வண்ணந்தீட்டாத பறவை

துக்கித்து விலகிச் சென்ற காட்டை

தேடிக்கொண்டிருந்தபோது

எதேர்ச்சையாகக் கண்டு கொண்டான்

முத்தத்தின் ஈரம் உலராத ஒரு சோடி உதடுகளை.

காடு எங்கேயாவது

சிறகு கிளைத்துப் பறந்து கொண்டிருக்கும்

என நினைத்துக்கொண்டவன்.

தான் இறுதியாக வரைந்த பட்சிக்கு வண்ணந் தீட்டாததைக் குறித்து

கவலைகொண்டான்.

வண்ணந்தீட்டாது பறந்துகொண்டிருக்கும பட்சி பற்றிய

பயம் அவனில் பற்றிக்கொண்டபோது.

தான் வரைந்த கொடுவிலங்கின்

உறுமலில் காதுகள் சிலிர்ப்பதை உணர்ந்து கொண்டான்.

மேலும் துயருற்றவன்

மேய்ப்பனைப் போல காட்டைத் தேடியலைந்த போதே

கண்டெடுத்திருந்தான் ஒரு சோடி உதடுகளை

அவற்றிற்கு இப்போதுதான்

சிவப்பு வண்ணத்தைத் தீட்டத்தொடங்கினான்.

காடு இன்னும்

தொலைவில் பறந்துகொண்டுதானிருக்கும் என

தன் மனதுக்கு ஆறுதல் உரைத்தான்.

00

வானத்தில் பறப்பவள் -1

நிறந்தீட்டாத பாதை

வானத்தைப் போல விரிந்திருந்ததை

இரசித்துக்கொண்டிருந்த சிறுமி

அதையொரு புதிர்க் கணக்கைப் போல வாசித்துக்கொண்டிருந்தாள்.

எண்களால் மாயம் புரியும்

தன் பாடக்குறிப்பில்

ஒவ்வொரு எண்ணையும்; அணில்களாகவும் புலுனிகளாகவும்

வரைந்துகொண்டிருந்தாள்.

புலுனிக்கு சிறகு

அணிலுக்குப் கால்கள்

எனக்கு?

தன்னிடமே வினாவியவள்

புதிரின் முதல் முடிச்சை அவிழ்த்தாள்

அவளுக்கு வானமே பாதையாக விரிந்தது

தன் பாடகுறிப்புப் புத்தகத்தை மூடி வைத்தவள்

தன் காலடியை வானத்தின் முதற்படிக்கட்டில்

எடுத்து வைத்தாள்

எல்லாப் புதிர்களும் அவிழ்ந்து கொண்டன.

அவள் வானத்தில் பறந்துகொண்டிருப்பதை

நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

00

வானத்தில் பறப்பவள்-2

தோட்டத்திற்கு வரும்

ஒரு கொண்டைக் குருவியை

அழைத்துப் பேசிக்கொண்டிருந்தவளை

நான் அழைத்தபோது

அவள் அக் குருவியோடே எழுந்து பறந்தபடியிருந்தாள்.

நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்

பறப்பது சுகமாக இருக்கிறது அப்பாஎன்று

வானத்தின் உச்சியில் நின்று கண்களைச் சிமிட்டிச் சொன்ளாள்.

திரும்பி வந்தபோது

அவள் எண்ணற்ற பறவைகளைக் கூட்டிவந்தாள்.

அவளது தோட்டத்தில் பதியமிடப்பட்ட

ஒவ்வொரு விதைகளும் முளைத்து பறவைகளாக

மலர்ந்து கொண்டன.

அவற்றை மெல்ல வருடிக்கொண்டே

முத்தமிட்டவளின் கண்களில்

ஏராளமான பறவைகள் பறந்தபடியிருப்தைக் கண்டேன்.

அவள் வானமாக விரிந்தபோது

பறவைகளாலான காடு சிலிர்த்து சிரித்தது.

00

சகுணந்தப்பி இருளில் அலைபவன்

ஓவ்வொரு இரவின் மீதும்

ஒரு அருபமான குரல் அதிர்கிறது.

அது வீணையின் ஒலியாகவும்

தாகித்த தெருநாயின் ஊளையாவும்

தனித்திருக்கும் பட்சியின் துயரமாகவும்

இரவை துயில்விக்கும் வண்டின் ரீங்காரமாகவும்

ஓலித்துக்கொண்டிருக்கிறது.

சகுணந் தப்பி

இரளுக்கு வந்தவன்

அக் குரல்களின் வழியாக

ஒவ்வொரு காலையையும் சென்றடைகிறான்.

காலையின் அலர்ந்த பூக்களை

சேகரித்துக் கொண்டிருக்கும் போது

ஏதேர்ச்சையாக கேட்க நேர்கிறது

பூக்களின் அதிஅருபமான குரலை

அவன் அக் குரலைப் பிடித்தே மேலேறிச்செல்கிறான்

மீளவும் இரவிடம் திரும்பிய போது

அவனிடம் எண்ணற்ற குரல்கள்.

அவற்றுக்கிடையில் தன் குரலைத் தேடத்தொடங்குகிறான்

பகலுக்கும் இரவுக்கும் இடையில்

செவ்வொளிச் சிதறலாக அவன் குரலிருந்தது.

சித்தாந்தன்

யாழ்ப்பாணம் கோண்டாவி்லில் வசித்தது வருகின்றார். சித்தாந்தன் கவிதைகளுடன் சிறுகதைகளும் விமர்சனங்களும் எழுதி வருகின்றார். ‘காலத்தின் புன்னகை’, ‘துரத்தும் நிழல்களின் யுகம்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. மறுபாதி என்னும் கவிதைக்கான சஞ்சிகையை நடத்திவருகிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.