அப்போது யுத்தம் தமிழர்களை தின்ற காலம். வவுனியாவில் இருந்து கொழும்புக்கு செல்வதென்றால் ஒருவன் தன் தோலை வெட்டிக்காட்டாமல் எல்லாவற்றையும் காட்டவேண்டிய நேரம். கொழும்புக்கு செல்வதற்கு இரண்டு இடங்களில் பல பாரங்களை நிரப்பி, கோழிக்கூட்டு முகாமில் c. I. D ஆல் படமெடுத்து ஒருமாதகால இழுபறியில் நிரந்தர பாஸ் வைத்திருந்த ஒருவர் நூறு ரூபாய்க்கு பிணை வைத்து, வெறும் எலும்புகளையும் கொஞ்ச சதையையும் வைத்திருந்த நான் முதல்முறை கொழும்புக்கு பயணப்பட்டேன். அப்போதுதான் புகைவண்டியில் பயணப்படும் முதல் வாய்ப்பு, இவையெல்லாம். விவேகானந்த சபையால் நடத்தப்பட்ட ஆறுமுகநாவலர் நாவன்மைப்போட்டியால் வாய்த்தது.
என் வாழ்நாளில் ஆறுமுகநாவலரைவிட ஒருவரை புகழ்ந்து தொண்டை புடைக்க பேசியது கிடையாது. பள்ளிக்கூடத்தில் தந்திரமாக ஆறுமுகநாவலரின் கறையான பகுதியை எல்லோரும் என்னிடம் சேராமல் தவிர்த்துவிட்டார்கள்.
0
அருளினியனின் கேரள டயரீஸ் ஆறுமுகநாவலர் பற்றிய மறுபக்கத்தை ஆண்டுகள் கடந்து எனக்கு காட்டியது. அவருக்கும் ஆறுமுக நாவலர் பேச்சுப்போட்டி அனுபவம் இருக்கிறது. பேச்சுப்போட்டியால்தான் நாவலர் வாழ்கிறாரோ ? என்று சிந்திக்கத்தோன்றுகிறது.
கேரள டயரீஸ் என்ற நூலை அலட்சியமாகவே படிக்க ஆரம்பித்தேன். ஆரம்பித்ததும் கற்பூரம்போல் பற்றி எரிய ஆரம்பித்தது எழுத்து. பயண இலக்கியங்கள் தமிழில் அரிது. அப்படி எழுதினாலும் படிக்கக்கூடியதாய் அறிவுக்கு உணவாகும் படைப்புகள் எண்ணிச்சொல்லக்கூடியன.
கேரள டயரீஸ் ஒரு முழுமையான பயண எழுத்தாக இல்லாதபோதும் ஆதி நாளில் ஒரே மொழி பேசிய சேரர் நாடு இன்று கேரளமாக இருக்கிறது. தமிழ் நாட்டில் ஈழத்தமிழர் சாதாரணமாக பேசினாலே ‘நீங்க மலையாளமா ?’ என்று கேட்கும் அளவு நெருங்கிய சொல், வரலாற்று பிணைப்புக்களை வைத்திருக்கிறது. ஆனால் இதை யாரும் ஆராய்ந்து எழுதியதாக தெரியவில்லை. அதன்படி ஈழத்தமிழருக்கும்- கேரளாவில் வாழும் ஈழவர் மக்களை தேடிய அருளினியனின் பயணம் முக்கியமான முயற்ச்சி. .
கல்லுப்போன்று இறுகிய பாக்கை லாவகமாக சீவல் சீவலாக பாக்குவெட்டியால் வெட்டுவதுபோன்ற சொல் நடை. பொதுவாக யாரும் எட்டிக் கடந்துவிடும் விடயங்களை கிட்ட நின்று, நிதானித்து எழுதுகிறார். அருளினியனின் எழுத்து வடிவிலும், வேகத்திலும், பொருளிலும் எழுதும் ஈழ இளைஞர்களை காண்பது அரிது. சென்னையில் பத்திரிகையாளராக இருந்த பரந்த அனுபவம், வாசிப்பு அவர் எழுத்தில் தெரிகிறது.
இந்ந நூலில் அவரின் 22 சிறு கட்டுரைகள் பயண அனுபவங்களினூடாக பகிரப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் மக்களுக்கும் கேரளாவில் உள்ள ஈழவருக்கும் தொடர்பு உண்டா ? என்ற கேள்விக்கான பயணமாகவே அவர் கேரள மலைவாழ் ஈழவர் மக்கள் குடியிருப்புக்களை தேடி பயணப்படுகிறார். புத்தகங்களினூடான ஆய்வைவிட நேரடியான சமூக ஆய்வு பலமான சேதிகளை தருகிறது.
ஈழவர் என்ற குடியினர் கேரளாவில் 23 வீதமாக இருந்தாலும் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ‘அவர்களின் ஊருக்கு சென்றபோது யாழ்ப்பாண கிராமத்துக்குள் நுழைந்தது போல் இருந்தது’ என்ற அவர் சொல் நம்மை ஆர்வமூட்டச்செய்கிறது.
தென்னையை அதிகமாக பயன்படுத்தும் அவர்கள் யாழ்ப்பாணத்தில் செய்யப்படும் சம்பலை அவர்களிடம் உண்டு மகிழ்ந்ததை பகிர்கிறார்.
« இடுக்கியின் குக்கிராமமொன்றில் ஈழவர் வீடொன்றில் புட்டுடன் எனக்கு சம்பந்தி கொடுத்தார்கள். சம்பந்தியைப்பார்த்த நான் ஒருகணம் பரவசப்பட்டேன். தமிழகம் எங்கும் தேடிக்கிடைக்காத இடித்த சம்பலைத்தான் கேரளாவில் ‘’சம்பந்தி’ ’என்கிறார்கள். »
சம்பலை வைத்தே ஒரு ஆய்வை தொடங்கப்படலாம் என்ற சிந்தனையை தந்தது. உடன் நினைவில் வந்தவர் ‘அழகர் கோவில்’ ஆய்வின் மூலம் புதிய ஆய்வு வடிவைத்தந்த பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்கள்.
« ஈழத்தமிழர்களின் வரலாறு போல ஈழவர்களின் வரலாறும் மகா துயரமானது. கேரளத்தின் பெரிய சாதியாகிய இவர்களை நம்பூதிரிகளும், நாயர்களுமாக கூட்டுச்சேர்ந்து அடக்கினார்கள். » என்ற வரிகள் கனதியானது.
மணோஜ் என்ற கேரள ஆய்வாளர் ஈழத்திற்கும் ஈழவருக்கும் இடையிலான தொடர்பை ஆராய்ந்து வருபவர். அவரின் கருத்தை இப்படி பதிவுசெய்கிறார் அருளினியன்.
« சேரர்களின் விற்படையில் வில்லவர்கள் என்ற பெயரில் முக்கியமான வீரர்களாக இருந்த ஈழவர்கள், ஈழத்திலும் பரவி வாழ்ந்தார்கள். மகாயான பௌத்தத்தை பின்பற்றும் வில் வீரர்களாக இருந்தார்கள். தென் ஈழத்தில் தேரவாத பௌத்த பிரிவால் மகாயான பௌத்தம் அழிக்கப்பட்டபோது அவர்கள் மீண்டும் சேரநாடு திரும்பினர். ஈழத்தில் இருந்து வந்ததால் அவர்கள் ‘ஈழவர்’ எனப்பட்டனர். » என்கிறார்.
இந்த சேதி, இரண்டாம் இராயசிங்க மன்னனின் சிறைக்கைதியாக 19ஆண்டுகள் இருந்த ஆங்கிலேய நாட்டைச்சேர்ந்த றொபேட்நொக்ஸ் சிங்கள மொழியை சரளமாக பேசக்கற்றிருந்தான். அவன் சிறை மீண்டு காட்டுக்குள்ளால் அனுராதபுரத்தை அடைந்தபோது(1680) அங்கிருந்த மக்கள் சிங்கள மொழி தெரியாதவர்களாக இருந்தார்கள். அவர்கள் வேறு மொழி பேசினார்கள். அதை ‘’மலபார்’ என்று குறிப்பிட்டிருந்தது ஏதோ சேதிகளை சொல்லாமலில்லை.
(இந்த றொபேட் நொக்ஸ் பற்றி ‘லூசியா’ என்ற அருமையான கதையை அ. முத்துலிங்கம் எழுதியுள்ளார். ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்.)
அருளினியனின் எழுத்தில் இந்து மயமாக்கப்படும் போர்வையில் தமிழர்களின் சிறுதெய்வங்கள் காணாமல் போகிறார்கள். என்ற கோபமும் அச்சிறுதெய்வ வழிபாட்டில் சாதிய சிறுமைகள் இல்லை என்பதும் அவர் வாதம். இந்துவாக ஆக்கப்பட்டபோது சாதிய அடுக்குகள்ளின் அழுக்குகளை மதம் வெளிக்காட்டியது என்கிறார்.
அவர் காட்டும் ஆதாரங்கள் அவ்வளவு அசட்டை செய்யக்கூடியதல்ல. தமிழரின்ஆதி வழிபாட்டுக்குரிய வேல்கோட்டங்கள் கேரளத்தில் இன்று ‘முருகன் கோவில்கள்’ ஆக்கப்பட்டுவிட்டன என்பது எல்லா இடமும் பொருந்திப்போகிறது. பேராசிரியர் தொ. பரமசிவம் ‘சமயங்களின் அரசியல்’ என்ற நூலில் ‘தமிழர்களின் வழிபாடு வட்டக்கோட்டங்களாகவே இருந்தது. ஆரியரின் வருகைக்குப்பின்னரே அவை கோயில்களாயின’ என்ற கருத்தை நினைவூட்டியது.
‘வீரத்தை இழந்த கதை’ என்ற கட்டுரையில் யாழ்ப்பாண வெள்ளாள சாதிக்குள் பலசாதிகள் கலந்த கதையை கூறுகிறார். மனித நாகரீகம் கலத்தலில் தளைத்தது என்பது பொதுவானதே.
போர்த்துக்கேயர்காலத்தில் வெள்ளாளருடன் கலந்த மறவர்கள், தமிழர் நீண்ட வரலாற்றில் போர்த்தொழிலை வாழ்வாகக்கொண்டவர்கள். விவசாயத்தை மேற்கொண்ட வெள்ளாளர் வாயால் வீரம்பேசுபவர்கள். களமாடமாட்டார்கள் என்று கூறி அந்த மறவர்கள் பின்னர் வெள்ளாளருடன் இணைந்து போனார்கள். என்கிறார்.
‘1619 இல் போர்த்துக்கேயரோடு நடந்தபோரில் சங்கிலி குமாரனுடன் படையிலிருந்து போராடி தப்பியவர்கள் சிலர் நல்லூரில் இருந்து மீண்டு 15 km தொலைவில் இருந்த வல்வெட்டித்துறையில் சென்று குடியேறினார்கள். சங்கிலி குமாரனுக்குப்பிறகு அதே வல்வெட்டித்துறையில் சுமார் 350 ஆண்டுகளுக்குப்பிறகு தமிழர் தேசமொன்றை ஆண்ட தலைவன் பிறந்தான், அவனுக்கு பெற்றோர் இட்டபெயர் ‘பிரபாகரன்’’ என அக்கட்டுரையை சிறுகதைபோல் முடிக்கிறார். அது அருமைதான். ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை. அதைவிட அந்தப்போரில் 5000 தமிழக வீரர்கள் வருவிக்கப்பட்டு போர்த்துக்கேயருடன் களமாடியதை தவிர்த்துவிட்டார். வரலாற்றை கதைகள் போல பதிவு செய்வதால் ஆபத்தும் இருப்பதை முல்லைமணி நாடகத்திற்காக பயன்படுத்திய ‘குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்’ என்ற பெயரே பின்பு உண்மைப்பெயரென்று தமிழ் உலகம் நம்புவது போன்ற ஆபத்து இருக்கிறது.(டொன் தியோகு புவிநல்ல மாப்பாண அழகேசன் பண்டாரம் வன்னியணார்)
போர்த்துக்கேயர் கோட்டையை (கொழும்பை) கைப்பெற்றிய போதும் 103 ஆண்டுகளாக யாழ்ப்பாண இராசதானி எதிர்த்து /சமாளித்து நின்றது. மூன்று பெரும் யுத்தத்தை அது சந்தித்தது. அந்த தீவுக்காக அன்னியர்களுடன் போராடியவர்கள் காலம்காலமாக தமிழர்களாக இருந்தார்கள். ஆனால் கடைசியில் அவர்கள் ‘வந்தேறு குடிகள்’ என்று பட்டம் பெற்றதுதான் வரலாறு. இதற்கு தமிழர்கள் வெறும் 400 ஆண்டுகளின் வரலாற்றைக்கூட சரியான பதிவுகளை வைத்திருக்காதவர்களாக இருப்பது நம் பெருமைகளில் ஒன்று.
அருளினியனின் நாவலரும்-சைவவெள்ளாள மேலாதிக்கமும் என்ற கட்டுரை காத்திரமானது. அவர் சுயவிளக்கத்தோடு அது ஆரம்பிக்கிறது ;
« நான் நாவலரின் பாரம்பரியம் என்று நம்பப்படும் சைவ பாரம்பரியத்தில் வந்தவன். எனது சிறுவயது சிந்தனைப்போக்கில் நாவலரின் பங்கு மிகப்பெரியது. நாவலர் பேச்சுப்போட்டியில் நான் பதக்கங்களை பெற்றுள்ளேன். எனது பிரச்சினை, இன்று யாழ்ப்பாணத்தில் தாண்டவமாடும் வெள்ளாள சாதிக்கொழுப்புக்கு நாவலர் காரணமாக இருந்துள்ளார் என்பதுதான் »
என்ற அருளினியனின் பதிவு முக்கியமானது. இக்கட்டுரை பல ஆங்கிலேயர்கால ஆதாரங்களுடன் எழுதப்பட்டுள்ளது. அதைவிட அது சமூகப்பொறுப்போடு எழுதப்பட்ட அறச்சீற்றம். அந்தக்கட்டுரையை நம் சமூகம் படிப்பது அவசியம்.
அதற்காக நாவலரை கடலுக்குள் தள்ளிவிட முடியாது. அவரை அக்காலத்தோடு புரிந்துகொள்வதும், சமூகமனங்களை வளம்கொள்வதும் அறிவானவர் செயல். நம் தந்தையில் இருக்கும் தவறுகளுடன் சேர்த்துத்தானே ‘அப்பா’ என்கிறோம். அந்தத் தவறையே நாம் செய்யாமல் இருப்பதே அறிவாகும்.
அதைத்தவிர நூலில் தமிழகத்தின் ‘பாலாறு’ பாலைவனமான கதைகளும் எழுதப்பட்டுள்ளது. அவையும் அதிர்ச்சியை தரும் சேதிகளாகவே இருக்கிறது.
அருளினியனின் எழுத்துக்களை படித்தபின்பு, மாட்டினிக்கில் பிறந்து அல்ஜீரிய விடுதலைக்கு உழைத்து மூன்றாம் உலகின் சிந்தனையை உலுப்பிய ஃபனானின் ‘கறுப்புத்தோல் வெள்ளை முகமூடிகள்’ என்ற நூல்தான் நினைவுக்கு வந்தது. அதன் காரணம் புத்தகத்தின் தலைப்பில் இருப்பதை அறியலாம்.
நமது வரலாற்றில் உள்ள கறைகளை யாராவது தொட்டுக்காட்டினால் இரத்தம் கொதித்துவிடும் வெறும் சுடுதண்ணிகளால் மனித மேன்மையும், சமூக மாற்றமும் ஏற்படப்போவதில்லை. இறுதியில் ஆறிப்போய் நோய் முற்றிய சனமாக நாம் மாறுவதுதான் மிச்சம்.
ஈழத்தமிழர்களில் இன்று அதிகம்பேர் நல்லபயணமோ, கள்ளப்பயணமோ உலகமெங்கும் பயணம் செய்கிறார்கள். அதற்கு இலங்கை ஆட்சியாளர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். ஆனால் இப்படிப்பட்ட பயணமும் ஆய்வுகளுமான எழுத்துக்களை யாரும் செய்வதில்லை. அதை செய்வதால் பணம் யாரும் தரமாட்டார்கள் என்பது உண்மைதான்.
1949-1950 காலகட்டத்தில் 200000 km யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் பயணம் செய்துள்ளார். அவருக்கு 12 மொழிகளில் இலக்கியங்களை படிக்குமளவு ஆற்றல் இருந்திருக்கிறது. அவர் தென்கிழக்காசியாவில் தழிழரின் வேர்கள் நிறைந்திருப்பதை பயண சுற்றுச்செலவுகள் செய்து ‘ஒன்றே உலகம்’ ‘தமிழ்த்தூது’ என்ற நூல்கள்மூலம் தமிழர்க்கு அடையாளம்காட்டினார். தாய்லாந்நது மன்னர் அவையில் திருவாசகம் பாடப்படுவதை அவர்தான் அறிந்து சொன்னார். தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை ஆரம்பித்தவரும் அவர்தான். தனிநாயம் அடிகள்போல் ஒருமனிதன் தமிழர்வாழ்வுக்கு கிடைப்பது அரிது. நவீன காலத்தில் வாய்ப்பிருந்தும் தமிழுக்காக பயணப்படுபவர்களை விமானங்கள் ஏற்ற மறுக்கின்றனவோ தெரியவில்லை.
அருளினியனின் பயணம் அவசியமானது. அசையாமல் கட்டிப்போடும் எழுத்தை வைத்திருக்கிறார். அதை களமுனை துப்பாக்கி போல் அவர் பயன்படுத்தவேண்டும். அவர் தொடந்து எழுதுவது சமூகத்துக்கு பலமானது. புத்தகத்தை படிக்காமல் புலம்புவது அற்பர்களின் வேலை. அறுகம்புல் ஆலமர விதையை அடைத்து நிற்க முடியாது என்றுதான் நம்புகிறேன்.
0
இதை எழுதிவிட்டு இருந்தபோது என்னை கொழும்புக்கு அழைத்துச்சென்ற ஆசிரியருடன் பேசவேண்டும்போல் இருந்தது. தொடர்புகொண்டேன். அவர் அழைப்பை எடுத்து பேசமுதல் ஒரு கீச்சிட்ட குரல் முன்னுக்கு வந்தது. ‘’ நல்லை நகர் ஆறுமுகநாவலர் பிறந்திறரேல் சொல்லுதமிழ் எங்கே ? சுருதி எங்கே ? ‘’ அது 20 ஆண்டுகளுக்கு முன் நான் பாடமாக்கிய பேச்சுத்தான். ஒரு மாணவனை ஆசிரியர் பேச்சுப்போட்டிக்கு தயார் படுத்துகிறார். எனக்கு பேசவந்ததெல்லாம் மறந்துபோய்விட்டது.
அகரன்
பிரான்ஸில் வசித்துவரும் எழுத்தாளர். அரசியல் தத்துவ இறுக்கமில்லாத, அழகியல் கற்பனைத் திறன்கொண்ட படைப்பிலக்கியவாதியாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார்.