/

பிரமாதமான விபத்து: இசை

நாட்படுதேறல்- 2

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்

உழத்தொறூஉம் காதற்று உயிர்.

                                         ( திருக்குறள்- சூது- 940)

பொருளை இழக்க, இழக்க சூதின் மீதான வேட்கை மிகுந்தெழுவதைப் போல,  துன்பம் நம்மை வருத்த, வருத்த வாழ்வின்  மீதான காதல் மிகுந்தெழுகிறது.

எப்போது இந்தக்குறளை நினைத்துக் கொண்டாலும் கொஞ்சம் அழுத்தியே நினைக்கிறது என் மனம். அதாவது அடி வரையறைகளை மறந்து சொற்களைப் பெருக்கிக் கொள்கிறது…

‘இழத்தொறூஉம் இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்

 உழத்தொறூஉம்  உழத்தொறூஉம்  காதற்று உயிர்.’

 சொற்கள் பெருகி உணர்ச்சி அலையடித்து கண்களில் நீர் கோர்த்துக்    கொள்கிறது.

‘சூது’ அதிகாரத்தின் கடைசி குறள் இது. இதில்  சூதைக் கடிவதுதான் அய்யனின் நோக்கம். ஆனால் அவ்வளவு வலுவாகக் கடிய இயலாமல் ஒருவித மயக்கத்திற்குள் இருக்கின்றன இக்குறளின் சொற்கள். முதல் மயக்கம் சூதின் வசீகரம் ஒரு ‘மீறல்’ என்பதாகத் தொனிக்காமல், ‘இயல்பு’ என்பதாகவே ஒலிக்கிறது. இயல்பை எப்படி நோக முடியும்? இரண்டாவது மயக்கம் சூதைக் கடியவந்த அய்யன் அதைக் காட்டிலும் நுட்பமான ஒன்றை இரண்டாம்வரியில் சொல்லிவிடுகிறார். நம் மனம் சூதை மறந்துவிட்டு அதில்போய் அமர்ந்து கொள்கிறது. எனக்கு இக்குறள் ‘இரண்டாம் அடிதான்’.  ஒன்றைச் சொல்ல வந்துவிட்டு, அதை விடுத்து, அல்லது அதைக்காட்டிலும்  உச்சமான வேறொன்றைச் சொல்லிவிடுவது என்பது எழுத்துச் செயல்பாட்டில்  நிகழக்கூடியதுதான் அந்த விபத்து அய்யனுக்கும் நேர்ந்திருக்கலாம். ஆயினும் எவ்வளவு பிரமாதமான விபத்து!

சூதில் ஒரு பயங்கர அழைப்புண்டு. அதை மறுதலிக்க சூதாடிகளால் ஒருபோதும் இயன்றதில்லை. நமது இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதமே சூதின் மீது தானே நிகழ்கிறது. மனைவியைப் பணயம் வைத்து ஆடிய ஆட்டத்தைப்  படித்து வளர்ந்த பிள்ளைகள் நாம். சூதின் இருளும், வசீகர ஒளியும்  இயல்பாகவே வாழ்விற்குக் குறியீடாகி விடுகிறது. சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ” வாழ்வெனும் சூதாட்டம்” கதையில் ஒருவன் ஒற்றை ஆளாக அமர்ந்து கொண்டு சீட்டாடுகிறான். எதிராளிக்கும் சேர்த்து அவனே விளையாடுகிறான். தானே இரண்டாகி தமக்குள் ஆடும் சூதாட்டம் அது. அதை ஆடாத மனிதஉயிர் என்று பூமியில் ஒன்றுமில்லை.

அய்யனுக்கு இக்குறளின் முதல்வரி முதன்மை. இரண்டாம் வரி உவமை. என்னுடைய வாசிப்பிலோ இரண்டாம் வரி முதன்மை. முதல் வரி உவமை. ” உழத்தொறூஉம் காதற்று உயிர்” என்கிற வரி என்னைப்  பார தூரங்களுக்கு இழுத்துச் செல்கிறது. இதற்கு உரை சொல்லும் பரிமேலழகர் ‘ உடல் இச்சையால் துன்பங்கள் நேரும் போதும் அதை வெறுத்தொதுக்க இயலாது அதன் பின்னே செல்லும்  உயிர் போல’ என்பதாகச் சொல்லிச் செல்கிறார். அதாவது ” உடல்” என்கிற சொல்லை இடையில் பெய்து உரை சொல்கிறார். பிற்காலத்து உரையாசிரியர்களும்   அழகரைத்  தொடர்ந்து உடல் என்கிற சொல்லைப் பெய்தே   உரை சொல்லி  வைத்திருக்கிறர்கள். அவர்கள் ‘ உடலுக்கு நேரும் துன்பம்’ என்று வெறும் உடல் உபாதையாக இக்குறளை மேலும் குறுக்குகிறார்கள். மணக்குடவர் உரையில் ” உடல்” இல்லை. ” துன்பத்தை உழக்குந்தொறும் இன்பத்திலே காதலுடைத்து உயிர்” என்கிறது அவ்வுரை. இவ்வுரையே  இக்குறளை எல்லையற்று விரித்துக் கொள்ள உதவுகிறது. எனவே எனக்கும் இதுவே உவப்பானது. அதாவது ‘ எவ்வளவு துயரத்திலும்  அணையவே அணையாத வாழ்வின் மீதான வேட்கை’.  ” உயிர்”  என்கிற சொல்லை வெறும் உடலாக நாம் குறுக்கிக் கொள்ளத்தான்  வேண்டுமா?  உயிரிச்சை உடலிச்சையையும் சேர்த்ததுதான்.  ஆனால் அது மட்டுமே அன்று.  புலரிப்பொழுதில் வாழ்வை நோக்கிப் பறக்கும் ஒரு அழகான பறவை இக்குறள்.  அப்படி அதைப் பறக்கவிடவே நானும்  விரும்புகிறேன்.

வாழ்வு அநித்தியம் என்பது எல்லோருக்கும் தெரியும். வாழ்வு மெல்ல மெல்லச் சாவை நோக்கித்தான் நகர்கிறது. ஆனாலும் ஒவ்வொரு வருடமும்,  அவ்வளவு ஆர்ப்பாட்டமாக ” Happy birth day”-  க்களை கொண்டாட  ஒருபோதும் நாம் மறப்பதில்லை. ஏனெனில் ” black Forest ” அந்தத் தருணத்து நித்தியம்.

‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்று ரயிலெதிரே நின்றுவிடாமல், அந்த ரயிலைப் பிடித்து எங்கேனும் தப்பிவிடத் துடிப்பவன் இந்த வாழ்வோடு தொடர்ந்து சூதாடத் துணிகிறான். துன்பம் அழுத்த அழுத்தத் திமிறிக் கொண்டு எழுகிறான். அடுத்தநாள் ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து விடும் என்று அவ்வளவு உறுதியாக நம்புகிறான். தோல்வி தன்னைக் கண்டு சிரிக்கையில் அதனெதிரே நின்று தானும் சிரிக்கப் பழகிக் கொள்கிறான். எவ்வளவு பைத்தியகாரத்தனமானதாக இருந்தாலும், வாழ்வில் ஏதேனும் ஒரு வேட்கை மிச்சமுள்ள வரை, வாழ்வும் மிச்சமிருக்கிறது.

எம்.கோபாலகிருஷ்ணனின் சமீபத்திய நாவலான ‘தீர்த்த யாத்திரை’ யில் ஒருத்திக்கு ” மீன் உடல்” . இந்தியாவில் ஓடும் எல்லா ஆற்றிலும் நீந்திக் களித்துவிட  வேண்டும் என்பது அவள் ஆசையாக உள்ளது. இப்படி எல்லா ஆற்றிலும் நீராடினால் என்ன கிடைக்கும்? பொன் கிடைக்குமா? பொருள் கிடைக்குமா? புகழ் கிடைக்குமா? ” LIMCA BOOK OF RECORDS” – சை நோக்கிய ஓட்டமல்ல இது.  தன்னைத் தான்  நிரப்பி வாழும் இன்பம்.

போர்முனைகளில், பதுங்கு குழிகளில் மரணம் அருகாமையில் இருப்பது நமக்குத் தெரியும். மரணத்திலிருந்து வாழ்வும் அவ்வளவு அருகாமையில் இருப்பதைப் பேசுகிறது அ.முத்துலிங்கத்தின் ” எல்லாம் வெல்லும்” என்கிற சிறுகதை.

“பதுங்கு குழியில் காயம்பட்டு வேதனையோடு முனகிக்கொண்டு இருந்த குழந்தைகள், விஜய் நடித்து வெளிவந்த ‘சிவகாசி’ படத்தை டி.வி-யில் பார்த்தார்கள். பசியையும் வேதனையையும் மறந்து, அவர்கள் படத்தில் ஆழ்ந்துபோய் இருந்ததைப் பார்த்தபோது, துர்க்காவுக்கு மனதைப் பிசைந்தது. எந்தத் தாய்மார் பெற்ற பிள்ளைகளோ… அவர்களுக்கே தாயின் முகம் மறந்துவிட்டது. அடுத்த நேர உணவு என்னவென்று தெரியாது. அது எங்கே இருந்து கிடைக்கும் என்பதும் தெரியாது. குண்டு எங்கே விழும், அப்போது யார் யார் மிஞ்சுவார்கள் என்பதும் தெரியாது. இரண்டு கைகளும் போய் மெலிந்து, இழுத்து இழுத்து மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும் கன்னிகா சொல்கிறாள், ‘அக்கா, தள்ளி நில்லுங்கோ, படத்தை மறைக்காமல்!’

கதையில் வருகிற மொழியரசி என்கிற பெண் புலி தன்னை அலங்கரித்துக் கொள்வதில் பெருவிருப்பம் உடையவள். ‘போர் முனையில் துப்பாக்கியைத்  தூக்கிச்சுடும் அந்த நேரத்திலும் துப்பலைத் தொட்டு புருவத்தை நேராக்கிக் கொள்ள மறக்காதவள்’ .   ஒரு காலை இழந்து மரக்கால் பொருத்திய பிறகும்,  சீயக்காயுடன் செவ்வரத்தம் பூக்களை அரைத்துப்பூசி   மணிக்கணக்காகக் குளிப்பவள்.

“ஒருநாள் துர்க்கா கேட்டார்,

‘மொழி,  என்ன அலங்காரம் உச்சமாயிருக்கிறது. உம்முடைய எதிரிகளைத் துப்பாக்கியால் விழுத்தப் போகிறீரா அல்லது இமை வெட்டினால் சரிக்கப்போகிறீரா?’

‘பாவம். என் அழகைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காது. என்னுடைய பிகே துப்பாக்கி 1,500 மீட்டர் தூரத்திலேயே அவர்களைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடும்.’

‘அப்படியானால் இவ்வளவு செவ்வரத்தம் பூக்களை ஏன் வீணாக்குகிறீர்?’

‘எனக்குத்தான். என் தலைக்காகத்தான் அவை பூக்கின்றன!’ “

“நாளை நமதே” என்பது ஆத்மாநாமுடைய ஒரு கவிதையின் தலைப்பு.

“கண்களில் நீர் தளும்ப இதைச் சொல்கிறேன்
இருபதாம் நூற்றாண்டு செத்துவிட்டது”

என்று துவங்கும் கவிதை ,

   இந்தத் துக்கத்திலும்
   என் நம்பிக்கை
   நாளை நமதே

என்று முடிகிறது. செத்ததிலிருந்தும் ஏதேனும் ஒன்று முளைத்தெழும் என்று அவர் நம்ப விரும்பினார்.

  ஒரு கவிதை… என்னுடையதுதான்… ஒரு ‘ரவா ரோஸ்ட்’ நம்மை வாழ்வை நோக்கி அழைப்பதை இக்கவிதையில் காணலாம்

ரவா ரோஸ்ட்

ஒரே மகள்
தீவிர சிகிச்சைப் பிரிவில் கிடக்கிறாள்
விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம்
மாதம் இரண்டாகிறது
இப்போதுதான்  நாளுக்கு ஒரு முறையென
விழித்துப் பார்க்கிறாள்
அப்போதும்
எங்கேயோ பார்த்துவிட்டு கண் மூடிக்கொள்கிறாள்
இவள் சவம் போலாகிவிட்டாள்
இரண்டு நாட்கள் பட்டினி கிடந்தாள்
பிறகு
நான்கு இட்லிகளை வாங்கி
அதில்  இரண்டரையை சாப்பிட்டாள்.
ஒரு நாள்
நான்கு இட்லிகளுடன் வந்த சர்வரிடம்
” ரவா ரோஸ்ட் “ இருக்கா ? என்று கேட்டாள்
வாங்கி உண்டாள்…
முழுசாக   உண்டாள்…
கடைசியில் சுண்டுவிரலைக் கூட  சப்பினாள்
கைகழுவும் வேளையில்தான் உணர்ந்தாள்
தீடீரென இப்படி “ ரவா ரோஸ்ட் “ தின்று விட்டதை.
உணவகம்  ஒலிவீசக்  கத்தினாள்.

இழத்தொறும் காதற்று உயிர்… உழத்தொரும்  உழத்தொரும்  உண்டு ஒரு ரவா ரோஸ்ட் !

இசை

கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

நன்றி : தமிழ் விக்கி

4 Comments

  1. அழகு -இசை.
    குறளுக்கான எழுத்தும் உங்கள் கவிதையும் பொதிகை மலையில் தலை நனைக்கும் சாரல் போல் நினைவிலாகிறது வாழ்த்துகளும் பேரன்பும் ❤️

  2. அற்புதம் ணா..
    கடந்த வருடம் அப்பா கொரனா வார்டில் சிகிச்சையில் இருந்தபோது ஒருவாரம் எதுவும் உண்ணாமல் கஞ்சியும் சாத்துக்குடி ஜூஸூம் மட்டுமே சாப்பிட்டு வந்தார்.
    திடிரென என்னிடம் புரோட்டா கேட்டார் மற்றொரு நாள் பூரி கேட்டார்..
    நினைவெல்லாம் மருத்துவ வாசம்.
    உங்கள் கட்டுரை அதை தூண்டி விடுகிறது.

  3. சபாஷ் இசை…
    குறளுக்கும் குறள் மீதான பிறர் எழுதிய உரைக்குமான விளக்கமும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.நன்றி.

உரையாடலுக்கு

Your email address will not be published.