பறவை விளையாட்டு
அப் பறவை
பின்மதிய வெங்கதிர்களை
ஓடியோடிக் கொறிக்கிறது
வீதிக்கரை மண்ணில்
நாட்டிய முத்திரையாய்
விரைவுற்றசையும்
வாலும், அலகும்
கூனல் ஆச்சி வடகங்களைத்
தொட்டுத் தொட்டு
ஒவ்வொன்றாய்க்
காய வைப்பதில்லையா
அப்படியே துறுதுறுவென்று
மனதுக்குள் எழுகிற
சீர்காழியின் குரல் – பறவைக்குச்
சிற்றாடையை
இடையுடுத்துகிறது
சுருக்குப் பாவாடையில்,
உருளும் பந்தின் உற்சாகம் பொங்க
கிளைகளை நோக்கி
இறக்கைகள் தாவ
சடசடத்துப் பறந்து அமரும் பறவையோடு
நாளின் கணுக்களில்
நேரம் வந்ததாய்
இலைகளை எழுப்பி
விளையாடத் தயாராகும்
எல்ம் மரம்.
ஆழியாள்
15/07/2021
மேகலாவுக்கு என்ன நடந்தது?
கண்டீரா
கண்டால் சொல்லுங்கள்
காரிரவுக் கருமேனி
காக்காய்ப்பொன் மினுமினுப்பு
பொங்கும் புனற் கழுத்து
பூத்தமலர்ச்சங்கு
அலை போல் இறகு அதிலோர்
நுரை மேகத்தீற்று
வைரத்துப் பார்வை வீச்சு
வளையாத நடை
சிவக்காத
சிலேட் சாம்பல்
கூர்ச்சொண்டு
கள்ளப் பூனைகளே
கண்டீரா?
மேகலா பெயர்
விடிகாலைப் பாடினி
யாழினி, குழலினி
நவரசலோசினி
வயது
நாலு வசந்தங்கள்
இங்கே
கேட்க முன்னமே
யார்…நானா… என்றூதிப்
பூனையின் வாலைப் போலே
புகைவிடும் பியூகோவ்ஸ்கி
மேகலாவை ஒழித்தது
நீர் தானா
நீர் தானா
அது நீர் தானா?
-ஆழியாள்
21/10/2021
ஆழியாள்
ஆழியாள் தற்சமயம் ஆஸ்ரேலியாவில் வசித்துவருகிறார். உரத்துப் பேச (2000), துவிதம் (2006), கருநாவு (2013), பூவுலகை கற்றலும் கேட்டதும் (2017), நெடுமரங்களாய் வாழ்தல் (2020) முதலான அவரது கவிதைத் தொகுப்புக்கள் இதுவரை வெளியாகியுள்ளன.