சு.வேணுகோபால் சமீபத்தில் எழுதிய ‘வருகை’ எனும் சிறுகதையின் சூழல் பல நவீன இந்திய புனைவுகளின் சாயலை தன்னுள் கொண்டுள்ளது. ஆர்.கே.நாராயணன் எழுதிய ‘மகாத்மாவுக்காகக் காத்திருத்தல்’, ஜெயமோகன் எழுதிய ‘மெல்லிய நூல்’, அசோகமித்திரனின் ‘காந்தி’ எனும் கதைகளில் சிறிய வாழ்க்கைக்குள் புயலென வரும் பெரும் ஆளுமைகளினால் ஏற்படும் அறக்கேள்விகள் கையாளப்பட்டுள்ளன.
ஆர்.கே.நாராயணின் கதையில் ஒரு கிராமம், காந்தியாரின் வருகைக்காகக்த் தயாராகும் சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. பெரும்பான்மையானவர்கள் நேரில் பார்த்திராத ஆளுமையான காந்தியைப் பற்றிய சித்திரம் செய்திகளின் வாயிலாக கிராம மக்களுக்குக் குருடன் யானையைத் தடவி அறிவது போலக் கிட்டுகிறது. காங்கிரஸ் சேவகர்களினால் கிடைக்கும் கடவுளுக்கு நிகரான பிம்பம் ஒரு பக்கம், வியாபாரிகளால் கிடைக்கும் சிக்கன பனியா கதைகள், விடலை புரட்சியாளர்களால் கிடைக்கும் எதிர்மறை சித்திரங்கள், பெண் சேவகர்கள் வழியாகக் கிடைக்கும் தோழி பாவனை காந்தியின் ஈரக்கதைகள் என அவர் வருவதற்கு முன்னரே காந்தி பற்றி பலவிதமான பிம்பங்கள் மக்களுக்குக் கிடைக்கின்றன. அனைவரும் அவரை சந்திக்கும் சந்தர்பத்தைக் கைவிடத் தயாராக இல்லை என்பதே அனைத்திலும் பொதுவான ஒன்று. ஏதேனும் ஒரு சாக்கு சொல்லி அவரிடம் நேரில் பேசும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கும் பெண்களும், இளைஞர்களும் ஒரு புறம். தூரத்திலிருந்து அவரது கடைக்கண் பார்வை கிடைத்தால் போதும் என ஏங்கும் சமூகத்தில் விலக்கப்பட்டவர்கள் பலர் மறுபுறம். அவருடன் வாதிட சந்தர்ப்பம் கிடைத்தால் தங்கள் அறச்சிக்கல்களுக்குப் பதில் கிடைக்கலாம் எனக் காத்திருப்பவர்கள் பலர். ஆனால் காந்தியை சந்திப்பதற்கு முன், சந்திததற்குப் பின் என இரு பகுதியாகத் தங்கள் வாழ்வை பிரித்தவர்கள் தான் எல்லாரும்.
‘வருகை’ கதை அவ்விதத்தில் ஒரு மாறுபட்ட முடிவைக்கொண்டுள்ளது. இங்கு சிக்கலுக்கானத் தீர்வைக் கொண்டு வருபவர் காந்தி இல்லை. ஆனால் அவரும் ஒரு காந்தியின் உரு தான் எனும் முடிவுக்கு நம்மை நகர்த்திச் சென்றுள்ளது இக்கதையை குறிப்பிடத்தகுந்ததாக ஆக்குகிறது.
கதையின் நாயகியாக வரும் விசாலாட்சிக்கு காமம் ஒரு பெரிய தொந்திரவாக இருக்கிறது. அதுவும் அவள் பதிமூன்று வயதில் முதன்முதலில் அனுபவத்த காமத்தின் வலி மெல்ல ஒரு சுகமாக அவளுள் வளர்ந்து ருசியாக மாறிவிட்ட காலத்தில் அவளது கணவன் இறந்துவிடுகிறான். அவனது அரவணைப்பு அவளுக்கு ஏக்கமாக மாறிவிட்டதை விட அவளைச் சுற்றி நடப்பவை அவளை அதிக சங்கடத்துக்குள் தள்ளுகின்றன. அடுத்த வீட்டில் இருக்கும் லட்சுமி சுய இன்பம் செய்வதற்காக பங்கஜம் மாமி வீட்டுக் கொல்லைபுறத்தை உபயோகப்படுத்துவதை அவள் பார்த்ததிலிருந்து தனியாத மோகத்துக்கு ஆட்படுகிறாள். இருபதே வயதான தன்னை விட மூன்று வயதுக் குறைவான லட்சுமி கையருகே சிக்கிக்கொண்டதை விசாலாட்சி ரசிக்கிறாள். கூப்பாடு போட்டு அவளை ஓட விடலாமா எனும் எண்ணம் அவளது ஏக்கத்தின் தீவிரத்தன்மையின் சித்திரமாக இருக்கிறது. அவளைச் சுற்றி இருப்பவர்களும் அதீத சுவைக்கு விசாலாட்சி ஆட்பட்டு விடாதபடிக்கு தடுப்பு போடுகிறார்கள். நெய் ஊற்றி சாப்பாடு போடாத அம்மா, இரவில் பால் சாப்பிட்டால் இன்ப சுகத்துக்கு வழிகோலும் என எண்ணும் தாத்தா. அவள் வீட்டுக்கு வேலை செய்ய வரும் வைரவனின் உடல் முறுக்கில் நிலைகொள்ளாமல் தவிக்கிறாள்.
பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய ‘புலிநகக் கொன்றை’ நாவலில் இதே போன்ற சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. நூறாண்டுகளுக்கு முன்னர் விதவைகளுக்கும், மணமாகாதவர்களுக்கும் காமம் ஒரு நிலையில்லா பெரும் ஏக்கமாக இருந்திருக்கிறது. அதன் தாக்கம் நேரடியாகத் தெரியாவிட்டாலும், மறைமுகமாகக் காட்டிக்கொடுப்பதிலும், கோள் சொல்வது, சக மனிதர் மீது புறம் பேசுவது எனும் பின் விளைவுகளாகக் காட்டும்படி நிலை பெற்றிருந்தது. புலிநகக் கொன்றை நாவலில் காம வயப்பட்டு முறை மீறி நடக்கும் பெண்ணை அவளது அம்மா கையுங்களவுமாகப் பிடித்துவிடுகிறாள். ‘அதான் வந்துட்டியே..ஒண்ணும் நடக்கலை’ என அந்தப் பெண் அம்மா மீது ஆங்காரத்தைக் காட்டுகிறாள். சு.வேணுகோபாலின் கதையில் காமம் என்பது அத்துமீறுவதினால் மட்டுமே கிடைக்கும் சுகமாக இருக்கிறது. கைகூடாத காமம் சுய வெறுப்பாகவும் மாறுகிற இடத்தில் விசாலாட்சி இருக்கிறாள். கடவுளிடம் கூட முறையிட்டுப் பார்த்தாலும், தான் சாகாமல் இந்த விடாய் தீராது எனும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.
காந்தியைப் பார்ப்பது என்பது இந்த மீளாத்துடிப்பிலிருந்து ஒரு விடுதலையாக இருக்கும் என நினைக்கிறாள். ஒரு விதத்தில் இது பாபமன்னிப்பு. ஆனால் அதுவும் நிரந்தரமானத் தீர்வாக இருக்காது என அவளுக்குத் தெரிகிறது. செண்பகச்செடி கூட்டில் வளரும் குருவிக்குஞ்சுகளைப் பார்க்கும் சித்திரம் இந்த உண்மையை நமக்கு உணர்த்துகிறது. தாய்க்குருவி புழுவைக்கொண்டு தங்கள் பசியை ஆற்றப்போகிறது என்று நினைத்த குஞ்சுகள் சட்டென விசாலாட்சியின் விரல்களை நோக்கி வருகின்றன. அந்த வருகை அவர்களது துயரைத் தீர்க்கும் என நம்பி வருகின்றன. இது இயற்கையின் குரூரமான சித்திரம். பருந்து ஒன்று அருகே வந்தால் கூட அந்த அப்பாவிக் குருவிகள் அதை நோக்கி வந்திருக்கும். இப்படி ஒரு பெரிய சக்தியின் வருகை நலம் மட்டுமே பயக்கும் என நினைப்பதன் மாயையை குருவிகள் காட்டிவிடுகின்றன. தோட்டத்தில் தனது எண்ணத்தோடு தனித்து உட்கார்ந்திருக்கக் கூட கைம்பெண்களுக்கு சுதந்தரமில்லை. அவளை உள்ளே வரச் சொல்லிவிடுகிறாள். வேலைக்குப் போகும் பெண்களைப் பார்க்காது தம்பிக்கு சாப்பாடு எடுத்துப் போகச் சொல்கிறார்கள். காமம் மட்டுமல்ல, மூச்சு முட்டும் வாழ்க்கையில் அவளுக்கான இடமில்லாதது மட்டுமல்ல அவள் மீது அதிகாரத்தைக் காட்டும் சூழலை வெறுத்து ஓட விழைகிறாள்.
காந்தி வருவதற்காக அந்த ஊரின் பெரிய மனிதர் கூட்டம் தயாராகிறது. காந்தி காட்டும் சமூக சுதந்திரம், பண விஷயத்தில் கஞ்சமாக இருக்க அவருக்கும் அவரது அபிமானிகளுக்கும் இருக்கும் சுதந்திரம் என அவரைச் சுற்றி அதிகாரத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் இடமில்லாமல் இருக்கிறது. சுய தர்மமும், ஒழுக்கமும் மட்டுமே அவர்களது சிந்தனையாக இருக்கிறது. ஆனால் அதற்கென அவர்கள் கொடுக்கும் விலை அதிகம்.
அடுத்த நாள் விசாலாட்சிக்கு முண்டனம் செய்துவிட வருகிறான் ஒரு நாவிதன். மிகச் சாதாரணமான உருவம் கொண்டவன். குடும்பஸ்தன். ஆனால் அவனது தொடுகை அவளை நிலைகொள்ளாமல் ஆக்குகிறது. அவள் தோளிலும் முதுகிலும் விழும் முடியைத் தள்ளிவிடும்போது கிடைக்கும் சிறு தொடுகையில் அவள் கட்டுப்பாட்டை இழக்கிறாள். சட்டென அவனைக் கட்டிக்கொண்டு ‘என்னை இங்கேயிருந்து கூட்டிப்போய்விடு’ என அழும் குரலில் அதிகாரம் செய்தபடி முத்தம் கொடுக்கிறாள். அவள் சொல்லும் ‘உனக்காகக் காத்திருப்பேன்’ என்பதை நாவிதன் பதற்றத்தோடு கேட்கிறான்.
காந்தி என்ன சொல்வாரோ தெரியாது ஆனால் கூட்டத்துக்கு கைம்பெண்கள் வரக்கூடாது என விசாலாட்சியின் அப்பா தடுத்துவிடுகிறார். கிட்டத்தட்ட அச்சூழலிலிருந்து ஓடிவிடத் தயாராக இருந்தவளுக்கு இது மலையிலிருந்து தள்ளிவிடுவது போல இருக்கிறது. அதே நேரத்தில் கொல்லைப்புறத்தில் நாவிதன் வந்து அவளைக் கூட்டிச் செல்கிறான். வாய்க்கால் வழியாக அவனுடன் செல்வதை விசாலாட்சியால் நம்ப முடியவில்லை. அதைவிட அவனது பெண்டாட்டியும் குழந்தையும் வழியில் சந்தித்து ஊரை விட்டு அவளோடு செல்ல திட்டமிட்டிருப்பதைப் பார்க்கும்போது அவளுக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. நாவிதனின் பெண்டாட்டியின் பரிவு அவளை செயலிழக்கச் செய்கிறது.
காந்தி பற்றிய கதைகள் மூலம் அவரது தொண்டர்கள் உருவாக்கிவைத்திருக்கும் பிம்பம் ஒரு புறம் , மற்றொரு புறம் சமூகத்தின் கீழ் நிலையில் இருப்பதாக உருவகப்படுத்தியிருக்கும் நாவிதனின் குடும்பம் ஒரு மிகப் பெரிய அகவிடுதலையை சமூகத்தின் மேல் நிலையில் இருக்கும் கைம்பெண்ணுக்கு அளிக்கிறது. அது ஓர் நிரந்தர விடுதலையா என்பது கதைக்கு வெளியே இருக்கிறது. ஆனால் ஒரு அநீதி மற்றொரு அநீதியைக் கண்டு துடிக்கிறது, செயலாற்றுகிறது, விடுதலைத் தர எத்தனிக்கிறது என்பதே எத்தனை பெரிய மன விசாலத்தின் வெளிச்சம்? பெரிய சமூக அமைப்புகளாலும், பெரிய மனிதர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் ஊர் தலைவர்களாலும் தங்களுக்குள் இட்டுக்கொண்ட சமூக நீதியைத் தாண்டி செயல்பட முடியாத போது, ஒரு பரிதவிப்பை தனி மனிதன் புரிந்துகொண்டு குடும்பத்தின் துணையோடு அதை வழி தேடப் புறப்பட்டிருக்கிறான் என்பது ஒரு மாபெரும் நீதியின் வருகை இல்லாமல் வேறென்ன?
******
ரா.செந்தில்குமாரின் ‘பதிமூன்று மோதிரங்கள்’ கதை ஜப்பான் நாட்டில் வாழும் இந்தியர்களை மையப்படுத்தி அமைந்துள்ளது. பொதுவாக நவீன ஜப்பானின் சித்திரம் என்பது தீவுச்சமூகம் என்பதாகவே இருக்கிறது. ரெண்டயிரத்தின் தொடக்கத்திலிருந்து இத்தீவு சமூகம் உருவாக்கிவைத்திருக்கும் நிலை என்பது அபத்தத்தின் எல்லையைத் தொட்டிருக்கிறது. தனிமை, விரக்தி, அபத்தம் என தற்கொலை செய்துகொள்ளும் பல இளைஞர்கள் வாழும் அதி நவீன உலகமாக அது மாறி உள்ளது. இலக்கியம் மற்றும் சினிமா வழியாக நமக்குக் கிடைக்கும் சித்திரம் என்பது மிக வேகமான தொழில்நுட்ப மாற்றத்தின் வெற்றிடத்தை அக உலகில் நிரப்பத் தவிக்கும் ஒரு கும்பலின் அழிவுச் சித்திரமாக நமக்குக் காட்சியளிக்கிறது
வேறொரு ஊருக்குச் செல்லும் எந்த ஒரு மனிதனும் அந்தச் சமூகத்தோடு பிணைய நேரமும் காலமும் ஆகும் எனும்போது மொழி பழகாத தொழில்நுட்ப ஊரில் கீழ் மட்ட வேலை பார்க்கும் தமிழன் ஒரு அந்நியனாகத் தன்னை உணர்வதில் ஆச்சர்யமில்லை. இங்கு தான் பதிமூன்று மோதிரங்கள் கதையோடு வாசகனின் முதல் முரண் தொடங்குகிறது. ஜப்பானிய உணவகத்தில் வேலை பார்க்கும் பாண்டியன் ஒரு வார்த்தை கூடப் பேசாது பல நாட்களைக் கடத்தும் இயல்புடையவன். அவனுக்கு தடையாக இருப்பது நிறமும், மொழியும் மட்டுமல்ல, அங்கிருக்கும் ஜப்பானிய புறச்சூழலும் கூட. தங்களுக்குள்ளே கூட நெருக்கமாகப் பழகும் இயல்பில்லாத நகரில் ஒரு வெளிநாட்டு மனிதன் மீது அலட்சிய பாவம் கூடுவது இயல்பு தான்.சமையற்கூடத்திலேயே குடித்துவிட்டு வேலைபார்க்கிறான் என குற்றம் சாட்டப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்படுகிறான் பாண்டியன். வீட்டுக்கடனைக் கூடக் கட்ட முடியாதபடி சூழலில் கிடக்கிறான்.
தமிழ் மொழி மொழிபெயர்பாளராக இருக்கும் இருக்கும் ஜீவானந்தம் அச்சூழலுக்கு முழுவதுமாகத் தன்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டவர். அவருக்கு பெரிய புகார்கள் இல்லை. பெண்ணை படிப்புக்காக அமெரிக்க அனுப்புவிட்ட பின்னர் தன் போக்கில் வாழ்ந்து வருபவர். பாண்டியனிடம் பேசும்படி பணியில் அழைக்கிறார்கள். அதுவரை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் சென்ற கதை பாண்டியன் தேடும் பதிமூன்று மோதிரம் எனும் குறியீட்டில் முட்டி நிற்கிறது. பாண்டியனை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புகிறார்கள். அங்கிருந்து ஜீவானந்தனிடம் பேசும் அவனது பெண் பாண்டியன் விட்டுவந்த மோதிரங்களைத் தேடச் சொல்கிறாள்.
அதைத் தேடி ஒரு தேநீர் கடைக்கு வருகிறார் ஜீவானந்தம். அது ஒரு சாதாரண தேநீர் கடையல்ல. அங்கு பணம் கொடுத்து ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கலாம். அழகான ஜப்பானிய பெண்கள் செய்யும் வேலை. மோதிரங்களைத் தேடி வருபவர், பாண்டியன் பதிமூன்று பெண்களிடம் தொடர்ந்து பேசி சேகரித்த புகைப்பட ஆல்பத்தை அடைகிறார்.ஒரு கவித்துமான இடத்தை அடைந்திருந்தாலும், கதையி பாண்டியனின் தனிமைக்கு மிக விசேஷமான அர்த்தம் கொடுக்கப்பட்டிருப்பது வாசிக்கத் தடையாக அமைந்துவிடுகிறது. பொதுவாகவே தனிமை விரவி இருக்கும் சமூகத்தில் இந்தியாவிலிருந்து செல்லும் ஒருவருக்கு விசேஷமான சூழலை அது அளிக்காது. கதையில் மேலதிகமாக பாண்டியனின் சுயபச்சாதாபத்துக்கான காரணம் சொல்லப்படவில்லை. அதே போல, இந்தியா திரும்பிய பின்னரும் அவன் தனிமைப்பட்டுக் கிடப்பதற்கான முகாந்திரமும் தெளிவாக இல்லை. ஜீவானந்தம் எல்லா வகையிலும் ஜப்பானின் சூழலோடு பொருந்திவிட்ட சராசரி மனிதராக வருகிறார். கதையில் ஒரு நிலைத்தன்மையை இது தருகிறது என்றாலும் அவருக்கு பாண்டியனின் உலகம் எப்படிப்பட்ட தாக்கத்தைத் தந்திருக்கிறது என்பது சரியாக சொல்லப்படவில்லை.
ரா.செந்தில்குமார் உணர்ச்சியற்றை ரிப்போர்டிங் பாணியில் ஜப்பானியக் கதைகளை எழுதுகிறார். அச்சூழலில் விசேஷத்தன்மையை அது நிறுவ பயன்படுகிறதே தவிர, கதைக்கு அவரது நடை பெரிய தடையாக உள்ளது. கதையின் உணர்ச்சிகரமும், நாடகத் தருணமும் அமிழ்ந்துவிடுகிறது. அவரது கதையின் மையத்தை நெருங்குவதற்கும், வாசகர்களின் மனதில் அது வளர்வதற்கும் இது பெரும் தடையாக உள்ளது. ஜப்பானிய சூழலின் புதுமையையும், அந்நியப்படும் நிலையையும் சொல்லும் அதே நடையில் தனி மனிதனின் கேள்விகளையும், குழப்பத்தையும் காட்டும் புனைவு மொழியை அவர் அடைய நேரும்போது நல்ல கதைகள் எழும்பி வரும் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ரா.கிரிதரன்
“காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” என்ற சிறுகதை தொகுப்பு, காற்றோவியம் என்ற கட்டுரைத் தொகுப்பு ஆகியவற்றின் ஆசிரியர். வளர்ந்தது புதுச்சேரியில். தற்சமயம் லண்டனில் வசிக்கிறார்.
நான் இந்த எழுத்தாளரோடு பேச விரும்புகிறேன் எனக்கு இவரது கைபேசி எண் வேண்டும் 7854821871 இது எனது கைபேசி எண்