/

அயோத்திதாசர்- சமஸ்கிருதம், தமிழ் இலட்சணம், தமிழ் பவுத்தம்: மனோஜ் பாலசுப்பிரமணியம்

எல்லா சிந்தனையாளர்களும் சமூகம் சிந்திக்கும் வழமையான போக்கிலிருந்து விலகி வேறொரு கோணத்தில் சிந்தித்துச் சென்று வேறொரு இடத்தை முட்டித் தாக்கி ஒருவித உடைப்பை உண்டு பண்ணி முற்றிலும் புதிய பாதையைத் திறந்து விடுபவர்கள். “ஒடுக்கப்பட்டோரின் விடுதலைப் பாதையை தமிழ் பவுத்தத்தின் மூலம் திறந்து வைத்த முதல் சிந்தனையாளர் அயோத்திதாசர்” என்று சொன்னால் சரியாக இருக்குமா ?

அயோத்திதாசரை டி.தர்மராஜ் எழுதிய “பார்ப்பனர் முதல் பறையர் வரை” என்ற நூலின் வழியே அறிமுகப்படுத்திக் கொண்டேன். தாசரின் சிந்தனைகளை வரலாற்று – தத்துவ – சமூகச் சிந்தனைத் தளத்தில் வைத்துப் புரிந்து கொள்ள அதுவொரு சிறந்த நூல்.

ஆனால் எளிய நூல் அல்ல. நெருக்கடி தரும் நூல்.

ஆம். அயோத்திதாசரின் மரபான சிந்தனைகள் நவீனத் தமிழ் மனங்களுக்கு நெருக்கடியை உண்டு பண்ணுபவை. தாசரைப் புரிந்து கொள்வதில் உள்ள குறிப்பிட்ட சில சிக்கல்கள் குறித்தும் அதை எதிர்கொள்வது குறித்தும் பேச விழைகிறது இக்கட்டுரை.

**

தாசரும் சமஸ்கிருதமும்

“சமஸ்கிருதம் பார்ப்பன மொழி அல்ல. அது மகட பாஷை (பாலி), சகட பாஷை (சமஸ்கிருதம்), திராவிட பாஷை (தமிழ்) என பவுத்த மும்மொழிகளுள் ஒன்று”

என்றார் அயோத்திதாசர்.

“எங்கள் திண்ணைப் பள்ளியில் இப்படித்தான் சொல்லித் தந்தார்கள்” என்றார் அவர். இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலையில் இதுவொரு சிக்கலான அதேசமயம் சகலரும் குழம்பக்கூடிய விஷயம்.

இந்திய மொழிகளில் தமிழைத் தவிர அனைத்து மொழிகளிலும் சமஸ்கிருதத்தின் தாக்கம்

அதிகம். பல மொழிகளால் சமஸ்கிருதமின்றி இயங்கவே முடியாது. உதாரணமாக கன்னடம், மலையாளம், ஹிந்தி. அந்த நோக்கில் சமஸ்கிருதத்தை அந்நிய மொழி என்று சொல்வதை குறுகலான பார்வை என்றே சொல்ல முடியும்.

சமஸ்கிருதம் அனைத்து இந்திய மொழிகளினுடனும் அதன் பண்பாட்டுடனும் உரையாடி

ஒரு அறிவுத்தொகையாக உருவானது. சமஸ்கிருதத்தில் அனைத்து மொழிகளின் தாக்கமும் உண்டு. அனைத்து மொழிகளிலும் சமஸ்கிருதத்தின் தாக்கமும் உண்டு. உதரணமாக “கல்யாணம்” என்ற சொல் தமிழ்ச் சொல்லே அல்ல.

இதை ஐரோப்பிய ஆய்வுக் கண்கள் ஆதிக்கம் என்றன. அதன் வழியாக ஒரு நவீன அரசியல் உருவானது. தென்னகத்தில் திராவிட அரசியல் உருவானது.

இந்தப் பின்புலத்தில் வைத்துத் தான் அயோத்திதாசரின் சமஸ்கிருதம் குறித்த பார்வையைப் பேச வேண்டும். 

அயோத்திதாசரின் சமஸ்கிருதம் குறித்த பார்வையை புரிந்து கொள்ள உதவும் கருத்துகளாவன.,

1. சமஸ்கிருதம் வைதீக மதங்களின் மொழி மட்டுமல்ல. அவைதீக மதங்களின் மொழியும் கூட.

2. எனவே அவற்றில் வேத ஆதரவு மட்டுமல்ல வேத எதிர்ப்பும் உண்டு. பல சமண பவுத்த ஏடுகள் சமஸ்கிருத்திலேயே உண்டு.

3. சமஸ்கிருதம் ஒரு உரையாடல் மொழி அல்ல. எழுத்துரு கூட கிடையாது. அதற்கு லிபி வடிவம் அளித்து இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றது சமணர்கள் தான். சமஸ்கிருத வேத எதிர்ப்பில் உருவான முதல் மதம் சமணம் என்பது குறிப்பிடத்தக்க முரண்.

4. சமஸ்கிருத நூல்களை எழுதியதில் பிராமணர்களை விட பிராமணரல்லாதோரின் பங்கு அதிகம். வியாசனும் வான்மீகியும் பிராமணர் அல்ல.

5. சமஸ்கிருதத்தை பிராமணர்கள் மட்டுமே உபயோகிக்கிறார்கள் என்ற வழக்கை நான் இப்படி யோசிக்கிறேன். “ஒன்றை ஒருவர் கைகொண்டிருப்பதால் மட்டுமே அது அவருக்கு சொந்தமாகிவிடாது”. அதற்கு இன்னோரு சிறந்த உதாரணம் கர்நாடக சங்கீதம்.

ஈற்றிலுள்ள கருத்து மிக முக்கியமானது. தாசரை நெருங்கிப் புரிந்து கொள்ள உதவுவது. “வரலாற்றில் இன்றைய எதார்த்தம் என்பது இன்றையது மட்டுமே. இதுவே என்றென்றைக்குமான எதார்த்தமாக வேண்டியதில்லை”.

தமிழ் பண்டிதரான அயோத்திதாசருக்கு சமஸ்கிருதமும் பாலியும் ஆங்கிலமும் தெரியும்.

குறிப்பாக சமஸ்கிருதம். இந்தக் கூறு தாசரின் ஆய்வுகளுக்கு பெரிதும் உதவி இருக்கிறது.

இந்த மொழியறிவைக் கொண்டே பல விஷயங்களைத் திறந்திருக்கிறார்.

பெர்க்லி பல்கலை பேராசிரியர் ஜார்ஜ் எல்ஸ்ட் கூறுவது அயோத்திதாசரை புரிந்து கொள்ள உதவும். இதை ஜெயமோகன் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழை ஆய்வு செய்வதற்க்கு சமஸ்கிருதம் இன்றி இயலாது. தமிழ் மட்டுமே தெரிந்த ஒரு ஆய்வாளன் தமிழின் பெரும்பகுதியை இழக்கிறார்.

தமிழும் சமஸ்கிருதமும் நெடுங்காலம் ஒன்றை ஒன்று உண்டு வளர்ந்தவை. தமிழறிஞர்களுக்கு இருக்கும் சம்ஸ்கிருத வெறுப்பு தமிழாய்வுகளை எப்படி முடக்குகிறதோ அதேபோல சமஸ்கிருத அறிஞர்களுக்கு பிற மொழி அறிவு இல்லாதது ஒரு தேக்கநிலையை உருவாக்கி இருக்கிறது”.

இன்றைய பல்கலைக் கழக கல்விப்புல தேக்கநிலையை நூறாண்டுகளுக்கு முன்பே திண்ணைப் பள்ளிக்கூடத்தின் உதவியுடன் கடந்தார் என்று சொன்னால் அதை மிகையாகப் பொருள் கொள்ளக் கூடாது. இதன் உள்ளர்த்தம் மரபை முற்றிலும் எதிர்மறையாகப் பார்க்கத் தேவையில்லை. நவீனத்தை முற்றிலும் நேர்மறையாகப் பார்க்கத் தேவையில்லை. உதாரணமாக ஆலன் டென்டிஸ் என்ற ஐரோப்பிய நவீன ஆய்வறிஞர் விநாயகரின் தும்பிக்கையை ஆண்குறி என்றார்!

தாசரும் தமிழ் லட்சணமும்

அயோத்திதாசரின் மற்றொரு முக்கியமான கருவிகளில் ஒன்று. அவருடைய விளக்கமுறை. “மொழிக்கு இலக்கணம் மட்டுமே இல்லை. இலட்சணமும் உண்டு. உள்மெய் – அந்தரார்த்தம் – உள்ளார்ந்த அர்த்தம்”. அதாவது ஒரு சொல்லுக்கு மட்டுமே அல்ல ஒவ்வொரு எழுத்துக்குமே கூட பொருளுண்டு. இப்படி ஒரு விளக்கம் நவீன மனங்களுக்கு புதிதாக உள்ளது. சந்தேகத்துடன் எண்ண வைக்கிறது.

தாசர் “மை” என்பதை “மெய்” என்றும் “திரு” என்பதை “திரி” என்றும் “சூடி” என்பதை “சுவடி” என்றும் விளக்குகிறார். பொம்மையை அவர் விளக்குகையில் “பொய்மெய்” என்று கூறுகிறார்.

இதில் ஏதோ மொழி விளையாட்டு மட்டுமே ஒளிந்திருப்பதாக நான் நம்பவில்லை. பொம்மையை “பொய்மெய்” என்று கூறுவதில் ஆழ்ந்த அர்த்தமும் உண்டு.

அப்படி அதை மொழி விளையாட்டாகவோ அல்லது ஏமாற்றாகவோ வைத்துக் கொண்டாலும் அதைவைத்து என்ன சொல்ல முயலுகிறார் என்பதே முக்கியம். அதாவது தாசர் என்ன சொன்னார் என்பது மட்டுமல்ல அதை எங்கே சொன்னார் எப்போது சொன்னார் ஏன் சொன்னார் என்பதும் இணையான முக்கியத்துவம் வாய்ந்தவை.

உதாரணமாக ஒளவையாரின் “தையல் மொழி கேளேல்” என்ற வரி. அதற்கு விளக்க உரை எழுதியவர்கள் “தையல்” என்பதை

“பெண்” என்று பொருள் கொண்டார்கள். “பெண் சொல் கேளாதே” என்றெழுதினார்கள்.

இந்த ஒற்றைவரியை வைத்தே ஒளவையாரையும் ஒளவையாரின் கூற்றை வைத்தே ஒட்டுமொத்த பெண்களுக்கு எதிராகவும் கிண்டலாக முன்வைக்கும் போக்கு தமிழ் வம்பர்களிடையே இருந்தது.

இதே வரியை தாசர் நூறாண்டுகளுக்கு முன்பே வேறுவிதமாக விளக்கி இருப்பது ரசமானது. மிக முக்கியமானது. நவீன ஆட்கள் செய்வதற்கு கடினமானது. தையல் என்பதற்கு பெண் மட்டுமல்ல. வேறு அர்த்தங்களும் உண்டு. தையல் என்றால் தைத்தல், குத்துதல் என்ற பொருளும் உண்டு. “தையல் மொழி” என்பதை “கடூர வார்த்தை” என்று விளக்குகிறார்.

அதாவது “பிறர் புண்படுமாறு கூறப்படும் கொடூர வார்த்தையை செவியில் கேட்டவுடன் சினம் பொங்கும். அச்சினத்தால் ஒருவருக்கொருவர் கைகலப்புத் தையல் உண்டாகும். அத்தையலால் துக்கம் பெருகி பெருந்துக்கம் ஆகிவிடும். ஆகவே எதிரிகள் கூறும் கொடூர சொற்களை கேளாதிருப்பதே சுகமென்று அறிந்த ஒளவை “தையல் சொற் கேளேல்” என்று கூறியுள்ளார்” என விளக்குகிறார்.

தாசரின் இந்த விளக்கமுறை வைத்திய அறிவு, மொழி வழக்காறு போன்ற பின்னணியால் கைகூடி வந்தவை. அது ஒரு மரபார்ந்த அறிவு. அயோத்திதாசரைப் புரிந்து கொள்ள இந்தக் கருதுகோள் முக்கியமானது. “வரலாற்று ஏடுகள் பெரும்பாலும் நேரடியாக பொருள் தருவதில்லை. அதை விளக்குவதன் மூலமே

பொருளேற்றம் கொள்கிறது”.

தாசரும் தமிழ் பவுத்தமும்

“சைவத் தமிழ் அல்லது தமிழ் சைவம்” என்ற கருத்தே நம் சமூகச் சூழலில் ஆழமாக இருந்து வருகிறது. “இது சமீப நிலை. என்றென்றைக்குமானதல்ல”.

சங்க காலத்திற்குப் பிறகான கிபி ஐந்தாம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சியில் சமணமும் பவுத்தமும் தமிழகத்தில் செழித்து வளர்ந்திருப்பதற்கான வரலாற்றாதாரங்கள் நம்மிடம் உண்டு.

கடைச்சங்க நூல்களாகிய மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரமும் பவுத்த காப்பியங்கள் தான். மணிமேகலையை இயற்றிய கூலவாணிக சீத்தலைச் சாத்தனார் செய்த செய்யுள்கள் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை எனும் நூல்களுள் தொகுக்கப்பட்டுள்ளன. “இளம்போதியார்” இயற்றிய செய்யுள் ஒன்று நற்றினை எனும் கடைச்சங்க நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே கடைச்சங்க காலத்திற்கு முன்பே தமிழகத்திற்கு பவுத்தம் வந்திருக்க கூடும் என்று ஊகிக்கப்படுகின்றன.

இப்படி எத்தனையோ கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள், கோவில் சிலையாதாரச் சான்றுகள் இருந்தாலும் தமிழ் பவுத்தத்தை கற்பனை செய்வதில் நமக்கு சில பிரச்சனை இருக்கின்றன.

ஏனெனில் நாம் பவுத்தத்தை ஐரோப்பிய கண்களால் காண்கிறோம்.

ஒருமுறை இணையத்தில் புத்தர் சிலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஓங்காரமான தோற்றத்துடன் ஒரு பெண்ணை மடியிலமர்த்தி புணர்ந்த நிலையில் அமர்ந்திருக்கும் புத்தரைப் பார்த்தது மிரண்டேன். அந்தச் சிலை குறித்து மேலும் தேடிய போது அது “வஜ்ராயன பவுத்தம்” என அறிந்து கொண்டேன்.

இந்த மிரட்சியை ஐரோப்பிய ஆய்வாளர்களும் சந்தித்திருக்க கூடும். ஏன் இப்படி இருக்கிறது.?

மைய தீர்க்கதரிசி ஒருவரே என்ற போதும் பவுத்தம் நெகிழ்வான மதம். பவுத்தம் ஒரு இடத்திற்கு சென்று அங்கே அப்படியே இருப்பதில்லை. தன்னைத் தளர்த்திக் கொண்டு மற்றமையை உள்ளிழுத்துக் கொள்கிறது. உள்ளூர் பழங்குடி தெய்வங்களுடன் சேர்ந்து வேறோன்றாக திரிபடைகிறது. உதாரணமாக மலைகளுக்குச் சென்ற பவுத்தம்

தன் கொள்கையான சைவ உணவை தளர்த்தி அசைவ உணவை ஏற்றுக் கொள்கிறது.

ஏனெனில் அதற்கொரு மிஷினரி நோக்கு உண்டு. சமணமும் பவுத்தமும் அழிவை ஏற்படுத்தாத உலகின் முதல் மிஷினரி மதங்கள்.

பவுத்தம் திபெத் சென்ற போது

உள்ளூர் மதத்துடன் சேர்ந்து வேறொன்றானது. சீனாவில் ஜென் பவுத்தமானது. ஜப்பானில் ஷிண்டோ மதமானது.

விளைவாக பல பவுத்த மத பிரிவுகள் உருவாயின. ஹீனாயானம், மகா யானம், வஜ்ராயனம், போன் பவுத்தம், ஜென் பவுத்தம் எனப் பண்பாட்டளவில் தனித்தனியாகப் பிரிந்து ஆனால் உயர்மெய்மை அளவில் தனித்த அறிவுத்தொகுதியாக உருமாறி ஒரு உயரழுத்த மையத்தை உருவாக்கிக் கொண்டது. இது ஒரு எளிய வரையறை.

காஞ்சிபுரத்துக்கு அருகில் “மணிமேகலை அம்மன்” என்றொரு அம்மன் கோவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

மணிமேகலை ஒரு பெளத்த பிக்குணி. அதாவது மாதவியின் மகள் மணிமேகலை பெளத்த தருமத்தை அறிந்து துறவு மேற்கொண்ட பின்,

தன்னுடைய வாழ்நாள் இறுதி வரை காஞ்சிபுரத்திலேயே இருந்ததாக கூறுகின்றது பெளத்த காப்பியமான மணிமேகலை.

மணிமேகலையை எப்படி அம்மன் என்றழைக்கிறார்கள்? அம்மன் இந்துக் கடவுள் இல்லையா? என்ற கேள்வியை “சமீப எதார்த்தம் வரலாறாகாது” என்ற கருதுகோள் மூலம் எளிதாகக் கடந்துவிடும் தாசர், அம்மன் என்பதை பவுத்த நாட்டார் தெய்வம் என்கிறார். அதை மக்களின் திருவிழாச் சடங்கான கூழ் ஊற்றுதல், வேப்பிலையை அம்மனாக உருவகித்தல் போன்றவற்றிலிருந்து விளக்குகிறார். பேரா.டி.தருமராஜ் “காற்றினுள் அசையும் வேம்பு” என்ற கட்டுரையில் இவ்விஷயம் குறித்து விரிவாக எழுதி உள்ளார்.

பவுத்தத்தை இங்கே மீட்டுருவாக்கம் செய்ய முயன்ற ஆங்கிலேயர்கள் கிறித்துவத்தை முன்மாதிரியாகக் கொண்டார்கள்.

முழுக்க முழுக்க ஏடுகள் துணையுடன் உருவானது.

ஆனால் அயோத்திதாசர் சொல்லும் பவுத்தம் மக்களிடையே வாழ்வது. திருவிழாக்களில் சடங்குகளில் வாய்மொழிகளில்.

இதை “உள்ளூர் பவுத்தம்” என்பார் ஸ்டாலின் ராஜங்கம்.

பவுத்தத்தையும் சமணத்தையும் அயோத்திதாசர் தனித்தனி மதம் என்று சொல்லவில்லை. “பூர்வத்தில் இவை இரண்டும் ஒன்றாகவே இருந்தன” என்று சொன்னார். இதைத் தத்துவ தளத்தில் வைத்துப் பார்க்கையில் தனித்தனி என்றே தோன்றும். புதிய சிக்கலாகத் தோன்றும். பவுத்தமும் சமணமும் பூசலிட்டிருக்கின்றன என்பது வரலாறு.

ஆனால் தாசர் இவற்றை தத்துவ தளத்தில் வைத்து அப்படி சொல்லவில்லை. நடைமுறை தளத்தில் மக்களிடம் புழங்கும் சமண பௌத்தத்தை ஒன்றே தான் என்று கூறுகிறார். ஜெயமோகன் தன் கட்டுரை ஒன்றில் “நான் நேரில் சென்று கண்டபோது இந்தியா முழுவதும் பவுத்தக் கோவில்களும் சமணக் கோவில்களும் அருகருகே அமைந்திருந்தன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பவுத்தம் என்றால் புத்தர் சிலையும் மொட்டையடித்து தியான நிலையில் அமர்ந்திருக்கும் பிக்குகளும் தான் நமக்குத் தெரிகிறார்கள். இது ஐரோப்பியர்கள் நமக்கு உருவாக்கியளித்த சித்திரம். ஐரோப்பிய ஆய்வு ஏடுகளை மட்டுமே ஆதாரங்களாகக் கொண்டிருப்பவை. அவை நாட்டார் பாடல்களையோ வாய்மொழிக்கதைகளையோ ஆதாரமாகக் கொள்வதில்லை.

இந்தப் புள்ளியில் தான் அயோத்திதாசர் உருவாக்கியளித்த சித்திரத்தை கருத்தில் கொள்ள விளைகிறேன்.

முனியப்பனை மாரியம்மனை பவுத்த நாட்டுப்புற தெய்வங்கள் என்று விளக்குகிறார். இந்துப் பண்பாடு மற்றும் விழாக்களுக்கு பவுத்த விளக்கமளிக்கிறார்.

மகாபாரதத்திற்கே ஏழெட்டு பாட பேதங்கள் உண்டு. ஆகையால் அயோத்திதாசரின் பவுத்த விளக்கத்தை கட்டுக்கதையாக பார்ப்பது மரபறிவின்மை என்று தயங்காமல் சொல்லலாம்.

**

இன்றைய வரலாற்று ஆய்வில் தரவுகளுக்கு மட்டுமல்ல உள்ளுணர்வுக்கும் இடமுண்டு.

அதன் மூலம் வரலாற்றின் பல பக்கங்களைத் திறக்க முடியும். அயோத்திதாசர் நமக்களித்த கொடை அது தான். “நீ அதுவாக வேண்டுமென்றால் அதுவாகவே ஆகி அமர்”

தாசரை வாசிப்பது மட்டுமல்ல அவரை விளக்குவதன் மூலமும் அவரைப் புரிந்து கொள்ளலாம்.

அயோத்திதாசர் தமிழ் பவுத்தப் பாதையைத் தேர்ந்ததன் நோக்கம் என்னவாக இருந்திருக்கும் ?

“ஒடுக்கப்பட்ட மக்களின் கலை இலக்கியச் சிந்தனைகள் “தலித் சிந்தனை” என்கிற அளவில் சுருங்கிவிடாமல் உலகின் மாபெரும் அறிவுச் சிந்தனை மரபான பவுத்த சிந்தனையாக இருக்க வேண்டும் என்பதாக இருந்திருக்கும்”.

மனோஜ் பாலசுப்பிரமணியம்

மனோஜ் பாலசுப்பிரமணியன். ஊர் தேனி. பொறியியல் பணி. ஆர்வம் - இலக்கிய வாசகர். மதம், வரலாறு சார்ந்தவற்றில் ஆர்வமும் தேடலும் கொண்டவர்

11 Comments

  1. ரொம்ப நல்லாருக்குணா. வாழ்த்துக்கள் மீண்டும்.

  2. நல்ல கருத்துக்கள் மிகவும் சிறப்பு
    வாய்ந்தது வாழ்த்துக்கள்.
    மனோஜ் 👌👌👌👌👌
    🌹🌹🌹🌹🌹🌹

  3. வணக்கம்..இன்றைய இந்து மதம் என்பது 12 சிறிய பிரிவுகளாக இருந்ததை உள்ளடக்கிக் தான் வெள்ளையர்கள் காலத்தில் அவர்களின் வசதிக்காக இங்க இருந்த சிலரின் உதவியுடன் இந்து என்று குறிப்பிடுவதற்கு வசதியாக ஆக்கிக் கொண்டார்கள். பௌத்தத்தின் பல கூறுகள் தற்போதும் பல பகுதிகளில் நடைமுறையில் உள்ளன.

  4. மிகச் சிறப்பு உடன்பிறப்பே…..💞💞

  5. அகழ் தளத்தில் வெளியான உங்கள் கட்டுரை வெகுசிறப்பு. பொம்மை – பொய்மெய் (பொய்யை மெய் போல் காட்டுவதால் அந்தப் பெயர் வந்திருக்கலாம்) மிகச்சிறந்த ஆளுமையாக அயோத்தி தாசர் விளங்கியதை பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். உங்கள் கட்டுரையும் அதைத் தான் சொல்கிறது. இறுதியில் நாட்டுப்புற தெய்வத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையிலான தொடர்பை சிறிதாக காட்டியிருந்தீர்கள். இயக்கி என்ற சமண குறியீடு தான் இசக்கி என்று இருப்பது போல நாட்டுப்புற தெய்வ மரபில் பல தெய்வ வடிவங்கள் பௌத்த சமண மதங்களிடம் இருந்து தான் பெறப்பட்டுள்ளது. சமற்கிருதம் மற்ற மொழிகளில் செலுத்தும் ஆதிக்கம் என்பது மற்ற மொழிகள் சமற்கிருதம் மீது காட்டும் ஆதிக்கத்தை விட குறைவாக இருந்திருக்கலாம். அதனால் சமற்கிருதத்தின் ஆதிக்கத்தன்மை மீதான பிடித்தம் காரணமாக பார்ப்பனர்கள் பெரிதளவு அதனை பயன்படுத்தி உரிமை கொண்டாடுகிறார்களோ என்னவோ.. இப்படி பயனுள்ள பல கட்டுரைகளை நீங்கள் எழுத வாழ்த்துகள் ✨✨

  6. ப.முத்தையா லிங்கம் காமாட்சி புரம். says:

    சிறந்த பதிவு.
    தொடர்ந்து பல புதிய படைப்புகள்
    பதிவு செய்ய வாழ்த்துக்கள்..

உரையாடலுக்கு

Your email address will not be published.