அடிப்படையாகக் கொண்டவை மண்ணோடு பிணைந்து கருப்பொருளைப் பாடுகின்றன. உயிர்ப்பைப் பாடும் கவிதைகள் சாசுவதமாய் நிற்கின்றன.

‘பார்வை’ சிற்றிதழில் (மே, 1986) படிமம் பற்றிய ஒரு கேள்விக்கான பதிலாக பிரமிள் இவ்வாறு பதிலளிக்கிறார்:

அதீதமான ஒரு கற்பனை எனக்கு இருக்கிறது. இது சர்ரியலானது. இந்த சர்ரியலிசம்தான், என்னுடைய கவிதையின் முக்கிய குணம். படிமத்தன்மை, இந்த சர்ரியலிசத்தின் ஊர்தி. இது ஒரு அதீதமான கற்பனை; எதையும் பார்க்கிறபோதும், அதை ஊடுருவி, வேறுவிதமாக அதைத் திரும்ப நிர்மாணிக்கப் பார்க்கிற ஒருவிதமான கற்பனை. இதனுடைய நோக்கம், வெளிப்படையாகத் தெரிகிற ரியாலிடிக்கும் அப்பாற்பட்ட ஒரு ரியாலிடியை, வெளியே கொண்டுவருதல்.

எழுத்து இதழ் கவிதைகள் (1960-66)

புதுக்கவிதையின் காலம் பாரதியிலிருந்து தொடங்கி பின் ந. பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, க.நா.சு. போன்றோர் மணிக்கொடி இதழின் காலத்தில் இப்புது நடையில் பழகினாலும் (1934), எழுத்து இதழின் துவக்கத்துக்குப் பின்பே கவிதை மறுமலர்ச்சியாக புதுக்கவிதை துலக்கம் பெறுகிறது. இந்த துவக்ககாலக் கவிதைகளை வாசிக்கும்போது அவற்றின் வரலாற்றுத் தளத்தை உணர்ந்து வாசிக்கவேண்டும். சமகாலத்தில் புதுக்கவிதைகளின் வடிவம், பாணி, பேசுபொருள் குறித்த பொதுப்புரிதல் நமக்குள்ளது. இது ஓரளவு தொடர்ச்சியான கவிதை வாசிப்பில் நாம் ஏற்படுத்திக்கொண்டிருப்பது. இப்படி எதுவும் உருவாகாத காலத்தில் முன்னுதாரணமாக மரபுக்கவிதைகளும், பாரதியின் வசன கவிதைகளும் மட்டும் இருந்த காலத்தில் அவற்றின் தடுமாற்றத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஐம்பது ஆண்டுகள் கழித்து அவற்றை வாசிக்கையில் இவற்றையெல்லாம் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். மேலும் துவக்ககாலக் கவிதைகள் இயற்கையை, உலக இயல்பை வியந்து பாடுபவையாக பொதுத்தன்மைகொண்டு, வியாக்கியானம் செய்பவையாக உள்ளதையும் நாம் பார்க்கலாம். எனினும், எழுத்து இதழில் வெளியான பிரமிளின் ‘நான்’ என்ற முதல் கவிதை பேருருவம் கொண்டு நிற்கும் ஒன்று. அடுத்ததாக ‘இறப்பு’ என்ற கவிதை:

சிறிதில் பெரிதின் பளு

பாழின் இருளைத் தொட்டுன்

நுதலில் இட்ட பொட்டு

பார்வைக் கயிறு அறுந்து

இமையுள் மோதும் குருடு

ஒன்றும் ஏதும் இன்றி

இன்மை நிலவி விரிதல்

வண்டியை விழுங்கும் பாலம்

மஞ்சம் கழித்த பஞ்சு

கூட்டை அழிக்கும் புயல்

புயலில் தவிக்கும் புள்

வாழ்வின் சூழலைத்

துறந்து

என்றோ இழந்த வாசக்

காற்றுள் வீழும் ரோஜா

துணியே நைந்து

இழையாய்

பஞ்சாய் பருத்தித் திரளாய்

பின்னே திருகும் செய்தி

காற்றை விழுங்கும் சுடர்

சுடரை உறிஞ்சும் திரி

வினையில்

விளைவின் விடிவு

விளையா விடிவின் முடிவு

தொடங்காக் கதையின் இறுதி

நிறுத்தப் புள்ளிகளிடையே

அச்சுப் பிழைத்து

அழித்த வசனம்

வெறும்

வெண்தாள்ச் சூன்யம்.” – (எழுத்து, ஜன. 1962)

ஒவ்வொரு வரியுமே இறப்பைச் சுட்டுபவை. எனினும் கவிதை முடிவதைப் பாருங்கள், வேகமாய் ஒரு வாகனம் நம்மைக் கடந்து சென்றபின் மோதும் மௌனத்தை உணர்த்தும் வரிகள் “அச்சுப் பிழைத்து/ அழித்த வசனம்/ வெறும்/ வெண்தாள்ச் சூன்யம்”. ஒரு தாளில் தவறாக எழுதியபின் எழுதியதை அழித்தபின் அதன் அர்த்தம் ஏதும் புரியாமல் திட்டுத்திட்டால் வரிக்கோட்டுத் தடங்கள் மட்டும் தெரிய திகைத்து நிற்கும் வெண்தாள். தொடர்ச்சியாய் விழும் வரிகள் ஒரே இலக்கை மீண்டும் மீண்டும் தாக்கி கடைசியில் அதை வெற்றிகொள்வதுபோல அல்லது கொன்றுபோடுவதுபோல கச்சிதமாக முடிந்திருக்கும் கவிதை இது. வீட்டில் நெடுநாள் படுக்கையில் கிடந்தவர் மரணிக்கும்போது அவரது படுக்கை, துணிமணிகளும் சப்பரத்தில் எடுத்துச் செல்லப்படும். நிறம் மங்கி பழுப்பாய் கட்டித்த பஞ்சு சிதறுவது மனக்காட்சியில் கொண்டுவருகிறது ‘மஞ்சம் கழித்த பஞ்சு’ என்ற வரி.

இந்த ஆரம்பகட்ட வியாக்கியானக் கவிதைகளிலிருந்து இரண்டு மாதங்களிலேயே மாறுபட்ட கவிதையொன்று வருகிறது பிரமிளிடமிருந்து:

கதவு

நிழல் விழுத்தும் அகாதம்

தட்டாது தானே திறக்கும் கதவு

ஆனால் தேனீ தட்டாது

மொட்டு திறக்காது

சுற்றும் விட்டிலும்

சுடருக்குக் கதவு தேடி

சிதறி விழும்

இதோ இப்போ

இப்பாறைச் சுடருள்

புகுந்தவன் யார்?

சுவர் நடுங்க உள் நின்று

உதைப்பவன்?

சுடரிதழ் விரிந்தது

தெரிந்தது

அகாதம். – எழுத்து, மார்ச் 1962

இந்தக் கவிதைக்கு அகாதம் என்று தலைப்பிட்டிருக்கலாம். இந்தக் கவிதை அவரது ‘இடம்’ என்ற கவிதையை நினைவூட்டுகிறது ‘மீனுக்குத் தண்ணீர்/மிருகத்துக்கு/பிராண வாயு/மனிதாத்மாவுக்கோ/மனம்தான் வெளி’. கதவு என்பது அரூபமாக அகமும் புறமும் ஊடுபாவாய் நீளும் பாதையின் இடையில் நிற்பதைக் குறிக்கிறது. அக்கதவு தட்டாது தானே திறப்பது. தேனீ தட்டாது மொட்டு திறக்காது என்ற வரி கேள்விகளால் விடைதேடி தன்னுள் பறக்க ஆரம்பித்தலைக் குறிக்கிறது. ஒரு பாறையை சுடராகப் பார்க்கமுடியுமா? அதன் கரடுமுரடான பரப்பு, உள்ளுக்குள் அது கொண்டிருக்கும் அழுத்தம், சுவர் நடுங்க உள் நின்று உதைப்பவன்? பாறைச்சுவரா அது? ஒரு கூழாங்கல்லை அறிந்துகொண்டால்கூடப் போதும். இந்த உலகையே அறிந்துகொள்ளலாம் என்பேன்.

பொதுவாக இந்தக் காலகட்டத்துக் கவிதைகள் அனைத்திலும் ஆன்மீக நோக்கும், தன்னையறிதலுக்கான தேடலும் ஆதாரமாய் இருப்பதை உணரலாம். கடைசியாக 1966ல் வந்த இருமை என்னும் கவிதை இத்தேட்டம் முதிர்ந்த இருண்மைக்குள் சென்றுவிடுகிறது. தேடலற்ற ஒருவரால் இந்தக் கவிதைக்குள் நுழைவது இயலாது.

கண்ணாடியுள்ளிருந்து – முதல் கவிதைத் தொகுப்பு (1967-73)

இந்தத் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் காதலும் காமமும் பாடுபொருளாயிருக்கின்றன. ஆனால் எஞ்சி நிற்கும் கையறு நிலையும், ஆன்மத் தேடலும் கொண்டுள்ளன. ஒரு பிரம்மச்சாரியின் தனிமையும் அவசமும். மேல்மனத்தின் தெளிவை பொருட்படுத்தாத அடிமனத்தைப் பாடுகிறது ‘அடிமனம்’ கவிதை:

முட்டித் ததும்பியென்ன?

மாலையில் பகல் வடிகிறது

ஒளி ஒதுங்கி இரவாகிறது

கதிர்

எங்கோ சொட்டி

விளைந்தன தாரகைகள்.

பகலின் துளிகள்.

என் மன அகலிகையின்

நிறைவின்மை முடிவற்று

வாழ்வு கரவாகிறது.

இனி என்ன?

கோதம உக்கிரத்திற்கு

ஒரு போலி,

போலிப் பரிதி

ஒரு போலி வைகறை.

உதிக்கிறது எங்கும் ஒரு

திருட்டுத் தெளிவு,

இந்திர நிலவு.

பாதி தெளிந்து

ஆடை களைந்து

வெளிர்கிறது மனவெளி.

ஒலியற்றுச் சிரித்து

மனம் பதைக்கும் புணர்ச்சிக்கு,

தனித்து,

வெறிச்சோடிய தெருவெங்கும்

அழுகி வடியும் விளக்கின்

வாழ்த்தொளி.

இது நிகழ்ந்த சமயம்

இடமற்ற

மனோவேளை. (கசடதபற, ஜூலை, 1972)

பகலில் கட்டுக்குள் இருக்கும் மனம் உறக்கத்தில் கைவிட்டுப்போகிறது. இருளில் அடிமனம் ஆக்கிரமிக்கிறது. கவிதையை இன்னும் அணுக்கமாகப் புரிந்துகொள்ள வாசிப்பவருக்கு அகலிகை கதையும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. கோதம முனிவரின் மனைவி அகலிகை. இந்திரன் அவள் மீது ஆசைகொண்டு கோதமரைப்போல வேடம் தரித்து அவளைப் புணர்கிறான். கோபம் கொள்ளும் கோதமர் இருவருக்கும் சாபமிடுகிறார். இந்தக் கவிதையில் கடைசி மூன்று வரிகள் எழுதப்படாமல் இருந்திருந்தாலும் முழுமையாகவே இருந்திருக்கும். இந்த மூன்றுவரிகள் அதுவரை பேசிய தளத்திலிருந்து மேலெழுந்துவிடுகின்றன. இடமும் பொழுதும் செய்யுள்களில் முதற்பொருள். இங்கே இடமற்ற மனோவேளை என்று குறிப்பிடுகிறார். இது அகத்தில் நடக்கும் போராட்டத்தையும் எண்ணவோட்டத்தையும் குறித்த, அதை அவதானித்ததில் எழுந்த கவிதையென்பதால் இடமற்ற மனோவேளை.

ஆனால் இதே தொகுப்பில்தான் இன்றுவரையும் வியந்து பாராட்டப்படும் E=MC² கவிதையும் உள்ளது. ஐன்ஸ்டீன் உருவாக்கிய E=MC² என்ற சூத்திரம் நிறைகளை அளக்கும் விதத்தில் புதுமுறையை புகுத்தியதோடு, நிறைகளுக்குள் ஆற்றல் குவிக்கப்பட்டுள்ளதை அறிவித்தது. ஆற்றல் என்பது (E), நிறையை ஒளியின் வேக மடங்கினால் பெருக்கக் கிடைப்பதாகும் என்பது இதன் அர்த்தம். இதுவே அணுகுண்டுகள் தயாரிப்பதற்கான அடிப்படையாகிப் போனது. இந்தக் கவிதையில் சூரியக் கதிர்கள் விரிந்து பரவி செல்வதெங்கே என்ற கேள்விக்கு, சிவன் (ஜடம்) தன் நெஞ்சைச் சுட்டி இங்கே என்கிறான். மனித மனதில் விரிகிறது புதிய பிரபஞ்சம். இது அறிவியல் தந்த பார்வை. வானில் காணும் நட்சத்திரத்தின் ஒளி இன்று வெளிப்பட்டதல்ல. இன்று நடப்பவை நாளை வெளிப்படும். காலமே வெளியாக பிரபஞ்சம். ஜடத்தில் இருப்பதெல்லாம் அணுக்கள் குவிந்த சக்தியின் சலனம். வெடிக்கிறது கண்ணற்ற சூரியப்போலிகள் ஹிரோஷிமா நாகசாகியில். ஜடமே சக்தி. அறிவியலின் தீட்சண்யமும் கவித்துவ முயக்கமும் கொண்ட கவிதை இது. பொதுவாக தர்க்கத்துக்குள் ஈடுபடுபவர்களை கவிதை கைவிட்டுவிடும் என்பார்கள். அப்படியில்லை என்பதற்கு உதாரணம் பிரமிளே. எந்தளவு அவரது விமர்சனங்கள் கூர்மையாக இருந்தனவோ அந்தளவு கவிதைகளும் ஆழம்கூடி நின்றன. இதற்குக் காரணம் இரண்டுக்கும் அடித்தளமாக நிற்பது அவரது உணர்திறனும் ஆன்மீகமும். இந்த அரிய ஆளுமை அவரை பாரதிக்கு அடுத்த மகாகவியாக நிறுத்துகிறது.

பிரமிளின் காவியம் என்ற கவிதை (சிறகிலிருந்து பிரிந்த இறகு) தமிழிலக்கிய உலகில் அனைவரும் அறிந்ததே. இக்கவிதை கொண்டாடப்படுவதன் காரணம் இதன் எளிமையான வெளிப்பாடு. இது திட்டமிட்டு அமைத்ததல்ல. துவக்கத்தில் புதுக்கவிதை வடிவம் குறித்த தடுமாற்றம் அக்காலகட்டத்தில் நிலவியதை கவனத்தில் கொண்டால், பிரமிள் ஒருக்காலும் அழகியல் வெளிப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தவரல்ல. சொற்களில் மின்தறிப்பு, இறுக்கம், காட்சிப்பிறழ்வின் ஆழமான தொடுகையும் அதில் வெளிப்படும் அகவெளியும் (metaphysics) அவருக்கு பிரதானமானவை. வாசகருக்காக அவரது கவிதைகள் இறங்கியதேயில்லை. காவியம் கவிதை ஒரு தற்செயல் நிகழ்வு. அதேபோல இத்தொகுப்பில் அமைந்த இன்னொரு எளிய கவிதையையும் பார்க்கலாம்.

பாலை

பார்த்த இடமெங்கும்

கண்குளிரும்

பொன் மணல்.

என் பாதம் பதித்து

நடக்கும்

இடத்தில் மட்டும்

நிழல் தேடி

என்னோடு அலைந்து

எரிகிறது

ஒரு பிடி நிலம். – (1973)

மேற்பார்வைக்கு புரியக்கூடிய எளிய வடிவம் இது. மதிய நேரத்தில் நீண்ட கடற்கரை அல்லது ஆற்றங்கரை பொன்னைப்போல மின்னுகிறது. ஆசையில் நடக்க ஆரம்பித்தால் பொசுக்கும் பிடி நிலம். இந்தக் கவிதையை பலவிதமாக உள்வாங்கலாம். இக்கரைக்கு அக்கரை பச்சை, தனிமை, தேடல், தமிழீழ அடையாளத்தைக்கூட இதில் பார்க்கலாம். வாசிப்பவரைப் பொறுத்து விகசிப்பது நல்ல கவிதையின் ஓர் அடையாளம்.

இதைத் தொடர்ந்து 1973ல் முதுமை, முதுமை வருகை என்ற இரண்டு கவிதைகள் வருகின்றன. இரண்டுமே முதுமையின் தடுமாற்றத்தையும், மரணத்தையும் மிகத் தனிமைகொண்டு பாடுகின்றன. 70 முதல் 75 ஆண்டுகள் பிரமிளுக்கு மிகக் கடினமானவையாக இருந்ததாக ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். பல நாட்கள் பட்டினி. 73ல் அவருக்கு 34 வயதுதான். இளமை, திருமணவயதை சற்று தாண்டினாலும் அடுத்து கீழ் நோக்கிய இறக்கம்தான். சிலநேரம் சில இடங்களில் இந்த இறக்கம் செங்குத்து இறக்கம்.

ஊமை என்ற கவிதையின் முதல்வரி, ‘மனிதனின் பேச்சு அவனுக்கு பிடிபடாது’. அவன் இங்கே ஊமை என்று எடுத்துக்கொண்டால் மொழியற்ற சப்த சூனியத்துக்குள் நம்மைத் தள்ளுகிறது. இதை வேறொரு வகையில் பார்க்கலாம். பேசுவதற்குத் தயார் செய்துகொண்டு பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். பொதுவாக நாம் பேசும்போது அடுத்து என்ன சொல் வருகிறது என்பதை அறியாமலேயே ஒரு திரட்டான கருத்து நிலையிலிருந்து சொற்களை உருவியெடுத்து வரிசைப்படுத்துகிறோம். உள்ளிருக்கும் இந்த அகவெளிச்சத்துக்கும் வெளிவரும் சொற்களுக்கிடையிலும் எப்போதும் இடைவெளியுண்டு. அடுத்த வரி, ‘பேசாத வேளையில் ஊமைகளாகின்றன பாஷைகள்’. உள்ளிருப்பது அதனளவில் அது குழப்பமாகவோ, கொந்தளிப்பாகவோ இருப்பினும் மிகத் தெளிவானது. சொற்கள் நழுவுபவை. இராட்சஷக் கொடிகள் அவை. ‘நக்ஷத்ரங்களைவிட நிறையவே பேசுவது அவற்றின் இடையுள்ள இருள்’. இந்த வரி நம்மை மல்லாத்தி மௌனிக்க வைத்துவிடுகிறது. மௌனம் அத்தனை அடர்த்தியானதாகி விடுகிறது. இந்த வரிமட்டுமே ஒரு தனிக்கவிதை.

கைப்பிடியளவு கடல்: (1973-76)

இந்தத் தொகுப்பின் முதல்கவிதை பிரமிளின் பிரபலமான கவிதையான ‘காவியம்’. ஏற்கெனவே பல கவிஞர்களால், விமர்சகர்களால் பேசப்பட்ட ஒன்று என்பதால் அதை நாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. கவிஞர்களின் கவிதை குறித்த கவிதை கொஞ்சம் இருண்மையானது. பொதுவாசகத் தளத்துக்கான ஒன்றாக இருப்பதில்லை. படைப்பு மனத்தின் அவசம் இது. இதை எந்தளவு வாசகமனம் உள்வாங்கும் என்பது கேள்விக்குரியதே. எனினும் வரிகளின் வேகமும் தெறிப்பும் கவிதை என்பதன் மீதான பிரமிப்பு அனுபவம் வாசகரால் அடையத்தக்கதே. அதாவது கவிதை எழுதுவதற்கான கவிஞனின் அவசத்தை உணர இயலாவிட்டாலும், அதைக்குறித்த கவிதையுணர்வு (விளைவு) அனுபவித்துணரத் தக்கது. எப்போதாவது எழுதமுடியாவிட்டால், எழுதமுடியாததைப் பற்றியும் எழுது என்பதுவே பொதுவாக எழுத்தாளர்களின் கோட்பாடு. பிரமிளின் இந்தக் கவிதை பாரதியின் யோகசித்தி பாடலோடு ஒப்பிடத் தக்கது. ஆனால் இங்கே வேண்டுதலாக இல்லாமல் தனக்குத்தானே சொல்லிக்கொள்வதாக ஒரு சிறுகோபத்தோடு வெளிப்படுகிறது.

பிறவாத கவிதை

மீண்டும் மீண்டும்

நோக்காடு வந்தும்

பிள்ளை பிறக்கவில்லை

‘வாடா’ என்றழைத்த

ரிஷித்தகப்பன் குரலுக்கும்

சுகப்பிரம்மமாக

வந்துதிக்கவில்லை.

இதயத்தின்

பட்டுத் துரும்புக்

கூட்டுக்குள்

புழுவாய் நெளிந்து

கிடக்கிறது இது.

துரும்பென்ன

தூணென்ன?

கூவி அழைத்தவுடன்

கல்த்தூண்

அசுர சேனை

அக்குரோணி ஆயிரத்தோடு

ஹிரண்யக் கொடுநெஞ்சம்

பிரகலாத தாபம்

மூன்றையும்

ஒரே கணத்தில்

கிழித்து

காலத் துரும்பை

எற்றி எடுத்து

எரித்து நீறாக்கி

நிற்க வேண்டாமா

கவிதை? – (1974)

பிரமிளின் பல கவிதைகளில் பாரதியின் பாதிப்பைக் காணமுடிகிறது. இவை புதுக்கவிதை என்பதற்கு மாறாக பாரதி தருவித்த வசனகவிதை வடிவத்தையே கைக்கொள்கின்றன. அவரது ’பட்டறை’ என்ற கவிதை மட்டுமே நான்கு பிரிவுகளாக மொத்தம் முப்பத்திரெண்டு பக்கங்கள் நீள்கின்றன. எளிய நடை. தமிழிலக்கியச் சூழல் விமர்சனமாகவும் தனது நிலைப்பாட்டை விளக்கும் விதமாகவும் இக்கவிதை எழுதப்பட்டுள்ளது. இதேபோன்ற பல கவிதைகளை அவர் எழுதியுள்ளார். இவற்றின் தற்போதைய சூழல்மதிப்பு ஒன்றும் குறையவில்லை எனினும் இவை அந்தக் காலத்திய சூழலுக்கான எதிர்வினைகள். இந்த ’பட்டறை’ கவிதையின் நான்கு பிரிவு சார்த்தரின் இருத்தலியத்துக்கான எதிர்வினை. ஜே.கே.வின் பார்வையிலிருந்து சார்த்தருக்கு பதிலளிப்பவையாக இவையுள்ளன. எத்தனைதான் இது கூர்மையாக வெளிப்பட்டிருந்தாலும், இந்த விஷயாம்சங்களை கட்டுரைகளில் இதைவிடச் சிறப்பாக அவர் வெளிப்படுத்தியிருக்க முடியும். இதைத்தான் கவிதையில் சொல்லவேண்டும், சொல்லக்கூடாது என்று எப்படி, யார் வரையறுப்பது? ஆனால், ஒரு விஷயம் துலக்கம் பெறுவது, சிறப்படைவது எந்தவகையான வெளிப்பாட்டில் எனத் தெளிந்து அதன்படி வெளிப்படுத்துவது எழுத்தாளரின் பண்பு. இது விஷயத்தில் அதிரடிக் கவிதைகள் மற்றும் பட்டறை போன்ற கவிதைகளைத் தவிர்த்து அவரது இயல்பான மீபொருண்மைத் தளத்தில் கவிதைகளைத் தந்திருந்தால் நமக்கு இன்னும் பல சிறப்பான கவிதைகள் கிடைத்திருக்கும்.

கல்வீச்சு

காலக் குளத்தே

நாளை நேற்றென்ற

அலையேன் புரள்கிறது?

இன்று எனும் கல்த் துளிகள்

வீசி விழுவதனால்

ஜென் கவிதைக்குரிய எளிமையும் ஆழமும் கொண்ட கவிதை. ’காவியம்’ கவிதையையும் இந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் இந்த கல்வீச்சு கவிதை இதற்குப் பிறகு இரண்டு பக்கங்கள் தொடர்கிறது. கவிதையை விளக்குவதாகவும் போதனையாகவும் நீள்கிறது. இந்த விவரிப்பு கவிதை குறித்து நல்லதொரு விளக்கமாக இருப்பினும் (தன் கவிதையை தானே விளக்குவதை பொதுவாக கவிஞர்கள் விரும்புவதில்லை), ஏற்கெனவே சொன்னபடி கவிதையில் இதை சேர்த்திருக்க வேண்டியதில்லை. இதே வகைப்பாட்டில் இதன் பின்வரும் குமிழிகள், பசி கவிதைகளையும் சேர்க்கலாம். ஆனால் பசி கவிதை இதையும் தாண்டி ஒன்றைப் பேசுகிறது.

பசி

சித்திரை முதல் நாள்

காலை

மேஷத்தில்

பரிதி உதிக்கப்

பார்த்தேன்.

பார்த்தவுடன்

கண்களை மூடிக்

கண்டேன்.

பரிதி

இமைகளின் செவ்விருளில்

பச்சையாய்த் துளிர்த்தது.

பசித்து மெலிந்த மேஷம்

-அதுதான், ஆடு-

துளிர்த்ததை மென்றது.

திடுக்கிட்டுக் கண்விழித்தால்

எங்கும்-வானெங்கும்

இருட்டு!

உதித்திருந்த

சூரியனைக் காணேன்! (1976)

இந்தக் கவிதை ஒருவகையில் யுவன் சந்திரசேகர் தமிழாக்கத்தில் வெளியான பெயரற்ற யாத்ரீகன் கவிதைத் தொகுப்பில் வரும் ஒரு ஜென் கவிதையை ஞாபகப்படுத்துகிறது. (வசந்தகாலப் புல்வெளியில்/வயலெட் பூக்கள் சேகரிக்க/நான் வெளியே/சென்றபோது, ஆனந்தமாய்/இருந்ததா, அங்கேயே/இருந்துவிட்டேன்,/இரவு முழுக்க). ஆனால் இந்தக் கவிதையில் தியானிப்பையும் தாண்டி பசி சொல்லப்படுகிறது. வருடத்தின் முதல்நாள் முழுக்கவே உணவின்றி கழிந்துபோவதைப் பற்றியும் சொல்கிறது. கடைசிவரியைப் பாருங்கள், ‘உதித்திருந்த சூரியனைக் காணேன்’. வருடத்தின் முதல் நாள் எத்தனை துயரமானதாய் இருந்திருக்கும்.

கவிதை பற்றிய கவிதையாக இன்னொன்று.

கவிதை

திமிங்கலம் பிடிக்க கப்பலேறி

கடல் நீரில்

குழி பறித்தேன்.

வந்து கவ்வி

வசப்படுமென்று

புலிக்கு இரையாய்

தூண்டிற்புழு தொங்கவிட்டு

மரத்திலே காத்திருந்தேன்.

தூண்டில் துளிர்த்து

இலையில் ஊர்ந்து

வசமாயிற்று

புயல்.

நீர் சுழன்று குழிந்து

பிடிபட்டது

பிரளயம். (1976)

திமிங்கலத்துக்கு எதற்கு குழி? புலிக்கு எதற்கு தூண்டில்? கவிதை இப்படித்தான் எங்கிருந்து எங்கோ எதற்கோ சம்பந்தமின்றி முடிச்சிடும். புறவுலகில் இதெல்லாம் அபத்தமாகப்படும். இதனால்தான் கவிஞனிடம் சிறிது பைத்தியக்காரத்தனம் எஞ்சியிருக்கிறது. பித்தனாக்குகிறது. கடைசியில் பிடிபட்டது என்ன? பிரளயம். பிரளயம் திமிங்கலத்தையும் பிடிக்கும், புலியையும் பிடிக்கும்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             அகங்காரம் நிலையானதல்ல. தன் கைமீறிப் போகையில் நொறுங்கியுடைந்து, பின் தன்னைச் சேகரித்து எழுப்பி புதுமுகம் தரித்துத் திரும்பக் கட்டமைக்க முயல்கிறது. வெளிப்படுத்துவதன் மூலமே அகந்தை வீறுகொள்கிறது. அகந்தை ஒன்றை ஆயிரமாகக் காட்டும் பெரும் பூதக் கண்ணாடி. அனுமன் ஓர் உந்தில் எழும்பி கடலைத் தாண்டுவதைப் போலத்தான். அகந்தை காலூன்ற ஓர் இடம் தேவைப்படுகிறது. சிலருக்கு புத்தி, தார்மீகம், நேர்மை, நியாயம். வேறு சிலருக்கு மண், பொன், அதிகாரம். உயிர் எவ்வாறு கருக்கொள்கிறது என்பதற்கு தமிழ் தரும் விளக்கம் ஐம்பூதங்களின் சேர்க்கை. ஒன்று பிரிந்தாலும் உயிரில்லை. ஐம்பூதங்களில் உயிர். உயிரில் ஆடும் நானெனும் அகந்தை.

(என்) பெயர்

பெயர்

அட்சர நிரை கலைந்து

கிரீச்சிடுகிறது.

என் அகரூபம்

முகமூடியை இழந்து

அழுகிறது.

அழுது ஓய்ந்து

மீண்டும் தன்

ரகஸியப் பட்டறையில்

முகம் புதுக்கிற்று.

முகங்கள்

முளைத்து முளைத்து

முடிகளாய் உதிர்கின்றன

விபரங்கள் விலகுகின்றன.

முதலில் நிலம்,

பிறகு நீர், தீ,

இதோ காற்று,

வெற்றுவெளி-இனி

பெயருக்கு மட்டுமா,

மருந்துக்குக் கூட

ஆளற்ற அந்தரம். (1976)

மேல் நோக்கிய பயணம்: (1977-82)

இத்தொகுப்பின் முதல்கவிதை மேல் நோக்கிய பயணம் என்ற தலைப்பிலானது. 39 பக்கங்கள் கொண்ட நெடுங்கவிதை. தனது இலக்கியப் பிரவேசம், வைதீக-இடதுசாரிய மனோபாவம், பிராமணீயம் இந்த இடர்களைத் தாண்டி தான் கண்டடைந்த மெய்மை என நீள்கிறது இக்கவிதை. ந.பிச்சமூர்த்தி, வெ.சா., ஞானக்கூத்தன் மற்றும் கோட்பாட்டாளர்களை எள்ளலுடன் விமர்சிக்கிறார்.  ஏற்கெனவே அவரது விமர்சனக்கவிதையில் இதே கூறினைக் கண்டபடியால் இக்கவிதை வாசிக்கச் சோர்வூட்டுகிறது. ஆனால் இக்கவிதையின் துவக்கமும் இறுதி மூன்று பக்கங்களும் தழல்போல் எரிகின்றன. இதில்தான் அவரது கொண்டாடப்படும் வரி ‘கணத்தின் மொக்கவிழ்ந்தால் காலாதீதம்’ வருகிறது. இறுதிப்பக்கங்களிலிருந்து இரு பத்திகள்:

உனக்கும் எனக்கும்

இடையே நிமிர்ந்த

காலங்கள் தலைகவிழ

வாடாத புத்துணர்வின்

மொக்கு முளைத்தது.

காலா காலங்கள்

எத்தனை ஆனாலும்

ஓயாது உணர்வின் இப்

புத்தொளி நரம்பு

ஊடுருவும் பேருறவு.”

ஒருவரைப் பார்க்கும்போது அவருக்கும் நமக்குமான தூரம் எவ்வளவு? இன்னொருவருக்கும் நமக்குமான உறவு காலத்தால் அளக்கப்படுகிறது. காலத்தில் பதிந்த நினைவுகள். இது இல்லாவிட்டால், எல்லோரும் சமம். எப்போதும் புத்தொளி ஊடுருவும் பேருறவு. ஆர்க்கிபால்ட் மேக்லீஷின் ’ஒரு கவிதை எப்படி இருக்கவேண்டும்’ எனத்தொடங்கும் கவிதை பிரபலமானது. இந்த நெடுங்கவிதையில் ஓரிடத்தில் பிரமிள் கவிதை எப்படி எழுத்தாகவேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

“கவிதை எழுத

வாழ்வினூடே

ஓடும் தர்க்கத்தின்

இழையை உணரும்

திறன் வேண்டும்.

அதன் விளைவு

தார்மீக உணர்வாகி

வீர்யத்தின் உலையில்

உருகிப் பிழம்பின்

நிலையை எய்திப்பின்

எழுத்தில் வரவேண்டும்.

எதுவும் நினைப்பதுபோல நடப்பதில்லையெனினும், நிச்சயமற்றது வாழ்வு எனினும், தன்னுணர்வு இதன் தர்க்க இழையை உணரச் செய்யும். அதன் விளைவாக ஏற்படும் சுய கட்டமைப்பு கணந்தோறும் புறவுலகமும் அகவுலகமும் ஊடாடுதலில் தெளிவுற்று, தன்னுள் உயிர்ப்பாகத் திகழும் பிழம்பின் நிலைக்குச் சென்று அங்கிருந்து பிறப்பதுவாய் இருக்கவேண்டும் கவிதை என்கிறார். அவரது கீழ்க்கண்ட கவிதையில் மேற்கண்ட கூற்றை உணரலாம்.

உள்முரண்

அலைகளின் சொல்தொடர்கள்

செவிட்டு மண்கரையில்.

காற்றின் யாத்ரையை

கண்தொடர்ந்தால்

விழிப்பின் நடையை

தடுக்கி விழுத்தும் மண்துகள்.

தீயின் தெளிவினுள்

இமைவிழும் சாம்பல். (1977)

இந்தக் கவிதையைப் பற்றி உரையாட அலாதியான விருப்பமெழுகிறது. ஆனால் கூடாது. அது சொற்களாக இல்லாமல் இன்னொருவர் வாசித்து புரிந்துகொண்டதற்கு அடையாளமாக சமிக்ஞை தந்தாலே உரையாடப்பட்டதாக அர்த்தம்.

உயிர்களுக்கு அறிவு எத்தனையாயினும், அவற்றுக்கான இயற்கை நியதி ஒன்றே. மண்ணில் தரித்திருத்தலும், இனப்பெருக்கமும். இது ஜடத்தைப் பிணைக்கும் மாபெரும் சக்தி. இந்த சக்தி மடைமாற்றமடைவதில்தான் புதுமையும் மனிதகுல வளர்ச்சியும் அடங்குகிறது. இதன் உச்சமாக ஞானமடைதல் எனும் ஆன்ம விழிப்பு. இது ஒருவகையில் அணுப்பிளப்புக்கு இணையானது. மேல் நோக்கிய பயணத்தின் பெரும்பாலான கவிதைகள் புறக்காட்சிகளைப் புரட்டிப்போட்டு வேறொரு கோணத்தில் காட்டுகின்றன. அவற்றுக்கிடையில் உணர்வு நரம்புகள் மின்னலைப் பாய்ச்ச காட்சிகள் வேறொன்றாக மாறுகின்றன. உள்ளேயுள்ளே என அழைத்துச் செல்லும் வரிகள். கவிஞனின் பார்வையற்று வரிகளைக் கடக்கலாம் ஆனால் ஒரு கவிதையைக் கூட வாசித்துவிட முடியாது.

நான் என் கவிதைகளின் மூலம் மெட்டாபிஸிக்சை உருவகப்படுத்துகிறேன். நான் புதுமையான எல்லா எண்ணங்களுடனும் எனது சிந்தனைகளுக்குத் தெளிவு கிடைப்பதற்காகப் போராடுகிறேன் . இந்த மல்யுத்தம் தான் எனக்கு காவிய ரசனையையும் அளித்தது .நான் ஒரு புதுமைக் கவிஞராக ஆவதற்கோ ,சர்ரியலிஸ்டிக் கவிஞராவதற்கோ கவிதை எழுதவில்லை . நான் என்னையே தேடிச் செல்கிறேன் . இத்தேடலில் தான் என்னுடைய சாராம்சம் உள்ளது. தேடலின் போதுநான் நடந்து செல்லும் பாதை கவிதையினுடையது” என்கிறார் பிரமிள். மெட்டாபிசிக்ஸ் வெளிப்படும்விதம் எப்படியெனில், உதாரணமாக வீட்டை எடுத்துக்கொள்வோம். வீடென்பது பாதுகாப்பானது; வெளியை மொத்தமாய் மறைக்கும் சுவர்கள் கொண்டது; சுவர்கள் நம்மை அழுத்திக் கொண்டிருக்கின்றன; கண்காணிக்கின்றன; இப்படி மனநிலைக்குத் தக்க அதன் உருவம் மாறியபடியுள்ளது. அவற்றுக்கு குணாதிசயத்தை நாம் கற்பிக்கிறோம். ஒரு பொருள் அல்லது ஒரு நினைவு தனித்திருப்பதல்ல. அது வேறொன்றை நினைவுபடுத்துவதாய் உள்ளது. இந்த நினைவுகள் உணர்வுகளோடு தொடர்புடையன. நினைவும் உணர்வும் சேர்ந்து மேலும் மேலும் இழுத்துச் செல்லும் வடிவத்தைக் கொண்டது மெட்டாபிசிக்ஸ் வகைக் கவிதைகள். உரூப மயக்கம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு என மாறியபடியே செல்வது. 

இந்தத் தொகுப்பிலுள்ள ‘பசுந்தரை’, ’மோஹினி’ கவிதைகள் பாம்புகள் பிணைந்து புணர்வதுபோல இறுகித் தளர்கின்றன. ’கிருஹஸ்தன் வயோதிபனாகிறான்’, ‘முதல் முகத்தின் தங்கைக்கு’, ‘ரஸவாதம்’ தலைப்பிலான கவிதைகள் இழந்த காதலின் நினைவும், ஏக்கமுமாக வெளிப்படுகின்றன.

மோஹினி

‘உனக்கே

உனக்கு நான்’ என

சப்தித்த நின்

பார்வைகள்

உன் முகம் நீங்கி

எட்டாத

நிலவாயிற்று.

வக்கரித்துத்

தரையில்

இலைப்பார்வை

பரப்பிற்று.

வழிதொறும்

நிழல் வலைக் கண்ணிகள்

திசை தடுமாற்றும் ஓர்

ஆயிரம் வடுக்கள்.

வேதனை வேர்

நரம்பெழுந்து

மூடியது கானகம்.

எதிரே

தலைமயிர் விரித்து

நிலவொளி தரித்து

கொலு வீற்றிருந்தாள்

உன் நிழல்.

என் மன விகற்பத்தின்

வெண் இருள்

நிழலை வளைத்து

துளி வேல்கள் ஏந்தின

கருநீல முட்கள்.

உயரத்தே ஒரு கணம்

பார்வையைப்

பறிகொடுத்து

ஊளையிட்டது நிலவு.

அது கணம்

வெண்நிழல்

அழைத்தது.

அணுக

அவளை என்

பாதங்கள் துணிந்து

அணுகக் கருநீல

வேல் நுனிகளில் என்

உதிரத்தின்

மலர்ச் செம்மை.

முட்கள்

மொக்கவிழ்கின்றன.

விரிகிறது

இதழ் வேளை.

ஊன்றி எடுத்த என்

பாதத்தில் ஊறி

உதிரத்தில் ஒலித்ததுவோ

நிலவின் விஷ ஊளை.

நாநுனி தவித்து

துளியளவு தீண்டி

பதிவுகள் தொடர

திசையறும்

வெண் இருளில்

ரகஸியக் கிணறு.

அதில் எரிகிறது

ஈரநெருப்பு.

குனிந்து பறந்து

கீழ்நோக்கி

எழுகிறேன்.

தத்தளித்து

தாகம் தணித்த

நீர்வெளி

பாறையாய் இறுகி

என் புதைவை

சிறையிடுகிறது

கல்பீடம் ஆகிறது.

நிலவின் ஊளை

வெளிறி

பலிசிந்தி வீழ

அவளது தந்தங்கள்

வெறிக்கின்றன.

ஓ! என்

பணிவுகளை உறிஞ்சும்

பலி பீடமடி நீ!

பசிதணிந்து

பசிகொண்டு

பாறை தளர்ந்து

தசை வெளியாய்

தத்தளித்து

பசியேற்றி

அசைகிற சுழலே,

இன்று கொட்டும்

இருளின் தமுக்கில்

நம் இருவர் தசைகளில்

தீராத

தினவுகள் அடியே! – (1979)

உனக்கே உனக்கு நான் என சப்தித்த நின் பார்வைகள், உன் முகம் நீங்கி எட்டாத நிலவாயிற்று – காதலைச் சொன்ன பார்வைகள் நீங்கி எட்டாத உயரம் போயிற்று. அந்தப் பார்வைகள் தரையில் சிதறிக்கிடக்கும் இலைகளில் வெறிக்கின்றன. நிலவொளி மங்கித் தெரிகிறது அவற்றில். ஆனால் சூரிய ஒளியைப் போன்றதல்ல நிலவொளி. ஒளியைப் பார்க்கிறோமா, நிழலை நோக்குகிறோமா என்றொரு மயக்கத்தை ஏற்படுத்தக்கூடியது அப்பால்வெளி. அவற்றைத் தொடர்ந்தால், சிறைபிடிக்கும் நிழல் வலைகள். தேடலை திசைமாற்றும் வடுக்கள். காதலியில் சாயலைத் தேடுவதையே இவ்வரிகள் சொல்கின்றன. அவளது நினைவை மறக்கச் செய்யும்படியான திசை தடுமாற்றங்கள். வடுக்கள் பிற பெண் இடைவருகைகளைச் சுட்டுகிறது (யோனி எனவும் அர்த்தம்). வேதனை வேர் பரவி கானகமாய் மூடிக்கொள்கிறது. எதிரில் காதலியின் நிழல் நிலவொளி தரித்து வீற்றிருக்கிறது. இங்கே மன விகற்பத்தின் வெண் இருள் என்று வருவது பின் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை கவனிக்க வேண்டும். காதலியின் நிழலை மனதின் மறைவுப் பகுதியின் ‘வெண் இருள்’ தழுவுகிறது. தழுவுவதன் நோக்கம் கருநீல முட்களைக் கொண்டு குத்துவதற்கு. நிலவு வான் நோக்கி ஊளையிடுகிறது (நிலவு – காதலி மீது கொண்ட காதலாக அர்த்தமாகிறது). அக்கணத்தில் அழைக்கிறது வெண் நிழல். இது நிலவின் நிழல். அவளை அணுகும்போது கருநீல முட்களின் நுனிகள் எங்கும் காதலனின் உதிரத்துளிகள். முட்கள் மொக்கவிழ்கின்றன. இதழ் விரிக்கும் வேளை என்பதற்குப் பதில் கவிஞனின் சொற்சிடுக்கைப் பாருங்கள், ‘விரிகிறது இதழ் வேளை’. முட்களின் கூர் நுனிகளில் மொக்கவிழுமா? அவை காதலியைக் குத்தவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நாநுனி தவித்து துளியளவு தீண்டி பதிவுகள் தொடர திசையறும் வெண் இருளில் ரகசியக் கிணறு – காதலியின் நிழலின் இரகசியக் கிணறு. அதன் ஈர நெருப்பு. தத்தளித்து தாகம் தணித்த நீர்வெளி பாறையாய் இறுகி என் புதைவை சிறையிடுகிறது; கல்பீடம் ஆகிறது – புணர்ச்சியைக் குறிக்கும் வரிகள். கவிதைக்கு இப்படியெல்லாம் பொழிப்புரை தரக்கூடாது. ஆனால், பிரமிளின் அற்புதமான வரிகளைக்கூட கவிதையின் அர்த்தம் புரியாமல் பெரும்பாலானோர் தவறவிட்டு விடுகின்றனர் என்பதற்காக செய்ததாகக் கொண்டு பிழை பொறுக்கவும். இதைச் சொல்லும் நேரத்தில், இதையே சாக்காக வைத்து  கவிதை புரிந்ததுபோல் பாவ்லா காட்டி மேற்பூச்சு காட்டுபவர்களையும் நினைக்க வேண்டியிருக்கிறது.

இந்தத் தொகுப்பில்தான் ‘வண்ணத்துப்பூச்சியும் கடலும்’ (1980) வருகிறது. அவரது ’மண்டபம்’ என்ற நீள்கவிதை மெட்டாபிசிக்ஸ் வகைக் கவிதைக்கு இன்னொரு நல்ல உதாரணம். இந்தக் கவிதை ஓர் அசையும் சித்திரம்போல், குறு நாடகம் போல் காட்சியளிக்கிறது. இந்தக் கவிதை பாழடைந்த மண்டபத்தில் தொங்கும் வௌவால் போல முதலில் தோன்றினாலும், வேறொரு கனவுலகத்துக்கு இழுத்துச் செல்கிறது. ‘மேல் கீழாய் மண்டபத்தரையில் எல்லையற்று வெளித்தது ஆகாயம்’. வெளித்தது எத்தனை அற்புதமான வார்த்தை. நட்சத்திரங்கள் கீழே தெரிகின்றன. அதில், ‘எல்லையின்மையின் அசைவற்ற சிறகுகளில் வைரத் தூசிகளாய் கோடானுகோடி பெருவடிவச் சூரியர்கள்’. அங்கே மண்டபத்தில் பெண் குரலொன்று நகைக்கிறது. ‘பார்வைக்குப் பின்புறமே பிரஸன்னமாகி நான் திரும்ப எந்தன் விழி வளைவின் மறுபுறத்திற்கு ஓடி நினைவின் பின் பதுங்கி பரிகசிக்கும் பெண் சிரிப்பு.’ எப்போதும் நமக்கு முன் இருப்பதைத்தான் நாம் பார்க்கிறோம். பார்வை என்பதன் பின் இருப்பது நாம்தான். முன் தெரியும் அரைக்கோளத்தின் பின்கோளத்தில் இருப்பதென்ன? நான் என்று சொல்லுமிடத்தை நாம் பார்க்கமுடியாது. கவிதையில் அங்கே அந்த விழி வளைவின் மறுபுறத்திற்கு ஓடி…ஓடினால் உள்ளே நினைவுகளைத்தவிர என்ன இருக்கும், அங்கே சிரிப்பது ஒரு பெண். ‘யார் நீ? என்றேன். நீ முளைத்த நாளன்றே முளைத்துன் முகத்திசைக்கு எதிர்த்திசை நோக்கி விழித்திருப்பவள் என்றாள்.’ இந்த இடத்தில் உள்ளூர ஒரு சிலிர்ப்பு ஓடவேண்டும். நமக்கு நடுவிலிருந்து நேர்பின்னே இன்னொருவர் இருந்து பின்னே பார்த்தபடியிருந்தால் எப்படியிருக்கும்? அதுவும் எதிர்பாலாக. இங்கே கவிதை வேறொரு தளத்துக்கு நகர்கிறது. யின்-யாங். இங்கே பெண் என்பவள் வெற்றிடமாக, தேடவேண்டியதன் குறியீடாக இருக்கிறாள். ஒருபாதி தன் முழுமையைத் தழுவுதல் புணர்ச்சியாகக் கவிதையில் உருப்பெறுகிறது. ‘வியூகத்துள் வியூகம் கூடி குரல்களுள் குரல்கள் பொழிந்து திரைமுகம் உறைந்து ஜலத்தின் அலையாடா பளிங்கு பிறந்தது. பிரதிபலித்தது அங்கே நானோ அவளோ அற்று உருவம் இருந்தாற்போல் ஏய்த்து உருமீறி திசைகலங்கிப் புலனொடுங்க குரலற்று உறுமும் பெயரற்ற மிருகம்.’ டிராகன், சீன வானியல், கழுகு யின்-யாங் இப்படி குறி நீக்கம் செய்வது கவிதையின் அழகைக் கெடுக்கும் செயல். அதைத் தவிர்த்து கவிதை மொழி தரும் பயணத்தை அனுபவித்து மீள்வதே வாசகர் செய்யவேண்டியது.

நீரகம்

கலங்கியது நீரல்ல

கண்காணா நுண்மை

கையளவாய் தெரியும்

கருவியினுள் ஒரு

கிருமியின் தவிப்பில்

அசைந்தது நீரல்ல

அசையாத மலை

மலைநுனியில்

உதித்தெழுந்தது கரு

கருவின் கண்ணினுள்

கலங்கியது கல். (1981)

ஓஷோ, யோகி ராம்சுரத் குமார் போன்றோர் பக்தர்களை குறிப்பிட்ட புள்ளிகளில் தொட்டதும் தன்னிலை மறந்து துடித்துத் தவிப்பார்கள். அவர்கள் உடல், முக பாவனையைப் பார்த்தாலே அதை நாம் உணரமுடியும். இந்தக் கவிதை அதுபோன்றதாகச் சொல்லக்கூடாதெனினும், நம் கண்பாவைகளைப் பிடுங்கியெடுத்து சுத்தப்படுத்தி வைத்ததுபோலொரு அனுபவத்தைத் தருவது. நீர் உருவமற்றது. நீரைப் பார்க்கும்போது உண்மையில் நாம் எதைப் பார்க்கிறோம்?. நீரின் அகத்தையே.

குறுமணல், கூழாங்கல் மீது படர்ந்திருக்கும் தெள்ளிய நீர்.

திடீரென ஓர் கலங்கல்

காரணம் நீரா? நீர் தானாக அலைவுறாது.

நுண்ணோக்கியில் மட்டுமே காணக்கிடைக்கும் ஒரு கிருமியின் தவிப்பு

அதில் அசைந்தது நீரா? இல்லை, நீருக்குள் தெரியும்/கிடக்கும் அசையா மலை. அம்மலை நுனியில் உதிக்கிறது ஒரு கரு. கருவின் கண்ணில் கலங்கியது கல்.

இதேபோன்றதொரு அனுபவத்தைத் தருவது இதற்கடுத்ததாக வரும் தியானம் என்ற தலைப்பிலான கவிதையும்.

கடல்நடுவே ஒரு களம்: 1985-86

விடுதலைப் புலிகளுக்காக பிரமிள் பல கட்டுரைகள் எழுதித் தந்துள்ளதோடு மொழிபெயர்த்தும் தந்துள்ளார். மார்க்ஸிய விமர்சனம் (மொழிபெயர்ப்பு), ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை போன்றவை முக்கியமானவை. விடுதலைப்புலிகள் நடத்திவந்த இதழில் கவிதைகள் எழுதியுள்ளார். 1985 காலகட்டத்தில் அவர் எழுதிய இக்கவிதைகள் யுத்தகளத்தில் வீறிட்டு அலறும் போர்க்குரலாக வரிகளில் தெறிக்கின்றன. விடுதலைப் புலிகளின் தலைமை கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழீழத்துக்கான தேசியகீதத்தை எழுதித் தந்தார். அது விடுதலைப் புலிகள் இதழில் வெளியானாலும் தேசியகீதமாக பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. விடுதலைப்புலிகளின் மாணவர் குழுவினரால் நடத்தப்பட்டுவந்த எதிர்முனை என்ற இதழ் பின்னர் புதுயுகம் என்று பெயர் மாற்றப்பட்டது. பிரமிள் சு.ரா. & குழுவினரால் ஓரம்கட்டப்பட்டார்.

தெற்குவாசல்: 1985-93

இத்தொகுப்பில் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என கலவையாக பிரமிள் காலத்துக்குப் பின்னால் வெளிவந்திருந்தது. பிரமிள் கவிதைகளில் ஜென் கவிதைகளுக்கான உட்கூறு அதிகமுண்டு. ஆனால் வெளிப்படுத்தலுக்கான மொழி மெனக்கிடல் அவரிடம் இல்லாததினால் சட்டென அடையாளம் காண முடிவதில்லை. கவிதையை நெருங்க நெருங்க அது ஏற்படுத்தும் அதிர்வுகளும் திறப்புகளும் மௌனத்தையும் வியப்பையும் நோக்கி நம்மை நகர்த்துகின்றன. அங்கே அதைத்தவிர ஒன்றுமில்லை. ஆனால் கட்டுரைகளைப் பொருத்தவரை பிரமிள் தமிழில் யாருக்கும் கைகூடியிராத மிகக் கூர்மையான மொழியைக் கொண்டிருக்கிறார். கவிதைகளில் அவ்வாறில்லை. அதில் மரம் செடி கொடிகளை நொறுக்கியபடி நகரும் காட்டுவிலங்காக ஓடிவருகிறது. ஆனால் மீபொருண்மைக் கவிதைகள் இந்த வகையைச் சேர்ந்தவையல்ல. இதை மிக எளிய கண்ணுக்கெட்டும் குற்றச்சாட்டாக எழுத்தாளர் ஜெயமோகன் போன்றோர் முன்வைக்கின்றனர். பிரமிள் இவ்வாறு சொல்கிறார்,

கலை உணர்விற்கும் மனித குணத்திற்குமிடையே உள்ள தொடர்புகளை, எளிமைப்படுத்திவிட முடியாது. ஏனெனில், கலைஉணர்வு – மனசின் சில விஷேச உணர்வுகளை மட்டும் கூர்மையாக்குவதன் மூலம் – ஒரு மேல்தோல் பயிற்சியளவிலேயே சித்திக்கக் கூடியது. இந்தப் புறச்சித்திக்கும், அகதர்சனத்தைச் சார்ந்த விழிப்பின் விளைவான கவித்வத்துக்கும், சாயல் அளவில்தான் ஒற்றுமை உண்டு. கலையின் புறச்சித்தியை, சித்தாந்தவடிவுகள் மூலம் நிர்ணயிக்க முடியும்; அக தர்சனத்தின் விளைவான கவித்துவம், சித்தாந்தபூர்வமான அழகியலின் தர்க்கங்களுக்கு இசைவு காட்டினாலும்கூட, தன்னளவில் அது செயல் வடிவாக மனசை இயக்குகிற ஒன்று என்ற அளவில் வேறுபட்டது; அதாவது, அகதர்சனப் பண்பு உள்ளவனுக்கு அழகு என்பது ஒரு இயல் அல்ல, அனுபவம். இதையே செயல்வடிவம் என்கிறோம். ஆனால் இந்த அனுபவத்தைப் பிறருக்குத் தொற்றவைப்பதற்கான மொழி முதலிய கருவிகளை ஆள்வது அழகியல். இந்தக் கருவிரீதியான இயலையே, மேல்தோல் அளவான பயிற்சி என்கிறேன். பெரும்அளவுக்கு அழகினை ஒரு இயலாகப் பயில்கிறவர்களே, அதன் சகல பரிமாணங்களையும் ஆதர்சிப்பவர்களாகப் புரிந்துகொள்ளப்படுகிறார்கள். இது உலகெங்குமே கைக்கொள்ளப்படும் பிறழ்வு.

அழகை அதன் இயல்வடிவில் அன்றி, செயல்வடிவில் – அக தர்சனப் பண்பின் அனுபவதளத்தில் – உணரும்நிலை, அருள்வசப்பட்ட மனோநிலை ஆகும். இத்தகைய அருளாளர்கள், அழகின் இயல் வடிவான வெளியீட்டுமுறைகளைப் பற்றிப் பெரும்பாலும் அலட்சியமாகவே இருப்பார்கள். ஏனெனில், அவர்களது அனுபவவெளி எல்லையற்றது; வெளியீட்டுக்கருவியின் அணுப்பிராந்தியத்தினால் அளவிடப்பட முடியாது; வெளியீட்டின் ஆதாரமான மனோபாவங்கள் ஒவ்வொன்றையும், பரிபூர்ணமாக நிராகரித்த நிலையில் பெறப்படுவது.”  

கீற்று

நடுஇரவு உடைகிறது

இருபுறங்களிலும்

நாங்கள் நாங்களென

உடைந்து அகல்கின்றன

நாதியற்ற

நாய்களின் ஊளைகள்.

இரவின் மையத்தில்

காலக் குரைப்பற்ற

கணத்தின் கீற்று.

இருளின் தளத்தில்

முதல் முடிவு இல்லாத

பேரிருள் ரேகை.

ஊடே

ஒரே ஒரு

நக்ஷத்ரத்தின்

தானற்ற வெண்மை-

துயிலற்ற மௌனம். (1985)

இது பழையபாணி வியாக்கியானக் கவிதையானாலும், அவரது இயல்பான ஆன்மீகத்தளத்துக்கு நெருக்கமானது. விடியற் கருக்கலைப் பாடுகிறது. நாதியற்ற நாய்களின் ஊளைகள் இருபுறமும் விலக கீற்று தெரிகிறது. இந்த ஊளைகள் மனதின் அதுவரையிலான இரவுக் கூச்சல்களைச் சொல்கிறது. அடுத்த பத்தியில் ‘காலக் குரைப்பு’ என்றொரு வரி. காலமே மனம். கடைசி பத்தியைப் பாருங்கள். ‘ஊடே ஒரே ஒரு நக்ஷத்ரத்தின் தானற்ற வெண்மை’. நக்ஷத்ரத்துக்கு உருவுண்டு அளவுண்டு குணமுண்டு. ஆனால் அதன் ஒளிர்வு தானற்ற வெண்மையாய் வீசுகிறது. அருட்பெருஞ்சோதி. கடைசிவரி துயிலற்ற மௌனம். இதை இருவகையில் பொருள் கொள்ளலாம். இரவெல்லாம் தூங்காது விழித்திருந்தவனின் மன ஊளைகள் நின்று மௌனிக்குமிடம். இன்னொன்று அந்த நக்ஷத்ரத்தின் துயிலற்ற மௌனிப்புத் தன்மை. ஆனால் இந்தக் கவிதையைவிட ஜென் கவிதைக்கு நெருக்கமாய் இருப்பது ’தவளைக் கவிதை’ (1986). இந்தக் கவிதையைப் பற்றி விவரிக்கக்கூடாது. வாசிக்கமட்டும்தான் முடியும் (எந்த ஜென் கவிதையையுமே).

மௌனியைக் குறித்து ஒரு கவிதை (1986) இத்தொகுப்பில் உள்ளது. மௌனியைப் பற்றி அவர் பேசியவை அனைத்தின் பின்னாலும் ஓர் அங்கலாய்ப்பு எப்போதும் உண்டு. மௌனியும் தானும் ஒன்று என்றே கருதியவர். சொல்லப்போனால் பல இடங்களில் எழுத்தாளுமை, படைப்பு மன நிலை குறித்து அவர் விளக்க முயன்ற இடங்களில் மௌனியின் குணவேறுபாட்டையே உதாரணமாக்கிக் கொண்டாரோ என்றே தோன்றுகிறது.

அழகிய சிங்கர், விருட்சம் இதழை 1989ல் இருந்து தொடர்ந்து நடத்திவருகிறார். பிரமிளுடன் அறிமுகம் உண்டு. பிரமிளும் விசிறிச்சாமியாரும் என்று ஒரு புத்தகம் சமீபத்தில் எழுதி வெளியிட்டுள்ளார். மிக மோசமாக எழுதப்பட்ட ஒன்று. வயதான பெரியவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதுபோல பக்கங்களை நிரப்பியிருக்கிறார். ஆனால் அவரிடம் ஒரு நேர்மை உள்ளது. அவரது பிளாக்கில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்,

“பிரமிள், கவிதை மூலம் யாரையாவது திட்டி எழுதியிருந்தால், அதைப் புரிந்துகொள்ளாமலேயே நான் பிரசுரம் செய்திருக்கிறேன்.  ஒரு முறை முதல் இதழ் விருட்சத்தில் நான் பிரமிளை கவிதை தரும்படி கேட்டேன்.  அவர் ஒரு கவிதையை  மனசிலிருந்து சொல்ல  என்னை எழுதச் சொன்னார்.  அந்தக் கவிதையின் பெயர் கிரணம். அவர் சொல்லச் சொல்ல நான் எழுதினேன். இந்தக் கவிதையை முதல் இதழ் வெளிவந்த விருட்சத்தில் நான் பிரசுரம் செய்யவில்லை.  இந்தக் கவிதை மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.  மேலும் விருட்சத்தைக் கிண்டல் செய்ய இதை எழுதி உள்ளார் என்று அப்போது நினைத்தேன்.  ஆனால் பின்னால் பிரமிள் எழுதிக் கொடுத்த கவிதைகள் எல்லாவற்றையும் நான் பிரசுரம் செய்தேன். இந்தக் கவிதையையும் பின்னால் வந்த விருட்சம் இதழில் பிரசுரம் செய்தேன்.” (இதை புத்தகத்திலும் copy+paste செய்துள்ளார்)

1989ல் கொடுத்த கவிதையை இரண்டு வருடங்கள் கழித்து பிரசுரித்திருக்கிறார். எத்தனை நுண்ணுணர்வு கோரும் கவிதை இது. ஒரு பொது இடத்தில் அமர்ந்தபடி வரிவரியாக வாசித்துச் சொல்லியிருப்பது சாதாரண நேரத்திலும் அவரது மனவெளி உலவும் தளம் பிரமிப்பூட்டுகிறது.

கிரணம்

விடிவுக்கு முன்வேளை

ஆகாயத்தில் மிதக்கின்றன

நாற்காலி மேஜைகள்.

ஊஞ்சல் ஒன்று

கடல்மீது மிதக்கிறது.

அந்தரத்து மரச் சாமான்களைச்

சுற்றிச் சுற்றிப் பறக்கிறது

அசரீரிக் கூச்சல் ஒன்று.

சிறகொடிந்து கிடக்கிறது

ஒருபெரும் கருடப் பட்சி.

கிழக்கு வெளிறிச்

சிவந்து உதித்த

மனித மூளைக்குள்

வெறுமை ஒன்றன்

இருட்குகை.

குகைக்குள்

கருடச் சிறகின்

காலைவேளைச் சிலிர்ப்பு.

ஆகாயத்தில் அலைமேல் அனல்.

மௌனித்தது

அசரீரிக் குரல் (1991)

கவிதையின் தலைப்பு கிரணம். இது விடிவுக்கு முன்னான இருளைக் குறிக்கிறது. அவ்வேளையில் நாற்காலியும் ஊஞ்சலும் அந்தரத்தில் பறக்கின்றன. அசரீரியை கூச்சல் என்கிறார். கருடபட்சி சிறகொடிந்து கிடக்கிறது. ஆனால் விடிந்ததும் மௌனிக்கிறது அசரீரி. கருடச்சிறகு சிலிர்க்கிறது. ஆகாயத்து அலைமீது படர்கிறது அனல். கணநேர சபலத்தை இக்கவிதை சொல்கிறது. அந்த அலைமீது படரும் அனல் தன்னொழுக்கம், தானென்ற வீர்யம். ஆனால் 1993ல் மீறல் இதழில் வெளியான கிழக்குமுகம் குறுங்காவியக் கவிதையில் 6வது எண்ணிட்ட கவிதையில் இக்கவிதையின் உட்கூறுகள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கிழக்குமுகம் கவிதையை வாசிக்கையில் அது வேறொரு தளத்தில் இயங்குவதை உணரமுடிகிறது. அந்த கவிதை கீழே:

“இருள் வாய் ஒன்றுக்குள்

உடைந்து கொண்டிருக்கிறது

உதயவேளை.

வானில் கடலின்

முகடு முட்டும்

கோடு தாண்டி

கிழித்த உடல்கள்

மிதக்கும் அந்தரம்.

அந்தரத்தில் இன்று

அது என்ன?

ஆளற்ற நாற்காலி!

பின்னணியில் ஒரு மேஜை.

முன்னணியில்

புரண்டு தத்தளிக்கும்

சமுத்திர ஊஞ்சல்.

‘ஏ,ஏ, ஏன், யார்,

நான்?’ என்றெழும்

அசரீரிக் கேவல்கள்.

ஊஞ்சலில் ஊர்கின்றன

சமுத்திர மடிப்புகள்.

ஆகாயத்துக்குள்

கிழித்த கோட்டுருவ

நாற்காலிப் பீடத்தில்

நீர், தீ, நிலம், காற்று-

அசைவற்ற ஒன்றனுள்

சுழன்றோடும் நான்கு;

ராகுவின் வாய்க்குள்

நான்கினுள் ஒன்று

பரிதீக் கங்கு.”

கிழக்குவாசல் கவிதை அணுக்கமாக கிரணம் கவிதையோடு தொடர்புடையது.

இந்தக் கவிதைகளுக்கெல்லாம் நடுவில் அவரது விமர்சனக் கவிதைகள் பெரும் இடைஞ்சலாய் இருப்பதை மறுப்பதற்கில்லை. இவற்றைத்தான் கட்டுரைகளில் பேசிவிட்டாரே, பிறகு ஏன் கவிதைகளிலும் எழுதவேண்டும் என்ற ஆயாசம் ஏற்படுகிறது. பிரமிளின் விமர்சனங்களுக்குப் பின்னால் இருப்பது தன்மெய் விசாரம். படைப்பு என்பதில் உயிர்ப்பும் அதன் ஆதாரத்தை நோக்கிய பார்வையும் தேடலும் இருக்கவேண்டும். இது எதுவுமற்ற ஒன்று எப்படி இலக்கியமாகும்? இதன் சாரமே விமர்சனக் கவிதைகளிலும் உட்கூறாய் வெளிப்படுகிறது. ஏற்கெனவே வெளிப்படுத்தும் பாணியில் சிறிதும் அக்கறையற்றவர் என்பதால் இவற்றை தள்ளி நின்றே காணமுடிகிறது. உதாரணமாக ‘தத்துவமோதல்’ கவிதையிலிருந்து சில வரிகள்,

“கருத்துமுதல் இயங்கு இயல்

கஸ்மால ஜாதியம்

மார்க்ஸியச் சடுகுடு

ஸ்ட்ரக்சுரலிஸக் கபடி

இத்தனைக்கும் நடுவே

ஹய் ஹய்யா ஹோ ஹோமோ

மைதுனத்தின் நாடகமும்.”

இதே கவிதையில் விக்ரமாதித்யனை சாடியும் வரிகள் விழுகின்றன.

“செத்துப்போனான்

புதுமைப்பித்தன்

நிக்கேன் இங்கே

என் கவிதைக்கு

எடுபுடி விமர்சனம்

எங்கே என்றபடி.

எப்பேர்ப்பட்ட

இலக்கியத் தத்துவம்

இது என்று வியந்து

அவரைப் பார்த்தால்,

இடுப்பு வேட்டி

தெருவில் உரிந்து

இறுதிக் கவித்வமாய்

தெரியுது ஜட்டி”

கவிஞர் விக்ரமாதித்யனுடனான ஒரு சந்திப்பில் அவருடன் எனக்கேற்பட்ட சிறு வாக்குவாதம் ஞாபகத்துக்கு வருகிறது. எதற்கு மொண்ணையான கவிதைத் தொகுப்புகளுக்கு எல்லாம் முன்னுரை எழுதுகிறீர்கள், உங்கள் கட்டுரைகளில் நீங்கள் சிலாகித்துப்பேசும் நிறைய கவிதைகள் படு தட்டையானவை, இப்படி எதற்குச் செய்யவேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தேன். கடைசியில் அவர் கோபம் கொண்டு, ‘யாருலே இவன், என்ன சாதிலே நீ?’ என்றார். எனக்கு சிரிப்பாக இருந்தது.

விமர்சனக் கவிதைகளோடு சேர்ந்த கிசுகிசுக் கவிதைகள் இதைவிட கூடுதல் ஆயாசமளிப்பவை. இந்தக் கவிதைகளின் பெறுமதிப்பு அந்த மிகக்குறுகிய காலகட்டத்துக்கானது மட்டுமே. உதாரணமாக,

எந்துண்டி வஸ்தி?

‘நில் போ வா’

என்பதை எழுதிக் கீழே

கையெழுத்து வைத்து

அனுப்பினார் சகா

தேவனின் சகோ

தர நாமி.

இதைக் கவிதை என்று

போட்டுவிட்டது தன்

இலையிலே ‘மரம்’.

‘இதையே

எழுதியது யாரோ

ஏழுமலை ஆறுமுகம்

என்றால் ‘மர’ இலையில்

வருமா இது?’ என்றேன்

பதில் இல்லை இன்னும். (1986)

சகாதேவனின் சகோதர நாமி – நகுலன்; இலையிலே மரம் – விருட்சம். விமர்சனக் கவிதைகளோடு சேர்த்து இந்த வகைக் கவிதைகள் கவிதைவகைக்குள் சேர்க்கமுடியுமா? ஆனால் எல்லாவற்றையும் கவிதை வடிவில் வெளிப்படுத்தும் சுதந்திரம் கவிஞனுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. நானூற்று சொச்சம் பக்கங்களில் பாதிக்குமேல் விமர்சனக் கவிதைகளே.

இந்த விமர்சனக் கவிதைகள் பெரும்பாலும் அவ்வப்போதைய நிகழ்வுகளுக்கான, அக்காலத்திய சூழலுக்கான எதிர்வினையுமாகவே இருப்பினும் வரிக்கு வரி ஓடும் தகிப்பு அறிவார்த்தமானது. நெருப்பு ஒளியை மட்டுமல்ல வெப்பத்தையும் சேர்த்தேதான் வீசுகிறது.

‘குடும்பப் பெருமைகள்,

பட்டம், பதவிப்

பவிஷுகள் எதற்கும்

பிடிபடாக் கவித்வம்

எனக்குள் அடக்கம்.’

என்று திமிருடன் எழுதுகிறார். மார்க்ஸியப் புரட்சி மனோநிலைக்கு தானே இலக்கணம் என்கிறார். சங்க காலத்திலிருந்து அசல் கவிஞனிடம் தொடரும் அதே திமிர். பாரதியின் எளிய வரிகள் அந்த வரிகளில் ஓடும் ஆத்மவேகம் எப்படி அவற்றை கவிதைகளாக்குகிறதோ அதுவே இங்கும் உந்துசக்தியாயுள்ளது. தனக்குள் ஆழ்ந்து தேடலுடன் உள்ளே அலைபாயும் கவிதைகள் மீபொருண்மையில் வெளிப்படுகிறதென்றால், இந்த விமர்சனக் கவிதைகளில் தன்னனலை அள்ளித் தெறிக்கிறார். இந்த அனல்பெருக்கு அடங்கிய நிலையில் வெளிப்படுவனவாக மீபொருண்மைக் கவிதைகள் உள்ளன. பிரமிளின் மாஸ்டர் பீஸ் என்றால் தெற்குவாசல் கவிதையைச் சொல்வேன். இந்தக் கவிதையை வரிக்கு ஒரு பத்தி வீதம் எழுதினாலும் சொல்லித் தீராது. எம்.டி. முத்துக்குமாரசாமி மற்றும் சில நண்பர்கள் அஸ்வமேதா இதழை நடத்தியபோது அந்த இதழுக்காக பிரமிள் 1988ல் எழுதித்தந்த கவிதை. காலதெய்வம் பைரவரைப் பற்றிய விவரிப்பு கொண்ட கவிதை இது. இதில் ஒரு பிழை இருக்கிறது, முடிந்தால் கண்டுபிடியுங்கள் என்று பிரமிள் சவால் விட்டிருந்தார். யாரும் வாய் திறக்கவில்லை. கவிதையில் ஒரு வரி ‘இடையில் கலைமான்/உள்முகம் நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது’ என்றிருக்கும். பைரவருக்கு கையில் உடுக்கை இருக்கும். கலைமான் சிவபெருமான் கையில் ஏந்தியிருப்பது. இதன் தொடர்ச்சியாய் கிழக்குவாசல், வடக்குவாசல் என்ற தலைப்புகளில் கவிதை எழுதினார். மேற்குவாசலையும் எழுதி நிறைவுசெய்ய நினைத்திருந்தார். அதற்குள் சென்றுவிட்டார். கிழக்குவாசல் கவிதையில் இந்தப் பிழையை மறைமுகமாக சுட்டி வெளியிட்டிருக்கிறார்.

தெற்குவாசல்

தெற்குக் கோபுர வாசலுக்கு

வந்த உன்முன் உனது

இடப்புறமாக நிற்கிறான்

காலபைரவன்.

பூணூலில் அவன்

கோர்த்தணிந்திருக்கும்

பொக்கிஷங்களைப் பார்.

பூக்களல்ல, புஷ்பராகக்

கற்களல்ல,

கபாலங்கள்.

ஒவ்வொரு கபாலமும்

பார்ப்பானில் இருந்து

பறையன்வரை

ஐரோப்பியனில் இருந்து

ஆப்பிரிக்க நீகிரோப்

பழங்குடி வரை,

ஒவ்வொரு மனித

இனப்பிரிவினை காண்.

நேர்கொண்டு பார், சிலையின்

கால்களுக்குப் பின் நாயாய்

உறுமுகிறது மரணம்.

அது, காலத்தின் வாகனம்.

காலபைரவனின்

சிரசில் அணிந்த

நெருப்புக்கிரீடமாய்

நின்று எரிகிறது

சரித்திர நியதி. அவன்

ஏந்தி நிற்கும்

சிவாயுதங்களிலும்

நடுங்குகிறது அதன்

நிர்மூல கதி.

டமருவில் பிறந்தது

நாதம்; நாதத்தில்

பிறந்த விந்து

கலைகளாய் விரிந்து

கால தேசங்கலாயிற்று.

தேசங்கள் காலத்தின்

நேற்றின்று நாளை என்ற

மூவிலைச் சூலத்தில்

கிழிபட்டுக் குலைந்து

அழிந்து

கொண்டிருக்கின்றன,

இடையில் கலைமான்

உள்முகம் நோக்கி

ஓடிக்கொண்டிருக்கிறது.

தெற்கே வந்த உன்முன்

நிற்கிறது காலம்.

நிர்வாணமாய்

நேர்கொண்டு பார்க்காமல்

நீ தப்ப முடியாது.

உன் கண்களைச் சந்தித்த

கருணையில் குரூரத்தில்

ஊடுருவி உள்ஓடிப்

பிறக்கிறது காலத்தின்

புரியொணாப் புன்னகை.

உன் உடலில் அருவருத்து

உள் ஓடிப் புரள்கிறது

உனைவிட்டுப் பிரியாத

மரணத்தின் பூணூல்.

உன் உயிரை நேர்நோக்கி

பரிகஸிக்கின்றன

காலங்கள்.

கத்திமுனையாய்

துப்பாக்கியில் வெடித்துச்

சுழன்று வரும் குண்டாய்

உற்பாதங்கள் தந்து,

உருக்குலைக்கும் நோயாய்

உடன்கூடிப் படுத்தவளின்

புணர்ச்சி விஷமாய்

தெற்குக் கோபுரவாசலில்

நிற்கிறது காலம்

நிர்வாணமாய்.

காலிடறும் கல்லும்

ஒரு நாளில்லை ஒருநாள்

காலனுருக் கொள்ளும்-

ஓ, ஓ, மானுட!

ஓடாதே நில்!

நீ ஓட ஓட

தொடர்கிறது கல்;

நாயாக உன்

நாலுகால் நிழலாக,

நீ ஓடஓட

தொடர்கிறது அக்னி;

ஓயாத உன்

உயிரின் பசியாக.

நீ ஓட ஓட

தொடர்கிறது இடைவெளி;

சாவாக நீ

இல்லாத சூனியமாய்.

கற்பிதத் திளைப்பில்

நீ நின்ற கணம்

மனம் தடுமாறி நீ

சிருஷ்டியைப் பிரதி

பலித்த அவ்வேளையில்

எதிரே நிற்கும்

கவிதையே காலம்.

அறிவார்த்தத் திகைப்பில்

நீ நின்ற கணம்

திசைத் தடுமாறி உன்

அறிவு திருக

எதிரே எழுகிறது

காலத்தின் விபரீதக்

கருத்துருவக் கோலம்.

உனக்குள் ஓய்ந்து

நீ நின்ற கணத்தில்

உள்வெளி மாற்றி

இக்கணத்தில் மடிகிறது

காலமாய் வக்கரித்த

ஞாபக லோகம்.

நின்று நேர் கொண்டு

நோக்கிய கணத்தில்

நீ கண்டதென்ன?

தெற்குக்கோபுர வாசலில்

நியதி நெருப்பைச்

சிரசில் அணிந்து

நிற்பது நீதான்.

நீ அற்ற சூனியத்தில்

நிற்கின்ற பிரக்ஞைக்குள்

விழுகின்ற தத்துவ

நிழல் உன் பாலம்.

உனக்குள் உன்

உயிரென நீ

உருவேற்றிக் கொள்வதுவோ

உயிரல்ல, காலம்.

எனவே, எட்டாத

வெற்று வெளி ஒன்றில்

ஓயாத திகிரியை

மென்சிறகலைத்து

ஓட அசைத்தபடி

ஆடாமல் அசையாமல்

பறப்பது நீயல்ல

நானல்ல,

காலாதீதம்.

தெற்குக் கோபுர வாசலில்

திகைத்து நிற்கிறது

நீயற்ற நானற்ற

கல். (1988)

தெற்குதிசை மரணத்துடன் தொடர்புடையது. கவிதை முதலில் காலபைரவனை நிழல்விவரணைபோல உள்பார்வையில் விவரிக்கிறது. பின் அந்த ஒட்டுமொத்த உருவையும் காலமாக உருவகப்படுத்துகிறது. மிக நீண்டு கிடக்கும் காலத்தில், நேற்று-இன்று-நாளையில் பூணூல் அணிகலனாய் தொங்குகின்றன மண்டையோடுகள். மரண நாய் அருகில் காத்திருக்கிறது. காலத்தை கண்கொண்டு பார். பார்க்காமல் நீ தப்பமுடியாது. அது வேட்டை நாயாய் உன்னைத் தொடரும். அதன் கண்களில் ஒளிர்கிறது கருணையும், குரூரமும் கலந்த புரியொணாப் புன்னகை. காலம் உயிரைப் பரிகசிக்கிறது. எடுக்கவும் முடியாமல், விடவும் முடியாமல் திணறிக் குழம்பும் மனம். என்னோடும், நானில்லாத சூனியத்தோடும் எதிரில் நிற்கிறது சிலை. காலம். கண்கொண்டு பார்.

‘கற்பிதத் திளைப்பில்/நீ நின்ற கணம்/மனம் தடுமாறி நீ/ சிருஷ்டியைப் பிரதி/பலித்த அவ்வேளையில்/ எதிரே நிற்கும்/கவிதையே காலம்.’

கற்பிதத் திளைப்பு, எத்தனை பொருள்விலகாச் சொற்கள். நம்மால் செய்யமுடிவது எல்லாம் கற்பிதங்களே. அறியாமல் உருவாக்கிக் கொள்ளும் மன பாவனைகள் அனைத்தும் கற்பிதங்கள். அக் கற்பிதங்களில் திளைத்து, மனம் தடுமாறி ஓரிடத்தில் நிற்கும் கணம் சிருஷ்டியின் பிரதிபலிப்பு. உள்ளே கவிதையின் வெளிச்சம். உருவாகும் அனைத்தும் காலத்துள் அடக்கம். நிற்கிறது கவிதை கால ரூபமாய்.

கவிதை ஓர் அறிவார்த்தத் திகைப்பு. தர்க்கத்தின் முறிவு. அறிவு திருகப்படும் அக்கணத்தில் முன்னே எழுகிறது காலத்தின் விபரீதக் கோலம். ஓய்ந்து நின்ற கணத்தில் காலமாய் வக்கரித்த ஞாபக உலகத்திரை மறைகிறது. அக்கணம் நீ கண்டதென்ன? சிரசில் நியதி நெருப்பை அணிந்து நிற்பது நீதான். நீயே காலம். அதனுள் நீ அடக்கம். நீயில்லா சூனியமும் அடக்கம். நீயற்ற சூனியத்தில் நிற்கிறது பிரக்ஞை. அதில் விழுகிறது உன் தத்துவ பாலம். உயிராக நீ உருவேற்றிக் கொண்டிருப்பது நீயல்ல, உன் உயிருமல்ல, காலம். நீ நேற்று-இன்று-நாளையாய் கிடக்கிறாய். ‘எட்டாத/வெற்று வெளி ஒன்றில்/ஓயாத திகிரியை/மென்சிறகலைத்து/ஓட அசைத்தபடி/ஆடாமல் அசையாமல்/பறப்பது நீயல்ல/நானல்ல,/காலாதீதம்.’

வெட்டவெளியில் காலாதீதத்தின் நீண்டு விரிந்த சிறகுகள் ஆடாமல் அசையாமல் பறக்கிறது. ’தெற்குக் கோபுர வாசலிலோ திகைத்து நிற்கிறது, நீயற்ற நானற்ற கல்.’ கவிதை திரும்பத் திரும்ப வாசித்து, கவிஞர் சொல்லும் அறிவார்த்தத் திகைப்பை நமக்கு அளிக்கிறார். சிலைகளின் மர்மப்புன்னகை புரிவதேயில்லை. ஒருகட்டத்தில் உருவகங்கள் கலைந்து கல் திகைத்து நிற்கிறது. மிக அரிதாகவே கவிதையின் கடைசிவரிகள் கவிதை சுழலும் தளத்துக்கு இணையாக நிற்கும். சில கவிதைகள் உச்சகட்ட முடிச்சாக அவிழும். இந்தக் கவிதையில் சீர்குலையாமல் அதே இலயத்துடன் முடிகிறது. கவிதையில் கவிஞனின் குரல் எது எனத் தேடுவது ஒரு சுவாரசியமான விளையாட்டு. ’நீ’ என கவிஞர் சுட்டுவது தன்னைத்தான். அப்படியென்றால் எழுதுபவர் யார், அவர் எங்கிருக்கிறார்? ஒன்று கேட்கிறது; ஒன்று சொல்கிறது. இது ஒரு பாவனை. மற்றபடி இரண்டும் ஒன்றே. ஆழக்குளித்து முத்தெடுத்து மேல்வந்து என்ன என்று பிரித்துக்காட்டி விட்டு மீண்டும் அமிழ்பவன் கவிதையை எழுதுபவன். கடலுக்குமேலிருக்கும் வெளி ‘நீ’. பொதுவாக படைப்பையும் படைப்பாளியையும் பிரித்துப் பார்ப்பது பிரமிளின் வழக்கம். எனக்கும் அதுவே. ஆனால் இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். படைப்பில் ஆளுமையின் பங்கு. அதாவது படைப்பாளியின் இயல்பும், மனம் இயங்கு தளமும், கருத்து நிலை, பொருட்படுத்தும் அம்சங்கள் போன்றவை படைப்பை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பது. கவிஞர் தேவதேவன் கவிதை என்பது ஆளுமையிலிருந்து வரவேண்டும்; கவிதைக்கு ஆளுமை முக்கியம் என்கிறார். இதில் எனக்கு மாற்றுக் கருத்துண்டு எனினும், அத்தகைய ஆளுமையின் வெளிப்பாடாக கவிதை அமைவது ஒருசிலருக்கே சாத்தியம். அவர்களில் ஒருவர் பிரமிள். அதனால்தான் கட்டுரைகளில் எவற்றைப் பேசியிருக்கிறாரோ அவற்றின் சாரமாகவே கவிதைகள் உள்ளன. ஆணிவேராக தனி மனித ஆத்மத் தேடல்.

கிழக்குவாசல் கவிதை (1993) தெற்குவாசலை சந்திக்கிறது. இலட்சோபலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் ஜனித்திராத காலத்தில், சூரியன் மேஷத்தில் (சித்திரை) உதிக்கும்வேளை,  பிரமாண்டமான பட்சியொன்று நிலத்தில் வீழ்கிறது. கண்ணிமை திறப்பதுபோல் பூமி பிளந்து பட்சியிலிருந்து பிரிந்தன ரேகைகள் ஏழு. ஜடத்தின் காலத்துடிப்பு திசைமாறி நாளை, நேற்று என ஓடத்தொடங்கியது. பட்சி பிரமாண்டமானதோர் பாறையாய் உருத்திரிந்தது. பல இலட்சம் ஆண்டுகளுக்குப்பின் மனிதன் தோன்றி அறிவுக்கனியை புஷிக்கிறான். இரு துருவங்களிலும் பனியுருகுகிறது. எங்கும் நீர் மூடிக் கிடக்கிறது. பின் நீர் வடிந்து நிலம் எழ, கண்டம் விட்டுக் கண்டம் பெயர்கிறான் மனிதன். அரைகுறை விடியல் ஒன்றில் அந்தப் பிரமாண்ட பட்சியைக் (கிரணம் கவிதையில் வரும் சிறகொடிந்த கருடப்பட்சியை நினைவுகூர்க) காண்கிறான். அதற்கு நீண்ட கழுத்தை வளைத்துத் தனது இதயத்தையே குத்திக் கிழிக்கும் அலகு. அதன் நெஞ்சுக்குழிக்கு நேரே நீலச் சுனை. கடல். பட்சி பாதியுடல் பூமியில் புதையுண்டு கிடக்கிறது. மீதியுடல் அந்தரத்தில். உண்டு மீந்தவை எல்லாம் பட்சிப்பாறைக்கு பலி. பாறைக்குள் கேட்கிறது பறவையின் குரல். சடாரென்று உறுமி சிறகு சிலிர்த்து அந்தரத்தில் தாவியது மாபெரும் கல். அதன் கால்பிடியில் மனிதமூளை. பறக்கிறது அது. மானுட மூளையில் பிறக்கிறது இலட்சியம்.

கிழக்குக் கதவைத் திறந்தால் தெரிகிறது கடலும் வானும். தினமும் சிவக்கிறது வானம். பலிபீட இரத்தம். ஒவ்வொரு விடியலிலும் நட்சத்திரங்கள் நடுங்குகின்றன. உதயத்தில் ஒரு பெரும்பிழம்பின் சிதறல். உதயவேளையில், சிவந்த வானில் கிழித்த உடல்கள் மிதக்கின்றன. அங்கே முன்னால் ஓர் ஆளற்ற நாற்காலி. பின்னால் மேசை. மேசையல்லவா முன்னால் இருக்கவேண்டும்? நாற்காலி முதுகுகாட்டிக் கிடக்கிறது. (தர்மசக்கரம்?) கீழே சமுத்திர ஊஞ்சல் புரண்டு தத்தளிக்கிறது. அசரீரியாய்க் கேவல்கள் புலம்புகின்றன, ‘ஏன், யார், நான்?’. நாற்காலி பீடத்தில் அசைவிலா ஒன்றிற்குள் நாற்பூதங்கள்: நீர், தீ, நிலம், காற்று சுழன்றோடுகின்றன. (பௌத்தம் நாற்பூதங்களை அடிப்படையாகக் கொண்டது. அதேநேரம் ஐந்தாவது பூதத்தில்தான் நாற்காலி மிதக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்) ராகுவின் வாய்க்குள் செல்கிறது நாலில் ஒன்று, பரிதி.

இப்போது கிழக்குக் கதவைத் திறக்கிறேன். இந்த நாள் வெற்றுத்தாளைப் போல திறக்கிறது. கனவு கழிந்த தெளிவு. ஆயினும் எதிரில் பட்சிப் பாறையின் பலிபீடம். அதில் சுசுவடிவ நிழல். உடல் துடிக்க சிரசு தனித்துக் கிடக்கிறது, பிறப்பு. பட்சிப்பாறையின் மூலைகளெங்கும் என் பிரதிபிம்பங்கள். அது ஒருகையிலுள்ள உடுக்கைக்குள் பதுங்கிக் கிடக்கிறது. நாதத்தில் கருக்கொண்ட புவனத்தின் துளியோசை அது. மறுகையில் தன்னைத்தானே விழுங்கும் கால பாசம். கதவு தானாய் மூட வெளியே கதவில் சிறகுகள் முட்டித் தட்டுகின்றன. அதில் ஒலிக்கின்றன கேள்விகள்: ஏன், எது, எங்கே, எப்படி, எதற்காக, யார், நான். பின்வாங்கித் தொடுவான் தொட்டு கோஷித்து மீண்டும் ஏ….கோபித்த மோதல். கதவைத் திறந்தால் என் பிம்பம் முழு நிர்வாணியாய் எதிரில். நான் ஸ்தூலம். அவன் சூட்சுமம். எனக்கு வலதுகையில் மான். அவனுக்கு உடுக்கை. எதிரும் புதிரும் கலைந்து சிதறுகின்றன. உள்ளே ஊஞ்சலாய் ஆடி மிதந்து வந்து கூடத்தில் அமர்கிறது அந்தரத்து நாற்காலி. ஒரு சிறுமேஜையும், குரல்களும்கூட. ஒலிக்காமல் ஒலிக்கிறது பரமாணுவின் சிங்கக் கர்ஜனை. மூளைக்குள் புயல். நாற்காலியில் யாருமில்லை.

தெற்குவாசலைவிட கிழக்குவாசல் கவிதை சிக்கல் நிறைந்தது. பிரமிள் பரிணாமம், அறிவியல், பிரபஞ்சம், ஆன்மீகம் அனைத்தையும் ஒற்றைப் புள்ளியில் நிறுத்திப் பார்ப்பவர். ஒரு கவிதையில் தாவரத்துடன் மனிதனுக்குள்ள இணைப்பை பிரபஞ்சத்துடிப்பை கவிதையாக்கியுள்ளார். பரமாணுவின் சிங்க கர்ஜனை என்பது தன்னுள்ளிருக்கும் மூல அணுவின் குரல். ஆதியில் மனிதன் தோன்றியதிலிருந்து, அறிவுக்கனி பறித்து, இலட்சியம் வளர்த்து இன்றுவரையிலான மானுட வளர்ச்சியும் வாழ்வும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது பலிபீடத்தின் முன்.

இதைவிட்டு கொஞ்சம் வெளியில் வரலாம். இக்கவிதையில் ஒருபத்தி இப்படி வருகிறது,

எனக்கு பார்வை அகமுகம்

பாய்ச்சல் பகிர்முகம்

இன்னொரு கண்டத்தின்

அல்க்காட்ரஸ் பறவை

கழுத்தை வளைத்து

தன்னையே இதயத்தில்

குத்திக் கிழிக்கிறது

இன்னொரு கவிதையின்

சிலுவையில் இதயம்

      அறைபட்டு மரிக்கிறது.

சிவனின் கையிலிருக்கும் மானாக தன்னை கற்பனை செய்துகொண்டதை முதலிரண்டு வரிகள் காட்டுகின்றன. ஏனெனில் இன்னோரிடத்தில், ‘மானுக்கு பார்வை உள்ளே, பாய்ச்சல் வெளியே’ என வருகிறது. சிவன் கையிலிருக்கும் மான் சிவனை நோக்கி பார்த்தபடி இருக்கிறது, பாய்ச்சலோடு. அதற்கடுத்த வரிகள் அற்புதம். வேறொரு கண்டத்துப் பறவை தன் இதயத்தை தானே குத்திக் கிழிக்க, இன்னொரு கவிதையிலோ சிலுவையில் அறைபட்டு மரிக்கிறது. இந்த மூதாதைப் பறவை எதைக் குறிக்கிறது? வரலாற்றின் தொடக்கமது. அதிலிருந்துதான் நாளையும், நேற்றும் பிறக்கிறது. அப்படியாயின் நாற்காலி மேசையை தர்மசக்கரமாக அல்லாமல், வரலாற்றில் அதிகாரக் குறியீடாக உள்ளது. அதன்பொருட்டு கிழிபடும் உடல்கள் அந்தரத்தில் மிதக்கின்றன.

அடுத்ததாக வடக்குவாசல். தெற்குவாசல், கிழக்குவாசல் கவிதைகளிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகி ஒருவித சரணடையும் இடமாக வடக்குவாசல் உள்ளது. முந்தைய இரண்டு கவிதைகளைப் போல மீபொருண்மைத் தேடல் இல்லை. சற்று எளிய கவிதை. முந்தைய இரு வாசல்களை ஒப்பிட இதன் நீளம் குறைவு. ‘என்னை உனக்குத் தெரியாது; உன்னை எனக்குத் தெரியும்’ என்றெழுதி ஒரு கடிதம் வருகிறது ஊர் பெயரில்லாமல். ஜே.கே. ஜாக்பாட் சீல் மட்டும் உள்ளது. இதென்ன கிறுக்குத்தனம் என்று வெளியேபோய் ஒரு சிகரெட்டை பற்ற வைக்கிறான்.

‘புகையிலைச் சுருளைப்

பிடித்த நெருப்பில்

இன்மையின் இருப்பு.

ஜடத்தின் உயிர்ப்பில்

உள்வாங்கும் பிழம்பு.

பிழம்பு புகைந்து

என்னுள் விகசித்து

உள்வெளி ஆயிற்று.

புலனுக்கும் புலனெட்டாப்

பரிமாணங்களுக்கும்

இடைவெளிகளிலே

திரிந்துகொண்டிருந்தேன்.

வெளிதோறும் நின்றது

ஒருகணப் பொறி.

கையொப்பமின்றி

அனுப்புநர் பெறுநர்

முகவரி இன்றி

காலமும் இன்றி

அண்டத்தை அளாவி

நின்றது தனித்துவம்.”

ஊர்பேர் அற்ற ஜே.கே. ஜாக்பாட். ஜிட்டுகிருஷ்ணமூர்த்தியை குறிப்பதாகக் கொள்ளலாம். நெருப்பு இன்மையின் இருப்பு. பற்றிக்கொண்ட புகையிலைப் பிழம்பு உள்ளே புகையாய் நிறைகிறது. உள்ளிருப்பது வெளிவருகிறது. உள்ளிருப்பதன் வெளி நடனமாய் புகை. ஒரு கணப்பொறி. எங்கெங்கு காணினும் உள்ளும் வெளியுமாய் நிகழும் ஒருகணப்பொறி. அனுப்புநரோ, அன்னார் முகவரியோ, அவர் கையொப்பமோ, காலமோ இன்றி நிற்கிறது அது, பாதையற்ற பாதையாய்.

நித்திரைக்குள்: 1994-96

தூறுபட்ட மணி துலக்கி

வண்டின் எச்சில் கொண்டுபோய்

ஊறுபட்ட கல்லின்மீதே

ஊற்றுகின்ற மூடரே

                        -சிவவாக்கியர்

இந்தக் காலகட்டத்தின் முதல்கவிதையான ’மறுத்த பிசகு’ சிவவாக்கியரின் பாடலுடன் துவங்குகிறது. இதன் தொடர்ச்சியாக நீளும் கவிதை சிவவாக்கியரின் பாடல் விளக்கமாகவே வெளிப்படுகிறது. தூறுபட்ட என்ற முதல் வார்த்தை மாறுபட்ட என்று இருந்திருக்கவேண்டும் (மாறுபட்ட மணி குலுக்கி மலர் இறைத்து வீணிலே ஊறுபட்ட கல்லிலே உருக்கள் செய்யும் மூடரே – சிவவாக்கியர்). ஆயினும் தூறுபட்ட இங்கு பொருந்தக்கூடியதாகவே உள்ளது.

பூரண விழிப்பு என்பதற்கான அர்த்தத்தை விளங்கிக் கொள்ளவே பெருங்காலமாகிவிடுகிறது. இக்கணம் என்பது இல்லாத ஒன்றாக, பார்வைக்கு புலப்படா மின்னோட்டமாக நிகழ்ந்தபடி இருக்கிறது. ஓஷோ, you always miss the bus’ என்கிறார். ஒவ்வொருமுறையும் தவறவிடப்படுகிறது இக்கணம். இக்கணம் இமையா விழிகளில் வெறிக்கிறது.

திசை மாற்றம்

கல்லில் ஊன்றிற்று

சிற்பியின் உழுபடை.

வயல் வெளியின்

மண்ணில் ஊன்றி

உழுதது உளி.

தசையின் எஃகு

சிலிர்க்கச் சீறி

உருகி பிறந்த

உழுபடை விந்துவாய்

கருப்பை வயலில்-

புகுந்தது கடல்.

காற்றும் வெளியும்

பிணைந்து பிறந்த

உறுமல் ஒன்று

கடலுள் உதிர்ந்தது.

முதல் நான்கும் திசைமாறி

ஒன்றுள் ஒன்று முனைமாறி

கல்லைப் பிளந்தது நரசிம்ஹமல்ல-

கைகூப்பி அழுத சிசுவின் குரல்.

கனரக இரும்புத்

தரையைக் கிழித்தது வராஹமுமல்ல-

ஒரு மணி நெல்.

கடலின் தலைகீழ்ப்

பெருவெளி எங்கும்

ஒரேயொரு முனை.

கூர்மம், மச்சம்

ஏதுமல்ல, அது

இமைகொட்டாத இக்கணம். (1994)

கூர்மம், மச்சம் ஏதுமல்ல. அது இமையா இக்கணம். நிலத்தைக் கீறி எழுந்து வராஹமல்ல. ஒரு மணி நெல்.  இதெல்லாம் யாருக்காக எழுதப்படுகிறது? இப்படியான தேடல் உண்மையில் யாருக்காவது உள்ளதா என்ற கேள்வி அச்சுறுத்துகிறது. கடவுளைவிட மிகச்சிறந்த தரகர் இன்று வேறுயாருமில்லை. தனது பங்குப் பணத்தை பெற்றுக்கொண்டு சகல வசதிகளை பெற்றுத் தருபவராய் இருக்கிறார். வெளிப்படையான ஒப்பந்தம். இந்த பத்திரங்களை எழுதி முடித்துத் தருபவர்கள் அர்ச்சகர்கள். ஒருபுறம் இதன் மறுமுனைக்கு இழுக்க பெரியபுராணம் போன்ற கதைகள்; தன் பிள்ளையைக் கூட கொன்று இறைவனுக்குப் படைக்கும் கதைகள். அப்படியொரு பற்று சாத்தியமா? தேவையா? இத்தகைய வெறித்தனமான இறைப்பற்றுக்கு காரணமே இல்லை. கடவுள் என்றால் என்ன என்று எதுவும் புரியாமல் மிகத் தூய்மையாக நடந்துகொள்கிறேன் பேர்வழி என்று மனோவியாதிக்கு ஆளாகி, லௌகீகத்தில் இருப்பவர்கள் பாடு திண்டாட்டம்தான். ஆன்மீகம் என்றால் என்னவென்றே அறியாமல் முழு குழப்படி. அறியவிடாமல் வைத்திருப்பதுதான் தந்திரமோ என்னவோ.

சரண்

அந்தரத்துக்

கழுகின் நிழலாய்

நூல் தொடுத்துத்

தரையில் ஓடுகிறது

அதன் இரை.

கண்ணாடியின்

அகவெளி அந்தரத்துப்

பிரதியின் கண்ணில்

தன்முக நிழலைத்

தொடுகிறது

பார்வை.

இதயவெளியைப்

பிளந்த கீற்றின்

ஊசிக் கண்ணுக்குள்

துளிநிழல் ஒன்றன்

சரண்ஓடி

ஊடுருவிவிட்டது.

சென்றது இனி என்ற

கசப்பும் இனிப்புமற்று

அங்கு இங்கு என்ற

அந்தரம் தரையற்று

இருப்பூசி நிலையின்

விழிப்பினூடே

இன்மைநூல்

ஒன்றுமட்டும்

ஒளித்தோடுகின்றது. (1995)

முழு விழிப்புநிலை, மனமற்ற நிலை, சூனியத்தை உணர்தல் இப்படி வெவ்வேறு சொற்களில் சொல்லிக்கொண்டாலும் இந்தக் கவிதை அதையே பாடுகிறது. கழுகு தன் இரையைப் பார்க்கையில் இரையும் கழுகைப் பார்க்கிறது. அதன் கண்ணில் தெரிகிறது கழுகின் பிம்பம். சரணாகதி. ‘இனி’ என்ற கசப்பும் இனிப்புமற்ற நிலை. இருப்பூசி விழிப்பு நிலையில் ‘ஒளித்து’ ஓடுகிறது இன்மை. இதற்கடுத்தாற்போல் வரும் ‘சம்பவம்’ கவிதையும் இந்த மனமற்ற நிலையைச் சொல்வதுதான். அரவின்மேல் துயில்கொள்ளும் அரங்க நிழல் கலந்து, ‘எனது மனது/மனம் அறுந்து/ நான் மறைந்து/ நிழல் திறந்து/ உள்ளும் வெளியும்/ கீழும் மேலும்/ இற்று விழுந்த/ இல்லம் ஒன்றில்/ வாடகை அற்று/ குடித்தனம் அற்று/ சஞ்சரிக்கிறது/ சம்பவம் ஒன்று.’ அந்த மனமற்ற வேளையை புதுமைபித்தன் பாணியில் வெளிப்படுத்துகின்றன இறுதி வரிகள்.

லயம் ஜூலை இதழ் 1998ல் 3 கவிதைகள் வெளியாகியுள்ளன ‘உள்த்தகவல், நித்திரைக்குள், சிலைகள்’. இவை மூன்றும் 1996ல் எழுதப்பட்டவை. 97ல் பிரமிள் இறந்துவிட்டார். உள்த்தகவலும் நித்திரைக்குள் கவிதையும் இறப்பைக் குறிப்பவையாக உள்ளன. உள்த்தகவல் மீனின் மிகக்குறுகிய வாழ்வும் அதில் அது அடையும் இக்கண கணங்களையும் சொல்கிறது. நித்திரைக்குள் கவிதை அஞ்ஞான எரிப்பைச் சுட்டுகிறது. ‘நித்திரைக்குள் நித்திரை அமிழ்ந்து பரிதீ பிறந்தது’. நித்திரை என்பதையே வாழ்வாகக் கொண்டால் வாழ்வில் நிகழும் நித்திரை மரணம். அதில் பிறக்கிறது பூரண பரிதி. பிரமிளின் கடைசிக் கவிதையாக ’சிலைகள்’ கவிதை உள்ளது. இது உண்மையிலேயே நம்மை சோகத்துக்கு உள்ளாக்கிவிடுகிறது. காரணம் இதுவும் ஒரு விமர்சனக் கவிதை. சு.ரா., வெ.சா., ந.மு. மூவர் மீதான விமர்சனங்களை கேலியுடன் விவரிக்கும் அதேவகையான விமர்சனக் கவிதை. மகாபாரதத்தில் போர் முடிந்து தர்மன் முடிசூடியபின் எல்லோருக்கும் தானமளிக்கிறான். அப்போது அங்கு வரும் சாங்கியன் ஒருவன் அந்தக் காசுகள் எல்லாம் இரத்தவாடை அடிக்கிறது, அப்படி வீச்சமடிக்காத காசைக்கொடு என்று கேட்க, கிருஷ்ணன் முதலான அவையோர் கூடியிருக்க தானம் பெற வந்த அந்தணர்கள் அனைவரும் சாங்கியனை அடித்தே கொன்று எரிக்கிறார்கள். மறுபுறம் தானம் வழங்கப்படுகிறது. அருகே நெருப்பு எரிகிறது. வாசிப்பு என்பதே ஒரு மெனக்கிடும் செயல்பாடு. சமகாலத்தின் நுகர்வுக் கலாச்சாரத்தின் வீச்சம் இலக்கியத்திலும் விரவியுள்ளது. இலக்கியம் என்ற போர்வையில் வாசகச் சார்புடன், வணிகபாணி எழுத்தை நளினமாகக் கையாளத் தெரிந்தவர் ஆகச் சிறந்த இலக்கியவாதியாக இன்று கொண்டாடப்படுகிறார். ஆயினும் சாங்கியன் மறைவதில்லை.

பிரமிள் நிறைய பிறமொழிக் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். இதில் அவர் மொழிபெயர்த்துள்ள எஸ்ரா பௌண்டின் கவிதைகள் பிரமிளின் விமர்சனக் கவிதைகளுக்கு முன்மாதிரியாக உள்ளன. அவருக்கு ஆத்ம வாசகங்களான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார். ஜி.கி.யின் ’பாதை’ என்ற ஆன்மீக அனுபவக் கட்டுரையையும் இந்தக் கவிதைகள் தொகுப்பில் பதிப்பாசிரியர் கால சுப்ரமணியம் சேர்த்திருக்கிறார். ஆன்மீக நாட்டத்திலுள்ள கவித்துவ வெளிப்பாட்டின் காரணமாக இருக்க வேண்டும். ஜி.கி. பிற்காலத்தில் இந்தக் கட்டுரையை அதில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் இருமை நிலை காரணமாக நிராகரித்திருக்கிறார்.  ஆனால் இது ஓர் அற்புதமான படைப்பு. பிரமிள் ஆங்கிலத்திலும் பல கவிதைகள் எழுதியுள்ளார்.

பாலா கருப்பசாமி

கோவில்பட்டியைச் சேர்ந்த பாலா கருப்பசாமி, தற்சமயம் திருநெல்வேலியில் வசித்து வருகிறார். ‘சக்தி நூலகம்’ என்ற நூலகத்தை நடாத்தி வருகிறார். கவிஞர். பத்தி எழுத்து, விமர்சனங்கள் முதலானவற்றிலும் செயற்படுகிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.