/

ரவிக்குமாரின் ‘கடல் கிணறு’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து: செந்தூரன் ஈஸ்வரநாதன்

90களில் இந்தியக் கருத்தியல் புலத்தில் தாக்கம் ஏற்படுத்திய கருத்தியல்களின் வருகை. தமிழிலும் அதன் தாக்கம் நிறப்பிரிகை போன்ற இதழ்களில் வெளிப்பட ஆரம்பித்தது. தலித்தியம், பெண்ணியம், மார்க்ஸியம் போன்ற உரையாடல்கள் விரிவு பெறத் தொடங்கின. அந்தத் தலைமுறையிலிருந்து உருவாக்கியவர் ரவிகுமார். அவரின் 9 கதைகளும் பின்குறிப்பொன்றும் அடங்கிய தொகுப்பு ’கடல்கிணறு’. செம்மையாக்குநர் ஒருவர் அவசியமற்ற சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது என்றும் தயக்கமின்றிச் சொல்லலாம்.

கடல்கிணறு கதைப் பிரதியில் பொதுமைப்படுத்தும் பண்புகளாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம். பெரும்பான்மைக் கதாபாத்திரங்கள் அந்தரத்தில் இருந்து எழுந்துவருபவை. ஒருவிதத்தில் ஒடுக்குதலிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் உடைபட்டு வெளியேறியவை. தவிர்க்கப்பட்டவை.

இரவிக்குமாரின் கதைகள் கட்டிறுக்கமும் சிந்தனைரீதியான உடைப்பும் கொண்ட உரைமொழியும் கொண்டவை. அசட்டு விவரணைகள் அற்றவை. தேவை கருதித் தவிர்க்கப்பட்ட விவரணைகளும் ஒரு பிரதியின் வாசிப்புப் பரப்பை அகலப்படுத்தும். வெற்று விவரணைகள், தகவல்களால் நிறைக்கப்படும் பிரதிகள் சலிப்பை உண்டாக்குபவை. இன்றைய வாசிப்புச் சூழலில் விமர்சனத்துக்கும் உள்ளாகின்றன. உள்ளடக்கம் மட்டும் காரணமில்லை. பக்க அளவுகளும் வர்ணனைகளின் மிகையும் இதற்கான காரணங்கள். காரியம் கருதிய விவரணைகள் தவிர்க்கமுடியாதவை. கதவைச் சாத்துவதற்குப் பல்லக்குத் தூக்கிப் பால்குடம் எடுக்கவேண்டியதில்லை. சுருங்கச் சொல்லுதல் என்பதே கடல்கிணறு சிறுகதைப் பிரதியின் அடிப்படை மொழி விதி. ஒரு கதையின் காரணகாரியங்கள், காட்சிகள் ஒரு வாக்கியத்திற்குள்ளேயே சாரம் பிழியப்பட்டு, பாதுகாக்கப்பட்ட நூலகத்தின் நிரலில் அடுக்கப்பட்டிருக்கும் நூலொன்றைப்போலப் பொருத்தப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு அதற்குத் தனி விளக்கங்கள் கிடையாது. வாசகரின் அவதானிப்பு மட்டுமே அதனை உயிர் பெறச் செய்யும் என்பதுபோலான வாக்கிய அமைப்பு.  ஒரு புனைவு உள்ளீர்த்துப் புதிர்ச்சுழலில் வாசகரை அந்தரித்து நிற்கவைப்பது, கூர்மையான வாசிப்பையும் கோரக்கூடியது.

தொகுப்பின் மற்றுமொரு பொதுப்பண்பாக, கதாபாத்திரங்களின் கையறு நிலையைக் குறிப்பிட முடியும். இதை முரண்கள் என்றும் கூறலாம். கதாபாத்திரங்கள் ஒட்டுமொத்தச் சூழலில் இருந்தும் அன்னியப்பட்டுத் தனிமை அடைகிறார்கள். மரணத்திலும் தப்பியோடுவதிலும், பிரிவுத்துயரிலும், அச்சத்திலும் வன்முறையிலும் அவ நம்பிக்கையிலும் வீழ்கிறார்கள். ரவிக்குமார் கதைகள் பெரும்பாலும் வன்முறைக்கும் பழக்கப்பட்ட வாழ்வாக அல்லது கதாபாத்திரங்கள் வன்முறைக்கு அருகிலேயே பயணப்படுகின்றன.(தம்பி, ழ, கடல்கிணறு, எட்டாம் துக்கம்,குல்பி)

அதேபோல் அச்சமும் பாதுகாப்பின்மையும் கதாபாத்திரங்களின் பொதுமைப்பட்ட பண்புகளாகின்றன.திருட்டைப்பற்றிய தியரி, ழ. அகாலம், கடல்கிணறு ஆகியவற்றின் கதாபாத்திரங்கள் வெளிப்படையாக அவ்வாறு தம்மை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை யாயினும் மறைபொருளாக இந்த அச்சமும் பாதுகாப்பின்மையும் கதைகளில் ஒரு சக பயணியைபோல் பயணப்படுகிறது.

குல்பி கதை உறவுகளுக்கு இடையிலான மையப்புள்ளியாக வன்முறையும் ஏமாற்றமே வாழ்வின் உறுதியான எதார்த்தம் என்பதாகப் பாவனை செய்கிறது. பொதுச் சமூகத்தின் புனிதங்கள் வாழ்வின் அறம் முதலியவற்றை குல்பி நகையாடுகிறது. அதிர்ச்சி அளித்து வாசக மனதின் ஓட்டத்தை நிறுத்துவது அதன் நோக்கமில்லை. மாறாக அடுத்து அடுத்து என்பதாக நகர்ந்து ஓட்டம் தடைபடாது  ஓர் எளிய சூத்திரத்துக்கான விடையை அடைந்துவிடுகிறது சிறுகதை. ஆனால் இந்தக் கதையும் என்னளவில் இத்தொகுப்பில் அவசியமற்ற கதை என்பதாகவே தோன்றியது.

கதாப்பாத்திரங்களின் பிரிவுத்துயரும் அச்சமும். (கடல்கிணறு கதைசொல்லி, அகாலம் சிறுவன்).

கடல்கிணறு, அகாலம், எட்டாம்துக்கம்,வார்த்தை ஆகிய கதைகள் வடிவமும் உள்ளடக்கமும் ஒருங்கு கூடியதாயிருக்கின்றன.  ஊடிழைப்பிரதிகளாலானவை.

அறிக்கை, ழ நேரடியான அரசியலின் பத்திரிகைச் செய்திகளையொட்டிய பார்வைகொண்ட கதைகள். அந்தச் சம்பவங்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இருந்தும் ஆசிரியரின் அக்கறையும் கரிசனமும் அமைப்புகளின் வன்முறைச் சுழல்களில் சிக்கி தும்புதும்பாகும் தனிமனிதர்களின் பாலே மையம் கொள்கிறது.  ழ கதை ராஜீவ்கொலையின் பின்னணியில் சித்திரவதைகளையும் ஜனநாயகவழுவையும் அடையாளப்படுத்துவதாய் நின்றுபோய்விடுகிறது. அறிக்கை கதையின் அறிக்கை ஒரு சட்டகமாக மட்டுமே எஞ்சிவிடுகிறது, பிரதியில் இறுதி வரிகளாக இருக்கும் அந்தப் பெண்ணின் ஆற்றாமையும் கசப்பும் கலந்த குரல் மட்டுமே பிரதிக்கு உயிரளிக்கிறது.

திருட்டை பற்றிய ஒரு தியரி, இந்த கதை ஒரு இலக்கிய கிசுகிசு என்பதாகப் புரிந்துகொள்கிறேன். எந்த ஆசிரியர் என்றும் ஊகித்துவிட முடிகிறது. ஏறத்தாழ அது ஓர் ஒப்பாரிக் கதை. மோசமான அசட்டுத்தனமான பிரயோகம் இல்லை இது. தனிமனிதன் ஒருவனின் வறண்ட மனத்தின் புகார்களும் குற்றச்சாட்டுகளாகவும் தமிழ் இலக்கியச் சூழலின் மேலான விமர்சனமாகவும் இக்கதை விரிகிறது, கிண்டலான தொனி ஒன்றுடன் ஆரம்பிக்கிற கதை ஒரு சிறிய கசப்பான நகையுடன் முடிந்துபோகிறது.

வார்த்தை கதைக்கு ஒரு அமெச்சூர் வாசகனின் பார்வை

வார்த்தைகள் சிறுகதை முதலில் பிரதி x வாசகர் உறவை மறுக்கிறது. வாசகராகப் ஒரு பிரதியோடு கொண்டிருக்கக்கூடிய உறவு சந்தேகத்துக்கு உள்ளாகிறது. கதைசொல்லியின் குரலை கதைகேட்பவர் சந்தேகிக்கிறார்,  அந்தச் சந்தேகம் மொழி ,கடவுள், வெளிச்சம், பூமி ,செடி, கொடி, சூரிய சந்திர நட்சத்திரங்கள் என விரிவு கொள்கிறது. பிரதி, எழுத்தாளர், வாசகர் உறவு சந்தேகத்துக்கிடமானதாக உருமாறுகிறது

’புனைவு வார்த்தைகளில் வழிபாடு தோன்றியது பற்றிய குறிப்புகள்’, ’வார்த்தைகளின் மாற்றம் வாழ்வின் மாற்றமானது பற்றிய பதிவு’, ’தமிழ் கடவுள் பற்றிய உரையாடல்’ என்பதாக மூன்று உப தலைப்புகளுடன் இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. மூன்று உப தலைப்புகளிலும் அடங்கும் கதைகள் அமைப்பு, மொழி, வெற்று பிம்பங்கள் ஆகியவற்றைப் பகடி செய்கிறது. மொழி விளையாட்டுகளும் புதிர்களும் கணக்குகளும் அறிவியலும் என எழுத்தாளராக முயற்சிக்கும் ஒருவனுமாக நேர்கோடற்ற மொழியில் மாறிமாறி சொல்லப்படும் கதை இறுதியில் திரு திருநாவீந்த நாயனாரை சைவத்திருமுறை வரலாற்றிற்குள் 68வது நாயன்மாராகச் செலுத்தியும் வரலாற்றையும் பகடிசெய்கிறது. அப்பகடியின் ஊடே ஒருதரப்பான வரலாற்றில் ஊடறுப்பையும் செய்கிறது.திரு நாவீந்த நாயனாரின் கதை அவ்வாறான ஊடறுப்பு முயற்சியே.

இறுதியில் வார்த்தையை நம்புகிறவன் முட்டாள் வார்த்தைகளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி வார்த்தைகளை பரப்புகிறவன் அயோக்கியன் என்பதாக அந்தக் கதை முடிவு பெறுகிறது. மொழி, அதன் வரலாறு, அதன் ஒற்றைத் தன்மை, பொய்மைகள், நடைமுறைக்கும் வார்த்தைகளுக்குமான இடைவெளி என்று மொழி வாழ்வின் புனிதங்களும் கற்பிதங்களும் கதைகளில் தகர்க்கப்படுகின்றன.

ஆண் பாத்திரங்கள் தனித்துவமிக்க குணங்களோடு முடிவுகளை நெருங்குகிறார்கள். பெண் கதாபாத்திரங்களின் குண நலன்கள், நோக்கம், வாழ்வு என்று ஒரே வகைதானோ என்கிற ரீதியில் சுருங்கிக்கொள்கின்றன, மேலோட்டமான பொதுமையச் சிந்தனை கலந்து உருவாக்கப்பட்ட பெண் பிம்பங்களைக் கலைப்படைப்புகள் முன்னிறுத்துவது சூழலுக்கு மிகக் கெடுதியான என்று எண்ணத்தோன்றுகிறது. அகாலம் சிறுமி, கடல் கிணறு அம்மா; எனப் பெண்கள் மகனுக்காகவும் காதலனுக்காகவும் கணவனுக்காகவும் தியாகச் சுடரை ஏந்துபவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். ஒருவிதத்தில் இது யதார்த்தம் என்றும் வாதிக்கலாம். ஆனால் ஒரு படைப்பு யதார்த்தத்தை மீறவும் வேண்டும். யதார்த்தம் என்பதுவும் கட்டமைப்படுவதுதான். அதன் உறுதியும் வரும் காலங்களில் அசைத்துப் பார்க்கப்படும் வாய்ப்புகளும் உண்டு. 

அ. ராமசாமியின் முன்னுரையும் நூலில் வெளிவந்திருக்கிறது. முன்னுரை ஒரு பதிவாய் மட்டும் அமைந்துவிடுவது துரதிஷ்டவசமானது. பிரதியை அணுகுவதற்கும் அது துணைபுரிய வேண்டும். மாறாக, தென்னம்பிள்ளையில் கட்டிய மாட்டைப்போல் ஆகிவிடக்கூடாது.. அ,ரா, போகிறபோக்கில் நழுவல்களை வாசிக்கலாம் என்றும் எழுதுகிறார். உண்மையில் கதாப்பாத்திரங்களின் மனநிலையையும் அதன் அல்லாட்டத்தையும் அவ்வாறு நழுவல் என்கிறாரா என்ற சந்தேகமே எழுந்தது. ரவிக்குமாரின் பெரும்பான்மைக் கதாபாத்திரங்கள் பெயர்களற்றவை. பொதுச்சமூகம் என்ற மதிப்பீட்டிலிருந்து வெளித்தள்ளப்பட்டவை. ஆபத்தானவர் போராட்டக்காரர், தனிமைப்பட்டவர், எழுத்தாளர், பெண்பித்தர் என்ற அடையாளங்களை மட்டுமே பொதுச்சமூகத்திற்கு வெளிப்படுத்துபவை. முரண்களின் கலவையாக எல்லா மனிதர்களைப்போன்றும் இருதயம் உடையவர்கள். அவர்களின் உணர்வுகளே நழுவல் மனநிலையாகத் தப்பித்தலுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்கிறது மாறாக புனைவு நழுவுகிறது என்பதாக அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. வழுவழுப்பான வாழைப்பழ விமர்சனங்கள் வரவேற்கத் தகுந்தவை அல்ல.

ஒட்டுமொத்தமாக கடல்கிணறுதொகுப்பில் மனநிலைகளும் அதன் ஆற்றாமைகளும் தற்கொலைக்கான எண்ணங்களும் என தனிமனிதத் தரப்பிலே மையம் கொள்கிறது. சமூக முரண்களின் காரணிகளின் பின்னணியில் தனிமனிதர்களின் பக்கங்களை எழுதிப்பார்த்திருக்கிறது கடல்கிணறு. கலைஞர் ஒருவர் செயற்பாட்டாளராய் இயங்குவதன் தவிப்பையும் அலைபாய்தலையும் ஒட்டுமொத்த வாசிப்பாகக் கவனம்கொள்ளவும் இப்பிரதியில் வாய்ப்புள்ளது.

செந்தூரன் ஈஸ்வரநாதன்

இலங்கைச் சேர்ந்த செந்தூரன் ஈஸ்வரநாதன் தற்சமயம் நாகர்கோவிலில் வசித்துவருகிறார். இதழியல் துறையில் பணியாற்றிவரும் இவர், பல்வேறு சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.