/

ஹென்றி ஜேம்ஸ்- ஒரு பெண்ணின் சித்திரம்: ஹெரால்ட் ப்ளூம், தமிழில்: இல. சுபத்ரா

Henry James: The Portrait of a Lady

ஹென்றி ஜேம்ஸின் நாவல்களுள் எனக்கு மிகவும் விருப்பமானதாகிய ஒரு பெண்ணின் சித்திரம் முதலில் 1880-81ல் வெளிவந்தது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டிற்குப் பிறகு 1908ல்  ஹென்றி ஜேம்ஸின் புதினங்களும் கதைகளும் (The Novels and Tales of Henry James) என்கிற நியூ யார்க் பதிப்பிற்காக, ஜேம்ஸ் அதனை விரிவாகத் திருத்தி அளித்தார்.    இஸபெல் ஆர்ச்சரின் சித்திரத்தை முதலில் தீட்டியபோது அவருக்கு முப்பத்து ஏழு வயது, அதனைத் திருத்தியபோது அறுபத்து ஐந்து வயது.

இவற்றில் கிட்டத்தட்ட இரண்டு வகையான இஸபெல் ஆர்ச்சர்கள் வெளிப்படுவதால், வாசகர்கள் கவனமாக இரண்டாவது பதிப்பைத் தேர்ந்து வாசிப்பது நல்லது. வேறு எந்த நாவலாசிரியருக்கும் – செர்வாண்டே, ஆஸ்டன், ப்ரௌஸ்ட் உட்பட – ஜேம்ஸின் பரந்த ப்ரக்ஞை வாய்த்திருக்கவில்லை. எமிலி டிக்கன்ஸன் குறிப்பிட்டதைப்போல, ஆகாயத்தைக் காட்டிலும் அகன்ற சிந்தனையோ என எண்ணச் செய்கிற அவருடைய விரிவான காட்சிப்படுத்தலைக் காண வேண்டுமெனில் ஒருவர் ஷேக்ஸ்பியரின் காலத்திற்குத்தான் செல்ல வேண்டியதிருக்கும்.  அடிப்படையிலேயே ப்ரக்ஞையின் நாயகியான இஸபெல் ஆர்ச்சர் 1908ஆம் ஆண்டு பதிப்பில் இன்னும் வெளிப்படையான ப்ரக்ஞையுடன் நடந்துகொள்கிறாள்.

ஒரு பெண்ணின் சித்திரம் நாவலை எதற்காக வாசிக்க வேண்டும்? நிறைய காரணங்களுக்காகவும் எண்ணற்ற பயன்களைப் பெறுவதற்காகவும் வாசிக்க வேண்டும் என்றாலும், நமது தனிப்பட்ட பிரக்ஞையை வளப்படுத்திக் கொள்ள முடிதலே ஆழ்ந்த வாசிப்பின் முதன்மை மற்றும் முக்கியப் பலனாகும். உற்சாகம் மற்றும் நுண்ணுணர்வு: இவை இரண்டும் ஏகாந்த வாசிப்பின் மூலம் ஒருவரது ப்ரக்ஞையில் செறிவூட்டப்படுகின்ற இரண்டு முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. கடந்த கால மற்றும் நிகழ் கால சமூகம் பற்றிய அறிவு வாசித்தல் மூலம் கிட்டக்கூடிய கூடுதல் ஆதாயம் என்றால், சிறிய அளவிலான அரசியல் விழிப்புணர்வும் வாசிப்பினால் சாத்தியமாகிற உபரி பலனாக இருக்கிறது.

ஒரு பெண்ணின் சித்திரம்  நாவலை ஜேம்ஸ் திருத்தத் திருத்த இஸபெல் ஆர்ச்சருடனான அவருடைய குண ஒற்றுமையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஜேம்ஸின் கதாபாத்திரங்களிலேயே அதிக ஷேக்ஸ்பியர்தன்மை கொண்டது இஸபெல்தான் என்பதால், அவளது அடையாளத்தின் பெரும்பகுதி வாசகர்களின் யூகிப்பிற்கே விடப்படுகிறது. திருத்தப்பட்ட பதிப்பில் நாம் அதிகமும் ஜேம்ஸால் வழிநடத்தப்படுவதால், 1881ல் எழுதப்பட்ட பிரதியில் இஸபெல் அதீத புதிர்த்தன்மையுடனும் மிகுந்த செல்வத்துடனும் இருந்ததாக ஒருவரால் வாதிட முடியும். இன்னொரு வகையில் சொல்வதானால், அமெரிக்க நாவலாசிரியர்களின் ஆசானாகிய ஜேம்ஸ், தன் வாசகர்களைவிட தன்னையே அதிகம் நம்பியது போல் தோன்றுகிறது. 1908ல் இஸபெல் பற்றிய அவரது கண்ணோட்டம் மாறியிருக்கிறது.

1881ன் இஸபெல் சுயாதீனத்திற்கான வேட்கைக்கு பலியானவளாய் இருக்கிறாள். 1908ல் இஸபெல் எடுக்கும் பிழையான முடிவுகளால் அவளது சுதந்திரத்திற்கு நேரும் பாதிப்புகளை, அவளது பிரக்ஞைக்குக் கிடைத்த ஒரு லாபமாகக் கூறுகிறார். அவளுக்கு இருக்கும் அதீத சுதந்திரத்தின் விளைவால் அவளால் இன்னும் கூடுதலான விஷயங்களைப் பார்க்க முடிகிறது. சமகால விமர்சன முறைகளில் ஒன்றை எடுத்து நோக்குவோமானால், ஏமாற்றப்பட முடியாத இடத்தில் தன்னை கவனமாக இருத்திக்கொள்ள முயலும் 1908ன் ஜேம்ஸிய இஸபெல்லாவை விட 1881ன் இஸபெல்லாவையே ஒரு பெண்ணிய வாசகி விரும்புவார். சுயாதீனத்திற்கான இஸபெல்லாவின் ஆரம்பகட்ட முயற்சிகள், தைரியமானவை என்றாலும் தவறானவை. அவை, பிற்பகுதியில் அவளது தெளிவுபட்ட சுய அறிவினால் ஈடுசெய்யப்பட்டுள்ளன. சுய சார்பென்பது ரால்ஃப் வால்டோ எமர்சனின் அடிப்படைக் கோட்பாடு. இஸபெல் எமர்சனின் குழந்தைகளில் ஒருத்தி என்பதை ஜேம்ஸ் (உள்ளார்ந்து உணர்ந்திருந்திருப்பார். நமது ஹென்றி ஜேம்ஸின் தந்தையான சீனியர் ஹென்றி ஜேம்ஸ், எமர்ஸனிடமிருந்து விடுதலையே பெறவில்லை. எனவே சமாதானத்தின் துறவி (Sage of Concord) என்றழைக்கப்படுகிற எமர்ஸனைப் பற்றிய ஜூனியர் ஹென்றி ஜேம்ஸின் கருத்துக்களை நாம் கவனமாகவே வாசிக்க வேண்டியிருக்கிறது:

”எமர்சஸனின் எழுத்துக்கள் ஓர்மையாகத் தொகுக்கப்பட்டவை அல்ல என்று பொதுவாகச் சொல்வது அதனை குறுக்குவதாகவோ மிகைப்படுத்துவதாகவோ ஆகிவிடும்”

”லட்சியங்களையும் சுதந்திரத்தையும் அடைவதற்கான பாதையில், நமக்கு என்னவெல்லாம் தேவைப்படும், நம்மால் எவற்றையெல்லாம் சாத்தியப்படுத்த முடியும் என்பவை பற்றி அத்தனை உறுதியான நிலையான இயல்பான பார்வை வேறெவருக்கும் இருந்திருக்கவில்லை.”

”எமர்சனை உருவாக்கிய அவரது அரிதான மேதமை என்னவென கூர்ந்து கவனிப்பவர்களுக்கு, அவர்தான் முதன்மையான மற்றும் அரிதான அமெரிக்க ஆன்மா என்பது புலப்படும்”

முதல் குறிப்பு மிகவும் அபத்தமான பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறது. எமர்ஸனின் ’அனுபவம்’(Experience) கட்டுரையை வாசித்தீர்களானால் நீங்கள் ஹென்றி ஜேம்ஸிடம் முரண்படக்கூடும். ஆனால் இரண்டாவது குறிப்போ, முழுமையாக இஸபெல் ஆர்ச்சர்தான்: இஸபெல் ஆர்ச்சரின் கனவுதான் அது. மூன்றாவது குறிப்பில் நிஜமாகவே ஜேம்ஸ் அப்படித்தான் உணர்த்த விரும்பினாரா என்பது குறித்து எனக்குச் சந்தேகம் உண்டு; எமர்ஸனிற்கு சங்கடம் தருகிற நடைத் துணையாய் இருந்த ஹாதோர்னையே ஹென்றி ஜேம்ஸ் விரும்பினார். ஹாதோர்னின் ஸ்கார்லட் லெட்டர் நாவலின் நாயகியான உணர்ச்சிமிக்க ஹெஸ்டர் ப்ரைன்தான் எனக்கு அதிகமும் எமர்ஸனின் நாயகியாகத் தோன்றுகிறாள். இஸபெல் ஆர்ச்சரோ, ஹென்றி ஜேம்ஸைப் போலவே தன் விருப்பங்களிலிருந்து தப்பிக்கவே செய்கிறாள். எமர்ஸன் தன் இரண்டு மனைவிகளையுமே – எலன், லிடியன் – நேசித்தார்; மிக இளம்வயதிலேயே மரணித்த எலனின் மீது கூடுதல் அன்பும் இருந்திருக்கலாம். ஜேம்ஸ்தான் – எமர்ஸன் அல்ல –  இஸபெல்லின்  கட்டுப்படுத்தப்பட்ட பாலியல் நடத்தைக்குக் காரணமாக இருக்கிறார். நாவல்களை அதிகம் வாசிக்காத எமர்ஸன் த ஸ்கார்லட் லெட்டரை வாசித்திருக்கிறார், ஆனால் அதனை குறைவாகவே மதிப்பிட்டார்; போட்ரைட் ஆஃப் த லேடியை அவர் விரும்பியிருக்கக்கூடுமா என்பது குறித்து எனக்குச் சந்தேகமே. என்றாலும், லட்சியவாத இஸபெல்லிடம் உறைந்திருக்கும் ஒரு நிஜமான குழந்தையை அவர் நிச்சயம் அடையாளம் கண்டிருப்பார். மேலும், எமர்ஸன் மற்றும் வால்டர் பேடரின் (இங்கிலாந்தில் அழகியல் (aesthetic) இயக்கத்தை பிரஸ்தாபித்தவர்) பகடிப்பிரதியான கொடூர ஆஸ்மண்டை கணவனாகத் தேர்ந்தெடுக்க அவளைத் தூண்டிய அழகியல் உணர்ச்சியை அவர் நிச்சயம் கண்டித்திருப்பார்.

ஒருபெண்ணின் சித்திரம் (த போட்ராய்ட் ஆஃப் த லேடி) நூலை முதன்முறையாக வாசிக்கும்போது, அவள் பற்றிய விவரங்கள் எல்லாமே கதைசொல்லி ஹென்றி ஜேம்ஸ் மூலமும் அவளது அபிமானிகளான ரால்ஃப் டச்சட், லார்ட் வார்பர்டன்,  காஸ்பர் குட்வுட் (மன்னிக்கவே முடியாத கொடூரப் பெயர்) போன்றோரின் சிந்தனைகள் மூலமும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் மிகவும் உபயோகமாக உணரக்கூடும். முன்யோசனையின்றி நடந்து கொள்பவளாக இஸபெல்லை நிறுவும்படியான சம்பவங்களை ஜேம்ஸால் அதிகமாக நமக்குத் தர முடியவிலை. நாம் அவளை அப்படியே நம்புகிறோம், ஏனென்றால் அவளது எண்ணங்கள் பற்றிய ஜேம்ஸின் விவரணைகள் மிக விரிவானவையாகவும் ஒப்புக்கொள்ளச் செய்பவையாகவும் இருக்கின்றன. மேலும், அவளது கணவனாகிய போலி ஆஸ்மண்ட் தவிர்த்து நாவலில் வருகிற பிற அத்தனை கதாபாத்திரங்களின்- ஆண்கள் பெண்கள் – மீதும் அவள் வலிமையாக ஆதிக்கம் செலுத்துகிறாள். ஆஸ்மண்டைப் பொறுத்த அளவிற்கு அவள் வெறும் ஒரு சித்திரமோ சிலையோ மட்டுமே; அவளது ஆன்மாவின் விஸ்தாரம் அவனது குறுகிய மனப்பான்மையைக் காயப்படுத்துகிறது. ஒவ்வொரு வாசகரின் சிந்தையிலும் எழுகின்றபடி, இந்நாவலின் முக்கிய புதிரானது என்னவென்றால், அவள் ஏன் அந்த அலுப்பூட்டக்கூடிய ஆஸ்மண்டைத் திருமணம் செய்தாள்? போதாததற்கு, இறுதியில் ஏன் அவனிடமே திரும்புகிறாள்?

ஏன் பெரும்பாலான வாசகர்களுக்கு – ஆண்களுக்கும் பெண்களுக்கும் – இஸபெல் ஆர்ச்சரைப் பிடிக்கிறது? இளம் வயதிலேயே மிகவும் ஆழ்ந்து வாசிக்ககூடிய ஒருவராக நீங்கள் இருப்பின், உங்களது முதல் காதலானது நிஜத்தை விட கற்பனையான ஒன்றாகவே இருக்க வாய்ப்பு அதிகம். ’எல்லா நூற்றாண்டுகளுக்குமான நாயகி’ என ஹென்றி ஜேம்ஸால் புகழ்ந்துரைக்கப்பட்ட இஸபெல் ஆர்ச்சரை நமக்கு ஏன் பிடிக்கிறதென்றால், தன் ஆற்றலை முழுமையாக உணர்வதை நோக்கி, சுயநலம் ஒழித்து, அசுரத்தனமாய் செயல்படும் நிஜவுலக/புனைவுலக நடைமுறைவாத பெண்களின் ஒரு தொல்படிமமாய் இருக்கிறாள் அவள். ஜார்ஜ் எலியட்டின் மிடில்மார்ச்-ன் நாயகியான டோரதியா தைரியமாக கனவு காண்கிறாள், என்றபோதும், அவளுடைய கடந்தேகுதல்வாத (transcendentalistic) கனவுகளில், இஸபெல் ஆர்ச்சரிடம் இருக்கும் எமர்ஸனின் சாரமான, எத்தகைய விலை கொடுத்தேனும் ஆழ்மன விடுதலை அடைய வேண்டுமென்கிற கூறு காணப்படவில்லை.

ஹென்றி ஜேம்ஸ் தன்னையே ஒரு பெண் உருவாய்த் தீட்டிக் கொண்டதில் விளைந்தவள்தான் இஸபெல் என்பதால், அவளுடைய ப்ரக்ஞை வெகு விஸ்தாரமானதாக இருக்க வேண்டியது அவசியமாகிறது, கிட்டத்தட்ட அவளைப் படைத்தவனின் எதிரியாய் நிற்கிற அளவிற்கு. எனவே அவள் பற்றி எந்த ஒரு வாசகன் எழுதுகிற தார்மீக ரீதியிலான தீர்ப்பும் பொருத்தமற்றதாகவே எஞ்சுகிறது. ஒரு பெண்ணின் சித்திரம் நாவலில்  ஜேம்ஸின் நீதி சார்ந்த மனம் துரோகம் என்கிற பண்பினை கதையின் மையமாக்கியிருப்பதாக, அவரது  சீடர்களில் ஒருவரான க்ரஹாம் க்ரீன் குறிப்பிடுகிறார்: ஆஸ்மண்டிற்கு இஸபெல்லை மணமுடித்து வைப்பதன்வாயிலாக ஆஸ்மண்டின்மூலம் தனக்குப்பிறந்த மகள் பான்ஸியை இஸபெல்லின் சொத்துக்களை அனுபவிக்கச் செய்ய முடியும் என திட்டம்தீட்டி அதை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மேடம் மெர்லியை அதற்கு எடுத்துக் காட்டாகக் கூறுகிறார். ஆனால், அத்தனை பெரிய ஏமாற்றிற்குப் பிறகும் இஸபெல்லின் அகண்ட ப்ரக்ஞையில் மேடம் மெர்லியால் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை. துரோகம் என்கிற கருத்து ஹென்றி ஜேம்ஸைவிட க்ரஹாம் க்ரீனையே அதிகம் ஆட்கொண்டிருந்திருக்கிறது.

ஒரு பெண்ணின் சித்திரம் ஒருவகை அவலநகைச்சுவை நாவல் என்றபோதிலும் சில வாசகர்களை அது சிரிப்பில் ஆழ்த்தத்தான் போகிறது. ஆஸ்மண்ட் மற்றும் மேடம் மார்லியின் தீக்குணங்கள் பற்றிய விரிவான விவரணைகள், இஸபெல்லின் பலவகை  அபிமானிகள் – டச்சட், வார்பட்டன், குட்வுட் – பற்றிய அற்புதமான விளக்கங்களைத் தாண்டி இஸபெல் ஆர்ச்சர் மட்டுமே நம் சிந்தையின் மையமாக இருக்கும்படி கவனமாய் இருக்கிறார் ஹென்றி ஜேம்ஸ். அவளது சித்திரம் மட்டுமே முக்கியம்; மற்றவர்கள் அனைவரும் அவளுடன் இருக்கிற தொடர்பின் அடிப்படையிலேயே முக்கியத்துவம் பெறுகிறார்கள். எவ்வித நகைச்சுவைக் கோணத்தாலும் பூர்த்தி செய்ய இயலாத அளவிற்கு ஹென்றி ஜேம்ஸிற்கும் அவரது உணர்வுபூர்வ வாசகனுக்கும் இஸபெல்லின் சித்திரம் முக்கியமானதாக இருக்கிறது. போலவே, அவளது சூழல் முழுக்கவே கிட்டத்தட்ட அபத்தமான நகைமுரணால் நிரம்பியிருக்கிறபோதும், ப்ரக்ஞையின் சாகசப் பயணத்தில் இருக்கும் தன் நாயகி குறித்து எந்தவொரு நகைமுரணை அனுமதிக்கவும் ஜேம்ஸிற்கு விருப்பமில்லை. சுதந்திரத்தைத் தந்தும் பெற்றும் மகிழ்ந்திருக்கப் போகிறோமென்னும் நம்பிக்கையில் அவள் ஆஸ்மண்டைத் தேர்ந்தெடுக்கிறாள். அறியத் தேவையான அனைத்தையும் அவன் அறிந்திருக்கிறானென்றும், போலவே தானும் வாழ்வு குறித்த அனைத்தையும் அறிய அவன் துணையிருப்பானென்றும் அவள் எண்ணினாள். அவளுடைய இந்த மோசமான பிழையானது, ஹென்றி ஜேம்ஸ் அவள் மீது நிகழ்த்திய பெரும் கொடூரம் என்பது போலத் தோன்றினாலும், அவரும் அவளுடனும் அவளுக்காகவும் துயருகிறார், அவளது அந்தப் பிழைதான் நாவலின் அதிமையமாய் இருக்கிறது. ”வாழ்வு பற்றிய நம் பிழையான எண்ணங்கள் வாழ்க்கைக்கு அவசியமானவையாய் இருக்கின்றன” என்கிறார் நீட்சே. ஹென்றியோ இஸபெல்லோ நீட்சேவியர்கள் இல்லை, என்றாலும் அவரது கருத்து இஸபெல்லின் ஆகப்பெரும் பிழைக்கு ஒளியூட்டுகிறது.

இஸபெல்லின் கண்ணை மறைத்தது எது? அல்லது, இப்படிக் கேட்கலாம் – அப்படி ஒரு பேரழிவினை தன் பெண்பிரதியின் மீது ஜேம்ஸ் ஏன் நிகழ்த்தினார்? 1908ல் வெளிவந்த திருத்தப்பட்ட பதிப்பில், ஆஸ்மண்ட் இன்னமும் அதிக பகட்டானவனாக, உபயோகமற்றவனாக, போலியானவனாக கட்டமைக்கப்பட்டிருப்பதால் இஸபெல்லின் தேர்வு கூடுதல் விசித்திரமாகிறது. கில்பர்ட் ஆஸ்மண்ட் குறித்த ஜேம்ஸின் முதல் விவரணையே இஸபெல்லின் எதிர்காலக் கணவன் நமக்கொரு  மோசமான செய்தி என வாசகனை எச்சரிக்கப் போதுமானதாக இருக்கிறது:

நாற்பது வயதினனான அந்த மனிதன். நிமிர்ந்த வடிவான தலையும், அதில் அடர்த்தி குறையாத இளநரை கொண்ட ஒட்டக்கத்தரிக்கப்பட்ட தலைமுடியும் கொண்டிருந்தான். மிக நேர்த்தியான, தீர்மானமும் அமைதியும் நிரம்பிய அவனது முகத்தில் ஒரே ஒரு குறைதான் இருந்தது. அற்பமான விஷயங்களையும் ஆழம் வரை சிந்திப்பதால் உண்டான அந்தத் தோற்றத்திற்கு அவனது தாடியின் அமைப்பும் வலு சேர்த்தது.  பதினாறாம் நூற்றாண்டு புகைப்படங்களில் காணப்படுவது போல வெட்டப்பட்டிருந்த அந்தத் தாடியானது தீரமாக மேல்நோக்கி நீவிவிடப்பட்ட அழகான மீசையுடன் இணைந்து அவனுக்கு ஒரு அயல்தன்மையுடன் கூடிய மரபார்ந்த தோற்றத்தையும், பாங்குகளை அறிந்தவன் என்கிற பிம்பத்தையும் ஏற்படுத்தியது. கவனமும் ஆர்வமும் கொண்ட அவனது கண்கள் – முன்னதாக அவை நோக்கமற்றும் ஊடுருவுபவையாகவும், அறிவார்ந்தவையாகவும் இறுக்கமானவையாகவும், கவனம் நிறைந்தவன் போலவும் கனவு காண்பவன் போலவும் இருந்தன என்றாலும் –அவன் அவற்றை தேர்ந்தெடுத்த வரையறைகளுக்குள் மட்டுமே பணி செய்வித்தான் என்பதையும், அத்தகைய முயற்சியில் தேடியவற்றை அடைந்தான் என்பதையும் உங்களுக்கு உறுதியாகச் சொல்லியிருக்கும். அவனது அடிப்படை விவரங்கள் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியில் நீங்கள் தோல்வியே அடைந்திருப்பீர்கள்; அது பற்றிய கேள்விகளுக்கு  அசுவாரசியமான எளிதான பதிலை நல்கும் வெளிப்படையான அடையாளம் எதுவும் அவனிடம் இருக்காது. அவனது உடலில் ஆங்கிலேய ரத்தம் எதுவும் இருக்குமானால் அது ஏதேனும் பிரான்ஸ் அல்லது இத்தாலிய கலவையிலிருந்து வந்திருக்க வேண்டும்;  எல்லோரிடமும் எளிதாக சுற்றுக்கு விடப்படக்கூடிய ஒரு நேர்த்தியான தங்க நாணயம் போன்ற அடையாளத்தையும் சின்னத்தையும் அவன் கொண்டிருக்கவில்லை; ஒரு சிறப்பு நிகழ்வில் பிரத்யேகமாக பதிக்கப்படும் மேன்மையும் நுணுக்கமுமான பதக்கம் போன்றவன் அவன். எடையற்று மெலிந்த தளர்வான தோற்றம் கொண்ட அவன் உயரமுமில்லை குள்ளமுமில்லை.  ஆபாசமாய் ஆகிவிடக்கூடாது என்பதற்கேயன்றி வேறெந்த ஆர்வத்தின் பொருட்டும் ஆடையணியாத ஒருவன் போலவே அவன் உடையணிந்திருந்தான்.

 இத்தாலியில் நிரந்தரமாகக் குடியேறிவிட்ட ஆஸ்மண்ட், “நடை உடை பாவனைகளை கற்றுக் கொண்டான், ஆனால் குறிப்பிட்ட வரையறைகளுக்குள் மட்டுமே… அவன் தேடியவை அவனுக்குக் கிடைத்திருந்தன.” ஜேம்ஸின் இந்த அட்டகாசமான விவரணை, ஆஸ்மண்ட் எந்த அளவிற்கு குறுகியவன் என்றும் நிச்சயமற்றவன் என்றும் நமக்குச் சொல்லிவிடுகிறது.

முரணாக, நாவலின் தொடக்கத்தில் இஸபெல் ஆர்ச்சர் பற்றி இவ்வாறு விவரிக்கப்படுகிறது:

அவள் தன்னைச் சுற்றி ஒருமுறை பார்த்துக்கொண்டாள்: புல்வெளியை, பெரிய மரங்களை, நாணல்கள் கொண்ட- வெள்ளி போன்ற தேம்ஸை, அழகான புராதான வீட்டினை; இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் அவள் தன் துணைகளுக்கு தேவையான சௌகர்யத்தையும் அங்கே ஏற்படுத்திவிட்டாள்; நுண்ணறிவும் உற்சாகமும் உடைய ஒரு இளம்பெண்ணிற்கே உரிய வகையில் சுற்றுப்புறத்தை எளிதாகக் கவனித்திருந்தாள் அவள். அமர்ந்து கொண்ட அவள் நாய்க்குட்டியை கீழே இறக்கிவிட்டாள்; வெண்மையான அவளது கரங்கள் மடியில் கரிய ஆடையின்மேல் படிந்திருந்தன; அவளது தலை நிமிர்ந்திருந்தது, கண்கள் ஒளியுற்றிருந்தன, சுற்றுப்புற நிகழ்வுகளில் அவளது கவனத்தை ஈர்க்கும்படி ஏதேனும் நிகழ்ந்தபோதெல்லாம் அவளது நெகிழ்வான உடல் அப்படியும் இப்படியுமாக இரக்கத்துடன் திரும்பியது.  எண்ணற்ற விஷயங்கள் அவளது கவனத்தை ஈர்த்தன, அவையெல்லாம் அவளது முகத்தில் ஒரு தெளிவான நிரந்தரமான புன்னகையில் எதிரொலித்தன. “இப்படி ஒரு அழகை நான் எங்கேயுமே பார்த்ததில்லை” என்பதாக.

இஸபெல்லும் கவனிக்கிறாள், ஆனால் பாவனைகளை அல்ல, இடங்களையும் மனிதர்களையும். அத்தோடு அவை எவையுமே சுய எல்லையுடையவை அல்ல. நுண்ணறிவும் உற்சாகமும், மறுக்கமுடியாத லாவண்யம் கொண்டவளாக, எண்ணற்ற நிகழ்வுகளுக்கு செவிசாய்ப்பவளாக, லகுவாக மகிழ்பவளாக; ரால்ஃப் டச்சர், லார்ட் வார்பர்டன், திரு. டச்சட் போன்றோர் அவளிடம் முதல் பார்வையிலேயே காதல் கொண்டனர் என்பதிலும், நாமும் அடுத்தடுத்து அவளை தெளிவாகக் காணும்போது அவ்வாறே ஆகப் போகிறோம் என்பதிலும் எந்த ஆச்சரியமும் இல்லை. இருவரையும் பற்றிய இந்த அறிமுக விவரணை, 1908ஆம் ஆண்டு பதிப்பில் 170 பக்க இடைவெளியில்தான் காணப்படுகின்றன என்றபோதிலும், இரண்டிற்கும் இடையிலான ஒப்பீடானது நேரடியாகவும் எதிர்மறையாகவும் இருக்கிறது. ஷேக்ஸ்பியரது நாயகிகளான ரோஸலிண்ட், வயோலா, பியாட்ரிஸ், ஹெலனா போன்ற பலரையும் போலவே நமது மேன்மையான இஸபெல் ஆர்ச்சரும் திருமணத்திற்குள் தள்ளப்படுகிறாள். ஆனால் ரால்ஃப் டச்சட்டோ லார்ட் வார்பர்டனோ காஸ்பர் குட்வுட்டோ அவளை அழிவிற்குள்ளாக்கும் சாத்தியம் கொண்டவர்கள் அல்ல; கில்பர்ட் ஆஸ்மண்ட் பேரழிவானவன். ஒவ்வொரு வாசகியும் தனக்குள்ளேயே கேட்டுக் கொள்ள வேண்டும்: இஸபெல் ஆஸ்மண்டைத் தேர்ந்தெடுத்ததை தவிர்த்திருக்கவே முடியாதென்னும் விதமாக  ஹென்றி ஜேம்ஸால் நம்மை ஒப்புக்கொள்ளச் செய்ய முடிந்திருக்கிறதா, என? ஜேம்ஸை, இஸபெல்லை, த போட்ரைட் ஆஃப் த லேடியை நான் நேசிக்கிற அதே அளவிற்கு என்னால் சொல்ல முடியும், என்னால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வேறு எல்லா வகையிலும் பூரணமான இந்த நாவலின் ஒரே ஒரு குறையாக நான் இதைப் பார்க்கிறேன். இந்தப் புத்தகம் வடிவம் பெற வேண்டுமெனில் அதற்கு இஸபெல்லின் பிழை அவசியமானதாக இருக்கிறது, ஆனால், 1908 பதிப்பில் இருக்கும் இஸபெல், ஆஸ்மண்டால் ஏமாற்றப்பட முடியாத அளவிற்குத் தெளிவான பார்வையைக் கொண்டிருக்கிறாள். குறிப்பாக, ஆஸ்மண்ட் எல்லாக் காலங்களுக்குமான நாயகன் இல்லை என்னும்படியாக ஜேம்ஸ் அவனை மறுவடிவமைப்பு செய்திருக்கிறார்.

(ப்ரௌஸ்ட் தவிர்த்து) மற்ற எல்லா நாவலாசிரியர்களையும் விட நுட்பமானவரான ஜேம்ஸ், இஸபெல்லின் தவறான முடிவை நியாயப்படுத்துவதற்காக, தனக்குள்ளிருக்கும் கலைஞனிடமுள்ள, எல்லா திறன்களையும் உபயோகிக்கிறார். அவர் சொல்கிறபடி, ஆஸ்மண்ட் ’மரபின் அதேவடிவம்’: நம்மை குழப்பங்களிலிருந்து விடுவிப்பதை தன்  கொள்கையாகவும், நடைமுறையில் இஸபெல்லின் வாய்ப்புகளை அடைத்து வைப்பவனாகவும் இருக்கிறான். அவனைப்பொறுத்தவரை, மகள் பான்ஸி, அடிப்படையில், விற்கப்பட வேண்டிய வெறும் ஒரு கலைப்பொருள் மாத்திரமே. முடிந்தால் ஒரு பணக்கார உயர்வகுப்பினைச் சேர்ந்த கணவனிடம் விற்கப்பட்டுவிட வேண்டும். ’நடமாடும் தங்க நாணயமாக’ இருக்கும் ஆஸ்மண்ட், இஸபெல்லின் சொத்துக்களால் (டச்சட் என்னும் உறவுக்குடும்பத்தினமிருந்து அவளுக்கு வந்து சேர்ந்தது) மட்டும் ஈர்க்கப்படவில்லை, அவளை ’தான் வேலை செய்ய வேண்டிய’, வண்ணம் தீட்ட வேண்டிய ஒரு சித்திரமாகவும்  காண்கிறான்.  ஆனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான எல்லைகளெல்லாம் கடந்த பிறகே இஸபெல் இவற்றையெல்லாம் உணர்கிறாள். ஏன்? ஜேம்ஸ் நமக்கு நிறைய குறிப்புகள் தருகிறார், ஆனால் எவையுமே விளக்கமானவை அல்ல. அவளுக்குள்ளிருக்கும் தாய்மையை விழிப்புறச் செய்யும் பான்ஸி அங்கிருக்கிறாள் (ஆஸ்மண்டின் மூலம் அவளுக்குப் பிறக்கிற ஆண் சிசு ஆறு மாதங்களிலேயே இறந்து விடுகிறது. அதன் பிறகு சில காலத்திலேயே அவர்களிடையேயான உடல்தொடர்பு முடிந்து விடுகிறதென ஜேம்ஸ் குறிப்பிடுகிறார்). ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற அவளது ஆவேசமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது: அவளது உறவினனான ரால்ஃப் டச்சட் சுகவீனமாய் இருக்கிறான்; லார்ட் வார்பர்டனிடம் இருக்கும் ஆங்கில மேல்தட்டு மனப்பான்மையை அவளது அமெரிக்க ஆன்மா தவிர்க்கிறது. ஆரம்பத்திலேயே ஆல்பனியில் அவளிடம் விருப்பம் தெரிவித்த காஸ்பர் குட்வுட் அவளை அதீதமாய் நேசிக்கிறவனாகவும் அவளை உடைமையாக்கிக் கொள்ள விரும்புகிறவனாகவும் இருக்கிறான். ஹென்றி ஜேம்ஸைப்போலவே, இஸபெல்லும் நேசிக்கப்பட விரும்புகிறாள், ஆனால் யாரொருவருடைய அதீத எதிர்பாலின இச்சைக்கும் இலக்காக இருப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை.  

பெருந்தன்மையையும் கருணையையும் லட்சியமாகக் கொண்டிருக்கும் சிறுமியின் (அவள் இன்னமும் சிறுமியாகத்தான் இருந்தாள்) வெளிப்பாடெனவும் கூட, பெரிய ஆசைகளையும் குறைந்த வருமானத்தையும் கொண்டிருக்கும் ஆஸ்மண்டின் மீதான இஸபெல்லில் விருப்பத்திற்கு விளக்கம் தருகிறார் ஜேம்ஸ். டச்சட்டின் சொத்தினை அனுபவித்துவருவது குறித்த அவளது குற்ற உணர்வினையும்கூட இதற்கான இன்னொரு காரணமாக்குக்கிறார். இவை மட்டுமே போதுமா? ஏற்கெனவே கூறியபடி, இவை எனக்குப் போதுமானவையாக இல்லை. ஆனால் ஜேம்ஸ் இவ்விஷயத்தில் ஷேக்ஸ்பியர்தன்மையைக் கொண்டிருக்கிறார், திருமண இணையைத் தேர்ந்தெடுப்பதில் யதார்த்த வாழ்வில் நாம் காண்கிற ஆச்சர்யங்களை நிதர்சனமாகப் படைத்திருக்கிறார். ஷேக்ஸ்பியர் ஆன் ஹாத்வேயை திருமணம் செய்தார். ஆனால் இருபது வருடங்களாக வெகுதொலைவில் லண்டனில் வசித்தபடியே குழந்தைகளுக்கும் மனைவிக்கும் ஸ்ட்ரார்ஃபோர்டிற்குப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். வெகு அரிதாகவே வீட்டிற்குச் சென்றார். தீவீர தன்பால் ஈர்ப்புக் கொண்டிருந்தும் அதை செயல்வடிவாக்காத ஜேம்ஸ், எதிர்பாலின திருமணத்தின் புனிதத்தன்மை மீது மரியாதை கொண்டிருந்த போதும், அந்த ஆசீர்வாதத்தினை தன்வாழ்வில் நிகழ்த்தத் துணியும் அளவிற்கு வாழ்வு பற்றிய கவனம் இல்லாதவராக இருந்தார்.

கதையின் முடிவில் இஸபெல் ஆஸ்மண்டிடம் திரும்புவது, புதிராய் இருந்தாலும், என்னை ஒப்புக்கொள்ளச்செய்வதாய் இருக்கிறது. குட்வுட்டை மீண்டும் மறுக்கிற அவள், அவனது அன்பின் வேகத்தை  உணர்கிறாள் (அஞ்சுகிறாள்).

அந்தியினூடாக அவன் அவளை ஒருகணம் பார்த்தான், அடுத்த நொடி அவள் அவனது கரங்களை தன் கரங்கள் மீதும் உதடுகளை தன் உதடுகள் மீதும் உணர்ந்தாள். அவனது முத்தம் ஒரு வெண் மின்னலைப் போல இருந்தது, மீண்டும் மீண்டும் பரவித் தேங்குகிற ஒளியைப் போல; அந்த முத்தத்தைப் பெற்றபோது, அவளை ஒருபோதும் ஈர்த்திராத அவனது ஆண்மையின் ஒவ்வொரு அங்கத்தையும்- முகத்தின் முரட்டுத்தனங்களை, அவன் உருவத்தை, அவனது இருப்பை, இச்செயலால் ஒருங்கிணைந்த அவனது தீவிர ஆதிக்கத்தை- அவள் உணரும்படியாக அசாதரணமாய் இருந்தது அது. எனில், மூழ்கும் முன் நீருக்குள் நகர்கிற தொடர் காட்சிகள் பற்றி அவள் கேள்வியுற்றிருக்கிறாளா. ஆனால் இருள் திரும்பியபோது அவள் சுதந்திரமாகியிருந்தாள்.

ரோமையும் ஆஸ்மண்டையும் நோக்கிச் செல்வதென்கிற வெகுநேரான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம்தான் அவளை குட்வுட்டிடமிருந்து விடுவிக்கும். ஆனால் ஆஸ்ம்ண்டுடனான வாழ்வு, அதிகபட்சமாக, ஒரு ஆயுதமேந்திய உடன்படிக்கையாக மட்டுமே இருக்க முடியும்.   ஜேம்ஸின், எல்லா யுகங்களுக்குமான நாயகியின் இறுதி முடிவு அதுதானா? ஜேம்ஸ் அதை நமக்குச் சொல்லப்போவதில்லை, ஏனெனில் கதையில் அவருடைய பங்கு முடிந்து விட்டது. அவருக்கு அதற்கு மேல் எதுவும் தெரியாது. அல்லது, இன்னும் சரியாகச் சொல்வதானால், இஸபெல்லிற்கும் கூட அது தெரியாது. ஆனால், இந்தப் புத்தகத்தின் அடிநாதமான, இஸபெல்லின் அகண்ட ப்ரக்ஞையும், மகத்துவமடையும் சாத்தியம் கொண்ட ஆன்மாவும் என்னவாகும்? ஆஸ்மண்டிற்கு மாற்றாக யாரையும் முன்நிறுத்தாமல் ஜேம்ஸ் தவிர்த்துவிட்டார்; குட்வுட் இஸபெல்லின் சுயாதீன வேட்கைக்கு அச்சுறுத்தலாய் இருக்கிறான், எதோ ஒருவகையில் கொடூர ஆஸ்மண்டிடம் அக்குணம் காணப்படவில்லை. ஆனால் 1908லாவது இஸபெல் தன்னையே ஆஸ்மண்டிற்கு மாற்றாய் முன்வைத்திருக்க முடியும்: விவாகரத்தும் ஒரு பொருளாதார உடன்படிக்கையும் அவளை ஆஸ்மண்டிடமிருந்து விடுவித்திருக்கக்கூடும். ஒருவேளை அவ்வாறு நடக்கக்கூடும், ஜேம்ஸ் அதுபோன்ற குறிப்பெதையும் நமக்குத் தரவில்லை. ஆஸ்மண்ட் எத்தனை கீழ்மையானவனாக இருந்த போதிலும் அவன் இஸபெல்லைப் போல வலுவானவன் அல்ல. அவளது லட்சியவாதத்தால் நேர்ந்த பிழையின் விளைவுகளைச் சரிப்படுத்தவும் அதன் வாயிலாக தன் ப்ரக்ஞையில் ஒரு தொடர்ச்சியை நிறுவவும் விரும்பியே அவள் திரும்பிச் செல்வதாக நான் கருதுகிறேன். அதை எதிர்ப்பதில் வாசகர்களுக்குத் தடையொன்றுமில்லை என்றாலும், ஜேம்ஸ் அப்படிப்பட்டவர்தான். ஒரு பெண்ணின் சித்திரம் புத்தகத்தின் இறுதி வடிவம் கவனமும் அனுதாபமும் நிறைந்த ஒரு வாசிப்பைக் கோருகிறது. இஸபெல்லின் தேர்வில் நமக்குத் திருப்தி இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவளது கதை, வாசிப்பதற்கான நமது நோக்கங்களுள் ஒன்றை மீண்டும் வலியுறுத்துகிறது: அலட்சியமாய்ப் புறந்தள்ள முடியாத அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த நமது ப்ரக்ஞையை நாம் இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதே அது.

இல. சுபத்ரா

இல.சுபத்ரா, பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்தவர். மொழிபெயர்ப்பாளர். திருப்பூரில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அமிதபா பக்சியின் ‘பாதி இரவு கடந்துவிட்டது(Half the night is gone)’ நாவலின் மொழிபெயர்ப்பு, 'அது உனது ரகசியம் மட்டுமல்ல' என்கிற மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தொகுப்பு, அனா பர்ன்ஸின் 'ஆயன்(Milkman)' ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். பல்வேறு இணைய இதழ்களிலும் புனைவு அபுனைவு இருவகைமைகளிலும் மொழிபெயர்த்து வருகிறார்.

தமிழ் விக்கியில் 

ஹரால்ட் ப்ளூம்

தலைசிறந்த இலக்கிய விமர்சகர். ஐரோப்பிய–அமெரிக்க இலக்கியவாதிகளில் ஒருவர். அவருடைய இலக்கிய மதிப்பீடுகள் பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாக விவாதிக்கப்படுகிறன.

உரையாடலுக்கு

Your email address will not be published.