/

பனைத்துணையாக் கொள்ளும் பனையன்: மனோஜ் பாலசுப்பிரமணியம்

கவிஞர் முத்துராசா குமார் கவிதைகளை முன்வைத்து

சாமி அழைப்புப்பாடல் துவங்கி விட்டது. நாயணம் காற்றில் பறக்கிறது. தவில் சத்தத்திற்கு விசில் சத்தம் கூட வர ஜிகுஜிகு மஞ்சளுடுத்திய நடனக்காரன் மைக்கில் ஊரையே அழைக்கிறான். குளத்துமேட்டுக் கோவில் முற்றத்தில் சனம் கூடுகிறது. உள்ளுக்குள் சந்தனமாரி சில்லென பூத்திருக்கிறாள்.

இது கடை நாள். இன்னும் சற்று நேரத்தில் மதுரை கலைநயா குழு நடத்தும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி துவங்கவிருக்கிறது.

தூரந்தொலைவு போகும் சனங்கள் இன்றே கிளம்பி விட்டன. ஒரு கையில் புது மஞ்சள் பையுடனும் மறுகையில் குட்டிச்சாக்குடனும் பஸ்சுக்குப் போகும் ஒரு அப்பாயியைப் இளந்திமிறால் வழி மறித்தேன்.

“என்ன அப்பாயி இப்பவே கிளம்பிட்டீக”

“ஆமசாமி தூரந்தொலை போறதில்லையா. இப்ப போனாத்தேன்..”

அவர் மடிக்கட்டிலிருந்து பச்சை நிறச் சுருக்குப்பை வெளியே தொங்கி இருப்பதைப் பார்த்தேன். துட்டாக இருக்கலாம். “அப்பாயி அதை எடுத்து மடிக்குள்ள வச்சுக்கட்டுக”. சுதாரித்துக் கொண்ட அப்பாயி சுருக்குப்பையை மடிக்கட்டுக்குள் வைத்துக் கட்டிக்கொண்டு வாயில் வெத்தலை ஒழுகச் சிரித்து “குளத்தில எடுத்த பிடிமண்ணு” என்றாள். நான் அதிர்ந்து “குளமா அது எங்கன” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். “உள்ள வீடுக இருக்கதே

குளத்துல தானப்பா”.

கல்லூரிக் காலத்தில் என் அத்தை ஊரில் நான் பார்த்த கிழவி. முத்துராசாவின் மொத்தக் கவிதை உலகையும் நான் அந்தச்

சுருக்குப் பைக்குள் பார்த்தேன்.

ஒரு கவிஞனின் மனதை அவனுடைய ஏதாவது ஒரு கவிதையில் ஒரு படிமத்தில் பார்த்துவிடலாம். பார்த்த உடனே அதுவும் சட்டெனத் திறந்து விடும்.

1435.91 ஏக்கர் காத்தோடு மல்லுகட்டி எரிகிறது

1 ரூபாய் சூடத்தீ உடம்பு

சூடத்தீக்கும் உடம்பு உண்டு என்ற காட்சியில் அதிர்ந்து உறைந்தது மனம்.

உலகம் முழுமைக்குமான படைப்பு என்று சொல்லாடல் உருவாகிறது. ஆனால் உலகின் சிறந்த அத்தனை படைப்புகளும் அந்த மண்ணிலிருந்து நேரடியாக முளைத்தவையாக அந்த மண்ணிற்கே உரித்தான விஷயமாக இருக்கின்றன. நிலப்பொருளோ கருப்பொருளோ அதிலிருந்து எதை எடுத்தாலும் அப்படைப்பால் நிற்க முடிவதில்லை.

கவிஞர் வெய்யிலின் பல கவிதைகளை நீங்கள் தாமிரபரணியை விட்டு வெளியே எடுக்க முடியாது. அதன் பலம் பலவீனம் எல்லாம் அது தான். முத்துராசாவின் கவிதைகளின் முக்கியத்துவம் அதை முத்துராசா தான் எழுத முடியும் என்பது தான். முத்துராசாவின் கவிதைகள்

உலக நாடுகளுக்கானது இல்லையா.? ஆம் அவை உலக நாடுகளுக்கானது தான்.

ஆனால் மூன்றாம் உலக நாடுகளுக்கானது.

“நினைவின் விருந்தாளியாக

ஒரு கவிதை பிரேவேசிக்கையில் உங்கள் உலகமே மாறிவிடுகிறது” என்பார் கலாப்ரியா. என் இயந்திரச்சத்தம் சூழ் உலகத்தை மாற்றும் பல கவிதைகளை அடிக்கடி நினைவில் எழுப்புவேன். முத்துராசாவின் “டிஸ்கோ” அப்படிப்பட்ட ஒருகவிதை.

டிஸ்கோ

இன்று இரவுதான்

கடைசிநாள் மண்டகப்படி

இறுதிப்படையலாக

டிஸ்கோ டான்ஸ் ஆரம்பித்துவிட்டது.

மேடைக்கு அருகிலேயே

சீரியல் பல்பு சாரத்தில் நிற்கிறார்

சங்கிலி கருப்புசாமி.

வீச்சரிவாளில் பல்புகள் எரியாமல் போக

ஆயுதமற்று நிற்கும் கருப்புவினால்

தெருவின் போர்த்திறனுக்கு

இழுக்கென்று குதித்த படைவீரர்கள்

மைக்செட்காரனை வீழ்த்தக் கிளம்புகையில்

ஊமைவிழிகளிலிருந்து ஒலித்த

‘ராத்திரி நேரத்துப்பூஜை’ பாடலுக்கு

சினம் மறந்து ஆர்ப்பரிக்கத்தொடங்கினர்

நீண்ட காலம் கழித்து வெறுங்கைகளை

சொடக்கு முறித்த சங்கிலி கருப்பு

பாடலுக்கு முரட்டு விசிலாக அடித்தார்.

இக்கவிதை சோற்றுப் பொட்டலத்தை விரிப்பது போல் அவ்வளவு ஆவலுடன் விரிக்கப்படுகிறது. “ராத்திரி நேரத்து பூஜை” பாடலின் சிலுசிலுப்பு நம்மை ஊருக்குள்ளேயே தூக்கி எறிந்துவிடுகிறது. சொடக்கு முறித்த சங்கிலி கருப்பு முரட்டு விசிலாக அடிக்க நம் மயிர்க்கால்கள் எழுந்து நிற்கின்றன.

நீர் மடைக்குள் விழும்

ரத்தச் சொட்டுகளை

துண்டிக்கப்பட்ட தலையும்

ஆயுதமும்

நிறுத்தவேயில்லை.

கொலை நிகழ்ந்த காலத்திலிருந்துதான்

தலைவெட்டியான் மடை என்ற பெயரானது.

நித்தமும் மடையின் மேல்

கம்ப்யூட்டர் சாம்பிராணி கரையும்.

வெளிகளில் பரவிய வாசனைப் புகை

சாம்பிராணிகளின்

சாம்பல் உடல்களுக்குள் திரும்பவும் குடிபோவதை

அரிதாகப் பார்க்கலாம்.

அப்போதெல்லாம்

வறட்சி மடைக்குள்

தண்ணீர் சுழல் சத்தம் கேட்கும்.

காவு வாங்கிய ஆளோ

காவான ஆளோ

இருவரில் ஒருவரது சேட்டைதான் அது.

இதிலுள்ள வினோதமான விளையாட்டு புன்னகையைக் கூட்டுகிறது. ஆழத்தில் வறட்சி.

முத்துராசாவின் கவிதைகளின் வெளித்தெரியாத கோபத்திலும் எள்ளலிலும் சுயம்புலிங்கம் இருக்கிறார். தெறிப்பாடலில் என்.டி.ராஜ்குமாரும் கூத்துப்பாடலில் வெய்யிலும் தலைகாட்டுகின்றனர். இத்தனை இனிய சுகந்த கதம்பத்தையும் மீறி முத்துராசா தன் தனித்துவமான மண் பொம்மையின் அடவுகளை கவிதைக்குள் நிகழ்த்துகிறார்.

முகுந்த் நாகராஜனின் பூ விற்றவர்கள் என்றொரு கவிதை. அதை அரசியல் கவிதை என்று சொன்னால் ஆசான் மார்க்சின் கண் சந்தேகக்கண் ஆகிவிடும். தந்தை பெரியார் தன் கைத்தடியை தூக்கி விடுவார். மாவோ நம்மை ஓரக்கண்ணால் பார்த்துத் தன் துப்பாக்கியைத் துடைத்துச் சரி செய்வார். ஏனெனில் அதில் அரசியல் அவ்வளவு நுண்மையாக ஒளிந்திருக்கிறது.

பூ விற்றவர்களில் ஒருத்தி

ரயில் விட்டு இறங்கி

கூட்டத்தில் நடந்தபோது

இரு புறமும் விதவிதமாகக்

கூவிப் பூ விற்ற குரல்களில் ஒன்று

‘எவ்வளோ அழகா இருக்கு பாரும்மா மல்லி’

என்று சொல்லிக் கொண்டிருந்தது அடிக்கடி;

வியாபாரியின் குரல் மாதிரியே இல்லை.

முத்துராசா ஒரு சுவாரசியமான கவிஞன் என்று நான் சொல்வதற்குக் காரணம் அவரின் பெரும்பாலான கவிதைகளில் கதைகூறும் தன்மை இருந்து கொண்டே இருக்கிறது. அவரிடம் ஒரு கதை இருக்கிறது. அதைச் சொல்வதற்குத் தான் கவிதையே நிகழ்த்தப்படுகிறது. அந்த கம்மாக்காரனின் மொழிதல் கவிதைக்கு உறைப்பு சேர்க்கிறது.

செந்தட்டி

எறும்புகள் தின்னும்

பக்கோடா போன்றுள்ள

எங்கள் தொல்மலையை

ராஜாங்க அதிகாரிகள்

விஞ்ஞானிகள்

கோப்புகளின் சூத்திரங்களை ஓதி

துருவுகையில்

சோலைக்காட்டின் மதுவிருந்தில்

பாட்டில்கள் நொறுக்கி

குழம்பியிருந்த இளந்தாரி நாங்கள்.

மூத்தோர்களையும்

கால்நடைகளையும்

மின்சார முனையால் விரட்டினர்.

தெய்வ மூதாயின் மரவுடலில்

கரிமருந்து திரிகளை

மாலையாகச் சுற்றினர்.

புல்லூத்து

பறவைகள்

பாலூட்டிகள்

பூக்கள்

விலங்குகள் அதிர்ந்து

ஒன்றையொன்று அணைத்தன.

ப்ளக் பாய்ண்ட்டுகளில்

குடியேறும்

குளவிகளாக்கப்பட்ட எங்களை

மலையின்

அரிய அரிய பட்டாம்பூச்சிகள்

வர்ணங்கள் வலிக்கத் தூக்கின

முழிப்பின்றி கிடந்தோம்.

அழிப்பதற்கென்றே வடிவாய்

உருவாக்கப்பட்ட இயந்திரங்கள்

மலையுடன் முட்டுகையில்

நாட்டார் பாட்டுகளைப் பிறழாது பாடும்

மலைக்குற்றமிழைக்காத

சிறுமியொருத்தி

இயந்திரங்களின் தோலில்

செந்தட்டியை அரக்கினாள்.

மலையை பக்கோடா என்று சொல்லி ஆரம்பிக்கும் போதே குழந்தைமை ததும்பி விடுகிறது. மூதாதையர்களும் கால்நடைகளும் மருண்டு ஓடுகிறார்கள். பறவைகளும் விலங்குகளும் ஒன்றையொன்று அணைத்துக் கொள்கின்றன. இளந்தாரிகள் ப்ளக் பாயிண்டுகளில் குளவிகளாய் குடியேறும் நுட்பமான இச்சித்திரம் கவிதையை இன்னும் மேலேற்றுகிறது. இயந்திரத்தோலில் செந்தட்டியைத் தேய்க்கும் சிறுமியின் எதிர்ப்பும் அதற்குள் இருக்கும் அறியாமையின் குழந்தைமையும் இக்கவிதையை இன்னும் ஒளிரச் செய்கிறது.

நேரடியான அரசியல் கருத்துகள் கவிதைகள் அல்ல. அரசியல் கருத்துகளை செய்தித்தாளில் வாசித்துவிடலாம் எனும் போது கவிதை நூலுக்கான முக்கியத்துவம் தான் என்ன? உடனே நமது முஷ்டிகள் முறுக்கிக் கொள்கின்றன. “கவிதையில் அரசியல்” ஏன் கூடாது என்று கேட்க ஆரம்பித்துவிடுகிறோம்.

வாழ்வு தான் கலை எனும்போது வாழ்வில் எவ்வளவு அரசியல் இடையீடுகள் உள்ளதோ அவ்வளவு அரசியல் இடையீடுகள் கலையிலும் வரும். ஆனால் பாடுபொருள் கவிதை எனும் வடிவத்தில் வருவதால் அங்கே பாடுபொருளின் இடத்தை

கலை வடிவத்திற்கும் பிட்டுத்தர வேண்டி இருக்கிறது. இப்படி விளக்கலாம். அரசியல் சினிமாவுக்கும் அரசியல் மேடைப்பேச்சிற்கும் இடையே எவ்வளவு வித்தியாசம் உள்ளன.?

வெட்டுப்பட்ட புளிய மரம்

தலையின்றி கை கால்களின்றி

இறைச்சி கடையில்

முண்டமாகி கிடக்கும்

கறிவெட்டும் கட்டை

முன்பு புளியமரமாக

தழைத்திருந்தது

வெள்ளாட்டை வைத்து

வெட்டும் போது

கட்டையிலிருந்து சடச்சடவென

புளியம்பழங்கள்

உதிர்ந்தன

அடுத்தடுத்து வெட்டுகையில்

கூடுகள்

கொக்கு முட்டைகள்

விழுந்தன

ஒருகட்டத்தில்

தூளியாடிய சிறுவர்களும்

குதித்தனர்

ஞாயிறு காலையின் கூட்டத்தில்

ஒவ்வொரு வெட்டுக்கும்

எல்லாமும் சேர்ந்து

கிளைகளை உலுப்பின

கடுப்பான கடைக்காரர்

உதிர்ந்ததை

விழுந்ததை

குதித்ததை

மொத்தமாக வெட்டி

கறிகளோடு கலந்து கைமாற்றிவிட்டு கட்டையைத் தூக்கி வீதியில் வீசினார்

வாசலிலேயே காத்துக்கிடந்த

ஆணியடி வாங்கிய முனிகள்

வெட்டுக்காயங்களோடு வந்து விழுந்த

புளியமரத்தை தாங்கிப் பிடித்து

கூட்டிச் சென்றன.

எந்த நாய்களும் குரைக்கவில்லை.

இப்போது கறிக்கடை முற்றத்தில் இருக்கும் வெட்டுக்கட்டை இதற்கு முன் அதே இடத்தில் நின்றிருந்த புளியமரம். கட்டையில் கிடாய்த்தலையை வைத்து வெட்டுகிறான் கடைக்காரன். புளியம்பழமும் கொக்கு முட்டைகளும் உதிர்ந்து விழுகின்றன. அங்கிருந்து முன்பு தூளியாடிய சிறுவர்களும் குதிக்கையில் நமக்கு தூக்கி வாரிப்போட அங்கே கவிதை நிகழத் துவங்கிவிடுகிறது. அது உச்சமடையும் இடம், தூக்கி எறியப்பட்டு வெட்டுக் காயங்களோடு வந்து விழுந்த மரத்தை ஆணியடி வாங்கிய முனிகள் தாங்கிப் பிடித்துக் கூட்டிச் செல்வது தான்.

இக்கவிதையைப் புரிந்து கொள்ள ஒரு சிறிய விசயம் அறிந்திருக்க வேண்டும். அதில் தான் இந்தக் கவிதையே உறைந்திருக்கிறது. யாரை முனிப்பேய் பிடித்து ஆட்டுகிறதோ அவருடைய தலைமுடி நான்கைப் பறித்து ஊர்ப்புளியமரத்தில் வைத்து ஆணி அடித்துவிட்டு வருவார்கள். இது முனி பிடித்தவர்களுக்குச் செய்யும் ஒரு ஊர்ச்சடங்கு.

இச்சடங்கு வந்து கவிதைக்குள் அமர்கையில் ஆணியடிக்கப்பட்ட முனியன் புளியமரமே நம்முன் வந்துவிடுகிறது. ஒரு நுண்மையான விஷயத்தை தொடுவதன் மூலம் ஒரு பெரும் காட்சியே நம் முன் எழுகிறது. இந்தப்புள்ளியில் கவிதை பலவாறாக கிளைவிட்டுப் பிரிகிறது. அதன் ஆழம் அப்படிக் கூடுகிறது.

இக்கவிதை ஒரு நாட்டார்க்கூறு கொண்ட தன்மையில் இருந்து கொண்டு நவீன சூழலியல் அரசியலைப் பேசுவது தன்னளவில் ஒரு சுவராசியமான கலப்பு. அந்த அரசியல் குரல் மிக சூசகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதால் இக்கவிதை இன்னும் மேலேழுகிறது. ஒரே கருத்தியல் தான் என்றாலும் என்.டி.ராஜ் குமாரின் கவிதையிலிருந்து முத்துராசாவின் கவிதை எங்கே விலகிச் செல்கிறது என்பதைக் காணலாம். என்.டி.ஆரின் ஒரு கவிதை.

பண்டுபண்டொரு காலமிருந்தது

சின்னச்செடியைப் பறிக்கமுயன்றால்கூட

கதிர்கம்பெடுத்து அடிக்க வருவாளாம் காட்டுக்கிழவி

பட்சி பறவைகள் படுக்க மடிகொடுத்து நிற்கும் மரம்

அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கும் கருடக்கொடி

விஷம் முறிக்க வளரும் வேர் பறிக்க மரம் செடி கொடிகளிடம்

உத்தரவு கேட்டு நிற்பான் மூப்பன்

கொடுங்காற்றாய் வரும் மந்திரமூர்த்தி

ஒரு வேர் அழுதால்

ஐந்து மரம் செடி கொடிகளை நட்டுவைக்கச் சொல்லி

பயமுறுத்திச் செல்வான்

புராதன மக்களின் தெய்வங்கள்

மரம் செடி கொடிகளாய் வளர்வதுண்டு

எந்தக் கிளை அல்லது கொடி சாபமிட்டதோ

மலைகளைச் சுரண்டித் தின்னும் மானங்கெட்ட ராச்சியத்தில்

காய்ந்த சுள்ளிகளாய் நீண்டு குத்துகிறது சூரியக் கம்புகள்.

இக்கவிதையின் நேரடித்தன்மை வெளிப்படையான குரல் முத்துராசாவின் கவிதையில் இல்லை. என்.டி.ஆரின் அரசியலையே பேசும்போதிலும் தன் வெளிப்பாட்டை சூசகமான முறையில் முன்வைக்கிறது. அதன் மூலம் நவீனக் கவிதைக்கான கூறுகளை நிரப்பிச் செல்கிறது. நிலம் மற்றும் அரசியல் சார்ந்த கவிதைகளில் கவிஞர் முத்துராசாவின் கவிதைகள் முக்கியத்துவம் பெறுவது இப்படித்தான்.

முத்துவின் கவிதைகளில் எறும்புகள் இரைப்பையை மொய்க்கின்றன. கிடாய்க்குட்டி கடலை மிட்டாய் தின்கிறது. இவருக்கு மட்டும் பாறைகள் மண்டை வெல்லம். மெட்டுக்கு பொறுக்காத கருப்பு தெருவிற்குள் விசிலை இறக்குகிறார். கொத்தனும் சித்தாலும் ஒரு ஊசி கூட தப்பாமல் வாழ்கிறார்கள். ஊர் திரும்பிய அம்மாச்சி கதிரடிக்கும் இயந்திரங்களை ரத்தக்காவு வாங்குகிறாள். உடுக்கையாடிகளுக்கும் கூனிச்சிகளுக்கும் இயக்கி துணை இருக்கிறாள். கவிஞர் முத்துராசா, அரிசியில் பெயர் எழுதும் நண்பர் எனக்கும் இருக்கிறார்.

என் வயதிருக்கும் முத்துவிற்கு என் வயதில்லை. கவிதைக்குள் அவருக்கு என் அப்புச்சியின் வயது. புறப்பட்டாயிற்றா கிழவா?

உன் வேட்டி முடிச்சுக்குள்

இன்னும் ஒரு கை மண்ணைச் சேர்த்து அள்ளிப்போடு. அது உனது மண் தான். நீ ஆட முடியாத எல்லா முற்றத்திலும் நான் ஆடிக் கொண்டிருக்கிறேன். வா.

வந்து ஆண்டைக்கெதிரான வசவுப் பாடலுக்கு உன் பங்கு

டெசிபலை ஏத்து.

மனோஜ் பாலசுப்பிரமணியம்

மனோஜ் பாலசுப்பிரமணியன். ஊர் தேனி. பொறியியல் பணி. ஆர்வம் - இலக்கிய வாசகர். மதம், வரலாறு சார்ந்தவற்றில் ஆர்வமும் தேடலும் கொண்டவர்

1 Comment

  1. நன்று. உங்களுடைய விமர்சனம் எனக்கு பல நுட்பத்தை வழங்கி இருக்கிறது. குறிப்பாக என்.டி.யை வைத்து வெளிப்படை முத்து கவிதையின் மறைமுகப் அல்லது ஆழம்.

உரையாடலுக்கு

Your email address will not be published.