/

கானல் கனவின் காதை: ரா.கிரிதரன்

பாரிஸ் நாவலை முன்வைத்து

அரிசங்கர் எழுதி நான் வாசிக்கும் முதல் நூல் இது. பாரிஸ் எனும் கனவை சுமந்து திரியும் புதுவை இளைஞர்களைப் பற்றிய குறு நாவல். இதை குறு நாவல் என மிகச் சரியாக வகைப்படுத்தியுள்ள்ளார் ஆசிரியர். நாவலுக்குத் தேவையான விரிவான பின்புலன் இருந்தாலும் கதையின் போக்கு ஒருசில கிளைக்கதைகளை மட்டுமே கொண்டுள்ளது. அது மட்டுமல்லாது மிகக் கச்சிதமான முடிவை நோக்கி செல்லும் திட்டவட்டமான போக்கு கதையில் அமைந்துள்ளது.

‘புதுச்சேரி’  பிரெஞ்ச ஆளுகைக்கு உட்பட்டிருந்தபோது உருவான சட்டம் பிரெஞ்சு குடுயுரிமைச் சட்டம். அதன்படி புதுவையில் பிறந்தவர்களுக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்குவதற்கான வழிகளை பிரான்சு செய்திருந்தது. புதுவையில் பிறந்த என் தாத்தாவுக்கு அப்படி பிரெஞ்சு குடியுரிமையை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்தபோது அதை மறுத்திருந்தார். அதே போல, புதுவையில் வாழ்ந்த என் பாட்டி அவரது பூர்வீக பிரெஞ்சு உரிமையைத் துறந்தபின்னாலேயே என் தாத்தாவை மணக்க முடிந்தது. திருமணத்தின் போது இந்த மாற்றத்தை ஊர்ஜிதம் செய்ய தஸ்தாவேஜுகளை எடுத்ததாக என் தாத்தா கூறுவார். நான் பள்ளியில் படித்த நாட்களில் நண்பர்கள் சிலருக்குக் கிடைத்த பிரெஞ்சு குடியுரிமை எனக்குக் கிடைக்காததை எண்ணி தாத்தாவுடன் சண்டை போட்ட ஞாபகம் கூட இருக்கிறது. அப்படி குடியுரிமை வேண்டுபவர்கள் பிரெஞ்சு ராணுவத்தில் ஓரிரு வருடங்கள் கட்டாய வேலை செய்ய வேண்டும் என்ற காரணத்தால் என் தாத்தாவின் அப்பா அதற்கு சம்மதிக்கவில்லை எனவும் இந்தியாவிலிருந்து வரும் வீரர்களுக்கு ராணுவத்தில் மலஜலத்தொட்டிகளைக் கழுவும் வேலை மட்டுமே கிடைக்கும எனும் புரளி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் தொடர்ந்து பிரான்சில் குடி புகுவதைப் பற்றிய கனவு பலருக்கு இன்றும் புதுவையில் உள்ளது. வெளிநாட்டு வேலை எனும் பகுப்புக்குள் மட்டுமே அடைத்துவிட முடியாத எண்ணம் அது. பிரெஞ்சு கலாச்சாரம் புதுவையின் ஒரு பகுதியாகவே ஒன்றிணைந்திருக்கிறது. அங்கிருக்கும் கட்டட வடிவமைப்பு, மக்களின் வாயில் புழங்கும் பிரெஞ்சு ஒலிப்பான்களும் வார்த்தைகளும், ஆயிரக்கணக்கில் வாழும் பிரெஞ்சு மக்கள், சொல்தாக்கள் எனச் சொல்லப்படும் இந்திய – பிரெஞ்சு வீரர்கள் என ஒரு சின்ன பிரெஞ்சு மாகாணமாகவே இன்றும் அது அமைந்திருக்கிறது. அங்கிருந்த நாட்களில் அதன் தாக்கம் அதிகம் தெரியாவிட்டாலும், பிரான்சு நாட்டில் சுற்றுலா செல்லும் போது பார்க்கக்கிடைக்கும் நகர வடிவம் எந்தளவு புதுவையுடன் இயைந்துள்ளது என்பதை உணர முடிந்தது. அது போலவே இன்றும் கணிசமான புதுவை மக்கள் பாரிஸில் வாழ்ந்து வருவதைக்காணும்போது அதன் தொடர்பு சென்றுள்ள தூரம் நமக்குப் புரிகிறது.

அரிசங்கர் எழுதிய குறுநாவல் பிரான்சு செல்வதற்காக எதையும் செய்யத் துணியும் இளைஞர்களைப் பற்றிய கதையை மையமாகக் கொண்டிருந்தாலும் அதையும் மீறி புதுவைப் பற்றிய மிக உயிர்ப்பானப் பார்வையை முன்வைக்கிறது. கதையின் தொடக்கம் அலையன்ஸ் பிரான்ஸே அமைப்பின் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் புதுவை கடற்கரை விழாகோலம் பூண்டிருப்பதில் தொடங்குகிறது. வருடா வருடம் நடக்கும் விழா என்றாலும் குறிப்பாக இது அலையன்ஸ் பிரான்ஸெயின் 125 வது ஆண்டு விழாவாக இருக்கலாம். அந்த வருடம் புதுவை முழுவதும் பத்து நாள் விழாவாக பிரெஞ்சு கலாச்சாரக் கொண்டாட்டமும், பிரெஞ்சு சினிமா, இசை நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன. கதிர், அசோக் இருவரும் நண்பர்களாக அறிமுகமாகிறார்கள். ஆண்களும் பெண்களும் ஆடிப்பாடி சந்தோஷமாக இருப்பது அசோக்குக்கு எரிச்சல் தருகிறது. கொண்டாட்டம் என்றால் பிரான்சுக்குச் செல்வது. ஆனால் அதற்கான எந்த வழியுமில்லாமல் அலையும் பலருள் அசோக்கும் ஒருவன்.

திரைப்படம் பார்த்துவிட்டு வெளியேறும் அசோக்கும், கதிரும் இரவு சைக்கிளில் ரோந்து வரும்போது அரசியல் செல்வாக்குள்ள ஆதி ஐந்து நபர்களுடன் நின்றபடி இவர்களை அழைக்கிறார். அசோக்குக்குத் தெரிந்தவரான ஆதி எம்.எல்.ஏவின் நண்பர். அவரது தம்பியான குணாவுடன் இணைந்து பணத்துக்காகப் பல காரியங்களைச் செய்பவர்கள். ஒரு பதிவுத் திருமணத்துக்காக அசோக்கையும் கதிரையும் சாட்சி கையெழுத்துப் போடுவற்கென அழைக்கிறார். வசதியுள்ளவர் என்பதால் பணம் கிடைக்குமென அசோக்கும் ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொள்கிறான்.

இங்கிருந்து கதை ஒரு நவீனத் திரைக்கதை போல பல கிளைகளாகப் பிரிகிறது. ஆனால் எல்லாமே வெவ்வேறு கோணங்களில் வைக்கப்படும் காமிராக்கள் போல சில தருணங்களை பல நபர்கள் வழியாக முன்னும் பின்னும் படம் பிடிக்கிறது. இதுவரை சாதாரணமாக இருந்த கதை சுவாரஸ்யமான ஒன்றாக மாறுகிறது. கதை முடியும் வரை இப்படிப்பட்ட உத்தியை ஆசிரியர் கையாண்டிருப்பது கதைக்கருவின் கனத்தைக் கூட்டுகிறது,

ஆதியுடன் நிற்பவர்கள் ரஃபி, சார்லஸ் மற்றும் சுந்தர். அவர்களது காரியத்துக்காகத்தான் தன்னை அழைத்திருக்கிறார் என்பதை அசோக் ஊகிக்கிறான். பிரெஞ்சு நேஷனாலிட்டி உள்ள பெண்ணைத் திருமணம் செய்வதினால் கிடைக்கும் விசாவைக் கொண்டு பிரான்சுக்கு செல்வதை பல குடும்பங்களும் நீண்ட நாட்களாகச் செய்து வருகின்றனர். இதற்காகவே எந்தக் குறை இருந்தாலும் நேஷனாலிட்டி இருக்கும் பெண் அல்லது ஆணைத் திருமணம் செய்வதை ஒரு வழிமுறையாகப் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ரெண்டு மூன்று வருடங்களில் விவாகரத்து செய்தபின் மீண்டும் பணத்துக்காகப் புது திருமணம் செய்து கொள்வதும் ஒரு பிஸினஸாக நடந்து வருவது தான். அதைத் தவிர பல இளைஞர்கள் நேஷனாலிட்டி இருக்கும் பெண்ணைக் காதலித்து மணம் செய்வதும் நடந்து வரும் ஒன்று. அசோக் அது போன்ற ஒரு பெண்ணைத் தேடி வருகிறான் ஆனால் பிரெஞ்சும் தெரியாமல் பணமும் இல்லாமல் அது சாத்தியப்படாது எனும் உண்மையும் அவனை ஆற்றாமையில் தள்ளுகிறது. இந்த நேரத்தில் ஆதி அறிமுகப்படுத்திய ஆட்களும் இது ஒரு தில்லு முல்லு காரியத்தில் இருப்பவர்கள் என ஊகித்து அதன் மூலம் கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம் என நினைக்கிறான்.

கதையின் இன்னொரு திரியாக அசோக் மற்றும் கதிர் செல்லும் சைக்கிளைக் கடக்கும் காரில் இருக்கும் கிரிஸ்டோ மற்றும் பிஜுவின் ஓரினக்காதல் அமைந்துள்ளது. கிரிஸ்டோ வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவன், பிஜு அவனது ஓரினக்காதலன். இருவரும் பீர் வாங்கிக்கொண்டு ஈ.சி.ஆர் சாலையில் உள்ள கடற்கரைக்குச் செல்கிறார்கள். சமூகத்தில் தங்களைச் சேர விட மாட்டார்கள் என்பதை உணர்ந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் காதலைக் கைவிட இருவருக்கும் மனம் இல்லை. குடித்ததும் முத்தம் கொடுத்தபடி கடற்கரையில் கட்டிப்பிடித்திருக்கும் போது ரோந்து போலிசிடம் சிக்கிக்கொள்கிறார்கள். கிரிஸ்டோ அப்பாவுக்குத் தெரிந்தவரான போலிஸ் அவர்களைப் போகச் சொன்னதும் வேகமாக ஊருக்குள் வண்டியை ஓட்டி வந்துவிடுகிறார்கள். இவர்களை இணைய விடமாட்டார்கள் என நினைக்கும் பிஜு கிரிஸ்டோவின் அம்மாவைக் கொண்டுவிடலாம் என அவனிடமே யோசனை சொல்கிறான். செய்வதறியாது பின்னர் அழத் தொடங்குகிறான். இந்த நிகழ்வினால் ஆழமான அவமானத்தை அடையும் பிஜு ஓடிக்கொண்டிருந்த காரிலிருந்து விழுந்துவிடுகிறான்.

அவர்களது கார் ஊருக்குள் கடக்கும் இடத்தில் நாவலின் மற்றொரு கிளைக்கதை தொடங்குகிறது. ரஃபிக், சுந்தர் மற்றும் சார்லஸ் ஆதியை சந்தித்த பின்னர் கிளம்பிப்போகிறார்கள். ரஃபிக் மற்றும் நேஷனாலிட்டி உள்ள ஜெனிபர் இருவருக்குமான பதிவுத் திருமணத்தை ஆதி மூலம் நடத்திக் காட்டுவது தான் சுந்தரின் வேலை. இதற்கு சார்லஸுக்கு உடன்பாடில்லை ஆனால் வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் நண்பி மதுவுடன் சேர்ந்து இந்தக் கல்யாணத்தை நிறுத்தப் பார்க்கிறான். ஜெனிபர் மீது ஆசை வைத்திருக்கும் சார்லஸினால் ரஃபிக்கின் காதலை நிறுத்த முடியவில்லை. ரஃபிக்குக்கு பிரான்ஸ் ஒரு கனவு என்றாலும் ஜெனிபருடன் வாழ்வதையே விரும்புகிறான்.

இப்படி மூன்று கிளைகளாகக் கதை பிரிந்து சென்றாலும் எந்த இடத்திலும் குழப்பமில்லாமல் அரிசங்கர் எழுதியுள்ளார். ஒரு திரைக்கதை போன்ற உத்தி என்றாலும் கதையை முன்னும் பின்னும் நகர்த்துவதிலும் ஒருவிதத்தில் சுவாரஸ்யத்தைத் தக்கவைப்பதிலும் இந்த உத்தி பயன்பட்டிருக்கிறது. ரஃபிக் மீதிருக்கும் காதலை ஊடறுக்க மதுவும் சார்லஸும் முயன்றாலும் அவர்களுக்குள் உடல் நெருக்கம் உண்டாகி இருப்பதை ஜெனிபர் சொல்கிறாள். சார்லஸ் மற்றும் மதுவுக்கு இது மேலும் சிக்கலை அதிகப்படுத்துகிறது.

கிரிஸ்டோவின் பெற்றொர் தங்கள் மகனது ஓரின காதலைப் பிரிப்பதற்காக நேஷனாலிட்டி இருக்கும் பெண்ணை வாங்கப் பார்க்கிறார்கள். அதற்காக ஒரு தரகரை நியமிக்கிறார்கள். இந்தத் தரகரின் வேலை நேஷனாலிட்டி இருக்கும் குடும்பத்துடன் இப்படிப்பட்ட சம்பந்தங்களை சேர்த்து வைத்து பணம் செய்வது. இது ஒரு தனி உலகம் போல கதையில் மிகவும் தனித்துவமாக வந்துள்ளது. தரகராக வருபவர் விலையைக்கூட்டுவதற்காக மிகவும் விட்டேத்தியாக இருக்கிறார். ஆனாலும் கிரிஸ்டோவின் பெற்றோரின் வீட்டை நோட்டம் விட்டு அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதைக் கணிப்பவராகவும் இருக்கிறார்.

இதற்கிடையே அசோக் மற்றும் அவரது வீட்டருகே இருக்கும் தையல்கடைக்காரர் மூலம் அவனது வாழ்க்கைப் பற்றிய கண்ணோட்டம் நமக்குக் கிடைக்கிறது. எப்படியாவது பணம் சேர்த்து பிரெஞ்சு கற்றுக்கொள்ள வேண்டும் எனும் எண்ணம் இருந்தாலும் குறுக்கு வழியாக எதாவது பெண் கிடைத்தால் பிரான்சுக்குச் சென்று விடலாம் என்ற எண்ணமே அவனுக்கு அதிகமாக இருக்கிறது. அவனது வீட்டருகே புதிதாகத் தொடங்கி இருக்கும் பெட்டிரோல் பங்கில் இரவு வேலைக்குச் சேர்கிறான். டைலர் முன்னர் தன் அம்மாவைக் காதலித்தார் எனும் உண்மையை அறியும் போது அசோக்கின் கதை முடிவுக்கு வருகிறது.

இம்மூன்று கதைகளும் இணையும் இடமாக முடிவு அமைந்துள்ளது. கிரிஸ்டோ பிஜுவின் காதல் அடிதடியில் முடிந்தாலும் சுபமாக முடிகிறது. தனது காதலை நிராகரித்த ஜெனிபரின் மீதான எரிச்சலில் ரஃபிக் தற்கொலை செய்துகொள்ள செல்லும்போது கிரிஸ்டோ பிஜுவினால் காப்பாற்றப்படுகிறான். அவர்கள் மூவரும் ஊரை விட்டுச் செல்லுமுன்னர் அசோக்கின் பெட்டிரோல் பங்கில் பெட்டிரோல் போட்டுக்கொள்கிறார்கள்.

குறுநாவல் நெடுக புதுவை கலாச்சாரம் ஒரு பின்னணி இசை போல கூடவே வருகிறது. சின்னச் சின்ன தெருக்களைப் பற்றிச் சொன்னாலும் அவற்றின் பின்னணியும் சமூக சூழலும் சட்டென நம் முன்னே வந்துவிடுகின்றன. குறிப்பாக கடற்கரை, பிரெஞ்சு மக்கள் புழங்கும் வைட் டவுன் என கதை நெடுக சூழலை நமக்குக் காட்டியபடி வருகிறார். அதே போல, புதுவை இளைஞர்களுக்கு இருக்கும் பிரான்ஸ் மீதான மயக்கமும், அம்மொழியைக் கற்றுக்கொண்டு பிரான்ஸ் செல்ல வேண்டும் எனத் துடிப்பும் மிகத் தத்துரூபமாக வெளிப்பட்டுள்ளது. இந்த ஆசையை கொண்டு பணம் சம்பாதிக்க நினைக்கும் அரசியல்வாதிகளும், தரகர்களும், போலிஸ்காரர்களும் புழங்கும் சிற்றூராக இதன் பல அடுக்குகள் நமக்கு இச்சிறு குறுநாவலில் படிக்கக் கிடைக்கின்றது.

தமிழ்நாட்டோடு ஒட்டிக்கொண்டிருந்தாலும், புதுவை நகரின் மக்களின் மன ஓட்டமும், மொழியும் பிரஞ்சு நிலத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட ஒன்றாகும். ‘பத்து பிசா கூட இல்ல’ என கதிர் அசோக்கிடம் சொல்லும் ஏற்ற இறக்கம் புதுவைக்கே உரித்தான ஒன்று. அதே போல, தமிழோடு புழங்கும் பல பிரெஞ்சு சொற்களும் அந்நிலத்தை நமக்கு நெருக்கமாகக் காட்டுகிறது.

புதுவையின் ஒரு கருப்புப்பகுதியாக இதைக் காட்ட முயன்றாலும், அரிசங்கர் மிக எளிமையான முறையில் இச்சிக்கலான கதைப்புலத்தைக் காட்டியுள்ளார். பல இடங்கிலும் விளக்கமாகச் சொல்லாமல், புனைவு ஆசிரியரின் இயல்புக்கு ஏற்ப உணர்த்திச் சென்றுள்ளார். உண்மையில் முதல் சில பக்கங்களில் தெரியும் ஆசிரியரின் குரல் பின்பு முழுவதுமாக மறைந்துவிடுகிறது என்றே சொல்லலாம். அந்தளவு கதாபாத்திரங்கள் கதையை முழுவதுமாக வழி நடத்தி சென்றுவிடுகிறார்கள்>

மிக விரிந்த தளத்தில் இக்கதையைக் காட்ட முயலாததற்கே ஆசிரியருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இது போன்ற கதையில் தேவையில்லாத பல இடைச்செருகல்களைக் கொண்டு ஒரு நெடிய நாவலாக மாற்றும் சாத்தியம் இருந்தும் கதையை அதன் போக்கில் மட்டுமே விட்டுவிட வேண்டும் எனும் குறுக்கீடற்ற ஆசிரியர் நிபுணத்துவம் படைப்பில் தெரிகிறது.

புதுவை சமூகப்பின்னணி கொண்டு கதையின் ஆழத்தை இன்னும் கூட்டியிருக்கலாம். குறிப்பாக ரஃபிக் -ஜெனிபர் காதல் புதுவை போன்ற பன்முக சமூகத்தின் ஒரு முக்கியமானப் பகுதி. அதன் பின்னணியைக் கொண்டு மேலும் சில பிரத்யேகமான கலாச்சார நகர்வுகளை ஆசிரியர் அளித்திருக்கலாம். மற்றபடி மேலும் ஆசிரியரின் அடுத்தடுத்த படைப்புகளைப் படிக்கும் ஆர்வத்தை முழுவதுமாக அளிக்கும் படைப்பாக பாரிஸ் அமைந்துள்ளது.

ரா.கிரிதரன்

“காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” என்ற சிறுகதை தொகுப்பு, காற்றோவியம் என்ற கட்டுரைத் தொகுப்பு ஆகியவற்றின் ஆசிரியர். வளர்ந்தது புதுச்சேரியில். தற்சமயம் லண்டனில் வசிக்கிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.