/

ரஞ்சகுமார் கதைகள் – போர்க்கால அவலத்தின் அழகியல்: ஜிஃப்ரி ஹாஸன்

1980 களில் ஏற்பட்ட ஈழ அரசியல் சூழலின் கொதிநிலையிலிருந்து உருவான தலைமுறைப் படைப்பாளிகளுள் மிகவும் கவனத்துக்குரியவர் ரஞ்சகுமார். ஒரு காலகட்ட ஈழச்சிறுகதை உலகின் இரட்டையர்களுள் ஒருவராகவும் பார்க்கப்பட்டவர். மற்றவர் உமா வரதராஜன். ஈழ இலக்கிய வெளியில் சொற்பமாகக் கதைகள் எழுதி தனக்கென மிகத் தனித்துவமான ஓர் இடத்தை தக்கவைத்துக்கொள்ள ரஞ்சகுமாரால் முடிந்திருக்கிறது. ஈழத்தில் மிக அதிகமாக எழுதிய சில படைப்பாளிகள் காலவௌ்ளத்தில் அள்ளுண்டு எந்த இடமுமின்றி மறைந்து போயுள்ளனர். ஈழ இலக்கிய வெளியில் நிலவும் புறக்கணிப்பு மனோபாவத்துக்கு அப்பால், ஈழ இலக்கியவெளியிலாவது ஒரு சுவட்டைப் பதிக்கத்தக்க ஒரு கதையைத்தானும் அவர்களால் எழுத முடியாமல் போனது துரதிஸ்டவசமானது. ரஞ்சகுமாரால் இதனை எப்படிச் சாதிக்க முடிந்தது என்ற கேள்விக்கு ஒரே பதில் அவரது மோகவாசல் சிறுகதைத் தொகுப்புத்தான்.

சிறுகதை வடிவத்துக்கு பொருந்தக்கூடிய கச்சிதமான பாத்திரவார்ப்புகள், மொழியமைதி, விவரண நுட்பம், சொல்தேர்வு, காட்சித் தரிசனங்கள் இவைதான் அவரை ஒரு குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளனாக ஒரு காலகட்ட ஈழச்சிறுகதையின் முதன்மை அடையாளமாக மாற்றுகிறது.

ரஞ்சகுமாரின் இன்னுமொரு இடம் அவருக்குப் பின் எழுத வந்த குறிப்பிடத்தக்க சில ஈழப்படைப்பாளிகள் மீது அவரது படைப்புகள் ஏற்படுத்திய தாக்கத்தின் மூலம் நிரூபனமாவது. ஷோபாசக்தி, ஓட்டமாவடி அறபாத் போன்றவர்களின் சில கதைகளிலேனும் அவரது நிழல் படியாமலில்லை. ரஞ்சகுமாரின் கோளறுபதிகம் கதையின் தேவன் பற்றிய பகுதியையும், பேய்கள் குறித்த பதட்டமான விவரணங்களையும் முன்மாதிரியாகக் கொண்டு ‘செய்தெடுக்கப்பட்ட’ சில கதைகள் ஈழத்தமிழ்ச் சிறுகதைவெளியில் உலவுகின்றன.

ரஞ்சகுமாரின் கதைகள் ஒவ்வொன்றும் நாவல்களாக விரித்தெடுக்கக்கூடிய கதையம்சத்தைக் கொண்டிருக்கின்றன. உண்மையில், அவர் நாவலுக்கான கதையையே வெட்டிச் சுருக்கிச் செப்பனிட்டுச் சிறுகதையாக தருகிறார். அதனால் சில விடுபடல்கள், எளிமையான தாவல்கள், கதை ஒரு சம்பவத்தில் மய்யங் கொள்ளாது சம்பவங்களின் கோர்வையாக இயக்கமுறல் போன்றன அவரது கதைகளின் குணரூபமாகின்றன.  

ரஞ்சகுமாரின் கதைகள் ஈழப்போரையும் அதன் மனிதர்களையும் மட்டுமன்றி தென்னிலங்கையில் நிகழ்ந்த ஜே.வி.பி. புரட்சியையும், அதற்கெதிரான அரச அடக்குமுறையையும், மனித அவலத்தையும் தொடுகின்றன. அந்த வாழ்வின் குறிப்பிடத்தக்க இலக்கிய சாட்சியமாக ஆகியிருக்கின்றன. கதைச்சூழலை, கதைக்களனை அவர் விபரிக்கும் விதமும், கதைமொழியும் அவரது கதைகளின் மற்றொரு உயிர்ப்பான பக்கமாகவுள்ளது.

கோசலை ரஞ்சகுமாரின் மாஸ்டர் கதை. ஈழத்தமிழ்ச் சிறுகதைவெளியில் மட்டுமல்ல மொத்தத் தமிழ்ச்சிறுகதைவெளியிலும் ஒரு சாதனைப் படைப்பு. அவரது ஏனைய சில கதைகளில் தெரியும் நெருடல்களை எல்லாம் இந்தக் கதையில் கடந்து விடுகிறார். பலவீனமான பக்கங்கள் மிகவும் குறைந்தது.

இயக்கத்தில் இணைந்து கொண்ட தன் மகன் குறித்த ஒரு தாய்மையின் ஏக்கமும், உணர்வும், காத்திருப்பும் தான் கதை. அவளது புத்திரர்கள் இருவர். மூத்தவன் சீலன். இளையவன் குலம். சீலன் மிகவும் அமைதியானவன். தாயை மிகவும் நேசிப்பவன். ஒத்தாசைகள் புரிபவன். இரைந்து கதைக்காதவன். கம்பீரமான ஆனால் புல்லுக்கும் நோகாத நடை. புனர்பூச நட்சத்திரம். ‘பெரிய காரியங்களைச் சாதிக்கப்’ பிறந்தவன். குலம் அப்படியே சீலனுக்கு நேரெதிரானவன். முரட்டுச் சுபாவம் கொண்டவன். அத்த நட்சத்திரம். நன்றாகப் படிக்காதவன். ஆனால் புத்திசாலி.

ஒருநாள் சீலன் அம்மாவிடம் சொல்லிக் கொள்ளாமலே இயக்கத்தில் இணைந்து கொள்கிறான். அந்தக் காலம் அப்படியானதுதான். ஈழத்தில் ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் இளைஞர்கள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் காணாமல் போய்கொண்டிருந்த காலம் அது. வீடுகள் சாக்கோலம் பூண்ட காலம். சீலனின் அம்மா தன் மகனை இழந்து அரற்றுகிறாள். ”சீலன் எங்கை?” தாய்மையின் கதறலையும், அவளது உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் கதை உச்சமாக வெளிப்படுத்துகிறது.

குலம் ஒரு மெக்கானிக். அவனும் கடைக்குச் சென்று விட்டால் வீடு வருவது எப்போதாவதுதான். இதனால் தாய் தன் இரு புதல்வர்களையும் காத்திருக்கத் தொடங்குகிறாள். விதவையான அவள் பெண் தலைவியாக குடும்பத்தைப் பராமரிப்பவள். சீலனின் பிரிவால் உடலாலும், மனதாலும் உடைந்து வலுவிழக்கிறாள்.  அவளது சின்ன மகள் அவளுக்கு ஒத்தாசையாகிறாள். ஒருநாள் குலம் ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் நண்பர்களால் வீட்டுக்கு கொண்டு வரப்படுகிறான். அப்போதுதான் குலமும் இயக்கத்தில் இணைந்திருந்தான் என்பதை அவள் அறிந்துகொள்கிறாள். தன் இரு புதல்வர்களும் காடேகி போர் புரிந்ததை அவள் உணரும் தருணம் அது. அவள் கோசலையாகும் தருணமும் கூட. அவளது காத்திருப்பு அர்த்தமற்றுக் கரைகிறது. தன் பிள்ளைகளைப் பறிகொடுத்த ஈழத்தாய்மாரின் மெய்யுருவாக அந்தத் தாயை வலிமையாகப் பிண்ணிக் காட்டுகிறது கதை. போர் பெண் தலைமை தாங்கிய தமிழ்க் குடும்பங்களின் சமூகநிலையை எப்படிச் சூறையாடிச் சிதைத்தது என்பதும் கதையின் ஒரு உபபரிமாணமாக வெளிப்படுகிறது. ஈழப் போர்ச் சிறுகதைகளில் இதற்கு நிகரான கதை எது? என்னிடம் பதில் இல்லை. சிலவேளை அது இன்னும் எழுதப்படாமல் இருக்கலாம். 

சுருக்கும் ஊஞ்சலும் கூட நாவலுக்கான தன்மையைக் கொண்ட கதைதான். ஒரு தேநீர்க் கடைகாரப் பையன் பெரிதாக வாடிக்கையாளர்கள் யாருமற்ற கனமான வெயில் நேரப்பொழுதில் கடைக்குள் தன் நேரத்தைச் சலிப்புடன் கழிக்கிறான். அவன் பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. அவன் கடைச் சுற்றுவட்டாரத்தில் காணும் காட்சிகள், இருந்தாற் போல் கடைக்கு வரும் யாரேனும் வாடிக்கையாளர்கள் பற்றிய கண்ணோட்டங்கள், வெறுமை சூழ்ந்த மனதின் அலைவுகள் தான் கதையை நிறைத்திருக்கின்றன. ஆனால் எது கதை என்றால் எதுவும் இல்லை என்ற தோற்றப்பாடுதான் தெரிகிறது. கதைசொல்லியாகிய ஆசிரியனே கதை முழுவதும் நிறைந்து நிற்கிறான். அவன் மட்டுமே கதாபாத்திரம் போல் துலக்கமாகிறான். மற்ற எல்லோரும் அவன் வாயிலாக கதையில் சில கணங்கள் வந்து செல்கின்றனர். கனத்த வெயிலில் ஜப்பானியக் குடைபிடித்து வரும் அழகிய பெண்ணுக்கு மட்டுமே ஒரு முகம் வழங்கப்பட்டிருக்கிறது. கதைசொல்லியின் உலகத்துக்கு, அவனது எளிய அரசியல் கண்ணோட்டத்துக்கு அப்பால் கதையில் வேறு தரிசனங்கள் எதுவும் இல்லை. கதை உண்மையில் தலைப்பில் வரும் ஊஞ்சலைப் போல அங்கும் இங்கும் அசைந்தபடி அங்கேயே நிற்கிறது. அது நம்மை எங்குமே அழைத்துச் செல்வதில்லை. ஆனால் ஆகாயத்திலே பறந்த பரவசத்தை ஊஞ்சல் நமக்குத் தருவதைப் போல மனம் ஒரு மகத்தான கதையை வாசித்த திருப்தியுடன் அமைதிகொள்கிறது. இதுதான் ரஞ்சகுமாரின் இடமா?

கபறக்கொயாக்கள் நகர்ப்புற-சிங்கள சமூக, வணிக சூழலை கதைக்களனாகக் கொண்ட கதை. சிங்கள-நகர்ப்புற சமூகப் பௌதீகச் சூழலின் அழகிய சித்திரமாக கதை விரிந்து செல்கிறது. ஒரு சாண் வயிற்றுக்கும் ஒரு முழத் துணிக்கும் ஆலாய்ப் பறக்கிற சனங்கள், அன்றாடத் தேவைக்காக இயங்கும் சாமான்ய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுழலும் ஊரின் இடையே அவ்வப்போது தலை காட்டும் கபறக்கொயாக்கள். இதுவும் ஒரு சம்பவத்தில் மய்யம் கொள்ளாமல் சில சம்பவங்களைக் கொண்டு பிண்ணப்பட்ட கதையே. கதை ஓரிடத்தில் சுருட்டுத் தொழிலாளர்களின் வாழ்க்கையில், அவர்களின் தொழில்சார் ஒழுங்கில் மய்யம் கொள்ளும் எனும் எண்ணம் தோன்றுகிறது. ஆனால் அந்தச் சித்திரம் சில வரிகளுடன் முடிந்து விடுகிறது. ஆனால் கதை பின்னர் தென்னிலங்கையில் நடந்த ஜே.வி.பி. புரட்சியை மானுடத் தன்மையற்று இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிய இலங்கை அரச படையின் செயற்பாடுகள் மீது அழுத்தம் கொள்கிறது. கதைசொல்லி தொழிலுக்கிருக்கும் கடைத்தெருவில் ஒரு அறையில் பாடும் திறனுள்ள ஒரு பெண்ணும் குடியிருக்கிறாள். அவ்வப்போது பாடவும் செய்வாள். அவளைத் தேடி சில இளைஞர்கள் வருவதும் போவதுமாக உள்ளனர். அது ஜேவிபியினரின் வகுப்பு நடைபெறும் தளம் என்பது பின்னர் தெரிய வருகிறது. பின்னர் கபறக்கொயாக்களின் வெறியாட்டம். அவை வாலைச் சுழற்றி அடித்து அந்தப் பெண்ணின் சதைகளைப் புசிக்கின்றன. இந்த இடத்தில் வக்கிரமும், வன்மமும் உக்கிரமாகப் பதிவாகின்றன. எல்லாமே அப்பாவிச் சனங்கள்தான் என்கிறார்.

சனங்கள்!

காமினி, அப்புஹாமி, ஆரியவதி ஆமினே, சுநீதா முதலாளி, அருள், சாளி, சனங்கள்!

ஒரு சாண் வயிற்றுக்கு ஆலாய்ப் பறக்கிற சனங்கள்!  என முடிகிறது கதை. ஜேவிபியினரை ஒழித்தல் என்ற பெயரில் அரச படையால் நிகழ்த்தப்பட்ட படுகொலைப் பொறிக்குள் அப்பாவிச் சனங்களே அநேகமாக சிக்கினர் என்ற உண்மையை பறைந்து சொல்கிறது கதை. நானறிந்த வரை ஜேவிபி புரட்சியை, அதன் வெம்மையை, அரசு புரிந்த மானுட இழிவை தமிழில் செழுமையாகப் பேசுகின்ற கதை இதுதான்.

மோகவாசல் தொகுப்புக்குப் பின் எழுதப்பட்ட கதை யக்ஷன். கவித்துவத் தரிசனங்களாலும், அழகியல் விவரணங்களாலும் நிரம்பித் தழும்பும் கதை. சிங்கள சமூக சூழலிலும், ஓரளவு தமிழ்ச் சூழலிலும் நிகழும் சில சம்பவங்களை கோர்வையாக விபரிக்கிறது கதை. தமிழனான கதைசொல்லி தலைநகரத்து சூழலில் சிங்களத் தொழிலாளர்களோடு ஒரு அறையில் சகஜீவியாக அந்நியோன்யமாக வாழ்வதை கதை சித்தரிக்கிறது. கதைசொல்லி குடியிருக்கும் சிங்கள வீட்டை அண்டியதாக அமைந்திருக்கும் விகாரையிலுள்ள பிக்குகளின் அந்தரங்கத் தவிப்பையும் கதை இலேசாகத் தொடுகிறது. பின்னர் அந்த சகவாழ்வு குழப்பிவிடப்படுகிறது. சிங்கள-தமிழர் சகவாழ்வில் ஒரு வாள் வெட்டுப் போல இனவாதம் தன் பற்களைப் பதித்தது. போர் தொடங்குகிறது. மஹிந்த எனும் சிங்கள நண்பன் நாடு பறிபோகிறது என புலம்புகிறான். வன்மம் கொண்டு தமிழனான கதைசொல்லிக்கு ஒரு கட்டத்தில் ஓங்கி கன்னத்தில் அறையும் விடுகிறான்.

பின்னர் அங்கு ஒரு தமிழனாக வாழ முடியாத சூழல் தோன்றவே கதைசொல்லி தன் சொந்த வாழிடமான வடக்குக்குச் செல்கிறான். அங்கும் போர்க் கரங்கள் பிறாண்டுகின்றன. மீண்டும் தலைநகரத்துக்குத் திரும்புகிறான். அவன் தங்கிய அறையிலிருந்த ஓவியனான மஹிந்தவை அவர்கள் கொண்டு சென்றுவிட்டதாக அறிகிறான். அவனது ஓவியங்கள் மட்டும் அறையில் கிடக்கக் காண்கிறான். அவன் யாரால் கொண்டு செல்லப்பட்டான்? ஏன் கொண்டு செல்லப்பட்டான்? என்ற தகவல்கள் கதைக்குள் இல்லை. ஜேவிபி புரட்சியை மூர்க்கமாக ஒடுக்கிய இலங்கை அரச இராணுவத்தால் மட்டுமே அவன் கொண்டு செல்லப்பட்டு கொல்லப்படுவதற்கான சாத்தியம் உள்ளது. அப்படியெனில், மஹிந்த ஜேவிபியாளனாக இடையில் மாறி இருக்க வேண்டும். அதெல்லாம் கதைக்குள் இல்லை. ஆனால் கதைசொல்லி தலைநகரச் சூழலில் நிறையப் பிணங்களைக் காண்கிறான். அவையெல்லாம் ஜேவிபியினரை இலங்கை அரச படைகள் வேட்டையாடித் தீர்த்த எச்சங்களாகத் தெரிகின்றன. கபறக்கொயாக்கள் போன்றே ஜேவிபி புரட்சியின் பெயரால் நிகழ்த்தப்பட்ட மானுடத்தின் மீதான வன்மமும், அதன் இரத்தவாடையுமே இந்தக்கதைக்குள்ளும் வீசுகிறது.

அரசி வேறொரு தளத்தில் நிற்கும் கதை. இதுவும் நன்கு வெட்டிச் சுருக்கிச் செப்பனிடப்பட்ட ஒரு நாவல் போன்ற கதைதான். போருக்கு அப்பால் பேசும் கதை. அடித்தளத்திலிருந்து விறுவிறுவென மேலேறிய குடும்பமொன்றின் கதை. கதைசொல்லியின் அண்ணனையும், அண்ணியையும் மய்யமாக வைத்து கதை நகர்கிறது. சமூக நிலையிலும், பொருளாதார நிலையிலும் அடித்தட்டிலிருந்த அண்ணனுக்கு அண்ணி கழற்றிக் கொடுத்த தன் நகைகளை மூலதனமாகக் கொண்டு கடை திறந்து, அண்ணியின் ராசியும் அண்ணனுக்கு ஒத்துப்போக சமூகப் பொருளாதார அடுக்கமைவில் மேல் மட்டத்துக்குச் சென்றுவிடுகிறான். இந்த சடுதியான உயர்வுக்குப் பின் அவனை சுயநல நோக்கோடு கொண்டாடும் சராசரி மனிதர்களின் மனநிலையையும் கதை ஒரு புறம் பேசுகிறது. ஒருவன் நல்ல நிலைக்கு வந்ததும் அவனுடன் ஒருவித சுயநல உறவைப் பேணுவது நம்மத்தியில் ஒரு சாதாரண சமூக நிகழ்வுதான்.   அதன் மீதான சித்தரிப்பாக- எளிய பகடியாக சில வரிகளை எழுதுகிறார்-

சுமி வந்திருந்தாள். வேறும் பலர் வந்திருந்தனர். இவர்களெல்லாம் ஒரு காலத்தில் அண்ணாவைக் கண்டும் காணாமல் போனவர்கள்தான். இப்போதோவெனில், தமது சமூகத்தை அண்ணா காணாமல் விட்டுவிடுவாரோ என அச்சப்படுகிறார்கள். பெண்கள் அண்ணா பார்வையில் படும்படி நடமாடினர். ஒருத்தியோவெனில், கௌசிக்குட்டிக்கு முத்தம்கூடக் கொடுத்தாள். வல்லவன் வீட்டுப் பெண்ணல்லவா? ஆண்களெல்லாம் அண்ணாவைச் சூழ உட்கார்ந்து அரசியலும் விலைவாசியும் பேசினார்கள்”.

இந்த சமூக உளவியல் என்பது நமது கீழைச் சமூகத்தின் பண்பாக மட்டுமே நாம் கற்பனை செய்துவிட முடியாது. இதுவே ஒரு காலகட்டத்தின் மேலைச் சமூக உளவியலாகவும் இருந்திருக்கிறது. 1847 இல் வெளிவந்து இன்றளவிலும் பேசப்படும் மிகப் புகழ்பெற்ற நாவலான சார்லொட் ப்ரொன்டியின் Jane Eyre நாவலில் இத்தகையதொரு சுயநல சமூக அமைப்பு பற்றிய கதையை வாசித்து அதன் எளிய மனப்போக்கை எண்ணி வியந்திருக்கிறேன். மேலைத்தேய சூழலே அப்படி அமைந்திருக்கும் போது ரஞ்சகுமார் வாழ நேர்ந்த சமூகத்தை எப்படி நோவது?

தவிர, ஒரு காலகட்ட ஈழத்தமிழர் வாழ்வியலின் மேலும் சில பக்கங்களைத் தொடும் கதை என்ற வகையிலும் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. போர் காரணமாக இடம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவிட்ட ஈழத்தமிழர்கள் இலங்கையிலிருந்து பெண் எடுக்கும் போது பெண்ணின் வீட்டில் நிகழும் பிரிவை அதன் ஆற்றாமையை, அந்த வீட்டின் வெறுமையையும் இக்கதை எடுத்துச் சொல்கிறது. கதையின் இரண்டாம் பாகத்தில் சுதா தன் அண்ணாவின் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளிநாட்டுக்கு வாழ்க்கைப்பட்டுச் செல்கிறாள். அந்தப் பிரிவின் கனத்த துயரம் அந்த வீட்டையே உடைத்துப் போடுகிறது. அதேநேரம் கதைக்குள் இன்னொரு சம்பவமும் வருகிறது. தாயும் தந்தையும் முரண்பட்டுக் கொள்ளும் போது ஒரு குழந்தைக்குள் நிகழும் உளவியல் பதட்டங்கள் தவிப்பாக வெளியாகிறது. இதன் மீதான ஒரு நுண்ணிய அவதானிப்பும் கதைக்குள் இருக்கிறது.  ஈழத்தமிழ்ச் சிறுகதைகளில் பெரிதும் கவனம் பெறாத ஒரு பக்கம் இது. இதனை ஒரு நாவலாகவே விரித்துச் சென்றிருந்தால் இந்த அனுபவத்தைப் பேசுகின்ற ஒரு மகத்தான நாவலாக மலர்ந்திருக்கக்கூடும்.

காலம் உனக்கொரு பாட்டெழுதும் புலிகள் இயக்க இளைஞர்களின் பேராட்ட வாழ்வின் ஆழமான ரணங்களைப் பதிவுசெய்கிறது. இக்கதை சம்பவம் விட்டு சம்பவம் தாவிச்சென்று நடுப்பகுதியிலிருந்து இறுதி வரை மரணத்தாலும், சுய அழிப்பாலும், சித்ரவதைகளாலும் நிரம்பிய நொடித்துப் போன அவர்களின் வாழ்வை பெரும் வலியோடு பகிர்ந்துகொள்கிறது. பெரும் கனவுகளை, இலட்சியங்களை சூடிக்கொண்டு பயணத்தை தொடங்கி குருத்தோலைகளாக உதிரும் முதிர்ச்சியற்ற இளைஞர்களையும், தியாகங்களையும் பெரும் சோகமாக நினைவில் கொண்டு வந்து நிறுத்துகிறது. கதையில் சம்பவங்கள் இடையிடையே அறுந்து அறுந்து கதைக்கரு என்ன என்பது குழப்பமான இடமாகவே எஞ்சுகிறது. இத்தனைக்கும் அவரது கதைகள் பின்-நவீன சாகசங்களாக எழுதப்பட்டவையல்லை. எல்லாமே நவீனத்துவ யதார்த்தவாதக் கதைகள்தான். Non-linear எழுத்துவகையாக இதனைக் கொள்ள முடியுமா என்பது மதிப்பீட்டுக்குரியது.

எனினும் அந்தப் பலவீனத்தை அவரது வசீகரமான மொழி மறைத்து விடுகிறது சுருக்கும் ஊஞ்சலிலும் கதை எங்குமே சிக்குவதில்லை. ஆனால் கதையின் கருவின் மீது வாசகக் கவனம் குவியாமல் அவரது மொழியிலும், சூழல் பற்றிய விபரணங்களிலுமே கவனத்தையீர்க்கும் மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டே செல்கிறார். உதாரணமாக கம்பி வேலிக்கு அப்பால் சிறிய வயல்வெளி. அவ்வயல்வெளியின் மத்தியில் மஞ்சளாகவும், சற்றுப் பெரிதாகவும் காட்சியளிக்கிறதுஅப்போதிக்கரி ஆசுப்பத்திரி’. வயல்வெளியில் நான் வந்திறங்கிய போது சிறிய பூண்டாகஇன்ன செடி என்று அடையாளம் காண முடியாத நிலையிலிருந்த சணல் இப்போ வேலியளவுக்கு வளர்ந்து மஞ்சட்பூக்களுடன் குலுங்கிச் சாய்கிறது. ஆசுபத்திரி விறாந்தையில் ஓடலி பரமசிவம் இருந்து சுருட்டுப் பிடித்துக்கொண்டிருக்கிறார். கால்கள் இரண்டையும் அகட்டிப் போட்டுக்கொண்டு, வாங்கில் முதுகு சாயுமிடத்தில் கைகளை வீசிப்போட்டுக் கொண்டு, தலையைக் கவிழ்த்துக் கொண்டுதான் இருக்கிறார். சுருட்டுப் பிடிக்கிறாரா இல்லையா என்பதே சந்தேகமாக இருக்கிறது…”

இந்த சித்தரிப்பின் மொழியும், அழகியலும் கதையின் இயல்புடன் இணைந்துகொண்டு வாசிப்பின்பத்தை தருகிறது. இத்தகைய சித்தரிப்புகள், விவரணங்கள் இக்கதை நெடுகிலும் உள்ளது. இன்னொரு பக்கம் பார்த்தால், ஒரு சிறுகதைக்கு இவ்வளவு பெரிய சூழல் விவரணம் எதற்கு என்று கேட்கத் தோன்றுகிறது. வெயிலைப் பற்றிய விபரணமே 5-6 பக்கங்கள் வரை நீள்கிறது. உண்மையில் இந்தக் கதையில் பெரிதாகச் சொல்லத்தக்க சம்பவமோ, பேசுபொருளோ இல்லாமல் ஒரு கதையாக சுருக்கும் ஊஞ்சலையும் ஆக்குவது அவரது விசித்திர நாட்டாரியல் மொழிதான்.

ரஞ்சகுமாரின் கதைகளில் அவர் உதிர்த்துவிடும் அரசியல் கருத்துகள் மிக எச்சரிக்கையாக சொல்லப்படும் கருத்துகளாகவே தெரிகின்றன. எல்லாவற்றையும் சொல்லவும் வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் மறைக்கவும் வேண்டும். இன ஒடுக்குதலை, தமிழ்x சிங்கள மோதலை, ஜேவிபி புரட்சி மீதான வன்முறைகளை, உக்கிரமான அந்த அரசியல் சூழலை மிக எளிய பகடியாகவும், குறியீடாகவும் தூவுகிறார். சுருக்கும் ஊஞ்சலும் கதையில் இந்தியா-நியுஸிலாந்து டெஸ்ட் மெட்ச் வர்ணனையில் வெங்கட் என்கிற தமிழ்ப் பந்து வீச்சாளனின் பந்துக்கு வெள்ளையன் அடிக்கிறான். அதனை தமிழனுக்கு அடி விழுவதாகச் சொல்வதன் மூலம் ஈழ அரசியல் சூழலை பூடகமாகச் சொல்கிறார். இதே கதையிலேயே ஒரு மாடு தன் வாலால் கொசுவை அடித்து விரட்டுவதை அப்படித்தான் இருக்க வேண்டும். எதிரியை அடித்து ஓட ஓட விரட்ட வேண்டும் என்று குறியீட்டு மொழியில் பேசுகிறார். இதில் மாடும் கொசுவுமாக வருவது யார் என்பதை நாம் இலங்கைச் சூழலை வைத்துப் புரிந்து கொள்வது இலகுவானது.

சிலவேளைகளில் இந்த குறியீட்டுச் சித்தரிப்பு வாசகனுக்கு வாசிப்பில் ஒரு இடர்பாடாக நெருடுகிறது. கபறக்கொயாக்கள், கோளறு பதிகம், யக்ஷன் போன்ற கதைகள் சாதாரண வாசகனுக்கு ஒரே வாசிப்பில் தீர்மானத்துக்கு வந்துவிட முடியாதபடி அவற்றின் அரசியல் களமும், குறியீடுகளும் இருண்மையானதாக இருக்கின்றன. போரும் வாழ்வும் பற்றிய நேரடியான தரிசனங்களும், குறியீட்டு அனுபவங்களும் மாறி மாறி நிகழ்கின்றன. குறியீடுகள் மக்களின் வாழ்வையும், அரசியல் சூழலையும் இணைக்கும் அர்த்த வெளிப்பாடானதாகவே கதைகளில் கையாளப்பட்டிருக்கிற போதிலும் இலங்கையின் அரசியல் சூழல் குறித்த பரிச்சயமற்ற வாசகனுக்கு பெருங்குழப்பமாகவும், அபத்தமானதாகவுமே தோன்றுகின்றன. கதைக்கட்டுமானத்தில் நிகழும் பிழைகளாக அவை புரிந்துகொள்ளப்படவும் நேர்கிறது. அவரது படைப்பு மனம் உச்சத்தில் இருந்தபோது எழுதப்பட்ட கதைகளில்தான் இந்தக் குறியீட்டு நெருடல் நிகழ்ந்துள்ளது. சொற்களும், வாக்கியங்களும்கூட குறியீட்டுக் கவிதைகள் போன்று அபிநயித்து மறைகின்றன. கைக்குள் அகப்படுவது வாய்க்குள் அகப்படுவதாக இல்லை. வாய்க்குள் அகப்படுவது தலைக்குள் சிக்குவதாக இல்லை. யக்ஷன், மோகவாசல், போன்ற கதைகளில் மொழியின் மோகனமும், கவித்துவத் தரிசனமும் எல்லையற்றுப் பீறிடுகிறது. வாசகன் கதையை ஒரு தளத்தில் வைத்துப் புரிந்துகொள்ள முடியாமல் யக்ஷனின் அரசியல் களம் கணத்துக்குக் கணம் மாறுகிறது. இந்தக் கதைகளில் ரஞ்சகுமார் மொழியால் நிகழ்த்திக் காட்டும் மாயாஜாலத்தில் வாசகன் அள்ளுண்டு திகைத்து திக்கற்றுச் சென்றுவிடுகிறான். கடைசியில் கதையை வாசித்தது போன்றும் வாசிக்காதது போன்றும் ஒரு இரண்டக மனநிலைக்குள் ஆழ்ந்து போகிறான். இது என்ன விளையாட்டு!

ரஞ்சகுமார் ஏன் சில அனுபவங்களை நேரடியாகச் சொல்லாமல் குறியீட்டுரீதியாக வெளிப்படுத்தினார்? அது அவரது அந்தரங்கத்தோடு தொடர்பான ஒரு பிரச்சினை. இக்கதைகளை எழுதிய காலத்தில் அவர் யாழ்ப்பாணத்திலும், கொழும்பை அண்டிய பகுதிகளிலும் வாழ்ந்திருக்கிறார். சிந்தனைச் சுதந்திரம் தொடர்பில் அரசும்-தமிழ் இயக்கங்களும் கடைப்பிடித்து வந்த இரும்பு விதியின் பிடியிலிருந்து தன்னைத் தக்காத்துக்கொள்வதற்கான அந்தரங்க அச்சத்திலிருந்து உருவான சுய தணிக்கைதான் அவரது குறியீட்டுப் பிரயோகத்துக்கும், சம்பவத் தாவுதல்களுக்கும் அடிப்படையான ஆதாரமாகும். லத்தீன் அமெரிக்கப் படைப்பாளிகள் தங்கள் அரசியல் சூழலை வெளிப்படுத்த மாயா யதார்த்தவாதத்தை கைக்கொண்டதைப் போல் ரஞ்சகுமார் மாயா யதார்த்தவாதத்தை நோக்கிச் செல்லவில்லை. குறியீடுகளால் அதனை சமன் செய்துகொள்கிறார். ஈழப் புலம்பெயர் படைப்பாளிகளுக்கு இந்தப் பிரச்சினை இருக்கவில்லை. அதனால் அவர்கள் மிக பகிரங்கமாகவும், செப்பமாகவும் தமது கதையுலகைத் தீர்மானித்தனர். இதனால் அவர்களின் கதைகள் ஈழத்துக்கு வெளியிலும் இலகுவாக கிரகித்துக் கொள்ளப்பட்டன. கொண்டாடப்பட்டன.  

ரஞ்சகுமாரின் கதையுலக மனிதர்களின் உருச்சித்திரம் கனத்த துயர் மிக்கதாக இருக்கிறது. மனம் உள்ளொடுங்கி மட்கிப்போன மனிதர்கள் அவர்கள். அவர்களளவில், வாழ்வென்பது கசப்பும், திகிலும் நிறைந்த ஒரு கொடிய கனவுதான். சுருக்கும் ஊஞ்சலும் கதையில் வரும் கதைசொல்லி, கோசலையில் வரும் தாயும் மகளும், சீலனும், குலமும், கோளறுபதிகத்தில் வரும் தேவனும், யக்ஷனில் வரும் கதைசொல்லி எல்லோருமே இந்த வரையறைக்குட்பட்டவர்கள்தான். அவர்கள் புனைவுக்காக சோடிக்கப்பட்ட கற்பனையான மனிதர்களல்ல. நிஜமான சம்பவங்களிலிருந்து உருவாகி வருபவர்கள். நிஜத்தில் தோன்றும் மெய்யுருக்கள். அதனால் இயல்பான மனிதர்களாய் மனதில் தங்கி நிற்பவர்கள்.வாசகனோடு ஊடாட்டம் கொள்பவர்கள். இந்த மனிதர்களின் வாழ்வை முன்வைக்கும் அவரது கதை கூறுமுறையில் கவித்துவக்கூறுகள் எல்லையற்றுப் பாவி கதைமொழியை தனித்துத் துலக்குகின்றன. எலும்புக் குருத்துக்குள் ஊடுறுவிப் புகுந்துகொள்கிற குளிர்என்ற வரிகள் இந்த இடத்தில் ஞாபகம் வருகின்றன.

கதைகள் அனைத்தையும் படித்து முடிக்கையில் ரஞ்சகுமாரின் படைப்புலகு எந்த வெளிச்சமும், விடுதலையுமற்று போரின் இருளில் கரைந்த மானுட வாழ்வும், மரணமும் கலந்து உருவான வெளியாகவே தோன்றுகிறது. அவரது படைப்புலகை அவர் வரையறுக்கப்பட்ட மனிதர்களையும், சம்பவங்களையும் கொண்டு புனைந்து காட்டுகிறார். மிகச் சொற்ப கதைகளாலும், மனிதர்களாலும் கட்டமைந்த அவரது படைப்புலகு ஒரு காலகட்ட ஈழத்தமிழ்ச் சமூகத்தின் மெய்யுருவாகப் பரிணமித்து நிற்கிறது. அவரது மொழியால் சொல்லப்படும் வாழ்வு குறித்து வாசகனுக்குள் ஒருவித அங்கலாய்ப்பும், கனமான துயரமும் தவிர்க்க முடியாமல் பீறிடுகின்றன. ஒரு சமூகத்தின் ஒரு காலகட்ட யுகசந்திக்குள், துயர் நிறைந்த நிலவெளிக்குள் மீண்டு திரும்பிய உணர்வும் கொப்பளிக்கிறது. நாட்டாரியல் தன்மை ததும்பும் தன் கதைமொழியில் அவர் தீட்டிய போர்க்கால மானுடச் சிதைவுகளின் அழியாச் சித்திரமே ஈழத்தின் தவிர்க்க முடியாத படைப்பாளி என்ற இடத்தில் அவரை இன்னமும் நிலைநிறுத்தி வைத்திருக்கிறது.

ஜிஃப்ரி ஹாஸன்

கிழக்கு இலங்கையில் பாலைநகர் என்ற கிராமத்தில் பிறந்தவர். குறிப்பிடத்தக்க சிறுகதைகளையும் கவிதைகளையும் இலக்கிய மதிப்பீடுகளையும் எழுதியிருக்கிறார். இவருடைய இலங்கையில் போருக்குப் பின்னரான அரசியல்பற்றிப் பேசும் ‘அரசியல் பௌத்தம்’ என்ற புத்தகம் முக்கியமானது.

2 Comments

  1. மோகவாசல், அரசி ஆகிய கதைகளை சிவானந்தன், ராதேயன் ஆகிய இரண்டு சஞ்சிகை ஆசிரியர்களின் வற்புறுத்தலுக்காக எழுதினேன். அவை மிகவும் பலவீனமான கதைகள். என்னளவில் கோளறுபதிகம் என்ற கதைதான் எனக்கு எழுதுவதற்குச் சவாலாக அமைந்த கதை. யக்‌ஷன் என்ற கதையையும் நந்தலாலா சஞ்சிகை ஆசிரியர் ஜோதிகுமார் என்னை எனது வீட்டின் அறை ஒன்றுக்குள் ஒரு நாள் முழுக்கப் பூட்டி வைத்து எழுத வைத்தார். அது நந்தலாலா இதழில் வெளியானது. அதைப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் நன்கு செப்பனிட்டு அந்த வடிவத்தையே இக்கட்டுரை ஆசிரியருக்கு அனுப்பினேன். மூலக்கதை எனக்குத் திருப்தி தரவில்லை. கட்டுரையாளருக்கும் அகழ் இதழுக்கும் நன்றி.

    ரஞ்சகுமார்.

  2. என் பதின்ம வயதில் முதன்முதலில் ரஞ்சகுமாரை ஹாசித்தேன். கோசலை ஓரளவு மனப்பாடமாகியிருந்தது அந்தக் காலத்தில்

உரையாடலுக்கு

Your email address will not be published.