/

புறாமுட்டைக்காக செத்துப்போகிறவர்கள் – ஆ. மாதவனின் கதைகளை முன்வைத்து: சுரேஷ் பிரதீப்

“நியதிகளும் – ஏற்பாடுகளும், வாழ்க்கையின் கட்டுத்திட்டங்களும் மனிதப்பிறவியின் அடிப்படைக் கோடுகளாக இருந்தாலும், அனேக சமயங்களில் இந்தக் கோட்டை மீறித் துள்ளுவதிலேயே சுகம் காணுகிறான், மனிதன். ஒரு வகையில் – வரம்புக்கோடுகளை மீறிச் சுகங்காணுவதிலும், அந்த எல்லை மீறலை ஆதியற்ற சுகமாகக் கருதி ரகசியமாக, கனவு காணுவதிலும்தான் வாழ்க்கையின் ரசாவஸ்தை நிர்ணயிக்கப்படுகிறது” – ஆ. மாதவனின் பறக்க வேண்டும் என்ற ஆசை சிறுகதையிலிருந்து

மரியாதைராமனிடம் ஒரு குழந்தையை இழுத்துக் கொண்டு இரண்டு பெண்கள் வருகின்றனர். இருவருமே குழந்தைக்கு தானே தாய் என்று வாதிடுகின்றனர். மரியாதைராமன் குழந்தையை இரண்டாக அறுத்து ஆளுக்குப்பாதி எடுத்துக் கொள்ளுங்கள் என்று தீர்ப்பளிக்கிறார். இருவரில் ஒரு பெண் மனம் பதைத்து ‘என் குழந்தை அவளுடனேயே இருக்கட்டும். என் குழந்தையை கொன்று விடாதீர்கள்’  என்று அலகிறாள். குழந்தைக்காக  இவ்வளவு துடிக்கும் அவளே உண்மையான தான் என்று தன் சமயோசிதத்தால் கண்டறிந்த மரியாதைராமன் அவளைத் தேற்றி குழந்தையை அவளுடன் அனுப்பி வைக்கிறார். இது நாம் அனைவருமே அறிந்த பிரபல நீதிக்கதைதான். நவீன இலக்கியத்திலும் இதுபோன்ற எண்ணற்ற நீதிக்கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. சொல்லப்படுகின்றன. தி.ஜானகிராமனின் கடன் தீர்ந்தது அப்படியானதொரு பிரபலமான நீதிக்கதை. அது வெற்றிகரமான நவீன சிறுகதையும்கூட.

மரியாதைராமன் கதையிலும் தி.ஜானகிராமனின் கதையிலும் நம்முடைய மனதை உடனடியாக ஒன்றச் செய்வது தியாகம் என்ற அம்சம்தான். முன்னதில் அவ்வுணர்வு செயற்கையாக புனையப்பட்டுள்ளது. கடன் தீர்ந்தது கதையில் தியாக உணர்வு மிக இயல்பாக கதையொழுக்குடன் வந்து இணைகிறது. தியாகம் கருணை போன்ற மேன்மையான உணர்வுகளை நவீன இலக்கியம் எப்போதும் கொண்டாடியே வந்திருக்கிறது. மரணமும் நிலையின்மையும் துரத்தும் பரதவர்களின் வாழ்க்கையை பேசும் ஆழிசூல் உலகு போன்ற பெருநாவல் கூட தியாகத்தையே மையப்புள்ளியென சித்தரிக்கிறது. ஆனால் சமூகத்தின் சீர்கெட்ட நிலை குறித்த விமர்சனமாக அல்லது சமூக சீர்கேடு படைப்பாளியின் தனி வாழ்வில் நிகழ்த்திவிட்ட பயங்கரம் குறித்த ஓலமாக மட்டுமே தமிழ் இலக்கியத்தில் தீமை பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளது. அதாவது தமிழில் தீமை கருணை அல்லது விசனத்துடன்தான் பெரும்பாலும் அணுகப்பட்டிருக்கிறது.

ஆ மாதவனின் கதைகளில் வெளிப்படும் தீமையின் அம்சத்தை இலக்கிய முன்னோடிகள் நூலில் ஜெயமோகன் மிக விரிவாக எழுதியிருக்கிறார். சமீபத்தில் கே என் செந்தில் ஆ மாதவனின் சிறுகதைகளைப் பற்றிய கட்டுரையில் அக்கதைகளில் வாசகனை நிலைகுலையச் செய்யும் தீமையின் புள்ளிகளை தொட்டுக்காட்டி பேசியிருக்கிறார். போகன் சங்கர் மனித வாழ்வில் தீமை என்கிற அம்சம் இன்றியமையாததாக இருப்பதை ஒட்டி ஆ மாதவனின் புனைவுலகை புரிந்து கொள்ள முயல்கிறார். ஆகவே ஆ மாதவனின் எழுத்துக்களை தீமை என்ற அம்சத்தை தவிர்த்துவிட்டு அணுகவே இயலாது என்ற தோற்றம் ஏற்படுகிறது. தீமை என்கிற சொல்லை ஆ மாதவனின் கதைகளை முன்னிட்டு அணுகுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

கிருஷ்ணப் பருந்து நாவலில் எந்தவித பெருங்குற்றமும் நடைபெறுவதில்லை. (ஆ மாதவனின் பிற ஆக்கங்களுடன் ஒப்பிட்டால் ஒரு சாதாரண கொலை கூட நடைபெறவில்லை!) ஆனாலும் ஒரு சிறுகதையின் கச்சிதத்துடன் முடியும் நாவலின் இறுதி வரிகள் (கிருஷ்ணப்பருந்தை ஒரு நெடுங்ஙதையாக வாசிக்கலாம் என்பது என் அபிப்ராயம்) நாவலுக்குள் குருஸ்வாமியை கூர்ந்து கவனித்துவரும் வாசகருக்கு நிலைகுலவை அளிக்கவல்லவை. இது ஏன் நிகழ்கிறது? கிருஷ்ணப் பருந்தின் பெரும்பகுதி குருஸ்வாமியின் வாழ்க்கை குறித்த தன் விசாரங்களாவே நகர்கிறது. இந்த தன் விசார நிலை நடைமுறை சமூக வாழ்வுக்கு எதிரானது. கலைஞர்களும் ஞானிகளும் வெவ்வேறு வகையில் இந்த விசாரத்தில் ஈடுபட்டவண்ணமே இருக்கின்றனர். அவர்களுக்கு லௌகீக வாழ்க்கை இடராகவும் துயராகவும் இருப்பது இந்த விசாரத்தால்தான். ஆனால் மனித உடல் லௌகீகத்துடன் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. உணவும் காமமும் வெற்றிபெறுதல் கொடுக்கும் இன்பமும் லௌகீக பிணைப்புமிக்கவை. உடல் இவற்றில் ஈடுபடும்போது அகத்தால் மேன்மை என்று நம்பப்படும் ஒன்றை நோக்கி நகர முடியாது என்பதாலேயே உடல் ருசி சார்ந்தவற்றை மேல்நிலையாக்கம் செய்து கொள்கிறோம். குருஸ்வாமியும் மொழி வழியாகவும் ஓவியம் வழியாகவும் தன் இச்சையை மேல்நிலையாக்கம் செய்ய முயன்றபடியே இருக்கிறார். வேலப்பனின் இடையீடு அவரை நிலைகுலையச் செய்கிறது. தன் அகத்துடன் தனித்து அமர்ந்திருக்கும் குருஸ்வாமி மெல்லக் கீழிறங்கி வருகிறார். இறுதியில் அந்த குழப்பத்துடன்தான் அவர் ராணியிடம் காமத்தை இரஞ்சுகிறார். அவர் ராணியிடம் எதிர்பார்ப்பது காதலை. ஆனால் அவள் வழங்க முன்வருவது உடலை. ஒருவகையில் குருஸ்வாமியின் சரிவின் தொடக்கம் என்று இந்தப் புள்ளியை சொல்ல முடியும். குறியீட்டு ரீதியாக சாலைக்கடைக்கு வெளியே தனித்து வாழும் குருஸ்வாமி சாலைக்கடையில் ஒருவனாக மாறும் தருமென்று சொல்லலாம். ஆ மாதவனின் ஆக்கங்களில் கிருஷ்ணப் பருந்து மட்டுமே லட்சிய நிலையின் சரிவைச் சித்தரிக்கிறது. மற்ற அனைத்து கதைகளும் லட்சிய நிலையிலிருந்து இறங்கி வந்துவிட்ட மனிதர்களால் நிகழ்த்தப்படும் குரூரங்களும் அவற்றால் அவர்கள் அடையும் இன்பங்களும் துயர்களும் என்றே நகர்கின்றன.

ஆ மாதவன் கடைத்தெருவின் கதைசொல்லி, கடைத்தெருவின் கலைஞன் என்றெல்லாம் அடையாளப்படுத்தப்படுகிறார். நற்றிணை வெளியீடாக வந்திருக்கும் 66 சிறுகதைகள் கொண்ட தொகுப்பை வாசித்தபோது இந்த ‘கடைத்தெரு’ அடைமொழி குறித்து ஆச்சரியமே ஏற்பட்டது. அத்தொகுப்பில் முதல் இருபது கதைகளில் கடைத்தெரு பெரிதாக ஊடாடுவதில்லை. ( பின்னர் தொகுக்கப்பட்ட கதைகள் என்பதால் பிரக்ஞைபூர்வமாக ஆசிரியர் அக்கதைகளை நூலின் பிற்பகுதியில் கொண்டுவந்திருக்கலாம். தொகுப்பில் கதை வெளியான ஆண்டு கதைகளின் இறுதியில் இடம்பெறவில்லை.) ஒரு எதிர்விளைவாக ஆ மாதவனின் கதைகளைப் பற்றிய ஒரு எதிர்மறைச் சித்திரத்தைக்கூட தொகுப்பின் தொடக்கத்தில் இடம்பெறும் கதைகள் அளிக்கின்றன. காமம் என்கிற ஒரே புள்ளியைச் சுற்றியே இக்கதைகள் சுழல்கின்றன. ஆனாலும் இக்கதைகளில் பிற எழுத்தாளர்களிடமிருந்து ஆ மாதவனை தனித்து நிறுத்தும் அம்சம் காமம் சார்ந்த பட்டவர்த்தன தன்மைதான். கதைமாந்தர்கள் யாரும் காமத்தை மனதில் பூட்டிவைத்து புழுங்குகிறவர்களாக இல்லை. இறக்க கிடக்கும் மனைவிக்கு உதவி செய்யும் பெண்ணிடமும் (மோகபல்லவி)அண்ணியாக வர இருப்பவளிடமும்(மூட சொர்க்கம்)  வேசியாக அறியப்பட்டு பின்னர் ஒருவனை மணந்து ஒழுக்கமாக வாழ்பவளிடமும் (தேவ தரிசனம்) தன்னுடைய இச்சையை வெளிப்படுத்துவதில் ஆண்களுக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை. இக்கதைகளில் கவனிக்க வேண்டிய அம்சம் இவற்றில் எதிலுமே இந்த இச்சை வெளிப்பாடுகளுக்கு காதலென்ற முன்பூச்சு இல்லை என்பதுதான். அத்தனை ஆண்களும் நேரடியாக உடலையே கோருகின்றனர். காதல் போன்ற பேசிப்பேசி முன்னிறுத்தப்பட்ட மெல்லுணர்வுகள் ஆ மாதவனின் கதைகளில் செல்லுபடியாவதில்லை. ஆனைச்சந்தம் போன்ற கதைகளில் தொடக்கத்தில் வெளிப்படும் காதல்கூட உடலிச்சையாக வெளிறித்தான் போகிறது. பெண்கள் மீதான ஆண்களின் விழைவு மேலும் தொன்மையானதாக அதனாலேயே உக்கிரமானதாக விழைவு கொள்ளும் பெண்ணின் மனநிலைகளைப் பொருட்படுத்தாததாக இருக்கிறது. இந்த வகைமைக் கதைகளில் பாம்பு உறங்கும் கடல் ஒரு உச்சம். அக்கதையில் பயின்று வரும் படிமங்களும் தொன்மையானவை. பிரம்மச்சாரியான வாசுப்போற்றிக்கு கோவிலுக்கு வரும் கார்த்தியாயினி வெறும் ‘அழகான பெண்’ அல்ல. கையில் அமுதகலசம் ஏந்தியிருக்கும் மோகினி. ஆனால் வாசுப்போற்றி தன் இச்சையை – அது பிரியமல்ல இச்சை மட்டுமே – கார்த்தியாயினியிடம் வெளிப்படுத்துவதே இல்லை. ஆனால் ஒரு நாகப்பிரதிஷ்டையின் முன் சன்னதம் கொள்ளும் கார்த்தியாயினி ‘வாசுப்போற்றி ஒரு பாபி அவனை ஊர் விலக்கம் செய்யுங்கள்’ என்று அலறுகிறாள். வாசுப்போற்றியின் ஆழத்தில் உறங்கும் இச்சையை கவனித்திருந்த கார்த்தியாயினியின் ஆழம் வெளிப்படும் இடமாக நாகப்பிரதிஷ்டையின் முன் அவள் கொள்ளும் சன்னதத்தை விளங்கிக் கொள்ளலாம். பாம்பு உறங்கும் கடல் எனும் தலைப்பே இக்கதையில் இவ்வாறு பல தளங்களை திறக்கக்கூடியது.

தியானம், பல்லவி போன்ற கதைகள் பெண்களின் பார்வையில் காமத்தை பேசுகிறவை. காதலனின் அன்பைப் பெற இயலாமல் போகுமோ என்று பெற்ற குழந்தையை அதன் மீதே புரண்டு கொல்கிறாள் ஒரு பெண். பெண்ணின் பார்வையில் விரியும் காமத்துக்கு இக்கதை ஒரு சான்று.

ஆ மாதவனின் கதையுலகில் மேற்சொன்னதுபோன்ற உக்கிரமான தொந்தரவு தரக்கூடிய சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. மாற்றி மாற்றி புணரப்பட்டதால் செத்துப்போகும் பெண்(எட்டாவதுநாள்) கொதிக்கும் தாரில் விழுந்து இறக்கும் சிறுவன்(ஈடு), புறாமுட்டைக்காக வெறியுடன் கம்பத்தில் ஏறி புறக்காளாலேயே கொத்தப்பட்டு சாகிறவன் (புறாமுட்டை) என்று பல உதாரணங்களைத் தர இயலும்.

இந்நூலில் அடுத்தகட்டமாக உள்ள கதைகள் இச்சை வெளிப்பாடு என்கிற இடத்தைக் கடந்து செயல்பட்டாலும் தொடக்கத்தில் உள்ள கதைகளில் வெளிப்படும் தரிசனமே இக்கதைகளையுமே இயக்குகிறது. சாளைப்பட்டாணியின் நினைவுகள் வழியே நகரும் எட்டாவதுநாள் ஒரு உதாரணம். எட்டு நாளில் இறக்கப்போகும் சாளைப்பட்டாணி தான் செய்தவற்றை அசைபோட்டு பார்ப்பதாக இக்கதை நகர்கிறது. சாளைப்பட்டாணி இழைத்த குற்றங்களும் கதையில் தொடர்ந்து சொல்லப்படுகிறது. இக்கதையுடன் பாவத்தின் சம்பளம் என்ற கதை இணைத்து வாசிக்கத்தக்கது. இரு கதைகளிலுமே மையப்பாத்திரம் இயற்றிய ‘பாவம்’ குறித்து பேசப்படுகிறது. ஆனால் எட்டாவது நாளில் சாளைப்பட்டாணியிடம் பாவத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை வந்துவிடுகிறது. ஆனால் பாவத்தின் சம்பளம் தண்டனையின் உக்கிரத்தை பேசும்கதை. தங்கராஜ் ஒரு ‘பாவத்தை’ செய்கிறான். உடற்குறைபாட்டுடன் பிறந்த ஆறு வயது மகன் இறந்துபோகிறான். ஆனால் இறந்தவன் மீண்டு வரும்போது உண்மையில் பாவத்திற்கான தண்டனை எது என்ற கேள்வி எழுகிறது. பாவம் தண்டனை குறித்த விசாரம் வேறு சில கதைகளிலும் வெளிப்பட்டாலும் அன்னக்கிளி என்ற கதை பாம்பு உறங்கும் கடல் கதை போலவே நுட்பமானது. உடற்குறைபாடுடைய அன்னக்கிளி எதிர்வீட்டிலிருக்கும் கணவனும் மனைவியும் சல்லாபிப்பதை எட்டிப்பார்த்துக் கொண்டே இருக்கிறாள். எதிர்வீட்டுப்பெண் கர்ப்பமாகி குழந்தை பெறவிருக்கும் சமயத்தில் இறந்து போகிறாள். கணவன் உடைந்து அழுவதைக் கண்டு அன்னக்கிளி சிரிக்கிறாள். இக்கதையில் அன்னக்கிளியிடமிருந்து வெளிப்படும் ஒரே ஓசை அந்த சிரிப்பு மட்டுமே. அந்த தம்பதியர் செய்த ‘பாவம்’ என்ன என்று அன்னக்கிளியின் சிரிப்பின் பின்னணியில் யோசிக்க வைப்பதே இக்கதையின் வெற்றி. காமத்தை ஆ மாதவன் சற்று வெறுப்புடன் அல்லது ‘தவிர்க்க முடியாத தீமையாகவே’ அணுகிறார் என்று சொல்லலாம். குழந்தை என்ற ஒரு கதை மட்டுமே குழந்தையின் பார்வையில் நிகழ்கிறது. அக்கதையிலும் அக்குழந்தையின் பெற்றோருக்கிடையேயான கூடல் சற்று அருவருப்பானதாகவே சித்தரிக்கப்படுகிறது.

அந்தரங்கம் இத்தொகுப்பில் உள்ள நல்ல பகடிக்கதை. பாச்சி என்ற கதையை ஆ மாதவனின் ‘மானுட நேசத்தின்’ மீதான விமர்சனமாக வாசித்துப் பார்க்கலாம். இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்திலும் மனிதர்கள் கடுமையான துயர்களை அடைகிறார்கள் அபத்தமாக செத்துப் போகிறார்கள் வாழ்க்கையின் மீதான பிடிப்பினை கைவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் மீதெல்லாம் ஆசிரியருக்கு எங்குமே பச்சாதாபம் தோன்றுவதில்லை. பதினாலு முறி கதையின் கடைசி வரியால் அக்கதை மட்டும் ஒரு விதிவிலக்காகிறது. ஆனால் பிற கதைகளில் எங்குமே கதைமாந்தர்களுக்கென நம்மால் இரக்கம் கொள்ள முடிவதில்லை. ஆனால் பாச்சியின் இறப்பு அப்படியில்லை. பாச்சி இறந்து கிடப்பதை நாணுக்குட்டன் பார்ப்பதில் இருந்துதான் கதை தொடங்குகிறது. பாச்சியைப் பற்றிய நாணுக்குட்டனின் நினைவுகளாக கதை விரிகிறது. இக்கதை மிக நேரடியானது. தான் வளர்த்த நாயின் இறப்பு குறித்த அவசம் கடுமையானது. அது அப்படியே சொல்லப்படுகிறது. ஆனால் இத்தொகுப்பில் நேசத்தின் ஈரம் கசியும் சற்றே உணர்ச்சிகரமான ஒரே கதை பாச்சி மட்டுமே. மனிதர்கள் அந்தளவுக்கு பரிவுடன் அணுகப்பட வேண்டியவர்கள் அல்ல என்று எடுத்துக் கொள்ளலாமா?

இத்தொகுப்பின் கதைகள் பெரும்பாலானவற்றில் காமம் விரவிக் கிடந்தாலும் முழுவதும் வாசித்துப் பிறகு நூலினை புரட்டிப் பார்க்கும்போது தொகுப்பின் சிறந்த கதைகளாக அடையாளப்படுத்தப்படக்கூடியவை எல்லாம் ‘பாவனைகளற்ற காமம்’ என்பதைக் கடந்த வேறொன்றை சித்தரிப்பதாகவே உள்ளன. பாச்சி அவ்வகை கதைகளுக்கு ஒரு உதாரணம்.

ஈடு நேரடியாகவே சமூக விமர்சனத்தொனி கொண்ட கதை. மகனின் இறப்பு கொடுக்கும் பணம் தாயின் ஆர்வமாகவும் தந்தை குடித்துவிட்டு எடுக்கும் வாந்தியாகவும் மாறிப்போகும் இடத்தில் ஊழல் நிறைந்த சமூகத்தின் மீதான விமர்சனம் என்பதைத் தாண்டி மானுட அகத்தின் இருளை இன்னும் நெருங்கிப் பார்க்கச் செய்வதாக மாறிவிடுகிறது.

இத்தொகுப்பின் மற்றொரு சிறந்த கதை ஆ மாதவனின் கதைகளில் பிரபலமான கதையான நாயனம். தொகுப்பின் பிற கதைகளில் வெளிப்படும் குற்றமோ காமமோ இக்கதையில் வெளிப்படுவதில்லை. சமூக கூட்டுமனதில் முளைவிடும் வெறுப்பை இக்கதை தொடுகிறது. பொதுவாக இருத்தலியக்கதைகள் தனிமனித அகத்தின் பிறழ்வுகளையே பேசும். இத்தொகுப்பிலேயே பொய்யாய் கனவாய், சுசீலாவின் கதை போன்ற அப்படியான கதைகள் உள்ளன. ஆனால் நாயனம் கதையில் கொடூரமான நாயன ஓசை பிண ஊர்வலத்தில் செல்லும் அத்தனை பேரிலும் அந்த வெறுப்பைத் தூண்டுகிறது. அதில் ஒருவன் அந்த நாயனத்தை உடைத்துப்போட்டு வாசிப்பவனை விரட்டிவிட்டதும் அத்தனை பேருமே விடுதலை அடைகிறார்கள். கூட்டு உளவியலை பேசும் இக்கதை அவ்வகையில் முக்கியமானதாகிறது.

புறாமுட்டை ஆ மாதவனின் கதைகள் அனைத்துக்கும் ஒரு குறியீடு போன்ற கதை. கன்னியப்பனுக்கு என்னதான் வேண்டியிருந்தது? அவனை சுரண்டும் ஒரு அமைப்பில் உள்ள அத்தனை பேரும் அன்று அவனிடம் அன்புடன் நடந்து கொள்கின்றர். அவனுடைய வயிற்றுத்தேவை பூர்த்தியாகிறது. உண்ண முடியாத அளவு மேலும் மேலும் கூட கிடைக்கிறது. ஆனாலும் அவன் ஏன் ஆபத்தான இடத்திலிருக்கும் புறாமுட்டைக்கு ஆசைப்படுகிறான்? அதை அடைய நினைக்குந்தோறும் ஏன் அவனுக்கு அவ்வளவு வெறி ஏறுகிறது? அவனுடைய வெறிக்கு காரணம் பசியில்லை. அவனை யாரும் அவமதிக்கவும் இல்லை. அம்முட்டைகளை எடுக்க முடியுமா என்று சவால் விடவுமில்லை. ஆனால் அவனே ஒரு எதிரியை தனக்கு முன்னே வரித்துக் கொள்கிறான். தன் இலக்கையும் அடைகிறான். ஆனால் இலக்கடைந்த பிறகே திரும்பிச் செல்லும்பாதையின் ஆபத்து புரிகிறது. புறாக்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவன் செத்துக் கொண்டிருக்கும் இடத்தில் கதை முடிகிறது. சற்று யோசித்தால் கன்னியப்பனைத்தான் நம்முடைய ‘தன்னம்பிக்கை நூல்கள்’ மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கின்றன என்பது நமக்கு விளங்கும். ஆனால் வாழ்க்கையை நம்பிக்கையுடன் அணுகக் கற்றுக்கொடுக்கும் எழுத்துக்கள் மனிதனை உள்ளிருந்து குடைந்து கொண்டே இருக்கும் இந்த புறாமுட்டைக்கான அபயகரமான ஏக்கத்தைப் பற்றி பேசுவதில்லை. காதலையும் வீரத்தையும் நிர்வாணமாக்கினால் காமமும் வன்முறையுமே எஞ்சுகின்றன. இது நாம் அறிந்ததே. ஆ மாதவனின் கதைகள் அதை மீண்டும் மீண்டும் உறுதிபடுத்துகின்றன. ஆனால் இந்த புறாமுட்டைக்கான ஏக்கம் இன்னும் ஆழமானது. அது லட்சியவாதம் என்பதை கேள்விக்குட்படுத்துகிறது. லட்சியவாதமும் ஒரு வகையில் ஆடையுடுத்திய புறாமுட்டைக்கான ஏக்கமாக இருக்கலாம் என்ற புள்ளிவரை இக்கதை வாசகனை நகர்த்துகிறது.

சத்தியத்தின் பலகீனம் என்றொரு வரி  தேவதரிசனம் கதையில் வருகிறது. படித்து உடனேயே உண்மை என்று ஒத்துக்கொள்ளச் செய்யும் வரி. சத்தியம் அவ்வளவு பலகீனமாதுதான். அதனால்தான் நாம் மீண்டும் மீண்டும் சத்தியத்தையும் சத்தியசோதனைகளையும் எழுதிப் பார்க்கிறோம். ஆனால் அந்த பலகீனத்தைக் களைந்தால் நம்முள் இருப்பது இந்த புறாமுட்டைக்கான ஏக்கம் மட்டும்தானோ?

0 ஆ. மாதவன் கதைகள் முழுத் தொகுப்பு – நற்றிணை பதிப்பகம்

சுரேஷ் பிரதீப்

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடர்ச்சியாக புனைவுகள், விமர்சனங்கள் எழுதிவருகிறார். அழகியலை முன்னிலைப்படுத்தி எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளை நுட்பமாக மதிப்பிடுபவர். ஒளிர் நிழல் என்ற நாவலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன.

உரையாடலுக்கு

Your email address will not be published.