நீல இருள் மேடையை நிறைத்திருக்கிறது. திரையற்றுப் பரந்து விரிந்து நிலம் நாடகத்தின் முதல் வாக்கியத்துக்காகக் காத்திருக்கிறது.
’’ பிரித்தளிக்கப்பட்ட நீதியோடு இந்தக் கதை ஆரம்பமாகிறது. ஊண்நிறை உடலோடுகூடிய மூளைச்சலவை செய்யப்பட்ட இளவரசர் அல்லாத ஒருவருக்கும்; எனக்குமாக மரணம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. சன்னம்சன்னமாக எரிந்துகொண்டிருந்த பற்றியெரியும் பகல் ஒன்றில் இந்த நீதி எனக்கு வழங்கப்பட்டது.
மூன்று தெருக்களிலும் இழுபட்டுக் குருதியும் பிரிந்து ஊணும் ஒழுக செஞ்சூளைச் சுவர்களுக்குள் சாம்பலாகினேன்.’’
காலையிலிருந்து பள்ளத்தாக்கு பனியால் நிறைந்துபோயிருக்கிறது. நிலத்தில் முஷ்க்பூட்ஜி இறைந்திருப்பதுபோல பனி. தெருக்கள் மந்தமடித்திருக்கின்றன. ஒருசிலர் போர்வைகளை இறுக்கிமூடியபடி டோங்காக்களை அவசரஅவசரமாக இழுத்துப்போகிறார்கள். கைகளில் பாதுகாப்பாக இறுக்கிப்பிடிக்கப்பட்ட கங்ரியுடன் தலைநரைத்த மனிதரொருவர் கடந்துபோகிறார். நான் கையுறைகளைத் தேடி அலைந்துகொண்டிருந்தேன்
ஸ்ரீநகரில் ஏராளமான கனரக வாகனங்கள் மறிக்கப்பட்டிருந்தன. நகரத்தின் பதற்றம் சுற்றியிருக்கும் ஊர்களையும் மௌனிக்கச் செய்துவிடுகிறது. அன்றாடங்கள் பழக்கப்பட்டவை. கோதுமைக் கையிருப்பைப் பார்த்துக்கொள்கிறார்கள். காதுகளை இறுக மூடியபடி செய்திகளைப் பரிமாறுவதற்கு ஓடத் தயாராகும் சிறுவர்களின் வாய்கள் பேரிடியைக் காவியிருக்கின்றன. நகரத்தின் எல்லா மனிதர்களின் கண்களிலும் அச்சம் ஒரு கருந்துணியைப்போல மூடியிருந்தது.
குளிர்ப்பொழுதையும் மீறி அச்சம் படர்ந்திருந்ததது.
அந்தப் பொழுதின் மந்தம் தனிமையிலிருக்கும் ஒவ்வொருவரையும் அச்சத்துடன் பார்க்க வைத்தது.
அவனது மரண ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஆயிரம் பேர்களில் ஒருத்தியாக இருந்தேன். கிழக்குக் காஷ்மீரின் தென் எல்லையில் இருந்தது அவனது கிராமம்.
அன்றைய உள்ளூர் செய்தித் தாள்கள் அவனது மரணத்தை எழுதியதைப்போலவே ஊர்வலத்தை ஒருங்கிணைத்தவர்களின் பெயர்களையும் பின்னிணைப்பாக வெளியிட்டன. அநாமதேயர்கள் பட்டியலும் பதிக்கப்பட்டது. பிறகான காலத்தில் அநாமதேயர்கள் தீவிரவாதிகளானார்கள் . தேடப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் ஆனார்கள். அதனோடான சந்தேகத்தின் பேரிலும் பலர் கைதுசெய்யப்பட்டார்கள். எனது தோழி பக்விராவின் பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றது.
சூடான இருதயம் வேகமும்கொண்ட பல்கலைக்கழக மாணவன் ஒருவனின் இறுதிஊர்வலம். பரபரப்பும் தீவிரமும் வேகமும் பதற்றமும் கொண்ட கண்களைக் கொண்டிருந்தவனின் ஊர்வலம்.
ஒரு ஈயத்தில் அவனது உயிர் எழுதப்பட்டிருந்தது அந்தப் பெயர் ஏன் அவனுடையதாக இருந்தது? ஏனெனில் அவனது பாடல்களை அங்கிருந்த பள்ளத்தாக்குகள் எதிரொலித்தன.
சம்பிரதாயங்களுக்கான மரணங்கள். பள்ளத்தாக்கின் நீரோடைகளிலும் கிளைபிரிந்த பனிப் பாலைவனத்திலும் காட்டிலும் பீடித்திருந்தன. வெண்ணிறப்பனி சிவந்தே பொழிந்தது. உடல்கிடைக்காத மரணவீடுகள்; வருத்தங்கள்; எதிர்ப்புகள்; மௌனமாகத் துவா செய்யப்பட்டு அடக்கப்பட்ட பிரேதங்கள்அவனது இறுதி ஊர்வலத்துக்கான இந்தப் பெருங்கூட்டத்தைப் பெருக்கியிருக்க வேண்டும்.
கூட்டத்திலிருந்து விலகி ஆமதுராப் பள்ளியின் கட்டட நீள்சந்துக்குள் நுழைந்து வெளி மேடையின் ஓரம் ஏறி நின்றுகொண்டேன். ஆயுதங்களோடு கூட்டத்தைச் சுற்றிவளைத்து நகர்ந்துகொண்டிருந்தன சீருடைகள்.
பதாகைகளும் துக்கமான மனிதர்களும் துயரங்களைப்போல இறுகிய பனியும் சாட்சியாக அவனது மரணத்துக்கான கூட்டம் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.
கிழவி ஒருத்தி பதாகையொன்றை ஏந்தியபடி தலையைத் தொங்கப்போட்டபடி நடந்துகொண்டிருந்தாள். ஊர்வலத்தின் லயத்தோடு சேர்ந்த நடை.
விறைத்த உடலோடு சுரணயற்றதைப்போல ஒரு முதியவர் செல்கிறார்; புகைந்துகொண்டிருக்கிறது 5- 4 இராணுவப் பிரிவின் பேஸ். முகாம் மாதிரியான ஒரு வீடு…. அந்தக் கூடத்திலிருந்து அவிந்த வாசனை எழுகிறது.. முகாம் உணவுநேரம் நெருக்கிகொண்டிருக்கிறது. அது ஒரு தற்காலிக முகாம். ஒரு பெரிய மர்லா வீட்டை மூன்று பக்கத்தாலும் உடைத்து மூட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட முகாம் அது. அந்த வீட்டை ஒரு நவநாகரிக பண்டிட் ஒருவன் மும்பைக்குக் குடியெர்ந்தபோது இந்தியச் சுதந்திரத்துக்கான தன் பங்களிப்பு என்று விட்டுச் சென்றிருந்தான். கருநாகத்தைப்போல இராணுவம் அந்த வீட்டில் குடியேறிக்கொண்டது.
ரேடியோ பள்ளத்தாக்கின் 7மணிச் செய்திகள் ஓய்கின்றன. கரகரத்த ஓசையோடு காலம்தவறி ஒலிபெருக்கி அறிவிப்புக்குத் தயாராகிறது. சர்வதேச ஊடகங்களின் செய்திகளை அந்த மக்கள் கேட்பதை நிறுத்திக் காலங்கள் ஆகியிருந்தன. மனச்சோர்வுற்ற அந்த மனிதக்கூட்டம் அந்தச் சப்தத்தை கூர்மையாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். குரல் அவர்களைப் கலவரப்படுத்துகிறது. ஒரு மனிதர் சால்வையை இழுத்தபடியே தெருவில் வேகமாக ஓடிச்செல்கிறார். கலவரச் சூழலின் முதல் அதிர்வொலி அது.
ஈயக்குண்டில் மாணவனின் உயிர் எழுதப்பட்டிருந்ததை அறிவிக்கிறது அந்த ஒலிபெருக்கி. துயரத்துடன் எச்சரிக்கைகளை அளிக்கிறது அது. அதன் குரல் உயர்ந்து அடங்கிய கணப்போதில் வீடுகளின் கதவுகள் பலமாக அடித்துச் சாத்தப்பட்டன. கலவரமற்ற பொழுதொன்றுக்காக அவர்கள் துவா செய்வார்கள்.
அநீதியின் தூதுவர்கள் அந்தப் பள்ளதாக்கில் வாலறுந்த பல்லிகளைப்போல குறுக்கும் மறுக்குமாய் ஊர்ந்து திரிந்தார்கள். இந்தப் பள்ளத்தாக்கு அவர்களுக்கு வழிகாட்டாது. அவர்கள் இதைக் குடைந்தார்கள். சமாந்தரமாக்கினார்கள். பள்ளத்தாக்கின் சூரியவெளிச்சத்தை மூடினார்கள். எண்ணிலடங்கா சவக்குழிகளை உருவாக்கித் தந்தார்கள்.
பள்ளியை ஒட்டியிருந்த சமூகநிலையத்துக்குள் புகுந்துகொண்டேன். ஏறத்தாழ உமர் அப்துல் பாரூக்கைப்பற்றி எதற்கும் உதவாத அரைகுறைத் தகவல்களே என் தலைக்குள் தாறுமாறாக ஓடியபடியிருந்தன, புதுதில்லியில் பாருக் தனது கல்வியை முடித்திருந்தார். சோனமார்க்கில் இருந்த அவரது சித்தியின் வீட்டில் மூன்று வருடங்கள் தற்காலிக முகவரியாகப் பதிவு செய்துகொண்டு தங்கப்புல்வெளியின் நகரத்தில் மாலை ஐந்து மணிவரைக்கும் பணி செய்துகொண்டிருந்தார். அவர் நகரத்தில் குடியேறி இரண்டு வாரங்களும் நான்கு நாட்களுமே ஆகியிருந்தன. ரம்ஜான் தினத்துக்கு முன்னம் அவர் அங்கு குடியேறியிருந்தார். இவற்றையெல்லாம் சேகரித்து வைத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்பதே யாசீனின் கேள்வியாக இருந்தது. அவனது கேள்விகள் அவநம்பிக்கையை மட்டும் முன்னிறுத்தி உழல்பவை. எனக்கு அவனை விட்டால் வேறு போக்கிடம் எதுவும் இந்தக் கூதல் நகரத்தில் தெரியாது.
அறைக்குள் யாசீன் இருந்தான். அவன் ஒரு கவிஞன். துயரமும் ஏக்கமும் நிறைந்த கவி. அவனது கவிதைகளும் துயரம் நிரம்பியவை. அரசியல் இயக்கங்களின்மீதும் அரசுமீதும் கடும் கசப்புள்ள, அதைக் கண்களிலேயே கட்டித் திரிகிற மனிதன் அவன். அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டேன் என அறிந்தால் வருந்துவான்.
அன்றைக்கு இரவு கதவு இரண்டுக்கு மூன்று முறை நன்கு இறுக்கிச் சாத்தப்பட்டிருக்கிறதா என்பதை அவன் சோதித்துப் பார்ப்பான். அறையின் வெளிச்சத்தை அணைத்துவிட்டு மெழுகுதிரி விளக்கில் ஒரு வழியும் கண்ணாடியையும் நீண்ட சுருள்முடியையும் ஒதுக்கியபடியே அமர்ந்து ஆந்தையைப்போல எதையாவது எழுதவோ நோண்டிக்கொண்டிருக்கவோ செய்வான். வீட்டிற்குள் இந்நேரம் யாரும் முழித்திருக்கவில்லை என்பதை யாரோ ஒரு சம்பளமற்ற கண்காணிக்குப் பதில் அளிப்பதைப்போல அவனது நடவடிக்கைகள் தோன்றும்.
மூன்று மாதங்களுக்கு முன்பு உமர் அப்துல் பாரூக்கைச் சந்திப்பதற்கு அவன்தான் ஏற்பாடு செய்தான்.
நாடகத்திற்காகக் கதைசொல்லியின் குரல் ஒன்று எங்களுக்குத் தேவைப்பட்டது. எந்தெந்த மாநிலங்களுக்கு நாங்கள் போனாலும் அந்தந்த மாநிலங்களின் மொழியில் நாடகத்தை நிகழ்த்திக்கொண்டிருந்தோம். காஷ்மீரில் எங்கள் நாடகத்தின் மொழியும் கதையும் ஏறத்தாழ மாறிப் போயிருந்தது.
எல்லா ஊர்களிலும் நாடகம் முடிவுற்றவுடன் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டவர்கள் பங்கேற்பாளரானார்கள்; தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். சிலர் துயரமான கதைகளைப் பகிர்ந்துகொண்டார்கள். சிலர் தங்கள் அடையாளங்கள் பற்றிக் கேள்வி எழுப்பினார்கள். எல்லைகள் பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. பார்வையாளர்கள் எம்மைச் சுற்றி அமர்ந்திருந்து தங்கள் கதைகளைச் சொன்னார்கள். அந்த நாடகத்தின் ஆரம்பக் கதைசொல்லியின் குரலுக்காகவே நாங்கள் உமர் அப்துல் பாரூக்கைச் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். நாங்கள் சென்றபோது அவர் நகரத்துக்குள் குடிபெயர்ந்து போயிருந்தார், அவரது பதிவுகளும் பள்ளத்தாக்குக்கு மாற்றமடைந்திருந்தன. பிறகான விசயங்கள் நாடகம் போடுவதில் சிக்கல்களை உண்டாக்கியிருந்தன.
துயரம் நிரம்பிய இறுகிக் கறளேறி இருக்கும் பாடகனின் குரல் இருண்ட மைதானத்திலிருந்து எழுகிறது. பார்வையாளரின் மத்தியிலிருந்து ஒருவன் வெட்டையான நாடக வெளியை நோக்கி நடக்கிறான். கூட்டத்தைப் பதற்றமின்றிக் கடந்து இருளும் நீலமும் ஏறியிருந்த குளிர் நிலத்தில் தன் கால்களை அவன் ஊன்றி நிற்கிறான்.
நாடகத்தின் அடுத்த கட்டத்துக்கான ஒரு நுழைவுச் சங்கேதமொன்றை உச்சரிக்கிறான்.
‘’பித்தம்வெடித்த எனது முழுப்பாதத்தையும் இந்தக் குளிர் நிலத்தில் ஆழப் பதிப்பேன்.’’
கடிதமொன்றில் இருந்து கிடைத்த அந்தக் கிறுக்கல் நிரம்பிய[1] உருதுவரிகளை சகிலா மொழியெர்த்தபோது அவளது இறுகிய தசைகளும் உலர்ந்த விழிகளும் தளந்துபோயின.
கிறுக்கலான எழுத்தில் ஆசாதிக் கவிஞன் ஒருவனால் எழுதப்பட்டிருந்த பிரதி அது. அதைப் பாதுகாத்து எங்களுக்கும் ஒரு பிரதியைத் தந்திருந்தான் யாசீன். நாடக அரங்கில் அந்தக் கவிதை பெருங்குரலோடு பாடப்பட்டது.
சிறுவன் சொப்பனம் காண்கிறான்
நானும் எனதும் ஏன் இத்தனை அடர்த்தியாக இருக்கிறோம்
இப்போதுஎனக்குதெரியாது நமது உடல்கள் வீழும்
சாம்பலாக எஞ்சும்
இயல்பாக
எவர் காலணிகளையும் நக்காமல்
கர்வமிக்க மரணத்தை ஈட்டும்
உங்கள் ஊடகங்கள் எமக்கு வேண்டாம்
பொய்களிலிருந்து உண்மைகளை நான் பிரித்தறியத் தெரிந்துகொண்டேன்
அந்த வரிகளில் பதிந்திருந்த கணமும் குரலும் ஏற்ற இறக்கத்துடன் பொருந்திப்போக வேண்டும்.. தலைமுறைகள் தாண்டிய செய்தியைச் சுமப்பதற்கான குரல் அது. வரலாற்றின் சுமையைத் தீர்க்கவேண்டியதைப் பற்றிய அக்கறைக் குரல். அந்தக் குரலை நாங்கள் உறுதி செய்தபோது உமரின் வாழ்வு முடிந்து போயிருந்தது.
அந்தக் குளிர்நிலத்தில் நாடகத்தை எந்த மூலையிலும் நடத்த முடியவில்லை. ஈடு செய்யும் ஒரு குரலை அங்கு எங்களால் இறுதிவரை கண்டடைய முடிந்திருக்கவில்லை.
ஒரு ஈயத்தில் அவனது உயிர் எழுதப்பட்டிருந்தது அந்தப் பெயர் ஏன் அவனுடையதாக இருந்தது? ஏனெனில் அவனது பாடல்களை அங்கிருந்த பள்ளத்தாக்குகள் எதிரொலித்தன.
ஊர்வலம் முக்கோணத் தர்காவைத் தாண்டி பெரிய மைதானத்திற்குச் செல்கிறது.
ஒரு ஈயத்தில் அவனது உயிர் எழுதப்பட்டிருந்தது அந்தப் பெயர் ஏன் அவனுடையதாக இருந்தது? ஏனெனில் அவனது பாடல்களை அங்கிருந்த பள்ளத்தாக்குகள் எதிரொலித்தன.
கூட்டம் ஒருவரை ஒருவர் நெருக்காமல் நகர்கிறது. அதிரும் பட் சத்தம். கூட்டம், கிழவி, பதாகைகள், கிழவியைச் சுற்றியும் ஸ்வெட்டர்க்ளோடும் பதாகைகளோடும் ஓடுகிறார்கள். பிரேதம் சீருடைக் கைகள் கைப்பற்றுகின்றன. மற்றவர்கள் அடித்துத் துரத்தப்படுகிறார்கள்.
ஒரு ஈயத்தில் அவனது உயிர் எழுதப்பட்டிருந்தது அந்தப் பெயர் ஏன் அவனுடையதாக இருந்தது? ஏனெனில் அவனது பாடல்களை அங்கிருந்த பள்ளத்தாக்குகள் எதிரொலித்தன..
கிழவி பதாகையுடன் கூட்டத்தின் நடுவில் புகையின் நடுவில் நின்றுகொண்டிருக்கிறாள். அவளின் ஒற்றை அஞ்சலியுடன் உமரின் அன்றைய ப்யணம் நிறுத்தப்பட்டது. எங்கள் நாடகத்தின் வரலாற்றின் துருவையும் சுமையையும் துயரையும் தாங்க வேண்டிய அந்தக் கதைசொல்லியின் நாடக விசயம் முடிவுக்கு வந்திருந்தது.
ஒரு ஈயத்தில் அவனது உயிர் எழுதப்பட்டிருந்தது அந்தப் பெயர் ஏன் அவனுடையதாக இருந்தது? ஏனெனில் அவனது பாடல்களை அங்கிருந்த பள்ளத்தாக்குகள் எதிரொலித்தன.
உமர் பாருக்கின் மரணம் அந்தப் பள்ளத்தாக்கின் நித்திய துக்கமாய் மாறிப்போயிருந்தது. பள்ளத்தாக்கின் எல்லா முகங்களிலும் இருண்ட துயரமொன்று மெல்ல மூழ்கடித்துக்கொண்டிருந்ததாக பின்பொரு துயர நிகழ்விலும் அவர்கள் அந்தக் கோர நிகழ்வை மொழிபெயர்த்தார்கள்.
ஒரு ஈயத்தில் அவனது உயிர் எழுதப்பட்டிருந்தது அந்தப் பெயர் ஏன் அவனுடையதாக இருந்தது? ஏனெனில் அவனது பாடல்களை அங்கிருந்த பள்ளத்தாக்குகள் எதிரொலித்தன.
அந்த நகரம் கந்தகவாசனையை நுகராத நாட்கள் வெகுசில.
நம்பிக்கைகளும் தோற்றுப்போய்விட்ட பள்ளத்தாக்கு; அதன் நீரோடைகளும் பனிக்காடுகளும் மரத்துப்போகச்செய்கிற காற்றும்கூட விசமாகிக்கொண்டிருந்தது.
ஒரு ஈயத்தில் அவனது உயிர் எழுதப்பட்டிருந்தது அந்தப் பெயர் ஏன் அவனுடையதாக இருந்தது? ஏனெனில் அவனது பாடல்களை அங்கிருந்த பள்ளத்தாக்குகள் எதிரொலித்தன.
மரணம் அந்தப் பள்ளத்தாக்கின் நித்திய துக்கமாய் மாறிப்போயிருந்தது. அனைவரின் முகங்களில் படர்ந்திருந்த இருண்ட துயரம் மெல்ல மூழ்கடித்துக்கொண்டிருப்பதாக பின்பொரு துயர நிகழ்விலும் அவர்கள் அதை மொழிபெயர்த்தார்கள்.
ஒரு ஈயத்தில் அவனது உயிர் எழுதப்பட்டிருந்தது அந்தப் பெயர் ஏன் அவனுடையதாக இருந்தது? ஏனெனில் அவனது பாடல்களை அங்கிருந்த பள்ளத்தாக்குகள் எதிரொலித்தன.
குறிப்பு:
… யரிபோராவில் கண்களைத் திறந்தபடியே சாவேன் என ஈயத்தில் தன் பெயரை தெரிந்தே எழுதிக்கொண்டவனுக்கும் நான்காவது நாளில் மற்றொரு தோட்டாவுக்கு தன்னை மாய்த்துக்கொண்டவனுக்கும் …
செந்தூரன் ஈஸ்வரநாதன்
இலங்கைச் சேர்ந்த செந்தூரன் ஈஸ்வரநாதன் தற்சமயம் நாகர்கோவிலில் வசித்துவருகிறார். இதழியல் துறையில் பணியாற்றிவரும் இவர், பல்வேறு சிறுகதைகளும் எழுதியுள்ளார்.