/

ஒரு சின்னவேலைக்குப் போ: இசை

நாட்படு தேறல்- 4

வாயிலோயே!  வாயிலோயே!

வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்,  தாம்

உள்ளியது முடிக்கும் உரனுடை யுள்ளத்து

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப்

பரிசிலர்க்கு  அடையா வாயிலோயே!

கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி

தன் அறியலன் கொல்?  என் அறியலன் கொல்?

அறிவும் புகழுமுடையோர் மாய்ந்தென

வறுந்தலை உலகமுன் அன்றே அதனாற்

காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை

மரங்கொல் தச்சன்  கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.

அதியமான்நெடுமானஞ்சி பரிசில் நீட்டிய போது ஒளவையார் பாடியது.

காவலோனே! காவலோனே! வள்ளல்களின் செவியில் ஒளிமிக்க சொற்களை விதைத்து, தாம் நினைத்ததை முடிக்கும் வலிமைமிக்க நெஞ்சத்தோடு,  பரிசுக்கு வருந்தி நிற்கும் வாழ்க்கையை உடையோர்க்கு வாயிலை அடையாத காவலோனே! விரைந்து செல்லும் குதிரைகளையுடைய நெடுமான் அஞ்சி தன்னை அறியாதவனா? அல்லது என்னைத்தான் அறியாதவனா? அறிவும் புகழும் உடையோர் வறுமையில் மடிந்துவிடும் படியான பாழ்பட்ட உலகமல்ல இது. எனவே காவினோம் எம் கருவிகளை! கட்டினோம் எம் பொருட்களை!  மரவேலைகளில் தேர்ந்த தச்சனின் மக்கள் கையிலே மழுவைத் தூக்கிக் கொண்டு காட்டிற்குள் போனால் அவர்கள் பிழைத்துக் கொள்ள மாடார்களா என்ன? யாமும் கிளம்புகிறோம் அவ்வாறே.  எத்திசை செலினும் அத்திசைச் சோறே!

 அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி அளித்த கதை பிரசித்தமானது. ஆனால் அதியனும் அவ்வையும் சண்டையிட்டுக்கொண்ட கதை அவ்வளவு பிரசித்தி அல்ல. இந்தப்பாடலுக்கு ஒரு பின் கதை சொல்லப்படுகிறது. அதியமான் அவ்வையை நெடுநாள் தன்னோடு தங்கவைக்கும் நோக்கத்தோடு பரிசில் அளிக்க காலம் தாழ்த்துகிறான். இதை அறியாத அவ்வை சினம் கொண்டு பாடியது இப்பாடல் என்கிறது அக்கதை. கதை உண்மையா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் மனிதமனம் விசித்திரமானது என்பது ஒரு பொதுவான உண்மை. அதுவும் வள்ளல்களின் மனதில் நம்மை விட குழப்பங்கள் அதிகமாக இருக்குமோ? என்று நான் சந்தேகிக்கிறேன். ஒருநாள் ஆயுளை நீட்டிக்க நெல்லிக்கனி ஈந்த மனம்,  இன்னொரு நாள் உயிரைக்கொல்லும் சொற்களை வீசியெறிய எல்லா வாய்ப்புகளும் உண்டு. எனவே இருவருக்கும் சண்டை என்பதோடு நாம் நின்று கொள்வோம்.

சங்க இலக்கியம் பசியைப் பிணி என்கிறது. அதைப் போக்குபவனை மருத்துவன் என்கிறது

“பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே!” 

என்று ஒரு பாணன் கேட்பதாகச் சொல்கிறது புறநானூறு. 

மனிதன் பிறந்த காலந்தொட்டு அவனது முதல்துயரமாக பசி அவன் கூடவே வருகிறது. உணவு அத்யாவசியத் தேவையாக இருக்கிறது. அது அத்யாவசியத் தேவையாக இருப்பதாலேயே அடிப்படை உரிமையாகிவிடுகிறது.  அவ்வாறே மனிதனின் தன்மானத்தோடு கலந்துவிட்டது.  இப்படியாக பசி அநீதிகளில் தலையாய இடத்தை பெற்றுவிட்டது.  எல்லா உயிரும் ஏதோ ஒரு விதத்தில் பசியை அறியும். ஆனால் வறுமையில் வயிறு எரிகையில் நெஞ்சமும் சேர்ந்தே எரிகிறது. “தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்கிற கோபாவேசமும், “ இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான்” என்கிற வெஞ்சாபமும் இங்கிருந்துதான் கிளம்பி வருகிறது.

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா  தது.

என்கிறது குறள். வறுமையைக் காட்டலும் கொடியதென்று உலகில் எதுவுமே இல்லை  என்கிறார் அய்யன். பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் என்பது அனுபவ மொழி. வறுமைக்கேடு தனியே வருவதில்லை. அது அத்தனை கேடுகளையும் இழுத்துக்கொண்டு வருகிறது. அதன் முன் தாயும் சேயும் வேறு வேறுதான். பசிக்கு முன் நம் நம்பிக்கை, தைரியம், கொள்கை, கோட்பாடு, அன்பு , கருணை என யாவும் தலைகீழாக புரண்டு விடுகிறது.   பசியின் முன் மனிதன் வெறும் மிருகம்.

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது

என்கிறது  இன்னொரு குறள். 

நெருப்புள் கூட உறங்கிவிடலாம்.  வறுமையில் உழல்பவன் ஒரு கணம் கூட நிம்மதியாகத் தூங்கி விட முடியாது என்பது பொருள்.”

“யாதொன்றும் கண்பாடு அரிது” என்கிற வரிக்குள் ” ஐயோ! ” என்கிற  அலறல் கேட்கிறது.

வறுமை குறித்த தனிப்பாடல் ஒன்று எனக்கு மிகவும் பிடித்தது.  கொடும் வறுமையிலும் அதனோடு விளையாடிப் பார்க்கிற குணம் இந்தக் கவிதையின் சிறப்பு.  வறுமையை நேர்நோக்கி ஒரு சின்னக்கேலியை வீசுகிறது கவிதை. கடைசி வரியில் வெளிப்படும் திமிருக்காக எவ்வளவோ முறைகள் இந்த வரியைச் சொல்லி சொல்லிப் பார்த்திருக்கிறேன். ஏதோ ஒரு பூர்வஜென்மத்து பகை முடிப்பதுபோல அப்போது அவ்வளவு மகிழ்ச்சி பெருகி வரும்.  ஏறக்குறைய பனிரெண்டு நூற்றாண்டுப் பகைமுடிப்பு இது.

நீளத்திரிந்துழன்றாய் நீங்கா நிழல்போல
நாளைக் கிருப்பாயோ நல்குரவே – காளத்தி
நின்றைக்கே சென்றாக்கால் நீயெங்கே நானெங்கே
இன்றைக்கே சற்றே யிரு. 

( தனிப்பாடல்- மதுரகவிராயர்)

எல்லோருக்கும் பசிப்பது போலே கவிஞனுக்கும் பசிக்கிறது. பசித்தவர்கள் உழைத்தால்  உழைப்பு செல்வமாக மாறும். செல்வம் பசியைப் போக்கும். கவிஞன் உழைத்தால் அது செல்வமாக மாறுவதில்லை. கவிஞன் கவிதைக்கு உழைத்துவிட்டு உணவிற்கும் உழைக்க வேண்டியுள்ளது. ஆகவே கவிகளுக்கு கடமை உணர்வின் மீது இயல்பாகவே ஒரு வெறுப்பு கவிழ்ந்துவிடுகிறது. பாரதியிடம் இந்த வெறுப்பை வெளிப்படையாகக் காணலாம்.

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல் – உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே, இம்மூன்றுஞ் செய்.

                                               (பாரதியார்)

வீட்டை உமை மைந்தன் பார்த்துக்கொள்வான்.  சிந்தையே! நீ சஞ்சலமின்றி கவித்தொழில் புரி! என்கிறான்.  “நமக்குத் தொழில் கவிதை” என்று சொல்வதற்கே எவ்வளவு  பெரிய நெஞ்சுரம் வேண்டும்?  அவர் இமைப்பொழுதும் சோராதிருந்து உழைக்கத் தயாராக உள்ளார் .ஆனால் அத்தனை உழைப்பும் கவித்தொழிலின் நிமித்தம்தான்.

மடமை, சிறுமை, துன்பம், பொய்,

வருத்தம், நோவு.மற்றிவை போல

கடமை நினைவுந் தொலைந்திங்கு

களியுற் என்றும் வாழ்குவமே

என்று கடமையைத் துறந்து களியுவகையில் திளைக்க விரும்புகிறது பாரதியின் மனம்.

அவரின் இன்னொரு கவிதை…  அதில்  ஸ்ரீதேவியை  தனக்கு கையாளாக நிற்க வைக்கிறார்.  செல்வத்தை கவிதைக்கு சேவகம் செய்யப் பணிக்கிறார்

செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி

செந்தாமரையிற் சேர்ந்திருப்பாள்

கையாள் என நின்றடியேன்

செய்தொழில்கள் யாவும் கை கலந்து செய்வாள்

புகழ் சேர் வாணியும் என்னுள்ளே நின்று

தீங்கவிதை பெய்வாள்

சமீபத்தில்  ப்ராட்ஸ்கியின் நோபல் பரிசு உரையை வாசிக்க நேர்ந்தது. ஒரு கவியாக இருப்பதில் பெருமை கொள்ள வைக்கும் உரை அது.   சமூகத்தில் கவிதையின் இடத்தைத் துல்லியமாக  முன் வைத்துப் பேசுகிறது அவ்வுரை. கவிதை சமூக முன்னேற்றத்தின் விளைபொருள் அல்ல. மாறாக கவிதைச் செயல்பாட்டின் விளைபொருள் தான் சமூகமுன்னேற்றம் என்கிறார் ப்ராட்ஸ்கி.  என்னால் சமூகம் முன்னேறுகிறது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை ஆனாலும்  ஆழ்ந்து யோசித்தால் அது உண்மை என்றுதான் தோன்றுகிறது. கவிஞனால் தான் மொழி வாழ்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது அவ்வுரை. ஆனால் கவிஞன் வாழ கொஞ்சம் சோறு வேண்டும்.  விருது வேண்டுமென்றால் விண்ணப்பம் அளி என்கிறார்கள்.  சோறு வேண்டுமென்றாலும் விண்ணப்பிக்க வேண்டுமா என்ன? 

கவிதை எழுதுவது ஒரு வேலை அல்ல என்றும், நீ  ஒரு சமூக ஒட்டுண்ணி’  என்றும் குற்றம் சாட்டி ப்ராட்ஸ்கிக்கு ஐந்தாண்டு கடும் உடல் உழைப்புத் தண்டனை வழங்குகிறது சோவியத் அரசு. கவிதை எழுதுவது ஒரு வேலைதான் என்று விசாரணை மன்றத்தில் வாதிடுகிறார் அவர்.   ஆனால் மன்றம் அதை ஏற்க மறுத்துவிடுகிறது. 

’விலங்கிலிருந்து மனிதன் வேறுபடுவது பேச்சால் என்றால்,  பேச்சின் உச்சமான வடிவம் இலக்கியம் என்றும் , இலக்கியத்தின் உச்ச வடிவம் கவிதை’ என்றும் சொல்கிறார் ப்ராட்ஸ்கி. இக்கூற்றின்படி பார்த்தால்  மனித உயிரின் உன்னத லட்சியமே கவிதைதான் என்றாகிறது. ஆனாலும் அதை எழுதிய கவிஞன் ” கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழீஇ” வாடையில் கிடந்து சாகவேண்டும் என்பது விதி.

யூமாவின் கவிதை ஒன்று.  பிரகடனம் போன்றது.  சோறு வேண்டும் என்று இறைஞ்சுவதற்குப் பதிலாக என் சோற்றுத்தட்டு வந்தாக வேண்டும் என்று எச்சரிக்கிறது.  ‘எனக்கு இருந்திருக்க வேண்டிய சோறு எங்கே?’ என்று கேட்கிறது

எச்சரிக்கை

என் பங்கு சோற்றை
நீங்களே ஒளித்து வைத்திருக்கிறீர்கள்
எனவே என் பசிக்கு
பொறுப்பாவது நீங்களேதான்
எனக்குண்டானதை விடுவிக்கச் சொன்னால்
உழைத்துப் பெறும்படி அறிவுரைக்கிறீர்கள்
உங்களுடையதை விட
நூறு மடங்கு அதிகமான என் உழைப்பு
உணவின் பொருட்டாய் அமையவில்லை
என்னைப் போன்றவர்களிடத்தில் நீங்கள்
ஒரு போதும் நியாயம் காட்டியதில்லை
அறியாத்தனங்களை
கண்டுகொள்ளாதிருப்பதற்கும்
ஒரு எல்லை உண்டு
செல்வந்தனாவதற்குரிய சூத்திரத்தை
உபதேசிக்காதீர்கள் தயவு செய்து
எனக்கு
கவிதை வசப்பட்டாக வேண்டும்
நான் நடக்கத் தரையிருக்கிறது
என்னுடைய காற்றிருக்கிறது
எழுத்திடையில் பசியெடுக்கும் போதுதான்
இருந்திருக்க வேண்டிய
என்னுடைய சோற்றைத் தேடுகிறேன்
நான் மீண்டும் கடவுளாகும்படி
ஒரு கவிதை கட்டாயப்படுத்துகிறது
நான் எழுதப் போகிறேன்
முடிந்த பின்
இந்தப் படகினுள்ளே பார்க்கும் போது
எச்சரிக்கை
என் சோற்றுத்தட்டு வந்திருக்க வேண்டும்

உங்களுக்கு ஒரு
சிறிய சலுகை தர முடியும்
கடற்கரை வெளிச்சம் மறைந்து
வெகுநேரம் கழிந்த பின்பே
படகினுள் பார்ப்பேன்

கவிஞன் ஒரு சோம்பேறி சோம்பேறி என்று திரும்பத் திரும்ப சொல்கிறது இச்சமூகம். சோம்பேறிகள்தான் கவிதை எழுத வருகிறார்கள் என்கிற எண்ணம் இலக்கிய உலகில் கூட உண்டு. அ.முத்துலிங்கத்தின் கட்டுரை ஒன்று கம்பன் என்கிற மகாகவியின் உழைப்பை வியந்து போற்றுகிறது. ‘ 10000 பாடல்களுக்கும் மேலேயுள்ள ராமாயணத்தை இயற்றியவர் . கையிலே ஓலையைப் பிடித்துக்கொண்டு இரும்பு எழுத்தாணியால் எழுதியிருப்பார். எத்தனை பாடல்களை திருத்தியிருப்பார். ஓலைகளில் திருத்தமுடியாது. ஆரம்பத்திலிருந்து புதிதாக எழுதவேண்டும். எத்தனை ஓலைகளை கிழித்துப் போட்டிருப்பார்.  அவருடைய மனித உழைப்பை யோசித்தபோது பிரமிக்கவைத்தது. ஒரு நாளைக்கு எத்தனை பாடல்களைப் படைத்திருப்பார். 20, 50, 100.  எத்தனை முறை திருத்தியிருப்பார்? அவருடைய கவிதைத் திறனிலும் பார்க்க உடல் உழைப்புதான் ஆச்சர்யபட வைக்கிறது’.

காலத்திலிருந்து கவிதை தப்பிவிடும் என்கிறார் பசுவய்யா.  கவிஞன் இறந்து அவனை மண் மூடிய பின்பும் அவன் எழுதிய கவிதை ஒன்று காலத்தில் நீந்தி நீந்தி முன் செல்கிறது.  ஒரு சங்கக்கவிதை இரண்டாயிரம் வருடங்கள் தமிழ் சமூகத்தோடு பயணித்து வருகிறது.  அதாவது 2000 வருடங்கள் நம் சமூகத்திற்காக அது உழைத்துக் கொட்டியுள்ளது.

மிஞ்சும் ஒரு கவிதை

என் கவிதையொன்று

கவ்வும் காலத்தின் வாயிலிருந்து தப்பித்துவிடும்

அது எந்தக் கவிதை என்பது இப்போது

எனக்குத் தெரியவில்லை என்றாலும்

ஒரு கவிதை

கவ்வும் காலத்தின் வாயிலிருந்து தப்பித்துவிடும்

அது காலத்தில் மிதந்து செல்லும் அழகை

என் மனக்கண்ணால் பார்க்கும்போது

துக்கம் பொங்குகிறது

அந்தக் கவிதையில்

அரிய செய்தி ஒன்று

ரகசியமாய்ப் புதைந்திருக்கும்

கற்றறிந்த மகான்கள்

இவ்வாறு இவ்வாறு என

எவ்வளவுதான் விரித்தாலும்

அவர்கள் கண்களுக்குத் தெரியாமல்

மறைந்து கிடக்கும் அது

எனினும் படிப்பை வெறுத்து

பள்ளியை வெறுத்து

ஊரை விட்டோடும் சிறுவனுக்கு

அந்தக் கவிதை புரிந்துவிடும்

மணம் முடிந்த தருணங்களில்

கண்கள் நிறையும் மணப்பெண்கள்

கண்களைத் துடைத்துக் கொள்ளும் முன்

அந்தக் கவிதையைப் படித்தால்

அவர்களுக்குப் புரிந்துவிடும்

மனைவியை முதுமையில் இழந்து 

வாடும் சோகத்துக்கு

பளிசென்று புரியும் அந்தக் கவிதை.

“அழகு உலகைக் காப்பற்றும்” என்பது தஸ்தயேவ்ஸ்கியின் கூற்று. எனில் எல்லா அழகுகளும் வந்தமரும் இடமான கவிதை , அழகின் அழகல்லவா?.  ப்ராட்ஸ்கி சொல்கிறார்… “ஒரு தனி நபரின் அழகியல் அனுபவம் எந்த அளவுக்கு அதிகம் செறிவானதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவனுடைய ரசனை உயர்வாகவும். அவனுடைய அறநெறியின் குவிமையம் கூர்மையாகவும் இருக்கும்”

“எல்லோருக்கும் ரொட்டித்துண்டு கிடைக்கும் வரை யாருக்கும் கேக் கிடையாது ” என்கிற மேற்கோளைக் கேட்டு நான் இளம் வயதில் கண்ணீர் சிந்தி இருக்கிறேன். கம்யூனிஸ்ட் மன்றங்களுக்கு செல்லத்துவஙகிய பொழுதில் ஒரு தோழரின் வாயிலிருந்து இப்பொன்மொழியைக் கேட்டேன்.   ஏங்கெல்ஸ், மார்க்ஸ் இருவரில் ஒருவர் இதைச் சொல்லியிருக்கக் கூடும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது கேட்டால் என் இடது சாரி நண்பர்கள் அப்படியொரு வசனமே இல்லை என்கிறார்கள். என்னைக் கட்சியில் தக்க வைத்துக்கொள்ள வேண்டி  அந்தத்தோழர் தானே உருவாக்கி அளித்த ஒரு சிறப்பான வசனமாக இது இருக்கலாம். இந்த வசனத்தின் படி அரசதிகாரம் கவிதையை கேக் என்கிற ஆடம்பரம் என்று சொல்லி நிராகரிக்கிறது.  ஜோசப் ப்ராட்ஸ்கியோ  கவிதையை ரொட்டித்துண்டு என்கிறார்.  ரொட்டித்துண்டு இன்றி சமூகம் இல்லை. 

இரண்டாயிரம் வருடங்கள் கழித்தும் கவிதை எழுதி உண்ண முடியாது என்கிற நிலைதான் தொடர்கிறது. அதன் சந்தை மதிப்பில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. இளம்கவியான வே.நி. சூர்யா சிறந்த கவிதைகள் சிலவற்றை எழுதிவிட்டான். கொஞ்சகாலம் முன்பு வரை அவனோடு உரையாடும் போதெல்லாம் ” ஒரு சின்ன வேலைக்குப் போ..” என்று வலியுறுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்தேன். சமீபத்தில்தான் அந்த உபதேசத்தை விட்டொழித்தேன். ஆனாலும் சூர்யா,  கும்பி எரிந்தால் குற்றம் நிகழும். குற்றம் நிகழ்ந்த மறுகணம் கூண்டில் ஏற்றப்படுவது நாமல்ல நம் கவிதைகள்தான்.  உன்னை உன் அண்டை வீட்டான் கூட அறிய மாட்டான்.  சொல்ல அவ்வளவு கூசினாலும்,  வேறு வழியின்றிச் சொல்கிறேன்.. ” நண்பா.. ஒரு சின்ன வேலைக்குப் போ!”

இரண்டாயிரம் வருடங்கள் நீளமுள்ள பறவை

பூமியைக் கடந்து செல்கிறது

அதன் அலகை சங்கக் கவி எழுதினான்

வாலை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். 

என்கிறது இளங்கோ கிருஷ்ணனின் கவிதை ஒன்று.  அலகில் பசி கொதித்தது. வாலிலும் கொதிக்துக் கொண்டிருக்கிறது.

“உன் நேர்மையையும், சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டினால் உன் எழுத்தோடு சம்பந்தப்படாத ஒரு வேலையை, இரவு நடனவிடுதியில் பியானோ வாசிப்பது போன்ற வேலையைச் செய்”  இது நோபல்பரிசு பெற்ற அமரிக்க எழுத்தாளர் வில்லியம் ஃபக்னரின் கூற்று. இதை அப்படியே தமிழ்ச்சூழலுக்கு நகர்த்தி வந்தால் கவிகளுக்கு டாஸ்மாக்கில் ‘பார்பாய்’ வேலையை சிபாரிசு செய்கிறார் ஃபக்னர். அதாவது நேர்மையையும், சுதந்திரத்தையும், கவிதையையும்  ‘பார்பாயை’ கொண்டு காப்பாற்று என்கிறார்.  ஜெயமோகனை முதன்முறையாக ஊட்டி காவிய முகாமில் சந்தித்தபோது “ என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். நான் “ பார்மசிஸ்டாக இருக்கிறேன்” என்று சொன்னேன். “கவிஞனாக இருக்கிறேன்.. பார்மசிஸ்டாக வேலை செய்கிறேன்… இப்படி சொல்லுங்க” என்றார். ஒன்றுக்கு இரண்டு மருத்துவமனைகளில் பார்மசிஸ்டாக பணியாற்றுகிறேன். மோசமான பணியாளரும் இல்லை. ஆனாலும் என்னால் என்னை ஒரு பார்மசிஸ்டாக உணரவே முடிந்ததில்லை. மருந்தாளுநர் சங்க பொதுக்குழுக்களில் எல்லோரும் “ மருந்தாளுநர் ஒற்றுமை ஓங்குக” என்று பெருங்குரலெடுத்து கூவுகையில் நான் வெறுமனே வாயை மட்டுமே அசைப்பேன். எனக்கு நன்றாகத் தெரியும், சத்தியமூர்த்திதான் இசையைக் கூனாமல், குறுகாமல் பார்த்துக்கொள்கிறான். ஆனாலும் எனக்கு அவனை அவ்வளவாகப் பிடிப்பதில்லை

ஒரு கவி கவியாக மட்டுமே இருக்கிற பொன்னுலகு அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே!

உதவியவை:

  1. காலச்சுவடில் என் எழுத்து –  ஆர்’சிவக்குமார் – காலச்சுவடு – ஜூன் – 2021
  2. கவிதையின் அரசியல் – ஜோசப் ப்ராட்ஸ்கி – தமிழில்: ஆர்.சிவகுமார் –  1988 ( ஜூலை- செப்டம்பர் இதழ்)
  3. அ.முத்துலிங்கம் கட்டுரைகள்-  நற்றிணைப் பதிப்பகம்
இசை

கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

நன்றி : தமிழ் விக்கி

1 Comment

  1. அற்புதமான உரை…சோற்றுக்கு உழைத்திருந்தால் கம்பன் எப்படி…இசை நீண்ட காலமாக உங்கள் வரிகளை வாசிக்கிறேன்..வாசிக்கும் போதெல்லாம் முழுமையாக யாசகம் கிடைத்த திருப்தி..இசை வாழ்க 💐

உரையாடலுக்கு

Your email address will not be published.