/

ஜெயமோகனின் புனைவுக் களியாட்டு சிறுகதைகள்- 2: இரம்யா

‘புனைவுக் களியாட்டு’ சிறுகதைகள் புனையப்பட்டு ஜூலை ஒன்றாம் தேதியோடு ஒரு வருடம் நிறைவு அடைந்தது. சென்ற ஆண்டு மார்ச் 17-ல் தொடங்கி நான்கு மாதங்களாக ஒவ்வொரு நாளும் இந்த நோயச்ச கால எதிர்மறை சிந்தனைகளிலிருந்து வாசகர்களை மீட்டெடுக்கும் சிறுகதைகளாக அமைந்திருந்தவை இவை. இந்தக்கதைகளுக்கான மனநிலையைப் பற்றி எழுத்தாளர் ”ஜெ” குறிப்பிடும்போது, “ஒருபக்கம் அன்றாடத்தின் பொருளில்லா சுழற்சியில் இருந்து கற்பனை வழியாக தப்பிக்கும் விழைவு. இன்னொருபக்கம் நலிந்த தனிமையில் தன்னிச்சையாக உருவாகிப் பெருகி யதார்த்தத்தை விடப்பெரிதாக நின்றிருக்கும் கனவு. கனவுகள் மேலும் கனவுகளை உருவாக்குபவை.” என்று கூறுகிறார். தான் இத்தனை ஆண்டுகளில் ஒருமுறைகூட எழுதாத காஸர்கோட்டின் மக்களும், மண்ணும், தொலைதொடர்புத்துறை வாழ்க்கை, குமரிநிலத்தின் கதையை ஒருபக்கம் தொன்மங்களாக, மறுபக்கம் வரலாறாக எழுதியிருப்பதாகச் சொல்கிறார். ஜெயமோகனின் எழுத்துலக பிரபஞ்சத்திற்குள் கனவுகளால் எழுப்பப்பட்ட மேலுமொரு பிரபஞ்சத்தை அணுக்கமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பாக இந்த நூறு சிறுகதைகள் அமையப் பெறுகின்றன. அந்த அனுபவத்தை வாசர்களுக்கு அறிமுகம் செய்வதான முயற்சியில் அமைந்த “ஜெயமோகனின் புனைவுக்களியாட்டு சிறுகதைகள்” கட்டுரையின் இரண்டாவது பாகமாக இந்தக் கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.

பெண்:

ஜெ –வின் எழுத்துக்களில் பெண்கள் நுணுக்கமாக வரையப் பெறுகிறார்கள். அவர்களைப் பற்றிய சித்தரிப்புகள், உரையாடல்களை எழுதும்போது அவர்களின் அடியாழத்தில் நுழைந்து அவர் எழுதுவதாக தோற்றமளிக்க வல்லவை. அங்ஙனம் பெண்களை நடு நாயகமாகக் கொண்டு புனையப்பட்ட சிறுகதைகளாக சிறகு, நற்றுணை, ஆமை, லட்சுமியும் பார்வதியும், மலையரசி ஆகியவை அமையப் பெறுகின்றன. அதுமட்டுமின்றி கதைகள் தோறும் பெண்களை அவர் பல பரிமாணங்களாகக் காட்டியிருக்கிறார்.

”நற்றுணை”: இந்த நூறு சிறுகதைகளில் ‘ஜெ’ எழுதிய சாதனைப் பெண்களில் ஒருவர் ’அம்மிணி தங்கச்சி’. இரண்டாவது என்று வரலாற்றியல் சாதனைகளில் இடம் பெற்றாலும் தான் கட்டுடைத்த பெரும்பாலான விடயங்களில் முதல் ஆளாக இருந்திருப்பவர். ஜெ சொல்வது போல ”மகத்தான முதல்காலடி, ஒருவகை எல்லை மீறல், வரலாற்றின் விசை” அவர். “வரலாறு என்பது ஒரு மாபெரும் சக்தி. அது நம் வழியாகச் செல்கிறது. நாமனைவரும் பெருந்திரளாக அதை நம்மில் ஏற்றிக் கடத்துகிறோம். அம்மிணித் தங்கச்சி போன்ற சிலர் தன்னந்தனியாக அதை தாங்கி கடத்துகிறார்கள். பல்லாயிரம் வால்டேஜ் அழுத்தமுள்ள மின்சாரம் அந்த சிறு கம்பிகள் வழியாகச் செல்கிறது. அந்தக் கம்பி கொதிக்கும், உருகும், அறுந்துவிடக்கூடும். அது தொடுபவர்களை கொல்லும், அருகிருப்பவரை தகிக்க வைக்கும். அது ஒரு கொடூரமான தெய்வத்தால் ஆட்கொள்ளப்படுவதுபோல.” அப்படியான ஒரு சாதனைப் பெண்மணியான அம்மிணித் தங்கச்சி, வாழ்க்கையில் பல போராட்டங்களைக் கடந்து வென்றிருக்கும் அனைத்து அம்மிணிகளையும் நினைத்துப் பார்க்கும் கதையாக அமையப் பெறுகிறது. அம்மிணி வாழ்ந்த காலத்தில் யார் கண்களுக்கும் புலப்படாமல் அவளுடைய கண்களுக்கு மட்டுமே புலப்பட்டு அவர்களுடைய செயலுக்கு ஊக்கியான அமைந்த கேசினியைப் பற்றி ஜெ இந்தக் கதையில் குறிப்பிடுகிறார். உடலாக அமைந்திராத கேசினியைப் பற்றிய ஒரு புரிதல் அமையும் தருணம் வாசர்களுக்குத் திறப்பாக அமையக் கூடியது.

வரலாறு நெடுக துரோகிகளை அரசுகள் சந்தித்திருக்கின்றது. அவர்களை தண்டிக்க இயலாத வண்ணம் கடவுளின் பெயரால் எழுப்பி வைத்திருந்த தோஷங்களைக் கடக்க வந்த முதலாமனாக பார்வதி பாயை “லட்சுமியும் பார்வதியும்”; “மலையரசி”  சிறுகதைகளில் காணித்திருக்கிறார் ஜெ. இளமையும் புதுமையும் திறனும் ஒருங்கே பெற்று, சாதிக்கத் துடிக்கும் ஏக்கமும், ராஜதந்திர உத்தியும், முன்னோர் வகுத்து வைத்திருந்த பொருளாதார சமூக கட்டமைப்பிற்கான மாற்று திட்டங்களும்,  குறுகிய நோக்கங் கொண்டு அந்நியரின் ஆட்சியில் மன்னரை எதிர்த்து வீழ்த்த நினைக்கும் துரோகிகளுக்கான இரக்கமற்ற தண்டனையும் பற்றி சொல்லி நம்மை வியப்பில் ஆழ்த்துபவர் பார்வதிபாய் அவர்கள். மலையரசி சிறுகதையில் பார்வதிபாய் எப்படியெல்லாம் மன்றோ -வை தெறித்து ஓடவைத்தார் என்ற புனைவு சிலிர்க்கச் செய்யக் கூடியது.

 “ஏலே, கை வச்சாச்சுல்லா? இனி அவ்ளவுதான். இதுகளுக்கு அதுக்குமேலே யோசிக்க முடியாது.” என்று நினைத்து அதை செயல்படுத்திக் கொண்டிருந்த சங்கு என்ற விடலை ஆணிடமிருந்தே தனக்கான முதல் சிறகை உருவாக்கிக் கொண்ட ஆனந்தவள்ளி சிறகு கதையின் நாயகியாகத் திகழ்கிறாள். ஓர் ஒடுங்கிய மன நிலையிலிருந்து அவளை மீட்கும் கருவியாக, புதிய சிறகாக சைக்கிள் அமைகிறது. சைக்கிள் எனும் இயக்க சுயாதீனம் தரும் கருவி அறிவொளி இயக்க காலத்தைச் சார்ந்த பெண்களுக்கு வரம் போன்றதாகும். அத்தகைய வரத்தை சரியாகப் பயன்படுத்தி கல்வி என்பதன் மூலம் உயர்வை அடைந்த ஆனந்தவள்ளி பெண்களுக்கான ஊக்கியாக அமையும் கதையாக “சிறகு” அமையப் பெறுகிறது.

அலுவலகத்தில் வேலை பார்க்கும் உமையாள் என்ற நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணின் சித்திரம் ”சீட்டு” சிறுகதையில் காணிக்கப்படுகிறது. அவள் அலுவலகத்தில் ஒருவருடன் சரளமாக சிரித்துப் பேசுவதைப் பார்த்த அங்கே வேலை செய்யும் அவளின் காதலனான அழகப்பன் சிறு சந்தேகச் சலனமடைகிறான். குழப்பங்களும், சலனங்களும் உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும் மன நிலையிலேயே அவளுடன் அன்றே தன் வீட்டில் சந்தர்ப்பம் அமைந்துவிட உறவு கொள்கிறான். ஆனால் அவனுடைய அன்னை ஒரு பணத்தேவையை அவளிடம் கேட்கச் சொல்லி “கேளு, குடுப்பா; இனிமேலாவது ஆம்புளை மாதிரி இரு.” என்று கூறியவுடன் சிறு தெளிவடைகிறான். ஏற்கனவே அவள் சீட்டை ஒருவருக்காக விட்டுக் கொடுப்பதாகச் சொல்லியிருந்த அவளுக்கு ஃபோன் செய்து “நீ கொஞ்சம் நைசா சொல்லிப்பாரு” என்று அவனுடைய தேவைக்காக பேசச் சொல்லும் வரிகள் அமைந்து நம்மை நெருடுகிறது. அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு சர்வ சுதந்திர மன நிலை கொண்ட ஒரு பெண் “ஆம்புள மாதிரி இரு” என்று சொல்லிக் கொடுக்கும் இன்னொரு பெண்ணால் மிகச் சாதாரணமாக மாறும் ஒரு தருணம் அந்த நெருடலை அதிகப்படுத்துகிறது.

“எனக்க பாட்டிக்க குடிலை ஒருத்தன் பிடுங்கிக்கிட்டான். அவளுக்கு மிஞ்சினது ஒரு கொரம்பை மட்டும். பிறகு பன்னிரண்டு வருசம் அவ வாழ்ந்தது அந்த கொரம்பைக்கு உள்ளயாக்கும். பாட்டி ரொம்பச் சின்ன உருவம். அவ அந்தக் கொரம்பையை தூக்கி போட்டுக்கிட்டா உள்ளேயே ஒண்டிக்கிடுவா. அது ஒரு நாலஞ்சு கிலோ இருக்கும். ஆமையோடேதான். தேன்மெழுகும் அரக்கும் எடுத்து பூசிக்கிட்டே இருப்பா.”  என்று கொரம்பையையே கூடாக்கி வாழ்ந்து மடிந்த கொரம்பையம்மா தன் அடுத்த தலைமுறைகளுக்கெல்லாம் ஓர் ஊக்கியின் சின்னமாக கொரம்பையை விட்டுச் செல்கிறார். ”ஆமை” சிறுகதை அப்படிப்பட்ட ஊக்கியான கொரம்பையம்மாக்களுக்கானது.

அன்னையாக, காதலியாக, வில்லியாக ஒரு பெண்ணுக்குள் அத்தனையும் புதைந்து தான் கிடக்கிறது. ஒரு பெண் தன்னை பிறர் என்னவாக பார்க்க வேண்டுமென நினைப்பதை அவளே அரங்கேற்ற முடியும். நாடகக் கலையை, நடிப்பின் உச்சத்தை சொல்லவரும் ஓர் கதையில் பெண்ணை நடு நாயகமாகக் கொண்டு அமைந்திருக்கும் கதை ”தேவி”. காமக் கண்ணோடு பெரும்பாலான ஆண்கள் நோக்கும் கண்ணோட்டத்தில் கண்ட சக நடிகரான லாரன்ஸே கண்ணீர் சொறிந்து காலில் விழவைத்த அவளின் கலையின் உச்ச தருணத்தை ஜெ நெகிழ்வாக சமைத்திருக்கிறார்.

அதே சமயம் ”கழுமாடன்” சிறுகதையில் “அது பொம்புளையாளுகளுக்க ஒரு நிலைப்பாடாக்கும். கடைசிவரை சம்மதிக்க மாட்டாளுக. கடைசி கண்ணீர்த்துள்ளி வரை விடுவாளுக.” என்ற வரி கழுவில் ஏறும் காரியாத்தனின் வரியாக வருகிறது. தன்னை வற்புறுத்தி புணரச் சொன்ன தேவகிப்பிள்ளை இளையம்மை கடைசியில் தன்னை மாட்டி விட்டதற்காக மனம் நொந்து கழுவேற எத்தனிக்கும் காரியாத்தனின் வழி பெண்ணின் வேறொரு எதிர்மறைப் பரிமாணத்தைக் காணிக்கிறார்.

”எல்லா மறையவில்லை, அந்த பொம்மைகளின் வழி, அவள் விட்டுச்சென்ற போர்ன் வீடியோக்களில் வழி இருந்து கொண்டும், பயன்பட்டுக் கொண்டுமிருக்கிறாள்.” என ஓர் போர்ன் ஸ்டாரின் கதையாக அமைந்து அவளின் கண்கள் வழி அவளின் உணர்வுச் சிக்கலை, அவள் பார்க்கும் உலகத்தின் பார்வையை “யாதேவி” “சர்வஃபூதேஷீ” ”சக்திரூபணே” என்ற கதையில் ஜெ காணித்திருக்கிறார்.

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பெயரையும், வாழ்க்கையயும் எடுத்துச் சொல்லி ஏமாற்றி லீலை புரியும் கதாப்பத்திரத்தை “லீலை” சிறுகதையில் ஜெ படைத்திருக்கிறார். உரப்பன் எனும் அப்பாவியின் கண்கள் வழியே அவளை தரிசித்து, அருகமர்ந்து அவளின் கதையைக் கேட்க வைத்து, வெறுமையாக்கி இறுதியில் அவளை நோக்கி சிரிக்கச் செய்து இலகுவாக்கும் கதையாக அமைகிறது.

துன்பங்களைப் போக்கும் அல்லது துனபங்களேயான தெய்வங்களான மூத்தோள், தூவக்காளி, ஜ்யேஷ்டாதேவி, ஆபகந்தி ஆகியோரையும், அதே சமயம் வரத்தை, நலத்தை நல்குபவளான இளையவள், பகவதி ஆகிய பெண் தெய்வங்களையும் காணிக்கிறார்.

ஆணும் பெண்ணும்

“கர்ச்சீப்பிலே பௌடர் ஏறுததாக்கும் மனசிலே மற்றது ஏறுதது. ஒரு மணமுல்லாடே அது” என்று விவரிக்கப்படக் கூடிய ஒரு காலத்தின் பேருந்து காதலை ”முதல் ஆறு” எடுத்தியம்புகிறது. “அவளுகளுக்க சக்திண்னு சொல்லுதது எனக்கு இதெல்லாம் மயிரே போச்சுங்கிற நடிப்பாக்கும். சாதாரணமா இருக்கேன், எனக்கு இவனெல்லாம் ஒரு சுக்கும் இல்லேன்னு காட்டணும்.” என்று ஒரு நண்பனின் வாயிலாக பெண்களைப் பற்றிய சித்தரிப்பு கதையின் நாயகனுக்கு கிடைக்கிறது. பேச்சிப்பாறை, குலசேகரம், திருவரம்பு ,திருவட்டார், ஆற்றூர், வேர்க்கிளம்பி, அழகியமண்டபம், தக்கலை என்ற மாறாத பயணப்பாதையில் மூன்று வருடமாகச் பயணம் செய்பவர்களாக தலைவனும் தலைவியும் அமையப்பெறுகிறார்கள். கண்களாலும் கண்டுகொள்ளாது உணர்வுகளால் அறியப்படும் அவர்களுக்கிடையேயான காதலை ஜெ இங்கு சமைத்திருக்கிறார். கதையின் இறுதியில் “கண்கள் சுழன்று அவனை வந்து தொட்டன. மிகச்சின்ன புன்னகையில் உதடுகளின் இருபக்கமும் சிறு மடிப்பு விழுந்தது. கண்களில் ஒளி தோன்றியது. வரட்டுமா என சிறு தலையசைப்பு.” என்ற தலைவியின் அசைவுகள் சொல்லாக எடுத்துச் சொல்லப்படாத காதலை கவிதையாக எடுத்தியம்புவதாக அமைந்து இனிமையாக்குகிறது.

இரண்டு நவீனக் காதலர்களை அவர்களுக்குள் இருக்கும் சிந்தனைப்போக்குகளைப் பற்றி நுணுக்கமாக பேசக்கூடிய சிறுகதையாக ”ஆழி”  அமைகிறது.  “ரெண்டுபேரும் வேண்டிய அளவுக்கு செக்ஸ் வைச்சுகிட்டோம்…ஸோ, நோ இல்யூஷன்ஸ். அதிலே இன்ஹிபிஷன்ஸ் வச்சிருக்கிறவங்கதான் ஹனிமூனுக்குப் பிறகு வருத்தப்படுறவங்க” என்று அவர்கள் ஒருவரையொருவர் விலகிச் செல்வதற்கான பல காரணங்களை அடுக்குவதும், திருமண உறவுக்குள் நுழையாமல் பிரிந்து கொள்வதன் இனிமையைப் பேசுவதுமாக அமையும் அவர்களின் இறுதி சந்திப்பு விவரிக்கப்படுகிறது. கடலின் அலையில் குளித்து சிலாகித்துக் கொண்டிருக்கையில் அவர்கள் எதிர் கொள்ளும் ஓர் பெரிய அலையால் மூழ்கும் கண நேர இறப்பின் அச்சம், ஒருவர் மற்றவர் மேல் வைத்திருக்கும் அன்பாக வெளிப்படும் ஒரு தருணம் நிகழ்கிறது. நவீனச் சிந்தனையும் சென்று முட்டி நிற்கும் புள்ளியாக அன்பு நிற்கிறது.

ஸ்ரீகிருஷ்ணபுரம் ராஜசேகரன் நாயர் என்ற கதகளி ஆட்டக்காரரின் பேட்டியாக ஆரம்பித்த ”ஆட்டக்கதை” அவரின் திருமண அனுபவமாக, அவர் எப்படித் தன் மனைவியுடன் அணுக்கமானார் என்ற கதையாக நீள்கிறது. இரட்டையர்களில் ஒருவரான சரஸ்வதியைத் திருமணம் செய்து கொள்ளும் போது ஏற்பட்ட ஒரு இனம் புரியாக் குழப்பமும் சலனமும் வாழ்வில் எங்ஙனம் கரைந்து போயின என்பதை விவரிக்க அவர்களின் கணவன்-மனைவி உறவை நுணுக்கமாக ஜெ சித்தரித்துள்ளார். பெண் பார்த்து, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு முன் பின் தெரியாத ஒருவரோடு முதலிரவு கொள்ளும் நிகழ்வை அவர் “வடக்கே ருத்ரப்பிரயாகில் அலகநந்தாவும் மந்தாகினியும் ஒன்றாக இணைவதுபோல.” என்றும் கலையனுபவம் என்றும் சித்தரிக்கிறார். கணவன்-மனைவிக்கு இடையில் சண்டைகள் நிகழாமல் எங்கும் இல்லை. வாழ்க்கை முழுவதும் சண்டை போட்டுக் கொள்பவர்களும் உண்டு. முதல் சண்டையில் சுதாரித்துக் கொண்டு தங்களின் எல்லைகளைத் தீர்மானித்துக் கொண்டு சுமூகமாக வாழும் அறிவார்ந்தவர்களும் உண்டு. திருமணமான பின் நிகழும் முதல் சண்டையைப் பற்றி ஜெ கூறும்போது, ”ஆண்பெண் உறவில் அதுவும் உண்டு. ஆணவம் உரசிக்கொள்ளுதல், வன்முறை வெளிப்படுதல். அதிகம் தாமதியாமல் அதுவும் வெளியாகவேண்டியதுதான். அதையும் சேர்த்து ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவேண்டியதுதான். எது எல்லை, எது உச்சம் என்று. ஆண் என்றால் என்னவென்று மயக்கங்களும் கற்பனைகளும் இல்லாமல் அவள் அறிந்துகொள்ளவேண்டுமே.” என்கிறார். இங்ஙனம் “முதல்சண்டைதான் உண்மையில் திருமணம் என்பதன் உச்சப்புள்ளி. அவரவர் எல்லையும் இடமும் தீர்மானமாகி விடுகின்றன. எதைக் காட்டவேண்டும், எதை மறைக்கவேண்டும், எவ்வளவு பற்றிக்கொள்ளவேண்டும், எவ்வளவு விட்டுவிடவேண்டும் என்பதெல்லாம் தெளிவாகிவிடுகின்றன.” என்ற வரிகள் சிலருக்கு அறிதலுக்கானவையாகவும், சிலருக்கு அசபோட்டுக் கொள்பவையாகவும் அமைகிறது.

முதலிரவில் காட்டமாக நடந்து கொள்ளும் தாணப்பன் அதைப் பற்றிச் சொல்லும் போது ”நொந்தாத்தான்லே அடங்குவாளுக” என்று சொல்கிறான். தாணப்பன், லீலா ஆகியோருக்கு இடையில் நடக்கும் திருமணம் மற்றும் அவர்களுக்கிடையிலான உறவு, உணர்வை ஒரு சிறுவனாக இருந்து பார்த்து ரசிக்கும் வாய்ப்பை “கோட்டை” சிறுகதையில் ஜெ நமக்கு நல்குகிறார். சிறுவனிலிருந்து அவன் ஆணாக மாறும் ஒரு விடலைப் பருவமாக அவன் தென்படுகிறான்.

திருமணமாகி குழந்தைப்பேற்றை அனுபவிக்கும் இரண்டு தம்பதிகளின் மன நிலையை அணுவணுவாக சித்தரிக்கும் சிறுகதையாக ”பெயர்நூறான்” அமைகிறது. நூறு பெயர்களை சூட்டிப் பார்த்து புலங்காங்கிதம் அடையும் ரவி மற்றும் ஆனந்தி தம்பதியரின் உணர்வுகளால் நிறம்பித் ததும்பும் கதையிது. அப்படி அவர்கள் பேசிக் கொள்ளும் உரையாடல் ”சந்தோஷமா இருக்கிறவங்க கொஞ்சம் ஸ்குரூ லூசாத்தான் இருப்பாங்க.” என்பதை உணர்த்தக் கூடியதாக அமைந்து நம்மையும் சந்தோஷமடையச் செய்வது.

தன் மேல் சந்தேகப்பட்டுக் கொண்டே இருந்த கணவனைக் கொண்டவளான கதாநாயகி தன் கணவனின் மனத்தில் ஒரு நஞ்சை வேண்டுமெனவே விதைத்து மகிழும் ஒரு புனைவை “நஞ்சு” சிறுகதையில் ஜெ கட்டியெழுப்புகிறார். இந்தக் கதையில் ஜெ எந்தக் கதாப்பாத்திரத்திற்கும் பெயர் சூட்டவில்லை. வெறுமே கதாநாயகிக்கும் அவளைக் காப்பாற்றி அவப் பெயரை வாங்கிக் கொண்டவனுக்குமான மனப் போராட்டத்தை உணர்வுகளால் ஓடித்தழுவ விட்டு இறுதியில் நஞ்சின் பிறப்பிடத்தை காணித்திருப்பார்.

உலகம் பெயர் வைத்திராத உறவுகளும் உணர்வுகளும் இந்த உலகில் இருக்கின்றன தான். ஒவ்வொரு மனிதனும் இது போன்றவைகளை கடக்கிறான் தான். அந்த உறவுகளை, உணர்வுகளை தனக்குத் தெரிந்த உலகாயத உறவுகளுக்குள் அடைக்க முற்படுகிறான். அங்கு தான் சிக்கல் பிறக்கிறது. ஆனால் எவ்வகை உறவுகளுக்குள்ளும் அடைக்க முடியாத அனந்தன் மற்றும் பகவதியம்மை ஆகிய இருவருக்குமிடையே இருக்கும் ஒரு உணர்வுத் தருணத்தை ”செய்தி” சிறுகதையில் ஜெ காணித்திருக்கிறார்.

காமம்/உடல் சார்ந்த தேவைகளுக்காக நடக்கும் சில விடயங்களை புனிதம் என்ற ஒரு முனையிலோ, கள்ளம் என்ற மறுமுனையிலோ அன்றி மத்தியிலிருந்து பார்க்க கிராமத்தார்கள் பழகிதான் விட்டிருக்கிறார்கள். தங்கம் கோமதியக்கா போன்றோர் இல்லாத ஊர்களே இல்லை எனலாம். பெரும்பாலும் இது போன்ற உறவுகள் அந்தந்த வீட்டார்களைத் தவிர ஊரில் மற்றவர்களின் வாயில் பொறியாக மெல்லப் பட்டுக் கொண்டிருக்கும். ஊரில் உள்ள பெரியவர்கள் அதை எளிதாகக் கடக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கள்ளத் தொடர்பை ஒரு நகைச்சுவைக் கதையாக்கி அடியாழத்தில் இச்சை எனும் கள்ளமிருகத்தை படரவிட்டு ”வருக்கை” -யாக ஜெ சமைத்திருக்கிறார்.

வரலாற்றுப் புனைவு:

காலத்தினூடாக குறுக்குசால் ஓட்டி பயணம் செய்து பல புனைவுகளை ஜெ வடித்திருக்கிறார். இங்கு அத்தகைய வரலாற்றுப் புனைவு சிறுகதைகளாக ஆயிரம் ஊற்றுகள், போழ்வு இணைவு, வண்ணம், லட்சுமியும் பார்வதியும், மலையரசி, பத்துலட்சம் காலடிகள், ஓநாயின் மூக்கு போன்றவை அமையும்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பொன்னு மகாராணி உமையம்மை திருமனசின் வரலாற்றுப் புனைவாக “ஆயிரம் ஊற்றுகள்” சிறுகதை அமையப் பெறுகிறது. பதினேழு மற்றும் பதினட்டாம் நூற்றாண்டின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசியல் சிக்கல்கள் மற்றும் நிலைமை சொல்லப்படுகிறது. அரசருக்கும் மேலாக அதிகாரத்தை வைத்திருந்த எட்டுவீட்டுப்பிள்ளைமார்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தையும் நிலவுரிமையையும் கையில் வைத்திருந்த எட்டரை யோகக்கார் எனப்படும் நம்பூதிரிகளின் அரசியல் எடுத்தியம்பப்படுகிறது. விதியின் வலியால் ராணியாய் ஆன உமையம்மை திருமனசின் ஆறு மகன்களும் ஆற்றில் மூழ்கி இறந்து போகும் நிகழ்வு ஒன்று மனதை ரணமாக்குகிறது. ”ராணியாய் பிறக்குந்நதுக்கு காட்டாளத்தியாய் பிறக்குந்நது மேல்” என்று உமையம்மையின் மனக்குமுறல் அவளின் சொற்களாக நம்மை வந்தடைகிறது. பெண்வழி அரசுரிமை அமைந்தொழுகும் வேணாட்டின் ராணியான உமையம்மையை நினைவில் நிறுத்தக்கூடிய கதையாக அமையப் பெறுகிறது. இறந்த ஆறு மகன்களின் சாபமாக நோயும், பஞ்சமும், போரும் வருமென எதிர்பார்க்கும் நிலையில் அவர்கள் இறந்த அனந்தன்குளத்திலிருந்து ஆயிரம் ஊற்றுகள் பிறப்பெடுத்து வந்து நம் மனதை குளிரச் செய்கிறது.

”பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்”

என்றான் வள்ளுவன். அப்படிப்பட்ட பழுதென்னும் மந்திரிகளால் வரலாற்றில் ஏற்பட்ட இன்னல்களை எடுத்தியம்பும் சிறுகதையாக ”வண்ணம்” அமையப்பெறுகிறது. உலகின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் அவை பெரும்பாலும் புலம் பெயர்ந்த குடிகளால் தான் கட்டமைக்கப் படுகின்றன. வரலாறு அவர்களைப் பற்றி சொல்வதில்லை. பெரும்பாலும் அரசர்களின் வரலாறோடு அது நின்றுவிடுகிறது.  சில அரசர்கள் உருவகங்களாகவும்,  ஊகங்களுமாக நின்றுவிடுகிறார்கள். ஆனால் குடிகளைப் பற்றிய சித்திரமும் அவர்களின் இன்னல்களும் தெளிவாக எடுத்தியம்படாத ஒன்று. தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த வேளாண் குடி மக்களின் வாழ்வுச் சித்திரத்தை காணித்திருக்கிறார். ஆறில் ஒரு பங்கு அரசனுக்கு என்பது கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே நாம் அறியப்பட்டிருக்கும் முறை தான். ஆனால், புவியியல், காலநிலை, விளைச்சல் சார்ந்திருக்கும் விவசாயத்தை நம்பியிருக்கும் மக்கள் அதனை எளிதாக எதிர்கொண்டிருப்பார்களா என்ற ஐயத்தை இயம்புகிறது கதை. ஆட்சி நிர்வாகத்தால் நிகழும் இன்னல்களை எதிர் கொண்டு எதிர் கொண்டு கல்லாக மாறிப் போகும் ஒரு நிலையை மக்கள் அடைகின்றனர். கல்லாக மாறுவதென்பது ஒரு நிலை எனலாம். மனதாலும், உடலாலும் சோர்ந்து அடுத்து வேறு எதையும் சொல்லாலும் செயலாலும் செய்ய இயலாத ஒரு நிலை. பித்துக்கு முந்தைய நிலை அது. அந்தப் புள்ளியை கடந்தால் பித்து பிடித்துவிடும் என்றறியும் நிலை. இங்கு கல்லாக மாறுகிறது இருதையமும், மூளையும், ஆன்மாவும். மக்களின் கையறு நிலை அது. அங்கிருந்து அவர்களை மீட்க ஓர் உணர்வை ஜெ பயன்படுத்தியிருக்கிறார். தாய்மை எனும் கனிவான உணர்வைப் பயன்படுத்தி அவர்களை மீட்கும் நிகழ்வு விளக்கப்படுகிறது. “ஒரு சின்ன வண்ணத்துப்பூச்சி! “நாலு சொட்டு  நிறம்” எனும்போது சிலிர்க்கிறது.

வரலாற்றில் மாவிங்கள் கிருஷ்ணப்பிள்ளை போன்ற விசுவாசமும் தாய்நாட்டுப் பற்றுடையோரும் இருக்கின்றனர் பாப்புராவும் பேஷ்கார் பாச்சு அண்ணாவிப் பிள்ளை போன்ற துரோகிகளும் இருக்கின்றனர். இந்த துரோகிகளை தண்டிக்க இயலாத வண்ணம் அவர்களே தோஷங்கள் என்ற பெயரில் ஓர் பயத்தை கடவுளின் பெயரால் ஏற்படுத்தியும் வைத்திருக்கின்றனர். இவற்றைக் கடக்க வந்த முதலாமனாக பார்வதிபாய் எனும் வரலாற்றுக் கதாநாயகியை “லட்சுமியும் பார்வதியும்”; ”மலையரசி” சிறுகதையில் சமைத்திருக்கிறார்.

இங்ஙனம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டு அதில் புனைவை ஊற்றி நிரப்பி வாசகர்களை காலத்தினூடாக பின்னோக்கி பயணிக்கச் செய்திருக்கிறார்.

பத்தேமாரியைக் கண்ட ஒளச்சேப்பன் மாப்பிள்ளைக் கலாசிகளைப் பற்றிய பேச்சை நண்பர்களுடன் குடித்துக் கொண்டிருக்கும்போது ஆரம்பிப்பதாக ”பத்துலட்சம் காலடிகள்” ஆரம்பிக்கிறது. பதினேழாம் நூற்றாண்டில் பீரங்கிகளுடன் ஐரோப்பியப் படகுகள் வந்து மேற்குக்கடற்கரையை கைப்பற்றிக் கொள்வது வரை ’அரபிக்கடல் நம் வீட்டுமுற்றம்’ என்று பாடியிருந்த மாப்பிள்ளைகள் மற்றும் அவர்களின் சமூக அமைப்பைப் பற்றியும் விவரிக்கிறார். மங்களூரில் நேத்ராவதி ஆற்றின் அழிமுகத்திலுள்ள மணல்மேட்டில் 1988 ஜூலை 19 -ல் ஒதுங்கிய ஒரு சடலத்தைப் பற்றிய துப்பறியும் கதையாக ஆரம்பிக்கிறது. கள்ளக்கடத்தல்காரர்களாக இருந்து வந்த மாப்பிள்ளாக்களின் மீது சந்தேகமாக நீண்டு அவர்களைப் பற்றிய ஒரு நீண்ட சித்திரத்தை நம் முன் படைக்கிறார். அதை ஒளச்சேப்பன் துப்பறிந்து கண்டறியும் கதையாக நீண்டு ”ஆயிரத்துக்கு ஆயிரம் கால்வைப்புகள், அவ்வளவுதான் என்று. ஆயிரம் பெருக்கல் ஆயிரம். பத்துலட்சம் காலடிகள். ஆனால் அதில் ஒன்று, ஒன்றே ஒன்று, தவறாகப் போய்விட்டால் அவ்வளவுதான். தவறு பெருகிப்பெருகி கப்பல் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும்.” என்ற வரிகளோடு நிறைவு கொள்கிறது.

ஒளப்பேச்சன் பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுவாக்கில் தலையெடுத்து அரசசெல்வாக்கு, அதிகாரம், சொத்து என்றமைந்த நாயர் குடும்ப வரலாற்றை ”ஓநாயின் மூக்கு” சிறுகதையில் எடுத்துரைக்கிறார். “சரித்திரமே ஆனாலும் இந்த அளவுக்கு அது மனிதர்களிடம் குரூரமாக இருக்கக்கூடாது. மனிதன் யார்? பாவப்பட்ட மிருகம். பயம் ,ஆசை, காமம், பகை ஆகியவற்றால் ஆட்டுவிக்கப்படுபவன். சரித்திரம் இப்படி ஓநாய் போல ரத்தவாடைதேடி மூக்கை நீட்டி  தலைமுறை தலைமுறையாக  பின்னால் வருமென்றால் என்ன செய்வான்? எதுவானாலும் ஒரு நியாயம் வேண்டாமா?” என்று ஒளப்பேச்சன் நாயர்களின் வீழ்ச்சியைப் பற்றி நிறைவு கொள்கிறார்.

மாயாவாதப் புனைவு:

ஊழிதொறு ஊழிதொறு உலகம் காக்க, அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி, வடிவேல் எறிந்த வான் பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பல் மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள ” என்ற சிலப்பதிகார வரிகளைக் கொண்டும்,  மணிபல்லவம் வலம் கொள்வதற்கு எழுந்த தணியா வேட்கை தணித்தற்கு அரிதால்  என்ற மணிமேகலையின் வரிகளைக் கொண்டும் ஒரு விசாரனையை நடத்தி ’இருக்க வாய்ப்பிருக்கு’ என்று நினைக்குமளவான ஒரு நவீன மணிபல்லவத்தீவை இந்தப் புனைவின் மூலம் ஜெ அளிக்கிறார். மணிமேகலையில் வரும் புனைவுத் தீவான ”மணிபல்லவத் தீவு நாகநாடு” போன்றவற்றை நினைவு கூறும் கதையாக, அப்படிப்பட்ட ஒன்றை மறுபுனைவு செய்து ஒரு ரேஷனல் மணிபல்லவத்தீவை வாசகர்களுக்கு அளிக்கும் சிறுகதை “மணிபல்லவம்”. “சிலசமயம் கடலு அமைதியா பளிங்குமாதிரி ஆயிடும்…மிதமான மழைவெளிச்சம் இருக்கணும். இல்லேன்னா நல்ல நிலாவெளிச்சம். அப்ப அங்க போயி அடியிலே பாத்தா கெட்டிடங்களும் கோட்டைகளுமெல்லாம் இருக்குறத பாக்கலாம்னு சொல்லுவாங்க.” என்பது போன்ற சித்திரங்கள் இனி கடலில் இது போன்று இருக்கிறதா என்று தேடச் சொல்லுபவை.

’கரு’ என்ற குறு நாவலில் வரும் ‘ஷம்பாலா’ எனும் புனைவு நகரமும் அதன் பயணப் பாதை தோறும் சிலிர்ப்பை அளிக்க வல்லது. ஆடமின் விசையும், உள்ளுணர்வும் உந்தித் தள்ள ஒவ்வொரு வாசகரும் கனவுகளோடு பயணிக்க வல்ல இடம் ’ஷம்பாலா’ ஆகும். இது போன்று மாயாவாதப் புனைவைத் தரும் பயணமும், இடங்களும் வாசிப்பின் அனுபவத்தால் மட்டுமே உய்த்துணரக் கூடியது.

எளியமக்கள்:

அன்று மலர்ந்த பறவைக் குஞ்சுகளின் பசியைப் பற்றி ஜெ குறிப்பிடும்போது “பிரபஞ்சப் பசி” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார். ஆனால் ”நெடுந்தூரம்” சிறுகதையில் வரும் மனிதக் கழுகுகளின் “தீ” மேல் நோக்கி வளர முடியாது, எந்தவித உந்து சக்தியுமின்றி, தாழ்த்தப்பட்டு, தன் குடலையே தின்னும் நிலைக்கு ஆட்பட்டு நம்மை நிலைகுலையச் செய்கிறது. வானுக்குரிய கழுகை தன் சுயநலத்திற்காக ஆல்ஃபாவாகவும் பீட்டாவாகவும் நைனா போன்றோர்கள் மாற்றியது போலவே, இந்த சமூகத்தில் அந்தந்த காலகட்ட தேவைக்காக மனிதர்கள் உருமாற்றப்படுகிறார்கள். அந்த தேவைகள் காலமாற்றத்திற்கேற்ப தேவையற்றுப் போகும் பட்சத்தில் தனக்கான வானின் தொலைவு கண்டு அஞ்சி கூவத்தில் கரைந்துவிடுகிறார்கள். தானும் கழுகென்றறியாத அல்லது அறிந்தும் ஆக முடியாத டில்லி ’வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்’ எனும் போது ஜெ நம்மை மேலும் கனப்படுத்தி விடுகிறார்.

இரண்டு வகையான கணக்குகளைப் பற்றி “கணக்கு” சிறுகதையில் ஜெ சொல்லியிருக்கிறார். ஒன்று கண்ணால் மட்டுமே கண்டு எண்ணிக்கை சொல்லும் கணக்குக் கண்ணுள்ள காளியன் மற்றும் ஆவரின் தந்தை மற்றொன்று பணப்பலகை எனும் கருவி கொண்டு ஏமாற்றிப் பிழைக்கும் கணக்கு செம்பகராமன்களின் கணக்கு. அது இரண்டு வகையான சமூகத்தை/ மனிதர்களை /குணத்தை என நம் மனதில் நீண்டு கொண்டே செல்லக் கூடியது. காலங்காலமாக ஏமாற்றப்பட்டவர்களும், ஏமாற்றுபவர்களும் என இயந்து நடித்த கால நாடகத்தை நம் கண் முன் ஜெ நிறுத்துகிறார். “இது வேற கணக்குவே. இந்தக்கணக்கு உம்மமாதிரி ஆளுகளுக்கு புரியாது…உமக்கு சுடலை இருக்குல்லா, அதே மாதிரி எங்களுக்கு வேற தெய்வங்கள் உண்டு” என்று அச்சுதன் சொல்லும்போது குழம்பி நின்ற காளியன் நம்னை நெருடிச் செல்கிறான். பின்னும் ராசிப்பணம்/ ஓட்டைச்சக்கரம், வெள்ளிப்பணம் பணப்பலகை, பாலராமபுரம் வேட்டி, வில்லுவண்டி என ஒரு காலத்தை வரலாறாக நம் கண்முன்னே நிறுத்தி எளியவர்களை/ ஏமாற்றத் தெரியாதவர்களை அவர்கள் அறியாது கலங்காலமாக சுரண்டும் வலியவர்களைப் பற்றிச் சொல்லியிருக்கும் கதையாக கணக்கு அமைகிறது

சோறு

அன்னத்தைப் பற்றி ஜெ கூறும்போது அதை “தீ” –க்கு ஒப்பிடுவதுண்டு. தன் வீட்டில் கூடமைத்திருந்த அடைக்கலாங்குருவியின் சிட்டுக்களின் பசியைக் கண்டு அவர் “பிரபஞ்சப் பசி” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். உணப்பிரியராகவும் அதே சமயம் அன்னபூரணியாகவும் விளங்கும் அப்துல் ரஹ்மானைப் பற்றிய கதையாக ”அன்னம்” அமையப் பெறுகிறது. “அன்னம் அன்னத்தைக் கண்டுகொள்கிறது, அன்னம் அன்னத்துடன் இணைகிறது, அன்னம் அன்னத்தால் நிறைகிறது. பூமி மீது இருக்கும் எல்லா உயிரும் சேர்த்து ஒரே அன்னம்தான்.”  என்ற வரிகளின் மூலம் யாவையும் அன்னமயமாக்கிவிடுகிறார் ஜெ.

காலங்காலமாக திருவிழாக்கள் என்பது சோற்றாலும், படையல்களாலுமே நிரம்பியிருந்திருக்கின்றன. ஓர் வழிதவறும் கதையாக மனிதனால் கட்டப்பட்ட வீடுள்ள இடத்தினின்று, வளைந்து நெளிந்து செல்லும் பாதை வழியாக, பாதை மாறி, காடேயான யானையை எதிர்கொண்டோடி தப்பவேமுடியாதளவு வழி தவறி காட்டின் கருவை அடைந்து காட்டின் மனிதர்களால் மீட்கப்படும் ஓர் அற்புதப் பயணம் ஒன்று இந்தக் கதையில் சொல்லப்படுகிறது. திருவிழாக்கள் அனைத்துமே மனித மனத்திற்காக உருவாக்கப்பட்டவையாகப் பார்க்கிறேன். கடந்த காலம் அனைத்தையும் கரைத்து தன்னை முழுவதுமாக மீட்டு எதிர்காலத்தில் செலுத்த மன வைத்தியம் தெரிந்தவர்களால் உருவாக்கப்பட்டவையாகப் பார்க்கிறேன். மனம் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு, நினைக்க ஒன்றுகூட எஞ்சியிருக்கவில்லை என்பதான நிலையை அடைய உருவாக்கப்பட்டவையாகப் பார்க்கிறேன். மனம் தன்னையே அனைத்திலிருந்தும் விடுவித்துக் கொள்ளும் ஓர் இளைப்பாற்றி இந்த ”புழுக்கச்சோறு”. 

அனந்தனின் அப்பா அவனுடைய தோழிகளின் திருமணத்திற்குச் செல்லும் நிகழ்வொன்று விரிந்து அங்கு அவர் நாணுக்குட்டன் நாயர் சமைத்த விருந்தை உண்ணும் நிகழ்வு சுகாந்த அனுபவமாக ”சூழ்திரு” கதையில் விவரிக்கப்படுகிறது. அங்கு அவர் சாப்பிட்ட வித்த்தியாசமான பச்சடியால் உந்தப்பட்டு “மனுசனுக்கு நாக்கையும் குமண்ணுக்கு விளைச்சலையும் குடுத்த தெய்வமாக்கும் நாயருக்க கையிலே நிக்குதது” என்கிறார். அவர் வைத்த பச்சடியில் சேர்த்த புதிய பொருளைப் பற்றி அனந்தனின் அப்பா கேட்டபோது “ஆமா கடுக்காய்… நெல்லிக்காய்க்கு பதிலா கடுக்காய். ஆனால் எண்ணி இடணும்… ஒரு சொட்டு நஞ்சு அன்னத்தை அமிர்தாக்கும். ஒரு சொட்டு கசப்பு எல்லாத்தையும் இனிப்பாக்கும்” என்று கூறி நாயர் நம்மை சிலிர்ப்பில் ஆழ்த்துகிறார். அனந்தனின் அப்பா வீட்டில் சிறிய குத்துப்போணி/வங்கத்தில் குடிக்கும் காபியினின்று அவர் திருமணத்தில் அணுவணுவாக இரசிக்கும் பந்தல், திருமணப் பந்தி வரை ஒவ்வொன்றையும் அவர் கலையைப் போல் கையாள்கிறார். சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றையும் கலைக் கண்ணோட்டத்தோடு அணுகி அதன் கலைஞர்களைப் பாராட்டும் அனந்தனின் அப்பா மனதில் நின்று விடக் கூடியவர்.

சாம் ஜெபத்துரை ஆப்பிரிக்காவிலுள்ள காங்கொவுக்கு பிஸினஸ் நிமித்தமாக போன கதையைச் சொல்வதாக அமைந்துள்ளது “ஏதேன்” சிறுகதை. ஆப்பிரிக்காவின் மண் வளத்தையும், அந்த மக்களின் விவசாய அறியாமையும், அவர்களை வைத்து வேலை வாங்குவதின் சிரமத்தையும் அவன் எடுத்துரைப்பது வாசிக்கையில் பகடியாய் இருந்தாலும் அடியாழத்தில் அந்த மக்களின் மேல் ஒரு பரிதாப உணர்வு எஞ்சுகிறது. காலமாற்றத்தில் எத்தனையோ தொழில் நுட்ப முன்னேற்றங்களைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து வரும் நம்முடன் தான் இன்னும் நாகரிக வளர்ச்சிக்கு உட்படாது அவர்களிடமிருக்கும் வளங்களைப் பயன் படுத்தத் தெரியாமல் பசியில் வாடும் அவர்களை நினைத்து மனம் கலக்கமுறத்தான் செய்கிறது. சாம் முயற்சி கொண்டு கடன் அடைப்பதற்காக காங்கோவில் போட்ட வாழைத்தோட்ட அறுவடை நாளில் நிகழும் ஒரு சம்பவம் விவரிக்கப்படுகிறது. “நான் எந்திரிச்சு வெளியே போனா நம்ம தோட்டம் முளுக்க ஆளுங்க… ஆயிரம் ரெண்டாயிரம் ஐயாயிரம் ஆளுக… ஏலே சவேரியார் கோயில் திருவிளா மாதிரி கூட்டம்” அதை புனைவில் காணுவதே பிரம்மாண்டமாயிருக்கிறது. அதைக் கண்டு கோபப்பட வேண்டியவன்  “ஒரு கிளவன் என்னையப்பாத்து மூஞ்சியெல்லாம் சுருங்கி கண்ண இடுக்கி சிரிச்சுட்டு வா வந்து இருந்து தின்னுன்னு  விளிச்சான்… கையிலே ஒரு சுட்ட வாளைக்கா. அதை நீட்டி இந்நான்னு அருமையாட்டு சொல்லுதான்… நான் அப்டியே அளுதுபோட்டேம்ல மக்கா” என்கிறான். “பின்ன? நானும் இருந்து தின்னேன்.. நல்ல ருசியாக்கும் கேட்டியா?” எனும் வரிகளில் சாம் மனதில் நின்றுவிடுகிறான். பசியின் தீயை உச்சத்தில் காணிக்கும் கதையை ஜெ படைத்திருக்கிறார்.

கிறுத்து:

இந்த நூறு சிறுகதைகளில் கதை மாந்தர்களாக மிகச் சரளமாக கிறுத்துவ மக்கள் வருகிறார்கள். லாசர், எலிசிக் கிளவி, லார்ன்ஸ், ஞானம், செபாஸ்டியன், இரணியல், சாமுவேல் மாமா போன்ற பெயர்கள் பிரபலமானவையாக அமைகின்றன. பெரும்பாலும் எளிய மனிதர்களாக, நகைச்சுவை நிறம்பிய கதையாக ஜெ இக்கதைகளைப் படைத்திருக்கிறார்.  கிறுத்துவத்தை கிறுத்துவை மையமாகக் கொண்ட கதைகளாக ஏழாவது, அங்கி, லாசர் போன்றவற்றைச் சொல்லலாம்.

பைபிளில் திருவெளிப்பாடு என்பதே தன்னளவில் புனைவின் உச்சம் தான். “அது வெளிப்படுத்தின விசேஷம், எட்டாம் அதிகாரம், முதலாம் வசனம். அவர் ஏழாம் முத்திரை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைநாழிகை நேரமளவும் அமைதி உண்டாயிற்று.” என்ற வரிகளை நினைவில் வைத்திருக்கும் மோஸசின் கதையாக “ஏழாவது” அமையப் பெறுகிறது.  ஏழாவது என்ற எண்ணின் மேல் ஏற்றி வைத்த புனைவாக கதை விரிகிறது. ஜோசப்பும் மரியானும் செபஸ்தியும் மோசஸும் திருடுவதற்காக ஆபிரகாம் பட்டளத்தார் வீட்டிற்குச் சென்றுபோது அங்கே நடந்த சில எதிர்பாராத தருணத்தால் மோசஸைத்தவிர அனைவரும் இறந்துவிடுகின்றனர். அதனை போலிசார் மோசஸிடம் விவரிக்கையில் எழும் ஏழாவதின் புனைவு வாசகர்களை மர்மமடையச் செய்கிறது. “மோசே, ஏழாவதா வந்தது என்ன?; நீ பாத்திருக்க்கே; சொல்லு நீ பாத்தது என்ன?; சாத்தானா?; கடவுளா?” என்ற இறுதி வரிகள் நம்மை மேலும் மர்மத்திற்குள் ஆழ்த்தி விடை தேடச் செய்கிறது.

செபாஸ்டியன், இரணியல், கதைசொல்லி ஆகிய மூவரையும் உள்ளடக்கிய ஒரு நகைச்சுவை நிரம்பிய அமானுஷ்யமான கதையாக ஆரம்பிக்கும் கதை ”அங்கி”. இடி, மின்னல், மழையை எதிர்கொள்ளும் மூவரும் “குன்றுமேலே தன்னந்தனியாக நின்றிருக்கும் மரம்போன்றவன் பாவி. அவன்மேல் கர்த்தரின் இடிமின்னல் இறங்கும். அவன் நெருப்பாக பற்றி எரிவான்” என்ற வரிகளை நினைவு கூர்ந்து குன்றின் உச்சியில் கைவிடப்பட்ட ஒரு சர்ச்சில் தங்கும் அனுபவமாக கதை விரிகிறது. கதைசொல்லி அவரிடம் பாவமன்னிப்பு கேட்கிறார். காலையில் கீழேயிரங்கி ஒரு டீக்கடையில் விசாரித்தபோது அது ஐம்பது வருடமாக கைவிடபட்ட சர்ச் எனவும் அங்கே பாதர் சாக்கோ குழப்பறம்பில்னு ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் சொல்கின்றனர். அதைக் கேட்டு நடுங்கியவர்கள் அறிவியல் விளக்கம் பெற்று அமைந்தாலும் அந்த மர்ம அனுபவம் அவர்களுக்கு ஓர் சிலிப்பை அடையச் செய்வதாக அமைகிறது.

டெலிபோன் வயரில் இரவு மட்டும் ஏறி அமர்ந்து கொண்டு அதை இரைச்சலாக்கும் மலைப்பாம்பைப் பிடிக்கச் செல்லும் ஞானம், நெல்சன், கதைசொல்லி, இரண்டு காணிக்காரர்கள் ஆகியோருக்கிடையே நடக்கும் நகைச்சுவையான உரையாடலாக ”லூப்” சிறுகதை ஆரம்பிக்கிறது. எவ்வளவு முயன்றும் பாம்பு மீண்டும் மீண்டும் அதே இடத்திற்கு திரும்ப வந்து டெலிபோன் தொடர்பை இடையூறு செய்கிறது. “காட்டுக்குள்ள லைனை விட்டது நம்ம தப்புல்ல?” என்று ஞானம் எங்கோ ஒரு புள்ளியில் உணர்கிறார். அந்த டெலிபோனுக்கு சொந்தக்காரரான துரை அந்தப் பாம்பைக் கொல்ல ஆணையிட்டபோது வெகுண்டெழுந்து அவனை வார்த்தைகளால் சரமாரியாகத் தாக்குகிறார். இறுதியாக, “என்னலே இப்பம்? ஏலே இந்தா ஊரு உலகத்தையெல்லாம் அளிச்சு போனு குடுத்தாச்சு. அணைகள கட்டியாச்சு. ரோடு போட்டாச்சு. இந்தா இம்பிடுபோல காடு இருக்கு.. அதுக்குள்ள அந்த பாம்பு. ஆயிரம் பத்தாயிரம் போன் இருக்குல்லா? அதிலே ஒரு பாம்புக்க லூப்பும் இருக்கட்டும். ஒரு மயிரும் கெட்டுப்போவாது… அதுவும் சேந்துதான் போனு…ஆமலே அதுவும் சேந்துதான் போனு…” என்று உடைந்து அழும் ஞானம் பிற்பாடு ஓய்வுபெற்று ஃபாதராகிவிடுவதாக கதை நிறைவு கொள்கிறது. கதை முழுவதுமாக நகைச்சுவையும், கிறுத்துவப் பகடியும் நிறைந்து நம்மை சுவாரசியப்படுத்துகிறது.

இதைத் தவிர பிற கதைகளிலும் கிறுத்தவ மக்களும், பகடிகளும், வார்த்தைகளும் ஊடாடிக் கிடக்கின்றன.

பழங்குடிச் சடங்குகள், நம்பிக்கைகள்:

“ஒரு சிறுகூட்டம் ஒன்றாகச் சேர்ந்து ஒன்றை தீவிரமாக நம்புகிறது. அதுதான் கல்ட்.” என்று கூறி வனுவாட்டு குடியரசின் டஃபேயா பிராந்தியத்தின் பல தீவுகளில் ஒன்றான டான்னா என்னும் தீவில் நிகழும் ஒரு பழங்குடிச் சடங்கை நமக்கு ”அனலுக்குமேல்” சிறுகதையில் ஜெ காணிக்கிறார். இரண்டு அறிவார்ந்தவர்களுக்கிடையேயான தருக்கங்களினால் நிதர்சனத்தையும் கனவுலகையும் மாறி மாறி உரையாடி நமக்கு ஓர் இரண்டின்மையை உணரச் செய்கிறார். “பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டில் திட்டமிட்டு கல்டுகளை உருவாக்க ஆரம்பித்தார்கள். வேண்டுமென்றே நம்பிக்கைகளையும் தொன்மங்களையும் புனைந்தார்கள். அவற்றை பேசிப்பேசிப் பரப்பினார்கள்.” என்று கதைசொல்லி கூறுவதாகவும், அப்படிப்பட்ட டான்னா தீவின் கல்ட் பற்றிய வரலாற்றுச் சித்திரத்தையும் கதை எடுத்தியம்புகிறது. கதையில் கதைசொல்லிக்கும் அவளுக்கும் நிகழும் டான்னா மக்களின் சடங்குகள், அவர்கள் பெரும் அனுபவம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

’சாமி ஏறப்பெற்று ஆடப் பெறுதல்’ என்பது சிலப்பதிகாரத்திலிருந்து இலக்கியத்தில் தமிழர் மரபாக நாம் அறியப்படுவதாகும். அங்ஙனம் சுடலை மாடனும், மாயாண்டி சாமியும் வந்து ஆடப் பெறுவதை உரையாடலில் சொல்லிக் கொண்டே வந்து ஓர் திடீர்த் தருணத்தில் சாமி ஏறப்பெறும் நிகழ்வு நிகழ்தேறுகிறது. அந்த நிகழ்வை விரிக்கும்போது “ஊதினா உதுந்திரக்கூடிய பூவுலே தேன்சிட்டு தேனைக்குடிச்சுட்டு போயிரும்… ஒரு வண்டோ தேனீயோ உக்காந்தா காம்பு களண்டு விளக்கூடிய பூவிலே இருந்து…. அது செறக திரும்பி சுழட்டி வீசும். அப்ப அதுக்கு வெயிட்டே இல்லாம ஆயிரும். வெறுங்காத்திலே நின்னுட்டு கொம்ப மட்டும் பூவுக்குள்ள விட்டு தேனை எடுத்து குடிக்கும். அதே மாதிரியாக்கும் சாமி களவெடுக்குதது… நம்ம தொடுகதில்லை, நம்ம ஆத்மாவை எடுத்துக்கிடும்.” என்று தங்கன் கூறுகிறான். அப்படியான தருணத்தை செல்லனின் கண்கள் வழி நாம் கண்டு தரிசிக்க ஏதுவான கதையாக “கரவு” சிறுகதை அமையப் பெறுகிறது.

“முன்னோர் ஒன்றும் மூடர்கள் அல்ல தரப்பினர் சுசீந்திரத்தில் மட்டுமல்ல நாட்டில் உள்ள அத்தனை கோயில்களிலும் கைமுக்கை கொண்டுவரலாம்”; ”யாரோ திருவிதாங்கூர் நாயர்தான் அந்த முறையை உருவாக்கியிருக்கவேண்டும் என்பது ஔசேப்பச்சனின் உறுதியான நம்பிக்கை.” என்ற வரிகள் ”கைமுக்கு” சிறுகதையில் வருகிறது. தவறு செய்தவர்கள் கொதிக்கும் நெய்யில் கையை விட்டு தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கும் ஒரு சடங்கைப் பகடி செய்வதாகவும், அது காலப் போக்கில் திருட்டுத்தனம் செய்ய எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதையும் சிறுகதை எடுத்தியம்புகிறது.

புள்ளுவனும் புள்ளுவத்தியும் நடத்தும் களமெழுத்து பாட்டு சடங்கு தாந்த்ரிக பூஜை “பொலிவதும் கலைவதும்” சிறுகதையில் காணிக்கப் பெறுகிறது.

காணிக்காரர்கள் பந்நிமாடன் காட்டுசாமிக்கு சோரிகொடை கொடுக்கும் அனுபவத்தை நம்முள் படரச் செய்கிறது “புழுக்கச்சோறு” சிறுகதை. ராரர ராரர ராரர என்ற கொக்கறையின் தாளத்துடனும் சாமையும் பன்றிக்கறியும் படைத்து கூட்டாக சேர்ந்து அள்ளித் திண்ணும் ஓர் பழங்குடிச் சடங்கு அமைந்து வெறியாட்டுச் செய்கிறது.

“காணிக்காரங்களுக்க மந்திரவாதத்திலே ஒடீன்னு ஒரு மந்திரவாதம் உண்டு. ஒடி, மந்திரவாதி சில உபாசனைச் சடங்குகள் வழியாட்டு ஒரு மிருகமா ஆயிடுறது’ என ஒடி சடங்கைப் பற்றிய அறிமுகத்தை “விலங்கு” சிறுகதை நமக்கு நல்குகிறது. சக்கப்பாறைக்கு அந்தாலே மூளன்குந்நுக்குச் செல்லும் கதையின் நாயகனின் பயணப்பாதை காணிக்கப்படுகிறது. “இங்க ஒவ்வொண்ணும் இன்னொண்ணா ஆயிட்டே இருக்கு… ஒண்ணு அப்டி தோணுகது இன்னொண்ணுக்க மயக்கமாக்கும். அது அப்டி அங்க அவனுக்கு காட்டுது… தோற்றம்தான் இருக்கு. தோன்றுறது இருக்கிறதா என்ன? ரெண்டும் வேறல்ல?” என்று கூறி நம்மை பிரமிப்பூட்டும் கதையாக ”விலங்கு” சிறுகதை அமையப் பெறுகிறது.

அறிதலும் அறியமுடியாதலும்

சுகுமார் மேனனுக்கும் மைக்ரோவேவ் ட்ரான்சிஸ்டருக்குமிடையேயான ஓர் உணர்வை “உலகெலாம்” சிறுதை எடுத்தியம்புகிறது. “எத்தனை ஆயிரம் மைக்ரோவேவ் டவர்கள். மைக்ரோவேவ் கதிர்கள் இந்தப்பூமிக்குமேல் மழைபோல பொழிந்துகொண்டிருக்கின்றன. உலகமே மைக்ரோவேவ் அலையால் குளிப்பாட்டப்படுகிறது. இந்த உலகம் இன்று மைக்ரோவேவ் அலைகளால் சேர்த்து நெய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு துளியும் இணைக்கப்பட்டு ஒற்றை அமைப்பாக ஆக்கப்பட்டிருக்கிறது.” என்று மேனன் சொல்கிறார். “இதோ என் உடலை மைக்ரோவேவ் துகள்கள் கோடிக்கணக்கில் ஊடுருவிக் கடந்துசெல்கின்றன.” என்று நீலகண்டனிடம் சொல்லி மேனன் பயப்படுகிறார். ஒரு கட்டத்தில் “சிக்னல்கள் செல்வது மைக்ரோவேவ் வடிவில் அல்ல. அப்படியென்றால் பொருட்களும் வளர்கின்றன. அவை தங்களுக்குள் உரையாடி ஒன்றோடொன்று கோத்துக்கொண்டு ஒன்றையொன்று நிரப்பி ஒன்றுக்கு ஒன்று அர்த்தம் அளித்தபடி முடிவிலாது எழுந்துகொண்டிருக்கின்றன” என்பதை நீலகண்டனும் உணர்கிறார். இறுதியாக “நரம்புகள் அதிர்வதில் மிகமிக மர்மமான ஒன்று உள்ளது” என்று சொல்லி சுகுமார மேனன் சிரிப்பதாக கதை நிறைவு கொள்கிறது. இயற்கையின் மிக மெல்லிய அதிர்வுகளொடும் இயைந்து அதனை அறிய முற்படும் தேடல் ஒன்று இயம்பப்படுகிறது. மைக்ரோவேவ் கதிர்களை மட்டுமல்ல பலவற்றையும் இக்கதையோடு தொடர்புபடுத்தி விசித்ரமான எண்ணங்களால் நம்மை நிறைத்துக் கொள்ள ஏதுவான கதை.

கிங்கோப்ரா சாங்சுவரி/ தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று ஆகும்பேயைச் சுற்றி ”ஆடகம்” கதை சொல்லப்படுகிறது. கதையின் நாயகனுக்கு நியூரோ பிராப்ளத்தால் விசித்ரமான தற்கொலை எண்ணங்கள் வருகிறது. ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக அவன் ஆகும்பேயைச் சென்றடைகிறான். அங்கே அவன் ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு ஆட்படுகிறான். அதன் பின் அவன் வீறுகொண்டு செயல்படும் வாழ்க்கையில் செயல்பட்டு உலகாயத வெற்றிகளை அடைகிறான். இதற்கெல்லாம் காரணமாக ”ஆடகம்” அமைகிறது. ஆடகம் என்ற ஒரு புதிய வார்த்தையையும் அதனை சுந்தர் என்ற ஆராய்ச்சியாளர் மூலம் விரித்துக் கூறும்போதும் மயிர்க்கூச்செறிகிறது. தனக்கு ஆடகம் அளிக்கப்படுவதற்கான முந்தைய கணத்தை நினைத்து நன்றியுணர்வோடு மீண்டும் ஆகும்பேயின் அந்த மலையில் அவன் உட்கார்ந்திருப்பதாக கதை நிறைவு கொள்கிறது.

“ஏழாம்கடல் எல்லை தாண்டினா முத்துண்டு மணியுண்டு ஞானப்பெண்ணே. ஏழாம்கடல் எல்லை தாண்டினா நோவுண்டு சாவுண்டு ஞானப்பெண்ணே. … முக்குவன்மாருக்க பாட்டாக்கும். முத்தும் உண்டு சாவும் உண்டு… ரெண்டும் அந்தாலயாக்கும்.” என்று கூறி தவளைக்கண்ணன் அனந்தனை கூட்டிக் கொண்டு போய் அவனுக்கு நாகமணியை கைகொள்ளச் செய்கிறான். அதனை பாதுகாக்கும் பொருட்டு அனந்தன் படும் அல்லல் சொல்லப்படுகிறது. ஒரு அமானுஷ்யமான மணியாக அமைந்தொழுகுவதான நாகமணியே கதை முழுவதுமாக விரவி இறுதியில் அமிழ்ந்து இல்லாமல் போவதான கதை. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக விளங்கிக் கொள்ள ஏதுவான கதையாக ”தங்கத்தின் மணம்” அமைகிறது.

“காகம் மூதாதையரின் வடிவம். குழந்தை பிறந்து எழுந்து அமர்ந்ததுமே தேடிவரும் முதல் உயிர் அதுதான். வானிலிருந்து உதிர்வதுபோல இறங்கி வருகிறது.” என்று காக்காவைப் பற்றிய கதையாக நித்யா சொல்வதாக ”காக்காய்ப்பொன்” சிறுகதை அமைகிறது. காகம் நன்றியுணர்வின் நிமித்தம் சதானந்த தீர்த்தருக்கு மினுங்கும் பொருளைக் கொணர்ந்து நித்தமும் போடுகிறது. அது கண்டு கொதித்தெழுந்து “மின்னுவதன் மீதான பற்று என்பது பொன்மீதான பற்றுதான். பொன்மீதான பற்று என்பது காமம்தான். பொருள் மோகம்தான். ஆணவமும்தான்….ஆகவேதான் நான் எல்லாவற்றையும் விலக்கினேன். மின்னும் பொருள் எதுவும் என்னிடம் இல்லை. எதுவுமே இல்லை” என்று அரற்றுகிறார். “அன்று மாலை சதானந்தர் சமாதியானார். அப்போது அவர் கையில் அந்த மணி இருந்தது” என்று நித்யா முடிக்கிறார். “சிறுகுடத்து நீரை வற்றாத நதியாக்கும் கேள்விக்கு வணக்கம்” என்று கூறும்போது அதை விளங்கிக் கொள்வதற்கான பல சாத்தியக்கூறை கதையில் கண்டடையச் செய்கிறார்.

”இயற்கையின் பெருமொழிமேல் மானுட மொழியைக் கொண்டு முட்டிக் கொண்டே இருக்கிறோம். அடிபெருத்த மரத்தை அறைந்து உலுக்குவதுபோல. அவ்வப்போது ஒரு சொல் உதிர்கிறது. அவ்வாறு காலாகாலமாக உதிர்ந்தவையே அத்தனை சொற்களும். மானுடன் பெற்றுக்கொண்டதே மொழி, உருவாக்கியது அல்ல.” என்ற அறிதலை நோக்கி கதையின் நாயகன் நகரும் ஒரு அறிவுத் தேடலாய் ”மலைகளின் உரையாடல்” அமைகிறது. பல்வேறு குருவிக்கூட்டின் மாதிரியை ஆராய்ந்து அதன் சுற்றுகளைக் கொண்டு ஒரு இயற்கை மாதிரி சர்க்யூட்டை கண்டடையும் பயணத்தில் அவன் அடையும் உச்ச அறிதலின் திறப்பை ஜெ நமக்குக் கடத்துகிறார். அவன் குருவியைப் பற்றி அதன் கூட்டைப் பற்றி புரிந்து வைத்திருக்கும் விதத்தைக் கண்டு பிரமித்து சென்று கொண்டேயிருக்க அவனின் இறுதி அறிதல் நம்மை மேலும் பிரமிப்பூட்டி திறப்படையச் செய்கிறது.

தொலைதொடர்புத்துறை

“விண் என்பது பூமிக்கு மட்டும் உரியது அல்ல. விண்ணகங்கள் கோடிகோடி. அங்கிருந்தெல்லாம் எழுகின்றன எண்ணிமுடியாத கதிர்கள், அலைகளாக. விண் என்பது எண்ணிவிட முடியாத கதிர்களின் அலைகடல். ஒலி என்பது அவற்றில் ஒன்று. ஒரு கதிரின் அமைப்பை இன்னொன்றாக ஆக்க முடியும். அலைவடிவமே கதிர்களின் மொழி. ஓர் அலைவடிவை இன்னொன்றாக ஆக்கலாம். தொலைபேசி என்பதே அந்த மாயத்தின் வடிவம். ஒலியலை மின்னலைகளாகி மீண்டும் ஒலியலைகளாகக் கூடும் என்பதை கிரகாம்பெல் கண்டடைந்தார். வானத்தின் முடிவிலியை ஆளும் விதிகளில் ஒன்றை சென்று தொட்டார். மூடப்பட்ட பல்லாயிரம் வாசல்களில் ஒன்றை திறந்தார்.” என்று தொலைபேசியின் கண்டுபிடிப்பு “வானில் அலைகின்றன குரல்கள்” கதையில் விவரிக்கப்படுகிறது. “சாந்தியின் குரல் எனக்கு வேண்டும்…” என்று கேட்ட இறந்துபோன சாந்தியின் கணவனின் இடைவிடாத கோரிக்கையை எற்றுக் கொள்ளப்பட்டு அதை கண்டறிந்து கொடுப்பதற்கான பணியை ஆர்.எம்.வி.எஸ்.தோட்டான் ஏற்கிறார். வெறிகொண்டு தேடி அவர் அடையும் அந்த குரல் பல சாத்தியங்களை, கேள்விகளை நம்முள் எழுப்புகின்றன. “எல்லா குரல்களும் வானிலிருந்து வருகின்றன. மண்ணிலிருந்து நிறைய குரல்கள் வானத்திற்குச் செல்கின்றன. வானத்திற்குப் போகும் குரல்களைவிட வானத்திலிருந்து வரும் குரல்கள் மிகுதி. இதோ இப்போது இந்த ஓசையை கலைத்து குழறலாக ஆக்குவது எங்கோ நெடுந்தொலைவில் நான் என்றும் அறியமுடியாத ஏதோ ஆத்மாவாக இருக்கலாம். அதன் அழியாத துயரமாக இருக்கலாம்…” கதை சொல்லி பிரமித்து நிற்கும்போது நாமும் பிரமித்துவிடுகிறோம்.

டெலிபோன் அலுவலகத்தில் இரு லூப்பு பிரச்சனைகளுக்கான தீர்வைக் கண்டடையும் பயணமாக ”நகைமுகன்” சிறுகதை அமைகிறது. எளிய மற்றும் நகைச்சுவை நிரம்பிய மனிதர்களைக் கொண்ட கதையாக அமைகிறது. எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத ஒரு தீர்வு கிடைக்கும் பூரிப்பை கதை நமக்குக் கடத்துகிறது.

டெலிபோன் எஸேசேஞ்சில் டெக்னீஷியனாக வேலைகிடைத்து நாகவேணிக்குக் கீழ் வேலைபார்க்கும் கிருஷ்ண நாயக்கிற்கு கிடைக்கும் அனுபவமாக “சுற்றுகள்” சிறுகதை அமையப் பெறுகிறது. ஒரு நாள் எதேச்சையாக மின்சாரம் அவன் உடலை அதிரச்செய்தபடி செல்ல அது அவனை பூமியுடன் இணைத்து டெலிஃபோன் எக்சேஞ்சுடன் இணைத்த உணர்வை அளிக்கிறது. அதன்பின் அவனின் கண்டடைதல்களும், சுற்றுகளைப் பற்றி அவன் புரிந்து கொள்ளும் பார்வையும் தெளிவாகிறது.

டெலிபோன் டவரைப்பற்றிய பிரம்மாண்டமான சித்திரத்தை ”வான்கீழ்” சிறுகதை எடுத்தியம்புகிறது. “அது ஒரு தெய்வம், மாடன் கூமன் காளன் போல. டவர் அவற்றையெல்லாம் காலடியில் சிறிய செடிகளை போல ஆக்கி அனைத்துக்கும் மேல் எழுந்து நிற்கும் பெரிய தெய்வம்.  ‘இரும்புமாடன்’.” என்று அருணாச்சலம் நாடார் டவரைப்பற்றிச் சொல்கிறார். ஒரு காலின் ஊனத்தால் டிஸ்கோ என்றழைக்கப்படும் குமரேசனின் வலிகள் எடுத்தியம்பப்படுகின்றன. குமரேசனும் அவளும் டவரின் மேலே சென்று அங்கிருந்து உலகைக் காணும் காட்சி விரிக்கப்படுகிறது. இருவரும் நெருக்கமாகும் தருணம் முத்தாய்ப்பாக அமையும் ஒரு இனிமையான கதை.

அதே குமரேசனும் ராஜம்மாவும் வயது முதிர்ந்த தருணத்தில் தங்கள் நினைவுகளை மீட்டி எடுக்கும் கதையாக “வான் நெசவு” அமையப் பெறுகிறது. அவர்களின் காதல் கதையைக் கேட்ட பேத்தி லதாவிடம் அந்த டவரின் மேல் அவர்கள் ஏறிய கதையையும், காதல் கொண்ட கதையையும் நினைவுகூறுகிறார்.  ”We are the weavers of the sky. நாமதான் வானத்தை நெசவு பண்றோம் அப்டீன்னு… எங்களையெல்லாம் அப்டியே வெறியேத்தின வரி அது…” என்கிறார். ராஜம்மாவுடன் மீண்டும் அந்த இரும்பு மாடன் என்று விளிக்கப்படும் டெலிபோன் டவருக்குச் சென்று செலவு செய்த காலங்களையெல்லாம் எண்ணிப் பார்க்கிறார். “அப்ப மேலே நிக்கிறப்ப எல்லாமே கண்ணு முன்னால இருந்தது… முழு வாழ்க்கையே மிச்சமிருந்தது. இப்ப எல்லாம் தீர்ந்துபோச்சு. வெறும் ஞாபகங்கள்தான். எதிர்பார்க்கிறதுக்கு ஒண்ணுமே இல்லை.” என்று எண்ணி வியந்து கொள்கிறார். ”இப்ப என்ன தோணுதுன்னா, கையிலே வாழ்க்கையை வச்சிருக்கிறவன்தான் பணக்காரன்… எனக்கு இனிமே டைமே இல்லை.” எனும் வரிகள் நம்மையே குமரனின் வயதுக்குச் சென்று எண்ணிப் பார்க்க வைப்பவை. “நீ மேலே போனதுமே சின்னப்பொண்ணா ஆயிடுவே… பழைய எருமைக்கண்ணுக்குட்டி மாதிரி.” என்று முடியும் தருணம் காதலை முதுமையினின்று மீட்டெடுக்கும் வரிகளாக அமைந்து வருடுகிறது. ”வான்நெசவு”.

லாரன்ஸ், ஆறுமுகம், டி.இ சதாசிவம், முருகன், குமரேசன் ஏசையா, ஐசக் அண்ணன், அருணாச்சலம் சார், ராஜம்மா, நாகமணி, கிருஷ்ணன் நாயக் என ஒரு இரும்புமாடனின் உலகத்தைச் சார்ந்தவர்களை, வானை நெசவு செய்தவர்களை இந்தக் கதைகள் நினைவு கூறுகின்றன.

துப்பறிவாளன்

துப்பறியும் கதைகளின் கதாநாயகனாக/கதைசொல்லியாக ஒளப்பேச்சன் அமைந்து சுவாரசியமாக கதையை முன்னெடுத்துச் செல்கிறார். தன்னை ஒரு சத்யகிறிஸ்தியானி, மார்த்தோமாக்காரன் என்று அடிக்கடி பிரகடனப்படுத்திக் கொண்டு பேசுவதையும், மற்ற நண்பர்களுடனான அவரின் உரையாடலை நகைச்சுவை நிரம்பியதாய் ஜெ படைத்துள்ளார். துப்பறியும் கலையைப் பற்றி அவர் சொல்கையில், ‘ஒரு குற்றம் எப்படி நடக்கிறது என்பதை நாமே முழுமையாக கற்பனை செய்துகொள்ள வேண்டும். முழுத்தகவல்களுடன், காட்சி காட்சியாக. அது நமக்கு புதிய கேள்விகளை எழுப்பும், புதிய தகவல்களையும் தரும். கொலையை நாமே நேரில் கண்ணால் பார்ப்பதற்குச் சமம் அது. அந்த கதையைத்தான் நாம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.’ என்கிறார். “வேரில் திகழ்வது” அப்படியான துப்பறியும் கதை.

பழனியப்பன், ஸ்ரீதரன், குமாரன் மாஸ்டர், ஔசேப்பச்சா ஆகிய நண்பர்களுக்கிடையே நடக்கும் உரையாடலாக கதை ஆரம்பிக்கிறது. வழக்கம்போல் ஒளப்பேச்சா சொல்லும் கதையாக “வேட்டு” அமைகிறது.  ஒருவருக்கு மற்றவர் வைக்கும் வேட்டைப் பற்றிய கதையாக, மர்ம முடிச்சுகள் நிரம்பி, அவை அவிழ்க்கப்படுவதாக கதை அமைகிறது.

செயல்! செயல்!

“ஒற்றை இலக்காக இருப்பவன் அதை அடைந்தே தீர வேண்டும் என்பது பெரு நியதி” என்று ஜெ கூறுவார். அங்ஙனம் ஒற்றை செயலை எடுத்துக் கொண்டு அதில் அதன் உச்சத்தைத் தொடும் மனிதர்களை தன் சிறுகதைகளில் விரவி வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட சிறுகதைகளாக குருவி, லூப்பு, சுற்றுகள், சுக்ரர், வேரில் கரைவது, பொலிவதும் கலைவதும் போன்றவை அமைகின்றன.

முதல் முறையாக பானை வனையும் சக்கரத்திலிருந்து அது உருவாகும் விந்தையைக் கண்ட மாதவன் “மண்ணுலே குமிழி” என்று மனக்கூத்தாடுகிறார். நோம்புப் பாவை வாங்க வந்த இடத்தில் தானும் ஓர் பானை செய்து பார்த்திட முயற்சிக்கிறார். ஆண்டியோ ”கலம் வரணும்னு இருந்தா அதுவா வந்திரும். நாம நம்ம கைய குடுக்கணும். நாம செய்யுதோம்னு நினைக்கப்பிடாது. கையே அதுவே வனைஞ்ச தப்பில்லாம வந்திரும்… குசவன் கத்துக்கிடுத தொளிலு அதாக்கும். கலம் உருண்டு வாறப்ப அவனுக்க மனசும் பேச்சும் நடுவாலே போய் கலைக்காமப் பாத்துக்கிடுதது” என்கிறார். ஒற்றை இலக்காக மட்டுமே இருந்தடையக் கூடிய ஒரு கலையாக மண்ணின் குமிழி அமையப் பெறுகிறது.

முள்ளும் பனையும் மட்டுமே விளையும் செங்காட்டிலிருந்து மாரடிக்கவியலாது வேலை செய்து பிழைத்துக் கொள்ள இசக்கிமாமாவிடம் தஞ்சம் புகுகிறான் முத்து. “இங்க வானத்திலயும் தீ, மூணுபக்கமும் தீ. ஒரு பக்கம் முள்ளு. அங்கவந்தா அஞ்சுபக்கமும் தீயாக்கும்…” என்று மாமா கூறுகிறார். ஒரு எதிர்பாராத திருப்பத்தால் மாமா இரவில் தற்கொலை செய்து கொள்ள பணத்தையும் துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு மாமாவின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க செங்காட்டிலிருந்து செயல் ஒன்றையே மனதில் கொண்டு முத்து கிளம்புவதாக ”ஐந்து நெருப்பு” கதை நிறைவு கொள்கிறது.

ஒரு அவசரமான வேலைக்காக சோல்டரிங்கை கலையாக செய்யக்கூடிய மாடன்பிள்ளையைத் தேடி அவனை வேலையிலிருந்து நீக்கியவர்களே வருகிறார்கள். தனக்கான மரியாதை கிடைக்காததை குறைபட்டுச் சொல்லி மேலதிகாரி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறான் மாடன். “நீரு சொன்னது உள்ளதாக்கும். நான் ஆர்ட்டிஸ்டு. நான் செய்யுதது சுசீந்திரம் சிற்பம் போலேயாக்கும். அது ஆயிரம்பேரு காணணும். தலைமுறை தாண்டி நிக்கணும்… ஆனா அதுக்காக நான் கீள எறங்கிர மாட்டேன். எனக்கு நான் செய்யுத வேலைதான் முக்கியம். அதைவிட நான் முக்கியம். இந்தா நீரு வந்து கேக்கேருல்லா, அந்த வேலைன்னா என்ன? அது நானாக்கும். எனக்க மனசாக்கும். ஆத்மாவாக்கும். அதை விட்டுட்டு ஒரு பேரும் பெருமையும் எனக்கு வேண்டாம்…” என்கிறான். ஒருவழியாக வேலையைச் செய்ய சம்மதித்து வந்த இடத்தில் தூக்கணாங்குருவிக் கூட்டைக் கண்டு, ”எல்லா தூக்கணாங்குருவியும் கூடு கெட்டுது… அம்மைக்குருவி குஞ்சுக்குருவிக்கு தனியா சொல்லிக்குடுக்குத வளக்கம் இல்லை. முட்டைக்குள்ளேயே அதையெல்லாம் படிச்சுப்போட்டாக்கும் வருது… இது ஒரு குருவி கெட்டின கூடில்ல. இந்த உலகத்திலே உள்ள அத்தனை குருவிகளும் சேந்து கெட்டின கூடாக்கும்”; “ஒரு அடைக்காய்ப் பாக்கு மாதிரி… அம்பிடு சின்னக்குருவி” என்று நெகிழ்ந்துணர்ந்து யாரும் எந்த மன்னிப்பும் கேட்க வேண்டாமென வேலையை ஆரம்பிக்கிறான். “செரிடே மக்கா. விடு… நீ மனுசனில்ல. நீயும் ஒரு குருவியாக்கும்” என்று மாடன் பிள்ளையைப் பார்த்து கதைசொல்லி சொல்லும்போது ஜெ நம்மை கலங்கடித்துவிடுகிறார்.

“என்ன பண்ணினாலும் ஒரு மனுஷன் இன்னொரு மனுஷனோட தொடர்பு கொள்ளவே முடியாது. சந்தேகமே வேண்டாம். மனுஷன் நல்லா சீல் வைச்ச கங்காஜலம் மாதிரி. உள்ள போக வழியே இல்லை” என்று பலவாறாக விவாதித்துக் கொண்டே காரில் வரும் நண்பர் கூட்டம் ஒன்று திருமணத்தில் ஜே.கே மற்றும் குழல் வாசித்த மணியையும் காண்கின்றனர்.”அங்கே அவர்கள் இருவரும் மட்டும்தான் இருந்தனர். அல்லது ஒருவர். அல்லது அவர்களும்கூட அங்கே இல்லை.ஒரு கட்டத்தில் மணி குழலைத் தாழ்த்திக்கொண்டார். அவர் கண்களிலிருந்து நீர் வழிந்தது. ஜேகே எழுந்து வெளியே நடந்துசென்று காரிலேறி அமர்ந்தார்.” நண்பர்கள் மட்டுமல்ல வாசகர்களும் ஏகாந்தத்தை அறியும் கணமாக அமையப் பெறுகிறது “ஏகம்” சிறுகதை.

கதைசொல்லியும் ஸ்ரீகண்டனும் குகையுறைநாதர் கோயிலில் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் செல்லும் பயணப்பாதை கதையில் விரிகிறது. விசை கொண்டு ஓடிக் கொண்டே இருக்கும் ஸ்ரீகண்டனின் அந்தப் பயணத்தில் கதைசொல்லியால் முதல் “ஏன்” எழுப்பப்படுகிறது. அதன் பின் இருவரும் கொள்ளைக் கும்பலிடம் மாட்டிக் கொண்டு ஸ்ரீகண்டன் இறந்துபட்டும், கதைசொல்லி தப்பியும் விடுகிறான். இறக்கும் அந்தத் தருவாயிலும் ஏதோவொன்றால் இயக்கப்பட்டவனாக “எழுகதிர்” நோக்கி ஓடிக் கொண்டே இறந்தவனாக ஸ்ரீகண்டன் காட்சியளிக்கிறான்.

சாரயத்தொழிலை கலையைப் போல நுணுக்கமாக செய்து வரும் நேசையன் தன்னால் ஒரு முறை ஆக்கப்பட்ட உச்சமான அதே சாரயத்தின் சுவையை மீட்டுருவாக்க அதற்குப்பின்னான ஒவ்வொரு முறையும் முயல்கிறான். “இது இனிப்பிலே ஊறிவாறது. ஆண்டவராகிய ஏசு மாதிரி….” என்று அந்த சாராயத்தை சிலாகிக்கிறான்.  “அதெல்லாம் கடவுளுக்க வெளையாட்டு… மக்கா நீயில்லலே நானாக்கும் இதையெல்லாம் நடத்துகதுண்ணு நம்ம கிட்ட சொல்லுதாரு கடவுள். மனுசன் கடவுளா ஆக ஆசைப்படக்கூடாது பாத்துக்க. அத அந்தாலே விட்டிரு…” என்றே லாத்தி அவனுக்கு புரிய வைக்க முற்படுகிறான். ”காட்டிலே ஒரு மாயப்பொன்னு உண்டுண்ணு சொல்லுவாக, கேட்டிருக்கியா?. மாயப்பொன்னாக்கும் கடுத்தா சாமிக்க வெளையாட்டு. மஞ்சள் வெளிச்சத்த காட்டி பொன்னு பொன்னுன்னு அலையச்செய்வான். அதை தேடிப்போறவன் நடுக்காட்டிலே திக்கறியாம நிப்பான்.” என்று அவனை எச்சரிக்கிறான். அந்த சலனமற்ற இரவில் நேசையன் மீண்டும் மாயப்பொன்னான அந்த சாரயத்தைக் கண்டடைகிறான். ”கீழே தகரப்போணியை வைத்திருந்தான் கூமன். அதில் சொட்டு கனிந்து திரண்டு ஒளிகொண்டு முத்தாகி நீண்டு உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தது. மிகமிக மெல்ல. யோசித்து யோசித்து சொட்டுவதுபோல. ஒரு ஒரு சொல்லாக. அது கடிகாரத்தின் ஓசை என்றால் காலம் ஐம்பதில் ஒருமடங்கு வேகம் குறைந்துவிட்டது.” எனும்போது “மாயப்பொன்” நம் சிந்தையை வந்தடைகிறது.    

எடையற்றவை

நவீனக் கவிதைகளைப் பற்றி ஜெ கூறும்போது அவற்றை எடையற்ற தன்மை கொண்டதாக, பறந்தலையும் தன்மையதாக சித்தரிப்பார். இங்கு சில சிறுகதைகளையே ஜெ அங்ஙனம் படைத்திருப்பது இந்த நோயச்ச கால கனத்தைக் குறைத்து நம்மை எடையற்றுப் போகச் செய்கிறது. அப்படிப்பட்ட சிறுகதைகளாக ஆனையில்லா, இடம், லாசர், கிரீட்டிங்ஸ் ஆகியவை அமைந்தொழுகுகின்றன.

தலைப்பைப் பார்த்தவிட்டு ஏதோ வித்தியாசமான தமிழ் வார்த்தை என்று உள் நுழைபவர்களுக்கு ஜெ அங்கு ஆச்சரியத்தை வைத்திருப்பார். சிரோண்மணி தன் வீட்டில் கொள்ளை அடிக்க வந்த திருடனின் சாமர்த்தியத்தைப் பார்த்து வியந்து தான் அப்படி தன் வாழ்க்கையில் இருந்திருந்தால் மரியாதையாக ரிட்டையர் ஆகியிருப்போம் என்று நினைத்து ஆச்சரியப்படும் கதையாக அமைகிறது. சிரோமணியின் எண்ணவோட்டங்களும், திருடனான இன்னாசின் திருட்டு சாமர்த்தியமும், அவன் சிரோமணியிடமே நைஸாகப் பேசி கேஸிலிருந்து அவன் தன்னை விடுவித்துக் கொள்ளும் வித்தையென நகைச்சுவையும் சுவாரசியமும் நிரம்பியதாய் கதை அமைகிறது. பெரும்பாலும் வயதிலும் அனுபவத்திலும் முதிரும் ஒருவரால் தான் இது போன்ற திருட்டைக் கூட ஆச்சரியமாய்ப் பார்க்கும் தன்மை இருக்கும். அதை ”பிறசண்டு” கதையின் வழி ஜெ நமக்குக் கடத்தி விடுகிறார்.

எளிமையான மனிதர்களால் நிரம்பித் ததும்பும் கதை “ஆனையில்லா!”. சொல்லப்பட்ட மனிதர்களுக்கு உள்ளொன்று புறமொன்று என்ற வேறுபாடு இல்லை. அப்பாவைத் தவிர அனைத்துக் கதாப்பாத்திரங்களும் ஒரு அளவுக்குமேல் சிந்திப்பதில்லை. எளிமையான மனிதர்களிடம் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. அறிவுள்ளவன் என்று நினைத்துக் கொள்கிறவன் எல்லாவற்றிற்கும் லாஜிக் கேட்டு நகைச்சுவையே கெடுத்து விடுவான். நல்லவேளையாக அப்படியான யாரும் கதையில் இல்லை. வீட்டிற்குள் நுழைய முற்பட்டு வெளியேறிச் செல்ல இயலாமல் தவிக்கும் யானை கோபாலகிருஷ்ணனைப் பற்றிய ஒரு சிறு நிகழ்வு தான். பலதரப்பட்ட மனிதர்கள் அதனை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதான ஒன்றைச் சொல்லும் கதையிது. காடுகளுகானவரும், காடேயான யானையின் உள்ளுணர்வையும், காட்டை விட்டுப் பிரிந்து உள்ளுணர்வுகளைத் தொலைத்த மனிதர்களையும் ஒருங்கே புரிந்து வைத்திருப்பவரான கடுவா மூப்பிள்ளை கோபால கிருஷ்ணனை மீட்டெடுக்கிறார். சிறு குழந்தையின் மன நிலை கொண்ட யானையான கோபால கிருஷ்ணனும், அவனைச் சூழ்ந்து இருக்கும் எளிய அப்பாவி மனிதர்களாலும் கதை எடையற்ற தன்மையைப் பெறுகிறது.

சொல்லவொண்ணா பிரச்சனையால் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கும் யானை கோபாலகிருஷ்ணனையும் அவனின் நண்பனான கருப்பன் நாயைச் சுற்றியும் ”துளி” சிறுகதை நகர்கிறது. சாதி, மத பேதமின்றி வருத்தெடுக்கும் நகைச்சுவை நிரம்பிய கதையாக அமையப் பெறுகிறது. ”அய்யர அடிச்சவன் ஆயி களுவி விடணும்னுட்டு சொல்லுண்டு கேட்டுதா? என்பதும் ”நாயர்மாரு எனக்க சூத்து மயிராக்கும்…” என்று தங்கையா நாடார் சொல்வதும்; “வேதக்காரன் வேங்கித்தாற வெல்லம் வச்சில்லாவே உம்ம சாமிக்கு பாயசம்?” என்று கேட்பதும்; ”சிவன்  மண்டையோட்டிலே பிச்சை எடுத்தாரு…அப்பம் அவருக்கு பிச்சபோட்டவன்லாம் அவருக்க ராசாவாலே?” என்று கேட்பதுமென நகைச்சுவையான சண்டைகள் நிகழ்ந்து நம்மை இளகுவாக்குகிறது. இறுதியில் கருப்பன் வந்து தன் ஒரு சொட்டு மூத்திரத்தால் ஆனையை சகஜ நிலைக்குத் திருப்பும் தருணம் ”அம்பிடுதான்வே… ஓரு சொட்டு” என்று டீக்கனார் கூறுவதாக கதை நிறைவு கொள்கிறது

புள்ளிப் புலியை அறைக்கல் வீட்டு மச்சிலே கண்டதாக சிறுவன் நத்தானியேல் சொன்னாலும் யாரும் அங்கே கையை வைக்க விரும்பாத கேசவன் தம்பி மற்றும் அம்மச்சி அதனை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ள விரும்புகின்றனர். அவர்களுக்கிடையேயான ஓர் எடையற்ற நகைச்சுவை உரையாடல் “பூனை” சிறுகதையில் நடைபெறுகிறது.

குழந்தைகளுக்கிடையேயான உரையாடல் மொழியை மிக நுணுக்கமாக எடுத்தியம்பும் கதையாக ”மொழி” சிறுகதை அமையப் பெறுகிறது. லெச்சுமிக்குட்டி திறக்கமுடியாத அறைக்குள் மாட்டிக் கொள்ள அவளை மீட்கும் போராட்டமாக தங்கையா நாடார், கரடி நாயர், பெருவட்டர், அனந்தன், தங்கம்மை நாடாத்தி, விசாலம், தவளைக்கண்ணன் ஆகியோருக்கிடையே நடக்கும் உரையாடலை ஜெ நகைச்சுவையால் தெறிக்கவிட்டிருக்கிறார். “அப்பி கதவிலே தொட்டா… அப்பீ ஞீ பிரைஸ்… கல்கோனா பிரைஸ்!” என்று அனந்தன் பலவாறாக குழந்தைகள் பாஷையைப் பேசி லட்சுமிக்குட்டியைக் கதவைத் திறக்கவைக்கும் செயல் நெகிழ்ச்சியாக அமைந்துவிடுகிறது.

ஓட்டைக் குடைந்து வீட்டை நாசம் செய்யும் ஒரு குரங்கை விரட்டுவதற்கான உரையாடலாக ”இடம்” சிறுகதை அமையப் பெறுகிறது. மீண்டும் அதே எளிமையான மனிதர்கள் அவர்களுக்குள் நடக்கும் உரையாடலாக நகைச்சுவையாக அமைந்துள்ளது. ‘‘டேய் உனக்கும் எனக்கும் பேச்சில்ல? வேதக்காரனுக எனக்க கிட்ட பேசவேண்டாம்” என்று கரடி நாயர் திட்டுவதும் இறுதியில் “ஏம்வே பெருவட்டரே, குரங்குவர்க்கத்திலே நாயர் எனம் உண்டா வே?” என்று அவர் அப்பாவியாகக் கேட்பதுமென நகைச்சுவை நிரம்பிய கதையாக அமைகிறது.

“குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்” என்பார் வள்ளுவர். அத்தகைய இனிமை நிறைந்த மழலையை “பாப்பாவின் சொந்த யானை” கதையாக சமைத்திருக்கிறார் ஜெ. பாப்பா, அப்பா, சரண் ஆகிய மூவருக்கிடையேயான ஒரு அன்றாட உரையாடலை கதை பேசுகிறது. அப்பா இருவருக்கும் ’ஆனையில்லா’ சிறுகதையை மிகவும் நகைச்சுவையாக மாயப்புனைவோடு சொல்கிறார். அப்பாவின் கதையில் மந்திரத்தால் சிறியதாக மாறிய யானையை பாப்பா தன் கனவுலகத்துக்குள் அப்படி ஒளித்து வைத்துக் கொள்ளும் இடம் அவர்களின் உலகத்தை நமக்குக் காணிக்கிறது.

ஊரே கொண்டாடும் மிகச்சிறந்த பாட்டுக்காரரான மதுரை ராமையா அவர்களின் பாட்டைக் கேட்கச் செல்லும் சிறுவனின் கண்கள் வழி அவரையும், அவர் பாடல் தரும் அனுபவமும் ”பிடி” சிறுகதையில் சொல்லப்படுகிறது. மிகவும் சகஜமானவரான ராமையா அவருடைய விசிறியான பானுமதிக்கு அவள் வீட்டிலேயே பாடிக்காட்டி பரவசப்படுத்துவதும், “சாமிக்கு என்ன பாட்டு வேணும்? சொல்லுங்கோ” என்று திண்ணையில் உட்கார்ந்திருந்த அவளின் தாத்தாவிடம் கேட்டு கண்கலங்கச் செய்பவராகவும் அமையும் கதையாக ஓர் எடையற்ற தன்மையை நெஞ்சில் கதை நிறைத்துவிடுகிறது.

இதைத் தவிரவும் தலைப்புகளுக்குள் அடங்காத சர்வ சுதந்திரமான கதைகளாக எரிமருள், மலைவிளிம்பில், அமுதம், மதுரம், வனவாசம் (கமல்ஹாசனுக்கு சமர்ப்பித்த கதை) போன்றவை அமைந்திருக்கின்றன. அவை கவிதையாக, திறப்பாக, நகைச்சுவையாக என வாசகர்களுக்கு பல்வகை உணர்வுகளைத் தரவல்லன. இந்த நூறு சிறுகதைகளையும் ஒவ்வொரு வாசலாகச் சென்று சுவை நுகர்ந்து அனுபவித்துக் கொள்ள வாசகர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

ஒளப்பேச்சன், குமரன், பெருவட்டார், கரடி, தங்கையா நாடார், தவளைக்கண்ணன் ஸ்ரீதரன், அணஞ்சீ, லெச்சுமிக்குட்டி, அப்புப் பாட்டா, எலிசி, தீவண்டி ஜான், ஃபாதர் ஞானம், இக்கா, ஷாஃப்பி, லாசர், டீக்கனார், காளியன், காரியாத்தான், மாடன், சுடலை, கோபாலகிருஷ்ணன் எனும் யானை, அப்பா, அனந்தன், ஆனந்தி/ஆனந்தவள்ளி, தங்கம், கோமதியக்கா, ஸ்ரீதேவி, அம்மிணித் தங்கச்சி, பார்வதிபாய், ராம வர்மா, மாவிங்கள் கிருஷ்ணப்பிள்ளை, ராஜம் கிருஷ்ணப்பிள்ளை, சண்முகத்தின் அப்பா, முக்தா, நித்யா, ஆடம், எல்லா என எத்தனையோ கதாப்பாத்திரங்கள் மனதை நிறைத்து நிற்கின்றன. முக்குசாஸ்தா கோயிலு, கோரோயில் முருகன், அளப்பங்கோடு முத்தப்பா, ஏசப்பா என தெய்வங்களும் நம்மை வாழ்த்தி வழியனுப்புகின்றன.

ஒட்டுமொத்தமாக இந்த நூறு புனைவுக்களியாட்டு சிறுகதைகளும் சிறு சிறு கனவுப் பிரபஞ்சங்களாலான ஓர் மாபெரும் கனவுப் பிரபஞ்சத்திற்கான தரிசனமாக நம் கண்முன் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த சிறுகதைகளின் நிறைவின் போது அவர், “என்னைக் கனவுகாண்பவன், கதைசொல்லி என்ற அடையாளத்துடன் மட்டுமே முன்வைக்க விரும்புவேன்” என்று சொல்லியிருக்கிறார். பிரமிப்பூட்டும் அவரின் கனவுகளுக்குள் பயணிப்பதென்பது பல்லுணர்வுகளுக்குள் ஆட்பட்டு பரவசமடையச் செய்யும் அனுபவமாகும். சிரித்து மகிழ்ந்தும், அழுது அரற்றியும், அணைத்துத் தொழுதும், கண்டடைந்தும் நெகிழ்ந்துமென வாசகர்களை ஆட்படுத்திய இந்த புனைவுக்களியாட்டு சிறுகதைகளின் ஓராண்டு நிறைவின் முடிவில் ஜெ –விற்கு பிரேமையும் நன்றியும்.  

இரம்யா

விருதுநகர் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். தமிழிலக்கிய வாசகர்

3 Comments

உரையாடலுக்கு

Your email address will not be published.