/

நடுச்சாலைப் புதர்கள்- ஞானக்கூத்தன் கவிதைகளை முன்வைத்து: பாலா கருப்பசாமி

இவரது இயற்பெயர் ரங்கநாதன். திருமந்திரம் வாசித்ததில் ஏற்பட்ட பாதிப்பால் ஞானக்கூத்தன் என்று பெயர் சூட்டிக் கொண்டார். நடை சிற்றிதழில் கவிதைகள் எழுதி வந்தார். கசடதபற இதழ் மூலகர்த்தாக்களில் ஒருவர். பின் ‘ழ’ கவிதையிதழை ஆத்மாநாம், ஆனந்த், ஆர். ராஜகோபாலன் ஆகியோருடன் இணைந்து வெளியிட்டு வந்தார். சிங்கப்பூர், பிரான்சு நாடுகளில் நடந்த கவிதை வாசிப்புக் கருத்தரங்குகளிலும் பங்கேற்றிருக்கிறார். மொத்தம் ஒன்பது கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவரது மறைவுக்குப்பின் (2016), காலச்சுவடு பதிப்பகம் அவரது கவிதைகளை மொத்தமாகத் தொகுத்து 823 பக்கங்கள் கொண்ட ஒரே புத்தகமாகக் கொண்டுவந்தது. பதிப்பாசிரியர் ஞானக்கூத்தனது மகனும் பேயோன் என்ற புனைப்பெயரில் எழுதிவருபவருமான திவாகர் ரங்கநாதன். இந்த முழுத்தொகுப்பையும் ஒரு கவிதை விடாமல் வாசித்ததின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. இந்தத் தொகுப்பின் அச்சுக் குறைபாடுகளாக இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். ஒன்று 823 பக்கமுள்ள புத்தகத்தை பத்திரப்படுத்த ஏதுவாக கடின அட்டையில் வெளியிட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக கவிதைகள் எழுதப்பட்ட காலம் ஒன்றிரண்டு கவிதைகளைத் தவிர எதிலும் குறிப்பிடப்படவில்லை. இத்தனைக்கும் ஞானக்கூத்தன் கவிதைகளில் சில இடங்களில் தேதியும் நேரமும் கவிதையெழுதியபின் குறிப்பிடுவதாக வருகிறது.

ஞானக்கூத்தன் கவிதைகளை சொல்லலங்காரம் சார்ந்தவகையில் வானம்பாடிக் கவிதைகளுடன் ஒப்பிடலாம் என்றாலும் அவை சமூக நீதி, முற்போக்கு போன்ற குணங்கள் இல்லாதவை என்பதால் தனித்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஞானக்கூத்தன் ‘எழுத்து’ இதழுக்குப் பின்வந்த ‘நடை’ சிற்றிதழ் மூலம் அறிமுகமானவர். (சி.சு. செல்லப்பா, ஞானக்கூத்தன் கவிதைகளை எழுத்து இதழில் பிரசுரிக்கவில்லை.)

எந்தக் கலையாக இருந்தாலும் அது கலைப்படைப்பு என்ற தகுதியைப் பெற ‘கவித்துவ’ உணர்வே அடிப்படையாகிறது. அழகு அல்ல. கவித்துவத்தின் விளைபயன் அழகாக இருக்கக்கூடும். கவித்துவம் என்பது என்ன?

அகராதிப்படி, “கற்பனைத்திறனுடன் அல்லது கூருணர்வுடன் (sensitivity) உணர்ச்சிகரமான நடையில் வெளிப்படுத்துதல்” என்று அர்த்தமாகிறது.

கவித்துவமே உருவாக்கப்பட்ட ஒன்றை படைப்பாக நிறுத்துகிறது. அனுமன் நெஞ்சைப் பிளந்து காட்டுவதுபோல ஆன்மா திறந்துகொள்ளும் கணத்தை எடுத்துக் காட்டுவது அது. மெய்மையின் வேரை ஆழப் பதித்து பல்வேறு அர்த்தக் கிளைகளைப் பரப்பியாடும் விருட்சம். கவித்துவம் மனிதன் கைக்கொள்ள வேண்டிய உச்சபட்ச ’தன்மை’ (இரசனை அல்ல).

வோர்ட்ஸ்வொர்த் சொல்கிறார்: ‘கவித்துவம் என்பது கவிதையிலும் மற்ற பிற கலைகளிலும் உள்ள ஒரு துல்லியமான கைக்கொள்ள வேண்டிய இரசனை. தீவிர சிந்தனையாலும், ஒருவரது பன்முகப்பட்ட ஆக்கக்கூறுகளுடன் நீண்டகாலப் பிணைப்பினாலும் உருவாவது. அதுவொரு இயல்பான உணர்திறன்.’

எனவே கவித்துவம் என்று சொல்வதை ஏதோ அழகுணர்ச்சி என்றோ கற்பனாவாதமென்றோ எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த இடத்தில் கவிதைத் திறனாய்வு வரலாறு (சு. வேணுகோபால்) நூலில் இந்திரன் அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களை கவனத்தில் கொள்வது தகும்.

“சங்கக் கவிதைகள் மக்களின் வாழ்விலிருந்து அந்நியப்பட்டதாக இருக்கவில்லை. பரிசுப் பொருள்களுக்காக அரசனை உயர்வு நவிற்சியில் பாடியிருக்கலாம் என்றாலும் கவிதையைப் புனிதப்படுத்தவில்லை. பிற்காலத்தில் கவிதை என்பதும் கவிதைப் படைப்பு என்பதும் மிகவும் பவித்திரமான ஒரு செயல்பாடாகக் கருதப்பட்டது. இந்த மனநிலை மணிக்கொடி பரம்பரையினரிடம் லேசாகப் படிந்திருந்தது. ‘எழுத்து’ கவிஞர்கள் கவிதையை அகவயப்பட்ட பிரதேசத்திற்குள் கொண்டு சென்றனர். பிரமிள் போன்றவர்கள் மேலும் அதனை சமூகத்தின் மையத்திலிருந்து நகர்த்தி ஒரு புனித பிரதேசத்திற்குள் கொண்டுசென்றனர். ந.பிச்சமூர்த்தி கவிதையை ஒரு ஆன்மிகச் செயல்பாடாகப் பார்த்தார். உள்ளொளி, தரிசனம், உத்வேகம் என்று யதார்த்தத்திற்கும் அப்பாற்பட்ட மானிடப் புரிதலாகப் பார்க்கத் தொடங்கினர்”

“கவிதை என்பது கருத்தைச் சுமக்கும் வாகனம் அல்ல, பிரச்சாரக் கருவியல்ல. அது ஒரு அகவயப்பட்ட ஆன்மிக அனுபவமாகக் கொள்வது என்று ‘எழுத்து’ காலத்திலிருந்து தீவிரமாகப் பேசப்பட்டது. கவிதை குறித்து எழுபது, எண்பதுகளில் பேசிய வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி தொடங்கி இரண்டாயிரத்தில் கவிதை குறித்துப் பேசிய பிரம்மராஜன், யுவன் சந்திரசேகர் வரை தூய அழகியல் என்ற அடிப்படையில் பேசினர்.”

“இன்னும் உயர்சாதியினர் போடுகின்ற வட்டத்திற்குள் நின்றுகொண்டேதான் அவர்களுடைய விதிமுறைகளை ஒத்தோ அல்லது எதிர்த்தோ மற்ற சாதியினர் விளையாட வேண்டி இருக்கிறது. ஒத்து ஓடினாலும், எதிர்த்து விளையாடினாலும் ‘வட்டம்’ என்னவோ உயர்சாதியினர் போட்ட வட்டம்தான். அதாவது உயர்சாதியினர் வினைக்கு எதிர்வினையாகத்தான் இங்கே இயங்கமுடிகிறது”.

படைப்பு என்பது ஓர் உன்னத நிலை என்பதாகக் கொண்டு விமர்சனங்களைக் கையாண்ட வெ.சா.வின் பார்வையில் சாதிய மனோபாவம் இருப்பதாக இந்திரன் சொல்கிறார். மேலேயுள்ள கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. இது ஒருவகையில் நான் இங்கே குறிப்பிடும் கவித்துவம் என்பதன் மீதான விமர்சனம்கூட. எனவே இதற்கு பதிலளிக்க வேண்டியுள்ளது.

வெ.சா.வின் பார்வையில் சாதிய மனோபாவம் இருந்திருக்க வாய்ப்புள்ளது. அதை பிரமிள் பட்டவர்த்தனமாக தனது விமர்சனங்களில் முன்வைத்துள்ளார். கவிதையை புனிதப்படுத்துதல் என்று விமர்சனம் வைக்கும்போது இவர்கள் அவற்றை மதரீதியாகச் சுட்டிக்காட்டுகிறார்களா? கிடையாது. ஆனால் அதன்மேல் விழும் ஆன்மிகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். நீட்சே கடவுள் இறந்துவிட்டார் என்று அறிவித்தபின், ஹெகல் காலகட்டத்திலிருந்து தத்துவங்களிலிருந்து கடவுள் விடுவிக்கப்பட்டுவிட்டார். அதன் பின்னர் வந்தவை எல்லாமே தனித்தனி துறைசார் கூறுகள். கடவுளின் இடத்தை இன்று கலை நிரப்புகிறது. படைப்புகளுக்கு அப்படியொரு இடத்தை ஏன் தரவேண்டும்? அதற்கான அடிப்படைக் குணாதிசயங்கள் என்ன? நிச்சயம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று யாரும் வரைமுறைப்படுத்திவிட முடியாது. கவிதையை எப்படி வேண்டுமானாலும் படைக்கும் சுதந்திரம் கவிஞருக்கு உள்ளது. பேச்சுமொழியில் கவிதை எழுதுவதையோ, ஒரே பத்தியாக எழுதுவதையோ யாரும் கவிதை இல்லை என்று சொல்லமுடியாது. அதாவது வடிவம் கவிதையைத் தீர்மானிப்பதில்லை. அவை வெளிப்படுத்தும் உணர்வுநிலைதான் கவித்துவம். அது கடவுள் இடத்தை நிரப்பத்தக்கது. கண்ணாடி உருவத்தை வெளிக்காட்டிக் கொள்வதைப்போல இன்று மனிதன் தன்னை அப்படியே பிரதிபலிக்கக்கூடிய, அகத்தைக் காட்டக்கூடிய ஒன்றையே படைப்பில் தேடுகிறான்.

மதம், சடங்குகள் சார்ந்த ஆன்மீகத்துக்கும், அகத் தேடலுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. தன்னுள் எழுப்பும் கேள்விகள், கண்டடைதல்கள், நெகிழ்ச்சி, அத்தகு தேடலில், மோனத்தில் பிரக்ஞையிலிருந்து அல்லாமல் அந்த உணர்வுநிலை எடுத்துவரும் சொற்கள் என இப்படியாக பின்னப்படும் கவிதையை புனிதமாக ஒரு கவிஞர் கருதுவது அர்த்தமுடையது. இத்தகு குணாம்சங்கள் இன்றியும் கவிதை எழுதப்படலாம், படுகின்றன. அவ்வாறு எழுதப்படுதுவதால் முன்சொன்னவற்றை நிராகரிப்பது அபத்தம்.

போக இலக்கியத்தின் ஆகச்சிறந்த வடிவமாக கவிதையே உள்ளது. எல்லா மொழிகளிலும், எல்லா நாகரீகங்களிலும் நாடுகளிலும் கவிதை போற்றத்தக்கதாகவே கொண்டாடப்படுகிறது. கவிதையை பவித்திரமான ஒன்றாக மணிக்கொடி பரம்பரையினர் தொட்டு சமகாலம்வரை பார்ப்பதன் பின்னால் பார்ப்பனீயம் இருப்பதாகக் கருதுவதும் தவறான பார்வை. ந. பி.யின் கவிதைகள் ஆன்மீகத் தன்மையும் போதனையும் கலந்திருந்ததை மறுப்பதற்கில்லை. பிரமிள் சுற்றியுள்ள புறவுலகை வேறொரு பார்வையில் அவற்றுக்கு உயிரூட்டம் அளித்து சர்ரியலிசத்துடன் கூடிய தொடர் கண்ணிகளை உருவாக்கினார். தான் நம்பக்கூடிய அல்லது தானறிந்த தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கும் அத்தகு பார்வையை, கேள்வியை தெற்குவாசல், கிழக்குவாசல் கவிதைகளில் காட்டியுள்ளார். ஒரு கவிஞனிடமிருந்து அத்தகைய ஒரு கவிதை வரும்போது அந்தப் புள்ளிவரை இருத்தல் குறித்து அவன் என்ன உணர்கிறானோ அவற்றின் சாரம் அனைத்தும் அந்தப் படைப்பில் இருக்கும். (திரும்பவும் வலியுறுத்துகிறேன், இது மட்டுமே கவிதை அல்ல) அப்படியான ஒன்றை புனிதப்படுத்துவதற்கான செயல் என்பது தவறான வாதம்.

மூவாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சீனக்கவிதை ஒன்று:

நாம் சூரியோதயத்தில் வேலை செய்வோம்

நாம் சூரியாஸ்தமனத்தில் ஓய்வெடுப்போம்

குடிக்கவென்று கிணறு வெட்டிடுவோம்

சாப்பிடவென்று நிலத்தை உழுதிடுவோம்

அரசர்களால் நமக்கு என்ன பயன்?

அப்போதே பொதுவுடைமையைப் பாடிய கவிதை. நிச்சயம் பிரமாதமான கவிதைதான். அவரவருக்கு எது அவசியமானதோ, எது தங்கள் மேல் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, தங்கள் சிந்தனைப்பரப்பு என்னவாக இருக்கிறதோ அதிலிருந்தும் அது சார்ந்தும்தான் கவிதை உருவெடுக்கும். தாங்கள் பிரச்சாரத்தை, அரசியல் கருத்தை வலியுறுத்துகிறோம், விழிப்புணர்வூட்டுகிறோம், கடவுளை மறுக்கிறோம் என்று மெய்யியல்தன்மை கொண்ட கவிதைகளை இவர்கள் நிராகரிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் காலகாலமாய் அவை தான் நிற்கின்றன. கவிதைகளில் நிச்சயம் பன்முகத்தன்மை வேண்டும். சோதனை முயற்சிகள் தேவை. இன்ன வரையறைக்குள்தான் இருக்கவேண்டும் என்ற விதிமுறைகள் கட்டுப்பாடுகள் கூடாது. ஒவ்வொருவர் அளவிடும் முறைமை (methodology) மாறலாம்.

சங்கப்பாடல்கள் மக்களின் வாழ்விலிருந்து அந்நியப்பட்டிருக்கவில்லை என்ற வாதத்தையும் கவனிக்க வேண்டும். சீனாவில்கூட ஆதிகாலத்தில் மக்கள் அனைவரும் கவிதை எழுதக்கூடியவர்களாக இருந்தனராம். சாப்பிட வா என்று கூப்பிடுவதைக்கூட கவிதையில் சொல்லக் கூடியவர்கள். திருமணம் செய்து வைக்கும்போதோ, வேலைக்கு எடுக்கும்போதோ கவிதை எழுதத் தெரிந்திருப்பது ஒரு தகுதியாக பார்க்கப்பட்டதாம். ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கவிதையை யார் வேண்டுமானாலும் எழுதலாம், எழுதமுடியும். நாம் செய்வதெல்லாம் கவிதையாக நாம் கருதும் வடிவத்தை முயற்சிக்கிறோம் அவ்வளவே. அந்தப் பாத்திரத்துக்குள் நிரம்புவது கவிதையா இல்லையா என்பது வேறு விவாதம்.

இடதுசாரிகளிடம் ஒரு குறைபாடு உள்ளது. அதை மறைக்க அவர்கள் கடுமையாகப் போராடுகிறார்கள். மனோதத்துவம், அக உலகப் பார்வை, எண்ணங்களற்ற தருணம் இத்யாதியான விஷயங்களைப் பற்றிப் பேசினாலே இவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்குமோ என்னவோ. தட்டையான (அவர்கள் எளிமையான என்பார்கள்) பார்வையில் எதையும் நேரடியாகச் சொல் என்பார்கள். கவிதை எழுதுவது அவர்களைப் பொறுத்தவரை உடல் வருத்திச் செய்யக்கூடிய உழைப்பு. தனக்குப் புரியும்படி சொல்லப்படுவதை மட்டும்தான் அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். கனமான தத்துவங்களை எடுத்துப் பார்க்கும்போது கூட அவர்களுக்கு இந்தச்சிக்கல் வருவதில்லை. கண்ணுக்குப் புலப்படாத அளவு நுணுகி ஆயும்போது அவர்கள் சிக்கலுக்கு உள்ளாகிறார்கள். பாவம்தான்.

கவிதை ஒருசாராருக்கு மட்டுமானதாக இருக்கக்கூடாது. கலை என்பது அனைவருக்கும் பொதுவானது. அல்லது குறிப்பிட்ட வர்க்கம் சார்ந்தோர் தங்கள் உணர்வுகளை தங்களுக்கு உகந்த மொழியில் வெளிப்படுத்த வேண்டும் என்ற இடதுசாரிய விமர்சனம் கவிதைகளில் வைக்கப்படுகிறது. படிமங்கள் நிறைந்ததாய், புரியாததாய் இருப்பதாக இவர்கள் கூறும் பிரமிள் கவிதைகளையே எடுத்துக் கொள்வோம். இன்றும் சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று என்ற காவியம் கவிதை எல்லோருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று. பிரமிளைப் பற்றித் தெரியாதோருக்கும் இந்தக் கவிதை தெரிந்திருக்கும். அடுத்ததாக அவரது கடலும் வண்ணத்துப்பூச்சியும் கவிதை. இது காவியம் கவிதையளவுக்கு இல்லாவிட்டாலும் யார் வேண்டுமானாலும் இலேசாய் நெற்றியை சுருக்கிக்கொண்டு வாசித்துப் புரிந்துகொள்ளலாம். இப்படி கவிதையானது ஒரு கவிஞரிடத்திலேயே பலதரப்பட்டதாக வெளிவருகின்றது. இதற்கு கவிஞர் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. அது திட்டமிட்டு செய்யக்கூடியதல்ல. எனக்கு தமிழ்மொழி கைவந்த கலை. எதையும் என்னால் வார்த்தைப்படுத்திவிட முடியும் என்று முடிவெடுத்து எழுதக்கூடியவை, தன்னை படைப்போடு கரைத்துக் கொள்ளாதவரை படைப்பாவதில்லை. இதை அளவிடும் கருவி இல்லாமல்தான் இவர்கள் தத்துபித்தென்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.

//உள்ளொளி, தரிசனம், உத்வேகம் என்று யதார்த்தத்திற்கும் அப்பாற்பட்ட மானிடப் புரிதலாகப் பார்க்கத் தொடங்கினர்// உள்ளொளி, தரிசனம் என்பவற்றையாவது விட்டுவிடுவோம். ஏனென்றால் இந்த பின்நவீன யுகத்தில் வாழ்வையும் இருத்தலையும் கேள்வி கேட்பவர்கள் அரிதுதான். உத்வேகம் என்பதையெல்லாம் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாகச் சொல்வது அதிர்ச்சியளிக்கிறது. உத்வேகம் என்பது இன்னொரு அர்த்தத்தில் படைப்பூக்கம் என்று சொல்லலாம். இதையே நிராகரித்துவிட்டால் அப்புறம் அதில் என்ன கருமம் இருக்குமென்று புரியவில்லை. பாரதி கலை என்ற கட்டுரையில் (எழுத்து இதழ் 34-35 (1961)) பிரமிள் அவரை மகாகவி என்று நிருவுவதற்கு எடுத்துக்கொள்ளும் அடிப்படை உத்வேகம். அதாவது எல்லோரும் புழங்கக்கூடிய அதே அன்றாட வார்த்தைகளில் உணர்வை தட்டியெழுப்பக்கூடிய வீர்யம் என்பதற்குப் பின்னால், அந்தச் சொற்களூடே ஓடும் மின் தறிப்பும் வேகமும்தான். வேகத்தால் உணர்ச்சியும் அதிலிருந்து வார்த்தைகளும்.

கவிஞர் ஒரு வரியை ஒடித்து அடுத்த வரிக்கு நகர்வதுகூட வடிவத்துடன் ஒத்துப்போவதற்காக அல்ல. வரி முடியுமிடத்துக்கும் அடுத்தவரி தொடங்குமிடத்துக்கும் இடையிலுள்ள அதிர்வை, முறிப்பை, மௌனத்தைக் கடத்துவதற்காகத்தான். இது பெரும்பாலும் கவிஞரிடத்தில் தன்னையறியாமல் நிகழ்வது.

பாரதி மூலம் துலக்கம் பெற்ற புதுக்கவிதை வடிவம், கு.ப.ரா., புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி ஆகியோர் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. பின் எழுத்து இதழ் மூலம் சி.சு.செல்லப்பாவினால் புத்துயிர் பெற்று தனக்கென ஓர் வடிவத்தைக் கண்டடைந்தது. ஒரு காலகட்டம் வரையிலும் மரபுக் கவிதைகளைப் போற்றிவந்த பண்டித்யர்கள் புதுக்கவிதையின் இலக்கண மீறலைக் கடுமையாக எதிர்த்தனர். புதுமைப்பித்தன் புதுக்கவிதைக்கு ஆதரவாக நின்றாலும் புதுக்கவிதை என்ற பெயரில் எழுதப்பட்டவற்றை ஏற்கவில்லை. இதற்கு மணிக்கொடி இதழுக்குள் இருந்த உட்சிக்கல்கள் காரணம் என்று கூறப்பட்டாலும் புதுமைப்பித்தன் கவிதை வடிவமானது இசையை ஆதாரமாகக் கொண்டது. சந்தத்தோடு பாடத்தக்கதாய், செவிக்கினியதாய் வடிவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பு.பி. கவிதைகளும் வாதமும் இருந்தன. எழுத்து இதழ்க் கவிதைகள் செறிவாகவும், இறுக்கமாகவும் தொடர்ந்த நிலையில், அதன்பின் வந்த நடை, கசடதபற, யாத்ரா, கொல்லிப்பாவை எனத் தொடர்ந்தவற்றில் அத்தகு இறுக்கமும் செறிவும் தொடரவில்லை. வானம்பாடிகள் அமைப்பு உருவானபின் (கட்சிசாரா முற்போக்குக் கவிஞர்கள்) கவிதை சிறுபான்மை நிலையிலிருந்து அனைவருக்குமானது என்ற இடத்தை அடைந்தது. செறிவான, ஆழமான கவிதை என்பதற்கு மாறாக எளிமை, சமூகம் சார்ந்த கவிதைகள் வரத் தொடங்கின. இவை அலங்கார எழுத்து நடை கொண்டவையாக அனைவராலும் எழுதமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியவகையில் எழுதப்பட்டன. அந்தவகையில் வானம்பாடியின் தாக்கம் புதுக்கவிதை வரலாற்றில் மிகப்பெரிய ஒன்று. ’இந்த பூமி உருண்டையைப் புரட்டி விடக்கூடிய நெம்புகோல் கவிதையை உங்களில் யார் பாடப்போகிறீர்கள்’ என்று மு. மேத்தா எழுதியபோது அவர்களால் அதைக் கொண்டாட முடிந்தது.

கவிதைகளில் மார்க்சியத் திறனாய்வு மிகப்பெரிய தோல்வி என்பதற்கு ஞானியின் திறனாய்வுக் கட்டுரைகளே சான்று. அவர்களுடைய திறனாய்வுப்படி கவித்துவத்தை அளவிடுவதில்லை. மாறாக சொல்லப்படும் கருத்தே கவனத்தில் கொள்ளப்படுகிறது. அதனால்தான் ஞானிக்கு ஈரோடு தமிழன்பன் மிகச்சிறந்த கவியாகத் தெரிகிறார். இதைத்தான் பிரமிள் அளவுகோல் எதுவாயிருந்தாலும் அளவு ஒன்றாகத்தானே இருக்கவேண்டும் என்று கேட்கிறார். ஒரு பொருளை எடைபோடும்போது அதை கிராமில் அளந்தால் என்ன, கிலோ கிராமில் அல்லது பவுண்டில் சொன்னால் என்ன. மூன்றும் ஒன்றைத்தானே குறிக்க வேண்டும்? உன்னுடைய அளவுகோலில் ஒன்றும் என்னுடையதில் வேறொன்றும் காட்டினால் நம்மில் ஒருவருடைய தராசு தவறு என்றுதானே அர்த்தம்.

புறவுலகின் பிரதிபலிப்பே அகம் என்றார் காரல் மார்க்ஸ். உதாரணமாக நீர்ப்படுகையைப் பாருங்கள். நீருக்கென உருவில்லை. அது தன் புறத்தையே பிரதிபலிக்கிறது. அதனால்தான் புறம் நோக்கிய பார்வையை முற்போக்குவாதிகள் முன்வைக்கிறார்கள். இவர்கள் தன்னிருப்பு என்ற ஒன்றையே மறந்துவிடுகிறார்கள். நீர் என்ற ஒன்று இருந்தால்தான் பிரதிபலிப்பு என்பது அர்த்தம் பெறுகிறது. நீர்ப்படுகையின் மேற்பரப்பில் தெரியும் வானம், மேகம், மரம் இன்னபிற அத்தனையும் அதன் ஆழத்தில் என்னவாக உருக்கொள்கின்றன? ஒளியின் தூரம் எத்தனை? அடியாழ இருளை எவ்வாறு அளப்பது? அங்கு உயிரில்லையா?

கவித்துவம் கலையின் அடிப்படை என்பதுடன் சொற்கள் செல்லக்கூடிய தூரமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இல்லாவிட்டால் இடதுசாரிகளைப் போல தட்டையாகக் கவிதையை உள்வாங்க நேரிடும். ஒருமுறை நண்பரும் கவிஞருமான ராஜன் ஆத்தியப்பனுடன் மனுஷ்யபுத்திரன் கவிதைகள் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது சட்டென்று ஒருவரியில் சொன்னார், ‘அவர் கவிதையைப் பிடித்துக் கொண்டு ரொம்பதூரம் போகமுடியாது’. பளிச்சென்று விளக்கிவிடுகிறது இந்த ஒற்றை வரி. ஆம். அவருடையது கவிதைதான். ஆனால் ஆழமற்றவை. மேற்பரப்பின் அலைகளை ஒவ்வொன்றாகக் கூட்டிப் பெருக்கி வரிகளாக்குபவர். மையத்தில் விழுந்த ஒரே கல். விரியும் ஒரே அலை, பலப்பல வரிகளாக விரிந்துகிடக்கும்.

இந்த இரு அடிப்படைகளை மட்டும் வைத்துக் கொண்டு ஞானக்கூத்தன் கவிதைகளை அணுகினால் அவர் இதுவரை எழுதிய எல்லாக் கவிதைகளையும் மறுதலித்துவிடலாம். ஆனாலும் எந்தக் கவிஞரையும் ஒரேயடியாக நிராகரிக்க முடியாது. எப்படிப் பார்த்தாலும் ஒருசில குறிப்பிடத்தக்க கவிதைகளை எழுதிவிடுபவராகவே ஒரு கவிஞர் இருக்கிறார். முதலில் அந்தக் கவிதைகளைப் பார்த்துவிட்டு கவிஞரின் இன்னபிற கவனத்தில் கொள்ளத்தக்க அம்சங்களையும் பார்ப்போம்.

அழிவுப் பாதை

சொல்லப் பட்டது போலில்லை அழிவுப்பாதை

அண்மையில் அல்லது சேய்மையில்

ஏதோ ஒன்றுக் கேற்ப அஃதிருந்தாலும்:

பறவையின் சாதி உடன்வந்தழைக்க

காலுக் கடியில் பூமி குழைய

நாளையின் வாயில் பெருகிய கானம்

வருகையில் இருப்பவர் பெருமையை விரிக்க

சொல்லப்பட்டது போலில்லை அழிவுப் பாதை

எந்தக் கணமும் கழுத்தில் இறங்க

வானவில்லொன்று எதிரே நகரும்

தாரகை கடந்த ஒருபெரும் விசும்பில்

முடிவின் அருள்முகப் புன்னகை பொலியும்…

நடக்கலாம்; இருக்கலாம்; நிற்கலாம்; படுக்கலாம்

அனைத்தும் ஒன்றுதான் அழிவுப் பாதையில்

முதலடி பதியுமுன் அடுத்ததின் வரவு

அதற்குள் மகுடியின் நாக சங்கீதம்

மகுடியின் தலையே ஒருநாக பூஷணம்

நீல நித்திலத் திராவக மயக்கம்

மகுடியின் துளைவழி பிராணனின் நடனம்:

மகுடி நாதா! வேண்டாம் என்பதா

கேளாமல் கிடைத்து நெளியும் உன் பாடலை:

மகுடி நாதா சுற்றி உள்ளோரை

ஒருமுறை நன்றாய்ப் பார்க்கச் சொன்னாய்

சுற்றி உள்ளோரில் ஒருவனாகிய நானும்

சற்றைக்கு முன்பு நின்றிருந்தேனே.

என் அது கண்டாய் என்னிடம் அப்போது?

அத்தனைப் பேர்களில் என்னை அழைத்தாய்

அழைத்த மாத்திரம் வெளியில் வந்தேன்

வந்த மாத்திரம் நின்றிருந்த இடத்தை

அருகில் இருந்தவர் நகர்ந்து நிரப்பினார்

தலைக்கு மேல்தலை அதற்கும் மேல் தலை

தலைமேல் விழுந்தலை தோளில் விழும் தலை

இடுப்பில் விழும்தலை காலிடுக்கில் தலை

சுவரில் பதித்த விரட்டிக் கூட்டம்

அத்தனைக் கிடையில் மகுடி நாதா

வெட்டாமல் விழுந்தது என் தலை மண்ணில்

சுற்றிலும் ஒருமுறை பார்க்கச் சொன்னாய்

கண்டேன் அந்தச் சித்திரம் பெரிதும்

மாற்றப் படுவதை எப்படிக் கூறுவேன்

மேயக் குனிந்த மாடு மாற்றிற்று

உட்கார்ந்திருந்தவன் எழுந்து மாற்றினான்

பறந்த கூளம் விழுந்து மாற்றிற்று

ஓடி மாற்றிற்றுத் தொலைவிற் றண்ணீர்

கனன்றும் அவிந்தும் தீமாற்றிற்று

மூக்குத் துளைகள் விரிந்து மாற்றின

ஒவ்வொரு மூலையில் ஒவ்வோரிடத்தில்

மாற்றித் தீர்ப்பதே கடமையாய்க் கிடந்ததால்

சித்திரம் முழுவதும் மாற்றப்படுகிறது

உன் மகுடியின் சப்தச் சிலந்திகளில்

நீலம் இறங்கி நிலவு தெளிகிறது

முழுவதும் என்னைப் புகையால் உடுத்தி

அதற்குள் இருப்பதாய் மற்றோர் எண்ண

இல்லாதாகிய என்னை நீ

அழைத்தால் திரளும் ஒரு பொருளாக்கிக்

கேட்கிறாய்: அங்கே இருப்பதைக் கூறு

வானில் தொங்கும் குபேரக் காசொன்று

பக்கம் இரண்டையும் புரட்டிக் காட்ட

அங்கே அங்கே அங்கே பார்க்கையில்

மாற்றிச் சொல்ல வன்மை செய்கிறாய்

மகுடி நாதன் சொல்லிக் கொண்டிருந்தான்

சுற்றி நின்றவர் கேட்டுப் பார்த்தனர்:

புகையில் என்னைக் கூப்பிட் டெடுத்தான்

சித்திரத்தை மாற்றத் தொடங்கினேன் நானும்

உன்னை வீட்டில் தேடுகிறார்கள்

ஆம்:

தான்யம் வேண்டுமே அமுது படிக்கு

கல்லூரியில் சேர்ந்த புதிதில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் பக்கம் சென்றிருந்தபோது அங்கே பாம்பாட்டி ஒருவன் வித்தை காட்டிக் கொண்டிருந்தான். அப்போதுதான் பாம்புவித்தையை முதன்முதலாகப் பார்க்கிறேன். கருப்பு மசி, திருநீறு, சூடம், பாம்பு, மண்டையோடு வைத்து என்னென்னவோ பேசி செய்து காட்டியபின் வடிவேலு படத்தில் காட்டியதுபோல அப்படியே நடந்தது. கையில் முந்நூற்று சொச்சம் வைத்திருந்தேன். போடுங்கள், ஜக்கம்மா திரும்பக் கொடுப்பாள் என்று சொன்னதை நம்பிப் போட்டேன். எல்லோருக்கும் திருநீறு. எனக்கு திருநீறுடன் கருப்பு மையையும் பூசிவிட்டார். கல்லூரி விடுதிக்கு வந்து சேரும்வரை அந்த அதிர்ச்சி மறையவில்லை. எப்படி கேவலமாக ஏமாந்திருக்கிறேன். இதை பலகாலம் யாரிடமும் சொன்னதில்லை. இந்தக் கவிதை அந்த ஞாபகங்களைக் கிளறியது. மகுடி நாதன் முன் கீழே விழுந்துகிடக்க சுற்றிலும் காட்சி மாறுவது ஓவியம் ஃப்ரேம் ஃப்ரேமாக மாறுவதுபோல அருமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஒரு மயக்கநிலைக்கு பார்வையாளனை ஆட்படுத்தி திரும்ப மீட்டெடுக்கும் அனுபவத்தை இந்தக் கவிதை சரியாகப் பிடித்துவிடுகிறது. ஞானக்கூத்தன் கவிதைகளில் இயல்பாகக் காணப்படும் இலயமும் கவிதையின் சர்ரியலிசத் தன்மையும் சரசரவென இழுத்துச் செல்கிறது. இந்த சர்ரியலிசத் தன்மை மேலோட்டமான ஒன்று. ஆழ்ந்த அகமுகப் பார்வையால் விளைந்த வரிகள் அல்ல இவை. இந்தக் கவிதையில் கடைசி மூன்று வரிகளை எடுத்துவிடலாம். இன்னும் சொற்சிக்கனம் காட்டியிருந்தால் கச்சிதமாக அமைந்திருக்கக்கூடிய ஒன்று.

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” என்று பாலைத் திணையை சிலப்பதிகாரம் விளக்குகிறது. இளவேனில், முதுவேனில், பின்பனி பெரும்பொழுதுகளாகவும் நண்பகல் சிறுபொழுதாகவும் உள்ளது. பாலைத்திணை பிரிவாற்றாமையைப் பாடுவது. பாலை என்ற தலைப்பில் ஞானக்கூத்தனின் இந்தக் கவிதை நவீன வடிவில் சங்கப்பாடலை முன்வைக்கிறது.

பாலை

வெளுக்கத் துவைத்து முதல் நாள் வெயிலில்

உலர்த்தி எடுத்த வண்ணச் சீருடை

அனைத்தும் கொண்டு கந்தலை நீக்கி

பூசைப்பசு கோயிலுள் நுழையுமுன் விழித்துக்

காலை குடிக்கும் பால்கொணர்ந்து வைத்து

விடியற் பறவைகள் ஒருசில கூவ

வந்தேன் என்றாள் வராது சென்றாள்

யாருடன் சென்றால் அவரை ஊரார்

பலரும் அறியத் தானறியா மடச்சி

உருக்கி ஊற்றும் சாலைக் கரும்பிசின்

எஞ்சின் உருளைக் கலன்கள் சிதறி

நடப்பார்க் கெளிதாய் வெண் மணல் தூவி

மதியச்சோறு நெடுங்கிளைப் புளியின்

நிழலில் உண்போர் அவரைக் கேட்கவோ

கரையிற் செல்வோர் நிழல் கண்டஞ்சி

சேற்றில் ஒளியும் மீன்நீர்க் குளங்கள்

போகப் போகக் குறையும்

ஆகாச் சிறுவழி அது எது என்றே.

//கரையிற் செல்வோர் நிழல் கண்டஞ்சி சேற்றில் ஒளியும் மீன்நீர்க் குளங்கள் போகப் போகக் குறையும் ஆகாச் சிறுவழி// என்பது பாலைத்திணைப்பாடல் சித்திரம். இயல்பான ஓசை இலயத்துடன் அமைந்த கவிதை இது. எத்தனைதான் நன்றாக எழுதப்பட்டிருந்தாலும் வாசிப்பவருக்கு கவித்துவ உணர்வையோ, ஆழத்தையோ காட்டக்கூடிய கவிதையல்ல இது. ஆனால் கூறல் முறையில் சிறப்பாக அமைந்த ஒன்று.

தம்பி பம்பரம்

ஆட்டத்தில் எட்டாம் ஆட்டம்

ஆரம்பம் சிறார்கள் கூடி

ஆணியால் நிலத்தைக் கீறி

வட்டத்தைப் புதுக்கினார்கள் –

பெரிய பம்பரம் சின்ன பம்பரம்

வண்ணம் குளித்துத் தலையில் பொன்னின்

குமிழி வாய்த்த அழகு பம்பரம்

ஆட்டத்தில் முன்பு பெற்ற

குத்தாணி விழுப்புண்ணோடு

புறப்பட்ட வெற்றிப் பம்பரம்

ஆட்டத்தில் எட்டாம் ஆட்டம்

ஆரம்பம் எமன்கைப் பாசக்

கயிற்றையே ஒப்பதான

பம்பரக் கயிற்றின் வீச்சு

வட்டத்தின் நடுவைக் கொத்தித்

தவறாமல் ஆணிக் காலால்

வட்டத்தைக் கடக்கும் மேதைப்

பம்பரக் கூட்டத்திற்குள்

சின்னப் பம்பரம். பழைய பம்பரம் –

தயங்கும் பம்பரம். ஆட்டம் தோறும்

நடுவில் சிக்கிய விரிசல் பம்பரம்

நடத்தல் கற்காத கால்தடுமாறி

நடுவில் இன்றும் சிக்கிக் கொண்டது

மீண்டும் பம்பரக் கயிற்றின் வீச்சு

வட்டத்தின் நடுவில் வீழ்ந்த

பம்பர வயிற்றில் வெட்டு

குத்தப்பட்ட சின்ன பம்பரம்

துண்டிரண்டாகித் திசைக் கொன்றானது

நெடுக்கில் வெட்டிய

தென் அமெரிக்காப் போல

தேநீரைப் பருகி முடித்தேன்

கண்ணீர் அஞ்சலி செய்தேன். இனி எந்தக்

கயிற்றைக் கொண்டும் கட்ட முடியாத

சின்னப் பம்பரத்துக்காக.

இந்தக் கவிதை குத்துப்பட்டு இரண்டாய்ப் பிளந்த சின்ன பம்பரத்தைப் பாடுகிறது. தலைப்பு தம்பி பம்பரம் என்று இருப்பது முறுவலிக்கச் செய்கிறது. ‘நடத்தல் கற்காத கால்தடுமாறி’ என்ற வரியில் விளையாடும் ஆசையோடு பம்பரம் வாங்கி ஆட்டத்தில் கலந்துகொள்ளும் யாராருடைய தம்பிகளோ நினைவுக்கு வருகிறார்கள். ‘நெடுக்கில் வெட்டிய தென் அமெரிக்காப் போல’ இதுபோல பல உவமைகளை தனியே குறித்து வைத்திருக்கிறேன். கல்யாண்ஜியைப் போலவே உவமைகளைப் புதுமையாகவும் சரியாகவும் சரளமாகக் கையாளக்கூடியவராக ஞானக்கூத்தன் இருக்கிறார். இந்த முழுமையான தொகுப்பில் கவிதை எழுதப்பட்ட தேதி வருடம் குறிப்பிடப்படாவிட்டாலும் காலக்கிரமமாக இருப்பதை உணர முடிகிறது. நினைவோடையும், கதை சொல்லும் நடையும் மெல்ல இவரது கவிதைகளில் குடியேறத் தொடங்குகின்றன. ஒரு கட்டத்தில் கவிதையை வாசிக்கிறோமா கதையையா என்ற மயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. ஒரு கட்டம்வரை வரிகளை ஓசை நயத்துடன் மூன்று அல்லது நான்கு சொற்களுடன் சீராக அமைத்தவர் பின்னர் எதற்கு நிற்கிறது எதற்கு ஒடிகிறது என்ற கணக்கே இல்லாமல் நீளவாக்கில் பாதிகிழித்த தாளில் எழுதியதுபோல வரிகளை அமைத்திருக்கிறார்.

ஞானக்கூத்தன் கிட்டத்தட்ட எந்தக் கவிதைகளிலும் உணர்வுப்பூர்வமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. எதையும் இலகுவாக எழுதக்கூடிய திறனுள்ளவர். அவருக்கிருந்த திறன் அளவுக்கு அவர் கவித்துவ உள்ளமோ, ஆழ்ந்த பார்வையோ கொண்டவர் அல்ல. அவரது எல்லாக் கவிதைகளையும் தீர ஆய்வுசெய்து அவை அனைத்திலும் சாதியக் கூறுகள் இருப்பதைக் காட்ட முடியும். இதைத் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை. கவிதைகளை பிராமணராகத்தான் எழுதியுள்ளார். எந்த ஒரு இனக்குழுவும் பிற சமூகங்களுடன் கலந்து பழகாது இருக்கும்போது அவர்களுக்கென வழக்குச் சொற்களும், பொதுக் குணாம்சங்களும் ஏற்படுவது இயல்பானது. அதில் உள்ள குறைகள் பல அவர்களே அறியாதது என்றுதான் தோன்றுகிறது. உணர்வுப்பூர்வமாக ஈடுபடாவிட்டாலும், ஆழ்ந்த பார்வையோ, சிந்தனையோ அவரது கவிதைகள் எதிலும் வெளிப்படவுமில்லை. பெரும்பாலானவை மொழிவிளையாட்டு அல்லது பொருட்படுத்தத் தேவையில்லாத விஷயங்கள் கவிதைகளாக்கப்பட்டுள்ளன. அதைத் தெளிவாக உணர்த்தத் தெரிந்தவர் என்பது வேறு விசயம்.

முறுவல் அரங்கம்

அவர் முறுவலிப்பார். அவர்

முறுவலிப்பார் என்று தெரியுமாதலால்

இவர் முறுவலித்தார். அவர்

முறுவலித்ததும் அவரோடு சேர்ந்து

இவரும் முறுவலித்தார். அவர் எப்போது

முறுவலை நிறுத்துவார் நிறுத்தி

முறுவலிக்க மீண்டும் தொடங்குவாரென்று

நிச்சயமில்லை ஆதலால் அவசரப்பட்டு

நிறுத்தாமல் இவர் முறுவலித்தார்.

வேறுபக்கம் அவர் பார்த்ததும்

முறுவலை நிறுத்தி அவர் பார்த்து

திரும்பியதும் இவர் முறுவலித்தார்

பெயரைக் கூப்பிட்டதும் போய் நின்று

கவிதை பாடித் திரும்பினார்.

அவர் முறுவலித்தார். இவரும் கூட,

ப்ளாஸ்டிக் வாளியில் விரிசலைப் போல

அரங்கமும் சற்றே முறுவலித்தது.

முறுகி வலித்தது கவிதைக்கு மட்டுமே.

இந்த வகையறாக் கவிதைகளை யார் எழுதுகிறார்கள் என்று யோசிக்கையில் விக்கிரமாதித்யனும் மனுஷ்யபுத்திரனும் நினைவுக்கு வருகிறார்கள். ஒரு கவிதையை வாசித்து அது உங்களை எங்கும் நகர்த்துவதில்லை என்றால் அது படைப்பூக்கம் இன்றி எழுதப்பட்டிருப்பதாகவே சொல்வேன். ஆனால் ஞானக்கூத்தன் எழுதியவற்றில் தேறக்கூடியவை என்று பார்க்கையில் மேலேயுள்ள கவிதையையும் சொல்ல வேண்டியிருக்கிறது. மற்ற கவிதைகளில் எதையும் இலட்சியம் செய்யாமல், உதாசீனமான பார்வையில் நோக்கம்போல எழுதிச் செல்லும்போது இந்தக் கவிதையில் ஒரு விசயத்தைப் பொருட்படுத்திக் கவனித்து அவருக்கே இயல்பாயுரிய எள்ளலுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

குருவியை தன் வீட்டில் கூடுகட்டாதே உனக்கு இடம்தர மாட்டேன் என்ற அர்த்தத்தில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதனோடு மரவட்டை என்ற கவிதையையும் தேனீ என்ற கவிதையையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

மரவட்டை

ஊர்ந்து செல்கிறது மெல்ல மெல்ல

செந்நிறமான நீள மரவட்டை

ஓரிடத்தை எதனாலோ விட்டுவிட்டு

எங்கேயோ செல்கிறது. பரபரப்பாய்.

போகட்டும் பையா மரவட்டை அதன்

துக்குணிக் கால்களைப் பரவிக் கொண்டு

தடைகள் அங்கங்கே ஏற்பட

சுருண்டு கொள்கிறது அச் சீவன்.

தீண்டாதே பையா அதனை. தொட்டால்

சுருண்டு கொள்ளும் பயந்தபடி.

வட்டமாய்ச் சுருண்டு கிடக்கும் அப்போது

என்னென்ன தோன்றுமோ அதன் மனதில்?

தொடாதே பையா. நீ அதனை

தொட்டால் சுருண்டு பின் உடம்பை

நீட்டும் போதில் ஒரு வேளை

மறக்கக் கூடும் தன் மார்க்கத்தை.

(குழந்தை வாசகி தீபிகாவுக்கு இந்தக் கவிதை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது)

தேனீ

வண்டின் மென்மையான ரீங்காரம்

செவியில் ஒலித்தது

எங்கே வண்டென்று தேடினேன்.

வரவேற்பறை முழுவதும்

பறந்து பறந்து சுற்றிப் பார்த்த

அந்தத் தேனீ

என்னையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தது.

பால்கனிப் பக்கம் பின்னர் பறந்தது.

சில நாட்கள் சென்றதும்

வாரணாசி சாது சன்யாசி ஒருவர்

பால்கனியில் தலைகீழாய்த் தொங்கி

விளையாட்டுக் காட்டினாற் போல

ஒரு பெரிய தேன்கூடு.

எண்ணற்ற தேனீக்கள் சுற்றின.

தேனீ கொட்டும். கொட்டினால் கடுக்கும்.

சருமம் தடிக்கும் என்றார்கள்.

மலையில் கட்டப்பட வேண்டிய தேன்கூடு

என் வீட்டுப் பால்கனியில் கட்டப்பட்டது.

ஆட்களை ஏவி தேன்கூட்டைக்

கலைக்கச் சொன்னேன். அவர்கள்

கூட்டைக் கலைத்த பாங்கு எனக்குக்

கொஞ்சமும் பிடிக்கவில்லை.

கவலைப்பட்டவாறு உட்கார்ந்திருந்தேன்.

வண்டின் மென்மையான ரீங்காரம்

செவியில் ஒலித்தது. சட்டென்று

என்னை அறியாமல் மன்னி என்றேன்.

சொல்லிவிட்டுத்தானே கட்டினேன் என்பது போலக்

காதில் அருகில் முரன்றது தேனீ.

முதலாவது சொன்ன கூடுகட்ட விடமாட்டேன் சின்னக்குருவியே கவிதையில் மரத்தில்போய்க் கட்டவேண்டியதுதானே என்று கேட்கிறார். தேனீ வீட்டுக்குள் வரவில்லை, பால்கனியில்தான் கூடு கட்டுகிறது. ஆனால் குருவி கவிதையில் இருந்த இறுக்கமோ, எதிர் மனநிலையோ இந்தக் கவிதையில் இல்லை. தேனீ அவரது கவிதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. தனக்குள் எழும் மனிதார்த்த உணர்விலான வரிகளை இதில் காணமுடிகிறது. ஏதோவோர் பயத்தில்தான் கூட்டை இடிக்கச் சொல்கிறார். அவர்கள் இடித்த விதமும் பிடிக்கவில்லை. எத்தனை பெரிய உழைப்பு. எத்தனை வீடுகள். ஒருவேளை தீப்பந்தம் வைத்து அவர்கள் விரட்டியிருக்கக்கூடும். அவருக்கு தான் எழுதிய கீழ்வெண்மணி ஞாபகம் வந்திருக்குமோ. வண்டின் மென்மையான ரீங்காரம் கேட்டு திடுக்கிட்டு மன்னி என்று சொல்வதாகட்டும், சொல்லிவிட்டுத்தானே கட்டினேன் என்ற வரியிலும் மனிதார்த்தம் அழகாய் வெளிப்படுகிறது. இது இவரது வேறெந்தக் கவிதையிலும் காணாத ஒன்று. சொல்லிவிட்டுத்தானே கட்டினேன் என்று சொல்வதற்குக் காரணம் கூடு கட்டும் முன்னால் அது வீட்டுக்குள் வந்துவிட்டுப் போனதை நினைவு கூர்கிறார். மரவட்டை கவிதையில் மரவட்டை வீட்டுக்குள் வரவில்லை. ’வெளியே’ ஊர்கிறது. அதன்பால் கொண்ட பரிவில் குழந்தைக்குச் சொல்வதாய் எழுதப்பட்ட கவிதை. /தொட்டால் சுருண்டு பின் உடம்பை/நீட்டும் போதில் ஒரு வேளை/மறக்கக் கூடும் தன் மார்க்கத்தை/ அழகான வரிகள். மரவட்டை நீண்டு ஊரும்போது பழைய வழியில் நடக்குமா, பாதை மாறுமா?

பிற உயிர்களிடத்து அணுகும் விதத்தில் மூன்றுவிதமான நடத்தைகளை இந்தக் கவிதைகளில் பார்க்கிறோம். என் வீட்டுக்குள் வராதே. நீ எனக்கு எதிரி இல்லை. உன் நலனை நான் எக்காரணம் கொண்டும் கெடுக்கமாட்டேன். இதைத்தான் இந்தக் கவிதைகளில் பார்க்கிறோம். தேனீ கவிதையில் காணும் உருக்கம்கூட நியாயம் சார்ந்த ஒன்றுதானே தவிர ஜீவகாருண்ய வெளிப்பாடல்ல. இவரது தண்ணீர் என்ற தலைப்பில் ஒரு கவிதையுண்டு. அதை பின்னர் பார்க்கலாம். அதிலும் தண்ணீரை தனி உயிராகக் காட்டி அது எதையோ நினைப்பதுபோலக் காட்டியிருப்பார். உள்ளது உள்ளபடி பார்ப்பதிலோ, அதில் தன்னைக் கரைத்துக் கொள்வதிலோ கவிஞரிடம் ஒரு தடை உள்ளது. தான், தனது வசதி என்ற ஒரு வட்டத்துக்குள் இருந்து அணுகும் தன்மையைப் பார்க்கிறோம். அவரது சாதியம் சார்ந்த குணாம்சங்களில் ஒன்றாக இதைச் சொல்லலாம்.

கவிஞர் ராஜன் ஆத்தியப்பனுடன் ஒருமுறை போனில் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார் ‘கவிதைக்கு முன்பாக நாம் தகுதியின்மையோடுதானே நிற்கிறோம்’. ஒரு அலையைப் போல அந்த வரி என்னைத் தாக்கியது. நம் அத்தனை போர்க்கருவிகளையும் கீழே போட்டுவிட்டு மண்டியிட வேண்டிய இடமது. அப்படி இருப்பினும் கவிதை வாய்த்துவிடுமா என்றால் இல்லை. மனம் தயாராயிருந்தாலும் தருணம் அமைந்தாலொழிய ஒன்றும் செய்ய முடியாது. இதனால்தான் நான் சொல்கிறேன், கவிஞன் என்ற அடைமொழிமீது எனக்கு நம்பிக்கை இல்லை. நினைத்தநேரத்தில் எல்லாம் எழுதக்கூடியதில்லை கவிதை. வரம்வாங்கி வந்திருந்தால் தவிர. அதனால்தான் கவிஞர்கள் பித்துப் பிடித்தாற்போல் அலைகிறார்கள். ஒன்றுமற்று, இழப்பதற்கு ஏதுமில்லாமல் ஞானத்தேடல்போல் தேடவேண்டியிருக்கிறது.

விளிம்பு காக்கும் தண்ணீர்

கொட்டிவிட்ட தண்ணீர்

தரையில் ஓடியது. ஓடி

சற்று தூரத்தில் நின்று விட்டது

வழி தெரியாது போல

தொங்கும் மின் விசிறியின் காற்று

தண்ணீரை அசைக்கிறது

மேலே தொடர்ந்து செல்ல

தண்ணீர்க்கு விருப்பமில்லை

அங்கேயே நிற்கிறது தண்ணீர்

காற்றினால் கலையும்

தன விளிம்புகளை

இறுகப் பிடித்துக்கொண்டு

அங்கேயே நிற்கிறது தண்ணீர்

இந்தக் கவிதையில் “மேலே தொடர்ந்து செல்ல தண்ணீர்க்கு விருப்பமில்லை அங்கேயே நிற்கிறது தண்ணீர்” என்ற வரிகளை நீக்கிவிட்டாலும் பொருள் மாறாது இருக்கும். தண்ணீருக்கு ஒரு தனி உயிர்ப்பைக்கொடுத்து நடமாடவிடுகிறது இந்தக்கவிதை. அந்த குணத்தை இந்த வரிகள் தடுக்கின்றன (சுற்றுலாவுக்கு வந்தவர்களுக்கு வழிகாட்டும் கைடு போல இருக்கின்றன). “கொட்டிவிட்ட தண்ணீர் தரையில் ஓடியது. ஓடி சற்று தூரத்தில் நின்று விட்டது வழி தெரியாது போல”  இதில் வழிதெரியாது போல என்பது அற்புதமான வரி. வாசிப்பவரும் தண்ணீராக மாறியுணரத்தக்கது. அதையடுத்து வருகிறது “தொங்கும் மின் விசிறியின் காற்று தண்ணீரை அசைக்கிறது மேலே தொடர்ந்து செல்ல” இப்போது தேங்கித் தளும்பி நிற்கும், காற்றில் அசையும் அந்த நீரை முன்னே இழுபடும் விசையை நம்மால் காணமுடிகிறது. இதற்கு அடுத்ததொடர் நிச்சயம் “காற்றினால் அசையும்” என்று ஆரம்பிக்கும் இடம்தான். இடைப்பட்ட வரிகள் தேவைக்கு அதிகமாக இருக்கின்றன. ஏனென்றால் “காற்றினால் கலையும் தன விளிம்புகளை இறுகப் பிடித்துக்கொண்டு அங்கேயே நிற்கிறது தண்ணீர்” என்பதில் அந்த காட்சி தத்ரூபமாக எழுகிறது. அதுவே சொல்லவந்ததை உணர்த்திவிடும்போது தண்ணீருக்கு விருப்பமில்லை அங்கேயே நிற்கிறது (அங்கேயே நிற்கிறது தண்ணீர் என்ற வரி இரண்டுதடவை வருகின்றன) என்று சொல்லத்தேவையில்லை. கவிதையில் minimalism-உம் ஒரு குணாதிசயமே. ஒருவரி இல்லாமல் அதன் பொருள் மாறுபடாமல், புரியச் சிரமம் இல்லாமல் இருந்தால் அந்த வரி தேவையற்றதே.

மேலேயுள்ள பத்தி ஏப்ரல் 2016ல் முகநூலில் எழுதியது. இந்தக் கவிதைக்கு பின்னூட்டமிட்ட கவிஞர் பெருந்தேவி, ஞானக்கூத்தன் தேவையில்லாமல் ஒரு சொல்லைக்கூட தனது கவிதைகளில் பயன்படுத்தமாட்டார் என்றார். இப்போது நினைத்துப் பார்க்க சிரிப்பாக இருக்கிறது. தனது சாதிய அபிமானத்தைத்தான் அவர் வெளிக்காட்டியிருக்கிறார். முகநூலிலும் சரி வெளியிலும் சரி இந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் தன்னுடைய சாதிக்காரர்களை முன்னிறுத்தி கட்டுரைகள் எழுதுவார்கள், பேசுவார்கள். மற்ற சாதிக்களில் இந்தளவு தீவிரச் செயல்பாட்டாளர்கள் இல்லை என்பதால் ஒருகட்டத்தில் இவர்கள் சொல்வதை நாமும் நம்ப ஆரம்பித்துவிடுகிறோம். அசோகமித்திரன் நல்ல கதைகள் எழுதியிருக்கிறாரா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் தமிழ் இலக்கியத்தில் பெருஞ்சாதனை படைத்தவராக உட்கார்ந்திருப்பார். யாரிடமாவது கேட்டுப் பாருங்கள் புலிக்கலைஞனில் போய் நிற்பார்கள். புலிக்கலைஞனைவிட சிறப்பாக எழுதப்பட்ட கதைகள் தமிழில் எத்தனையோ உள்ளன. ஆனால் அ.மி.யைச் சொல்வதற்கு ஆள் இருக்கிறார்கள். மற்ற எழுத்தாளர்களுக்கு அப்படி இல்லை. (தங்கள் வாதத்தை நியாயப்படுத்துவதற்காக, இப்படியொரு குற்றச்சாட்டை மறுப்பதற்காக சப்பைக்கட்டாக மற்ற சில எழுத்தாளர்கள் பற்றியும் கொஞ்சம் எழுதுவார்கள்)

எங்கள் வீட்டில் நான் முதல் பட்டதாரி. அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் படித்தேன். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் தீப்பெட்டி ஒட்ட வேண்டும். தினசரி ஐந்து கட்டுக்கள். ஒரு கட்டுக்கு நூற்றைம்பது குச்சிகள். பரீட்சை நேரத்தில் அம்மா சற்று குறைத்துக் கொள்வாள். சொல்லிக்கொடுக்க யாருமில்லை. நானாகத்தான் படித்தேன். பெரும்பாலும் வீட்டுப்பாடங்கள் கிடையாது. பத்தாம் வகுப்பில் வீட்டுப்பாடம் கொடுத்தபோது ஆச்சரியமாக இருந்தது. புராஜெக்ட், அசைன்மெண்ட் நோட் இவையெல்லாம் அந்நியமான வார்த்தைகளாகவே கடைசிவரை இருந்தன. முதல் பட்டதாரி என்று வீட்டில் மற்றவர்கள் எப்படிப் பார்த்தார்களோ தெரியாது ஆனால் வழிகாட்டுதல் இன்றி பெரிதும் தடுமாற்றமும் துயரமும் பட்டிருக்கிறேன். பேப்பர் பையன் கவிதை படிப்புக்கும் வேலைக்கும் நடுவிலான ஊசலாட்டத்தை ஒரு கேமராவைப் போல படம் பிடித்துக் காட்டுகிறது. சில காலம் அவர் பள்ளி ஆசிரியராக இருந்ததும் இந்தக் கவிதைக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

பேப்பர் பையன்

இருளில் எழுகிறான் பேப்பர் பையன்.

கைகால் கழுவிப் பல்தேய்த்து

வெளியே போகிறான் பேப்பர் பையன்.

கடைத்தெருப் பக்கம் நடைபாதையில்

பேப்பர் கட்டைப் பிரிக்கிறார்கள்.

அங்கே வருகிறான் பேப்பர் பையன்.

குமுதம் விகடன் ஹிந்து எக்ஸ்பிரஸ்

தினமலர் இந்தியா டுடே அப்புறம்

ஈநாடு, ப்ரபா, மாத்ரூ பூமி என்று

தனித்தனியாகப் பிரிக்கிறார்கள்.

இரண்டு சக்கர வண்டியில் ஏற்றி

தான் நனைந்தாலும் தாள் நனையாமல்

கீழ் வீட்டில் மாடியின் மேல் என

அந்தந்த வீட்டில் போட்டுவிட்டுக்

கால்நடையாகத் திரும்புகிறான்.

ஆறு மணிதான் ஆகிறது.

தேநீர் தருகிறாள் அவன் அம்மா.

தேநீர் பருகிப்

பாடப்புத்தகத்தைப்

பிரித்துக் கொள்கிறான் பேப்பர் பையன்.

பாடம் ஒன்றைப் படிக்கிறான்.

திரும்பத் திரும்பப் படிக்கிறான்.

ஊரில் இல்லாதவர் வீட்டுக்குள்

பேப்பர் போட்டது நினைவுவர

ஓட்டம் பிடிக்கிறான் பேப்பர் பையன்.

பக்தி இலக்கியத்தில் ஆண்டாள் பாசுரத்தைப் போல ஒரு பிரமாதமான கவிதை எழுதியிருக்கிறார். இதில் பேதைமையும் காதலும் அழகிய சித்திரம்போலத் துலங்குகிறது. எளிய வரிகளில் மென்மையான ஊடலைச் சொல்லும் கவிதை. இன்னும் கொஞ்சம் இலகுவாக்கி ஒரு பாடலாகக்கூட இயற்றலாம்.

ஒரு நாள் போல் ஒரு நாள்

oரு நாள் போல் ஒரு நாள் உண்டோ?

இன்றைக்கு முடிந்த ஒன்று

நாளைக்கு முடிவதுண்டோ?

பேச்சுக்கு சொன்னேன் நாளை

பார்ப்பது கடினம் என்று.

பார்க்கவே இனிமேல் வேண்டாம்

போகிறேன் என்று சொல்லி

போய்விட்டான் வண்ணப் பீலி

முடியிலே அணிந்த மாயன்.

வாய் விட்டுச் சிரித்த நாட்கள்

திரும்புமா சொல்லு தோழி?

என்னவோ போல் இருக்கிறாயே

ஏனடி என்கிறார்கள்!

என்ன நான் சொல்வேன். மாயன்

என்னிடம் கோபித்தான் என்றா?

வீட்டிலே விசேடம் எங்கும்

வேதியர் கூட்டம். நானோ

நாட்டமே இலாமல் நின்றேன்.

அன்னைக்கு என்மேல் கோபம்.

இப்படித் துன்பம் செய்தால்

எதையேனும் தின்று சாவேன்

என்று நான் ஒருநாள் சொன்னேன்.

சாப்பாட்டை முடித்துக்கொண்டு

சாவது நல்ல யுக்தி

என்றவன் சிரித்தான் தோழி.

அதை எண்ணி நின்றேன். அன்னை

முறைக்கிறாள் கடக்கும்போது.

இது சங்கப்பாடலில் காணும் ஊடல் படலத்தையும் நினைவுபடுத்துகிறது. என்னதான் இந்தக்கவிதை இரசிக்கத்தக்கதாக இருந்தாலும், தெய்வத்தின் மேல் கொள்ளும் மையலைப் பாடினாலும் மேலோட்டமான கவிதைதான். எந்தவொரு வரியிலும் உள்ளிருந்து தன்னுணர்விலிருந்து சுயமாய், புதிதாய் வெளிவரும் வரியை நாம் பார்க்கமுடிவதில்லை. தொழில்நுட்பம் தெரிந்த ஒருவர் வரையும் அழகிய ஓவியம் போன்றது இது. பாடலாசிரியர் வாலி கூட இதுபோல் எழுதிவிடுவார். அதாவது கவிதையுடன் (பாடலுடன்) உணர்வுப்பூர்வமாக ஈடுபடாமல் எந்த உணர்வையும் சொல்லிவிடலாம். சமீபத்தில் இப்படியொரு வாதத்தை வைத்தபோது முகநூலில் ஒருவர் கேட்டார், இது சிறப்பிக்கத்தக்க குணாதிசயம் தானே, உணர்வுப்பூர்வமாக இருக்கும்போது அது விசயங்களை சரியாகக் கையாளாமல் நம்மை தடுமாறச் செய்யும். எதையும் விலகிநின்று பார்ப்பது நல்லதுதானே என்று கேட்டார். இப்படி வைத்துக் கொள்வோம், ஒருவர் அழகான ஒரு காதல் பாடல் பாடிக்கொண்டு கொலை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பாடலுக்கான பெறுமதி என்ன? எழுதப்பட்ட வரிகள் மூளையில் சமைக்கப்பட்டதா, பாவனையா, தன்வெளிப்பாடா என்று பிரித்தறிவதற்கு திறனும், பக்குவமும் வேண்டும். இதனால்தான் கவிதை விமர்சனத்தில் ஞானி பலமாய் சறுக்குகிறார். சொல்லப்பட்ட விசயம் போதும். அதாவது பௌதீகம்தான் எல்லாம். அவற்றைக் கொண்டு எல்லாவற்றையும் அளந்துவிடலாம். நீரில் தெரியும் பிம்பத்தை மட்டும் பிடித்துக் கொண்டால் போதும். கலங்கல்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. எனவே அவர்கள் கருத்து என்ன என்று மட்டும் தட்டையாகப் பார்க்கும்போது கவிதை செத்து பலமணி நேரங்களாகிவிடுகிறது.

அயர்ச்சியில் ஒரு காக்கை

கடலின் அலைகளுக்குக் கிட்டும் தொலைவில்

கிடந்தது ஒரு பெரிய மாட்டின் எலும்புக் கூடு

எலும்புக் கூட்டின் மேல் வந்தமர்ந்த

காக்கைக்குத் திகைப்பு

யார்தான் தின்றார்கள் முழுமாட்டை?

இந்தக் கவிதையில் ‘காக்கைக்குத் திகைப்பு’ என்ற வரியை நீக்கிவிட்டு முந்தைய வரியை ‘எலும்புக் கூட்டின் மேல் வந்தமர்ந்தது காக்கை’ என்று வைத்துவிட்டால் சரியாக இருந்திருக்கும். ஞானக்கூத்தன் கவிதைகளில் உள்ள பொதுவாகக் காணப்படும் குணாதிசயமாக திண்ணைப்பேச்சுத் தன்மையைச் சொல்லலாம். ‘நான் வந்தேன், அவன் இப்படிக் கிடந்தான்’ என்று புரிந்துகொள்ளச் சிரமமில்லாத, சொல்வதில் விஷயமுமில்லாத, ’ஓகோ’ என்று தலையாட்டுவதைத் தாண்டி வேலையில்லாத கவிதை சொல்லும் தொனி. அதனால்தான் அவரால் ‘காக்கைக்குத் திகைப்பு’ என்ற வரியை தவிர்க்க முடிவதில்லை.  மேலே விளிம்பு காக்கும் தண்ணீர் கவிதையிலும் இப்படி ஒரு போலியான பாவனையை உருக்கொடுக்க முயற்சித்திருப்பதைக் காட்டியிருக்கிறேன். மாட்டின் எலும்புக்கூட்டின் மேல் நிற்கும் காட்சி ஒரு புகைப்படத் தருணம்தான். கடைசிவரி அவரவர் தராதரத்தையும் சுதந்திரத்தையும் பொறுத்தது. இங்கே ஞானக்கூத்தன் நகைச்சுவையாக முடித்திருக்கிறார். இந்தக் கவிதை நான் எழுதிய காகம் குறித்த கவிதையை நினைவுபடுத்துகிறது:

ஒவ்வொரு முறையும்

இறகுகளால் காற்றைக்

கோதிக் கோதி அள்ளிச் சேர்த்து

கிளையில் திகைத்து அமர்கிறது காகம்

இறகுகளுக்குள் வெம்மை மட்டும் மீந்த.

எனக்கு ஒரு இஸ்லாமிய நண்பர் இருக்கிறார். பத்தாண்டுகள் பழக்கம். ஒருமுறை தான் சவுதி போக முயற்சிப்பதாகச் சொன்னார். ஒரு இரண்டாம்தரக் குடிமகனாக இல்லாமல் தன்னையொத்த நபர்களுக்கு மத்தியில் இருப்பதைத் தான் அனுபவிக்க வேண்டும். அதற்காகவே போக விரும்புகிறேன் என்று சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்கே அப்படி எந்தப் பாகுபாடும் யாரும் பார்க்கவில்லையே என்று கேட்டபோது அவர் சொன்னார், இரண்டாமாட்டம் ஒரு சினிமா பார்த்துவிட்டு நீங்கள் வந்தால் போலீஸ் நிறுத்தினாலும் பார்த்துவிட்டு விட்டுவிடுவார்கள். அதுவே ஒரு இஸ்லாமியர் என்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் கேட்கும் கேள்விகள் தீயில் நிற்பதுபோல் இருக்கும். ஒன்றுமே செய்யாமல் எல்லாக் குற்றங்களுக்குமான சந்தேகத்தைச் சுமப்பது எவ்வளவு கொடுமையானது தெரியுமா என்று கேட்டார். ஒருவரது வாழ்க்கையை ஒரு கணமேனும் மனதளவில் வாழ்ந்து பார்க்காமல் யாரையும் புரிந்துகொள்ள முடியாது. அந்த வகையில் பயம் என்ற கவிதை முக்கியமான ஒன்று என்பேன். கடவுள் எதிர்ப்பும், பார்ப்பன எதிர்ப்பும் வேரூன்றிய தமிழகத்தில் ஒரு சிறுபான்மையினரின் மனத்தை, அந்நியத் தன்மையை முன்வைப்பதால் இது குறிப்பிடத்தக்க ஒன்று.

பயம்

eனது வீட்டை விட்டு

யாரும் என்னை போகச் சொல்லவில்லை

எனது அலுவலகங்களின் கதவுகள்

எனக்கு மூடப்படவில்லை

எனது பாஷையை யாரும் பேசாதிருக்கச் சொல்லவில்லை

எனது விக்ரகத்தை யாரும்

ஆற்றில் வீசி விடவில்லை

எனது புத்தகத்தை யாரும்

என்னிடமிருந்து பறித்து விடவில்லை

எனது காதலியைப் பார்க்க யாரும்

என்னைத் தடைசெய்யவில்லை

எனது நாட்டை விட்டு யாரும்

விரட்டி விடவில்லை

ஆனால் இப்படியெல்லாம்

நடந்தது போல எனக்கேன் தோன்றுகிறது

நகுலனுக்கு சுசீலா போல ஞானக்கூத்தன் தனக்கும் ஒரு கனவுப்பெண் வேண்டுமென்று எண்ணி ஞானாட்சரி என்றொரு நபரை உருவாக்கியுள்ளார். பல கவிதைகளில் தேவைக்கும் தேவையின்றியும் வந்துவிட்டுப் போகிறார் ஞானாட்சரி. கீழேயுள்ள கவிதை ஒரு துரோகத்தைச் சொல்கிறது. மிக எளிமையாக சுருக்கமாக அந்த துரோகம் நிகழ்ந்த கணத்தை, சுருக்கென்ற வலியைச் சொல்லியிருக்கலாம். ஒரு புதிர் போடுவது போல அல்லது கடைசி வரியில் சோழிகளை வெகுநேரம் குலுக்கியபின் தரையில் சிதறி விழும் எண்களைக் காட்டுவதுபோல கவிதையை அமைப்பது இவை ஞானக்கூத்தனின் பொதுவான பாணியாக உள்ளது. இந்த புதிர்போடும் தன்மையினாலும் கதை சொல்லும் வரிகளாலும் நிறைய கவிதைகள் ஒருபக்கக் கதைகளாகவே அமைந்திருக்கின்றன. எனினும் கீழேயுள்ள ‘ஆமாம் சொன்ன கையெழுத்து’ கவிதை எனது ஒன்றாம் வகுப்பு சம்பவத்தை ஞாபகப்படுத்துகிறது. எங்கள் வகுப்பில் ஜோசப் கொஞ்சம் ஓங்குதாங்காய் இருப்பான். வகுப்பில் எல்லோரும் அவனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டார்கள். நானும் ஜஸ்டினும் மட்டும் சேராமல் இருந்தோம். கடைசியில் ஜஸ்டின் அந்தக் குழுவோடு சேர்ந்துகொண்டான். அவன் சொல்லிவிட்டுக் கிளம்பும்போது கண்ணீரோடு அவனைப் பார்த்தது இன்றும் நினைவிருக்கிறது. முதல் துரோகம். முதன்முதலாக நட்பு தந்த வலி.

ஆமாம் சொன்ன கையெழுத்து

மருத மரத்தின் உச்சாணிக் கிளைக்குக்

கீழே அமர்ந்திருந்த ஒரு யட்சச் சிறுமி

சேராத ஏதோ இரண்டை

சேர்த்து வைத்து விளையாடுகிறாள்

அவளுடைய விளையாட்டின் எல்லை மீறலில்

தனித்தனியாக இருந்து வந்த

குற்றமும் பத்திரிகையும் சேர்ந்துவிட்டது

இந்த முறையும் பின்பனிக் காலம்

என்மேலொரு குற்றப் பத்திரிகை எழுதியுள்ளது

பருவம் தவறிப் பூத்தவற்றின்

அந்தரங்கச் சிரிப்புகள் என்மேல்

எழுதப்பட்ட பழிகளை ஆமோதிக்கின்றன

என்னைப் பற்றித் தொடுவானம் விசாரிக்க

தலையாட்டுகின்றன ஊர்க்கோடி

சாம்பல் நிறத்து நெட்டுடல் பனைகள்

என்மேல் எழுதப்பட்ட குற்றப் பத்திரிகையை

சப்புக் கொட்டிப் படிக்கிறது சராசரம்

பெர்முடாஸ் அணியும் உள்ளூர் ஓவியர்கள்

குற்றப் பத்திரிகையின் நான்கு மூலைக்கும்

பூக்களை வரைந்து அலங்காரம் செய்துள்ளனர்

குற்றப் பத்திரிகையின் கீழே விடப்பட்டுள்ள

வெற்றிடத்தில் எல்லோரும் கையெழுத்திட்டுள்ளனர்

நெளிநெளியான கையெழுத்துகள்

தப்பிக்கும் நோக்குடைய கையெழுத்துகள்

கெஜட்டட் மற்றும் நான்கெஜட்டட்

கையெழுத்துகள். பலவண்ண

மசியில் கையெழுத்துகள்

எல்லோரும் எல்லோரும் எல்லோரும்

கையெழுத்திட்டுள்ளனர்

ஊர்ப் பொதுவில் நின்ற

நொச்சி மரத்தில் தொங்கவிடப்பட்ட

குற்றப் பத்திரிகையை நான் பார்க்கிறேன்

படிக்கிறேன் யார்யாரென்று

நெஞ்சு நொறுங்குதடி, ஞானாட்சரி

அழகிய உன் கையெழுத்தைக் கண்டுபிடித்து.

விக்கிரகங்கள் மௌனமாய் நின்று நம் உட்குரலாக மாறிவிடுகின்றன. எப்போதும் நம்மைக் கண்காணிக்கத் தொடங்கிவிடுகின்றன. அதை மறைக்க அவற்றுக்குச் சாந்தி செய்யத் தொடங்குகிறோம். சிலருக்கு இது ஒரு நோய்க்கூறாக மாறிவிடுகிறது. தான் பக்தியில் சிறந்தவன் என்று காட்டுவதற்காக விரதங்களைக் கடுமையாக இருந்து தன்னை வருத்திக் கொள்வோரும் உண்டு. எப்போதும் சரியாக நடந்துகொள்வதற்கான, எத்தனை எழுதியும் தீராத எழுத எழுத அரிக்கப்பட்டுப் போகும் ஒரு புத்தகம் நமக்குள் வளரத் தொடங்குகிறது. அது விக்கிரகத்தின் புத்தகம். நம்பிக்கைகள் வலிப்பு கண்ட தாக்கத்தில் நம்மை முறுக்கிப் பிழிகின்றன. ஒருபோதும் திருப்தியடையாத தெய்வங்கள் எழுந்து ஆடுகின்றன.

என் உளம் நிற்றி நீ

மாநிலம் விட்டு மாநிலம் போகும்

தேசிய நெடுஞ்சாலை ஆகட்டும்

தேரும் சப்பரமும் போகும்

தெருக்களாகட்டும் வீதிகளாகட்டும்

வயல் வெளிகளின் நடுவில் வளர்ந்த

ஆலமரம் ஆகட்டும்

நாகர் சிலைகளால் சூழப்பட்ட

அரச மரங்களாகட்டும்

பட்டுப் பாவாடை சுற்றிய

வேப்ப மரமாகட்டும்

எங்கு திரும்பினாலும் நிற்கிறார்கள்

கொடுத்த கடனைத் திரும்பக் கேட்கும் தெய்வங்கள்

நான்கு கைகளில் ஒன்றைக் கூட நீட்டாமல்

பார்வையைக் கொண்டே தா என்கிறார்கள் அவர்கள்

என்ன கடன் வாங்கினேன். எதற்கு

வாங்கினேன். எந்தப் பிறவியில் வாங்கினேன்

என்பதெல்லாம் ஞாபகம் இல்லை

கொடுத்த கடனின் விவரங்கள் சொல்ல

அவர்களும் மறுக்கிறார்கள்

கோயில் தொடர்பான ஓசைகள் கேட்டால்

எனக்குக் கடன்தான் ஞாபகம் வருகிறது

முத்துப் பல்லக்கில் தெய்வம்

ஊர்வலமாக வந்தால் எங்கேயாவது

ஓடி ஒளியலாமா என்று நினைக்கிறேன்

தீபம் ஏற்றினேன்

கற்பூரம் ஏற்றினேன்

பட்ட கடனின் விவரத்தைக்

கடவுளே கூறு என்று கைகூப்பிக் கேட்டேன்

எனக்கொரு சந்தேகம்

தெய்வத்துக்கும் கடன் விவரம் மறந்து விட்டதோ என்று

விவசாயக் கடனையும்

கூட்டுறவுச் சங்கக் கடனையும்

வங்கிகளின் வாராக் கடனையும்

தள்ளுபடி செய்யும் கவர்மெண்ட் போல

கடவுளே என்மேல் கருணை கொண்டு

எனது கடனைத் தள்ளுபடி செய்வாயா?

ஒரு ஆத்திகவாதியின் சிக்கலை கவிதைப்படுத்தியிருப்பதில் வெற்றியடைந்திருக்கிறது இது. ஆனாலும் கடைசி ஆறுவரிகளில் சறுக்கியிருக்கிறார். அதுவரை மனப் பிரச்சினையைப் பேசி வந்த வரிகள் அவரது வழக்கமான தொனிக்குத் திரும்பிவிடுகின்றன. கிறித்துவ மதத்தில்கூட ஒரு நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது. கர்த்தரை வணங்கு அப்போதுதான் சொர்க்கம் நிச்சயமாகும் என்பார்கள். எப்படியும் ஏதாவதொரு மதத்தில் பிறந்துவிடுகிறோம். அவை கணக்கிலா பிறவிக் கணக்குகளை வைத்துக் கேள்வி கேட்கின்றன. கடனைத் திருப்பிக் கேட்கின்றன என்று ஞானக்கூத்தன் சொல்வது அசலான குரல். என்னை விட்டுவிடு என்ற சடங்கு மனத்தின் கேவல்.

இதுவரை பார்த்த கவிதைகள் தவிர்த்து விரல்விட்டு எண்ணக்கூடிய சில கவனிக்கத்தக்க கவிதைகள் உள்ளன. அவை எந்தவிதத்திலும் மேலே குறிப்பிட்டவற்றுக்கும் மேம்பட்டவை என்று சொல்ல இயலாது. ஞானக்கூத்தன் பிரமாதமான உவமைகளைப் பயன்படுத்தக் கூடியவர். அப்படியான உவமைகளும், வேறு சில அழகிய வரிகளும்:

“தட்டாமாலை சுற்ற விரிந்த

கைகளைப் போலக் கிளைகளை நீட்டி

இன்னுமோர் இலவம் அங்கொன்று”

”செம்பருத்திப் பூக்களின் திடுக்கிடச் செய்யும்

செவ்விதழ்த் துண்டுகள் நீரில் மிதந்தன”

”என்னைப் பார்த்தவன் எருக்கம் மொட்டுபோல்

முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டான்”

“மேல்வானத்தில் சில மின்னல்கள்

நேரம் தாழ்த்து சிமிட்டின கண்கள்”

”ஆண்டவன் சொல்லும்

அற்புதச் செய்தி அல்லவா பால்?”

“கால் சட்டைப்பைக்குள்

நுழைத்துக் கொண்ட கை மாதிரி

மாடிப்படிக் கட்டுமானம்”

“ஊதா மசியில் வெள்ளைத்

தாளில் பதித்த இடதுகைப்

பெருவிரல் மாதிரி

வின்ணில் மேகத் திட்டுகள்”

“விழிகளில் உருவம் கொல்ளா

வினாக்களின் கூட்டம்”

“வறுத்த வற்றல் மிளகாய் போலிருக்கும்

எனது மீசை”

“பலமாய் வீசிற்று காற்று

ராட்சத அணிலின் வாலொன்று

செங்குத்தாய் நின்றது போலத்

தெரு நடுவில் புழுதி நின்றது”

“உதறிப் போட்ட வேட்டிபோல் கிடக்கும்

இது என்ன நதியா”

”உன் சேலையைத் தொற்றிக் கொண்ட ஆறு

தரையில் இறங்கி வழியைத் தேடுகிறது”

”யாருக்கு யாரும் தெரியாத தேசத்தில்

ஒருவருக் கொருவர்

தெரிந்தது போலொரு தெரியாத துக்கம்”

“யாரோ குதிக்கிறார்கள்

அந்தக் குதிப்பில் எழுந்த அலைகள்

என்னை எதற்காக வையவேண்டும்?”

“தனக்கு வேலை இருப்பது போலக்

காட்டிக் கொள்ளும் ஒரு பூனை”

மேலேயுள்ள வரிகள் அத்தனையும் ஒரு படிமத்தையோ சித்திரத்தையோ நமக்குள் எழுப்ப வல்லவை. இவை நிச்சயமாக அவரது கவியியற்றும் திறன்களில் ஒன்றுதான். வழக்கமாக கவித்துவமான வரிகள் என்று சொல்வார்கள். ஆனால் அது தவறான அர்த்தம். கவித்துவம் குறித்த விளக்கத்தை முன்பே பார்த்தோம். இது மொழித்திறன்.

தலித் இலக்கியத்தை ஒரு தலித் படைப்பாளியே தரமுடியும். மற்றவர்கள் வெளியிலிருந்து தாங்கள் பார்ப்பதை புனைவாக உருவாக்கலாம். ஆனால் அது தலித் இலக்கியமாகாது. அதுபோலவே மண் சார்ந்த எழுத்தும். இந்தத் தொகுப்பில் ஞானக்கூத்தன் அடிப்படை நேர்மையுடனேயே கவிதைகளைப் புனைந்துள்ளார். தனது நம்பிக்கைகள், அது குறித்த கேள்விகள், மற்றவர்களுக்கு தன் சமுதாயம் சார்பிலான எதிர்வினை, தன் மனோபாவம் இவை எவற்றிலும் போலித்தனம் இல்லை. அவரது கவிதைகளில் உள்ள பார்ப்பனீயக் கூறுகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. ஆரம்பகட்டத்தில் ‘நாய்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையை பிரமிள் கடுமையாக விமர்சித்துள்ளார். பார்ப்பான் எறியும் எச்சில் இலைக்கு அடித்துக் கொள்ளும் நாய்கள் என்றபடிக்கு எழுதியிருப்பதாக, அந்த நாய்களின் குரைப்புச் சத்தத்தில் பக்கத்துத் தெரு, பின் பக்கத்து ஊர் நாய்கள் வரை குரைப்பதாக அந்தக் கவிதை இருக்கும். இது சார்ந்த மேலும் சில கவிதைகளைப் பார்க்கலாம்.

வரிசையில் இருங்கள்

வரிசையில் இருங்கள் வரிசையில் இருங்கள்

வரிசை என்பது முக்கியமாகும்

உயரமாய் குள்ளமாய் நீங்கள் இருக்கலாம்

வரிசையில் நீங்கள் அனைவரும் மனிதர்

வரிசையைக் காப்பாற்றுங்கள் வரிசையில் உங்கள்

ஆசைநாய்களைத் தனியாய் நிறுத்துங்கள்

வரிசையின் நீளம் உங்களைப் பொறுத்தது

முன்னே நிற்பவர் பின் பக்கம் பார்த்து

வரிசை வரிசை என்று கத்துங்கள்

எல்லோருக்கும் கேட்கும் குரலே ஆள்குரல்

வரிசையைக் கலைத்தால் கலகம் உண்டாகும்

வரிசைதான் எதற்கும் மூலாதாரம்

ஊரும் பேரு வரிசையில் இல்லை

வரிசையின் முதலில் இருப்பவர் யாரு

யாரைப் போல அவரிருப்பாரு?

எதன் பொருட்டாக வரிசை என்பது

ஐயப்பாட்டின் அற்பக் கேள்வி

நமக்குத் தெரியும் எதன் பொருட்டென்று

நாற்பதினாயிரம் தெருக்கள் கடந்தது வரிசை

என்றாலும் என்ன. வரிசையின் முனையில்

தற்போதிருக்கும் ஒருத்தன் கையின்

வியர்வை ஈரம் என்னிருகையில் (1974)

இந்தக் கவிதை வர்ணாசிரமத்தை வலியுறுத்துகிற ஒன்று. எல்லோரும் சமம் என்பது கலகத்தை உண்டுபண்ணுவது. ஆனால் கவிஞரும் ‘வரிசையில் எல்லோரும் மனிதர்’ என்று ஒத்துக் கொள்கிறார். நாயை விலக்கச் சொல்கிறார். ஏதோவொரு நியாயத்தைப் பேசுவதுபோல் இந்தக் கவிதை இருந்தாலும் அடிப்படை நியாயமற்ற கருத்து இதில் உள்ளது. வரிசையில் நிற்பது யாருக்கும் பிரச்சினை இல்லை. இதுவொரு முடியா வரிசை. முதலில் நிற்பவர் முதலிலேயே நின்று கொண்டிருப்பார். நிற்பதற்கான அத்தனை வேலைகளையும் செய்வார். அது தனது பிறப்புரிமை என்று புதிதாய் விதி எழுதி வைப்பார். வரிசை என்பதே தன்னியல்பில் கலகம் கொண்டதுதான். ஒருவர் தனக்கு மேலேயிருப்பவருடனும் கீழேயிருபப்வருடனும் தொடர்ந்து சண்டையிட வேண்டியிருக்கிறது (முன்னே நிற்பவர் பின் பக்கம் பார்த்து வரிசை வரிசை என்று கத்துங்கள்). எத்தனை அடாவடித்தனமான பார்வை இது.

வர்ணாசிரமம்=வர்ணம்+ஆசிரமம். ஆசிரமம் என்பது இடம் அல்லது வாழ்க்கைநிலையைக் குறிப்பது. ஒவ்வொரு வர்ணத்துக்குமான வாழ்க்கை நிலை. வர்ணம் என்பது சாதிய அடுக்காகவின்றி தோல்நிறமாகவும் சொல்லலாம். கருப்பு எப்போது தீமைக்கும், வெறுப்புக்குமான நிறமானது? சங்கப்பாடல்களில் மாந்தளிர் நிறம் போற்றப்பட்ட நிலைபோய் செந்நிறம், வெளிர்நிறம் எப்போது போற்றக்கூடியதானது? கிருட்டிணன் என்றாலே கருப்பன் என்னும்போது அவனுக்கும் சிவனுக்கும் ஏன் ஊதா நிறம் அடிக்கப்படுகிறது? காரணம் மேலே ஐயா ஞானக்கூத்தன் சொல்லும் வரிசைதான். வரிசையில் வாருங்கள். முன்னால் நிற்பவரைப் பார்த்து ஒழுகுங்கள். பின்னால் இருப்பவர் எவ்விதத்திலும் கவனிக்கத்தக்கவரல்ல. முன்னால் பாருங்கள். அதுவே முன்னேறும் வழி. பின்னால் இருப்பவரிடம் வரிசையில் வரும்படி கத்திச் சொல்லுங்கள்.

வர்ணம்

சந்திரம் முகத்தில் சற்றே

சூரியன் கரைந்தாற்போலக்

கன்னம். பொலிவும் தங்கம்.

ஒளிர்கின்ற கூந்தல். கேட்டால்

வயதென்ன முப்பதுக்குள்.

புத்தகக் கடையில் ஏதோ

ஆங்கிலம் தேடுகின்றாள்.

அவள் தோள் மேல் குழந்தை ஒன்று.

அழகுக்கு இவர்கள் போல

யாருண்டு மண்ணில் என்று

நினைத்திடத் தூண்டும் அந்தக்

குழந்தையின் அழகும் கூட.

விழிகளில் உருவம் கொள்ளா

வினாக்களின் கூட்டம். அச்சம்

குழந்தையின் முகத்தில் நிற்கும்

வீலென்று குழந்தை ஏனோ

திடீரென அலற அந்தக்

கடைக்குள்ளே இருந்தார் எல்லாம்

திடுக்கிட்டார். யாரைக் கண்டு

கதறிற்று குழந்தை என்றால்

அப்பக்கம் திரும்பிப் பார்க்க

ஆப்பிரிக்கக் கருப்பர் அங்கே

புத்தகம் தேடிக் கொண்டு

நானும் அவ்விடத்தை விட்டுத்

திரும்பினேன். எனது நாட்டில்

அந்நியக் குழந்தை என்னைப்

பார்த்து அஞ்சி அழாதிருக்க.

ஞானக்கூத்தன் கவிதையை எல்லாம் விளக்க வேண்டியதில்லை. எளிய நேரடியான அர்த்தத்தில் எழுதப்பட்டிருப்பவைதான். கருப்பரைக் கண்டு குழந்தை பயப்படுகிறது. குழந்தைக்கே கருப்பு பயமுறுத்துவதாயிருக்கும்போது கருப்பில்தான் ஏதோ தவறிருக்க வேண்டும். கவிஞரும் இடத்தை விட்டு நகர்கிறாராம். ஏனென்றால் அவர் நம்மைப்பொறுத்தவரை நல்ல பளிச்சென்ற நிறமென்றாலும் வெள்ளைத் தோலர்களுக்கு கருப்புதானே. வரிசை முக்கியம்.

வெப்ப மரம்

பள்ளிக்கூடமென்றால் தெருவில் புரண்டழும்

கல்யாண சுந்தரம் ஓடுகிறான்

இடம் பெயராமல் வெற்றிலை ஊறலைத்

தெருவில் உமிழும் சாமிநாத சேர்வையும்

பரபரப்பாக வடக்கே ஓடுகிறார்

அடிமேல் அடிவைத்து வாயு புத்திரன்

கோயிலைச் சுற்றுவதுபோல் எப்போதும்

நடக்கும் சௌமியாவும் ஓடுகிறாள்

எவனோ திருநீற்றுக்காரனுடன்

ஓடிப்போன பத்மநாபன் மகள் கீதா

அந்தப் பக்கம் நகர்கிறாள்.

குதிரை வண்டியை நிறுத்தச் சொல்லி

வேடிக்கை பார்க்கப் பயணிகள் இறங்குகிறார்கள்

காக்கைகள் கூவும் வயலில் அக்கறை

அற்று நின்ற கொக்கும் நாரையும்

அந்தத் திசையை ஆராய்ந்து பார்க்கின்றன.

நீண்ட காலமாய்ப் பூட்டிக் கிடக்கும்

தாண்டவராயன் கோயிலின் பக்கம்

ஆடு நடக்கும் பாதையில் எதிர்ப்படும்

பத்தடி உயர வேப்பமரத்தில்

பால் வடிகிறதாம் பால்.

மஞ்சள் குங்குமம் அப்பி

பாவாடை சுற்றி தீப தூபம் காட்டி

உருண்டை வெல்லமும் எலுமிச்சம்

பழமும் படைத்து ‘தாயே’ என்று

பரவசப்பட்டனர் மக்கள்

என்னையும் சிலபேர் பார்க்க வரச்சொன்னார்.

அதிசயமான அந்த மரத்தை விட்டு நீ

இந்த மரத்தின் அருகில் எதற்கு நிற்கிறாய்?

என்று கேட்கிறார் ஒருவர்.

எப்படிச் சொல்வேன் அவர்க்கு

வேப்பமரத்தைக் கருவுறச் செய்த

விஷம விருட்சம் இதுதான் என்று

வேப்பமரத்தை கருவுறச் செய்த, பால்வரச்செய்த அந்த விஷம மரம் எது? பார்ப்பனீயம். மூடநம்பிக்கைகளை விதைக்க வேண்டும். அதை போஷிக்க வேண்டும். கடவுள் இல்லை என்பவரும் வைதீகரும் ஒன்றுதான். இருவருக்கும் அதில் மாற்றுக் கருத்து இல்லை. வைதீகருக்கு சடங்குகளே முக்கியம். சடங்குகள் கடவுளுக்கு மேல். சடங்குகள் இல்லையெனில் கடவுள் இல்லை. சடங்குகள் தெரிந்தவர்கள் அவர்கள் தான். புதிதுபுதிதாய் சடங்குகளை உருவாக்குபவர்களும் அவர்களே. புதிய கடவுள்கள், புதிய விதிகள். விஷம விருட்சம். அந்தவகையில் ஞானக்கூத்தன் நேர்மைக்கு தலைவணங்கித்தான் ஆகவேண்டும்.

தனியே அவர்க்கோர் உணவுண்டு

தூறல் தொடங்குமோ என்று யோசித்த

மாலைப் பொழுதில் வாயு புத்திரன்

கோயிலை நோக்கிப் புறப்பட்டேன்

எந்தத் திசையென்று கண்டுகொள்ளும்முன்

ஒரு மின்னல் மின்னி மறைந்தது

மேகத் திரள்கள் மின்னலை ஒளித்துக் கொண்டிருந்தன

எண்ணெய் விளக்குகளைக்

கோயிலின் ஊழியர்கள் ஏற்றும்போது

குழல் விளக்குகள் சிமிட்டல் செய்து

விழிக்கத் தொடங்கின

சற்று நேரத்தில் ஈசல் பூச்சிகள்

விளக்கைச் சுற்றிப் பறக்கத் தொடங்கின

பறந்த வேகத்தில் ஈசல் பூச்சிகள்

சிறகை இழந்து தரையில் விழுந்தன

பக்கத்து கிராமத்துச் சிறுவர் பட்டாளம்

ஈசல்களை சிரட்டையில் சேகரித்தனர்

இவற்றைக் கொண்டுபோய்

என்ன செய்வீர் என்றேன்

வறுப்போம். மோரில் குடிப்போம் என்றார்கள்

என்னென்ன சாப்பிடுவீர்கள் என்றேன்

ஓணான் என்றார்கள்

உடும்பு என்றார்கள்

வெள்ளை எலிகளும் தின்போம் என்றார்கள்

வாயு புத்திரனைக் கும்பிட்டுவிட்டு

வீடு திரும்பினேன்

வீட்டில் ஓர் விளக்கில்

எண்ணெய்த் தாளைக் கட்டியிருந்தார்கள்

பூச்சிகள் ஒட்டிக் கொண்டு தவித்தன

அவற்றைக் கிண்ணத்தில் சேகரித்தேன்

கொண்டு போய் அவர்களிடம் தந்தேன்

மழை பிடித்துக் கொண்டது

ஆடை நனைய வீடு திரும்பினேன்

இப்படியொரு இரக்ககுணத்தை யாராவது கண்டதுண்டா? கவிஞர் பூச்சிகளை அவை ஈசல்களா என்று தெரியவில்லை, மெனக்கெட்டு மழைக்குள் நடந்துபோய்க் கொடுத்து அவர்கள் பசி தீர்க்க உதவியது புல்லரிக்கச் செய்வது. அதில் எந்தச் சிறுவனும் சோறு என்று சொல்லாதது ஆச்சரியம். ஒருவேளை சொல்லியிருந்தால் கவிஞருக்கு மழையையும் பொருட்படுத்தாது கொண்டுபோய்க் கொடுக்கும் ஆத்திரம் வந்திருக்காது.

இந்தத் தொகுப்பை வாசிக்கும்தோறும் மனதில் எழுந்த விடைதெரியாக் கேள்வி, ஞானக்கூத்தன் ஏன் கவிதையைத் தேர்ந்தெடுத்தார் என்பதுதான். நல்ல மொழிவளம், உவமை நயம் கொண்டவர். பாடலாசிரியராகி இருக்கலாம் அல்லது சிறுகதை வடிவில் சொல்லப்பட்ட பல கவிதைகளைக் கவனத்தில் கொண்டால் சிறுகதைகளோ, நாவல்களோ எழுதியிருக்கலாம். ஏன் கடைசிவரை கவிதை என்பதைத் தொடாமலேயே கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தார்? எனக்குத் தெரியவில்லை. ஞானக்கூத்தனுக்கு 2010இல் கவிதைக்காக சாரல் விருதும், 2014ல் இலக்கியப் பங்களிப்பிற்காக விஷ்ணுபுரம் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

பாலா கருப்பசாமி

கோவில்பட்டியைச் சேர்ந்த பாலா கருப்பசாமி, தற்சமயம் திருநெல்வேலியில் வசித்து வருகிறார். ‘சக்தி நூலகம்’ என்ற நூலகத்தை நடாத்தி வருகிறார். கவிஞர். பத்தி எழுத்து, விமர்சனங்கள் முதலானவற்றிலும் செயற்படுகிறார்.

10 Comments

  1. பாலா கருப்பசாமி! உங்கள் கவிதை விமர்னங்களுக்கு நூலுருக்
    கொடுக்க முயல்க. முரண்படும் . ஞாகூ கருத்தியல், கவித்துவம் குறித்த
    உங்கள் மதிப்பீட்டோடு பெரும்பாலும் உடன்பாடே. மார்கக்சிய விமர்சகர்
    எனப்பொத்தாம் பொதுவாக குறிப்பிட்ட விமர்சகர், ,குறிப்பிட்ட விமர்சக ர்
    எனச்சுட்டிக்காட்டி விமசிப்பதே முறையான மதிப்பீடாகும்

  2. வணக்கம் ஐயா, தங்கள் பகிர்வும் பின்னூட்டமும் எனக்கு எப்போதும் உற்சாகமூட்டுபவை. தொடர்ந்து எனது பணிகளைத் தொடர்வேனென உறுதியளிக்கிறேன்.

  3. ஒரு விமர்சனக் கட்டுரை எப்படி எழுதப்படக்கூடாது என்பதற்கு உதாரணம் இந்தக் கட்டுரை. மேலோட்டமான எளிய மனப்பதிவுகள். எந்த ஆழமும் இல்லை. கவிதை, கவித்துவம் என்று ஏதேதோ உளறிவைத்திருக்கிறார் கட்டுரையாளர். ஞானக்கூத்தன் அப்படி எளிதாகப் புறந்தள்ளக்கூடிய கவிஞர் அல்ல. அவரின் இடம் என்ன என மதிப்பிடத் தெரியாவிடில் அமைதியாக இருக்கலாம். கவிதை, கவித்துவம் என எதைப் பற்றியும் சுயமாக எதையும் சொல்லத் தெரியாமல் இப்படி கவிஞரை ஒரு குத்து, இடதுசாரி விமர்சகர்களை ஒரு குத்து என போகிற போக்கில் போட்டுத் தாக்கிவிட்டுப் போவதுதான் இப்போது விமர்சன மோஸ்தர் போல… கட்டுரையாளருக்கு வாழ்த்துகள். இன்னமும் பல படுகொலைகள் நிகழட்டும்.

  4. ஞானக்கூத்தன் கவிதையில் எது முக்கியமான வரிகளோ அதை நீக்கலாம் என்கிறார் .ஒன்றும் ஆகாது என்கிறார்.இவர் போலும் மடையர்கள் தமிழில் மட்டும்தான் இருக்கிறார்களா ? அல்லது உலகம் முழுவதிலும் உண்டுமா?

  5. திருக்கூனன் அங்குராயநத்தம் கண்டராதித்தன்ம் says:

    மிக நீண்ட கட்டுரை எழுதியதிற்கு வாழ்த்துகள் பாலா,ஞானக்கூத்தனின் காலகட்டமும் மனவோட்டங்களும், இந்த கட்டுரையில் கவனிக்கப்பட்டிருக்க வேண்டும்,சில இடங்களில் முரண்படுகிறேன்.இடதுசாரி விமர்கர்கள் மீதான கருத்து இந்த கட்டுரையில் பொருந்தவில்லை.

    • நன்றி கண்டர். கவித்துவம், ஆழம் என்ற அளவுகோல்களை எடுக்கும்போது அவை எந்தளவு கவிதையில் அடிப்படையானவை என்பதை விளக்க வேண்டியுள்ளது. மேலும் அதற்கு எதிராக சொல்லப்பட்ட கருத்துக்களை மறுத்து பதிலளிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. ஞானக்கூத்தனின் அனைத்துக் கவிதைகளையும் வாசித்தவன் என்ற முறையில் அவரது கவிதைகள் ஆரம்பகட்டம் முதல் கடைசிவரை ஒரே தொனியில் இருக்கின்றன என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். உரையாடுவோம்.

  6. கட்டுரை சிறப்பு எதையும் அவர் சொல்கிறார்
    இவர் சொல்கிறார் என்பதற்காக ஏற்பது
    இகழ்ச்சி நாம் அதனை படிக்க நமக்கும்
    அந்த அனுபவம் வாய்க்க வேண்டும்.
    நன்றி

உரையாடலுக்கு

Your email address will not be published.